அருள்மிகு சொர்ணாம்பிகா சமேத காரணீஸ்வரர் ஆலயத்தின் சித்திரைப் பெருவிழாவை ஒட்டி அங்குரார்ப்பணத்திற்காக விஷேசமாக புற்று மண் எடுத்து வரும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக பகலில் நடைபெறுகின்றது. மேற்கு சைதாப்பேட்டையே விழாக் கோலம் பூணுகின்றது. சிறப்பு அன்னதானமும் நடைபெறுகின்றது.
இரவில் எந்த விக்னங்களும் இல்லாமல் திருவிழா சீரும் சிறப்புமாக நடைபெற்று "லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து" என்றபடி உலக மக்கள் அனைவரும் சுகமாக வாழ முழு முதற் கடவுள் விநாயகர் உற்சவம்.
முதலில் பெருவிழாவின் தாத்பரியம் பின்பு திருவிழாவை ஒட்டி நடைபெறும் சில நிகழ்ச்சிகளின் விளக்கம்.
திருக்கோவில்களில் நடைபெறும் பூஜைகள் மூன்று வகைப்படும். அவையாவன 1) நித்திய பூஜை 2) நைமித்திக பூஜை 3) காமிய பூஜை.
முதலாவது பூஜை 1 காலம் முதல் அதிகபட்சமாக 12 காலம் வரை கிரமமாக நடைபெறும் பூஜை. இரண்டாவது ஏதாவது காரணம் கொண்டு நடத்தப்படும் பூஜை. நிமித்தம் என்றால் காரணம், மூன்றாவது விருப்பபடி நடைபெறும் பூஜைகள்.
விசேஷ பூஜைகள்: சதுர்த்தி, சஷ்டி, சிவராத்திரி, பிரதோஷம், பௌர்ணமி, நடராஜர் அபிஷேகம்,பௌர்ணமி, ஆருத்ரா தரிசனம் போன்ற விழாக்கள். ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் ஒருநாள் நிகழ்ச்சியாகவும், , 3 முதல் 36 நாட்கள் தொடர் நிகழ்ச்சிகளாகவும் நடைபெறுகின்றன. ஐந்து நாட்களுக்கு மேற்பட்ட விழாக்களுக்கு கொடியேற்றம் அவசியம். இவை மஹோற்சவம் அதாவது பெருவிழா என்றும் அழைக்கப்படுகின்றன.
பிரம்மோற்சவம் எனப்படும் பெருவிழாக்கள்
உத்ஸவம் என்றால் வெளியே வருதல் என்று பொருள். திருக்கோவிலின் உள்ளே சென்று வழிபட முடியாதவர்களுக்கு அருளும் விதமாக இறைவனே தானே வெளி வந்து அருட்காட்சி தரும் காலமே உத்ஸவ காலம். அனைத்து ஆலயங்களிலும் வருடத்தில் ஒரு முறை பத்து நாட்கள் பெருவிழா, அல்லது பிரம்மோற்சவம் என்று கொண்டாதப்படுகின்றது. அந்தந்த ஆலயத்தின் ஐதீகத்தைப் பொறுத்து குறிப்பிட்ட ஒரு நட்சத்திரத்தை தீர்த்தவாரி நாளாகக் கொண்டு உற்சவங்கள் நடைபெறுகின்றன. சிவாலயங்களில் பெரும்பாலும் பௌர்ணமியை தீர்த்த நாளாகக் கொண்டு பெருவிழாக்கள் நடைபெறுகின்றன. அதாவது சித்திரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆனி உத்திரம், கார்த்திகை தீபம், மார்கழி திருவாதிரை, தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் என பௌர்ணமியை ஒட்டி வரும் நட்சத்திரங்கள் அல்லது கடற்கரை ஓர ஆலயங்களில் பௌர்ணமி நாளை தீர்த்த நாளாகக் கொண்டும் திருவிழா நடைபெறுகின்றது. விஷ்ணுவாலயங்களில் திருவோண நட்சத்திரத்தை தீர்த்த நாளாகக் கொண்டு பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது என்றாலும், விஷ்ணுவாலயங்களிலும் பௌர்ணமியை தீர்த்த நாளாகக் கொண்டும் பெருவிழா நடைபெறுகின்றது.
