Friday, March 21, 2008

காஞ்சியில் மணக்கோலம்கம்பாநதி காட்சி
காமாக்ஷி அம்மை சிவ பூஜை செய்யும் கோலம்


என்சிறு வயதில் எனக்கும் என் தம்பிக்கும் உணவு ஊட்டும் போது பல முறை கம்பா நதிக்கரையில் எம் அம்மை செய்த இந்த திருவிலையாடலைக் கதையாகக் கூறி உணவுடன் ஆன்மிக உணைவையும் ஊட்டிய என் அன்னைக்கு இந்த பதிவை சமர்ப்பணம் செய்கிறேன்.


மணம் கூட்டும் மாவடி ஸேவை
நம்மை உய்விக்க எம் அம்மையும் அப்பனும் நடத்தும் திருவிளையாடல்தான் எத்தனை எத்தனை? பூமியாகிய விராட புருஷனின் இடுப்பு ஒட்டியாணமாக (காஞ்சி) திகழ்கின்ற நகரேக்ஷு காஞ்சி என்று அழைக்கப்படும், சக்தி பீடமான கச்சியம்பதியிலே தண் துளப மாலையணி அத்தி வரதன் தங்கையாகிய நம் அம்மை காமாக்ஷி, ஐயன் தந்த இரு நாழி நெல்லைக் கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் நடத்திக் காட்டியும், கம்பா நதிக் கரையில் சிவபூஜை செய்தும் நாம் அனைவரும் உய்ய நம் அனைவருக்கும் மணக்கோலம் காட்டி அருளிய திருவிளையாடல் அவைகளில் ஒன்று ஆகும். இத்திருவிளையாடலைப் பற்றி அறிந்து கொள்வோமா?

முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளாகவும், பின்னைப் புதுமைக்கும் போற்றும் அப்பெற்றியனான எம் ஐயம் சிவபெருமான், ஒரு நாள் தன் நாயகியாம் உமையம்மையுடன் திருக்கைலாய மலையிலே அமர்ந்திருக்கும் போது உமையம்மை, சூரிய சந்திரர்களான ஐயனின் கண்களை விளயாட்டாக பொத்தினாள். உடனே அண்ட சராசரங்களும் இருளில் மூழ்கி திண்டாடியது. மக்களும் தேவர்களும், கடவுட் பூஜையிலிருந்து வழுவினர். இப்பாவம் அம்மையை சாராது என்றாலும், உலகத்தோர் உய்யும் பொருட்டும் அவர்கள் 32 அறங்களையும் சரியான முறையில் அறிந்து கொள்ளும் பொருட்டும் அம்மையே உலகமக்கட்க்கு அவற்றை நடத்தி காட்ட வேண்டி பூலோகத்திற்கு சென்று காஞ்சியில் முப்பத்திரண்டு அறங்களையும் புரிந்து சிவ பூஜை செய்யுமாறும், பின் தாமே வந்து மணம் செய்தருளுவதாகவும் அருளினார் சிவபெருமான்.

பின் அம்மை மாங்காட்டுப் பதியிலே வந்து ஐந்து குண்டங்களிலே அக்னி வளர்த்து நடுக்குண்டத்தில் ஒற்றைக்காலில் சிவ பெருமானைக் குறித்து கடுந்தவம் புரியலுற்றாள் அம்மை காமாக்ஷி. அம்மையின் தவத்தில் அகம் மகிழ்ந்த ஐயன் அசரீரியாக காஞ்சி நகருக்கு வருமாறு பணிக்கிறார். அம்மையும் காஞ்சிக்கு வந்து கம்பாநதிக்கரையில் , நான்கு வேதங்களுமே நான்கு கிளைகளாக அமையப் பெற்ற அற்புத மாமரத்தின் அடியிலே, மணலாலேயே சிவலிங்கம் அமைத்து, ஐயன் அழித்த இருநாழி நெல்லைக் கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் முறையாக செய்து சிவபூஜை செய்து வரலானாள். இதையே

ஐயன் அளந்தபடி இரு நாழி-காண்டு அண்டமெல்லாம்
உய்ய அறஞ்செய்யும் உன்னையும் போற்றி
.......

