Tuesday, December 1, 2009

கார்த்திகை சோம வார சங்காபிஷேகம்

திருக்கடவூர் 1008 சங்காபிஷேகம்


அபிராமியம்மன்எல்லா சிவாலயஙகளிலும் கார்த்திகை சோமவரத்தன்று சங்காபிஷேகம் நடைபெற்றாலும் சிவசக்தித்தலமான, அமிர்த கடேஸ்வரராய் லிங்க ரூபத்திலும், மார்க்கண்டனுக்காக காலனையே தன் பிறங்கு தாளால் உதைத்து சம்ஹாரித்து அருளிய கால சம்ஹார மூர்த்தியாய், அமிர்த மிருத்யுஞ்ஜய மூர்த்தியாய் உருவ ரூபத்திலும், அம்மை அமாவாசையன்று பௌர்ணமியை காட்டிய திருத்தலமான திருக்கடவூரிலே மிகவும் விமர்சையாக இந்த சோமவார விழா கொண்டாடப்படுகின்றது அன்பர்கள் அனைவரும் ஒரு தடவையாவது இத்தலத்தில் கார்த்திகை சங்கபிஷேகத்தை காண வேண்டும் இல்லையென்றால் இப்பிறவியெடுத்ததன் பயனே இல்லை எனலாம் அவ்வளவு சிறப்பாக சங்காபிஷேகம் நடைபெறுகின்றது இத்தலத்தில்.இவ்வாலயத்தில் சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெறுவதற்கான வரலாறு. முசுகுந்தன் என்ற சோழ மன்னன் ஒரு சமயம் திருக்கடவூர் வந்தபோது இறைவனுக்கே உரிய தீர்த்தத்தில் நீராடியதால் அவன் உடலை ஒரு கொடிய பிணி பற்றிக்கொண்டு வருத்தியது.அதற்கு கழுவாயாக 1008 சங்குகள் கொண்டு சிறந்த மருத்துவப் பொருட்கள் இட்ட புனித நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்வித்துத் தனக்கு ஏற்பட்ட பிணி நீங்கி நலம் பெற்றான். அது முதல் பன்னெடும் காலம் தொட்டு ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்து சோமவாரம் ஒன்றொன்றிலும் திருக்கடவூரில் 1008 சங்காபிஷேகம் நடைபெறுகின்றது. மார்க்கண்டேயரும் அமிர்தகடேஸ்வருக்கு சங்காபிஷேகம் செய்துள்ளார் என்பதால் இத்தலத்தின் சங்காபிஷேகம் மிகவும் சிறப்பானது.


பாலாம்பிகை சமேத அமிர்த ம்ருத்யுஞ்ஜய மூர்த்தி

அன்று தான் நாம் அபிராமி அம்மையையும், பாலாம்பிகா சமேத அமிர்த மிருத்யுஞ்ஜய மூர்த்தியையும் அற்புதமான அலங்காரத்திலே கண்டு அவர்கள் அருள் பெறலாம். மாலை அமிர்த கடேஸ்வரரின் சன்னதிக்கு எதிரே உள்ள சங்கு மண்டபத்தில் பிரதான வலம்புரி சங்கும் மற்றும் 1008 சங்குகளும் நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டு , எட்டு வகை மலர்கள், எட்டு வகை பத்திரங்கள், எழு வகை மருந்து பொருட்கள், ஐந்து வகை உலோகங்கள், ஒன்பது மணிகள், பத்து காய்கனிகள், ஏழுவகை நறுமண பொருட்கள், ஒன்பது வகை பாடாணங்கள், ஏழு நதி தீர்த்தங்கள், தானியங்கள், மூலங்கள், மலை படு பொருட்கள், கடல்படு பொருட்கள் முதலியவை கலந்து சங்கு தீர்த்தத்தில் கலக்கப்படுகின்றன, பின் இந்த நீரால் சங்குகள் நிரப்பப்படுகின்றன. ஹோமங்களுடன், மந்திரங்களின் மூலம் உருவேற்றப்படுகின்றன. பின் தருமபுரம் ஆதீனம் அவர்கள் முன்னிலையில் முதலில் அமிர்த கடேஸ்வரருக்கு வலம்புரி சங்கின் நன்னீரால் மற்றும் ஆவுடையின் எட்டு திக்குகளுக்கும் எட்டு சங்கங்களின் நன்னீர் அபிஷேகம் செய்யப்படுகின்றது. பின் தேவாரம் முழங்க மற்ற 1000 சங்குகளின் புனித நீரால் அபிஷேகம் முடித்து தீபாரதனை நடைபெறுகின்றது.

சிவலிங்க வடிவில் 1008 சங்கங்கள் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அழகு

பின் அலங்காரம் முடித்து நான்கு திக்குகளிலும் இருந்து மஹாதீபாராதனை நடைபெறுகின்றது, தீபாரதனையின் போது எம்பெருமானின் திருமேனியில் உள்ள காலனின் பாசக்கயிற்றின் வடுவை காணலாம் என்பது ஐதீகம், பின் ஷோடச உபசாரங்கள் முடித்து மந்திர புஷ்பம் முடித்து கற்பூர தீபாரதனையுடன் அமிர்த கடேஸ்வரருக்கு பூஜை முடிவடைகின்றது.

