Tuesday, November 28, 2017

சுவாமியே சரணம் ஐயப்பா 6

அச்சன் கோவில் அரசன் இப்பதிவுகளையும்  காணலாமே         4   5    7   8   9   10  11   12   13   14   15   16   17   18   19   20   21பூர்ணா புஷ்கலா சமேத தர்ம சாஸ்தா

அச்சன்கோவில் அரசே என் அச்சம் தீர்க்க வா
பச்சை மயில் ஏறும் பன்னிருகையன் சோதரா
இச்சை கொண்டேன் உன்னிடத்தில் ஈஸ்வரன் மைந்தா
பச்சை வண்ணன் பரந்தாமன் மகிழும் பிரபோ ....

என்ற பாடலை அனைவரும் கேட்டிருப்பீர்கள் வாருங்கள் இப்பதிவில் அந்த அச்சன் கோவில் அரசனை தரிசிக்கலாம். 


கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் பத்தனாபுரம் வட்டத்தில் அடர்ந்த காடுகளுக்கிடையில் பள்ளிவாசல்  ஆற்றங்கரையோரத்தில்   அமைந்துள்ள  அச்சன்கோவில் தர்மசாஸ்தா ஆலயம்  பரசுராமரால்   தோற்றுவிக்கப்பட்ட  ஐந்து  கோயில்களில் ஒன்றாகும். இத்தலம் ஐயனின் ஆதாரத் தலங்களில் சுவாதிஷ்டானத் தலம் ஆகும்.  இங்குள்ள சாஸ்தாவின் சிலை மிகப்பழமை வாய்ந்தது. இங்கே ஐயப்பன்  வனராஜனாக, அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்தி காட்சி அளிக்கிறார். இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை எனும் இரு தேவியர் மலர் தூவுவது போன்று காட்சி தருகின்றனர். இத்தலத்தில் சாஸ்தா மணிகண்ட முத்தையன் என்றும் அழைக்கப்படுகின்றார்.  இரு மனைவியருடன் இல்லறத்தானாக அருள் பாலிப்பதால் இவர் கல்யாண சாஸ்தா என்றும்  அழைக்கப்படுகின்றார். இவரை வழிபட்டால் திருமணத் தடைகள் அகலும். இல்லறம் நல்லறமாகும். சந்ததிகளும், சவுபாக்கியங்களும் என சகலமும் நம்மை வந்தடையும். 

இத்துதலம் "விஷம் தீண்டாப்பதி" என்ற சிறப்பு கொண்டது. பாம்பு கடிபட்டு வருபவர்களுக்கு,  நடு இரவானாலும், கோவில் நடை திறந்து சந்தனமும், தீர்த்தமும் வழங்கும் வழக்கம் இந்த ஆலயத்தில் உள்ளதாம். தீர்த்தம் தெளித்தவுடன் விஷம் நீங்கும் அதிசயம் நடைபெறும் தலம், 

அச்சன் கோவிலில் தனது தேவியருடன் வீற்றிருக்கும் ஐயப்பன் சங்கரன் கோவில் சங்கர நாராயணரைப் பார்த்த வண்ணம் உள்ளார். சபரிமலையில் பால்ய பருவத்தில் காட்சி தரும் ஐயப்பன், குளத்துப்புழாவில் குழந்தை பருவத்திலும், ஆரியங்காவில் இளைமைப் பருவத்திலும், அச்சன்கோவிலில் முதிர்ச்சிப் பருவத்திலும் காட்சி தருகிறார்.  

                                   

அலங்கார நுழைவு வாயில் 


செங்கோட்டையிலிருந்து  30 கி.மீ தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.  பொதுவாக மகரஜோதியன்று காலை இத்தலத்தில் இருக்குமாறு குருசாமி அவர்கள் எங்கள் யாத்திரையை  அமைப்பார்.  எருமேலியிலிருந்து பெரிய பாதை வழியாக சபரிமலை சென்று ஐயனை தரிசித்து நெய்யபிஷேகம் செய்து பின் கீழிறங்கி இரு நாட்கள் கேரள மற்றும் தமிழக ஆலயங்களை தரிக்க அழைத்துச்செல்வார், சொரிமுத்து ஐயனார் ஆலயத்திற்கு அழைத்துச் செல்வார் ஜோதிக்கு  முதல் நாள் வழியில் உள்ள கருப்பண்ணசாமி ஆலயத்தை  தரிசித்து விட்டு  நள்ளிரவு அச்சன் கோவிலை அடைவோம்.  பக்தர்கள் தங்குவதற்கு ஏதுவாக  மண்டபம் அமைத்துள்ளனர் அதில் உறங்குவோம். அதிகாலை எழுந்து ஐயனின் ஆலயத்தை அங்குலம் அங்குலமாக தரிசிப்போம். அனைத்து பூஜைகளையும் தரிசிக்கும் பாக்கியம் கிட்டும்.  எதிரே உள்ள கருப்பசாமி  சன்னதிக்கு சென்று காப்புக் கயிறு கட்டிக்கொள்வோம்.  பிறகு காட்டுப்பாதையில் கோணி பட்டணந்திட்டா வழியாக குமுளி செல்லும் பாதையில் உள்ள பீர்மேடு என்ற கிராமத்தில் உள்ள பருந்துப்பாறை என்ற மலை உச்சியில் இருந்து ஜோதி தரிசனம் செய்வோம். இப்பாதையில் செல்லும்  போது ஓர் கிராமத்தில் இறங்கி ஆற்றில் ஆனந்தமாக நீராடுவோம். யானைகளின் நடமாட்டமுள்ள பகுதிதான் ஆனால் இதுவரை யானைகளைக் கண்டதில்லை. ஆனால் காட்டுக்கோழிகள், வாலாட்டி குருவிகள், குரங்குகளை கண்டிருக்கிறோம். 

ஆலய முகப்பு  - பதினெட்டாம் படிகள்

அலங்கார வளைவிற்குள் நுழைந்து ஆலயத்தின் முகப்பை அடைந்தால் சபரிமலை போலவே பதினெட்டுப் படிகள் பதினெட்டுப் படிகளின் இரு பக்கமும்  பெரிய கடுத்தசாமி மற்றும் சிறிய கடுத்தசாமி சன்னதிகள் மூன்று கல் விளக்குகள். பதினெட்டாம் படி ஏறி சென்றால்  பிரம்மாண்ட பித்தளை நிலவிளக்கு அதையடுத்து தங்கக்கொடிமரம் நெடிதுயர்ந்து நிற்கின்றது.  நிலவிளக்கின் பீடம்,  கூர்ம பீடமாக  எழிலாக அமைந்துள்ளது எட்டு திசைகளிலும் நாகங்களும் அருமையாக அமைந்துள்ளது.  கொடி மரத்தின் தாமரை பீடத்தின் மேல் அஷ்டதிக்பாலகர்கள் எழிலாக அருள் பாலிக்கின்றனர். 

நிலவிளக்கின் கூர்ம பீடம் 


கொடி மரத்தின்  அஷ்டதிக் பாலகர்கள் 


முகப்பு மண்டபம் 


இவ்வாலயம் கேரள ஆலயம் போல் இல்லாமல் திராவிட பாணியில் அமைந்துள்ளது. ஜன்னல்களுடன் கற்றளியாக அமைந்துள்ளது. முன் மண்டபம்  தூண்களுடன் அமைந்துள்ளது. தூண்களை  யாணைகள் தாங்குகின்றன. தூண்களில் அருமையான கற்சிற்பங்கள் அமைந்துள்ளன.  கருவறை பிரமிட் வடிவத்தில் இல்லாமல் நம் ஆலயங்களின் விமானம் போல் சுதை சிற்பங்களுடன் அமைந்திருப்பது ஒரு தனித்தன்மையாக உள்ளது. 

வெளிப்பிரகாரத்தில் கன்னி மூல கணபதி,  சங்கு சக்கரங்களுடன் சதுர்புஜராக ஸ்ரீகிருஷ்ணர் சன்னதி, சிவன் மற்றும் மாம்பழத்தறா பகவதி சன்னதிகள் அமைந்துள்ளன. இத்தலத்தில் உள்ள அம்மன் சன்னிதியில் வளையல் மற்றும் பட்டுத் துணிகளுடன் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம். மேலும் அச்சன் கோவில் ஐயப்பனை வழிபட்டால் நம்மையும் அரசனைப் போல வாழவைப்பான்.

                                 
                                                       தூண்களைத் தாங்கும் யானைகள் 

                                            
தூணில் உள்ள தர்மசாஸ்தா சிற்பம் 

விமானம் 

 உட்பிரகாரத்தில்  நமஸ்கார மண்டபத்தில் குதிரை வாகனம் அமைத்துள்ளனர்.. கர்ப்பகிரகத்தின் சுவரில் சாஸ்தாவின் சிற்பங்களை தரிசிக்கலாம்.  கர்ப்பகிரகம் உயரமாக அமைந்துள்ளது. கர்ப்பகிரகத்துடன் அர்த்த மண்டபம் உள்ளது. நீராஞ்சனம் என்னும் தேங்காயில் விளக்கு ஏற்றும் பிரார்த்தனை விளக்குகள் இம்மண்டபத்தில் தான் ஏற்றப்படுகின்றன. நீராஞ்சன கட்டணம் வெறும்  இரண்டு ரூபாய்தான், அலுவலகத்தில் சீட்டு வாங்கிக் கொண்டு தேங்காயும் வாங்கிக்கொடுத்தால் தந்திரி விளக்கேற்றுகிறார். பலர் இத்தலத்தில் இவ்வழிபாட்டை செய்வதைக் கண்டேன்.   

கருவறையில் எழிலாக தேவியருடன் வலதிருக்கரத்தில் அமுத கலசம் தாங்கி ஒரு காலை  மடக்கி ஒரு காலை குத்துக்காலிட்டு எழிலாக அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக்கின்றார் ஐயன். ஹரியும் அழகு, ஹரனும் அழகு, இரு அழகுக்கும் பிறந்த ஹரிஹரசுதன் அழகனாக இருப்பதில் என்ன ஆச்சரியம்.  தேவியர் இருவரும்  மலர் தூவும் கோலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர்.  பொதுவாக மகரஜோதியன்று தரிசனம் செய்வதால் சிறப்பு அலங்காரத்தில் தரிசிக்கும் பாக்கியம் அடியோங்களுக்கு கிட்டியது. உடன் சீவேலி மூர்த்தியையும் தரிசிக்கின்றோம். 