என்று அபிராமி அந்தாதியில் அபிராமி பட்டர் பாடுகின்றார்.

( காமாக்ஷி அம்மை சிவ பூஜை காட்சியை, நவராத்திரி நன்னாளில் ஒரு நாள் அலங்காரமாக நாம் எல்லா கோவில்களிலும் பார்க்கின்றோமல்லவா? அந்த அலங்காரம் இந்த திருவிளையாடலிலிருந்து வந்ததுதான்). அம்மை மணலால் சிவலிங்கம் அமைத்ததால் இத்தலமும் பஞ்ச பூதத்தலங்களில் "பிருத்வித் தலமாக(பூமித் தலம்)" விளங்குகின்றது. இன்றும் ஏகாம்பரேஸ்வரருக்கு அபிஷேகம் கிடையாது புனுகு மட்டுமே பூசப்படுகின்றது.

கம்பாநதிக் காட்சிநான் அனைவரும் அறிந்து கொள்ள அம்மை செய்த முப்பத்திரண்டு அறங்களாவன 1.தேவ யாகம், 2. பிதிர் யாகம், 3.பூத யாகம், 4.மானிட யாகம், 5. பிரம யாகம், 6. வறியவருக்கு ஈகை, 7. துறவியருக்கு மடம், 8. இல்வாழ்வாருக்கு வீடு, 9. இல்வாழ்க்கைக்குரிய பொருட்கள், 10.தண்­ணிர்ப் பந்தல், 11. பூஞ்சோலை, 12. அங்கஹ“ணர்களை ஆதரித்தல், 13.நோய்க்கு மருந்து கொடுத்தல், 14.குழந்தை வளர்ப்பு, 15. சுண்ணம் கொடுத்தல், 16. தாம்பூலம் கொடுத்தல், 17.தலைக்கு எண்ணெய் கொடுத்தல், 18. அரப்புப் பொடிகள் கொடுத்தல், 19.படுக்கை அளித்தல், 20. பூ தானம், 21. கோ தானம், 22.கன்னிகா தானம், 23. மணம் செய்வித்தல், 24. விளக்கு கொடுத்தல், 25. தீராக் கடன் தீர்த்தல், 26. சிவனடியாருக்கு வேண்டுவன அளித்தல், 27.திரு வெண்­ணிறு அளித்தல், 28. பூசை பொருட்கள் கொடுத்தல், 29. சமய நூல்கள் அளித்தல், 31. சிவ பக்தியை உண்டாக்குதல், 32. அபயமளித்தல், ஆகியவை ஆகும்.

இவ்வாறு அம்மை சிவபூஜை மாவடியிலே செய்து வரும் போது சிவன் உமையை தவத்திலிருந்து எழுப்ப கொட்டிசேதம் என்னும் ஆட்டத்தை ஆடினார். அதனால் எல்லாம் கவனம் திரும்பாது தவத்திலிருந்த பார்வதியே அஞ்சுமாறு கங்கையை அந்த கம்பாநதியிலே அந்தர் வாகினியாக பெருக்கெடுத்கோடி வரச் செய்தார் எம்பெருமான். அடித்து புரண்டு ஓடி வருகின்ற அலை வெள்ளத்தினால் எங்கே ஐயனுக்கு ஊறு விளைந்து விடுமோ, என்று அஞ்சிய அந்த அலையாழி அரிதுயிலும் மாயனது தங்கையாம் உமையம்மை மானிட இயல்பால் அந்த லிங்கத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு காப்பாற்றினாள். அப்போது ஐயன் தன்னை கட்டிக் கொண்டிருக்கும் அம்மைக்காக அங்கங் குழைந்து, தன் திருமேனியிலே வளைச் சுவடும், முலைச் சுவடும் பெற்று அம்மைக்கு அருள் பாலித்தார். அம்மையும் தவம் கலைந்து உண்மை உணர்ந்தாள். எனவே அம்மை "குழையத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கை வல்லி" என்றும், ஐயன் "தழுவக் குழைந்த நாதர்" என்ற திருநாமமும் பெற்றனர். பின் பங்குனி உத்திர நன்னாளில் ஏழவார் குழலி அம்மையை எம் ஐயனாம் ஏகம்பன் நாம் அனைவரும் உய்ய மணம் செய்தருளினார்.

