Monday, October 31, 2016

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -49

திரியுக நாராயணன் ஆலயம் 


ஆணவத்தால்  தட்சன்  நடத்திய முறையற்ற யாகத்திற்கு சென்று தனது தந்தையால் அவமானப்பட்ட தாட்சாயணி அவன் அளித்த உடலை அந்த யாகத்தீயிலேயே அழித்து கொண்டாள். யாகத்தையும் தட்சனின் ஆணவத்தையும் அழித்தாள். பின்னர்  சிவபெருமான் யோகீசுவரராக திருக்கயிலாயத்தில் சென்று அமர்ந்தார். அம்மை இமயமலையில் இமவானுக்கு மகளாகப் பிறந்து சிவபெருமானை அடைய கௌரிகுண்டத்தில்  தவஞ்செய்யலானார். தர்மம் ஒடுங்கி அதர்மம் சூரபத்மன் ரூபத்தில் தலைவிரித்தாடியது. தேவர்கள் திருமாலை வேண்ட மன்மதனின் செய்கையால் அதர்மத்தை அழிக்க முருகன் என்னும் தலைமகன் தோன்ற சிவசக்தி திருமணம் நடந்தேறிய இடமே இத்திரியுகநாராயண்.


இமவானின் தலைநகரான இமவத்தில்(Himavat) சிவசக்தி திருமணம் நடந்தது. அவரது  குலதெய்வமான நாராயணர் இத்திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தார். அவரே அம்மைக்கு தமையனாக இருந்து கன்னிகாதனமும் செய்து வைத்தார்.  எனவே இத்தலத்தில் அவரே   மூலமூர்த்தியாக எழுந்தருளி அருள்பாலிப்பதாலும் இத்திருமணத்தின் போது ஏற்றிய வேள்வித்தீ மூன்று யுகங்களாக இன்னும் எரிந்து கொண்டிருப்பதால் திரியுகநாராயணன்  என்று இவ்வாலயத்திற்கு திருப்பெயர். அகண்ட தூணி (அணையா சோதி) என்றும் அறியப்படுகின்றது. 

சிவசக்தியின் திருமணம் நடந்தது சத்திய யுகத்தில் (1,728,000 மனித வருடங்கள்), திரேதாயுகம் (1,296,000 ), துவாபரயுகம்(864,000), முடிந்து கலியுகத்தில் இன்றும்  அணையாமல் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது.

மூன்று யுகங்களாக அணையாது எரியும் அகண்டஜோதி 

உத்தரகாசியிலிருந்து திருக்கேதாரம் செல்லும் ஒரு  பாதையில் (உத்தரகாசி தெஹ்ரி - கடோலியா - கன்சாலி குட்டு - பன்வாலி மக்கு திரியுக்நாராயண் சோன்பிரயாகை கௌரி குண்டம் கேதார்நாத்) 1980மீ உயரத்தில் அடர்ந்த காடுகளுக்கிடையில் அமைந்துள்ளது இத்தலம். மலைமங்கை பார்வதி   சிவபெருமானை மணாளனாக அடைய தவஞ்செய்த கௌரிகுண்டம் இத்தலத்திலிருந்து  5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

விஷ்ணு குண்டம் 

அடியோங்கள் சோன்பிரயாகையில் இருந்து சூரியனின் கதிர்கள் நுழைய முடியாத அடர்ந்த காடுகளிடையே 12 கி.மீ பயணம் செய்து  இத்தலத்தை அடைந்தோம்.. வெயில் இல்லாததாலும்,  எப்போதும் மழை பெய்து கொண்டிருப்பதாலும் மரங்களில் எல்லாம் பாசி படிந்திருந்தன, சிறு செடிகள் முளைத்திருந்தன. சிறிய பாதை  அதிக போக்குவரத்து இப்பாதையில் இருக்கவில்லை. கிராமமும் குக்கிராமம்தான். வருத்தில் ஆறு மாதம் பனிக்காலத்தில் இக்கோவிலும் மூடியிருக்கும்.