நாக யக்ஷி சன்னதியிலிருந்து விமானத்தின் எழில் தோற்றம் 

கன்னிமூல கணபதி சன்னதிஆலயத்தின் பின்புற வாசல் 

ஆலயத்தின் பின் புற வாசல் வழியாக வெளியே சென்றால் யக்ஷிக் காவையும், சர்ப்பக்காவையும் தரிசிக்கலாம்.  ஆலயத்தை விட உயரத்தில் இவ்விரண்டு காவுகளும் அமைந்துள்ளன.. இந்த யக்ஷி சாஸ்தாவின் சன்னதியில் விளையாடி வரும் இராஜமாதங்கியாவாள்,  இவ்வமைக்கு வெறிக்கலி என்றொரு பெயரும் உண்டு.  ஒரு சமயம்  இவள் உக்ரரூபிணியாக மக்களை துன்பப்படுத்திய சமயம் ஐயப்பன் ஸ்வர்ண சங்கிலியால் பந்தனப்படுத்தி அவளது தெய்வாம்சத்தை நினைவு படுத்தி, தன் பரிவாரங்களில் ஒருவராகச் சேர்த்துக்கொண்டார். இவளுக்கு மஞ்சளும் குங்குமமும் தூவி இங்குள்ளவர் சிறப்பாக வழிபடுகின்றனர். சர்ப்பக்காவில்  அரச மரத்தினடியில் எண்ணற்ற நாகர்கள் பிரதிஷ்டை  செய்யப்பட்டுள்ளனர். நாகர்களுக்கும் மஞ்சள் பூசி வழிபடுகின்றனர். 

கொச்சு சாமி 


சர்ப்பக்காவு
ஒருமுறை அச்சன்கோவில் அழகனை காண்பதற்காக தள்ளாத வயதுடைய பக்தர் ஒருவர் தனித்து வந்து கொண்டிருந்தார். அடர்ந்த காடு, நேரமோ இரவாகி விட்டது. வழியும் சரியாக தெரியவில்லை. மனதில் அச்சம் புகுந்தது. அச்சன்கோவில் அரசனுக்கு, அந்த வயதானவரின் அச்சம் புலப்பட்டு விட்டது. இதற்கிடையே அந்த வயதானவரும் ஐயப்பனை நினைத்து பயத்தைப் போக்க வேண்டிக் கொண்டார். அப்போது ஒரு அசரீரி கேட்டது. ‘அன்பனே! இப்போது இவ்விடத்தில் வாள் ஒன்று தோன்றும். அந்த வாள் உனக்கு வழிகாட்டும். அச்சன்கோவில் அடைந்ததும் அந்த வாளை எனது சன்னிதியில் கொடுத்து விடு. அதுவரை யாரிடமும் எதுவும் பேசக்கூடாது’ என்றது அந்த அசரீரி. அதன்படியே அங்கு தோன்றிய வாள் பவுர்ணமியை காட்டிலும் அதிக ஒளி காட்டியது. அந்த ஒளியின் மூலமாக காட்டுப்பாதையில் அந்த நள்ளிரவில் நடந்து வந்து கோவிலை அடைந்தார் முதியவர். மறுநாள் விடிந்ததும், அந்த வாளை கோவிலில் ஒப்படைத்து   விட்டு நடந்தவற்றை விளக்கி கூறினார். அப்போது கருவறையில் இருந்து அசரீரி ஒலித்தது. ‘அன்பர்களே! அந்த வாளை எனது கருவறையில் வைத்து பூஜை செய்யுங்கள். என்றும் உங்களுக்கு அரணாக இருந்து காப்பேன்’ என்றது. அதன்படி அந்த வாள் மூலவர் சன்னிதியில் வைக்கப்பட்டது. தற்போது அச்சன் கோவில் அழகனின் திருவாபரணங்கள் வைக்கப்பட்டுள்ள புனலூர் கருவூலத்தில் அந்த வாள் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாள் கருப்பனின் வாள் என்பது ஐதீகம், அச்சன்கோவிலில் ஆண்டுதோறும் பத்து நாட்கள்  ‘மண்டல மகோத்சவம்’ வெகு சிறப்பாக  நடைபெறுகின்றது. இவ்விழா மார்கழி மாதம் முதல் நாளன்று துவங்குகின்றது.  இவ்விழா தொடங்குவதற்கு முந்தைய நாளன்று திருவாபரணப் பெட்டி ஊர்வலம் நடைபெறுகின்றது.. புனலூர் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள ஐயப்பனின் திருவாபரணங்கள்   அப்போது எடுத்து வரப்படும். பெட்டிக்குள் நவரத்தின ஆபரணங்கள், தங்க ஆபரணங்கள், வாள் முதலியன உள்ளன.

இந்த ஊர்வலம் புனலூர் கிருஷ்ணன் கோவிலில் இருந்து தொடங்கி,  தென்மலை, ஆரியங்காவு வழியாக திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வழியாக தென்காசி காசிவிசுவநாதர் கோவிலுக்கு வந்து சேரும். அங்கு திருவாபரண பெட்டிக்கு சிறப்பு பூஜை நடைபெறுகின்றது.  அங்கிருந்து ஊர்வலம் பண்பொழி முருகன் கோவில் சென்று, மேக்கரை வழியாக மலைப்பாதையில் முன்னேறி அச்சன்கோவில் சென்றடையும். ஐயப்பனுக்கும், பூரணை, புஷ்கலை தேவியர்களுக்கும் திருவாபரணங்கள் பூட்டிய பின்னரே மகோத்சவம் தொடங்குகின்றது.

.மூன்றாம் திருநாள்  உற்சவத்தில், சிறிய தேரில் வர்ண ஆடை ஆபரணங்கள் அணிந்து, வாள்  கையிலேந்தி தர்மசாஸ்தா வலம் வந்தருளுகின்றார். இதை மணிகண்டமுத்தய்ய சுவாமியின் எழுந்தருளல் என்பர். ஒன்பதாம் உற்சவத்தின் போது, சக்கரங்கள் கொண்ட பெரிய ரதத்தில் எழுந்தருளுவார். தை மாதத்தில் ரேவதியன்று  சிறப்பு புஷ்பாபிஷேகம் நடைபெறுகின்றது. 

                                                     கருப்பசாமி ஆலயத்தின் அருகில் குழுவினர் இத்தலத்தின்  காவல் தெய்வம் கருப்பசாமி ஆவார். ஆலயத்திற்கு எதிரே தனி சன்னதியில் கருப்பாயி அம்மையுடன் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். இவரை முதலில் வணங்கி விட்டு 

பின்னர் தர்ம சாஸ்தாவை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். ‘கருப்பந்துள்ளல்’ என்னும் விழா இங்கு பிரபலம். ஏவல், பில்லி, சூனியம் மற்றும் மாந்திரீகம் போன்றவற்றாலோ, தீராத கொடு நோயாலோ அவதிப்படுபவர்கள், இந்த விழாவில் பங்கேற்றால் அனைத்து துயரங்களும் நீங்கப்பெறுவார்கள். இந்த விழாவின் போது பலரும் கருப்ப சுவாமி போல் வேடம் அணிந்து  கலந்து கொள்கின்றனர். .


  
                                                                            குருசாமியுடன் குழுவினர்    


கருப்பண்ணசாமிக்கு இத்தலத்தில் இவ்வளவு சிறப்பு ஏன் என்று நினைக்கின்றீர்களா.?  அச்சன்கோவில்  அனைத்தும்  கருப்பனின் கோட்டை என்பது ஐதீகம். இதை உணர்த்தும் வகையில் ஒரு விளையாடல் இத்தலத்தில் நடைபெற்றது. ஒரு வருடம் திருவிழாவின் போது திருவாபரணப்பெட்டி ஆலயத்தில் இருந்தது. சில திருடர்கள் இரவோடிரவாக திருவாபரணப் பெட்டியை திருடிக்கொண்து சென்று விட்டனர். மறு நாள் காலை மேல் சாந்தி  வந்து பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்து விட்டார். செய்தி கேட்டு கூட்டம் கூடிவிட்டது. கூட்டத்தில் ஒருவர்  வேடிக்கையாக அச்சன் கோவில் காடு அனைத்தும் கருப்பனின் காவல் என்பார்களே எவ்வாறு இப்படி நடந்திருக்கமுடியும் என்று ஏளனமாக கூறினார். அப்போது கூட்டத்தினரில் ஒருவர் மேல் கருப்பசாமி எழுந்தருளி, என் ஆதிக்கத்தில் திருட்டு நடைபெறாது என்று முழக்கமிட்டார். காட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தைக்கூறி  அங்கு சென்று பார்க்குமாறு உத்தரவிட்டார். . அங்கு சென்று பார்த்தபோது  இரவு திருவாபரணப் பெட்டியைத் திருடிய கள்வர்கள் பெட்டியை ஒரு மரத்தடியில் வைத்து விட்டு என்ன் செய்கின்றோம் என்று அறியாமல்  மரத்தை சுற்றி வந்து கொண்டிருந்தனர். ஐயனின் ஆபரணங்கள் பத்திரமாக மீட்கப்பட்டன. திருடர்களும் மனம் திருந்தி ஐயனுக்கு கைங்கர்யம் செய்து வரலாயினர்.

அச்சங்கோவிலில் இருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது கோட்டை கருப்பணசாமி கோயில். இந்தக் கருப்பணசாமி, சிவனின் அம்சத்திலிருந்து வந்தவர். ஐயப்பனின் படைத் தளபதிகளில் முக்கியமானவர். இந்தச் சந்நிதிக்கு வந்து  கருப்பணசாமியிடம் நாம் எந்த வேண்டுதல் வைத்தாலும், அதை ஐயப்பனின் முன் வைத்ததற்குச் சமம்!

