Wednesday, November 30, 2011

ஆறாத இன்பம் அருளும் மலை

திருச்சிற்றம்பலம்

மாணிக்கவாசகர்

திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார் என்பது வழக்கு. அந்த திருவாசகத்தில் மாணிக்கவாசகப் பெருமான் மகளிர் விளையாடல்களை, இறைவன் புகழ்பாடுவதற்கு ஏற்ற செயல்களாக அமைத்துப் பாடினார். திருவாசகத்தில் வரும் திருவம்மானை, திருப்பொற்சுண்ணம், திருப்பூவல்லி, திருத் தோள்நோக்கம், திருவுந்தியார், திருச்சாழல், திருத்தெள்ளேணம், திருப்பொன்னூசல், அன்னைப் பத்து, குயிற்பத்து, திருத்தசாங்கம், திருவெம்பாவை எல்லாம் இவ்வாறு மகளிர் விளையாடல்களாக அமைந்த பாடல்கள்.

பெண்கள் உட்கார்ந்து ஆடுவது அம்மானை;
வாசனைப்பொடி இடித்தவாறே பாடுவது பொற்சுண்ணம்;
மலர் பறிக்கும்போது பாடுவது பூவல்லி;
ஊஞ்சல் ஆடும்போது பாடுவது ஊசல்;
குயிலையும், தும்பியையும், அன்னையையும் முன்னிலை வைத்துப் பாடுபவை குயில் பத்து, திருக்கோத்தும்பி, அன்னைப்பத்து ஆகியவை.
பாவைநோன்பு நோற்கும் போது பாடுவது திருவெம்பாவை.

இவற்றுள் திருவெம்பாவையின் அண்ணாமலையாரின் புகழ் பாடும் ஒரு பாடலை அருணாசல நாயகரின் கார்த்திகைப்பெருவிழாவின் இரண்டாம் திருநாளாகிய இன்றைய தினம் காணலாம் அன்பர்ளே.

அண்ணமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளியங்கித் தாரகைகள் தாம் அகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல்பாடி
பெண்ணே இப்பூம்புமல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்
.

பொருள்: திருவண்ணாமலையானுடைய திருவடித்தாமரைகளில் சென்று பணிகின்ற தேவர்களுடைய முடிகளிலுள்ள மணியின் ஒளி, சூரியன் தோன்றிவுடன் , நட்சத்திரங்கள் தம் ஒளி இழப்பது போல ஒழிய, பெண்ணுருவாகி, ஆணுருவாகி , அலியுருவாகி விளங்குகின்ற ஒளிபொருந்திய ஆகாயமாகிப் பூமியாகி இவ்வளவு பொருள்களிடமிருந்து வேறுபட்டுப் பெருமை நிறைந்த அமுதமாகி நின்றவனது திருவடிகளைப் பாடிக்கொண்டே. மாதே! இந்த அழகிய சீதப்புனலில் குதித்து மூழ்குவாய்! எம் பாவையே! தலைவன் தான் கண்ணாரமுதமாமாறு கருணை புரிக.

உண்ணாமுலையுமையாளுடனாகிய அண்ணாமலையார்


அடி .. முடி.. தேடி

இன்றைய பதிவில் இத்தலத்துடன் கூடிய சில புராணக் கதைகளைப்பற்றிக் காணலாம் அன்பர்களே. தான் என்னும் அகந்தை மட்டும் யாருக்கும் இருக்கக் கூடாது. தெய்வங்களுக்குக் கூட இது பொருந்தும் என்ற அரிய தத்துவத்தை மாந்தருக்கு உணர்த்த முப்பெருந் தெய்வங்களும் ஒரு நிகழ்வை நிகழ்த்திக் காட்டினர் திருவண்ணாமலையில் அந்த நாடகம் இதோ. ஒரு சமயம் திருமாலை விடவும் தானே பெரியவர் என்ற அகந்தை பிரம்மாவிற்கு ஏற்பட்டது. திருமாலிடம் சென்ற அவர் . 'உம்மிடமிருந்து பிறந்திருந்தாலும் நானே பெரியவன். நான் படைப்பதால்தான் உம்மால் காத்தல் தொழிலை செய்ய முடிகிறது என்று கர்வத்துடன் பேசினார். திருமால் அவரிடம், 'உனது தொழிலுக்கு ஆதாரமான வேதங்களையே உன்னால் காத்துக் கொள்ள முடியவில்லை. அப்படியிருக்கையில் நீ எப்படி பெரியவன் ஆக முடியும் , நானே பெரியவன் என்று அவர் வாதிட்டார். வாதம் தொடர்ந்தது இருவரும் யார் பெரியவர் என்று முடிவெடுக்க சிவபெருமானிடம் சென்றனர். சிவபெருமான் அப்போது ஒரு சோதிப்பிழம்பாய் வானமும் பாதாளமும் கடந்து நின்றார். இருவரில் பெருமானது அடியையோ அல்லது முடியையோ யார் முதலில் காண்கின்றார்களோ அவர்கள் பெரியவர் என்றார் திருக்கயிலைவாசர்.லிங்கோத்பவர்