ருத்ர குண்டம் 

ஆலயம் கிராமத்தின் மையத்தில் அமைந்துள்ளது. இமயமலை ஆலயங்களைப் போலவே நகார கோபுரத்துடன் கருவறை, அர்த்தமண்டபமும் உள்ளது. இம்மண்டபத்தில் அகண்ட சோதி ஒளிர்ந்து கொண்டிருப்பதால் புகை வெளியே செல்வதற்காக புகைபோக்கி அமைத்துள்ளனர். ஆதிசங்கரர் இவ்வாலயத்தை அமைத்தாராம். முன் கதவு அடைக்கப்பட்டிருக்கின்றது.

இவ்வாலயத்தில் ருத்ர குண்டம், பிரம்ம குண்டம், விஷ்ணு குண்டம், சரசுவதி குண்டம் என்று  நான்கு குண்டங்கள்(குளங்கள்) உள. சரசுவதி குண்டத்தில் அந்தர்வாகினியான திருமாலின் நாபிக்கலத்திலிருந்து தோன்றிய  சரசுவதி தாராவும்,  கங்கையும் பாய்கின்றனர்.. பின் அங்கிருந்து மற்ற மூன்று குண்டங்களில் நிறைகின்றனர்.  சிவசக்தி திருமணத்திற்காக கூடிய தேவர்கள், பூதகணங்கள், கின்னர கந்தவர்கள், யட்சர்கள்,  கிம்புருடர்கள் அனைவரும் இக்குளங்களில் நீராடியதாக ஐதீகம்.  இவற்றில் சிவ,  பிரம்ம குண்டத்தின் நீரை நமது   தலையில் தெளித்துக் கொள்ள சொல்கிறார்கள். விஷ்ணு குண்டத்தின் தீர்த்தத்தை உட்கொள்ள சொல்கிறார்கள். சரசுவதி குண்டத்தில் தர்ப்பணம் செய்கின்றனர்.
புதுமணத்தம்பதியினர் 

தர்ம சிலாவில் பூஜை 

திருக்கல்யாணம் நடந்த கல்மேடை தற்போது பிரம்மசிலா/தருமசிலா என்றழைக்கப்படுகின்றது. அதன் அருகில் பூசை செய்ய விரும்புவர்களுக்கு சங்கல்பம் செய்து வைத்து  இத்தலத்தின் வரலாற்றைக்கூறி பூசை செய்து ஆசிர்வாதமும் அளிக்கின்றனர். ஒரு காலத்தில் கோதானம், குப்ததானம் செய்திருக்கின்றனர் ஆனால் தற்போது,  தானமாக தற்போது அரிசி மட்டும் பெறுகின்றனர். ஆலயத்தின் அருகில் உள்ள கடைகளில் ஒரு தட்டு அரிசி ரூ.25க்கு  கிட்டுகிறது. தருமசிலாவின் எதிரே புதுமணத்தம்பதிகளாக சிவபார்வதி அருள் பாலிக்கின்றனர்.  


பூசையை முடித்துக்கொண்டு ஆலயத்தின் பின்புறமாக சென்று வலதுபக்க கதவின் வழியாக அர்த்தமண்டபத்தை அடைகின்றோம். இக்கதவின் அருகில் கணேசர் மற்றும் பள்ளிகொண்ட பெருமாள் அருள் பாலிக்கின்றார்.  கருவறையில் மையத்தில் வெள்ளி மூர்த்தமாக நாராயணர் அவருக்கு வலப்பக்கத்தில் பல்லக்கில் லக்ஷ்மி, இடப்பக்கம் சரசுவதியுடன் சேவை சாதிக்கின்றார். இவர்களுடன் புதுமணத்தம்பதிகளான சிவபார்வதி, பத்ரிநாராயணர், சீதாராமர், பஞ்ச பாண்டவர்கள் மற்றும் சேத்திரபாலரான குபேரன் ஆகியோரும் சேவை சாதிக்கின்றனர். 108 சாலக்கிராமங்கள் இவர்களை அலங்கரிக்கின்றன. 