தை ரேவதியன்று புஷ்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறுகின்றது.  டன் கணக்கில் லாரிகளில் மலர்கள் வருகின்றன. கருவறை முழுவதும் பூக்களால் நிறைந்து விடுமாம். 

இவ்வளவு சிறப்புப் பெற்ற அச்சன் கோவில் அரசனை சமயம் கிட்டும் போது சென்று தரிசித்து விட்டு வாருங்கள். 

குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா


ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .

Saturday, November 25, 2017

சுவாமியே சரணம் ஐயப்பா -5

சொரி முத்து ஐயனார்


இப்பதிவுகளையும்  காணலாமே         4   6   7   8   9   10  11   12   13   14   15   16   17   18   19   20   21அலங்கார வளைவு 

ஐயப்ப வழிபாடு என்பது யோக மார்க்கம்  என்று குருசாமி அவர்கள் கூறுவார்கள். தலையில் இருமுடி தாங்கி சரணகோஷத்துடன் பெருவழிப்பாதையில் செல்லுவதே சிறந்த யோகாப்பியாசம். தாங்கள் அறியாமலே ஆஞ்நா சக்கரத்தில் விழிப்பு ஏற்படுகின்றது என்பார்.  யோகத்தில் கூறப்பட்டுள்ள நியம யமங்களே விரத முறைகள் இவ்விரதத்தால் உடல் பக்குவப்படுகின்றது, ஐயனையே எப்போதும்  நினைப்பதால் மனதும் பக்குவப்படுகின்றது.  இவ்வாறு விரதம் மற்றும் சபரிமலை  யாத்திரையினால் தத்வம்ஸி  அதாவது இந்த ஜீவாத்மாவும் , பரமாத்மாவான ஐயப்பனும் ஒன்றே என்ற உண்மையை நாம் உணரலாம் என்பார் குருசாமி.   

ஐயன் அமர்ந்துள்ளதும் யோகாசானத்தில்தான், யோக பட்டமும் அணிந்துள்ளார்.  வலத்திருக்கரத்தில் உள்ளதும் யோக முத்திரையான சின்முத்திரைதான். இவ்வாறு யோகா நிலையில் அமர்ந்து நாம் எல்லோரும் தவம் செய்து கொண்டிருக்கிறார் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்பன். எனவேதான் இன்றும் பல பக்தர்களுக்கு பல்வேறு ரூபங்களில் வந்து அவர்களின்


நமது உடலில் ஆறு சக்கரங்கள் உள்ளன அவற்றை உணர்த்தும் வகையில் முருகனுக்கு ஆறு படை வீடுகள் அமைந்துள்ளன என்று அனைவருக்கும் தெரியும். அது போலவே  முருகனின் சோதரர்களான கணபதிக்கும், ஐயப்பனுக்கும் ஆறு ஆதாரத்தலங்கள் (படை வீடுகள்) உள்ளன என்று பலருக்கு தெரியாது.

 ஐயனின் ஆறு ஆதாரத்தலங்கள்:

சொரி முத்து ஐயனார் : மூலாதாரம்

அச்சன் கோவில் :  சுவாதிஷ்டானம்.

ஆரியங்காவு :  மணிபூரகம்.

குளத்துப்புழை : அநாகதம்.

எருமேலி : விசுத்தி

சபரிமலை : ஆக்ஞை

இத்தலங்களில்  முதலாவதாக மூலாதார  ஸ்தலமாக விளங்குபது  பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவில். இங்கு தர்மசாஸ்தா, பூர்ணா, புஷ்கலா தேவியருடன் அருள்பாலிக்கிறார்.


பந்தள மன்னர் அரண்மனையில் வளர்ந்து வந்த சாஸ்தாவின் அம்சமான ஐயப்பன், தன் இளவயதில், இப்பகுதியில், வீர விளையாட்டுகளை கற்க வந்தார். அதன் காரணமாக, இங்கு முதன் முதலில், சாஸ்தாவிற்கு கோவில் எழுந்ததாகவும், பின், அவரது வரலாற்று நிகழ்வுகள் நடந்த குளத்துப்புழை, ஆரியங்காவு மற்றும் அச்சன்கோவில் ஆகிய இடங்களில் கோவில்கள் எழுப்பப்பட்டதாகவும், இறுதியாக அவர் தவம் மேற்கொண்ட சபரிமலையில் கோவில் தோன்றியதாகவும் ஒரு  தகவல் உண்டு.தாமிரபரணியில் குளியல் திருக்கயிலாயத்தில் சிவ பார்வதியின் திருமணம் நடந்தபோது, தேவர்கள் முனிவர்கள் அனைவரும் கயிலையில் கூடியதால் வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தது.  உயர்ந்துவிட்ட தென்பகுதியை சமன்படுத்த ஈசனின் ஆணைப்படி பொதிகை மலைக்கு வந்தார் அகத்திய மாமுனிவர். பல தலங்களுக்குச் சென்ற அவர், ஆடி அமாவாசை அன்று பொதிகை மலைக்குத் திரும்பி விடுவார். அதேபோல ஓர் ஆடி அமாவாசையில் தாமிரபரணியின் முகத்துவாரத்தை அடைந்து நீராடினார். அங்கு ஈசன் அவருக்குத் தன் திருமணக் காட்சியை காட்டியருளினார். அந்தப் பகுதி தற்போது கல்யாணி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

ஒரு பாறை மீதமர்ந்து யோக நித்திரையில் ஆழ்ந்தார் அகத்தியர். அவர் அகத்திற்குள் ஒரு ஜோதி பரவிற்று. அந்த ஒளியினூடே பிரம்ம ராட்சசி, பேச்சி, சாஸ்தா முதலிய எல்லா தெய்வங்களும் மகாலிங்கம் எனும் பெயர் தாங்கிய பரமனை பூஜிப்பதைக் கண்டார். சட்டென்று தன் அக ஒளிக்குள் கண்ட அந்த திவ்ய காட்சி புற உலகிலும் நடைபெறுவதைப் பார்த்து தன்னை மறந்து நெக்குருகிப் போனார். தீர்த்தத்தின் விசேஷமும், தலத்தின் சாந்நித்தியமும் இத்தனை மகாசக்தி வாய்ந்ததாக உள்ளதே என்று ஆச்சரியப்பட்டார். 

உடனே அகத்தியர் இந்த தீர்த்த கட்டத்தில் யார் நீராடி, இங்குள்ள மூர்த்திகளை வழிபாடு செய்கிறார்களோ, அவர்களுக்கு எல்லா இன்னல்களும் நெருப்பு பட்ட பஞ்சு போல சாம்பலாக வேண்டும். புத்திர பாக்கியத்துடன் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைத்து அவர்கள் நல்வாழ்வு பெற வேண்டுமென்று ஈசனை வணங்கி நின்றார். ஈசனும் இசைந்து அந்த வரத்தை அருளினார். தேவர்கள் அனைவரும் இத்திருக் காட்சியை கண்டனர். மெய்சிலிர்த்தனர். மலர்களை மழையாகப் பொழிந்தனர். இவ்வாறு பூக்களை தேவர்கள் சொரிந்ததால் அத்தலத்தில் உறைந்து ஈசனையும் பூஜித்து வரும் அய்யனாரையும் (மலர்ச்)சொரி முத்து அய்யனார் என்று பிற்காலத்தில் அழைத்தனர். அவரின் அருள் விலை மதிக்க முடியாத முத்தாக இருப்பதால் சொரி என்பதோடு முத்தையும் சேர்த்து ஏற்றம் கொடுத்து வணங்கினர். அகத்தியரால் வணங்கப்பட்ட புகழ்பெற்ற இந்த ஆலயம், புராண காலத்திற்குப் பிறகு மெல்ல பூமிக்குள் மறைந்தது. 
அரிய வகை கள்ளிச்செடிகள்


மக்கள் பண்டமாற்று முறை மூலம் பொருட்களை வாங்கி, கொடுத்து வாழ்க்கை நடத்திய காலம். பாண்டிய நாட்டிலிருந்து மாட்டு வண்டியில் சுமை ஏற்றி வந்து பொதிகை மலை உச்சியில் சேரநாட்டவர்களுடன் பண்ட மாற்றம் செய்து வந்தனர். திருடர்கள் பயம் மிக அதிகமாக இருந்தது. எனவே மாட்டு வண்டிகள் கூட்டம் கூட்டமாகத்தான் வரும். அப்படி வந்த வண்டிகளில் முதல் வண்டி சொரிமுத்து அய்யனார் இருப்பிடம் வந்தபோது அந்த அற்புதம் நடந்தது. வண்டியின் சக்கரம் ஒரு கல் மீது மோதியது. கல்லிலிருந்து ரத்தம் வடிந்தது. வண்டியோட்டி அதிர்ச்சியில் அலறினார். அனைவரும் ஓடி வந்து பார்த்தனர். செய்வதறியாது திகைத்தனர். வானத்தில் மின்னல் வெட்டியது. கூடவே அசரீரி ஒலித்தது. ‘‘இந்த இடம் அகத்திய மாமுனிவர் ஞானதிருஷ்டி மூலம் மகாலிங்க சுவாமி, சொரிமுத்து அய்யனார் புடை சூழ  இருந்ததை தரிசித்த இடம். ஆகவே இங்கு ஆகம விதிப்படி பூஜைகள் நடத்த வேண்டும். வருங்காலத்தில் இவ்விடம் மிகச் சிறப்பான புண்ணிய தலமாக விளங்கும்’’ என்று ஓங்கி ஒலித்தது. 

களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய வனப்பகுதிக்குள் பொதிகை மலையில் மரங்கள் சூழ, தென்றல் தாலாட்டு பாட தாமிரபரணி சதங்கைகள் ஒலிப்பது போல சலசலத்து ஓட, ஒருமித்து மிளிரும் அந்த மொத்த அழகின் மையத்தே சொரிமுத்து அய்யனார் ஆலயம் அழகுற அமைந்துள்ளது. அகத்தியர் அனுபவித்த அதே உணர்வை நாமும் அடைய முடிகிறது. காட்டு பகுதியான இவ்விடத்தில் கொடிய விலங்குகள் இருந்தும், அவை எதுவும் பக்தர்களைச் சிறிதும் துன்புறுத்தியதாக தகவலே இல்லை.


