Monday, November 30, 2009

தீப மங்கள ஜோதி நமோ நம!


தீப வழிபாடு
அன்பர்கள் அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை ஜோதி நல்வாழ்த்துக்கள். எல்லா புவனங்களையும் தன் ஒளியால் பிரகாசிக்கச் செய்யும் சூரிய சந்திரன் மற்றும் அக்னியையே கண்களாகக் கொண்ட முக்கண் முதல்வரை ஜோதி வடிவாக வழிபடும் திருக்கார்த்திகை திருநாளில் தீபங்களை பற்றி சிறிது பார்ப்போமா?

மஹா பாரதத்தில் வரும் ஒரு சிறு கதை. கிருஷ்ண பரமாத்மா தர்மர் மற்றும் துரியோதனன் இருவர் வீட்டிற்கும் வர ஒத்துக் கொண்டார், ஆனால் ஒரு நிபந்தனையுடன், அந்த நிபந்தனை அவர் வரும் போது தங்கள் இல்லம் முழுவதையும் ஏதாவது ஒரு பொருளால் நிறைத்து வைக்க வேண்டும் என்று. துரியோதனன் வைக்கோலை வாங்கி தன் வீடு முழுவதும் நிறைத்து வைத்தான். கிருஷ்ண பரமாத்மா வந்த போது அவர் இல்லத்துள் நுழைய முடியாமல் அப்படியே வெளியே இருந்து விட்டு திரும்பி விட்டார். அவர் தர்மர் வீட்டிற்கு சென்ற போது அந்த இல்லத்தின் மையத்தில் அழகிய குத்து விளக்கை ஏற்றி வைத்து இருந்தார். அதன் ஒளியானது இல்லம் முழுவதும் ஒளியூட்டியது. அங்கே வந்த ஸ்ரீ கிருஷ்ணர் தர்மரின் அறிவை மெச்சி அவரை வாழ்த்திச் சென்றார்.

இவ்வாறு தீபம் எல்லா திசைகளிலும் பரவி ஞானம் என்னும் ஒளியை பாய்ச்சி அஞ்ஞானம் என்னும் இருளை அகற்றுகின்றது.

எனவே தான் அருணகிரி நாதரும் இறைவனை தீப மங்கள் சோதி நமோ நமோ! என்று பாடுகின்றார்.

வள்ளலார் சுவாமிகளும் அருட்பெருஞ் ஜோதி! அருட்பெருஞ் ஜோதி! தனிப்பெருங்கருணை! தனிப்பெருங்கருணை! என்று பாடுகிறார்.

மாணிக்க வாசக சுவாமிகளோ ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் ஜோதி என்று அனுபவக்கின்றார்.

தீப ஒளியில் முத்துக்குமரன்

அண்ணாமலை ஜோதி தரிசனம் திரிஜென்ம பாப விமோசனம், ஸ்ரீ ஐயப்பன் மகர ஜோதி தரிசனம் மனித வாழ்வில் பெரு வரம். இவ்வாறு எல்லா தெய்வங்களையும் நாம் ஜோதி வடிவாக காண்கின்றோம்.

தீபச்சுடரில் லட்சுமி தேவியும், ஒளியில் சரஸ்வதி தேவியும், சுடரில் வெளி படும் வெப்பத்தில் பார்வதி தேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே தீப தரிசனம் செய்வதன் மூலம் மூன்று தேவியர்களின் அருளையும் பெற்று கல்வி, செல்வம், வீரத்தில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை.


ஓம் அஸதோ மா ஸத் கமய
தமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர் மா அம்ருதம் கமய
ஓம் சாந்தி: ஓம் சாந்தி: ஓம் சாந்தி:


ஓ தீன பந்து, ஆபத் பாந்தவா, அனாத இரட்சகா, என்னை, அசத்யத்திலிருந்து என்னை சத்யத்திற்கு அழைத்துச் செல் ; அஞ்ஞான இருளிலிருந்து ஓளிக்கு அழித்துச் செல்; ஜனன மரணம் என்னும் இந்த சம்சார சாகரத்திலிருந்து மோக்ஷத்திற்கு அழைத்துச் செல் என்ற உபநிஷத் வாக்கியப்படி அஞ்ஞான இருளில் இருந்து ஞான ஓளிக்கு அழைத்து செல்வதை விளக்குகின்றன தீபங்கள்.