உடனே திருமால் பன்றி வடிவம் எடுத்து பூமியைக் குடைந்து மைகலந்த கண்ணி பங்கன், மாதொரு பாகன், செங்கண் கருங்குழலி நாதன் சிவபெருமானுடைய திருவடியைக் காண புறப்பட்டார். பிரம்மதேவர் அன்ன வடிவம் எடுத்து எம்பெருமானுடைய திருமுடியைக் காண மேலே பறந்து சென்றார் இவ்வாறு பல ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பின் வழியில் எம்பெருமானின் திருமுடியில் இருந்து விழுந்த தாழம்பூ ஒன்றை பிரம்மதேவர் கண்டார், எம் பெருமானின் திருமுடி எங்குள்ளது என்று பிரம்மன் கேட்க அந்த தாழம்பூ நான் சிவனாருடைய சடையிலிருந்து நழுவி 40000 வருடம் கீழே பயணம் செய்திருக்கின்றேன் என்று கூறியது பிரம்ம தேவர் திருமுடியைக் காணும் முயற்சியை கை விடுத்து அந்த தாழம்பூவை தான் எம்பெருமானின் முடியைக் கண்டதாக சாட்சி கூறுமாறு வேண்டினார் தாழம்பூவும் ஒத்துக் கொண்டது. மாயவனும் திருவடி காணாமல் திரும்பி வந்தார். அவர்கள் சிவபெருமானை அடைந்து இந்த உண்மையைக் கூறினர். பொய் கூறிய பிரம்ம தேவனுக்கு பூலோகத்தில் கோவில் இல்லாமல் போகட்டும் என்று சாபம் கொடுத்தார் எம்பெருமான், படைப்புக் கடவுளின் மன்றாடலுக்கு மனமிரங்கி , ஆணவமும் தோல்வியை ஒப்புக் கொள்ளாத தன்மையும் இருக்கக் கூடாது என்று பிரம்மாவிற்கு உபதேசம் செய்து கோவிலின் அபிஷேகத் தீர்த்தம் வரும் இடத்தில் ஓரமாக பிரம்மா ஒதுங்கிக் கொள்ள சம்மதித்தார் அந்த கருணாலயன். பொய் சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூசைக்கு உபயோகப்படுத்தபடக் கூடாது என்றும் சாபம் கொடுத்து லிங்கோத்பவராக இருவருக்கும் அருட்காட்சி தந்தார் எம்பெருமான். தங்கள் பிழையை உணர்ந்த மாலும் அயனும் பின் லிங்க பூசை செய்தனர்.
பிரமன்அரி என்று இருவரும் தம் பேதமையால்
பரம் யாம் பரமம் என்றவர்கள் பதைப்பு ஒடுங்க
அரனார் அழல் உருவாய் அங்கே அளவிறந்து
பரமாகி நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ
என்று திருவாசகத்தில் மணி வாசக சுவாமிகள் பாடியபடி திருமாலும் பிரம்மனும் தான் என்னும் அகந்தை நீங்கிட அடி முடி காணாமல் ஜோதிப்பிழம்பாய் எம்பெருமான் நின்ற ஸ்தலம் திருவண்ணாமலை, நாளோ மஹா சிவராத்திரி, ஆயினும் பிரம்மனுக்கும், மாலுக்கும் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் அவர்கள் வேண்டிக் கொண்டதற்கிணங்கி கார்த்திகைக்கு கார்த்திகை நாள் ஒரு சோதி மலை நுனியில் காட்டா நிற்போம் என்று அருளிய படி கார்த்திகை மாதம் கார்த்திகை நாளன்று திருவண்ணாமலை உச்சியில் தீப தரிசன காட்சி தருவதாக ஐதீகம். ஜோதி ரூபமாககாட்சி தரும் சிவபெருமானை, அண்ணாமலையானைக் காண தேவர்களும், மகரிஷிகளும், சித்தர்களும், ஞானிகளும் திருக்கார்த்திகையன்று இத்தலத்திற்கு வருவதாக ஐதீகம்.
திருக்கார்த்திகை ஜோதி
இவ்வாறு ஐயன் ஜோதிப் பிழம்பாக நின்றதன் தத்வார்த்தம் என்னவென்று பார்த்தால் ஒரு பெரிய உண்மை விளங்கும். இங்கே தான் என்ற அகந்தை கொண்ட மாலும் அயனும் ஜீவாத்மாக்கள். இந்த சீவன்கள் அகந்தை கொண்ட மட்டும் இறை தரிசனம் பெற முடியாது, அகந்தை அகன்றால், மற்ற ஆணவம், கன்மம் மற்றும் மாயை என்னும் மன மாசுகள் அகன்றால் இறைவனை தன்னுள்ளேயே ஜோதி வடிவில் காணலாம் அவ்வாறு காணும் சீவன் சிவனாகின்றது, ஆணவ மலம் கெட்டு இறைவன் திருவடி நிழல் அடைந்தவர்கள் சிவமாக விளங்குவர் என்பதை உணர்த்துவதே திருக்கார்த்திகை தீபம்.