பூர்ணா புஷ்கலா சமேத சொரி முத்து ஐயனார்


இக்கோயிலில் மகாலிங்கம், சொரி முத்து அய்யனார், பூதத்தார், பிரம்ம ராட்சசி, தளவாய் மாடசாமி, தூசி மாடசாமி, பட்டவராயர் ஆகியோருக்குத் தனித்தனியே சந்நதிகள் உள்ளன. நாககன்னியரும், கிருஷ்ணரும் கூட்டு சாஸ்தா என்ற பெயரில் இங்கு உள்ளனர். இது வேறு எங்கும் இல்லாத சிறப்பு அம்சமாகும். பேச்சியம்மன் துஷ்ட அவதானி கோலத்திலும் காட்சி தருகிறார். 

இந்த கோயிலில் காத்தவராயர், மேலவாசல் பூதம், மேலவாசல் வினாயகர், தட்சிணாமூர்த்தி, கும்ப மாமுனி, பெரியசாமி, பாதாள பூதம், கரடிமாடன், பிரம்ம ராட்சசி, பேச்சி, சுடலைமாடன், கருப்பன், கருப்பி, தளவாய் மாடன், தூண்டில் மாடன் மற்றும் பட்டவராயர் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர். இந்த கோயிலில் குழந்தை வரம் தரும் தெய்வமாக பிரம்ம ராட்சசி அம்மன் திகழ்கிறார். இவள் மகிஷாசுரமர்த்தினியின் அம்சமாகும். இவளுக்கு பூஜை முதலான நியமங்களைச் செய்பவர்கள் வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் பொதுமக்களுக்கு அருள் வாக்கு வழங்குகின்றனர்

. இந்த கோயிலில் வீற்றிருக்கும் தெய்வமான முத்துப்பட்டனை பக்தர்கள் ட்டவராயர் என அழைக்கிறார்கள். பக்தர்கள் இவருக்கு காலணிகளை காணிக்கையாக அளிக்கின்றனர். அந்த செருப்புகள் கோயில் சுவரில் தொங்கவிடப்பட்டுள்ளன. அதை யாரும் தொடுவதில்லை. ஆனால் இந்த செருப்புகள் தேய்வதும், அவற்றில் சகதி, மண், புல், மிருகங்களின் கழிவு என்று ஒட்டிக்கொண்டிருப்பது காண வியப்பாக இருக்கும்அந்த செருப்புகளை பட்டவராயர் அணிந்துகொண்டு வேட்டைக்கு சென்று வருவதாக ஒரு நம்பிக்கை உள்ளது. பட்டவராயர் சந்நதியில் பொம்மக்கா, திம்மக்கா ஆகியோரும் உள்ளனர். இக்கோயிலில் தை, மாசி, ஆடி மாத அமாவாசை தினங்கள் மிகவும் விசேஷமான நாட்களாகும்.

இக்கோயிலுக்கு அருகே உள்ள பாணதீர்த்த அருவிக்கு பக்தர்கள் சென்று புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு நீத்தார்கடன் மேற்கொள்வார்கள்.இந்த பாணதீர்த்தத்தில்தான் ராமர் தனது தந்தை தசரதனுக்கு திதி செய்தார் என்று ஓர் ஐதீகம் நிலவுகிறது. இந்த பாணதீர்த்தத்திற்கும், சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கும் இடையே முன்பு சாலை வசதி இருந்தது. 1992ல் ஏற்பட்ட புயல் வெள்ளத்தில் இந்த பாதை தூர்ந்து போய் விட்டது. ஆகவே தற்போது இந்த இடத்திற்கு பாபநாசம் மேலணை வழியாக படகில்தான் செல்ல முடியும்.

ஆடி அமாவாசையில் பக்தர்கள் பூக்குழி இறங்குவர். பூதத்தார், தளவாய் மாடசாமி, பட்டவராயர் ஆகிய சந்நதிகள் முன்பு மூன்று கட்டமாக பூக்குழி இறங்கும் வைபவம் நடக்கும். பிரம்மராட்சசி, பூதத்தார், பேச்சியம்மன் சந்நதி முன்பு பக்தர்கள் பொங்கலிட்டும், தளவாய் மாடசாமி,  தூசி மாடசாமி, பட்டவராயர் சன்னிதிகள் முன்பு பக்தர்கள் மாமிச உணவுகளை படைத்தும் வழிபடுவார்கள். சங்கிலி பூதத்தார், தளவாய் மாடன், தூசி மாடன் தெய்வங்கள் முன்பு பக்தர்கள் தங்களது மார்பில் சங்கிலியால் அடித்துக்கொண்டு வழிபடுகிறார்கள்

குரங்குகள் ஏராளம் 


மழை முறையாக பெய்யவில்லை என்றால் இந்த கோயிலுக்கு வந்து சொரிமுத்து அய்யனாருக்கு சிறப்பு யாகம் செய்து பின் தாமிரபரணி தாயை விவசாயிகள் வணங்குகின்றனர். பூஜை முடிந்த உடனேயே மழை பொழியும் அதிசயத்தை இப்போதும் காணலாம்.

ஒரு காலத்தில் இப்பகுதியை ஆண்ட பாளையக்காரர்களான சிங்கம்பட்டி ஜமீன் சேர மன்னருக்கு உதவியாக போர் புரிய சென்ற போது தனது மூத்த வாரிசை இழக்க நேரிட்டதுசேர மன்னன் இளவரசரின் இழப்புக்கு ஈடாக என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு ஜமீன் அந்தக் காட்டில் குச்சி ஒடிக்க அனுமதி கேட்டார். உடனடியாக சேர மன்னன் சுமார்   2500 ஏக்கர் நிலத்தை சிங்கம்பட்டி ஜமீனுக்கு அளித்தார். இந்த இடத்துக்கு ஜமீன் சொந்தக்காரர் ஆகிவிட்டார். மேலும் இந்த இடத்தில் தாமிரபரணி தீர்த்தம் நிறைந்து இருப்பதாலும், அதற்கு அதிபதியாக சிங்கம்பட்டி ஜமீனே இருப்பதாலும் அவருடைய வாரிசுகள் தீர்த்தபதி என்றழைக்கப்பட்டனர். சொரிமுத்து அய்யனார் கோயில் விழாக் காலங்களில் சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி ராஜ உடையில் கம்பீரமாய் காட்சியளிப்பதும் இங்கு விசேஷமான ஒன்றாகும்

மணி விழுங்கி மரம் 
இக்கோயிலில்  உள்ள ஒரு மரத்தில் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் மணிகளைக் கட்டிவைக்கிறார்கள்.அந்த மணியை மரமே விழுங்கி விடுமாம். இதனால் அந்த மரத்தை மணி விழுங்கி மரம் என்று அழைக்கிறார்கள்.

ஆடி அமாவாசையன்று இக்கோயிலில் ஆண்களும், பெண்களும் பாணதீர்த்தம் சென்று அங்கு நீராடிவிட்டு வந்து சொரிமுத்து அய்யனாரை வணங்குகின்றனர்தோளிலும் இடுப்பிலும் சிறு குழுந்தைகளை தூக்கிக்கொண்டு ஆடி அமாவாசையில் பொழியும் மழையில் நனைந்து ஐயனை வணங்கி அருள் பெற, பக்தர்கள் லட்சக்கணக்கில் இங்கு கூடுகிறார்கள். பாபநாசத்தில் இருந்து பொதிகை மலையை பார்த்தால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பது கண்கொள்ளா காட்சியாகும்.   

ஐயப்பனின் முதல் நிலையாக  சொரிமுத்து அய்யனார் விளங்குவதால் கார்த்திகை மாதங்களில் பக்தர்கள் இங்கு வந்து மாலை அணிந்து சபரிமலை செல்கின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக எந்த காலமும் இரண்டு பூசாரிகள் இங்கே உள்ளனர். தினமும் மூன்று வேளை பூஜை நடத்தப்படுகிறது.

காது குத்துதல், முடி காணிக்கை செலுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தங்கும் விடுதி மற்றும் சமையல் பாத்திரங்களும் கிடைக்கும். இந்த வசதியை செய்து  தர அலுவலகத்தில் எப்போதும் ஊழியர்கள் உள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் குருசாமி அவர்கள் இவ்வாலயத்திற்கு அழைத்துச்செல்வார். காட்டுப்பகுதியில் உள்ளதால் பகலில் மட்டுமே செல்ல முடியும்.  காட்டு இலக்கா அலுவகத்தில் அனுமதி பெற்றே உள்ளே செல்ல முடியும் மிருகங்களின் நடமாட்டம் இருக்கும் என்பதால் மெதுவாக செல்லவும், ஒலிப்பான்களை (Horn) பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்துகின்றனர்.  ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தைத் தாண்டி கோயிலை அடைய வேண்டும்.

முதலில் மணிமுத்தாற்றில் நீராடுவோம். மூலிகை நீரில் நீராடி வெளியே வரும் போது  ஒரு புத்துணர்வு பெறுகின்றோம்.   மயில்களும், குரங்களும் சுதந்திரமாக சுற்றித்திரிகின்றன. வழியில் அபூர்வ கள்ளிச்செடிகளைக் காண்கிறோம்.  தக்ஷிணாமூர்த்தியுடன் அமைந்த அலங்கார வளைவு நம்மை வரவேற்கின்றது அதன் உள்ளே  நுழைந்தவுடன்  பிரம்மாண்டமான இலுப்பை மரம் அதன் அடியில் விநாயகர் அவருக்கு இரு புறமும் யானைகள் இருப்பது சிறப்பு.  மற்றும்  சங்கிலி பூதத்தார், மொட்டையர், பாதாள கண்டிகை, கும்பாமணி ஆகிய காவல் தெய்வங்களும் அருள் பாலிக்கின்றனர் . மரத்தில் கருங்குரங்குகள் அட்டகாசம் செய்து கொண்டிருக்கின்றன. விநாயகரை வணங்கி அனுமதி பெற்றுக்கொண்டு ஆலயத்தில் உள்ளே நுழைந்தால்  தனி சன்னதியில் பிரம்ம ராட்சசி,  பேச்சி, துளசி மாடன் ஆகியோர்  அருளுகின்றனர். பைரவரின் சன்னதிக்கு எதிரே நாய் வாகனம் அமைந்திருப்பது ஒரு சிறப்பு.