ஏழவார் குழலி அம்மை ஏகாம்பரநாதர் திருக்கல்யாணம்
தேவார பாடிய மூவர்களும் இறைவனையும் இறைவியையும் எப்படி பாடினர் என்று பார்த்தால் ஒரு உண்மை விளங்கும். திருநாவுக்கரசர் தமது கடமையை மறந்து சமண வழியில் சென்று நிலை தடுமாறிய போது கருணைக் கடலாம் என் ஐயன் அவரை நல்வழிப்படுத்த அவருக்கு சூலை நோயை கொடுத்து தம் வழி வரப்படுத்தியதால் அவர் பாடிய பதிகங்கள் அனைத்தும் அவர் இறைவனை கெஞ்சும் வண்ணமாக கெஞ்சு தமிழால் அமைந்தன.

இரண்டாமவரான ஆளுடையப் பிள்ளையாம் திருஞான சம்பந்தரோ எம் அம்மையின் அருளுக்கு பாத்திரராகி அவளுடைய ஞானப்பால் உண்டு சிறு வயதிலேயே பாடத் தொடங்கியதால் அவரது பாடல்கள் அனைத்தும் கொஞ்சு தமிழால் அமைந்தன. எம்பிரான் தோழர் அல்லவா சுந்தர மூர்த்தி நாயனார் அவரது பாடல்கள் எல்லாம் நட்பு முறையிலேயே வன்தொண்டர் என்ற முறையில் மிஞ்சு தமிழிலில் அமைந்தன. இந்த இனிய திருவிலையாடலை எம்பிரான் தோழன் என்று போற்றப்படும் சுந்தரர் எவ்வாறு பாடுகின்றார் என்று பார்ப்போமா? திருவொற்றியூரிலே சத்தியத்தை மீறி சங்கிலியாரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டதால் கண்களை இழந்த சுந்தரர், காஞ்சித் தலம் அடைந்து கச்சி ஏகம்பன் மேல் பதிகம் பாடி இடக்கண் பார்வை திரும்பப் பெற்ற போது பாடிய இந்த ப்பதிகத்தில் சுந்தரர் தமது மிஞ்சு தமிழில் இவ்வாறு பாடுகின்றார்

எள்கலின்றி யிமைவர் கோனை ஈசனை வழிபாடு செய்வாள் போல்
உள்ளத் துள்கி உகந்துமை நங்கை வழிபடுச் சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட வஞ்சி வெருவியோடித் தழுவ வெளிப்பட்ட
கள்ள கம்பனை யெங்கள் பிரானைக் காணக் கண்ணடியேன் பெற்றவாறே.

நாம் அனைவரும் உய்ய நமக்காக அம்மை 32 அறங்களையும் சிறப்பாக செய்து சிவ பூஜை செய்ததை விளக்கவே சுந்தரரும் வழிபாடு செய்வாள் போல என்று பாடுகின்றார். இறைவனும் இறைவியும் நடத்தும் திருவிளையாடல் என்பதை விளக்க இறைவனை கள்ளக் கம்பனை என்று பாடுகின்றார்.