தீப தரிசன நேரத்தில் இத்தலத்தில் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி அருள் பாலிப்பார் அதற்கான ஐதீகம், முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளாகவும், பின்னைப் புதுமைக்கும் போற்றும் அப்பெற்றியனான எம் ஐயன் பவள வண்னர் சிவபெருமான், பேரமை தோளி பங்கன், மானேர் நோக்கி மணாளன், குவளைக்கண்ணிகூறன் ஒரு நாள் தன் நாயகியாம் மரகதச்சிலை மலையரசன் பொற்பாவை, பார்வதி, கௌரி, உமை நங்கை, பர்வத நந்தினி, கிரிஜாவுடன் வெள்ளிப் பனிமலையாம் திருக்கைலாய மலையிலே திருவோலக்கம் சாதிக்க பிருங்கியும், திருநந்தி தேவரும், பெருங்தகுதியுடைய சிவகண தலைவரும், சனகாதி முனிவர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும், எண்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும் அமர்ந்திருக்கும் போது குற்றமற்ற கற்பினையுடைய உமையம்மை, சூரிய சந்திரர்களான ஐயனின் கண்களை விளையாட்டாக பொத்தினாள். உடனே அண்ட சராசரங்களும் இருளில் மூழ்கி திண்டாடியது. மக்களும் தேவர்களும், கடவுட் பூஜையிலிருந்து வழுவினர். இப்பாவம் அம்மையை சாராது என்றாலும், உலகத்தோர் உய்யும் பொருட்டும் அவர்கள் 32 அறங்களையும் சரியான முறையில் அறிந்து கொள்ளும் பொருட்டும் அம்மையே உலக மக்களுக்கு அவற்றை நடத்தி காட்ட வேண்டி பூலோகத்திற்கு சென்று காஞ்சியில் முப்பத்திரண்டு அறங்களையும் புரிந்து சிவ பூஜை செய்யுமாறும், பின் தாமே வந்து மணம் செய்தருளுவதாகவும் அருளினார் சிவபெருமான்.
அம்மை பார்வதி சிவபூஜை செய்யும் கோலம் 
 