அடுத்து அகத்தியர் பூசித்த மகாலிங்கர் சன்னதி, அகத்தியரும் உடன் எழுந்தருளியுள்ளார். அதை அடுத்து பூர்ணா புஷ்கலா சமேதராக அய்யனார் அருட்காட்சி அருளுகின்றார்.  இடது காலை குத்துக்காலிட்டு, வலது காலை தொங்கவிட்டபடி சற்றே வலப்புறமாக  சாய்ந்தவாறு எழிலாக அருட்காட்சி தருகின்றார். சந்தனக்காப்பில் ஐயனை தரிசிக்கும் போது அப்படியே மெய் சிலிர்க்கின்றது. இவர்களூடன் சப்த கன்னியரும் அருள் பாலிக்கின்றனர்.  இவருக்கு எதிரே ஒரே பீடத்தில் நந்தி, யானை, குதிரை மூன்றும் ஒன்றாக அமைத்திருப்பது தனி சிறப்பு. அடுத்தடுத்து தூசி மாடன்,  இருளப்பன், இருளம்மன், வித்தியாசமாக கரடி மாடசாமி சன்னதிகள் இம்மண்டபத்தில் அமைந்துள்ளன.


பட்டவராயர் 

ஐயனின் பரிவார தெய்வமான பட்டவராயர்  சன்னதி சற்றுத்தள்ளி தனியாக அமைந்துள்ளது.  பொம்மக்கா திம்மக்கா சமேதராக கையில் வாளேந்தி அருள் பாலிக்கின்றார் பட்டவராயர்.  அங்குள்ள பூசாரி முத்துப்பட்டனின்  கதையை அருமையாக சொல்லுகின்றார்.

இப்பகுதியில் வசித்த பிராமணரான முத்துப்பட்டன் சூழ்நிலை காரணமாக தாழத்தப்பட்ட குலப்பெண்களை மணந்து கொள்கிறார். ஒரு சமயம் பசுக்களைக் காக்க செல்லும் போது சூழ்ச்சியா இவரை எதிரிகள் கொன்று விடுகின்றனர், பட்டன் இறந்துகிடந்த இடத்திற்கு அவர்கள் வந்தனர். இறந்த கணவனைப் பார்த்ததும் அலறிப் புலம்பி சட்டியை எறிந்துவிட்டு அவன் மேலே விழுந்து அழுதனர். பட்டனை எடுத்தத் தோள் மேல் போட்டுக்கொண்டு சிங்கம்பட்டி அரண்மனைக்குச் சென்றனர். அரசனிடம் தங்கள் வரலாற்றைக் கூறி தாங்கள் பட்டனுடன் தீயிலே இறக்க அனுமதி கேட்டனர். பழிபாவம் ஏற்படும் என்று மன்னன் மறுத்துப் பார்த்தான். பெண்கள் ஒரேயடியாய் கெஞ்சினர்.
பொதிகை மலை
 மனதை மயக்கும் மாலைக் காட்சி
அவர்கள் கற்பின் உறுதியைக் கண்ட மன்னன் பெரும் தீ வளர்க்க உதவினான். அத்தீயில் இருவரும் பாய்ந்து உயிரை விட்டனர், கூடவெ ஆச்சி நாயும் பூச்சி நாயும் தீயில் விழுந்து உயிர் விட்டது. அவர்களின்  கதையைக்  கேட்ட ஊரார் அவர்கள் தெய்வங்களாகி விட்டதை அறிந்தனர். சிங்கம்பட்டி மன்னன் அவர்களுக்கு சொரி முத்து ஐயனாரின் ஆலயத்திற்கு அருகில்  கோயில் எடுப்பித்து பலியும் பூசனையும் செய்வித்தான். பட்டவராயாரை  வணங்கி விட்டு திரும்பி வரும் போது பொங்கல் வைக்கும் மடத்தைக் கடக்கின்றோம். வலது பக்கம் சைவமும், இடது பக்கம் அசைவமும் சமைக்கப்படுகின்றது என்றார் குருசாமிகள். உளுந்து வடை இத்தலத்தின் சிறப்பு பிரசாதம்.

காரையாறு என்று அழைக்கப்படும் இத்தலத்திற்கு நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து பாபநாசம் வழியாக பொதிகை மலை செல்ல வேண்டும்பின் லோயர் கேம்பில் இருந்து அப்பர் கேம்ப் செல்லும் வழியில் இடது புறம் செல்லும் சாலையில் சென்று ஆற்றை கடந்தால் கோயிலை அடையலாம்ஆடி அமாவாசையில் இந்த கோயிலுக்கு செல்ல அம்பாசமுத்திரத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றனவேன் மற்றும் ஆட்டோ வசதியும் உண்டு சமயம் கிட்டும் போது  சொரிமுத்து ஐயனாரை தரிசித்துவிட்டு வாருங்கள்.

********
ஒரு சில தலங்களை மட்டும் ஆதாரத்தலங்கள் என்று குறிப்பிடுவதன் தாத்பர்யம் என்ன என்பதற்கு குருசாமி அவர்கள் கூறிய விளக்கம். இத்தலங்களில் அமைந்துள்ள இறைசக்தியானது நமது உடலில் அமைந்துள்ள சக்கரங்களைத் தூண்டுகின்றன. எனவே இத்தலங்களுக்கு செல்லும் போது இச்சக்கரங்கள் தூய்மையடைகின்றன. நாம் அறியாமலே யோக நிலைக்கு செல்கின்றோம். 

குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா


ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .Thursday, November 23, 2017

சுவாமியே சரணம் ஐயப்பா -4

மணிகண்டன் அவதாரம் இப்பதிவுகளையும்  காணலாமே         5   6   7   8   9   10  11   12   13   14   15   16   17   18   19   20   21

ஐயப்ப சுவாமி 


பாண்ட்யேச வம்ச திலகம் கேரளே கேளி விக்ரஹம் |

ஆர்த்த த்ராண பரம் தேவம் சாஸ்தாரம்   ப்ரணமாம்யஹம் ||

பொருள்: பாண்டிய வம்சத்தில் வந்த தலைவரும் கேரள நாட்டில் திவ்ய ரூபத்துடன் திருவிளையாடல் புரிந்தவரும் எளியோர்க்கு உதவும் மேலான தெய்வமும் ஆகிய ஐயப்பனே உன்னை நான் வணங்குகின்றேன்  - . என்பது  ஐயப்ப நமஸ்கார  ஸ்தோத்திரத்த்தில் ஒரு ஸ்லோகம். 

அங்கற்கண்ணி அம்மையும் ஆலவாய் சொக்கநாதப்பெருமானும் அரசாண்ட பாண்டிய வம்சத்தின் ஒரு கிளையினர் பந்தள தேசத்தை ஆண்டு வந்தனர். அப்பந்தள ராஜனுக்கு பளிஞனும்  பிறந்து வளர்ந்து  ராஜசேகரன் என்னும் பெயருடன் அரசாண்டு வந்தான்.  ராஜசேகர மன்னன் ஒர் சிவபக்தன்.  மகாராணி கோப்பெருந்தேவி விஷ்ணு பக்தை.   விவாகமாகி பல ஆண்டுகள் கடந்தும் தங்களுக்கென ஒரு வாரிசு இல்லையே என்ற பெரும் கவலையோடு பிரார்த்தனை செய்து மக்கட்பேறுக்காக "மகேசன்" பூஜை செய்து வரலாயினான். 
பாண்டி நாட்டில்தான தர்மங்கள் செய்து, தர்மசீலனாய் வாழ்ந்து சர்வேஸ்வரனையே வழிபட்டு வந்த விஜயன் என்னும் பிராமணன்; ஐயனின் அருளினால் பந்தள தேசத்தில்  ராஜசேகரன் என்னும் பெயருடன் பிறந்து அரசாண்டு வந்தான் என கூறுவாருமுளர்.
மன்னனின் மன வேதனைகளையும், அவனது தயாள குணத்தையும் பலவீனமாக உணர்ந்து கொண்ட அந்நாட்டு மந்திரி அதனைச் சாதகமாக வைத்து நாட்டில் பல குழப்பங்களை ஏற்படுத்தி இராச்சியத்தை தானே கைப்பற்றும் நோக்கோடு பல சூட்சிகள் செய்யலானான். 
வரமுனி என்ற பெரும் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர் இருந்தார். எல்லாவற்றிலும் சிறந்து விளங்கிய, இவருக்கு நிகர் இவர்தான். தனக்கு இணை யாரும் இல்லை என்ற தலைக்கனம் இவருக்கு ஏற்பட்டது. பதவியும், தலைக்கனமும் ஏற்பட்டால் மற்றவர்களை துச்சமாக மதிக்கும் எண்ணமும் வரும்தானே? இவர் தலைக்கனம் காரணமாக அகத்தியர் போன்ற பெரும் முனிவர்களிடமும் மகிஷம் (எருமை) போல் உருவம் கொண்டு அவமரியாதையாக நடந்து கொண்டார். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் அனைவரும் எருமையாக போவாய் என்று அவருக்கு சாபமிட்டனர்.
மஹிஷாசுரனின் தோற்றமும் மறைவும்

தனு என்ற அரசனுக்கு ரம்பன், கரம்பன் என்ற  இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் ரம்பன் என்ற அசுரன் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருந்தான். அவன் தவத்தை மெச்சி அவன் முன் தோன்றினார் அக்னி பகவான்.  அவன் தனக்கு சர்வ வல்லமை பொருந்திய மகன் வேண்டும் என வேண்டினான். அவன் வேண்டியதை அருளிய அக்னி தேவன், ரம்பன்!, நீ கேட்ட வரத்தை அளித்தேன். நீ எந்த பெண்ணை கொண்டு ஆசை கொள்கிறாயோ அவள் மூலம் உனக்கு மகன் பிறப்பான் என்று கூறி மறைந்தார்.