சிவாலயங்களில் பெருவிழாவின் சிறப்பு பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, சிவபெருமான் சோமாஸ்கந்தராக உமையம்மையுடனும் ஸ்கந்தனுடனும் கூடிய மூர்த்தமாக திருவீதி புறப்பாடு கண்டருளூகின்றார். சைவ மரபில் அன்னை தனியாக எழுந்தருளுவாள் ஆனால் ஐயன் எப்போதும் தனியாக எழுந்தருளுவதில்லை. சோமாஸ்கந்தர்( தியாக ராஜர்), சந்திர சேகரர், பிரதோஷ நாயகர் அனைத்தும் உமையம்மையுடன் கூடிய போக மூர்த்தங்களே. வீர மூர்த்தங்களான கால சம்ஹார மூர்த்தி, மற்றும் நடராஜர், பிக்ஷாடணராக எம்பெருமான் எழுந்தருளும் போதும் கூட அன்னையும் தனியாக பவனி வருவது மரபு. இவ்வாறு ஐயன் குடும்பஸ்தராக பாகம் பிரியாளுடன் சோமாஸ்கந்தராகவும், அன்னை தனியாகவும், விநாயகர், வள்ளி தேவ சேனா சமேத முருகர் மற்றும் சண்டிகேஸ்வரருடனும் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி சேவை சாதிப்பது சிறப்பு.
விஷ்ணுவாலயங்களில் பெருமாள் தனியாகவும், சில வாகனங்களில் ஸ்ரீதேவி, பூதேவித் தாயார்களுடன் சேவை சாதித்தாலும் பெரும்பாலும் தனியாகவே வாகன சேவை சாதிக்கின்றார்.
பெருவிழாக்களின் போது பஞ்ச பூதங்களும் சிறப்பிக்கப்படுகின்றன. மிருத் சங்கிரணம் என்னும் முளைப்பாலிகை இடல் மற்றும் வாஸ்து சாந்தி என்னும் திருக்கோவில் சுத்தம் செய்யும் நிகழ்ச்சிகள் பிருதிவியையும், யாக சாலை அக்னியையும், தீர்த்தவாரி நீரையும், மந்திர உச்சாடனங்கள் வாயுவையும், எல்லாமாக எழுந்தருளியுள்ள இறைவன் ஆகாயத்தையும் குறிக்கின்றது.
ஐயன் புரியும் ஐந்தொழிலையும் குறிப்பிடும் வண்ணமும் திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது, முளைப்பாலிகை ஆக்கல் தொழிலையும், தேரோட்டம் சம்ஹாரத்தையும். ரிஷப வாகனம், திருக்கலயாணம் ஆகியவை அருளளையும் குறிக்கின்றன, ஊர் கூடித்தான் தேர் இழுக்க வேண்டும் என்பதற்கிணங்க பல் வேறு தரப்பினரும் ஒன்று சேர்ந்து இணைந்து நடத்துவதே திருவிழாக்கள்.
அந்தந்த திருக்கோவிலின் சிறப்பு நிகழ்வுகளும் பெருவிழாவின் போது நடைபெறுகின்றது. திருக்கடையூரில் கால சம்ஹாரமும், திருமயிலையில் பாம்பு தீண்டி இறந்து எலும்பான பெண் (அங்கம் பூம்பாவை) மீண்டும் உயிருடன் வந்த நிகழ்ச்சி, தியாக விடங்க தலங்களில் தியாகராஜர் உற்சவம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
பொதுவாக சிவாலயங்களின் பெருவிழாக்கள் கிராம காவல் தெய்வ வழிபாடு, விநாயகர் உற்சவம், கொடியேற்றம் தினமும் காலையும் மாலையும் பல் வேறு வாகனங்களில் புறப்பாடு, ரிஷப வாகன பெரு விழா, திருத்தேரோட்டம், சிறப்பு உற்சவம், பிக்ஷ்டாணர் உற்சவம்,நடராஜர் உற்சவம், தீர்த்த வாரி , திருக்கல்யாணம் , கையிலங்கிரி வாகன புறப்பாடு, கொடியிறக்கம், சண்டிகேஸ்வரர் உற்சவம், புஷ்ப பல்லக்கு, பந்தம் பரி உற்சவம், பன்னிரு திருமுறைகள் விழா, உற்சவ சாந்தி அபிஷேகம், விடையாற்றி என்ற முறையில் நடைபெறும். மண்டலத்திற்க்கு மண்டலம் உற்சவங்கள் மாறுபடுகின்றன.