ஓமக்குண்டத்தில் அகண்ட சோதி எப்போதும் எரிந்து கொண்டிருக்கின்றது. சிவசக்தியின் திருக்கல்யாண சோதியை
தீப மங்கல சோதி நமோ நம
தூய அம்பல லீலா நமோ நம என்று வணங்கினோம். அகண்டசோதிக்கு பக்தர்கள் விறகு வாங்கி காணிக்கையாக வழங்குகின்றனர். அவர்களுக்கு அகண்டசோதியின் சாம்பல் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. இச்சாம்பல் மிகவும் சக்தி வாய்ந்தது இதை தரித்துக்கொள்ள பயம் நீங்கும், தீய சக்திகள் அகன்று விடும் என்பது ஐதீகம், எனவே பக்தர்கள் அனைவரும் இச்சாம்பலை தங்கள் இல்லம் கொண்டு சென்று பூசையறையில் வைத்துக்கொள்கின்றனர்.  திருச்சுற்றில் அன்னபூரணி, அர்த்தநாரீசுவரர், ஈசானேசுவரர், பசுரங்கபலி(அனுமன்), சங்கரருக்கு   சிறு சன்னதிகள் உள்ளன.  கோபுரத்தில் உள்ள கோட்டத்தில் கருடன் கூப்பிய கரங்களுடன் சேவை சாதிக்கின்றான். பல வருடங்களாக தரிசிக்க வேண்டும் என்று விரும்பிய ஆலயத்தை தரிசித்த மகிழ்ச்சியில் ஃபடா வந்து தங்கினோம். 


                                                             யாத்திரை தொடரும் . . . . . . .

Saturday, October 29, 2016

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -48

2016 வருட யாத்திரை

இத்தொடரை சென்ற தடவை முடித்த போது எழுதிய வார்த்தைகள் இவை.

இத்துடன் இத்தொடர் நிறைவு பெற்றது.  இன்னும் பஞ்ச கேதார் யாத்திரை, டோலி யாத்திரை, நந்தா தேவி உற்சவம் என்று  எத்தனையோ யாத்திரைக்கான  செய்ய வாய்ப்புக்கள் உள்ளன.அவன் அருள் இருந்தால் அந்த யாத்திரை விவரங்களையும் அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


இமயமலை  என்பது ஒரு காந்தம் போல  ஒரு தடவை அங்கு சென்றவர்கள் மறுபடியும், மறுபடியும் அங்கு செல்வார்கள். மும்முறை தொடர்ச்சியாக  இமயமலையில் இனிய யாத்திரை  செல்ல வாய்ப்புக் கிட்டியது. 2013ல் இமாலய பெருவெள்ளம் ஏற்பட்டது எனவே இருவருடங்கள் பத்தியுலா தடைப்பட்டது. 

பெருவெள்ளத்தால் தடைபட்ட யாத்திரை பின்னர் 2015ல் தொடர்ந்தது. இவ்வருடம் நான்கு நாட்கள் பத்தியுலாவாக  அமைந்தது,   பத்ரிநாத் மட்டுமே சென்றோம். டெல்லியில் இருந்தே வாகனம் அமர்த்திக்கொண்டோம், வழக்கம் போல் ரிஷிகேசத்தில் போக்குவரத்து அலுவலகத்தில் தாமதம் ஆனது. செல்லும் வழியில் ஒரு குருத்துவாராவில் இலங்காரில் பிரசாதம் உண்டோம். இரவு பீப்பல்கோட்டிற்கு சற்று முன்னர் உள்ள ஒரு தர்மசாலையில் தங்கினோம். மறுநாள் திருவதரி அடைந்து  பத்ரிநாதரை தரிசித்தோம். மாலையில் விஷ்ணு சகஸ்ரநாமம் சேவித்தோம். மானா கிராமம் சென்று வந்தோம். சயன ஆரத்தி சேவித்தோம். காலையில் திருமஞ்சனகோலம் சேவித்து வெளியே வந்த போது இந்திரநீல பருபதத்தின் அருமையான வர்ண ஜாலத்தை தரிசித்தோம்.  கருக்கலில் பனியில் மின்னிய சிகரம் அருணன் உதிக்க மெல்ல மெல்ல இளஞ்சிவப்பாக மாறி பின்னர் பொன் போல மின்னி இறுதியில் அன்னத்தூவிப்போல  தூயவெள்ளை நிறமாகிய   வர்ண ஜாலத்தை, இந்திர ஜாலத்தை அருமையாக தரிசித்தோம். பின்னர் வரும் வழியில் தேவப்பிரயாகையில் புருடோத்தமனை சேவித்தோம். மெல்ல மெல்ல இம்மாநிலம் வெள்ள சேதத்திலிருந்து மீண்டு வருவது தெரிகின்றது.

