Sunday, September 27, 2020

திருப்பாத தரிசனம் - 39

                                              திருவான்மியூர் தியாகேசர் -2

                           

தொண்டை நாட்டுத் தேவாரத்தலங்களுள் இத்தலம் 25வது தலம் ஆகும்.  இன்று கான்க்ரீட் காடாக இருக்கும் திருவான்மியூர் அக்காலத்தில் ஒரு பக்கம் கடல் சூழ , ஒரு பக்கம் வயல்கள் சூழ நெய்தலும், மருதமும் இணைந்து காட்சியளித்த அழகை ஆளுடையப்பிள்ளையாம் அம்மையின் ஞானப்பாலுண்ட திருஞான சம்பந்தர் இவ்வாறு பதிகம் பாடியுள்ளார்

கரையு லாங்கட லிற்பொலி சங்கம் வெள் ளிப்பிவன்

திரையு லாங்கழி மீனுக ளுந்திரு வான்மியூர் – என்றும் திருவான்மியூரின் கீழ்திசையில் கடல் இருப்பதால் கடலிலிருந்து முத்துக்களும், பவளங்களும் வந்து உப்பங்கழிகளில் ஒதுங்கும் அழகுடையதாகவும் கடல் மீன்கள் துள்ளி வந்து கரையில் கிடந்து உகளும் சிறப்புடையதாகவும், கடல் சூழ்ந்த நெய்தல் நிலத்திற்குரிய மலர்கள் தேன் சொரியும்படி பூத்திருக்கும் அழகுடையதாகவும்  இருந்திருக்கின்றது என்றும்

கானயங்கிய தண்கழி சூழ் கடலின் புறம்

தேனங்கிய பைம்பொழில் சூழ் திருவான்மியூர் – என்றும் புகழ்ந்து பாடி இத்திருவான்மீயூர் இறைவனை வழிபடுபவர்கள் யாவரும் தேவர் உலகத்தினையும் ஆளும் வல்லமை உடையவர்கள் ஆவார்கள் என்று பலன் கூறியுள்ளார்.

மனதில் ஆயிரமாயிரம் கவலைகள், எத்தனையோ துன்பங்கள், குடும்ப பாரம், வேலையின்மை, உடல்நோய் எத்தனையோ சஞ்சலங்கள் இருந்தும் அதற்கு விடைகிடைக்காமல் திணறும் நேரத்தில்  இத்தலத்து இறைவனை சம்பந்தப்பெருமான் பாடியபடி

திரையார் தென்கடல் சூழ் திருவான்மீயூர் உறையும்

அரையா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – என்று பாடி சரணடைய உங்கள் துன்பங்கள் அனைத்தும் தீயினில் தூசாகும்.

வாழ்வினில் எத்தனை துன்பம் வந்தாலும் பரவாயில்லை, ஒரு முறை இத்திருவான்மீயூர் தலம் வந்து ஈஸனை வலம் வந்து வழிபடுங்கள் “வாட்டம் தீர்த்திடும் வான்மீயூர் ஈசன் என்று அப்பர் பெருமானும்  ஒரு பதிகம் பாடியுள்ளார்.  சேக்கிழார் பெருமான் தமது  பெரிய புராணத்தில் திருவான்மியூர் தலப் பெருமை குறித்தும் பாடியுள்ளார்.

அதிகார நந்தி சேவை 

அருணகிரிநாதர் இத்தலத்து முருகன் மேல்

  ....  திசைமாமு காழியரி மகவான்மு  னோர்கள்பண

சிவநார்  ஆலமயில்               - அமுதேசர                    

திகழ்பால  மாகமுற மணிமாளி   மாடமுயர                      

திருவான்மி  யூர்மருவு             - பெருமாளே!     

என்று  திருப்புகழ் பாடியுள்ளார். அக்காலத்திலேயே மாட மாளிகைகள் திருவான்மீயூரில் நிறைந்திருந்தது என்பதை இப்பாடல் மூலம் அறிந்து கொள்கிறோம்.

அப்பைய தீக்ஷிதர், வண்ண சரபம் தண்டபாணி சுவாமிகள்  மற்றும் பாம்பன் ஸ்ரீமத் குமர குருதாச  சுவாமிகளும்  இத்தலத்தைப் பாடியுள்ளனர். ஸ்தல புராணம் அஷ்டாவதானம் பூவை கல்யாண சுந்தர முதலியார் பாடியுள்ளார்.

கிழக்கில்  ஏழு நிலை மற்றும் ஐந்து நிலை இராஜ கோபுரங்கள்,  மேற்கில் ஐந்து நிலை கோபுரம். கிழக்கு கோபுரம் வழியாக நாம் கோவிலின் உள்ளே நுழைந்தால் நேர் எதிரே   அருணகிரியாரால் பாடல் பெற்ற முருகர் வள்ளி, தேவ சேனா சமேதராக அழகிய தூண்களுடன் கூடிய  தனி  சன்னதியிலே காட்சியளிக்கிறார். வலப்பக்கம்  முழுமுதற் கடவுளான விஜய கணபதியை தனி சன்னதியில்  கண்டு வணங்கலாம். அம்மன் சன்னதி எதிராக நான்கு தூண் ஊஞ்சல் மண்டபம் அமைந்துள்ளது.

அவருக்கு வலப்பக்கம் அற்புத சிற்பங்கள் நிறைந்த தூண்கள் நிறைந்த தியாகராஜ மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தூண்களில் பல எழிலான சிற்பங்கள்.  ஒரு தூணில் அனுமனும் அவருக்கு எதிரே தண்டபாணியும் எழுந்தருளியுள்ளனர்.  தனி சன்னதியில் கிழக்கு நோக்கி எம்பெருமான் மான், மழு ஏந்தி அபய, வரத ஹஸ்ததுடனும், வலக்காலை தொங்கவிட்டு அமர்ந்த நிலையிலும், நடுவில் ஸ்கந்தன் நின்ற நிலையிலும், இடப்புறம் அம்மை கையில் மலர் ஏந்தி இடது காலை தொங்கவிட்ட நிலையிலும் சோமாஸ்கந்தராக, இருந்தாடும் அழகராக, தியாகராஜராக அருள் பாலிக்கிறார் அம்மையும் திரிபுர சுந்தரியும் தனி காட்சி தருகின்றார். பௌர்ணமி மற்றும் சிறப்பு நாட்களில் தியாகராஜரின் திருவீதியுலாவும் மற்றும் 18 திருநடனக் காட்சியும் சிறப்பாக நடைபெறுகின்றது. எம்பெருமானின் நடனத்தை காணப்பெற்றோர் பேறு பெற்றோர் என்பதில் ஐயமில்லை. தியாகராஜர் இத்தலத்தில் ஆடும் நடனம் அஜபா நடனமாகும்.

சந்திரசேகரர்

அனைத்து தியாகவிடங்க தலங்களிலும் தியாகராஜர் சன்னதி   மூலவரின் வலப்பக்கம், மூலவர் நோக்கும் திசையை நோக்கியவாறு  அமைந்திருக்கும் ஆனால் இத்தலத்தில் மாறாக, எதிரே மூலவரை பார்த்தவாறு அமைந்துள்ளது. இவ்வாறு அமைந்திருப்பதற்கான காரணம் அப்பைய தீக்ஷிதர்.   ஒரு காலத்தில் திருவான்மீயூர் ஆலயம் மங்கள ஏரியின் பெரு வெள்ளத்தால் சூழப்பட்டு இருந்தபோது இங்கு வந்த அப்பைய தீக்ஷிதர் மூலவரை தரிசிக்க முடியாமல் போக, அவருக்காக மேற்கே திரும்பினாராம் ஈசன்.

தியாகராஜர் மண்டபத்திலுள்ள நுழைவாயில் வழியாக  நுழைந்தால்  மருந்தீசர் சன்னதியை அடையலாம்.  சன்னதி கருவறை மற்றும் அர்த்த மண்டபம் என்னும் இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. மூலஸ்தானத்தில் ஆலமுண்ட நீலகண்டர், சுயம்புவாக, அருவுருவ லிங்க ரூபமாக, மருந்தீசராக எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். இமண்டபத்தின் தெற்குப்பகுதியில் வினாயகருடன் துவங்கி 63நாயன்மார்கள் எழுந்தருளியுள்ளனர். அடுத்து தாமரை மலரை ஏந்திய கஜலட்சுமி எழுந்தருளியுள்ளார். பின் சைவ சமய குரவர்கள், அதையடுத்து  வீரபாகு, அருணகிரிநாதர் இருபுறமும் கைகூப்பி நிற்க முத்துக் குமார சுவாமி  இரு தேவியருடன் எழிற்காட்சி தருகின்றார்.

