Wednesday, September 12, 2012

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -30

காலை சூரிய ஓளியில்  மிளிரும் நீலகண்ட சிகரம் 

சென்ற வருடம் எவ்வளவு இன்னல்கள் ஏற்பட்டதோ அதற்கு எதிர்மாறாக இந்த  வருடம் தரிசனம் மிகவும் சிறப்பாக அமைந்தது அவனருளால். திருமஞ்சன சேவை மட்டும் கொடுக்காமல் விட்டு விடுவாரா? இன்று அருமையான இரு தரிசனம் கிட்டியது ஒன்று பத்ரிநாதரின் நிஜஸ்வரூபம், மற்றொன்று நீலகண்டரின் அருமையான தரிசனம் மிகவும் திவ்யதரிசனம் கிடைத்தது. திருமஞ்சன காலத்தில் மட்டுமே பெருமாளின் நிஜ ஸ்வரூபத்தை நாம் சேவிக்க முடியும். சிருங்காரம்(அலங்காரம்) முடிந்தபின் முக மண்டல தரிசனம் மட்டுமே கிட்டும். பத்ரிநாதரின் யோக கோலத்தைக் கண்ட அந்த இனிய அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வாருங்கள் அன்பர்களே.

ஓம் நமசிவாய 

அதிகாலையே எழுந்து திருக்கோவிலுக்கு சென்றோம். சபா மண்டபம் முழுவதும் அனுமதி சீட்டு வாங்கிய பக்தர்களால் நிறைந்திருந்தது ஆனால் துவாரத்திற்கு வெளியே அந்நேரத்தில் கூட்டம் இல்லை. அருமையாக நின்று திருமஞ்சனத்தை சேவித்தோம். முதலில் அலங்காரத்தை களைந்து முதல் நாள் சாத்திய சந்தனத்துடன் சேவிக்கின்றோம். தலைமை பூசாரி ராவல் அவர்கள் வரும் வரை மற்ற பூசாரிகள் எல்லா ஏற்பாடுகளையும் கவனித்துக்கொள்கின்றர். பெருமாளுக்கு சுடு நீரால்தான் திருமஞ்சனம் நடைபெறுகின்றது அதில் பச்சைக்கற்பூரம் மற்றும் குங்குமப்பூ சேர்க்கப்படுகின்றது. . தனக்கே உரிய கருப்பு கம்பளி ஆடையில் தொப்பியுடன் ராவல் அவர்கள் சகல மரியாதையுடன் வந்து சேர்ந்தவுடன் திருமஞ்சனம் துவங்குகின்றது. முதலில் அவர் சந்தனத்தில் மேல் உள்ள சல்லாத் துணியை எடுத்து விட்டு சந்தனத்தை களைகின்றார். அந்த சந்தனம் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்படுகின்றது. பின்னர் பெருமாளுக்கு எண்ணெய்க்காப்பு. சாளக்கிராம மேனியராக விளங்கும் பெருமாளின் பத்மாசன கோலத்தையும் சதுர் புஜங்களையும் திவ்யமாக சேவிக்கின்றோம். பின்னர் பாலாபிஷேகம், கங்கை நீரால் அபிஷேகம் மற்றும் பல்வேறு  திரவியங்களினால் முதலில் பத்ரிநாதருக்கும் பின்னர் மற்ற மூர்த்திகளுக்கும் திருமஞ்சனம் நடைபெறுகின்றது. பார்த்து பார்த்து யசோதை கண்ணனுக்கு திருமஞ்சனமாட்டியது போல இங்கே பெருமாளுக்கு திருமஞ்சனம் நடக்கின்றது.

கன்றுகளோடச்செவியில் கட்டெறும்புபிடித்திட்டால்
தென்றிக்கெடுமாகில் வெண்ணெய்திரட்டிவிழுங்குமாகாண்பன்
நின்றமராமரம்சாய்த்தாய்! நீபிறந்ததிருவோணம்
இன்று, நீநீராடவேண்டும் எம்பிரான்! ஓடாதேவாராய்.