திருமயிலை கற்பகாம்பாள் மஹிஷாசுர மர்த்தினி அலங்காரம் 
உற்சாகத்துடன் வந்த ரம்பன் முதலில் கண்டது ஒரு காட்டெருமையை. அவனது அசுர புத்தி வேலை செய்தது. காட்டெருமை மேல் காதல் கொண்டான். தானும்காட்டெருமையாக உருமாறினான். முனிவர்களால் எருமையாய்  பிறப்பாய் என்று சாபம் பெற்ற வரமுனி, அசுரனான ரம்பனுக்கு வாரிசாக மகிஷாசுரன் என்னும் பெயருடன் பிறந்தான்.
மகிஷாசுரன் கடும் தவம் செய்து பிரமதேவனிடம் பல வரங்கள் பெற்றான்.  தேவலோகத்தையும் பூலோகத்தையும் ஆட்டி படைத்து கொண்டிருந்தான். .  மகிஷாசுரன் தனக்கு ஓர் பெண்ணால் அன்றி மரணம் ஒரு போதும் ஏற்படக்கூடாது என்ற வரத்தினையும்; சர்வலோகங்களையும் அரசாளும் வரத்தினையும் பெற்றிருந்தான். ஒரு பெண்ணால் தன்னை வெல்ல முடியாது என்று அகம்பாவம் கொண்டிருந்தான் மகிஷன்.
அறிவு வேண்டாம், அறிவு நூல்கள் வேண்டாம், அறிவுக் கலைகள் வேண்டாம், இசை வேண்டாம். சிற்பம், சித்திரம், கோயில், கோபுரம், ஒன்றும் வேண்டாம். எல்லாவற்றையும் அழித்துப் போடுங்கள் என்று மகிஷாசுரன் கட்டளையிட்டான். தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள் எல்லாரும் நடுநடுங்கினார்கள். அவர்களில் பலர் மகிஷாசுரனுக்கு அடிபணிந்து அவனுடைய ஆட்சியை ஒப்புக்கொண்டார்கள். இதனால் மகிஷாசுரனுடைய அகந்தையும், மூர்க்கத்தனமும் அதிகமாயின. மௌடீக மோட்டுத்தனத்தோடு, அகந்தையும் மூர்க்கத்தனமும் சேர்ந்து விட்டால் கேட்க வேண்டுமா? மகிஷாசுரனுடைய கொடுமையைப் பொறுக்க முடியாமல் மூன்று உலகங்களிலும் மக்கள் ஓலமிட்டார்கள்.
மகிஷாசுரனிடம்  தேவலோகத்தையும், சிம்மாசனத்தையும் பறிகொடுத்த  இந்திரன் முதலான தேவர்கள்; மும்மூர்த்திகளிடம் சென்று வணங்கி மகிஷாசுரனால் தமக்கு ஏற்பட்டுள்ள துயரில் இருந்து தம்மைக் காத்தருள வேண்டுமென இறைஞ்சி  நின்றனர்.
தேவர்களை காப்பாற்ற எண்ணிய மும்மூர்த்திகளும்  மகிஷாசுரனை அழிக்க திட்டம் வகுத்தனர். மகிஷாசுரன் பிரமதேவரிடம் பெற்ற வரங்களினால் அவனை ஒரு பெண்ணால்  மட்டுமே கொல்ல முடியும் என்பதனை உணர்ந்து; சிவன், விஷ்ணு,  பிரமா ஆகிய மும்மூர்த்திகளும் மற்ற தேவர்கள் அனைவரும்  தங்கள் சக்திகளினால் சகல அம்சங்களும் பொருந்திய ஒரு "சங்கார மூர்த்தியை" சிருஷ்டித்தார்கள்.
அந்த சங்கார மூர்த்திக்கு சிவன் சக்தி கொடுக்க அதுவே முகமாகவும், பிரம்மாவின் சக்தி உடலாகவும், திருமால் கொடுத்த சக்தி பதினெட்டு கரங்களாகவும், எமதர்மனின் சக்தி கூந்தல், அக்னி பகவானின் சக்தி கண், மன்மதனின் சக்தி புருவம், குபேரனின் சக்தி மூக்கு, முருகனின் சக்தி உதடு, சந்திரனின் சக்தி தனங்கள், இந்திரனின் சக்தி இடை, வருணனின் சக்தி கால் என அனைத்து சக்திகளும் இணைந்த சக்தியாக "துர்கா தேவி"  ஆவிர்பவித்தாள். 
மும்மூர்த்திகளின் ஆணைப்படி துர்காதேவி மகிஷாசுரனுடன் போர்புரிந்து அவனை அழித்ததுடன் தேவர்கள் இழந்த தேவலோக சிம்மாசனத்தையும் பெற்றுக் கொடுத்து காத்தருளினாள். மகிஷாசுரனுடன் போரிட்டு அவனை அழித்ததால்  துர்க்காதேவி  "மகிஷாசுரமர்த்தினி" என்று  பெயர் பெற்றாள்.

மகிஷியின் வரலாறு : 
மகிஷாசுரன் வதத்திற்கு பிறகு  கரம்பன் மகளான மகிஷி தந்தையின் தூண்டுதலினால்;  தன் சகோதரனான  (தந்தையின் சகோதரன் மகனான) மகிஷாசுரனின் அழிவுக்கு தேவர்களே காரணம் எனக் கருதி அவர்களை பழிவாங்க முடிவு செய்தாள். அதற்கான சக்தியை பெற்றுக்கொள்ள அவள் பிரம்மாவை நோக்கி நெடுநாள் கடும் தவம் புரிந்தாள்.   
மகிஷியின் கடும் தவம் கண்டு மகிழ்ந்த பிரம்ம தேவன், அவள் முன் தோன்றி, உன் கடும் தவம் கண்டு மகிழ்ந்தோம்.  வேண்டும் வரம் கேள் என்றார். ஹரியும், ஹரனும் இணைந்து உருவாக்கி பூமியில் 12 ஆண்டுகளாவது வாழ்ந்திருக்கும் பிரம்மச்சாரியான குழந்தையால் மட்டும் அன்றி வேறு எவராலும் தனக்கு மரணம் நேரிடக்கூடாது  என்றும், தான் இறந்த பின்பு தன் உடல் மீது சூரிய வெளிச்சம் பட்டால் என் உடல் வளர வேண்டும் என்னும் வரத்தையும் மகிஷி  கேட்டுப்  பெற்றுக் கொண்டாள்.  
இரண்டு புருஷ மூர்த்திகளால் ஒரு புத்திரன் பிறக்கமாட்டான் என்று எண்ணிய மகிஷி; தான் அழியாவரம் பெற்றுவிட்டதாக கர்வம் கொண்டு  தேவலோக சிம்மாசனத்தை கைப்பற்றியதோடு தேவர்களையும், பூலோகத்தில் முனிவர்களையும், மக்களையும் கொடுமைப்படுத்தி வந்தாள். மகிஷியின் கொடுமையை தாங்க இயலாத தேவர்கள் பரமேஸ்வரனிடம் சென்று  முறையிட்டு தம்மை காப்பாற்ற வேண்டினர் 
யார் இந்த மஹிஷி ?: முற்பிறப்பில் தனது கணவனான தத்தாத்ரேய ரிஷியின் சாபத்தால் அசுர குலத்தில்  பிறந்து வாழ்ந்து வந்தாள். முற்பிறப்பில் அவர்கள் கணவன் மனைவியாக இருந்த போது தத்தாத்ரேய ரிஷிக்கும் அவன் மனையியான லீலாவதிக்கும் இடையில் அவர்களின் பக்தியின் சக்தியை கூறுவதில் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது லீலாவதி ஆணவ மேலீட்டினால் "நீ மகரிஷி அல்ல மகிஷி" என பழித்தாள். மகரிஷிக்கு கோபம் பொங்கவே  மெளடீகமும், பிடிவாதம் கொண்ட எருமைபோல் இருக்கிறாயே "நீ  அசுரகுலத்தில் மகிஷியாகக் பிறக்கக் கடவது" எனச் சபித்தார். இதைக்கேட்ட லீலாவதி  நீ என்னை சபித்துவிட்டாயா? எனக்கூறி பதிலுக்கு லீலாவதியும் "நீயும் சுந்தரமஹிஷமாக அசுர குலத்தில் பிறந்து எனக்கு கணவனாகக் கடவது" எனச் சபித்தாள். இருவருடைய சாபங்களும் பலித்தன. 

 (விந்திய மலைத்தொடரின் அடிவாரத்தில் காலவன் என்னும் முனிவரும் அவரது மகள் லீலாவதியும், சீடனாகிய தத்தாத்ரேயன் என்பவனும் வாழ்ந்து வந்தனர். தத்தாத்ரேயனிடம் விருப்பம் கொண்ட லீலாவதி அவனிடம் காதல் வயபட்டாள். தன்னை மனைவியாக ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினாள். லௌகீக வாழ்க்கையில் ஆர்வம் காட்டாத தத்தாத்ரேயன் அவளது வேண்டுகோளுக்குச் செவிசாய்க்கவில்லை. 
ஒருநாள் தத்தாத்ரேயர் தியானத்தில் ஆழ்ந்திருந்தபோது அவனை நோக்கி, "தாங்கள் என்னைப் "பட்ட மஹஷி" (மனைவி) ஆக்கவேண்டும்" என லீலா வேண்டினாள். . அந்நேரம் கோபம்கொண்ட தத்தாத்ரேயன், நீ மஹிஷியாகவே (எருமை) போ என சபித்தானாம். அவ்வாறாக அவள் கரம்பன் என்னும் அசுரனின் மகளாக எருமைத் தலையோடு பூமியில் பிறந்தாள் என கூறுவாருமுளர்.)
மணிகண்டன் அவதாரம்:

கைலாசவாசன் தேவர்களின் குறை தீர்க்க எண்ணி விஷ்ணுவின் அம்சமான மோகினி மூலம் சைவ-வைஷ்ணவ ஜோதியான  ஐயனாரிடம் சென்று மகிஷியை மர்த்தனம் செய்து தேவர்களைக் காப்பாற்றவும், பந்தள மன்னனின் பிள்ளைக் கலி தீரக்கவும், சபரிக்கு அனுக்கிரகம் செய்வதற்காகவும்  பாண்டிய நாட்டின்  ராஜசேகர  மன்னனுக்கு மகனாக அவதரிக்கும் பாக்கியம் தங்களுக்கு கிடைத்துள்ளது என அனுக்கிரகித்து; பூலோகத்தில் உனது அவதார நோக்கம் நிறைவுற இதோ இந்த "மணி" உனது கழுத்திலே "ரட்சா பந்தனமாக இருக்கட்டும்" என்று கூறி ஒரு மணி மாலையை அணிந்தார். அதன் பின் ஐயப்பனை  ஒரு குழந்தையாக்கி பம்பா நதிக்கரையை அடைந்தார். அங்கு அவர் ஓர் ரிஷிபோல் ரூபமெடுத்து சாஸ்தாவாகிய குழந்தையுடன் வேட்டைக்கு வந்த தனது பக்தனான ராஜசேகரனின் வரவை எதிர்பார்த்து ஒரு மரத்தடியில் காத்திருந்தார். 
  