வடக்கில் உற்சவ திருமேனிகள் அனைத்தும் அமைந்துள்ளன. அதையடுத்து  சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சன்னதி உள்ளது. அதையடுத்து 108 சிவலிங்கங்கள் பன்னிரெண்டு வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியின் இறுதியில் கால பைரவர் காட்சியளிக்கிறார்.

இம்மண்டபத்தின் கிழக்குப்பகுதியில் பஞ்சலிங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன, இவற்றுள்  முதலாவதாகப் பெரிய அளவில் உள்ளவர் கேதாரீஸ்வரர். தீபாவளி சமயத்தில்  கேதார கௌரி விரதம் இருப்போர் இவரை பூசிப்பது வழக்கம். தீபாவளியன்று (ஐப்பசி அமாவாசை) கேதாரீஸ்வரரை வழிபட பித்ரு சாபம் தீரும், அன்று பல வட மாநிலத்தவர்களும் வந்து சிறப்பாக வழிபடுகின்றனர். உண்ணாமுலையம்மை சமேத அண்ணாமலையாரும், நின்ற கோலத்தில் சூரியனும் உள்ளனர். ருத்ராக்ஷ மண்டபத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். தெற்கிலே அறுபத்து மூவர் தொடர்கின்றனர். வடக்கு கோஷ்டத்தில் துர்க்கையம்மனும், பிரம்மாவும் அருட்காட்சி தருகின்றனர். கிழக்கு கோஷ்டத்தில் திருமால்  காட்சியளிக்கிறார். தெற்கு கோஷ்டத்தில்  ஆலமர் கடவுளும், நர்த்தன விநாயகரும் அருட்காட்சி தருகின்றனர்.

சுவாமி சன்னதியை விட்டு வெளியே வந்து தியாகர் மண்டபத்தைக் கடந்து வெளியே வந்து வலம் வந்தால் கொடிமரம், பலி பீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றைக் காணலாம். மிகவும் பழமையான கோவில் என்பதை உணர்த்தும் வகையில்   நந்தீஸ்வரரின் திரு முகம் நேராக உள்ளது. அவரை  வணங்கி மேற்கு கோபுரத்தையும் வணங்கி   திரும்பினால்  தல விருட்சமான வன்னி மரத்தை காணலாம் அதன் அடியில் நின்றாலே மெய் சிலிர்க்கின்றது எம்பெருமான் சுயும்புவாக இருந்த இடமல்லவா அங்கிருந்தே அனைத்து விமானங்களையும், கோபுரங்களையும் தரிசித்து    பாப விமோசனம் அடையலாம்.  பின் யாக சாலையை கடந்து வலம் வந்தால் அம்மனின் சன்னதியை அடையலாம்.


த்ரிபுர சுந்தரி அம்பாள்

அம்பாள் சன்னதி கருவறை, அர்த்த மண்டபம்,  முன் மண்டபம், வெளி மண்டபம் ஆகியவற்றைக் கொண்டு  தனி பிரகாரத்துடன் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் நின்ற கோலத்தில் நம்மை எல்லாம் காக்க அம்மை அஞ்ச வேண்டாம் என்று அபய கரத்துடனும், என்னை சரணடை என்று இடது கரத்தால் தனது திருவடியைக் காட்டும் வரத கரமாகவும், பக்தர்களை காப்பதோடு மட்டுமல்லாமல் துஷ்டர்களை அழிக்கவும் என்பதை உணர்த்தும் விதமாக மேற்கரங்களில் அங்குச பாசமும் ஏந்தி நளினமாக சாய்ந்த நிலையில் எழிற்காட்சி தருகின்றாள். அந்த ஜகத்ஜனனியை கண்டவுடன் நம் கவலைகள் எல்லாம் ஓடுகின்றன. என்னே நம் தாயின் எழில் பிறவி எடுத்ததின் பயனை நாம் அடைந்து விட்டதாக உணரலாம். அம்மையைக்காண பல கோடி தவம் செய்திருக்க  வேண்டும். அம்மையின் சன்னதிக்கு முன் சிம்ம வாகனமுள்ளது, அம்பாள் ஓளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறையும்  ஸ்ரீசக்ரமும் நிறுவப்பட்டுள்ளது. உட்பிரகார சுவர்களிலே அபிராமி அந்தாதி  ஒவ்வொரு பாடலுக்கும் தனித் தலைப்புடன் கல்வெட்டாகப் பதிக்கப்பட்டுள்ளன. “சோதி மாதவமே! யோகச் சுடரொளி விளக்கே! ஞான போகமே!  அகங்கனிந்த புனிதமே! நிறைவே! அன்பே! தீதிலாது உயிர்கள் ஓங்கு திருவான்மியூருள் மேவு நாதநாதாந்த சொக்க நாயகி” என்று துவாதாசாந்த முனிவர் இத்தல அம்பிகையைப் போற்றிப் பாடியுள்ளார்.

Sunday, September 20, 2020

திருப்பாத தரிசனம் - 38

                                     

 விரையார் கொன்றையினாய் விடமுண்ட மிடற்றியனே

 உரையார் பல்புகழாய் உமை நங்கையோர் பங்குடையாய்

 திரையார் தென் கடல்சூழ் திருவான்மியூர் உறையும்

அரையா உன்னையல்லால் அடையாது எனது ஆதரவே  -       என்று                         திருஞானசம்பந்தர் பாடிய தலம்     திருவான்மியூர்  ஆகும்.       இத்தலமும் சென்னையில் கடற்கரை ஓரமாக அமைந்துள்ளது. சென்னையில் அமைந்துள்ள மூன்று பதிகம் பெற்ற தலங்களுள் தென் பகுதியில் அமைந்துள்ளது இத்தலம்.

பிரம்மாவின் வாரிசான பிரதேச குமாரர் வேடுவர்களுடன் கூடி  தீய குணமுடையவராக விளங்கினார். ஒரு சமயம் தலைகீழாகத் தவம் செய்யும் ஒரு முனிவரைப் பார்த்து அவரைக் கொல்ல நினைத்து தோல்வி அடைந்து மனம் மாறி அவர் தவம் முடிக்கும் வரை காத்திருந்து அறிவுரைகள் கேட்டு கங்கைக்கரையில் தவக்கோலம் பூண்டு  முனிவரானார். அப்போது சத்திய லோகத்தில்  பிரம்மா மூலம் இராம காதையை அறிந்த நாரதர் மூலம் உபதேசம் பெற்று  இவ்வுலகுக்கு இராமாயணம் என்னும் இன்னமுதத்தை  குயிலாக மாறி கூவி  வழங்கிய வால்மீகி முனிவரானார். பின்னர் தவம் செய்யும் போது மார்க்கண்டரை சந்தித்து முக்தி அடையும் முறையைக் கேட்க அவரும் தென் திசை நோக்கி செல். ஒரு புண்ணிய இடத்தில் "நான் இருக்கிறேன்" என்ற அசரீரி ஒலி கேட்கும். வ்விடத்தில் இறைவன் தங்களுக்கு முக்திப்பேறு அளிப்பார்  என்று கூறினார்.  அவ்வாறே தென் திசை நோக்கி வந்த வால்மீகி முனிவர் கிழக்கு கடற்கரை ஓரத்தில் நான் இங்கிருக்கிறேன் என்ற ஒலியை கேட்டு  வன்னி மரத்தடியில் சுயம்புவான மூர்த்தியை கண்டெடுத்து வழிபட, மனம் மகிழ்ந்த இறைவன் தியாகராஜராக அவருக்கு பங்குனி பௌர்ணமியன்று 18 வகை நடன காட்சி தந்தருளினார். அவர் வேண்டிக்கொண்டபடி பவளக்கொடியாம்  உமையம்மையுடன்  பக்தர்களுக்கு அருள் புரிய இத்தலத்திலே கோவில் கொண்டார். வான்மீகி  வேண்டிக் கொண்டபடி கோவில் கொண்டதால்  அவர் பெயரால் இத்தலம் வான்மியூர் என்றாயிற்று  தேவாரப்பாடல்  பெற்றதால் திரு என்னும் அடைமொழியும் சேர்ந்து திருவான்மீயூராயிற்று.

வசிஷ்ட முனிவர் நடு மண்டலத்தில் விசுவநாதருக்கு பூஜை செய்ய காமதேனுவின்  உதவியை வேண்டினார், காமதேனுவும் நாள் தோறும் அபிஷேகத்திற்கு பாலை சொரிந்து வந்தது. ஒரு நாள் அது மலையிலேயே தங்கி விட்டதால் பூஜை செய்ய முடியாமற் போனதால்  அவர் இட்ட சாபத்தால், தனது புனிதத் தன்மை நீங்கி காட்டுப்பசுவாகி, அலைந்து திரிந்து,   பழைய ஞானத்தால் மருந்தீசரின் திருமேனி மீது தினம் பால் சொரிந்து பாவ விமோசனம் பெற்றது. எனவே இறைவனுக்கு பால் வண்ண நாதர், கோகரந்தீஸ்வரர் என்ற திருநாமங்களும் உண்டு. காமதேனுவின் குளம்பு பட்ட வடு இன்னும் எம்பெருமானின் திருமேனியில் உள்ளது. பாலபிஷேகத்தின் போது வடுவை தரிசிக்க இயலும்.