பின் அமிர்த மிருத்யுஞ்ஜய மூர்த்தி சன்னிதியில் சிரஞ்žவி மார்க்கண்டேயர் அருளிய மிருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம் ஓதப்பட்டு, தீபாராதனை நடைபெற்று, சங்காபிஷேக தீர்த்தமும் பிரசாதமும் வழங்கப்படுகின்றது. பின் நடராஜர், முருகர் சன்னிதிகளில் தீபாராதனை முடித்து அபிராமி அம்மையின் சன்னிதியில் திரிபுர சுந்தரியாய் கொண்டை முடி இடப்பக்கம் முடித்து, தங்கப்பாவாடையில், கையில் அங்குச பாசாங்குசமும், கரும்பு வில்லும் ஏந்திய எம் அம்மைக்கு அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு, புவனம் பதினான்கையும் பூத்தவளுக்கு, மாதுளம் பூ நிறத்தவளுக்கு. அலையாழி அரி துயிலும் மாயனது தங்கைக்கு சிறப்பு ஆராதனைகளும் ஷோடச உபசாரங்களும், அபிராமி அந்தாதியும், பதிகமும், அபிராமி ஸ்தோத்திரமும் முழங்க சிறப்பாக நடை பெறுகின்றது.
பின் அலங்கார மண்டபத்தில், வெள்ளி மூஞ்சூறு வாகனத்தில் வினாயகப் பெருமானும், எம்பெருமான் சோமாஸ்கந்தராக வெள்ளி ரிஷப வாகனத்திலும், அபிராமி அம்மை வெள்ளி ரிஷப வாகனத்திலும், வள்ளி தேவசேனா சமேத முருகர் வெள்ளி மயில் வாகனத்திலும், சிறிய ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் அருமையான மலர் அலங்காரத்துடன் எழுந்தருளியிருக்க, பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு தீபாரதனை நடை பெறுகின்றது. ஐந்து மூர்த்திகளுக்கும் அலங்கார தீபம் ஒரே சமயத்தில் நடைபெறும் அந்த அழகைக் காணப் பெற்றவர்கள் பெரும் பேறு பெற்றோர் என்பதில் ஐயம் இல்லை. தீபாரதனை முடித்து பஞ்ச மூர்த்திகளுக்கு ஷோடச உபசாரம் நடை பெற்று கற்பூர தீபாரதனை முடித்து பஞ்ச மூர்த்திகளும் நாதஸ்வர இசை முழங்க புறப்பாடு கண்டருளுகின்றனர். புறப்பாடு கோவிலை சுற்றி வந்து முடியும் போது நள்ளிரவுக்கு மேல் ஆகி விடும் அனைத்து வாரங்களும் இவ்வாறே மிகவும் சிறப்பாக 1008 சங்கபிஷேகமும், பஞ்ச மூர்த்திகளின் புறப்பாடும் இத்திருத்தலத்தில் அனைத்து சோமவார தினங்களிலும் சிறப்பாக நடைபெறுகின்றது.

இப்பதிவை சென்ற வருடமே பதிவிட நினைத்தேன் ஆனால் இவ்வருடம்தான் பதிவிட முடிந்தது. சென்ற வருட பதிவுகளை இங்கே படிக்கலாம்.

கார்த்திகை சோம வார விரதம் -1

கார்த்திகை சோம வார விரதம் -2

கார்த்திகை சோம வார விரதம் -3

கார்த்திகை சோம வார விரதம் -4

9 comments:

Jayashree said...

கேட்க படிக்கவே இவ்வளவு நன்றாக இருக்கும்போது கோவிலில் நேராக பார்க்க எவ்வளவு நன்றாய் இருக்கும்!
சங்காபிஷேகம் SIGNIFICANCE என்னவோ?

Kailashi said...

நேரில் சென்று பார்த்தால் அதற்கப்புறம் மறுபடியும் மறுபடியும் சென்று தரிசிக்க மனதில் நிச்சயம் தோன்றும்.

Kailashi said...

//சங்காபிஷேகம் SIGNIFICANCE என்னவோ?//

சிவ பெருமான் அபிஷேகப்பிரியர், அந்த எம்பெருமானுக்கு செய்யும் எல்லா அபிஷேகத்தையும் விட சங்கால் செய்யும் அபிஷேகம் மிகவும் சக்தி வாய்ந்தது ஏனென்றால் அந்த ஓங்காரத்தாலே நாம் எம்பெருமானுக்கு அபிஷேகம் செய்கிறோம் என்பதால் அவர் மிகவும் பிரசன்னமாகிறார் என்பது ஐதீகம்.

கார்த்திகை மாதம் நெருப்புக்குரிய மாதம் இம்மாதத்தில் சிவபெருமானை குளிர்விக்க சங்காபிஷேகன் செய்கின்றோம் என்பதும் ஒரு ஐதீகம்.

http://natarajar.blogspot.com/2008/11/3.htmlல் சென்றும் படியுங்கள் ஜெயஸ்ரீ.

Tamil Home Recipes said...

மிகவும் அருமையான பதிவு.

Kailashi said...

வாருங்கள் Tamil home recipes வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Jayashree said...

november 2008 issues படிச்சேன். ரொம்ப நன்றாக இருந்தது. படங்கள் மிகவே அருமை.நன்றி. நாளைக்கு வைக்கத்தஷ்டமினு நினைக்கிறேன். Happy mahadevashtami.

Kailashi said...

//november 2008 issues படிச்சேன். ரொம்ப நன்றாக இருந்தது.//

ஐயனின் அருளை சொல்வது கடினம் ஆயினும் ஏதோ சிறு தொண்டு தான் அடியேனுடையது.


நாளை ,மறு நாள் மஹாதேவாஷ்டமி நாள்,கபாலீஸ்வரருகு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

க.பாலாசி said...

பகிர்தலுக்கு மிக்க நன்றி...

Kailashi said...

வாருங்கள் பாலாசி முதல் முறையாக வருகின்றீர்கள், மறுபடியும் வந்து தரிசியுங்கள்.