தீப வழிபாடு நெறியை சங்க நூல்களும், தேவாரமும் சிறப்பாக கூறுகின்றன. தீபங்களை வரிசையாக வைத்து வழிபாடு செய்யும் மரபு சங்க காலத்திலேயே இருந்திருக்கின்றது. மழைக்கூறு நீங்கிய தெளிவான வான மண்டலத்தில் ஆறு நட்சத்திரங்கள் அருகிருக்க தோன்றும் முழு நிலா நாளில் வீதி தோறும் விளக்கேற்றியும் மலை உச்சியில் விளக்கு வைத்தும் கார்த்திகை விழா கொண்டாடியதை அகநானூறு கூறுகின்றது. இவ்விளக்கின் ஒளிவெள்ளம் எப்படி இருந்ததென்றால், இலவ மரத்தின் மொட்டுகள் இதழ் விரித்த மலர்ச்சியைப் போல் இருந்ததாக அகநானூறு கூறுகின்றது.

லட்ச தீப ஒளியில் மிளிரும் ஸ்ரீ ராமர்

எனவே கார்த்திகை மாதத்தில் அக்னியை மானசீகமாக பூசித்து , வீடுகளில் விடியற்காலையிலும், மாலையிலும் தீபம் ஏற்றி வந்தால் நன்மை பயக்கும் என்று மஹரிஷிகள் கூறியுள்ளனர். குறிப்பாக, பரணி தீபம் அன்றும், கார்த்திகை தீப தினம் அன்றும் , நம் வீடுகளில் மாலையில் தீபங்களை ஏற்றி வைத்து, இறைவனை வழி பட வேண்டும்.

திருவண்ணாமலையில் கார்த்திகை ஜோதி தரிசிப்பதின் பலனை சிவப்பிரகாச சுவாமிகள் இவ்வாறு பாடுகின்றார்.

கார்த்திகை விளக்கு மணிமுடி சுமந்து
கண்டவர் அகத்திருள் அனைத்தும்

சாய்த்து நின்றெழுந்து விளக்குந்
சோண சயிலனே கயிலை நாயகனே! ஆம் கார்த்திகை தீப தரிசனம் காண்பவர் அக இருளை அகற்றி தூய்மைப்படுத்துகிறார் அந்த அண்ணாமலையார், அருணாசலர், சோணாசலர், கயிலை வாசர்.இம்மாதத்தில் திருக்கோவில்களில் சென்று தங்கள் கையினால் தீபம் ஏற்றி வைப்பது அவசியம், குழந்தைகளையும் ஏற்றச்சொல்லவும், ஏனென்றால் திருக்கோவில்களில் தீபம் ஏற்றி வைப்பது அனைத்து தோஷங்களுக்கும் உடனடியாக நிவாரணம் அளிக்கும் சக்தி கொண்ட ஒரு எளிய பரிகரமாகும். கொடிய பாவங்களினாலும், கடினமான மருத்துவ, அறுவை சிகிச்சைகளினாலும் ஒருவர் துன்புறும் போது, உடனடியாக, அவருக்காகக் திருக்கோவில் ஒன்றில் தீபம் ஏற்றி வைப்பது, அவரது உடல் உபாதைகளை உடனடியாக குறைக்கும். மேலும், வசதியில்லாத திருக்கோயில்களுக்கு கார்த்திகை மாதத்தில் அவரவர் சக்திக்கேற்ப, நெய் அல்லது எண்ணெய் மற்றும் திரி வாங்கிக் கொடுத்தால், குடும்பத்தில் துன்பங்கள் நீங்கி, இன்ப ஒளி வீசும்.

ஓளிக்கு காந்த சக்தி உள்ளது. அந்த சக்தி நம் எண்ணங்கள், உணர்வுகள், வார்த்தைகள், அனைத்தையும் ஈர்த்து நமக்கே திருப்பியளிக்கின்றது. எனவே விளக்கு வைக்கும் நேரத்தில் தீய சொற்களைக் கூறக்கூடாது, ஏனென்றால் அவை பலித்து விடும் எனவே நல்லவைகளையே கூற வேண்டும்.