மலையரையன் பொற்பாவை பார்வதி திருக்கல்யாணத்தின் போது அனைத்து  சீவ கோடிகளும் கயிலையில் கூடியதால்  வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தது அப்போது பூமியை சமன் செய்ய  வேண்டி  தென் திசை வந்த கும்ப முனி அகத்தியருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் அவர் இறைவனை நினைக்க அம்மாதொரு பாகர் உமையம்மையுடன் தோன்றி மருந்தும் அதன் வகைகளையும் கூற அகத்தியரும் நலம் பெற்றார். எனவே இறைவர் ஒளஷதீஸ்வரர், அதாவது மருந்தீஸ்வரர் என்ற திருநாமம் பெற்றார். மருந்தீசரை வழிபட்டு  அவரின் திருநீறு, அபிஷேகப் பால் ஆகியவற்றை உண்டு தங்கள் நோய் தீரப்பெற்றோர் ஏராளம். எனவே பக்தர்கள் அனைவரும் இறைவனை “திருவான்மியூர் மருந்து” என்று கொஞ்சியழைக்கின்றனர்.

மந்தமா கியசிந்தை மயக்கறுத்

தந்தமில் குணத்தானை யடைந்து நின்

றெந்தை யீசனென்றேந் திட வல்லிரேல்

வந்துனி ன்றிடும்வான் மியூரீசனே 

என்று திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற வான்மீக நாதர் எழுந்தருளியுள்ள இத்தலம், மூர்த்தி,  தலம்,  கீர்த்தி என்ற மூன்றும் ஒரு சேர அமைந்த தலம். பிறக்க, இறக்க முக்தி அளிக்கும் தலம், நினைத்தாலே வீடு பேறு அளிக்கும் தலம் என்று தல புராணம் கூறுகின்றது. சிறந்த பிரார்த்தனைத் தலம்.  திருவல்லிக்கேணி, திருமயிலை, வாலீஸ்வரர், கங்காதேஸ்வரர், தாண்டீஸ்வரர் ஆலயங்களின் கல்வெட்டுகளில் திருவான்மியூர் பற்றிய குறிப்புகள் உள்ளன.

வேத ஆகமப்படி தேவமுனிகள் மூலம் பிரம்மாவால்  அமைக்கப்பெற்ற தலம். பிரம்மாவே திருக்கோவில், மாடவீதி, மாடமாளிகைகள், கூட கோபுரங்கள் திருத்தேர் மற்றும் உற்சவ விக்கிரங்கள் அமைத்து பங்குனி மாதத்தில் ஆண்டுப்  பெரு விழா   (பிரம்மோற்சவம்)  செய்து வழிபட்டார். திருமால், போர் முடித்த  பார்த்த சாரதி ஆகியோர் வழிபட்ட தலம். இராமர் சீதா பிராட்டியை தேடி வரும் வழியில் இத்தல இறைவனை வழிபட்டு வரம் பெற்றார். சந்திரன் குரு பத்தினியை சேர்ந்ததால் குரு சாபம் பெற்று இத்தலத்தை அடைந்து இறைவனை வழிபட்டு குரு சாபம்   நீங்க பெற்ற தலம். மருந்தீசர் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளதால் மாலை சூரியன்  பூஜை செய்வதாக ஐதீகம்.

சூரியனும் சந்திரனும் எம்பெருமானை இத்தலத்தில் பூசிப்பதால் இத்தலத்தில் தனி சூரியன் மற்றும்  நவக்கிரக சன்னதி கிடையாது.  இந்திரன் தான் செய்த பாவத்தின் காரணமாக பெற்ற சாபங்கள் நீங்க இத்தலத்தின் தீர்த்தங்களில் நீராடி  சிவ பூஜை செய்து தனது பாவங்களை போக்கிக் கொண்ட தலம்.  வேதங்கள் இங்கு சிவபூஜை செய்து புனிதமடைந்தன. யமன் இங்கு சிவபூஜை செய்து பழி நீங்கப்பெற்றார்.   குரங்குருவம் பெற்ற இரக்ஷகன் என்பவன் பிரம்ம லோகத்திலுள்ள கல்யாண தீர்த்தத்தில் மூழ்கியதால் பெண்ணுருவம் பெற்று,  இத்தலத்தை அடைந்து ஜென்ம நாசினியில் மூழ்கிப் பழைய வடிவத்தை பெற்ற தலம். 

பிருங்கி மகரிஷி இப்பெருமானையும் உமையம்மையும் வழிபட்டு சக்தியை நீக்கி சிவனை மட்டும் வழிபட்ட பாவம்  நீங்கப்பெற்ற தலம். நான்கு வேதங்களும் பூசித்த வேதபுரீஸ்வரர், அனுமன் பூசித்த லிங்கமும், இந்திரனது சாபம் நீக்கிய மீனாட்சி சுந்தரேஸ்வரரும், பரத்துவாசர்  பூசித்த லிங்கமும் இத்தலத்தில் உள்ளன.

வான்மீகம்என்று சொல்லப்படும் புற்றுகள் நிறைந்த இடம் என்பதால், இது `வான்மீகியூர்என்றானது என ஒரு  வரலாறு கூறுகிறது. வால்மீகி முனிவரின் சாபம் நீங்க, இந்த ஆலயத்தின் வடமேற்கு மூலையில் இருக்கும் வன்னி மரத்தடியில்தான் தவமிருந்து, ஈசனைத் தரிசித்து சுயம்புலிங்கத்தை பெற்றார் எனவும், அது இன்றும் ஆலயத்தின் வெளிப்புறம் கிழக்கு கடற்கரை சாலையின் ஆரம்பத்தில் மார்க்கெட் அருகே, ஆலயத்தின் வடக்குப் பிரகாரம் மற்றும் மேற்குப்பிரகாரம் சந்திக்கும் மூலையில் இருக்கும் வால்மீகி முனிவரின் ஜீவசமாதியில் இருந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.

திரிபுரசுந்தரி அம்பாள்


விரிசடையண்ணல் இங்கே கருவறையில்  சுயம்பு மூர்த்தியாக, அருவுருவமாக  காமதேனுவின் குளம்படியின் வடுவுடன்  சிறிது வடபுறம் சாய்ந்த நிலையில் மேற்கு நோக்கி அருட்காட்சியளிக்கிறார்.  வான்மீகி முனிவருக்கு முக்தி அளித்ததால் இவர் வான்மீக நாதர் என்ற நாமமும், காமதேனு தன் பாலை சொரிந்து வழிபட்டதால் பால் வண்ண நாதர், கோகரந்தீஸ்வரர் என்றும். உலகில் உள்ள நோய்களின் தன்மையையும், அவற்றை தீர்க்கக் கூடிய மூலிகைகளின் இயல்புகளையும் அகத்தியருக்கு உபதேசித்ததால் மருந்தீசர் என்றும், நான்கு வேதங்கள் பூசித்ததால் வேதபுரீசுவரர் என்றும்,  பாற்கடலில் தோன்றிய அமுதத்தால் வானவர்கள் இவருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டமையால் அமுதீசுவரர் என்றும் நாமம் ஏற்பட்டது.  இவருக்கு பாலாபிஷேகம் மிகவும் விசேஷமானது.

வேதபுரீஸ்வரர், வான்மீகநாதர், ஆமுக்தீஸ்வரர், பால்வண்ண நாதர், தேனுமுக்தீஸ்வரர்,  திரிபுராந்தகர்,  சித்தநாதர் என வணங்கப்படும் ஈசர் இங்கு `தியாகராஜ பெருமான்என்ற பெயரில் உற்சவராகவும் கொண்டாடப்படுகிறார். இவர் ஆடும் தியாகர் என்றழைக்கப்படுகிறார். பௌர்ணமியன்றும், பெருந்திருவிழாக் காலங்களிலும் இவர் ஆடி வரும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும்.  அதிகாலை கோபூஜையும், அர்த்தஜாம பால் அபிஷேகமும் இங்கு கண்டு வழிபடத்தக்க பூஜைகள்.

அபிஷேகப்பால் சகல வியாதிகளுக்கும் மருந்தாக பக்தர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இத்தலத்தின் பெருமையை சொல்ல சொல்ல நீளும். ஈசனையும், இறைவியும் ஒரு முறை தரிசிக்கும் போதே குணமளிக்கும் எளிய வைத்தியர்கள். ஒரு முறை வந்து தரிசித்துப் பாருங்கள். அதன் பிறகு அவரே உங்கள் குடும்ப வைத்தியராக மாறி விடும் அதிசயத்தை உணர்வீர்கள்.