காஞ்சியில் ஆண்டு தோறும் இந்த கல்யாணத்திருக்கோல வைபவம் பத்து நாடகள் பிரம்மோற்சவமாக ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலில் இன்றும் நடைபெறுகின்றது. கல்யாணத் திருகோலத்தில் ஏகம்பரும் ஏழவார் குழலி அம்மையும் தரும் அருட்காட்சியைத்தான் கண்டுகளியுங்களேன்.
ஏகாம்பரேஸ்வரர் இராஜ கோபுரம்ஸகல அகிலாண்ட பிரபஞ்சமும் அழிவுபடும் பிரளயத்தில் கூட அழியாமல் நிற்கும் பிரளயஜித் என்னும் உத்தமோத்தம தலமாம் காஞ்சியில், ஊழி வெள்ளத்திலும் தலை ஓங்கி நிற்கும் மாமரத்தின் அடியிலே தோன்றி உமையம்மையை மணந்த, கம்பா நதிக்கரையில் உள்ள மாமரம் மாவடி எனப் பெயர் பெற்றது. "மா" மரம் தான் அது - மஹா பெருமை பொருந்தியது. நான்கு வேதங்களுமே நான்கு கிளைகளாக கொண்ட ஆம்ர விருக்ஷம் அது. நான்கு வேதங்களின் எண்ணிலடங்கா சாகைகளுக்கும் பலம் (பயன்) ஒன்றேயான பரம்பொருள் என்று உணர்த்த ஒரே ஒரு பலம்(பழம்) பழுக்கும் மரம் அது. அதானாலேயே இத்தலம் எகாமரம் (ஏகாம்பரம்) என்று பேர் பெறுகின்றது. ஊழிக் காலத்தும் தான் ஒன்றே ஒன்று மட்டும் உயர்ந்து நிற்பதாலும் இது ஏகாம்பரமாகிறது. அத்தகைய அற்புத மாவடியின் மூலமாகிய அடியில் இருந்து சிவபெருமான் தோன்றியதால் அவரும் மாமூலன் எனப்பட்டார். இன்றும் இறைவனின் திருக்கல்யாண தினமான பங்குனி உத்திரத்தன்று இத்திருக்கோவிலில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வதும், இறைவனின் திருக்கல்யாணத்தை தரிசிப்பதும் தேவாரக் காலம் முதல் இருந்து வரும் வழக்கம். என்ன நீங்களும் கிளம்பிவிட்டீர்களா? காஞ்சிபுரத்தில் அம்மையப்பரின் திருக்கல்யாணத்தை காண. சென்று வந்து அருள் பெறுங்கள்.
* * * * * * *
மேலும் அம்மையப்பரின் கல்யாணக் கோலங்களை தரிசிக்க சொடுக்கவும்

http://thirumylai.blogspot.com/2008/03/blog-post_5217.htmlTuesday, March 4, 2008

மஹா சிவராத்திரி 2 - மூங்கிலணை காமாக்ஷியம்மன்

மூங்கிலனை காமாக்ஷியம்மன் :