மறு வருடமும் (2016) இறைவன் அருள்பாலித்தார் இவ்வருடம் பெங்களூர் அன்பர் சதோபந்த் யாத்திரை செல்ல விழைந்தார், ஒரு சிலர் மறுமுறை கேதாரீஸ்வரரை தரிசிக்கலாம் என்று கூறினர். ஆகவே அவரவர் விருப்பபடி செல்ல முடிவானது. இவ்வருடம் மொத்தம் ஒரு வாரம் யாத்திரை என்பதால் திருக்கேதாரம் சென்றவர்கள் திரியுக நாராயணன், குப்தகாசி, காளிமத், ஊக்கிமத், கோபேஸ்வர்,  பஞ்ச பத்ரிகளில் ஒன்றான தியானபத்ரி, பஞ்சகேதாரங்களில் ஒன்றான கல்பேஸ்வரம், ஆகிய முன்னர் தரிசிக்காத தலங்களை  தரிசிக்க முடிந்தது. இத்தலங்களின்  சிறப்பை இனி வரும் பதிவுகளில் காணலாம் அன்பர்களே. 


வழக்கம் போல் டெல்லிக்கு விமானத்தில் கிளம்பினோம்
டெல்லியில் சப்தர்ஜங் என்க்லேவ் கிருஷ்ண மந்திரத்தில்  உடுப்பி ஸ்ரீகிருஷ்ணரையும்   ஹனுமனையும், இராகவேந்திரையும் தரிசித்தோம் 


உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் ஹனுமன் 

இராகவேந்திரர் பிருந்தாவனம் யாத்திரை குழுவினர் 

டெல்லியிலிருந்து ஜன்சதாப்தி  தொடர்வண்டி மூலம் ஹரித்வாருக்குச் சென்றோம். 


ஹரித்வாருக்கு   தொடர்வண்டிப்பயணம் 


ஹரித்வாரத்தில்  மத்வாசிரமத்தில் தங்கினோம், 
கங்கையில் நீராடினோம். 

டெல்லியிலிருந்து வாகனம் அமர்த்திக்கொண்டு சென்றால் ரிஷிகேசத்தில் போக்குவரத்து அலுவலகத்தில் தாமதம் ஆகிவிடுகின்றது என்பதால் இவ்வருடம் ஹரித்துவாரத்தில் இருந்து வாகனம் அமர்த்திக் கொண்டோம். அதிகாலையில் ஹரித்வார் மத்வாவச்ரமத்திலிருந்து புறப்பட்டு வழியில் உள்ள பிரயாகைகளை பார்த்துக்கொண்டு சுமார் ஒரு மணி அளவில் ருத்ரப்பிரயாகையை அடைந்தோம். ஒரு வாகனம் நேரே பத்ரிநாத் செல்ல இன்னொரு வாகனம் திருக்கேதாரத்திற்காக திரும்பியது. 