உடல் நோயை மட்டுமல்ல பிறவி என்னும் நோயையும் தீர்ப்பவர் மருந்தீஸ்வரர். உயிர்களின் உறக்கத்தைக் களைத்து, அறிவுத் தெளிவை ஏற்படுத்தும் வல்லமை உடையவர் இவர்.   நவகிரகங்களுக்கு தனிச்சன்னதி இன்மையால் இத்தலம் நவகிரகங்களால் ஏற்படும் தோஷங்களை நீக்கவல்ல கோளிலித் தலமாகும்.

மார்க்கண்டேயர் இத்தலத்தில் தவமிருந்து, வன்னி மரத்தடியில் இறைவன் இடபாரூடராகக்  காட்சி தந்து வரம் அருளியபடி கிழக்கில்  பிறவா வரமளிக்கும் ஜென்மநாசினி,  தெற்கில்  மனதில் உள்ள கேடு விளைவிக்கும் காமத்தை அகற்றும் காம நாசினி, மேற்கில் செய்த பாவங்களை அழிக்கும் பாப நாசினி,  வடக்கில் ஞானத்தை நல்கும் ஞானதாயினி, நடுவே   மோட்சப்பேறு வழங்கும் மோட்சதாயினி  என்னும் ஐந்து தீர்த்தங்கள் அமைந்த தலம். இவை ஐந்தும் எம்பெருமானின் சடாமுடியில் வீற்றிருக்கும் கங்கையிலிருந்து தெரித்த ஐந்து துளிகளிலிருந்து உண்டாயின என்பது ஐதீகம். சூரியன், பிரம்மா, யமன், பார்த்தசாரதி, இந்திரன், இராமர், சந்திரன் ஆகியோர் இத்தீர்த்தங்களில் நீராடி சிவபூஜை செய்து பாவ விமோசனம் பெற்றனர் என்று தல புராணம் கூறுகின்றது.

வன்னி மரம்  இத்தலத்தின்  தல விருட்சமாகும். கோவிலின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது இவ்விருட்சம். இம்மரத்தின் அடியில் எம்பெருமான் அகத்தியருக்கு திருமணக்காட்சியருளினார் பங்குனி பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாள் கல்யாண சுந்தரர் இம்மரத்தடியில் திருமணக் காட்சி இன்றும் அகத்தியருக்கு அருளுகின்றார். வான்மீகி முனிவர் சுயம்புவான மூர்த்தியை இம்மரத்தடியில் கண்டார் என்பதும் ஐதீகம்.  வைகாசி வசந்தோற்சவத்தின் போது 18 நடனக் காட்சி வன்னி மரத்தடியில் நடைபெறுகின்றது. வசந்தோற்சவத்தால் நல்ல மழை பொழியும் என்பது ஐதீகம்.

இத்தலம் மிகவும் பழமையான தலம் புராண வழி நோக்குமிடத்து பார்த்தசாரதி, இராமர், வான்மீகி முனிவர் ஆகியோர் வழிபட்டமையால் அக்காலத்தே இத்தலம் சிறப்புற்று விளங்கியமை  தெளிவு. கி.பி ஏழாம் நூற்றாண்டில் திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர் ஆகியோர் இத்தலத்து இறைவன் மேல் பதிகங்கள் பாடியுள்ளனர். பத்தாம் நூற்றாண்டின் சோழர் கால கல்வெட்டுக்கள் அம்மன் கோவில் சுவற்றில் உள்ளன. இறைவன் திருவான்மியூருடைய மகாதேவனென்றும், இவ்வூரை ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர் என்றும் குறித்துள்ளனர்.

Friday, September 11, 2020

திருப்பாத தரிசனம் - 38

                               


                          தொண்டை மண்டலத்தின் உபவிடங்கத் தலங்கள்


திருவொற்றியூர் - மாணிக்க  தியாகேசர்  (3)

                                 

இத்திருத்தலத்தில் எம் ஐயனின் கருவறை தொண்டை மண்டல அமைப்பான 'கஜ பிருஷ்ட விமானம்' (யானையின் பின் புறம்) என்ழைக்கப்படும் அர்த்த சந்திர அமைப்பில் அமைந்துள்ளது. மூலவர் பிரகாரத்தில் கலிய நாயனார், அறுபத்து மூன்று நாயன்மார்கள், தல விநாயகர் சன்னதிகள் அமைந்துள்ளன. அடுத்து ஆதி சங்கரர் சன்னதி உள்ளது. ஆச்சாரியரின் நான்கு சீடர்களும் பீடத்தில் உள்ளனர். அடுத்து ஏகாதச ருத்ர லிங்கர் சன்னதி. அடுத்து முருகன் சன்னதி. கோட்டத்தில் மஹாவிஷ்ணு பிரயோக சக்கரத்துடனும், துர்க்கை மகிடன் இல்லாமலும் தரிசனம் அளிப்பது ஒரு சிறப்பு. மூலஸ்தானத்திற்கு வெளியே அமைந்துள்ள  64கால் மண்டபத்தின் மையத்தில் ஆடற்கரணங்களின் அற்புதமான சிலைகள் அலங்கரிக்கின்றன. இம்மண்டபத்தில் டராசப்பெருமானின் சன்னதி அமைந்துள்ளது. மூலையில் த்வனி சண்டேஸ்வரர் 6 அடி உயரத்தில் கையில் மழுவுடன் கம்பீரமாக தரிசனம் அளிக்கின்றார்.. ஆடல் வல்லானின்  பின்புற சுவற்றில் ஏகபாத மூர்த்தி சிற்பம் எழிலாக அமைந்துள்ளது.

ஆசையை வென்றால் அனைத்தும் கிடைக்கும் எனும் தாரக மந்திரத்தை கொண்ட பட்டினத்தார் திருவொற்றியூரில் முக்தி பெற்று உயிரோடு ஜீவசமாதியானார். காவிரிப்பூம்பட்டிணத்தில் நகரத்து செட்டியார் மரபில் தோன்றிய இவர், இல்லறவாழ்வில் மகப்பேறு இல்லாமல் மிகவும் வருத்தம் கொண்டு சிவபெருமானை வேண்டிக்கொண்டதின் பேரில் திருவிடைமருதூர் இறைவனே வளர்ப்பு மகனாக “மருதவாணர்” என்ற பெயரில் வளர்ந்து வந்தார். ஒரு சமயம் மருதவாணர் கடல் கடந்து வாணிபம் செய்து வீடு திரும்பிய போது அவர் தனது திருக்கரத்தில் ஒரு காதறுந்த ஊசியும், ஒரு கிழிந்த ஓலையையும் மட்டுமே கொண்டு வந்தார். அவ்வோலையில் காதறுந்த ஊசியும் வாராது காண் கடை வழிக்கே என்று எழுதப்பட்டிருந்தது.

சிவபெருமானைத்தவிர மற்ற எல்லா செல்வமும் நிலையற்றது என்ற ஞானம் பெற்று  அனைத்தையும் துறந்து கோவணத்துடன் ஊர் ஊராக சென்று இறைவனைப் போற்றி பாடல்களை பாடி வந்தார். தன்னைப் பெற்ற தாயார் இறந்த போது பச்சை வாழை மட்டையில் அவரை படுக்க வைத்து தனது பாடல்களின் மூலம் அவரது ஈமச்சடங்குகளை செய்தார். காசி மன்னனை உண்மை உணர வைத்தார் அவரும் பத்திரகிரியார் என்று இவரது சீடரானார். இருவரும் பல தலங்களுக்கு சென்று திருவிடைமருதூரில் இருந்த போது பத்திரகிரியாரும் இறைவனடி சேர்ந்தார். பட்டினத்தார் தனக்கு எப்போது முக்தி என்று வினவ இறைவன் அவருக்கு ஒரு பேய்க்கரும்பை அளித்து எத்தலத்தில் இக்கரும்பு இனிக்கின்றதோ அத்தலத்தில் முக்தி என்றார். திருவொற்றியூர் இறைவனை தரிசித்து வரும் வழியில் பேய்க்கரும்பு இனித்தது. எனவே அவர் திருவொற்றியூரில் தங்கினார். ஆடி மாதம் உத்திரடாத்தன்று  கடற்கரை ஓரத்தில் மீனவ சிறுவர்களுடன் சித்து விளையாடல்கள் ஆடினார். தன்னை ஒரு இடத்தில் மண்ணில் புதைக்குமாறு செய்து மற்றொரு இடத்தில் வெளியே வந்தார். இப்படி இருமுறை செய்தார். மூன்றாம் முறையாக புதைத்தபிறகு அவர் வெளியே வரவில்லை. அவர் புதையுண்ட இடத்தில் சிவலிங்கமாக காட்சி அளித்தார்.