என்ற பெரியாழ்வார் பாசுரம்தான் நினைவிற்கு வந்தது. திருவோண நாளில் பெருமாளின் திருமஞ்சனம் சேவிக்கும் பாக்கியமும் கிட்டியதுநதியாய்ப் பாயும் திரவியங்கள் மற்றும் மந்திரத்தால் உருவேற்றப்பட்ட ஏழு வெள்ளி கலச புண்ணிய தீர்த்தத்தால் திருமஞ்சனம் முடிந்தபின் சிருங்காரம் துவங்குகின்றது. முதலில் பெருமாளுக்கு அத்தர் சார்த்தப்படுகின்றது. பின்னர் திருமேனி முழுவதும் சந்தனம் சார்த்தப்படுகின்றது. அதன் மேலே மெல்லிய வெள்ளைத்துணி சுற்றி பின்னர் பட்டுப்பீதாம்பரங்கள் சார்த்தப்படுகின்றது. அதன் மேலே வெள்ளிக்கவசம். பின்னர் மற்ற முர்த்திகளுக்கு சிருங்காரம். குபேரனுக்கு மகுடம் மற்றும் மலர் மாலைகள், வெள்ளி நின்ற கோல கருடனுக்கு பட்டு சார்த்தி, மலர்  மாலைகளால் அலங்காரம், அடுத்து நாரதருக்கு மகுடம், பட்டு மலர் மாலை அலங்காரம், பின்னர் உத்தவருக்கு கவசம் மலர் மாலை, பின்னர் நரநாராயணர்களுக்கு பட்டாடைகள், மலர் மாலைகள் என்று அலங்காரம் செய்தபின், பெருமாளுக்கு வைரம் பதித்த தங்க மகுடம் சூட்டி இரு பக்கமும் மயிற்பீலீ சார்த்தி, பெரிய மலர்மாலையால் அலங்காரம் செய்கின்றார் ராவல் அவர்கள். பின்னர் பெருமாளின் திருமுகமண்டலத்தில் சந்தனம் சார்த்தி வைர திருமண் சார்த்தினார். பின்னர் மேலும் மலர்மாலைகளால் மேலும் அலங்காரம்  செய்தபின் சிருங்கார தரிசனம் தொடங்கியது. அலங்காரம் செய்யும் போது இவர்கள் திரையிடுவதில்லை. முதலில் வேத பாராயணம், பின்னர் பாகவத பாராயணம். உள்ளே சென்று பெருமாளை திவ்யமாக சேவித்துவிட்டு மிகவும் மனசாந்தியுடன் வெளியே வந்தோம்.   