தீபங்கள் தான் எத்தனை வகைஇனி, தீராத வினைகள் தீர, திருக்கோவில்களில் எவ்வளவு தீபம் ஏற்ற வேண்டும் என்று பார்ப்போமா?
1 தீபம். : மன அமைதி
9 தீபங்கள்: நவக்கிரக பிணி நொடியில் அடங்கும்.
12 தீபங்கள்: ஜென்ம ராசியில் உள்ள தோஷம் நீங்கும்.
18 தீபங்கள்:சக்தி தரும் சக்தி தீபம்
27 தீபங்கள்:நட்சத்திர தோஷம் நீங்கும், நல்லன கிட்டும்.
48 தீபங்கள்: தொழில் வளரும், பயம் நீங்கும்.
108 தீபங்கள்: நினைத்த காரியம் கை கூடும்
508 தீபங்கள்:திருமணத் தடை நீங்கும்
1008 தீபங்கள்:சந்தான பாக்கியம்.


தீபத்தின் தன்மை :
இருளை அகற்றும். அதற்கு மேல் பக்கம், கீழ் பக்கம் மேல் ஜாதி கீழ் ஜாதி என்ற பேதமில்லை. தீபம் திருமகளின் வடிவம். வெள்ளிக் கிழமையன்று மாலை தீபம் ஏற்றி வைத்து வணங்கினால் அதன் ஜோதியானது அவரவர்கள் விருப்பப்படி அதுவே அம்பிகை அல்லது திருமகள். ஆகவே தான் நாம் நம்முடைய எல்லா நல்ல காரியங்களையும் செய்யும் போது குத்து விளக்கு ஏற்றி வைக்கிறோம். இனி குத்து விளக்கின் தத்துவத்தைப் பற்றி காண்போம். தாமரை போன்ற ஆசனம் பிரம்மா. நெடிய தண்டின் நீட்சி மஹா விஷ்ணு, நெய்யேந்தும் அகல் ருத்திரன், திருமுனைகள் யாவும் மஹேஸ்வரன், நுனி சதாசிவன். நெய் - நாதம், திரி -பிந்து, சுடர்- அலை மகள், தீப்பிழம்பு -கலை மகள், ஜோதி - அம்பிகை மலை மகள். எனவே குத்து விளக்கு என்பதே இறைவடிவம்.

குத்து விளக்கின் ஐந்து முகங்கள் அன்பு, அறிவு, உறுதி, நிதானம், பொறுமை என்னும் ஐந்து நல்ல பண்புகளை குறிக்கின்றது. குத்து விளக்கில் ஒரு முகம் மட்டும் ஏற்றினால் மத்திமப்பலன் ஏற்படும், இரண்டு முகங்கள் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை ஏற்படும், மூன்று முகங்கள் ஏற்றினால் குழந்தை பாக்கியம் கிட்டும், நான்கு முகங்கள் ஏற்றினால் பசு, பூமி, வீடு, வாகனம் அமையும், ஐந்து முகங்களும் ஏற்றினால் அனைத்து வளங்களும் ஏற்படும். விளக்கு ஒரு மானிட உருவமும் கூட, பாதம், உடல், கழுத்து, முகம் எனப் பிரிக்கப்பட்டுள்ளன.அதன் ஒளிதான் உயிர். ஐந்து முகங்களும் பஞ்ச பூதங்கள். ஐந்து முகங்களையும் ஏற்றித்தொழுவதே நலம் தரும். முதலில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றிய பிறகுதான் திரியிட்டு தீபம் எற்ற வேண்டும். இனி தீபங்களைப்பற்றிய மற்ற குறிப்புகளைக் காண்போம்.


தீபம் ஏற்றும் திசையின் பலன்கள்:
கிழக்கு : துன்பம் ஒழியும், கிரகமும் பீடையும் ஒழியும்
மேற்கு: கடன் தொல்லை நீங்கும், சனி பீடை, கிரக தோஷம், பங்காளிப் பகை நீங்கும்.
வடக்கு: திரண்ட செல்வம், மங்களம் பெருகும், திருமணம், கல்வி, சர்வ மங்களம்.
தெற்கு: தீபம் ஏற்றக் கூடாது.