                                


இவர் திருவொற்றியூர் இறைவனைப் போற்றி 28 பாடல்கள் பாடியுள்ளார். இவை 11-ம் திருமுறையில் உள்ளன. பட்டினத்தார் முக்தி பெற்றதால் இது முக்தித்தலம். அவருடைய ஜீவசமாதி கடற்கரை ஓரத்தில் அமைதியாக காட்சி தருகின்றது.

ஐயும் தொடர்ந்து விழியும் செருகி அறிவழிந்து

மெய்யும் பொய்யாகி விடுகின்ற போதொன்று வேண்டுவன் யான்

செய்யும் திருவொற்றியூருடையீர் திரு நீறும் இட்டு

கையும் தொழப் பண்ணி ஐந்தெழுத்து ஓதவும் கற்பியுமே!

என்று எழுத்தறியும் பெருமானிடம் பட்டினத்தடிகள் வேண்டுகிறார்.

“அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை” எனப்போற்றப்படும் இராமலிங்க அடிகள் பள்ளிப் படிப்பே இல்லாமல் பாடல் இயற்றும் திறமை பெற்றவர். இவர் சிறு வயதிலிருந்தே ஒற்றியூர் இறைவனை வணங்கி இக்கோவிலில் உள்ள தல விருட்சமாகிய அத்தி மரத்தின் கீழ் அமர்ந்து தவம் செய்து சிவனருள் பெற்றவர். வள்ளலார் தற்போது தங்கசாலை என்றழைக்கப்படும் இடத்திலிருந்து தினமும் நடந்து வந்து வடிவுடையம்மனை வணங்கிய பின் தன் அண்ணியார் வீட்டிற்குச் சென்று உணவருந்துவது வழக்கம். ஒரு நாள் இவர் இவ்வாறு அன்னையை தரிசித்து விட்டு வீட்டிற்கு திரும்பிய போது அண்ணியார் வீட்டை உள் பக்கமாக பூட்டிக்கொண்டு தூங்கி விட்டார். அடிகளார் தூங்கும் தன்னுடைய அண்ணியை எழுப்ப மனமில்லாமல், பசியுடன் அப்படியே திண்ணையில் படுத்துக்கொண்டார். அன்பனின் பசியை பொறுக்காமல் ஸ்ரீவடிவுடையன்னை அவரது அண்ணியாரின் உருவில் வந்து அவருக்கு உணவு பரிமாறினாள். இவ்வாறு அன்னையில் அருள் பெற்ற வள்ளலார் சுவாமிகள் அம்மனைப் போற்றி “ஸ்ரீவடிவுடை மாணிக்க மாலை” என 101 பாடல்களையும், ஆதிபுரீஸ்வரரின் மீது “எழுத்தறியும் பெருமான் மாலை” என்று 31 பாடல்களையும் பாடியுள்ளார்.  

             

வருடம் முழுவதும் திருநாள்தான் இவ்வாலயத்தில் சித்திரையில் வருடப்பிறப்பு, ஆதி சங்கரர் உற்சவம் மற்றும் வட்டப்பாறை அம்மன் உற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. வைகாசியில் தியாகராஜ சுவாமிக்கு பதினைந்து நாட்கள் வசந்தோற்சவம். ஆனியில் ஆடல் வல்லானுக்கு ஆனித்திருமஞ்சனமும், ஆடிப்பூரத்தன்று திருவொற்றீசருக்கும், வடிவுடையம்மனுக்கும் சந்தனக் காப்பு விழாவும், அம்மாதத்தில் சுந்தர மூர்த்தி நாயனாருக்கும், கலிய நாயனாருக்கும் உற்சவம் நடைபெறுகின்றது. ஆவணியில் விநாயகர் சதுர்த்தி மற்றும் மூலத்தன்று தியாகராஜர் உற்சவம் கண்டருளுகின்றார். புரட்டாசியில் வடிவுடையம்மன் நவராத்திரி உற்சவம் கண்டருளுகின்றார். விஜய தசமியன்று தியாகேசர் வீதி உற்சவம் கண்டருளுகின்றார். ஐப்பசியில் அன்னாபிஷேகமும், கந்தர் சஷ்டி லக்ஷார்ச்சனையும், பூசத்தன்று திருஞானசம்பந்தர் ஞானப்பால் விழாவும் நடைபெறுகின்றது. கார்த்திகை பௌர்ணமியன்று கவசம் திறந்து புனுகு சாம்பிராணி தைலாபிஷேகம், இரவு தியாகேசர் வீதி உற்சவம். மார்கழியில் முழு நிலவன்று காலை மாணிக்கவாசகர் உற்சவம், நடராஜர் ஆருத்ரா தரிசனம், மாலை தியாகேசர் பதினெட்டு நடன உள் உற்சவம். தைப்பூசத்தன்று  காலை சந்திரசேகரர் தெப்பம் இரவு தியாகராஜர் வீதி உற்சவம். மாசிமாதம் பெருந்திருவிழா.

               

தங்கத்தேரில் வடிவுடையம்மன் 

ஒவ்வொரு வருடமும் மாசி மாத முழு நிலவு  நாளை தீர்த்த நாளாகக் கொண்டு பெருந்திருவிழா டைபெறுகின்றது. பிரம்மா, நந்தியெம்பெருமான், உரோமச முனிவர் ஆகியோருக்காக தியாகேசப்பெருமான் டனம் ஆடுவது இத்திருவிழாவின் சிறப்பு. திருவிழாவின் இரண்டாம் நாள் நந்திகேஸ்வரருக்காகவும், ஐந்தாம் நாள் பிரம்மாவிற்காகவும், ஆறாம் நாள் விஷ்ணு மற்றும் உரோமச முனிவருக்காகவும், திருவிழா நிறைவு நாளான பதினொன்றாம் நாள் உமா தேவியாரின் ஊடலை தணிக்க பந்தம்பறி நடனமும் ஆடி அருளுகின்றார். அம்மனின் பின்புறம் இருந்து ஐயனின் நடனத்தை கண்டு களிப்பது அன்பர்களாகிய  நமக்கு பெரும் பேறாகும்.  ஒன்பதாம் நாள் கல்யாண சுந்தரர் அகத்தியருக்கு திருக்கல்யாண காட்சி தந்தருளுகின்றார். உடன் கல்யாண கோலத்தில் சங்கிலியுடன் சுந்தரரும் மற்ற நாயன்மார்களும் திருக்கல்யாணக்கோலம் கண்டு மகிழ்கின்றனர்.

பட்டினத்தார் மரபில் வந்த நாட்டுக்கோட்டை நகரத்தார், இத்தலத்தில் தெற்கு மாட வீதியில் ஒரு மண்டபத்தை நிறுவி, தண்டாயுதபாணி பெயரில் ஆன்மீகப்பணி செய்து வருகின்றனர். மாசிப்பெருவிழாவின் போது பவளக்கார தெருவிலிருந்து தண்டபாணி தெய்வத்தை எழுந்தருளச்செய்கின்றனர். அவர் ஐந்து நாட்கள் திருவொற்றியூரில் தங்கியிருக்கும் போது பூஜை நடத்தி அன்னதானம் செய்கின்றனர்.

மனமெனுந் தோணி பற்றி மதியெனும் கோலை ஊன்றிச்

சினமெனுஞ் சரக்கை ஏற்றிச் செறிகட லோடும் போது

மதனெனும் பாறைதாக்கி மறியும்போது அறிய வொண்ணாது

உனையுனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே.

என்று அப்பர் பெருமான் பாடிய திருவொற்றியூரில்  ஆதிபுரீஸ்வரையும்,  வடிவுடை நாயகியையும்,  மாணிக்க தியாகரையும் தரிசித்நாம் அடுத்த தொண்டை நாட்டின் உபவிடங்கத்தலமான திருவான்மியூரை தரிசிக்கலாம்.

                                                                                      தியாகேசர் தரிசனம் தொடரும் . . . . .

Saturday, September 5, 2020

திருப்பாத தரிசனம் - 37


                                தொண்டை மண்டலத்தின் உபவிடங்கத் தலங்கள்


திருவொற்றியூர் - மாணிக்க  தியாகேசர்  (2)

வடிவுடையம்மன் 

தொண்டை மண்டலத்தின் மூன்று மகா சக்தி தலங்களில் இத்தலம் ஞான சக்தித் தலம் ஆகும். இங்கே எம் அம்மை வடிவுடை நாயகி ஞாசக்தியாக எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள். மற்ற சக்தி தலங்கள் திரு முல்லை வாயிலின் கொடியிடை நாயகி கிரியா சக்தி, மேலூரின் திருவுடை நாயகி இச்சா சக்தி.  "எவரொருவர் பௌர்ணமி அன்று இந்த மூன்று சக்திகளையும் தரிசிக்கின்றார்களோ அவர்களுக்கு எம் அம்மையின் பூரண கடாட்சம் கிட்டும்" என்பது  ஐதீகம். அதுவும் வெள்ளிக் கிழமையன்று பௌர்ணமியும் சேர்ந்து வந்தால் அத்தினத்தில் தரிசிப்பது மிகவும் சிறப்பு.