பின் அம்மை கொம்பரார் மருங்குல் மங்கை, செவ்வாய் சிறுமருங்குல் மையார் தடங்கண் மடந்தை, கயல் மாண்ட கண்ணி, பந்தணை விரலி பார்வதியம்மை, மாங்காட்டுப் பதியிலே வந்து ஐந்து குண்டங்களிலே அக்னி வளர்த்து நடுக்குண்டத்தில் ஒற்றைக்காலில் சிவ பெருமானைக் குறித்து கடுந்தவம் புரியலுற்றாள். அம்மை காமாக்ஷியின் தவத்தில் அகம் மகிழ்ந்த ஐயன் அசரீரியாக காஞ்சி நகருக்கு வருமாறு பணிக்கிறார். அம்மையும் காஞ்சிக்கு வந்து கம்பா நதிக்கரையில் , நான்கு வேதங்களுமே நான்கு கிளைகளாக அமையப் பெற்ற அற்புத மாமரத்தின் அடியிலே, மணலாலேயே சிவலிங்கம் அமைத்து, ஐயன் அழித்த இருநாழி நெல்லைக் கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் முறையாக செய்து சிவபூஜை செய்து வரலானாள்.
அர்த்தநாரீஸ்வரர்
அப்போது எம்பெருமான் திருவண்ணாமலை சென்று இடப்பாகம் பெற தவம் செய்யுமாறு கூற அம்மையும் திருவண்ணாமலை வந்து பவழக் குன்று மலையில் பர்ண சாலை அமைத்து கௌதம முனிவரின் உதவியால் தவம் செய்தார். பின் கார்த்திகை மாதம் பௌர்ணமியுடன் கூடிய கார்த்திகை நன்னாளில் பிரதோஷ காலத்தில் ஜோதி தரிசனம் கண்டு இடப்பாகம் பெற்று உமாதேவியார் அமர்ந்தார். எனவே தான் மலை மேல் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும் சமயத்தில் அருணாசலேஸ்வரர் அர்த்த நாரீசுவரராக எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். இவ்வாறு அம்மை இடப்பாகம் பெற்ற தினமே திருக்கார்த்திகை திருநாளாகும்.


இறைவன் ஒளி வடிவானவன் என்பதே நமது வேதங்களில் காணப்படும் உண்மை. எனவேதான் பல்வேறு அருளாளர்கள் இறைவனை ஜோதி வடிவன் என்று பாடியுள்ளனர். "அருட்ஜோதி தெய்வம் என்னை ஆண்டு கொண்ட தெய்வம்" என்று வள்ளலாரும், "ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி" என்று மாணிக்கவாசகரும், "எரிகின்ற இள ஞாயிறன்ன மேனி", " ஒளி வளர் விளக்கே", "ஒளிச்சுடரான மூர்த்தி" என்றும் ஆன்றோர் பலர் ஆண்டவனைப் பாடிப்பரவியுள்ளனர். உண்மையான உலக அதிசயமான உலக அற்புத தெய்வக்குழந்தை திருஞான சம்பந்தரின் பதிகத்தில் ஒன்பதாம் பாடல் இந்த அருட்பெருஞ்சோதியை போற்றி வணங்குகின்றது.
ஆணோ பெண்ணோ அரிவையோ என்று இருவரும் காணா கடவுள்
தன்னை இன்னான் என காண்பரிய தழல் ஜோதி
என்று தேவாரம் போற்றுகின்றது எம்பெருமானை. தழல் தூணே ஜோதி லிங்கம். அந்த ஜோதி ஸ்வரூபனை ஜோதி வடிவமாக வணங்கும் நாளே திருவண்ணாமலையில் சிறப்பாக கொண்டாடப்படும் திருக்கார்த்திகை ஆகும்.
அண்ணாமலை புராணம் தொடரும்..........

Monday, November 28, 2011

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -8யமுனா மய்யா கீ ஜே!

யமுனோத்ரி ஆலய கோபுரம்
யமுனையுடன் இனைந்த சில புராணக்கதைகளைப் பார்த்தோம் இனி வாருங்கள் மலை ஏறி சென்று யமுனை அம்மனை தரிசித்துவிட்டு வரலாம். ஜமுனாபாய் சட்டியிலிருந்து 6 கி.மீ நடைப்பயணத்தை துவக்கினோம். சிறிது காலம் முன்வரை ஹனுமான் சட்டியிலிருந்து 13 கி.மீ நடைப்பயணமாக் இருந்தது இப்போது பாதை சரி செய்யப்பட்டு ஜான்கி சட்டிவரையில் வண்டிப் பாதை உள்ளது.

யமுனோத்ரி கிராமம் இமயமலையின் மடியில் அமைந்துள்ள அழகைக் காணுங்கள்

லேசாக மழை தூறிக்கொண்டுதான் இருந்தது ஆகவே அனைவரும் மழைக்கோட்டு அணிந்து கொண்டோம் எங்கள் குழுவில் ஒருவர் மலையேற வரவில்லை, மூன்று பேர் குதிரையிலும் மற்றவர்கள் நடந்தும் மலையேற முடிவு செய்தனர். பாதை நான்கு அடி அகலம். ஒரு பக்கம் மலை மறுபக்கம் யமுனை ஆறு , அற்றின் பக்கம் தடுப்பு உள்ளது. ஆற்றின் பக்கம அருமையான மலர்கள், நெடிதுயர்ந்த மரங்கள் என்று அற்புதமான இயற்கை காட்சிகளை பார்த்துக்கொண்டே மலை ஏறுகின்றோம்.