தீபம் ஏற்றும் நேரம்:
காலை : பிரம்ம முகூர்த்தம் 3 மணி முதல் 5 மணி வரை விளக்கேற்ற சர்வ மங்களம் உண்டாகும்.
மாலை : குடும்ப சுகம், புத்திர சுகங்களைத் தரும், நல்ல கணவர் அமைவர், நல்ல வேலை அமையும்.

தீபம் துலக்கும் நாட்கள் மற்றும் அதன் பலன்கள்:
குத்து விளக்கைத் துலக்கி சுத்தப்படுத்தும் பணியினை செய்ய குறிப்பிட்ட நாட்கள் உண்டு

ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில் மட்டும் தான் குத்து விளக்கை தேய்க்க வேண்டும்.

திங்கள் நடு இரவு முதல் புதன் நடு இரவு வரை குபேர தன தாட்சாயணியும், குக குரு தன தாட்சணியும் குத்து விளக்கில் பூரணமாய் குடியிருப்பதாய் கூறப்படுகின்றது. எனவே இந்த நாட்களில் விளக்கினை தேய்த்துக் கழுவினால் இந்த சக்திகள் விலகிப் போகுமென்பது நம்பிக்கை.

வெள்ளியன்று கழுவுவதால் அதில் குடியிருக்கும் குபேர சங்க நிதி யட்சிணி விலகிப் போய் விடும் என்பதும் மக்களின் பரவலான நம்பிக்கை.

ஞாயிறன்று விளக்கைத் துலக்கி தீபம் போடுவதால் கண் சம்பந்தமான நோய்கள் அகலும். மனம் நிலைப்பட திங்கள் அன்று துலக்கி தீபம் ஏற்ற வேண்டும். 'குரு பார்வை' இருந்தால் கடினமான வேலைகளையும் எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் எளிதாக செய்ய முடியுமே!.

வியாழன் அன்று தீபமேற்றினால் 'குருவின் பார்வையும்'- அது தரும் கோடி நன்மையும் நமக்கே கிடைக்கும். வாகன விபத்துக்களைத் தவிர்க்க உதவுவதுதான்

சனியன்று விளக்கு துலக்கி நாம் போடும் தீபம். மற்ற நாட்களில் விளக்கு துலக்காமல் தீபம் போடலாம். விளக்கு துலக்காத நாட்களில் விசேஷமான நாட்கள் வந்தால் விளக்கை நீரில் கழுவித் துடைத்து விபூதி கொண்டு தேய்த்துச் சுத்தமான துணியினால் விளக்கைத்துடைத்து தீபம் ஏற்றலாம்.

பஞ்சமி திதியன்று விளக்கேற்றுவது அகால மரணத்தைத் தவிர்க்கும், புதிதாக நெய்த பருத்தி ஆடையில் அரைத்த சந்தனம், பன்னீர் சேர்த்துத் தடவிக் காய வைத்து, அதை திரியாக்கி வடக்கு முகமாக வைத்து , 'பஞ்ச தீப' எண்ணெய் ஊற்றி திருவாதிரை நட்சத்திரத்தன்று தொடர்ந்து ஓராண்டு விளக்கேற்ற நோய்களின் வேகம் குறையும். பல காலம் வராமலிருந்த பணம் தேடி வரும். இது அருந்ததிக்கு சாவித்திரி தேவி அருளிய வாக்கு.


இறைவனுக்கு உகந்த எண்ணெய்:

நெய் : மஹா லக்ஷ்மி
நல்லெண்ணெய் : நாராயணன்
தேங்காய் எண்ணெய்: கணபதி
இலுப்பை எண்ணெய்: ருத்திரபதி, சர்வ தேவதை.