நீலகண்ட சிகரம் 

வெளியே வந்தவுடன் ஒர் ஆச்சரியம், அதி காலை சூரிய ஒளியால் அருண நிறத்தில்  அற்புதமாக ஒளிந்து கொண்டிருந்தது நீலகண்ட சிகரம்அந்த சிவப்பு வர்ணம் மாறி தூய வெள்ளை நிறத்தில் ஐயன் மின்னும் அழகையும் கண்டு ஆனந்தம் அடைந்தோம். வானத்தில் மேகமே இல்லை, வானம் நிர்மலமாக இருந்தது. சென்ற வருடம் வந்தபோதும், நேற்றைய தினம் முழுவதும், மஞ்சு மறைத்த எம்பெருமானை இன்று முழுவதுமாக தரிசனம் செய்தோம். முன்னரே கூறியது போல நீலகண்ட சிகரம், தேவாரப் பாடல் பெற்ற தலம் ஆகும். பாலறவாயர் இத்தலத்தை இந்திரநீலபர்ப்பதம் என்று பாடியுள்ளார். வெள்ளியை வார்த்து ஊற்றியது போல மிளிரும் அந்த அழகு மிகவும் இரம்மியமாக இருந்தது.   மனதார சிவபெருமானையும் , உமையம்பிகையும் வணங்கி விட்டு மிக்க மன நிறைவுடன் மடத்திற்கு வந்தோம். அற்புதமான தரிசனத்திற்கு பிறகு ஹரித்வாரத்திற்கு புறப்பட்டோம்.  பத்ரிநாத்தை விட்டு கிளம்பி வரும் வழியில் லம்பா பகட் என்ற கிராமத்தில்  எப்போதும் நிலச்சரிவு ஏற்படும் இடம் என்று முட்கல் அடையாளம் காட்டினார். பின்னர் Jaypee குழுமத்தினரின் சிறு புனல் மின்  நிலயத்தை கண்ணுற்றோம். இவ்வாறு எங்கள் பயணம் தொடர்ந்த்து. முதலில் ருத்ரப்ரயாகையை வண்டியை நிறுத்தி தரிசனம் செய்தோம். பின்னர்  மதிய உணவை ஸ்ரீநகரில் முடித்துக்கொண்டு தேவப்பிரயாகைக்குச் சென்று கொண்டிருந்த போது திரு.முட்கல் அவர்கள் ஒரு அருமையான கதை ஒன்றைக் கூறினார், இது வரை நாங்கள் அறியாத கதையாக இருந்தது. என்ன உங்களுக்கும் அந்த கதையை கேட்க ஆசையாக உள்ளதா? இதோ சொல்கிறேன் கேளுங்கள்.

நாம் எல்லோரும் கடோத்கஜனைப் பற்றி அறிவோம் அல்லவா? ஏனென்றால் மாயா பஜார் படத்தில் கல்யாண சமையல் சாதம் என்ற பாட்டை நாம் எல்லோரும் அறிவோமே.  அந்த கடோத்கஜனின் மகன் பார்பரிக்கை பற்றிய கதைதான் இது. பீமனுக்கும் ஹிடும்பிக்கும் பிறந்தவன் தான் கடோத்கஜன். அரக்கு மாளிகையிலிருந்து உயிர் தப்பிய பஞ்ச பாண்டவர்கள், தாய் குந்தியுடன் ஹிடும்பிவனம் என்ற காட்டிற்கு வந்தார்கள். அந்த வனத்தை ஆண்டு வந்த ஹிடும்பன், பஞ்ச பாண்டவர்களைக் கொன்று வருமாறு, தன் தங்கை ஹிடும்பியை அனுப்பினான்.ஹிடும்பி, அரக்கி உருவத்தை, அழகான இளம்பெண் உருவமாக மாற்றிக் கொண்டு சென்றாள். பாண்டவர்களுக்காக, நீர் கொண்டு வருவதற்காகக் கிளம்பிய பீமனை ஹிடும்பி பார்த்தாள். பீமன் மீது காதல் கொண்டு அவனை மணக்க விரும்பினாள். ஹிடும்பியைத் தொடர்ந்து, ஹிடும்பன் வந்தான். பாண்டவர்களுடன் யுத்தம் செய்தான், உயிரிழந்தான். ஹிடும்பி, பீமனை மணம் புரிந்து கொண்டாள். அவர்களுக்குப் பிறந்த பிள்ளை கடோத்கஜன்.


கட்டு ஷ்யாம் 

அர்ஜுனன்  கர்ணனால்  கொல்லப்படாமல் காத்தவன் கடோத்கஜன் . வீரமும் தீரமும்  கீர்த்தியும் நிறைந்தவன். பாண்டவர்களின் அன்புக்கும் அபிமானத்திற்கும் உரியவன் . அரக்கர் குலத்திலே தோன்றினாலும் பீமனின் மகனானதால் உத்தமமான பண்புகள் நிறைந்தவனாகத் திகழ்ந்து தியாகம் புரிந்தவன். பாண்டவர் பரம்பரையில்      முதலில் பிறந்தவன் கடோத்கஜன்.  ஆனால் எந்தவிதமான உரிமையையோ பதவியையோ அவன் எதிர்பார்க்கவில்லை. அதேசமயம், கடோத்கஜன் உயிர்த் தியாகம் செய்யவில்லை என்றால், பாண்டவர்கள் வெற்றி பெற்றிருக்கவே முடியாது. அர்ஜுனன் வாழ்வும் முடிந்திருக்கும்.அப்படி   நடக்காமல், தன் வாழ்வையே முடித்துக் கொண்ட, மிகவும் உயர்ந்ததான ஒரு புண்ணிய ஆத்மாதான் கடோத்கஜன்.