குதிரை வேணுமா ? குதிரை

தொங்கும் பாறை
நெளிந்து வளைந்து செல்லும் பாதை


நடுநடுவே பாலங்கள்யமுனையில் கலக்கும் அருவிகள்இவற்றை எல்லாம் இரசித்துக்கொண்டே மலையேறும்

சொக்கலிங்கம், இரவி, கணேசன், மனோகரன்,
தனுஷ்கோடி, மோகன், தேவராஜ் ஆகியோர்


சலசலத்துக் கொண்டே ஓடும் யமனையின் சத்தம். மலையேறும் குதிரைகளின் குளம்படி சத்தம். யமுனா மய்யாக் கீ ஜே என்று எழும்பும் பக்தர்களின் சத்தம் என்று அற்புதமான சூழல். மழைநாளாக இருந்தும் கூட கூட்டம் இருந்தது. வழியில் இவ்வளவு பேரை பார்க்கவில்லை எப்படி இவ்வளவு கூட்டம் வந்தது என்று வியந்தோம்.

அனைத்து வயதினரும், பாரத் தேசத்தின் அனைத்து பிராந்தியத்தில் இருந்து வந்திருந்த மக்கள் மழைக்கோட்டிடன் மிகவும் பக்தி சிரத்தையுடன் மலையேறினர். சில இடங்களில் தொங்கும் பாறைகள், சில இடங்களில் பாலங்கள் என்று மெள்ள மெள்ள ஏறினோம். யமுனையில் பல் நீர் வீழ்ச்சிகள் வந்து விழுவதையும் கண்டோம். குதிரைகள்,கண்டிகள், தண்டிகள், மலை ஏறுபவர்கள், இறங்குபவர்கள் என்று எல்லோரும் ஒரே வழியில் பயணம் செய்வதால் ஒருவர் மேல் ஒருவர் இடித்துக்கொள்ளாமல் பார்த்துத்தான் செல்ல வேண்டும்.
கண்டி - பிட்டு என்னும் கூடையில் பயணிக்கும் இரு சிறுவர்கள்

மலையேறும் போது மெள்ள மெள்ள ஏறுவதுதான் சிறந்தது. இயற்கை காட்சிகளை இரசிக்கும் போதோ, புகைப்படம் எடுக்கும் போதோ பாதையின் ஓரத்தில் செல்லாதீர்கள், அதே சமயம் ஒரே இடத்தில் நின்று இரசித்து விட்டு பின்னர் முன்னே செல்லுங்கள். நடு நடுவே ஒய்வெடுத்துக்கொள்ள வசதிகள் உள்ளன. மேலும் இரு புறமும் டீ, டிபன் சாப்பிட கடைகள் உள்ளன. வழியெங்கும் பல கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. சுமார் 2.00 மணி நேரத்தில் யமுனோத்ரி கோயிலை அடைந்து விட்டோம்.


யமுனாஷ்டகத்திலிருந்து ஒரு பாடல்

Kalindagirimastake patadamanda poorojvalaa
Vilasagamanollasat Prakataganda shailonnata I
Saghoshagati danturaa samadhiroodha dolottamma
Mukundarativardhini jayati padmabandhosuta II2II
"Falling forcefully on Mount Kalinda Shri Yamunaji appers to be crystal white and looks beautiful with her luxurious flow through cheek like rocks of mountain. Shri Yamunaji follows a zig-zag path noisily and while she flows up and down she looks as if sitting on a beautiful swing. Shri Yamunaji is superior as she enhances our love towards lotus-feet of Lord Mukund. II2II
நன்றி: http://www.shreevallabh.com/Works/yamunashtak.htm
யமுனோத்ரி ஆலயம்

மேலேறி செல்ல செல்ல ஆலயம் நம்மருகே வரும் காட்சி

மேலே செல்ல செல்ல மேக கூட்டம் வந்துவிட்டதால் வெளிச்சம் குறைந்து கொண்டே வந்தது. யமுனோத்ரியை நெருங்கும் போது முதலில் மஞ்சள் நிற கோபுரம் மேகமூட்டங்களுக்குிடையில் மங்கலாக தெரிந்தது. கோபுரம் இமய மலைப்பிரதேசத்தில் உள்லது போல ஒற்றை கூம்பு வடிவில் உள்ளது. சிறிது நேரத்தில் முழுவதுமாக மேகம் மறைத்துவிட்டது. சரியான மழை பிடித்துக்கொண்டது. அரை மணி நேரத்திற்கு நல்ல மழை பெய்தது. கரங்களில் கையுறை அணியாமல் சென்றதால் கைகள் விறைத்து விட்டன. பின்னர் மழை நின்ற பின் யமுனை ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தை கடந்து யமுனோத்ரியை அடைந்தோம்.