தற்போது தேவதானப்பட்டி என்று வழங்கப்படும் தலம் முற்காலத்தில் வங்கிசபுரியாக திகழ்ந்தது. அதை சூலபாணி என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு சிவனருளால் வச்சிர தந்தன் என்ற மகன் பிறந்தான். அவன் அரசனாக முடி சூட்டிக் கொண்டபின் மாங்குசானன் என்பவனை மந்திரியாகவும், துட்டபுத்தி என்பவனை தளபதியாகவும் கொண்டு, அவர்களின் துர்போதனையாலும் அரிய தவம் செய்து தான் பெற்ற வலிமையினாலும் தன் குடிகளை பெரும் துன்பத்திற்கு உள்ளாக்கினான். அவனது கொடுமை தாங்காமல் மக்கள் அனைவரும் பிரம்ம தேவனிடம் சென்று முறையிட அவரும் தேவேந்திரனை அனுப்பினார். தேவேந்திரனாலும் அசுரனை வெல்ல முடியவில்லை. எனவே மக்கள் எல்லாரும் காஞ்சி சென்று அம்மையிடம் முறையிட்டார்கள். துஷ்டர்களை அழித்து தன் பக்தர்களைக் காப்பாற்ற அந்த காஞ்சி காமாட்சியானவள் அந்த கொடுங்கோலனை அழிக்க துர்க்கையை அனுப்பினாள். அசுரனின் தலை கீழே விழுந்தவுடன் அதை காலால் மிதித்து அழிக்காவிட்டால் அவன் அழிய மாட்டான் என்ற வரம் பெற்றிருந்தான் வச்சிரதந்தன். துர்க்கையானவள் அவன் தலை போரில் -வட்டுப்பட்டு விழுந்தவுடன் தன் காலால் அதை மிதித்து அழிக்க அந்தத் தலையும் சுக்கு நு‘றாக வெடித்துச் சிதற அசுரனும் அழிந்தான்.அசுரனை வதம் செய்த பாவம் தீரவும், தனது ரௌத்ரம் தணியவும் எம் அம்மை இளம் பெண் வடி வெடுத்து தலையாற்றங்கரையில் மூங்கிற் புதரில் மோன தவமியற்றனாள். தவமிருந்த அன்னைக்கு தேவதானப்பட்டி ஜமீந்தாரின் பட்டியைச் சார்ந்த ஈனாத காராம் பசு ஒன்று தினமும் சென்று பால் வழங்கிக் கொண்டிருந்தது. ஒரு நாள் அந்த பசு மட்டும் தனியே செல்வதை கவனித்த ஒரு இடையன் அதன் பின்னே சென்ற போது மூங்கிற் புதரொன்றில் அழகே உருவான ஒரு இளம் மங்கை அப்பசுவினிடம் பால் அருந்துவதைக் கண்டாண். மணியே, மணியின் ஒளியே, ஓளிரும் மணி புணைந்த அணியே, அணியும் அணிக்கு அழகான அம்மையின் கோடி சூரிய பிரகாசத்தைப் பார்த்தவுடன் அந்த இடையனின் கண்கள் குருடாகி விட்டன.அன்றிரவு ஜமீந்தாரின் கனவில் தோன்றிய திரிபுர சுந்தரியாகிய எம் அம்மை இடையனின் செயலால் தனது தவம் கலைந்து விட்டது அவனும் தனது கண்களை இழந்தான். கவலைப்படவேண்டாம், அடுத்து வரும் பெரு வெள்ளத்தில் நானே ஒரு மூங்கில் பெட்டியில் வருவேன் என்னை எடுத்து இடையன் வணங்கினால் அவனுக்கு கண் பார்வை கிடைத்து விடும். என் மோன தவம் கலையாமல் எனக்கு கோவில் எழுப்பி வணங்கி வாருங்கள் உங்களுக்கு எல்லாவித நன்மைகளையும் நான் அருளுவேன் என்று கூறி மறைந்தாள் அன்னை. அடுத்து பெய்த பெருமழையில் மஞ்சளாற்றில் எம் அன்னையின் கருணையைப் போல வெள்ளம் பெருகி ஓடி வர, அம்மை ஒரு குழந்தை வடிவில் ஒரு மூங்கிற்ப் பெட்டியில் மிதந்து வந்தாள், ஒரு மூங்கிற் புதர் அணையிட்டு நிறுத்தியதால் அன்னை மூங்கிலணை காமாக்ஷ’யம்மன் என்ற திரு நாமம் பெற்றாள்.அம்மையை கண்டவுடன் கரையில் கூடியிருந்த ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் அன்பின் மிகுதியால் தங்களை எல்லாம் வாழ்விக்க தானே வந்த அம்மைக்கு அவசரத்தில் தேங்காயை உடைக்காமலும், வாழைப் பழத்தை உரிக்காமலும் அப்படியே பூஜை செய்தனர். அம்மை தம் பகதர்களிடம் வேண்டுவது வெறும் து‘ய பக்தியைத்தானே? அந்த லோக மாதா அவர்களின் பூஜையை எற்று இடையனின் கண் பார்வையை தந்தருளினாள். அன்னையின் ஆனைப்படி யாரும் தொந்தரவு தரா வண்ணம் ஒரு கோவில் எழுப்பி அதில் மூங்கில் கூடையுடன் அம்மையை உள்ளே வைத்து கதவை சாத்தி விட்டனர். இப்போதும் கருவறையில் உள்ள அம்மையை யாரும் பார்க்க முடியாது. சந்தனத்தாலும் ஐம் பொன்னாலும் ஆன கதவிற்கே (தேங்காய்கள் உடைக்காமலும் பழங்கள் உரிக்காமலும்) பூஜைகள் நடை பெறுகின்றது. கருவறையினுள் அம்மை இன்னும் தன் தவத்தை, யாருடைய இடையூறும் இல்லாமல் இன்றும் தொடர்வதாக ஐதீகம். ஆகவே கோவிலின் அருகிலே யாரும் குடியிருப்பதும் இல்லை. பத்து நாள் திருவிழாவான மஹா சிவராத்திரி உற்சவத்தின் போது கூரை வேய்பவர்கள் தங்கள் கண்ணையும் வாயையும் கட்டிக் கொண்டு ஒரு வேள்வியைப் போலவே இதை செய்து முடிக்கிறார்கள்.அன்னையின் சன்னதியில் மூன்று பிரம்மாண்டமான நெய் விளக்குகள் சுடர் விட்டு பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. . நாள் தோறும் சுமார் 20 லிட்டர் நெய் அதற்கு தேவைப்படுகின்றது. எனவே இங்கு வரும் பக்தர்கள் நெய்யைத்தான் காணிக்கையாகக்கொண்டு வருகின்றனர். இவ்வாறு காணிக்கையாக வந்த நெய் மிகப் பெரிய குடோன்களில் வைக்கப்பட்டுள்ளன. பல வருடங்கள் ஆகியும் அந்த — நய் அப்படியே சிறிதும் குணம் குன்றாமால் மணம் கெடாமல் இருக்கின்றது. இந்த நெய்யை ஈ எறும்பு நெருங்குவதில்லை இதுவே அம்மனின் மகிமைக்கு சான்று. இந்த மஹா சிவராத்திரி நன்னாளில் நாமும் ஓளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளான அந்த ஸ்ரீ சக்ர ரூபிணியான மூங்கிலணை காமாக்ஷி அம்மனை சிவராத்திரி நன்னாளில் வழிபட்டு நன்மையடைவோமாக.* * * * * * *