பலன்:
ஆமணக்கு எண்ணெய்: நல்லது நடக்கும். குல தெய்வத்தின் முழு அருள் கிட்டும்

நெய்: மிகச்சிறந்தது. சகல வித சுகத்தையும் தரும். வீட்டின் நலம் பெருகும். அதிலும் பசு நெய் பயன் படுத்துவது மிகவும் உத்தமமானது. தேவர்கள் மற்றும் அனைத்து தேவர்களும் பசுவில் வசிக்கின்றனர். பசுவின் பாலில் இருந்து உருவாகும் நெய்யில் அம்பிகை வாசம் செய்வதாக ஐதீகம். ஆகவே தீபத்தில் பசு நெய் இடுவதால் அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது.

நல்லெண்ணெய்: பீடைகள் விலகும், துக்கம் அகலும்.

விளக்கெண்ணெய்: புகழ், பந்த சுகங்கள் கிடைக்கும், வளம், செல்வம் பெருகும்.

வேப்பெண்ணெய்: கணவன் மனைவி உறவு நலம் பெறும், மற்றவர்களின் உதவி கிட்டும்.

வேப்பெண்ணெய், நெய், இலுப்பெண்ணெய் மூன்றும் சேர்த்து விளக்கேற்றினால் செல்வம் உண்டாகும், குல தெய்வத்திற்கு ஏற்றது.

நெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களும் கலந்து தீபமேற்றினால் தேவியின் அருள் சக்தி கிட்டும்.

கடலை எண்ணெய் : ஊற்றக் கூடாது.பூஜைக்கு ஏற்ற விளக்கு:

அகல் விளக்கு, வெள்ளி விளக்கு, பஞ்ச லோகத்தால் செய்த விளக்கு.

விளக்கு திரிகளின் வகைகள்:
பஞ்சு : பஞ்சுத் திரிதான் விளக்கேற்ற மிகவும் சிறந்தது. மெல்லிய திரிகளாக திரித்து வைத்துக் கொள்ள வேண்டும். திரிக்கும் போது ஒரு பக்கம் மட்டுமே உருட்ட வேண்டும். வீட்டில் மங்களம் பெருகும், சுகங்களைக் கூட்டும்.

தாமரைத்தண்டுத்திரி: தீவிணை போகும், செல்வம் நிலைக்கும்.

வாழைத்தண்டுத்திரி: குழந்தை பாக்கியம், தெய்வக்குற்றமும், குடும்ப சாபமும் நீங்கும். செல்வம் தங்கும்.

வெள்ளெருக்கு- இதன் பட்டையை திரியாக செய்து தீபம் போட்டால் செல்வம் பெருகும் , பேய் விலகும்.( கணேசருக்கு உகந்தது)

மஞ்சள் நிறத்திரி: அம்மனின் அருள் கிட்டும், வியாதி குணம் ஆகும்

புது சிவப்புவண்ணத் திரி: திருமணத்தடை, குழந்தை பாக்கியமின்மை விலகும்.

புது வெள்ளை வண்ணத் திரி: தரித்திரம் அகலும், சுபிட்சம் பெருகும்.

விளக்கை எண்ணெய் இல்லாமல் தானே அனைய விடுவது தவறு. நாமே அமர்த்துவது நல்லது, ஒரு சொட்டு பால் கொண்டோ அல்லது மலர் கொண்டோ அமர்த்துவது உத்தமம். குறிப்பாக வெளியில் செல்லும் போதும் இரவு படுக்கச்செல்லும் போதும் விளக்கை தொடர்ந்து எரிய விடாமல் அமர்த்தா வேண்டும். வாயினால் ஊதி அமர்த்தக் கூடாது.இனி விளக்கு வழிபாட்டினைப் பார்ப்போம். அம்மனுக்கும் குல தெய்வத்திற்கும் மிகவும் உகந்தது பொங்கலும் மா விளக்கும். பச்சரிசியை பொடி செய்து வெல்லப் பாகுடன் கலந்து மா விளக்கு செய்து அதில் நெய் ஊற்றி தீபமேற்றி அம்மனுக்கு பொங்கலுடன் படைப்பது ஒரு மிகச்சிறந்த பரிகாரம். அது போலவே பலர் குறிப்பால இராகு காலத்தில் துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றுகின்றனர். அது போலவே பல கோவில்களில் தேங்காய் மூடிகளில் விளக்கு ஏற்றும் வழக்கமும் உள்ளது.