அம்மைக்கு வட கிழக்கு மூலையில் இங்கே தனிக் கோவில் உள்ளது, அம்பாள் வடிவுடையம்மை, திரிபுர சுந்தரி என்றும் அழைத்து போற்றுகின்றனர் பக்தர்கள்.  தெற்கு நோக்கி  நின்ற கோலத்தில் அருட்காட்சி தருகின்றாள் அன்னை. வள்ளலாருக்கு அவர் அண்ணியைப் போன்ற தோற்றத்தில் வந்து நேரில் உணவளித்த கருணை தெய்வமான, வடிவுடையம்மன் மீது அருட்பிரகாச வள்ளலார் சுவாமிகள் 100 பாடல்களை கொண்ட "வடிவுடை மாணிக்க மாலையை" பாடியுள்ளார்அதில் ஒரு பாடல் இதோ:

அணியே அணி பெறும் ஒற்றித் தியாகர் தன் அன்புறு சற்

குணியே எம் வாழ்க்கை குல தெய்வமே மலைக்கோன் தவமே

பணியேன் பிழை பொறுத்தாட் கொண்ட தெய்வப்பதி கொள் சிந்தா

மணியே என் கண்ணுண் மணியே வடிவுடை மாணிக்கமே!

எம் அன்னையின் அழகே அழகு அம்மை பெயருக்கு ஏற்ப அழகின் உருவமாகத் திகழ்கின்றாள். நான்கு திருக்கரங்கள் அபய வரத திருக்கரங்களுடன் பக்தர்கள் குறை கேட்கும் விதமாக தலையை வலப்புறம் சாய்த்தவாறு அருள் பாலிக்கிறாள்.  ஈசன் சன்னதியில் அவ்வளவு கூட்டம் இல்லை ஆனால் தாயின் சன்னதியில் கூட்டம் அலை மோதுகின்றது. ஆதி சங்கரர் ஸ்தாபித்த அம்மன் என்பதால் அவர் நியமித்தபடி எம் அம்மையின் கோவிலில் இன்றும் கேரளாவைச் சேர்ந்த நம்பூதிரிகளே பூஜை செய்கின்றனர். அம்பாளின் பொலிவான திருமுகத்தை பார்த்து விட்டால் நமது கவலைகள் எல்லாம் பஞ்சாக பறந்து விடும்.

இச்சா சக்தி - கிரியா சக்தி - ஞான சக்தி

வெள்ளிக்கிழமை அன்னையை தரிசனம் செய்வது மிகவும் சிறந்த பலனைத்தரும். இன்றும் வெள்ளிக்கிழமைகளில்  விடியல் காலை விசுவரூப காட்சி காணலாம். அது இன்று நேற்றல்ல தொன்று தொட்டு தொடரும் ஒரு மெய்ஞான காட்சி அதை வடிவுடை அம்மன் விருத்தத்தில் வரும் இப்பாடல் மூலம் அறியலாம்

சுந்தரி சவுந்தரி நிரந்தரி துரந்தரி

சோதியாய் நின்ற உமையே

சுக்கிரவார பெருமையும் கண்டு உனது சேவையும்

சொல்லவும் எளிதாகுமோ ......

வடிவுடையம்மன் மேல் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராசரும் ஐந்து கீர்த்தனைகள் பாடியுள்ளார்.  ஞானவடிவாம்பிகே தயாபரி என்று அம்பாளை போற்றியுளார். அதில் வெள்ளிக் கிழமை தரிசனத்தின் சிறப்பைப் பற்றியும் கூறியுள்ளார்.

தொண்டை நாட்டில் சக்தி தலங்கள் அமைந்ததற்கான வரலாறு. பல்லாண்டுகளுக்கு முன்பு மேலூர் திருமணங்கீஸ்வரர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக சிற்பி ஒருவர், பெரிய பாறையைக் கொண்டு சென்றார். வழியில் அப்பாறை வெடித்து மூன்று பாகங்களாக சிதறியது. கலங்கிய சிற்பி, தன் உயிரை விட துணிந்தார். அப்போது அம்பிகை அவருக்கு அருட்காட்சி தந்து, தன்னை மூன்று வடிவில் சிலையாக வடித்து மேலூர், திருவொற்றியூர், திருமுல்லைவாயில் ஆகிய தலங்களில் பிரதிஷ்டை செய்யும்படி அருளினாள். சிற்பியும் அவ்வாறே மூன்று சிலைகளை வடித்து பிரதிஷ்டை செய்தார். இம்மூன்று அம்பிகையரையும் பௌர்ணமியன்று  காலை, மதியம், மாலை என்று மூன்று வேளைகளில் வழிபடுவது சிறந்த பலனைத்தரும். அன்றைய தினம் மூன்று சன்னதிகளும் நாள் முழுவதும் திறந்திருக்கும்.

காலை திருவுடையம்மனை மஞ்சள் வஸ்திரம் சார்த்தி நெய் தீபம் ஏற்றி, வெற்றிலை பாக்குடன் அர்ச்சனை செய்ய திருவாகிய செல்வம், குழந்தைப்பேறு, தொழில் அபிவிருத்தி உண்டாகும். மதியம்   வடிவுடையம்மனுக்கு  சிவப்பு வஸ்திரம் சார்த்தி வழிபட வாக்கு வன்மை , திறமையான கல்வி அளிப்பாள்.  மாலை கொடியுடையம்மனை பச்சை வஸ்திரம் சார்த்தி வழிபட குழந்தைப்பேறு, திருமணத்தடை நீங்கும், தொழில் சிறக்கும், வீரம், தொழில் ஊக்கம், வெற்றி காரிய தடை நீங்கும்.

வடிவுடையம்மனை வழிபட்டு பேறு பெற்றவர்கள், பிரம்மா, இந்திரன், தும்புரு, நாரதர் மற்றும் வருணன் ஆகியோர். க்ஷயரோகத்தினால் அவதியுற்ற சந்திரனின் நிலை கண்டு அவனது மனைவிகள் 27 நட்சத்திரங்களும் இந்திரனிடம் முறையிட, இந்திராணி வெள்ளி மற்றும் பௌர்ணமி நாளில் வடிவுடையம்மனை வழிபட அறிவுறை அளித்தாள். எனவே அவர்கள் வெள்ளி மற்றும் பௌர்ணமி கூடிய நாளில் அம்மனை வழிபட, அம்மன் சந்திரனின் சாபத்தை நீக்கி, ”பெண்கள் அனைவரும் சமமே!, 27 மனைவிகள் இருந்தும் ஒரு பத்னியை விரும்பியது பாவம், அதனால்தான் உனக்கு தண்டனை என்று கூறி, உன் பத்தினிகளின் விரதமே உன்னைக் காத்தது என்றாள் அம்பிகை. பின்னர் சந்திரன் வேண்டிக்கொண்டபடி பௌர்ணமி மற்றும் வெள்ளி கூடிய நாளில் வழிபடுபவர்களின் துயர் தீர்த்தருளுகின்றாள்.

வாழி நின் சேவடி போற்றிநின் பூம்பத வாரிசங்கள்
வாழி நின் தாள்மலர் போற்றிநின் தண்ணளி வாழி நின் சீர்
வாழி என் உள்ளத்தில் நீயுநின் ஒற்றி மகிழ்நரும் நீ
வாழி என் ஆரூயிர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே!
 

என்று  வடிவுடை அம்மனிடம் தன்னையே சரணாகதி அடைந்திருக்கிறார் வடலூர் வள்ளல் பெருமான்.

மூவரின் தேவாரப்பாடலும் பெற்ற தலம் திருவொற்றியூர். மொத்தம் 8 பதிகங்கள் உள்ளன. ஐயடிகள் காடவர் கோன் க்ஷேத்திரவெண்பா  பாடியுள்ளார். திருஞான சம்பந்தப்பெருமான் ஒரு பதிகமும், அப்பர் 5 பதிகங்களும், சுந்தரர் 2  பதிகங்களும்  பாடியுள்ளனர்.  அமிழ்தினும் இனிய தமிழால் உயிர் வாழ்வதாக கூறிய முதுபெரும் கவிர் மறைமலை அடிகள் தனக்கேற்பட்ட கொடிய நோயை விலக்க வேண்டி, திருவொற்றியூர் முருகக்கடவுளை வேண்டி அவர் மீது “திருவொற்றியூர்  முருகன் மும்மணிக் கோவை” என்ற பாடல் தொகுப்பினை பாடி நோய் நீங்கப்பெற்றார். அருணகிரிநாதரும் இம்முருகன் மேல் இரண்டு திருப்புகழ் பாடியுள்ளார். தியாகராஜ சுவாமிகள் வடிவுடையம்பாள் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடியுள்ளார், முத்துசுவாமி தீட்சிதர் ஆதிபுரீஸ்வரம் எனும் ஒரு கீர்த்தனை பாடியுள்ளார். கவி காளமேகம், இரட்டைப் புலவர்கள், பாம்பன் சுவாமிகள், ஸ்ரீ சிதம்பர நாத முனிவர் ஆகியோரும் மற்றும் பல அன்பர்களும் இத்தலத்தைப் பாடியுள்ளனர்.