சூரிய குண்டம்
( அரிசி வேக வைக்க ஏதுவாக கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன)

யமுனோத்ரியில் இரண்டு ஊற்றுகள் உள்ளன ஒன்று யமுனோத்ரி பனி ஆறு இது மேலே 12 கி.மீ உயரத்தில் உள்ளது, காளிந்தி சிகரத்திலிருந்து ஓடி வருகின்றாள் யமுனை இங்கிருந்து செங்குத்தான மலை என்பதால் இங்கு செல்வது கடினம் மலையேற்ற வல்லுனர்களும், மிகுந்த பக்தி கொண்டவர்கள் மட்டுமே இங்கு செல்கின்றனர். இரண்டாவது ஊற்று வெந்நீர் ஊற்று சூரியன் தன் புதல்விக்கு ஒரு கிரணத்தைக் கொடுத்தால் உண்டாகியது சூரிய குண்டம். முதலில் நாங்கள் தப்த குண்டத்தில் வெந்நீரில் புனித நீராடினோம். ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனியாக கட்டங்கள் உள்ளன. பாறைகளில் இருந்து வரும் வெந்நீர் மிகவும் சூடாக இருப்பதால் நாம் குளிப்பதற்கு ஏற்றவாறு செய்து இக்கட்டங்களில் தண்ணீரை நிரப்பித்தருகின்றனர். கந்தக பூமியில்தான் இவ்வாறு வெந்நீர் உற்றுகள் வரும். அதனால் நிறைய நேரம் தண்ணீரில் இருக்க வேண்டாம்.
தர்ம சிலா
புனித நீராட்டம் முடித்த பின் புது ஆடை அணிந்து கொண்டு அங்கு கடைகளில் கிடைத்த அரிசி பொட்டலத்தை வாங்கி சூரிய குண்டத்தில் வேக வைத்து பிரசாதத்திற்காக எடுத்துக்கொண்டோம். சூரிய குண்டத்திற்கு அருகில் தர்ம சிலா உள்ளது. இந்த பாறையிலிருந்து வெந்நீர் வந்த வண்ணம் உள்ளது. இந்தப் பாறைதான் யமுனையாக வணங்கப்படுகின்றாள். அர்ச்சனை இங்குதான் நடைபெறுகின்றது. நாங்களும் அங்கு குழுவாக அமர்ந்து சங்கல்பம் செய்து கொண்டு அர்ச்சனை செய்து யமுனை அன்னையை வணங்கினோம். இந்த வெந்நீர் உற்றுகளால் இவ்வளவு குளிரிலும் இந்த மலைப்பகுதி முழுவதுமே சூடாக உள்ளது. ஹரித்வாரில் உள்ளது போல் யமுனோத்ரி செல்லுபவர்கள் தங்கள் வருகையை புத்தகத்தில் பதிவு செய்யும் வழக்கம் இங்கும் உள்ளது.ஆலயத்திற்கு அருகே விஷ்ணு குண்டம் என்னும் இன்னொரு வெந்நீர் குண்டம் உள்ளது.