 லக்ஷ தீப ஒளியில் மிளிரும் குளக்கரை


திருவிளக்கு பூஜை:

இருள் துன்பம் தருவது. ஓளி இன்பம் தருவது. ஓளி இன்றி உலகமேது? வாழ்க்கையேது? புற அருள் நீக்குவது ஒளி. அக இருளைப் போக்குவது அருள் ஒளி உணர்வு. இருளாகிய துன்பம் நீங்கி அருளாகிய இன்பம் நிறைந்திட திருவிளக்கு பூஜை செய்கிறோம். திருவிளக்கை திருமகளாக, தீப லக்ஷ்மியாக, அம்பிகையாக பாவித்து சுமங்கலிகள் பூஜை செய்வது திருவிளக்கு பூஜை எனப்படும். குறிப்பாக அம்மனுக்கு உகந்த ஆடி, தை வெள்ளி நாட்களில் திருவிளக்கு பூஜை செய்வது மிகவும் சிறந்தது. திருவிளக்கு வழிபாடு செய்வதால் நம் வாழ்வில் தூய்மையும் தெய்வத்தன்மையும் பெருகும்.சஞ்சலமும் வறுமையும் நீங்கி சாந்தியும் வளமையும் நிறையும். தினமும் மாலையில் திருவிளக்கேற்றி வழிபடும் இல்லத்தில் அஷ்ட லக்ஷ்மிகளும் வாசம் செய்கின்றனர். திருவிளக்கு வழிபாடு தினந்தோறும் நடைபெறும் இல்லங்களில் தெய்வ சாந்நித்யம் பெருகுவதால் பேய், பிசாசு, பில்லி, சூனியம் ஒன்றும் அங்கே அணுகாது.

இனி திருக்கோவில்களில் நடைபெறும் தீப ஷோடசோபசாரங்கள் என்ன என்று பார்ப்போம்.1. தூபம், 2. ஏக தீபம் (உருக்களி) 3. அலங்கார தீபம் ( 1, 3, 5 7, 9 அல்லது 11 அடுக்குகள் கொண்ட தீபம். புஷ்ப தீபம், மஹா தீபம் என்றும் அழைக்கப்படுவதுண்டு) 4. நாக தீபம், 5.வ்ருஷப தீபம்( நந்தி தீபம்), 6.புருஷா ம்ருக தீபம், 7. சூல தீபம், 8. கூர்ம தீபம் (ஆமை தீபம்), 9. கஜ தீபம்( யானை தீபம்), 10. சிம்ஹ தீபம், 11.வ்யாகர தீபம் ( புலி தீபம்) 12. கொடி தீபம். 13. மயூர தீபம், 14. பஞ்ச தட்டுடன் பூர்ண கும்ப தீபம், 15. நக்ஷத்ர தீபம், 16.மேரு தீபம். ஆகியவையே அந்த 16 தீபங்கள்.

சொக்கப்பனை:

வீட்டளவில் தீபம் என்பது ஊரளவில் சொக்கப்பனை. சொக்கப்பனையின் உள்ளார்த்தம் மன இருள் அகன்று அக ஒளி ஏற்பட்டால் தீயன கருகும் ஞான ஒளி மனதில் உண்டாகும், தீயன தூசாகும் என்பதே. கார்த்திகை பௌர்ணமியன்று பல ஆலயங்களில் சொக்கப்பனை கொளுத்தப்படுகின்றது. அதில் பனை ஒலை கொளுத்தப்படுகின்றது, பனை மரத்தின் ஒவ்வொறு பாகமும் மற்றவர்களுக்காக பயன் படுகிறது கொழுத்தப்பட்ட பனை ஒலையின் சாம்பல் கூட புனிதமானது அதுவும் நமக்கு பயன் படுகின்றது அது போல நாமும் மற்றவர்களுக்கு பய பட வேண்டும் என்பதை இந்த நிகழ்ச்சி உணர்த்துகின்றது.

இந்த திருக்கார்த்திகை நாளில் நாமும் நம் இல்லங்களின் எதிரே விளக்கேற்றி ஜோதி ரூபமான இறைவனை வழிபட்டு நன்மையடைவோமாக.