மஹா சிவராத்திரி - 1 அங்காளபரமேஸ்வரி


மஹா சிவராத்திரியன்று அம்மனின் திருவிழாக்கள்

நாட்டுக்கல் பாளையம் அங்காள பரமேஸ்வரி
மஹா சிவராத்திரி என்பது பிறையணி, படர்சடை முடியிடை புனலுடை, மணிமிடற்றனாம், ஆதியும் அந்தமும் இல்லா சிவ பெருமானுக்கு எவ்வளவு உகந்ததோ அவ்வளவு அவரின் பாதியான அம்மைக்கும் உகந்தது. குறிப்பாக அங்காள பரமேஸ்வரிக்கும், மூங்கிலனை காமாக்ஷ’யம்மனுக்கும் மஹா சிவராத்திரி மிகவும் உகந்த திருவிழாவாகும். அந்த ஆதி சக்தி, கருணைக் கடலான அம்மை நம் துயர் துடைக்க எவ்வாறு இரங்கி வந்து இப்பூவுலகில் இந்த வடிவங்களில் குடி கொண்டாள் என்பதை பார்ப்போமா?

சிவ சக்தி

அங்காள பரமேஸ்வரி
"உலக மாதவாய் ஏக நாயகியாய் உக்ர ரூபிணியாய் திருமேனி -காண்டு பக்தர்களுக்கு உண்டாகும் பலவித சங்கடங்களை போக்கவும் கோபத்தில் இட்ட பல சாபங்களை போக்கி வைப்பதின் பொருட்டும் சிவசக்தி தாண்டவமாயும், சூலம், கபாலம் பாசாங்குசம் கொண்டும் ருத்ர பூமியிலிருந்து ரௌத்ராம்சம் பெற்று எல்லா நலன்களையும் தருகின்ற அஷ்ட லக்ஷ்மியாயும் விளங்கும்" ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியின்" வரலாறு சிவபெருமான் செய்த எட்டு வீரச் செயல்களுள் ஒன்றான 'பிரமன் சிரம் கொய்த வீர செயலுடன் தொடர்புடையது சிவ பெருமானுக்கு ஐந் தொழில் புரிவதை ஒட்டி தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோஜாதம், ஈசானம் என்று ஐந்து முகங்கள் உள்ளன.