கிருஷ்ணபரமாத்மாவின் ஆலோசனைப்படி கடோத்கஜன் மணிப்பூரின் அரசன் முரண் என்பவனின் மகள் கரகண்கடியை வென்று வந்து அவளை திருமணம் செய்து கொண்டான். அரசளங்குமரி மிகவும் புத்திக் கூர்மை மிக்கவள். ஆகவே அவள் தன்னை யார் வெல்கிறார்களோ அவரைத்தான் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்திருந்தாள். பலர் முயன்று அவளிடம் தோற்று அவளுக்கு அடிமையாயினர். கிருஷ்ணரின் ஆசியுடன்  கடோத்கஜன் அவளுடன் போட்டியிட வந்தான்யார் முதலில் பதில் உடனே பதில் சொல்ல தயங்குகிறார்களோ அவர்கள் தோற்றவர்கள் என்பது போட்டிகளின் விதி. அரச குமாரி கேட்ட கேள்விகளுக்கெல்லாம் கடோத்கஜன் டாண் டாண் என்று பதில் சொல்லி விட்டான். பின் அவன் அரசகுமாரியிடம் ஒரு கதை சொன்னான்மனைவி ஒருவர் இல்லாத ஒருவர் தனது பெண் குழந்தையை தனது நண்பனின் குழந்தையை தனது நண்பனின் குழந்தை என்று  தானே வளர்த்து வந்தார்.   அந்த குழந்தையும் வளர்ந்து பெரியவளானாள். அவரே அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார் அவர்களுக்கும் ஒரு பெண் பிறந்தாள்.

அந்த பெண்ணுக்கு அவர் என்ன உறவு? என்று கடோத்கஜன் கேட்டார்.  நாங்கள் எல்லாரும் இளவரசி என்ன பதில் சொன்னாள் என்று அவரிடம் கேட்டோம். அவர் முதலில் நீங்கள் சொல்லுங்கள் என்றார். நாங்கள் குழம்பி ஙே!” என்று முழிக்க. அவரும் குறும்பாக அந்த இளவரசியும் இது போலத்தான் முழித்தாள் என்று கூறினார். இதனால் அந்த அரசகுமாரி தோல்வியடைய அவளை  கிருஷ்ண பரமாத்மா கூறியபடி இந்திரபிரஸ்தம் அழைத்துவந்து திருமணம் செய்து கொண்டான். இவர்களின் குழந்தைதான் பார்பரிக். இவன் பிறந்தவுடன் இவன் தலை முடி சிம்மத்தின் பிடரி மயிர் போல இருந்ததால் வலிமை மிக்கவன் என்ற பொருளில் இவனுக்கு இந்தப் பெயர் வைத்தனர்.


இவன் கிருஷ்ணபரமாத்மாவின் ஆலோசனைப்படி துர்கா தேவியை உபாசித்து யாராலும் வெல்ல முடியாத வரம் பெற்றான். மேலும்  மிகவும் விசேஷமான மூன்று அம்புகளைப் பெற்றான். முதல் அம்பு இவனது எதிரிகளின் மேல்  அடையாளமிடும். இரண்டாவது அம்பு இவனது நண்பர்களை அடையாளமிடும். மூன்றாவது அம்பு அடையாளம் இட்ட பகைவர்கள் அனைவரையும் அழித்து விடும். இதனால் இவன். மூன்று அம்புக்காரன் என்றும் அழைக்கப்பட்டான். அக்னி பகவான் இவனுக்கு இந்த அம்புகளை எய்ய வல்ல ஒரு திவ்ய அம்பை அளித்தார்.