தொண்டை நாட்டுத் தலங்களுள் திருவொற்றியூரின் தலமரமான மகிழ மரமும், காஞ்சிபுரத்தில் மா மரமும் சிறப்பு பெற்றவை.  மகிழ மரத்தினடியில் எம்பெருமான் தியாகேசர் தன் தோழன் சுந்தரனிடம் ஒரு திருவிளையாடல் நடத்தினார்.  அது என்ன என்று பார்ப்போமா? நாடும் உய்ய நாமுய்ய நம்பி சைவ நன்னெறியின் சீலம் சிறக்கவும், மாதவம் செய்த தென் திசை வளர்ந்திடவும், தீதிலா திருத்தொண்டர் தொகை பாடிடவும் அதன் வழி அடியார்களை போற்றும் பண்பு நெறியினை காட்ட வந்த சுந்தரர், எம் ஐயனாலே நீ எனது அடிமை என்று தடுத்தாட்கொள்ளப்பட்டவர். அவர் திருவாரூரிலே பரவையாரை மணந்திருந்தார். ஒரு சமயம் தல யாத்திரையின் போது  திருவொற்றியூர் வந்து தங்கி இருந்தார்.

அதே சமயம்  ஞாயிறு கிராமத்தை சார்ந்த  சங்கிலி என்ற பெண் திருவொற்றியூரில் ஒரு கன்னி மாடத்தில் தங்கி  தியாகராச பெருமானுக்கு புஷ்ப கைங்கரியம் செய்து வந்தார், அப்பெண் மீது இவருக்கு காதல் பிறந்தது. ஆனால் சங்கிலியாருக்கு மண வாழ்விலே நாட்டம் இல்லாமலிருந்தது, எனவே தம்பிரான் தோழன்,  தம் தோழனாகிய இறைவனிடம் சென்று, "தியாகேசா! நீர் எமக்காக தூது சென்று சங்கிலியின் மனதை மாற்றி எம்மை மணக்க சம்மதிக்க வைக்க வேண்டும் "என்று கோரிக்கை வைத்தார்.

பரம கருணைக் கடலான எம்பெருமான் தனது அன்பனின் வேண்டுகோளை நிராகரிப்பாரா? அவர் அதை ஏற்றுக் கொண்டார். ஆயினும் தன் தொண்டன் ஆருரனுக்கு படிப்பினையை தர விரும்பிய எம் ஐயன் ஒரு திருவிளையாடலையும் அங்கே நடத்தினார். சங்கிலியாரிடம் தூது சென்ற பரமன் அவள் கனவிலே சென்று " சுந்தரன் எனது பரம பக்தன் எனவே நீ அவனை மணந்து கொள்வாயாக " என்று கூறினார்.

அவருக்கு இன்னொரு மனைவி இருக்கின்ற போது "நான் எவ்வாறு அவரை மணந்து கொள்ள முடியும்?" என்று சங்கலி வினவ, எம்பெருமான் நீ சுந்தரரிடமிருந்து அவர் உன்னை பிரிந்து செல்ல மாட்டார் என்று என் சன்னிதானத்தில் சத்தியம் வாங்கிக்கொள் என்று கூறினார்.  இறைவனே கூறும் போது சங்கிலியார் மறுப்பாரா? அவர் கூறியவாரே சுந்தரரிடம் தன்னை எப்போதும் பிரிய மாட்டேன் என்று சத்தியம் செய்து தருமாறு கேட்டார்.

பரவையாரை முழுதும் மறக்க முடியாத சுந்தரர், இறைவன் முன் சத்தியம் செய்ய விரும்பாமல், அவரை 'இறைவனே தாங்கள் நான் சத்தியம் செய்யும் போது தங்கள் சன்னிதியில் இருக்க வேண்டாம் திருக்கோவிலில் உள்ள மகிழ மரத்தினில் இருந்து கொள்ளுங்கள்' என்று வேண்ட, இறைவனும் ஒப்புக்கொண்டார். ஆனால் சங்கிலியாரின் கனவிலே சென்று நாளை நாம் சன்னிதியில் இருக்க மாட்டோம் மகிழ மரத்தில் இருப்போம், எனவே நீ மகிழ மரத்தினடியிலே வைத்து சத்தியம் வாங்கிக் கொள் என்று கூறினார்.


சங்கிலி நாச்சியார் உடனுறை சுந்தர மூர்த்தி நாயனார்

மறு நாள் பரவையார் சன்னதியில் வேண்டாம் மகிழ மரத்தடியில் வைத்து சத்தியம் செய்து தாருங்கள் என்று கேட்க உண்மையை அறிந்திருந்த சுந்தரர்  வேறு வழியில்லாமல் மகிழ மரத்தினடியில் வைத்து சங்கிலியாருக்கு, "அவளை பிரியமாட்டேன் அவ்வாறு பிரிந்தால் கண் பார்வை இழப்பேன்" என்று சத்தியம் செய்து கொடுத்தார். பின்னர்  இருவருக்கும் திருமணம் இனிதே நடந்தது. சில வருடம் கழித்து திருவாருர், வீதி விடங்கரின் ஆழித் தேரோட்டத்தை காண விரும்பிய வன்தொண்டர், திருவொற்றியூர் எல்லையைத்தாண்ட அவர் கண் பார்வை பறிபோனது. தோழனே ஆயினும் கூட தவறு செய்தால் தண்டனை பெறுவார் என்பதை இறைவன் இங்கே நடத்தி காட்டினார்.

பின்னர் சுந்தரர் காஞ்சி சென்று கச்சி ஏகம்பனை பாடி வலக்கண் பார்வையும், திருவாரூரிலே தியாகேசரைப்பாடி இடக்கண் பார்வையும் பெற்றார். மாசி மாத பிரம்மோற்சவத்தின் போது மக நட்சத்திரத்தன்று கோவிலின் வடக்கு பக்கம் உள்ள இந்த கற்பக விருட்சமான மகிழ மரத்திற்கு அருகில் உள்ள வசந்த மண்டபத்தில் கல்யாண சுந்தரர் பார்வதி அம்பாள் திருக்கல்யாண உற்சவம்  சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

காலையில் கோலாகலமாக திருக்கல்யாணம் டைபெறுகின்றது. மாலை கல்யாண கோலத்தில் சுந்தரரும் சங்கிலியாரும் முன் செல்ல, எம்பெருமான்  அகத்தியருக்கு அன்று அருட்காட்சி கொடுத்த கல்யாண சுந்தரராக பின் செல்கின்றார். இவர்களைத் தொழுதவாறு அறுபத்து இரண்டு நாயன்மார்கள், அகத்தியர் லோபாமுத்திரை, பிரம்மன், விஷ்ணு, அதிகாரநந்தியெம்பருமான் ஆகியோர் எழுந்தருள்கின்றனர். வீதி வலம் முடித்து திருக்கோவிலில் மகிழ மரத்தினடியில்  கல்யாண சுந்தரர்,   சுந்தரருக்கும் சங்கிலியாருக்கும் தரிசனம்  ந்தருளுகின்றார். அன்று நடந்த சபத நிகழ்ச்சி இன்றும் நடத்திக் காட்டப்படுகின்றது. இந்நிகழ்ச்சி மகிழடி சேவை என்று சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

அறுபத்து நாயன்மார்களுள் கலிய நாயனார் வழிபட்ட தலம் இது.  படம்பக்க நாதரின் திருக்கோவிலுக்கு விளக்கிடும் திருப்பணி செய்து வந்தார் கலிய நாயனார்.  தனது அன்பனின் பக்தியை உலகுக்கு உணர்த்த விரும்பிய  எம் ஐயனின் திருவுள்ளத்தால் கலியனார் வறுமை வாய்பட்டார், வறுமையிலும் தனது பணியை  தொடர்ந்து வந்தார் கலியனார். இருந்த செல்வம் எல்லாம் கரைந்து விட, வேறு வழியில்லாமல் தனது மனைவியையே விற்க முயன்றார் , ஆனால் யாரும் அவளை வாங்க முன் வர வில்லை. எனவே ஒரு நாள் விளக்கிட எண்ணையே இல்லாத்தால் "உடலின் உதிரத்தையே விளக்கிலே எண்ணையாக இட்டு விளக்கேற்ற முயன்றார்அப்போது கருணைக்கடலாம் எம்பெருமான் அவருக்கு ரிஷப வாகனத்தில் காட்சி கொடுத்து அவருக்கு சிவ லோகப் பதவி தந்தருளினார்.  படம்பக்க நாதர்  கருவறை சுற்று மண்டபத்தில் கலிய நாயனாருக்கு தனி சன்னதி உள்ளது.