சொர்ணாம்பிகா சமேத காரணீஸ்வரர் ( மூலவர்)
சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் அமைந்துள்ள திருத்தலம் காரணீஸ்வரம். ஐயன் மேகமாக இந்திரன் வழிபட்ட காரணீஸ்வரர், அம்மை சொர்ணாம்பிகை. ஆதொண்ட சக்கரவர்திக்கு ஐயன் காட்சி கொடுத்த தலம். ஐயன் வேத கிரீஸ்வரராகவும், அம்மை திரிபுர சுந்தரியாகவும் எழுந்தருளி அருள் பாலிக்கும் தலம். வினாயகர், முருகர், ஆகியோருக்கும் தனி சன்னதி உள்ளது. மேலும் பழனி முருகர், சனீஸ்வரர், வீரபத்திரர், நவ கிரகங்கள் சன்னதியும் உள்ளன இத்திருக்கோவிலில். பெரிய சொர்ணாம்பிகை நந்தவனம் என்னும் சோலையுடனும், இந்திர தீர்த்தம் என்னும் அழகிய பெரிய திருக்குளமும் அமைந்த இத்திருக்கோவிலில் வருடம் முழுவதும் திருவிழாதான். வருடாந்திரப் பெருவிழா சித்ரா பௌர்ணமியை தீர்த்தவாரி நாளாக கொண்டு பத்து நாள் திருவிழாவாக நடைபெறுகின்றது. இனி வரும் பத்து நாட்களுக்கு இக்கோவிலில் பஞ்ச மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் பவனி வரும் அழகை கண்டு களிக்க தங்களை கை கூப்பி அழைக்கின்றேன்.
இனி பெருவிழாற்கு முதல் நாள் விநாயகர் உற்சவத்திற்க்கு முன் நடைபெறும் சில சடங்குகளைப்பற்றி அறிந்து கொள்வோமா?
அனுக்ஞை : விநாயகர், மூலமூர்த்தி முதலாக சண்டிகேஸ்வரர் ஈறாக சகல தெய்வங்களிடமும், குரு, பெரியோர், வயதானவர்கள் ஆகியோர்களிடமும் அனுமதி பெறுவது ஆக்ஞை எனப்படுகின்றது.
சங்கல்பம்: எடுத்துக் கொண்ட காரியத்தை குருவின் உதவியுடன் செய்து முடிப்பதாக உறுதி பூணுதல் சங்கல்பம்.
ரக்ஷா பந்தனம்: காப்புக்கட்டுதல் விழாவின் தொடக்கம் முதல் நிறைவு வரை, வெளி உலக உபாதைகள் ஒன்றும் தீண்டக்கூடாது என்பதற்காக காப்பு கட்டப்பதுகின்றது. மூல மூர்த்திக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் காப்பு கட்டப்படுகின்றது.
ம்ருத்ஸங்க்ரஹணம்: அங்குரார்ப்பணம் என்னும் முளைப்பாலிகைக்காக ஆற்றங்கரை, மலையடிவாரம், நந்தவனம் போன்ற பரிசுத்தமான இடத்திலிருந்து புது மண் எடுத்து வரும் நிகழ்ச்சியாகும்.
அங்குரார்ப்பணம்: என்பது முளை இடுதல்(பாலிகை) மஹோற்சவம். மங்கள முறைப்படி 40,24,16 (அல்லது வைதிக முறைப்படி 5 ) பாலிகைகளில் நன் முளையிட்டு காலை-மாலை பஞ்ச கவ்ய நீர் வார்த்து அவ்ற்றின் முளைகளை நன்கு கவனித்து பலன் கூறுதல் .
வாஸ்து சாந்தி: இடத்திற்க்கு தேவதையான வாஸ்து புருஷனையும் அவரது அதிதேவதையான பிரம்ம தேவரையும் சக்திகளையும் பூஜித்து , மற்ற தெய்வங்களையும் வழிபட்டு திருப்தி செய்வதே வாஸ்து சாந்தி. மகிழ்வித்த வாஸ்து புருஷனை ஹோமாக்னியால் எரியூட்டி, ஆலயம் முழுவதும் இழுத்து சென்று சுத்திகரித்து, இறுதியாக புண்யாஹவாசன கலச நீரினால் அவ்விடங்களை சுத்தி செய்வதே வாஸ்து சாந்தியின் நிறைவு.
இனி வரும் பதிவுகளில் இத்திருக்கோவிலின் பெருவிழாவின் காட்சிகளைக் காணலாம். அன்பர்கள் வசதிக்காக ஐந்து படங்களுக்கு மேல் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள முயற்சி செய்துள்ளேன். முடிந்த வரை விளக்கங்களும் அளிக்க முயன்றுள்ளேன் இனி வரும் பத்து நாட்களும் வந்து ஆனந்த தரிசனம் பெற்று செல்ல கை கூப்பி அழைக்கின்றேன்.
No comments:
Post a Comment