விஷ்ணு குண்டம்

பின்னர் யமுனோத்ரி ஆலயத்தில் அன்னையை வணங்கச்சென்றோம். உற்பத்தி ஸ்தானத்தை நோக்கியவாறு அன்னை அருள் பாலிக்கின்றாள். கர்ப்பகிரகத்தில் மத்தியில் கரிய நிறத்தில் கூர்ம வாகினியாகிய ( ஆமை வாகனம்) யமுனை அருள் பாலிக்கிறாள். அன்னையின் இடப்பக்கம் சிவப்பு நிறத்தில் மகர வாகினியாக ( முதலை வாகனம்) கங்கை, மற்றும் இடப்பக்கம் சரஸ்வதி என்று முப்பெரும் தேவியரும் அருட்காட்சி தருகின்றனர். யமுனைக்கு மங்களப் பொருட்களான, வளையல், கண் மை, குங்குமம் மற்றும் சாதம் படைத்து வழி படுகின்றனர். கோவில் சுவர் முழுவதும் ஸ்டிக்கர் பொட்டு ஒட்டப்பட்டிருப்பதை காணலாம். கூட்டம் அதிகமாக இருக்கவில்லை எனவே அற்புதமான தரிசனம் செய்தோம். லலிதா சகஸ்ரநாமம் சேவித்துக்கொண்டே வலம் வந்து அன்னையரை வணங்கினோம்.யமுனையாற்றிலிருந்து ஆலயத்தின் காட்சி


யமுனையாற்றில் குளிக்கச்செல்ல அமைக்கப்பட்டுள்ள படிகள்

யமுனைக்கரையில் அடியேன், சொக்கலிங்கம்,மற்றும் ரவி

பின்னர் யமுனையாற்றுக்கு சென்று கேதாரீஸ்வருக்கு அபிஷேகம் செய்யவும் வீட்டில் வைத்துக்கொள்ளவும் தண்ணீர் சேகரித்துக்கொண்டோம். நடு நடுவே மழை பெய்தது, பனி மூடியது சமயம் கிடைத்த போது புகைப்படம், சலனப்படம் எடுத்துக்கொண்டோம்.

ஹனுமன் ஆலயம்

பின்னர் ஹனுமன் ஆலயம் சென்று இராமதூதன், சொல்லின் செல்வன், சுந்தரனை வணங்கினோம். இச்சன்னதியில் இளைய பெருமாள், சீதா பிராட்டி சகிதமாக இராமபிரானும், இளையாழ்வார் அம்சமான இராமானுஜரும் அருள் பாலிக்கின்றனர். மூன்று கோபுரங்கள் உள்ளன இச்சன்னதியில். முகப்பில் விநாயகரும் யமுனை அன்னை சுதை சிற்பங்கள் உள்ளன. ஆனால் அங்கே டிஷ் ஆன்டனாவை அமைத்துள்ளது அவ்வளவு சரியாக படவில்லை.

இறங்கும் பொழுது மலைப்பாதையின் ஒரு பார்வை

பின்னர் ஆரம்பித்த யாத்திரயின் முதல் ஆலயத்தின் தரிசனம் மிக அற்புதமாக அமைந்ததற்கு அந்த ஆண்டவனுக்கு அனந்த கோடி நன்றிகள் கூறி ஆனந்தத்துடன் மலை இறங்கி ஜானகி சட்டியை அடைந்தோம். வரும்வழியில் சப்தரிஷி குண்ட சென்று வந்த சாது ஒருவரை குதிரைக்காரர் காட்டினார்.

தங்குவதற்கேற்றவாறு பலவேறு சத்திரங்கள் உள்ளன. இரவி தங்குபவர்கள் தங்கலாம். குளிர் காலத்திற்காக யமுனை அன்னை பல்லக்கில் செல்லும் திருவிழா மற்றும் துவாரம் திறக்கும் விழா வெகு சிறப்பாக நதைபெறுகின்றது.

எங்கள் பேருந்து ஓட்டுனர் பேருந்தை ஜானகி சட்டிகே கொண்டு வந்திருந்தார். அங்கிருந்தே அஸ்னால் காட் சென்று உடமைகளை எடுத்துக்கொண்டு பர்கோட் வந்து சேர்ந்தோம். பர்கோட்டில் சிறிது அவசியான பொருட்களை வாங்கினோம். பின்னர் இரவு தூங்கசென்றோம். நடுவில் திடீரென்று முழிப்பு வந்தது, வெளியே பெஉம் சத்தத்துடன் மழை பெய்து கொண்டிருந்தது. யாத்திரையின் கால்வாசி பாகம் தானே முடிந்திருக்கின்றது இன்னும் முக்கால்வாசி பாகம் யாத்திரை உள்ளதே என்னவாகுமோ என்ற கவலை மன்தில் தோன்றியது. என்ன ஆயிற்று என்று அறிந்து கொள்ள தங்களுக்கும் ஆவலாக உள்ளதா? சற்றுப்பொறுங்களேன் பொழுது விடியட்டும் அதற்குள் நானும் மீதி தூக்கத்தை முடித்துக்கொள்கிறேன்.