6 comments:

Jayashree said...

ஜோதி தனை பணிவோம் - சத்ய ஜோதி தனை பணிவோம்

ஆதி அந்தமில்லா பரம் பொருள் அதுவே ,
அகில உலகனைத்தும் ஆட்டுவிக்கும்- சத்ய ஜோதி தனை பணிவோம்

நீதியின் வடிவாம் ஞான உருவமாய் பேதமில்லாமலே உயிர் தோறும் தங்கிடும்

வேதம் இயல் கலைகள் இதமுடன் நாம் பெற
சதா இலங்கும் நல் ஆர்வமுடன் - சத்ய ஜோதி தனை பணிவோம்!

எத்தனை விஷயங்கள் சொல்லியிருக்கீங்க !! அருமை! நன்றிங்க. உங்களுக்கும் திருக்கார்த்திகை வாழ்த்துக்கள்.

எப்படித்தான் உங்களுக்கு மட்டும் இப்படி ஸ்வாமி சன்னதி photos எடுக்க கிடைக்கிறதோ!! blessings தான். படங்கள் முந்தைய சில பதிவுகளிலுமே பார்த்தேன்.நாங்க போகும் போது camera
எடுத்துண்டு போக அனுமதி இல்லைனு இப்பல்லாம் கொண்டே போறதில்லை.முத்துகுமார ஸ்வாமி எந்த ஊரோ? வைதீஸ்வரன் கோவில் மாதிரி இல்லையே? உற்சவரா?

S.Muruganandam said...

வாருங்கள் ஜெயஸ்ரீ.

அருமையான கவிதை நடையில் சத்ய ஜோதியை கூறியுள்ளீர்கள்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

எல்லாம் அவன் செயல். பல இடங்களில் அடியேனுக்கும் ஐயனை புகைப்படம் எடுக்க அனுமதி கிடைப்பதில்லை. கிடைக்கும் இடங்களில் மட்டுமே புகைப்படம் எடுக்கின்றேன்.

முத்துகுமார சுவாமி வைத்தீஸ்வரன் கோவில் சுவாமியல்ல. இவர் சென்னை கந்த கோட்டம் உற்சவர் முத்துக்குமார சுவாமி. மூலவர் திருநாமம் கந்தசுவாமி . இத்திருக்கோவில் சென்னை பாரி முனை, இராசப்ப செட்டி தெருவில் உள்ளது.

cheena (சீனா) said...

அன்பின் கைலாஷி

வழக்கம் போல் தகவல்கள் அதிகம் நிறைந்த - படங்கள் நிறைந்த - இடுகை. கார்த்திகைத் தீபம் என்ற ஒரு செய்திக்கு இத்தனை விளக்கங்கள் - விரிவான விளக்கங்கள் - விளக்கு பற்றி இத்தனை தகவல்களா - உழைப்பினையும் ஆர்வத்தினையும் பாராட்டுகின்றேன். நல்வாழ்த்துகள் கைலாஷி

S.Muruganandam said...

ஆண்டவனின் அருளும் தங்களைப் போன்றவர்களின் ஆசியும் தான் இதற்கெல்லாம் காரணம்.மிக்க நன்றி சீனா சார்.

S.Muruganandam said...

//எப்படித்தான் உங்களுக்கு மட்டும் இப்படி ஸ்வாமி சன்னதி photos எடுக்க கிடைக்கிறதோ!! blessings தான்.//

முத்துக்குமார சுவாமி வைர அங்கியில் காட்சி தருகின்றார், இந்த தரிசனம் வருடத்தின் முதல் நாள், மற்றும் ஆடி கிருத்திகையன்றுதான் சித்திக்கும். இப்படத்தை எடுக்க முதலில் அனுமதி கிடைக்கவில்லை பின் கோயில் பணியாளரே அடியேனது கேமராவை வாங்கி எடுத்துக் கொடுத்த படம் இது .

siva foundation said...

ayya nan sivarathiri 1008 theeepa vila panna ullaen notice poda article thediya pothu unkal theepa valipadu villkkam appadiyae kidaithathu sivan arul than thank you sir