வழியில் மழை பொழிந்தது பாகீரதியும் அலக்நந்தாவும் ச‘ங்கமமாகி கங்கையாக மாறும் புனித இடம் தேவப்பிரயாகை என்று அழைக்கப்படும் கண்டம் என்னும் கடிநகர்  திவ்யதேசம் 


 ஓர் அருவி  குப்தகாசிக்கு அருகில் உள்ள ஃபடா கிராம ஹெலிகாப்டர் தளம்.
மாலை 4மணி அளவில் குப்தகாசியை அடைந்தது. அங்கு திருகேதாரத்திற்கான கட்டாய வருகைப் பதிவை முடித்துக்கொண்டு  ஃபடா என்ற இடத்திலிருந்து  மறுநாள் திருக்கேதாரம் செல்வதற்கு   ஹெலிகாப்டருக்காக  முன்பதிவு செய்தோம். ஒருவருக்கு ரூ 7000/-  வானிலை சரியாக இருந்தால் அதிகாலையிலேயே அனுப்பிவிடுகிறோம் என்று உறுதியளித்தனர். உடல் எடை  90கிலோவிற்கு அதிகமாக உள்ள அடியார்களுக்கு கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டது. சமயம் இருந்ததால் வெகு நாட்களாக செல்லவேண்டும் என்று நினைத்த திரியுக நாராயணர் ஆலயம் சென்றோம். 


யாத்திரை தொடரும் . . . . . . .

Friday, October 28, 2016

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அன்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

நரகாசுரனை  ஸ்ரீகிருஷ்ணரும், சத்யபாமாவும் சென்று வதம் செய்ததால் நரக சதுர்த்தசி நாள்  சூரிய உதயத்திற்கு முன் கங்கா ஸ்நானனம் செய்யும் நாள் , ஸ்ரீராமசந்திர மூர்த்தி இராவணனை வென்ற பின் அயோத்தி திரும்பிய அன்று  அயோத்தி மக்கள் தங்கள் இல்லத்தின் முன் தீபங்களை ஏற்றி வைத்து வரவேற்ற தீபாவளி   நாள், வருடப்பிறப்பு லக்ஷ்மி பூஜை  என்று  பலவிதமாக    பாரத   தேசமெங்கும்   தீபாவளி    சிறப்பாக  கொண்டாடப்படுகின்றது.

இறக்க முக்தித்தலமான காசியில் சொர்ண அன்னபூரணி லட்டுத்தேரில் அருள் பாலிக்கும் நாளும் தீபாவளிதான். 

 ஒரு சாரார்  அமாவாசையன்று சிவபெருமானுக்குரிய அஷ்டமஹா விரதங்களில் ஒன்றான கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்கின்றனர். இவ்வருடம் இன்று (29-10-2016) இரவு வரை சதுர்த்தசி உள்ளது ஆகவே கேதார கௌரி விரதம் நாளை அனுஷ்டிக்கலாம். 

கேதார கௌரி விரதத்தை பற்றி அறிந்து கொள்ள இங்கு செல்லுங்கள் 

கேதார கௌரி விரதம்

நர-நாராயண சிகரங்கள்
2013 இமாலய பெருவெள்ளத்திற்கு  பிறகு ஐயனை தரிசிக்க ஒரு வாய்ப்புக்கிட்டியது. முன்பிருந்த பொலிவெல்லாம்  இழந்து கோவில் மற்றும் நிற்கின்ற காட்சியைக் கண்டு கண்ணில் நீர் வடிந்தது. அலக்நந்தாவின் குறுக்கே இருந்த பாலம்,  திருக்கோயில் அருகில் இருந்த  மற்ற கட்டிடங்கள், ஆதி சங்கரர் ஆலயம், அவரது நினைவிடம், அன்பர்கள் உணவருந்திய கூடம். கடைகள், தங்கும் விடுதிகள், சுற்றுச்சுவர் ஈசானேசுவரர் சன்னதி அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுவிட்டன.