மணிகண்டன் அவதாரம் 
வனத்தில் வேட்டைக்கு வந்த பந்தள தேசத்து மன்ன பம்பா நதிக்கரை பக்கம் வந்தபோது ஒரு பச்சைக் குழந்தையின் அழுகுரல் கேட்டது.  குரல் வந்த திசையை நோக்கிச் சென்றான் மன்னன். என்ன ஆச்சரியம் கோடி சூரியனின் பிரகாசத்துடன் ஒரு ஆண் குழந்தை கழுத்தில் மணியுடன் அழுது கொண்டிருந்தது. குழந்தை அழகோ, அழகு!!! ஒரு பூவே பூத்து வந்தது போல மன்னனைப் பார்த்ததும் சிரித்தது. மன்னன் கையில் எடுத்தான் அந்தக் குழந்தயை, மார்போடு அள்ளி அணைத்தான், சுற்றும், முற்றும் பார்த்தான்,  யாரையும் காணவில்லை.
அப்போது அங்கே தோன்றினார் ஒரு வேதியர். குழந்தையையும், மன்னனையும் பார்த்தார்.  "மன்னா, குழந்தை இல்லாத உன் பிள்ளைக் கலி தீர்க்க வந்த இந்தப் பாலகனை நீ வளர்த்து வா! இவனால் உன் ராஜ வம்சமே பெருமை அடையும். இவனின் பெருமையை நீயும் பின்னால் உணர்வாய் என்று கூறி மறைந்தார்.
கழுத்தில் மணி இருந்ததால் "மணிகண்டன்" என்னும் பெயர் சூட்டினார். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மணிகண்டன் வளர்ந்து வந்தான்.  மணிகண்டன் வந்த ஆண்டுகளுக்குப்பிறகு.  இராணி சூல் கொண்டாள். உரிய காலத்தில் அவளுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. அப்பிள்ளைக்கு இராஜராஜன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். 
ஐயப்பனை குருகுலத்தில் சேர்க்க மன்னன் முடிவு செய்தான். தெய்வக்குழந்தையான அவன் குறுகிய காலத்திலேயே நான்கு வேதம், ஆறு சாஸ்த்திரம், 64 கலைகள் ஆகிய அனைத்தையும் கற்று தேர்ந்தான். குருகுல வாசம் முடிந்தபின் குரு தட்சணையாக பிறவியிலேயே ஊமையாக குருகுலத்தில் இருந்த குருவின் மகனான கண்ணனை பேச வைக்குமாறு குரு வேண்டினார்.  மணிகண்டனும் குருவின் மகனை  பேச வைத்தான். மணிகண்டனின் அபூர்வ சக்திகளையும் செயல்களையும் கண்ட குரு அவரை தாங்கள் யார்  என்பதனை அறிய விரும்புவதாக கூறினார். குருவுக்கு உண்மையை மறைக்க விரும்பாத மணிகண்டன் தான் யார் என்பனை கூறி அதனை இரகசியமாக வைத்திருக்க வேண்டினார். அத்துடன் குருதட்சிணையாக ஆண்டு தோறும் மகர சங்கராந்தி தினத்தில் ஜோதி சொரூபனாக காட்சி தருவதாக கூறினான்.
 மணிகண்டன் திறமைகளைக் கண்டு  பொறாமையும், வெறுப்பும் கொண்ட மந்திரியார்; மணிகண்டன்  யார் என்பதை உணராது;  அவர் இராஜாவானால் தனக்குள்ள எல்லாச் செல்வாக்கும், வசதிகளும் பறிபோய்விடும் என எண்ணி மணிகண்டனை கொன்று விட தீர்மானித்து பலவழிகளாலும் முயற்சிகள் செய்தான். உணவில் நஞ்சூட்டச் செய்தும், நஞ்சு பூசப்பெற்ற அம்புகளை ஏவச்செய்தும், பலரை ஏவிவிட்டு தாக்கியும் அவரைக் கொல்ல எடுத்த எல்லா முயற்சிகளும்  அவரின் தெய்வ சக்தியாலும், இறைவனின் அருளிளாலும் தோல்வியில் முடிந்தது.
இதற்கிடையில் மணிகண்டன் பந்தள தேசத்தில் கொள்ளையிட துர்க்கிஸ்தானிலிருந்து படை வீரர்களோடு வந்த கடற் கொள்ளைக்காரனான வாபர் என்ற  கொள்ளைக்காரனை தனது அன்பு வார்த்தைகளினால் அடிபணியச் செய்து அவனைத் தனது நண்பனாக்கினார்.  அதன் பின்னர் பந்தள நாட்டை ஆக்கிரமிக்க வந்த உதயனையும் அவனது தம்பிமாரான உக்கிர சேனன், பத்திர சேனன் ஆகியோரையும், படைகளையும் வாபரின்  உதவியுடன் அழித்து. பந்தள நாட்டை பேராபத்தில் இருந்து காப்பாற்றினார்.
மணிகண்ட குமாரனின் வரவால் நாட்டில் எல்லா நலன்களும் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொண்ட ராஜசேகர மன்னன், மணிகண்ட குமாரனுக்கு "பட்டாபிஷேகம்" செய்வதற்கு ஏற்பாடுகள் செய்தார். இதனால் வேதனை அடைந்த மந்திரி அரசனிடம் சென்று அதனைத் தடுப்பதற்காக பல காரணங்களை முன்வைத்து பட்டாபிஷேகத்தை நிறுத்த முயற்சித்தான்.

இதற்கிடையில்; இறை அருளால் மஹிஷிக்கு தேவலோக வாழ்க்கையில் வெறுப்பேற்பட்டதனால், லௌகீக வாழ்கையில் நாட்டம் ஏற்பட்டு; முற்பிறப்பில் தனது கணவனாக இருந்த ததாத்திரேயன் தனது சாபத்தினால் அசுர குலத்தில் பிறந்து சுந்தரமஹிஷன் என்ற பெயருடன் பூலோகத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதை அறிந்து; பூலோகத்திற்கு வந்து சுந்தரமஹிஷனை  விவாகம் செய்து லௌகீக வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தாள்.
மந்திரியார்  மகாராணியாரை அணுகி; இந்த நாட்டை அரசாளும் உரிமை அரசபரம்பரையில் வந்த ராசராசனுக்கே உண்டு என்றும், காட்டில் கண்டெடுத்த மணிகண்டன் முடிசூடினால் மகாராணியாரின் சொந்த மகனான ராஜராஜனுக்கு அரசாளும் வாய்ப்பு கிடையாமலேயே போகும் என்றும் ராஜ பரம்பரையில் வந்த ராஜ ராஜனை யுவராஜன் ஆக்குவதே ராஜ நீதி என்றும் பல துர்ப்போதனை செய்து  கோபெருந்தேவியின் மனத்தை மாற்றினான். 