வள்ளி தேவ சேனா சமேத முருகர்

ஆதிகாலத்தில் படைக்கும் கடவுள் பிரம்ம தேவருக்கும் ஐந்து முகங்கள் இருந்தன ஒரு தடவை சிவ பெருமான் பிரம்ம லோகம் சென்ற போது பிரம்ம தேவர் அவரை எதிர் கொண்டு அழைத்தார்,அவரது நான்கு தலைகள் சிவனை பணிய ஐந்தாவது தலையோ நாம் படைக்கும் தொழிலை செய்கின்றோம் என்ற ஆணவத்தால் பணியாமல் இருந்தது. அதனால் கோபம் கொண்ட சிவ பிரான் ,பிரம்மாவின் அந்த ஒரு சிரத்தை கொய்து எடுக்க அந்த சிரம் பரமனுடைய கரத்திலேயே தங்கி விட்டது. (ஒரு சமயம் சிவ பெருமான் தேசாந்திரம் சென்றிருந்த போது பிரம்ம தேவர் அங்கு வர ஐந்து தலையைக் கண்ட அம்மை தவறாக தன் கணவர் என்று எண்ணி பாத பூஜை செய்ய அச்சமயம் அங்கு வந்த சிவ பெருமான் கோபம் கொண்டு பிரம்மனுடைய தலையை கொய்ததாகவும் கதை வழங்கப்படுகின்றது.) அதனால் ஏற்பட்ட பிரமஹத்தி தோஷத்தாலும். பிரமன் இட்ட சாபத்தாலும் அவர் அச்சிரத்துடன் கபாலியாக பித்து பிடித்து அலைந்தார். கபாலம் எப்போது நிறைகின்றதோ அப்போது தான் அந்த கபாலம் அவரது கையை விட்டு அகலும் என்பதால் பிக்ஷ‘டணராக பிச்சை எடுத்து அலைந்த கணவரின் துன்பத்தை சகிக்க முடியாத பார்வதிக்கும், பித்து பிடித்தது, அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லியான அம்மையின் உருவமும் கொடூரமாக மாறியது . அவ்வாறு அம்மை அலைந்த போது தாயின் துன்பத்தை துடைக்க சிவ பெருமான் வந்து அம்மையின் நிலையை மாற்ற நடக்க அம்மையும் பின் தொடருகின்றாள், மலையனு‘ர் ஏரியை சிவன் கடந்து விட மாதா நடுவிலேயே மயங்கி நிற்க, சிவபெருமானாகப்பட்டவர், "அங்கு ஆழம் பெண்ணே" என்று அழைக்க அதுவே பின்பு மறுவி "அங்காளம்மன்" ஆனது என்பர் பின்னர் ஒரு "மஹா சிவராத்திரி" நன்னாளில் ருத்ரனான சிவ பெருமானுடன் 12 ஊர் மயானமான மேல் மலையனு-ரில் அங்காள பரமேஸ்வரி அண்ணனாகிய திருமாலின் ஆலோசனைப்படி சோறு இறைக்க அதை சாப்பிட அந்த பிரம்ம கபாலம் இறங்க அம்மை அதை தன் காலில் அழுத்தி அங்கேயே கோவில் கொண்டு விட, பிரம்ம கபாலமும் நீங்கி சிவபெருமானின் சாபமும் தீர்ந்தது எனவே சிவ பெருமானிம் பிரம்ம ஹத்தி தோஷமும், பிக்ஷ‘டணராக பலி தேர்ந்து அலைந்ததும் நீங்கிய நாள் ஆகியதால் மஹா சிவராத்திரி என் தாய்க்கு மிகவும் உகந்த நாளாகும் அன்று எல்லா அங்காளம்மன் ஆலயங்களிலும் இந்நிகழ்ச்சி' மயான கொள்ளையாகவோ (மயான சூறை )' அல்லது 'முக கப்பரை' எடுத்துச் சென்று மயான பூஜை நிகழ்ச்சியாகவோ மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது

ரிஷப வாகனத்தில் சேவை சாதிக்கும் அன்னை அங்காள பரமேஸ்வரி


அங்காள பரமேஸ்வரி அம்மன் கஜலக்ஷ்மி அலங்காரம்கம்பா நதி ஐதீகம் - அங்காளம்மன் சிவ பூஜை செய்யும் அலங்காரம்
அங்காள பரமேஸ்வரியுடன் இணைந்த மற்றுமொரு வரலாறு, தன் பக்தர்களை காப்பதற்காக அம்மை வல்லாள கண்டணை வதம் செய்த வரலாறு ஆகும். திருவண்ணாமலையை ஆண்டு வந்த வள்ளாள கண்டன் மிகவும் கொடுமைக்காரனாக இருந்தான். தன் குடி மக்களை எல்லாம் கசக்கி பிழிந்து வேலை வாங்கி அவர்களுக்கு தகுந்த கூலி தராமலும், அவர்களை மிகவும் கொடுமை படுத்துபவனாகவும் இருந்தான். அவன் ஏழு சுற்று கோட்டை அமைத்து அதற்கு இரண்டு கொடும் புலிகளை காவலாகவும் இட்டு தன் அரண்மணையை அக்கோட்டையில் அமைத்து கொண்டு ஆட்சி செய்து வந்தான். அவனுடைய கொடுமை தாங்காமல் மக்கள் எல்லாரும் அங்காள அம்மனை வந்து வேண்டி நிற்க, அம்மையும் மனமிரங்கி, 'பேச்சியுடன் ' சென்று, அவனுடைய ஏழு சுற்று கோட்டையை அழித்து நிர்மூலமாக்கி, அங்கே ஆமணக்கு விதை விதைத்து, வள்ளாளனையும் வதம் செய்து, அவனுக்கு மகன் பிறந்தால் மிகவும் கொடுமையானவானாகவே இருப்பான் குடி மக்கள் அனைவருக்கும் துன்பம் என்பதால், நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவன் மனைவியை வெறும் வயிறாக்கி, தன் மக்களை என் தாய் காப்பாற்றினாள். கோட்டை வாயிலிலே காவலாக இருந்த இரு புலிகளையும் கொன்று, அவைகளுடைய எலும்புகளை, அவற்றின் நரம்புகளை வைத்து கட்டி, தோலை பக்கங்களில் சேர்த்து இரண்டு புலிகளுக்கு இரண்டு அடுக்குடன் கூடிய " பம்பை " என்ற வாத்தியத்தியத்தை எம் அன்னையே உருவாக்கி அந்த புலிகளின் பல்லினாலேயே அந்த வாத்தியத்தை வாசித்து தன் வெற்றியை அறிவித்தாள் என்பது ஐதீகம். எனவேதான் பம்பை அங்காள பரமேஸ்வரிக்கு மிகவும் பிரியமான வாத்தியம். அம்மையின் விசேஷங்கள் அனைத்திலும் பம்பை கட்டாயம் ஒலிக்கும். மஹா சிவராத்திரி பண்டிகையின் போது இந்நிகழ்ச்சி 'பரி வேட்டை' சிலவிடங்களில் இந்நிகழ்ச்சியே மயான கொள்ளை நிகழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது இவ்வாறு நம்மை உய்விக்க வந்த பார்வதி தேவியின் அம்சமாம் அங்காள பரமேஸ்வரியை இந்த மஹா சிவராத்திரி நன்னாளில் நாமும் வழி பட்டு நன்மைஅடைவோமாகசண்டிகேஸ்வரர்இப்பதிவில் உள்ள புகைப்படங்கள், சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா, அங்காள பரமேஸ்வரி ஆலயத்தின் பத்து நாள் சிவராத்திரி பெருவிழாவின் ஐந்தாம் நாள் பஞ்ச மூர்த்திகள் சேவையின் படங்கள். இத்திருக்கோவிலில் 07-03-08 மாலை ஆறு மணிக்கு மயான கொள்ளை உற்சவம் நடைபெறவுள்ளது.