மஹாபாரதப்போர் முடிவான போது பார்பரிக் அந்த யுத்தத்தில் கலந்து கொள்ள விரும்பினான் அவன் தன் தாயிடம் அதற்காக அனுமதி கேட்ட போது அவள் யார் நலிவுற்றிருக்கிறார்களோ அவர்கள் பக்கம் நீ சேர்ந்து போரிடு என்று ஆசி அளித்தாள். தன் தாய்க்கு அது போலவே செய்வதாக வாக்களித்துவிட்டு, வீரதீர, பார்பரிக் தனது நீலக்குதிரையில் ஏறி குருஷேத்திரத்தை நோக்கி பாய்ந்து வந்து கொண்டிருந்தான்அவன் வருவதை தனது ஞான திருஷ்டியால் அறிந்துகொண்ட கண்ணபிரான் அவனை சோதிக்க வந்தார். கிருஷ்ணர் பிராமண வேடத்தில் அவன் காற்றென பாய்ந்து வரும் பாதையில் ஒரு ஆலமரத்தடியில் அமர்ந்து கொண்டார். ஒரு பிராமணரை ஆலமரத்தடியில் கண்ட பார்பரிக், குதிரையை விட்டு இறங்கி அவருக்கு நமஸ்காரம் செய்தான்பிராமணராக கள்ள வேடம் பூண்ட பகவான் ஏதும் அறியாதது போல, இளைஞனே! இவ்வளவு வேகமாக எங்கு செல்கின்றாய்? என்று வினவினார். அதற்கு பார்பரிக் மஹாபாரதப் போரில் கலந்து கொள்ள செல்கின்றேன் என்று பதிலிறுத்தான்அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டே கண்ணன், மூன்று அம்புகளை மட்டும் வைத்துக்கொண்டு நீ என்ன செய்து விட முடியும் என்று கேட்டார். அதற்கு அவன் என் ஒரு அம்பு போதும் இப்போரில் ஈடுபடும் அத்தனை வீர்ர்களையும் கொல்ல, என்னுடைய மூன்று அம்புகளை நான் பயன்படுத்தினால் மூன்று உலகங்களிலும் பிரளயமே ஏற்பட்டு விடும் என்று பெருமையாக கூறினான். வீணாக மார் தட்ட வேண்டும், முடிந்தால் இந்த ஆலமரத்தின் அத்தனை இலைகலையும் உனது அம்பால் ஒன்றாகக் கட்டு பார்க்கலாம் என்று கிருஷ்ணர் கூறினார். அதற்கு பார்பரிக் இது வெறும் தற்பெருமை அல்ல எனது கடுமையான தவத்தின் பலன் மற்றும் அம்பாளின் அருள், இப்போதே நான் அதை செய்து காட்டுகின்றேன் என்று கண்ணை மூடி அம்பாளை தியானித்து அம்பை எய்தான். அதற்குள் கிருஷ்ணர் அந்த ஆலமரத்தின் ஒரு இலையை பறித்து தனது வலது கால் கட்டை விரலின் கீழே மறைத்து வைத்துக்கொண்டார். பார்பரிக் எய்த முதல் அம்பு ஆலமரத்தின் அனைத்து இலைகளையும் கட்டி விட்டு  பிராமணனாக வந்த மாய கண்ணனின் கட்டை விரலை சுற்றி வட்டமிட்டது. அம்பு ஏன் இன்னும் உனது அம்புறாதூணிக்கு வரவில்லை என்று பிராமணன் கேட்க, உங்களது பாதத்தின் அடியில் ஒரு இலை இருக்க வேண்டும்  ஆகவே தான் அம்பு தங்கள் பாத்ததை வட்டமிடுகின்றது என்றான். எனது கட்டை விரலை துளைத்து செல்ல்லாமே என்று பிராமணர் கேட்க, அந்த அம்பு இலைகளை மட்டுமே கட்டுவதற்காக எய்யப்பட்டது தங்கள் கட்டை விரலை துளைக்க அல்ல என்றான் பார்பரிக். எனவே கிருஷ்ணர் தந்து பாதத்தை உயர்த்த அந்த இலையையும் கோர்த்துக் கொண்டு அவனது அம்புறாத்தூணிக்கு  திரும்பியது. பார்பரிக்கின் அம்பின் திறத்தை அறிந்து கொண்டார் கிருஷ்ணர்.