  
2012ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் கௌரிகுண்டம் பெருஞ்சேதமடைந்து. கோயில்,  கௌரிகுளம்  எதுவும் தற்போது இல்லையாம். இராம்பாரா, கருடகங்கா முதலிய இடங்களும் தற்போது இல்லை. எப்போது அவைகளை புதுப்பிப்பார்கள் என்று தெரியவில்லை. முதலில் சென்ற பாதையும் சேதமடைந்ததால்  தற்போது ஆற்றின் மறுகரையில் உள்ள பழைய 18 கி.மீ பாதையை பக்தர்கள் பயன்படுத்துகின்றனர்.தற்போது புதிதாக நதியின் குறுக்கே ஒரு  பாலம் கட்டியுள்ளனர். தற்காலிக தங்கும் விடுதிகள் கோவிலிருந்து தூரத்தில் அமைத்துள்ளனர். தற்போது ஆலயம் சுத்தம் செய்யப்பட்டு மின்னுகின்றது. புது வர்ணம் பூசியுள்ளனர். ஒரு பக்கக்கதவு மூடியே உள்ளது இன்னும் பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. முன் இருந்த நிலையை அடைய எத்தனை வருடங்கள் ஆகும் என்று தெரியவில்லை. சுற்றுலாவை பெரிதும் நம்பியுள்ள மாநிலம் என்பதால் பக்தர்கள் வருவதற்கு முதலில் எவை எவை அவசியமோ அவற்றை முதலில் முடிக்கின்றனர். வருடத்தில் ஆறு மாதங்கள் பனி மூடியிருக்கும் என்பதாலும், ஆலயம் திறந்திருக்கும் போது பக்தர்கள் கூட்டமும் அதிகமாக இருக்கும் என்பதாலும் வேலைகள் மெதுவாகவே நடைபெறுகின்றன.  


வெள்ளத்திற்கு முன் திருக்கேதாரம் இருந்த அழகைக் காண இங்கு செல்லுங்கள். 


திருக்கேதாரம் 2012_2

திருக்கேதாரம் 2012_3
திருக்கோயில் மட்டும் தப்பித்துக் கொள்ளும் வகையில் ஒரு செவ்வக வடிவப்பாறை எவ்வாறு வந்தது அது மட்டும் அங்கேயே எவ்வாறு நின்றது கோயில் மட்டும் எவ்வாறு தப்பியது என்பது அவ்விறைவனின் லீலை, மிகப்பெரிய அதிசயம் என்றே சொல்லவேண்டும். அப்பாறையை அப்படியே விட்டு வைத்துள்ளனர். அடையாளத்திற்காக காவி பூசி வைத்துள்ளனர்.   


வரும்காலத்தில் இது போன்ற எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறக்கூடாது என்று சிவபெருமானிடம் வேண்டிக்கொண்டு வந்தோம்.

இத்தீபாவளி நன்னாளில்  கௌரியன்னை உடனுறை கேதாரீஸ்வரர் அருள் அனைவருக்கு சித்திக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.  