                                            

கல்யாண சுந்தரர்

7ம் நூற்றாண்டில் தொண்டைமான் சக்கரவர்த்தி காளியை  இங்கு வட்டப்பாறை அம்மனாக வழிபட்டார். உக்ர ரூபிணியாக இருந்த அம்மனை சாந்தப்படுத்துவதற்காக ஆதி சங்கரர் அமைத்த ஸ்ரீசக்ரம் ஒரு வட்டப்பாறையின் கீழே உள்ளதால் அம்மனுக்கு இப்பெயர்.  வட்டப்பாறையம்மன் சன்னதிக்கு எதிரே சூளாமணி பைரவருக்குத் தனிகோயில் உள்ளது. ஒரு காலத்தில் இவ்விடத்தில் உயிர்பலிகள் இருந்துள்ளன. ஆதிசங்கரர் இத்தலம் வந்த போது அவற்றை நிறுத்தினார் என்று கூறப்படுகிறது.

கவிச்சக்கரவர்த்தி கம்பர், வடமொழி வால்மீகி இராமாயணத்தை தமிழில் எழுத திருவொற்றியூர் வந்தார். இவர் வட்டப்பாறை அம்மனின் பக்தர். இவர் பகல் முழுவதும் சதுராரன பண்டிதரிடம் இராமாயணத்தை செவி வழியாகக் கேட்டு இரவு முழுவதும் இராமாயணத்தை எழுதுவார். இப்படி எழுதுவதற்கு முன் வட்டப்பாறை அம்மனை வணங்குவார். அம்மனும் தன் பக்தனின் தமிழ்த்தொண்டினை வளரச் செய்ய சாதாரணப்பெண் போல் வந்து தீப்பந்தம் எந்தினார் என்கின்றனர்.

கிழக்கு வெளிப்பிரகாரத்தில் வகிரக சன்னதி, குழந்தையீஸ்வரர் சன்னதி, சித்தி விநாயகர், பால சுப்பிரமணியர் சன்னதிகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன.  கொடி மரம், பலி பீடம், உயரத்தில் நந்தி தேவர், ஜகந்நாதர், எதிரே சிவ சூரியன், நால்வர், சகஸ்ர லிங்கம் இவருக்குதான் பிரதோஷ காலத்தில் அபிஷேகம் நடைபெறுகின்றது, இராமநாதர் அமிர்த கண்டேஸ்வரர் சன்னதிகள்.  தெற்குப் பிரகாரத்தில் அஸ்வினி முதல் ரேவதி ஈறாக 27 நட்சத்திரங்களுக்குமாக 27 லிங்கங்களை ஒரே நேர் வரிசையில் அமைத்து அதன் முன்னே அருமையான நந்தவனமும் அமைத்துள்ளனர். மேற்கு வெளிப் பிரகாரத்தில் காளி, ஆகாசலிங்கம், அண்ணாமலையார், ஜம்புகேஸ்வரர், நாகலிங்கேஸ்வரர், காளத்திநாதர், மீனாட்சி சுந்தரேஸ்வரர்  சன்னதிகள் அமைந்துள்ளன.           

                         

அதிகாரநந்தி தேவர் 

ஆலயத்தின் வடமேற்கு மூலையில் அற்புத கலை நுணுக்கம் மிக்க கற்சிலைகளுடன் கூடிய முன் மண்டபத்துடன் திருவொற்றீஸ்வரர் கோயில் எழிலாக அமைந்துள்ளது. இப்பெருமானுக்குத்தான் நான்கு கால பூஜைகளும் டைபெறுகின்றன. இக்கோவிலின் முன்மண்டபத்தின் தூண்களில் கலை நுணுக்கத்துடன் கூடிய அற்புதமான சிற்பங்கள் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்து. பிரம்மா-விஷ்ணு, விநாயகர்-முருகர், ஊர்த்துவத்தாண்டவர்–காளி, பட்டினத்து அடிகள்-பத்திரகிரியார், தும்புரு–நாரதர், வியாக்ரபாதர் – பதஞ்சலி, நந்தி–பிருங்கி, என்று எதிரெதிர் தூண்களில் அருமையாக இணையாக அமைத்துள்ளனர். துவாரபாலகர்கள் அழகும் சொல்லி மாளாது. மேலும் பிரம்மாவின் மானச புத்திரர்களும்,  தென்முகக் கடவுளிடம் மௌன உபதேசம் பெற்ற  சனகாதி முனிவர்கள் நால்வரும், தேவாரமும்,  திருவாசகமும் பாடியருளிய சைவ சமயக் குரவர்கள் நால்வரும் பெரிய சிற்பங்களாகவும், சிவ பெருமானின் திருக்கோல வடிவ மற்றும் அறுபத்து மூன்று நாயன்மார்கள், சுந்தரர் - சங்கிலி நாச்சியார் ஆகியோரின்  சிறிய சிற்பங்களாகவும் கண்டு களிக்கலாம். சிம்மத்தின் வாயில் இரு கல் வளையங்கள் அக்கால சிற்பிகளின் திறமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.  தியாகராஜர் என்றாலே யோகம் தானே நுழைவாயிலின் கூரையில் ஒரு சூரிய சந்திரர்களுக்கு இடையே மனிதனுடைய உடல் அமைக்கப்பட்டு, அவ்வுடலில் உடற்சக்கரங்களின் விளக்கம் அமைத்துக் காட்டப்பட்டுள்ள அழகு கண்டுணரத்தக்கது. சன்னதியின் முகப்பில் திருக்கயிலாயக் காட்சியை கண்டு களிக்கலாம். 

வடக்கு வெளிப் பிரகாரத்தில் நந்தவனேஸ்வரர், நந்தவனம் சூளாமணி, பைரவர் சன்னதி, கல்யாண சுந்தரர் சன்னதி அமைந்துள்ளது. மகிழ மரத்தை சுற்றி இரும்பு கம்பிகளினால் வேலி அமைத்துள்ளனர். அதற்கு அருகில் அழகிய சிற்பங்களுடன் கூடிய தியாகரின் வசந்த மண்டபம் உள்ளது.  வசந்த மண்டபத்தை அடுத்து சுந்தர மூர்த்தியார் மண்டபம் உள்ளது அதில் சுந்தரர் சங்கிலியாருடன் திருக்கல்யாண கோலத்தில் காட்சி தருகின்றார். இன்றும் இம்மண்டபத்தில் பல்வேறு திருமணங்கள் டை பெறுகின்றன. மகிழ மரத்தின் அருகே தியாகப்பெருமானின் திருப்பாதங்களை தரிசிக்கலாம்.

இத்தலவிநாயகர் செல்வ விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார் முருகர் குமாரசாமித் தேவன் என்றும் அழைக்கப்படுகிறார்.

கரியமுகில் போலு மிருளளக பார
     கயல்பொருத வேலின் ...... விழிமாதர்

கலவிகளில் மூழ்கி ம்ருகமதப டீர
     களபமுலை தோய ...... அணையூடே

விரகமது வான மதனகலை யோது
     வெறியனென நாளு ...... முலகோர்கள்

விதரணம தான வகைநகைகள் கூறி
     விடுவதன்முன் ஞான ...... அருள்தாராய்

அரிபிரமர் தேவர் முனிவர்சிவ யோகர்
     அவர்கள்புக ழோத ...... புவிமீதே

அதிகநட ராஜர் பரவுகுரு ராஜ
     அமரர்குல நேச ...... குமரேசா

சிரகரக பாலர் அரிவையொரு பாகர்
     திகழ்கநக மேனி ...... யுடையாளர்

திருவளரு மாதி புரியதனில் மேவு
     ஜெயமுருக தேவர் ...... பெருமாளே

 

என்று அருணகிரி நாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார். இப்பாடலில் திருவொற்றியூரை திரு வளர் அதாவது லட்சுமி கடாட்சம் நிறைந்த ஊர் என்று போற்றியுள்ளார்.  கோவிலின் முன் பக்கம் அமர்ந்து இறைவனை தியானம் செய்வதற்கு ஏற்றார் போல பெரிய மணல் வெளி உள்ளது.

                                                                                      தியாகேசர் தரிசனம் தொடரும் . . . . .