மூன்று அம்புகள் 

பிறகு பிராமணர் பார்பரிக்கிடம் நீ எங்கு செல்கிறாய் என்று கேட்டார். பாரதப்போரில் கலந்து கொள்ள செல்கிறேன் என்றான். பிறகு கண்ணன், வீரனே !, நீ  யார் பக்கம் சேர்ந்து போரிடப்போகிறாய்என்று கேட்டார். அதற்கு அவன் நான் போரில் கலந்து கொள்ள செல்லவில்லைஆனால் யார் தோற்கும் நிலையில் இருக்கின்றார்களோ அவர்கள் பக்கம் சேர்ந்து கொள்வேன் என்று கூறினான். எப்படியும் கௌரவர்கள்தான் தோல்வியடையப் போகிறார்கள் என்பதை அறிந்த கண்ணபிரான் இந்த வீரன் கௌரவர்கள் பக்கம் சேர்ந்து போரிட்டால் பாண்டவர்கள் வெல்வது கடினம் என்பதை உணர்ந்து கள்ளத்தனமாக,   ஒரு சத்திரியன்  மிக சிறந்த வீரனாக இருந்தால் மட்டும் போதாது, சிறந்த தர்மவானாகவும் இருக்க வேண்டும் என்று கூறினான்அதற்கு பார்பரிக், பிராமணரே! தங்களுக்கு என்ன வேண்டுமோஅதைக் கேளுங்கள் நான் அதை தானமாகத் தருகிகின்றேன் என்று கூறினான். முதலில் நீ என்ன கேட்டாலும் தருவதாக சத்தியம் செய்து தருமாறு கேட்டார் கபட வேடதாரி கிருஷ்ணர். அவனும் என்ன கேட்டாலும் தருவதாக வாக்களித்தான்கண்ணன் நீ உனது தலையை தானமாக கொடு என்று கேட்க, பார்ப்பரிகிற்கு தூக்கிவாரி போட்டது. அவர் வெறும் பிராமணரில்லை என்பதை உணர்ந்து கொண்டு தாங்கள் யார்? எதற்காக எனது தலையை தானமாக கேட்கின்றீர்கள் என்று வினவினான். கிருஷ்ணரும் தந்து திவ்ய மங்கள சொரூபத்தை பார்பரிக்கிற்கு காட்டி அருளினார். போர் துவங்குவதற்கு முன் ஒரு மிகச் சிறந்த வீரனை பலியிடுவது வழக்கம் உன்னை விட சிறந்த வீரன் யார் உள்ளார் எனவேதான் உனது தலையை தானமாகக் கேட்டேன் என்றான் கிருஷ்ணபரமாதமா. அதற்கு பார்பரிக் கிருஷ்ணா, மஹாபாரதப் போரை பார்க்க வேண்டும் என்ற என்னுடைய ஆசையை மட்டும் நிறைவேற்றித் தரவேண்டும் என்று கோரினான். கிருஷ்ணரும் அவ்விதமே வரம் தந்தார்.