Friday, October 21, 2016

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 24

நாலம்பலம்
பாயம்மல் சத்ருகனன் ஆலயம்நாலம்பலம் வரிசையில் நிறைவாக அமைந்த ஆலயம் பாயம்மல் சத்ருகனன் ஆலயம். இத்தலம் பரதனின் ஆலயம் அமைந்துள்ள இரிஞ்ஞாலக்குடாவிலிருந்து சுமார் 7 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. லக்ஷ்மணன், சத்ருகனன் இருவரும் இரட்டையர் தசரதரின் மூன்றாவது மனைவி சுமித்ரைக்கு பிறந்தவர்கள். இவர் பெருமாளின் சுதர்சன சக்கரத்தின் அம்சம்.  லக்ஷ்மணன் எவ்வாறு இராமருக்கு தொண்டு செய்தாரோ அது போல பரதனுக்கு தொண்டு செய்த தொண்டனுக்கு தொண்டன் சத்ருகனன். பரதன் நந்தி கிராமத்தில் ஸ்ரீராமர் வருகைக்காக காத்திருந்த போது இராச்சியத்தை பரிபாலனம் செய்தவர்  இவர் . சத்ருகனன் என்றால் சத்ருக்களை வெல்பவன் என்று பொருள். இராமர் பட்டாபிஷேகம் செய்து கொண்ட பின் லவணாசுரனை வென்றவர்இவருக்கான கோவில்தான்  பாயம்மலில் உள்ளது.சிறிய கோவில்தான். மற்ற கோவில்கள் போலில்லாமல்  ஸ்ரீகோவில் செவ்வக வடிவில் உள்ளது. அதற்கு தகுந்தாற்போல பிரமிட் வடிவ  விமானம். நின்ற கோலத்தில் சதுர்புஜ விஷ்ணுவாகவே இவரும் சேவை சாதிக்கின்றார். ஆனால் மூர்த்தி சிறியது ஆனால் கீர்த்தி பெரியது .மேற்திருக்கரங்களில் சக்கரம், சங்கம், கீழ்க்கரங்களில் பத்மம் கதை தாங்கி சேவை சாதிக்கின்றார்.
சத்ருக்னன் ஆலயத்தில், அவர் மட்டுமே இருக்கிறார். தெற்குப் பார்த்து கணபதி சந்நிதியும், முக மண்டபத்தில் அனுமன் சந்நிதியும் உள்ளதுமது என்ற அரக்கன் சிவனைக் குறித்து தவம் செய்து ஒரு சூலம் பெற்றான். உனக்கும், உன் மகன் லவணனுக்கும் எதிரிகளை ஒழிக்க இது உதவும் என்று கொடுத்தார். லவணனின் காலத்துக்குப் பிறகு சூலம் என்னிடம் வந்துவிடும் என்று சிவபெருமான் கூறிவிட்டு, மறைந்து விட்டார் மது நல்லவனாயிருந்தான். மகன் நேர் எதிர். துஷ்டனான லவணனை அழிக்க ராமர் சத்ருக்னனிடம் சொல்கிறார். அண்ணலின் ஆணை கேட்டு அதை நிறைவேற்றத் தயாராக, கோப வடிவத்தில் நிற்கிறார் சத்ருக்னர்சுதர்சன புஷ்பாஞ்சலி, சக்கர சமர்ப்பணம் இவை இரண்டும் இங்கே முக்கிய வழிபாடுகள்சித்திரை மாதம் மிருகசீரிட  தினம் பிரதிஷ்டை தினம். வாய்ப்புக் கிட்டுபவர்கள் நான்கு தலங்களையும் சென்று சேவிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்
மலைநாட்டு தலங்களைச் சேவித்தபின்  நாங்குநேரி வந்து வானமாமலைப்பெருமாளை சேவித்தோம்ப,  திருமலை சுவாமிகளின் ஆச்சாரியர் வானமாமலை ஜீயரின் ஆசி பெற்றோம். பின்னர் மதுரையடைந்து கூடலழகரை சேவித்தோம். யாத்திரையின் நிறைவாக திருமோகூரை சேவித்து சென்னை திரும்பினோம். விரிவுக்கஞ்சி இப்பதிவுடன் மலைநாட்டு திவ்விய தேச யாத்திரை தொடரை நிறைவு செய்கின்றேன். இதுவரை வந்து சேவித்த அனைவருக்கும் பரந்தாமன் அருள் கிட்ட அவரிடம் வேண்டுகின்றேன். விரைவில் இன்னொரு இனிய யாத்திரை விவரங்களுடன் தங்களை சந்திக்கின்றேன் அது வரை நன்றி வணக்கம். 

 மற்ற தலங்களை இங்கே சேவியுங்கள்  : 

  குருவாயூர்           கொடுங்கல்லூர்           திருஅஞ்சைக்களம்         குலசேகரபுரம்  

 சோட்டாணிக்கரை        வர்க்கலா            நெய்யாற்றங்கரை             திருப்பிரயார்        

 இரிஞ்ஞாலக்குடா        

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை இனிதாக நிறைவுற்றது