ருத்ர ப்ரயாகை 

( அலக்நந்தா + மந்தாங்கினி சங்கமம்)

அதற்கு பிறகு பந்குனி மாதம் சுக்லபக்ஷ ஏகாதசியன்று விரதம் இருந்து துவாதசியன்று  தான் வாக்களித்தபடி தனது அரிந்து கண்ணனுக்கு தானமாக அளித்தான். அதனால் அவர் தலை அளித்த வீரன் என்றும் போற்றப்படுகிறார். கிருஷ்ணா ஏன் இவ்வாறு ஒரு அருமையான வீரனின் தலையை நீ தானமாகப் பெற்றாய் என்று பாண்டவர்கள் கேட்க, கண்ணபிரான் கூறினார். சென்ற பிறவியில் இவன் சூரியவசன் என்ற கந்தர்வன். ஒரு சமயம் அனைத்து தேவர்களும் மஹாவிஷ்ணுவிடம் சென்று பூலோகத்தில் பாவம் பெருகிவிட்டது. துஷ்டர்கள் அதிகமாகி விட்டனர் தாங்கள் தான் இரட்சித்து அருள வேண்டும் என்று விண்ணப்பம்ச் செய்தனர். மஹா விஷ்ணுவும் தானே அவதாரம் செய்து  துஷ்டர்களை அழித்து பூபாரம் குறைப்பதாக அருளினார். அப்போது இந்த கந்தர்வன் மஹா விஷ்ணு எதற்காக அவதாரம் எடுக்க வேண்டும் தான் மட்த்உம் போதுமே அந்தக் காரியத்தை முடிக்க என்று அகங்காரமாக பேசினான். இதனால் கோபம் கொண்ட பிரம்மதேவன்பெருமாள் அவதாரம் செய்யும்   போது உன் தலை  அவரால் கொய்யப்படும் என்று. சாபம் கொடுத்தார். ஆகவே தான் இவ்வாறு நடந்த்து என்று விளக்கமளித்தார்பார்ப்பரிக்குக்கு வரம் தந்தபடி அவனது தலையை ஒரு மலை உச்சியில் வைத்து மஹா பாரதப்போரை அவன் பார்க்குமாறு அருளினார் கிருஷ்ணர்.  

பாரதப்போர் முடிந்த பிறகு பாண்டவர்கள் தங்களுள் யார் மிகவும் வீரமாக போரிட்டனர் என்று கேட்டனர். அதற்கு கிருஷ்ணரும் பார்பரிக்கிடம் கேட்கலாம் என்று அழைத்து சென்றார்.   பார்பரிக் பாரதப் போர் முழுவதும் நான் சுதர்சன  சக்கரத்தையும் துர்க்கையின்   கப்பரையையும்தான் கண்டேன் என்று பதில் கூறினான். அனைத்தையும் ஆட்டுவிப்பவன் அவனே மற்றவர்கள் எல்லாம் ஆட்டுவிப்பவர்களே என்பதை உணர்த்தினான். (இங்கு துர்க்கை எனக்குறிப்பிடப்பட்டது திரௌபதி). இதற்குபிறகு   கண்ணபிரான்  கொடுத்த வரத்தின்படி கலியுகத்தில்  கட்டு என்னும் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டு கண்ணனின் பெயரான ஷ்யாம் என்ற பெயரிலேயே வணங்கப்படுகின்றார். இராஜஸ்தான் மாநிலத்தில் சிகார் மாவட்டத்தில் இந்தக்கோவில் அமைந்துள்ளது. இவர் கட்டு ஷ்யாம் என்று வணங்கப்படுகன்றார். ஹோலியை ஓட்டி மிகப்பெரிய விழா இங்கு  நடைபெறுகின்றது. இவ்வாறு பார்பரிக்கின் கதையைக் கேட்டுக்கொண்டே தேவப்ரயாகையை வந்தடைந்தோம். இனி வரும் பதிவில் தேவப்ரயாகையின் பெருமைகளைக் காணலாம் அன்பர்களே.   


ருத்ரப்ரயாகையில் குழுவினர்