மந்திரியின் துர்ப்போதனையால் மனம் மாறிய இராணி அவன் கூறியபடி 
தீராத தலை வலியால் துடிப்பதுபோல் நாடகமாடினாள். தலைவலிக்கு மருந்தாக புலிப்பால் கொண்டு வரவேண்டும் எனச் சொல்லுமாறு மந்திரியார் அரண்மனை வைத்தியரை கூறவைத்து, தந்திரமாக மணிகண்டனை புலிகள் நிறைந்த காட்டிற்கு அனுப்பி கொல்ல நினைத்தான்.
மணிகண்டனும் தனது அவதார நோக்கத்தினை உணர்ந்து அவை நிறைவேற்றும் காலம் வந்துவிட்டதால்; புலிப்பால் கொண்டுவர சம்மதித்து காட்டிற்கு செல்ல ஆயத்தமானார். மன்னன் மனம் கலங்கியது. இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாய் உள்மனம் கூறுகிறது. ஆனால் ராணியோ தலைவலியில் துடிக்கிறாள். ஆகவே மன்னன் இருதலைக் கொள்ளி எறும்பாய்த் தவிக்கின்றான். மனம் கலங்கிய மன்னனையும் மணிகண்டன் ஒத்துக் கொள்ள வைக்கிறான்.
அரை மனதாய்ச் சம்மதித்த மன்னன், மனம் கேளாமல் காட்டில் உணவு கிடைக்காமல் தன் அருமைக் குமாரன் தவிப்பானே என எண்ணி; மணிகண்டன் தனது குலதெய்வமான சிவனைப் பூஜை செய்வதற்காக; ஒரு துணியின் ஒரு பக்கத்தில் மூன்று கண்ணுள்ள தேங்காயும், பூசைக்குரிய பொருட்களும்; மற்றைய பக்கத்தில்; மணிகண்டன் பாதையில் உண்பதற்கான ஆகாரப் பொருட்களும் வைத்து இரண்டு முடிச்சுகளும் தலையில் இருக்கக் கூடியதாக ஒன்றாக இணைத்து; பூஜைப் பொருட்கள் உள்ள முடிச்சு முன்பக்கம் இருக்கக் கூடியாக, "இருமுடிபோல்" ஐயப்பனின் தலைமீது வைத்து வழியனுப்பி வைத்தான்.
அரண்மனையை விட்டுக் கிளம்பிய மணிகண்டன் காட்டை வந்தடைகிறான். அங்கே ஏற்கெனவே மும்மூர்த்திகள் கட்டளைப்படி வந்து கூடிய தேவர்கள், முனிவர்கள் அனைவரும் பொன்னம்பல மேட்டில் பதினெட்டுப் படிகளுடன் கூடிய ஒரு சிம்மாசனத்தில்  மணிகண்டனை  அமர்த்தி, அவரை போற்றித் துதித்து மஹிஷியினால் ஏற்பட்ட துயரங்களை எல்லாம் எடுத்து உரைக்கின்றார்கள்.
மஹிஷியின் வரலாறும் தற்சமயம் மனிதனாய் வந்த மணிகண்டனுக்குச் சொல்லப்படுகின்றது. தன்னுடைய அவதார நோக்கம் புரிந்து கொண்ட ஐயன், மஹிஷியோடு போர் புரியச் செல்கின்றார். மஹிஷியோடு போர் புரிந்த ஐயன், அவளை அப்படியே தூக்கி எறிகிறார். அவர் எறிந்த வேகத்தில், மஹிஷி பந்தள நாட்டுக் காட்டில் அலசா நதியில் (தற்சமயம் அழுதா நதி எனச் சொல்லப் படுகிறது) வந்து விழுந்தாள். அவள் எழுந்தால் ஆபத்து என அவள் எழுவதற்குள் மணிகண்டன் அவள் உடலில் ஏறி நின்று நர்த்தனம் ஆடுகின்றார். அவளுடைய பலமும், அகங்காரமும் போய், அவளின் உயிரானது உள்ளும், புறமுமாகப் போய்ப் போய் வருகின்றது.
மகேசன் புத்திரனின் திருவடி பட்டதுமே அவளுக்கு மெய்ஞ்ஞானமும் உதிக்கின்றது. தன்னுடைய முற்பிறவி, தான் செய்த தவறுகள், எல்லாம் நினைவுக்கு வருகின்றது. அவளின் உடலில் இருந்து உயிரானது ஒளிமயமான பெண் வடிவெடுத்து  ஐயன் திருப்பாதங்களில் வீழ்ந்து தன்னை ஏற்று ரட்சிக்குமாறு வேண்டிக் கொள்கிறாள்.
அப்போது ஐயன்;  என்னுடைய அவதார நோக்கமே மகிஷி சம்ஹாரம் தான். இந்தப் பிறவியில் என்னுடைய தலையாய கடமை இன்னொன்று இருக்கிறது. என் தாய்க்கு நான் கொடுத்த வாக்குறுதி, புலிப்பால் கொண்டு வருகிறேன் என. அதை நிறைவேற்ற வேண்டும், தவிர, இப்பிறவியில் எனக்குத் திருமணமும் இல்லை, என்னால் உயிர் பெற்ற நீ எனக்குச் சகோதரி முறையாவாய், நீ எப்போதும் மாளிகைபுறத்தம்மன் (மஞ்ச மாதா) என்ற பெயருடன் என் பக்தர்களுக்கு அருள்புரிவாயாக"என்று கூறினார் . எந்த வருஷம் என்னைக் காண வரும் பக்தர்களில், கன்னியாக வரும் பக்தர் இல்லையோ அப்போது நான் உன்னை மணந்து கொள்ளுவேன்!" என்று கூறினார்.
மகிஷியின் கொடுமைகள் நீங்கியதால் சந்தோஷமடைந்த தேவர்கள் மணிகண்டனை பலவிதமாக துதித்து பூஜித்தனர். பின் யாவரும் புலிகளாக மாறி ஐயனின் பணிகளை நிறைவேற்றுவதற்காகப் பந்தளம் செல்ல ஆயத்தமாகினர்.


வன் புலி வாகனன் ஐயப்பன் 

புலியாக மாறிய இந்திரன் மீது மணிகண்டன் அமர்ந்து பந்தளம் நோக்கிச் செல்லும் போது வழியில் உள்ள ஒரு மலையில்; சாபத்தால் கிழரூபம் அடைந்த "சபரி" என்ற  வித்யாதர ஸ்திரீ தவம் செய்து கொண்டிருந்தாள். கடும்புலியின் சிம்மத்தின்மீது வருகின்ற மணிகண்டனை அவள் உபசரிக்கவே அவளையும், அவள் சாபத்தையும் அறிந்த ஐயனும் அவளுடைய சாபத்தை நீக்கி தேவலோகம் செல்லும்படி அருளினார்.
தன் சாபம் எந்த மலையில் நிவர்த்தியாயிற்றோ அந்த மலை (சபரி) தன் பெயரால் வழங்க வேண்டும் என்றும் அம்மலையை அடையும் மானிடர்கள் பிறவி என்னும் சாபத்திலிருந்து நீங்க வேண்டும் என்று பிரார்த்தித்து, பதினெட்டு பிரதட்ஷனை நமஸ்காரங்கள் செய்தாள்.
மணிகண்டனும் வித்யாதர மங்கை தன்னைப் பதினெட்டு சித்திகளையும் பதினெட்டு படிகளாக அமைத்து கோயில் கொள்ளுவதாகவும், ஒவ்வொரு வருஷமும்; தன்னைத் தரிசிக்க வருபவர்கள் ஒவ்வொரு சித்தியையும் அடைந்து பதினெட்டு வருஷங்கள் தரிசித்தவர் சித்த புருஷர்களான முமூச்சுகளாவார்கள் என்றும் அதற்காகச் செய்ய வேண்டிய தவத்தை தானே அங்கு செய்வதாயும் வாக்களித்து பந்தள தேசத்திற்குப் புலிக்கூட்டத்துடன் வந்து சேர்ந்தார்.
புலிக்கூட்டம் ஒன்று பந்தள அரண்மனை நோக்கி வருவதையும் பெரிய புலி ஒன்றின்  மீது மணிகண்டன் அமர்ந்திருப்பதையும் கண்டு மக்கள் அதிசயமும், பீதியும் அடைந்தனர். மணிகண்டனை யாரென்று அறிந்த பந்தள தேசத்து மந்திரியார் தன்னுடைய குற்றங்களை மன்னிக்கும்படி வேண்டினான்.   
மணிகண்டனும், நீங்கள் எவரும் ஒரு குற்றமும் செய்யவில்லை என்றும்; எல்லாம் லீலைகள்படி நடந்துள்ளன. நான் பூமியில்  எதற்காக அவதரித்தேனோ, அந்த வேலை முடிந்துவிட்டது. கலியுகத்தில் அதர்மம் தலை தூக்கியுள்ள இந்த வேளையில் இறைவனின் ஆணைப்படி தர்மத்தை நிலைநாட்ட தர்மதாஸ்தாவாக தவம் செய்யப் புறப்படும் காலம் நெருங்கி விட்டது எனக் கூறினார்.   
இதைக்கேட்டு மனமுடைந்த மன்னனும், மகாராணியாரும் தங்கள் பட்டாபிஷேகம் நடைபெறும்போது அணிவதற்காக பலநாட்களாக தேடி வைத்துள்ள ஆபரணங்களை அணிந்து ஒருநாளாவது சிம்மாசனத்தில் அமர்ந்து எங்களுக்கு காட்சி தந்தருள வேண்டும் என பிடிவாதமாக கேட்டனர்.
ஐயப்பரும் பந்தள சிம்மாசனத்தை விட மேன்மையான சிம்மாசனம் எனக்காக காத்திருக்கின்றது. அது இறைவனின் நியதி. அதனை விலக்கவோ தடுக்கவோ இயலாத காரியம் என்று கூறி; தாங்கள் எனக்காக அன்போடு வைத்திருக்கும் அந்த ஆபரணங்களை "மகர ஜோதி தினத்தன்று அணிந்து தங்களுக்கு காட்சி தருவேன்" என்று உறுதியளித்தார். அத்துடன்  அத்திருவாபரணப் பெட்டி எவ்வாறு யாரால் சபரி மலைக்கு எடுத்து வரப்பட வேண்டும், எந்த ஆலயங்களில் இறக்கப் பெற்று ஆசீர்வாதம் பெற வேண்டும் என்பதனையும் மன்னனுக்கு தெளிவாக எடுத்துரைத்தார்.
மன்னன் "பகவானே " தாங்கள் எங்களுடன் இருந்ததன் அடையாளமாக உங்களுக்கு ஒரு கோயில் கட்ட நினைக்கிறோம். அதை எங்கு கட்ட வேண்டும் என்று சொல்லுங்கள் என்றான். மணிகண்டன் ஒரு அம்பை எடுத்து எய்தி, இந்த அம்பு எங்கு போய் விழுகிறதோ அங்கு ஓர் கோயில் எழுப்புங்கள் என்றான்.
அந்த அம்பு சபரிமலையில் வீழ்ந்தது. அங்கு 18 படிகளுடன், கிழக்கே நோக்கி தனக்கும், இடப்பாகத்தில் மாளிகைப்புறத்தம்மனுக்கும் கோயில் கட்டும்படி கூறி; தான் இனி அரச மாளிகையில் தங்க முடியாது என்றும், சபரிமலைக்குத் தவம் செய்யப் போவதாயும் கூறி மறைந்தார்.


ஹரிஹர சுதன் ஐயன் ஐயப்பன் 
மணிகண்டன் கட்டளைப்படி, அகத்திய முனிவரின் ஆலோசனையுடன் மன்னர் ஊண், உறக்கமின்றி தானே மேற்பார்வை செய்து சபரிமலையில் பதினெட்டு படியோடு கூடிய அழகிய கோயிலை கட்டினார். புத்திர சோகத்தினால் வருந்திய அரசன் அகஸ்திய முனிவரால் ஹரிஹரப் புத்திரரின் தத்துவங்கள் உபதேசிக்கப்பெற்று ஐயனின் உத்தரவுப்படி கோவில் அமைத்தார், சுவாமியின் சிலையை பிரதிஸ்டை செய்ய வேண்டிய தருணத்தில் பரசுராமர் தோன்றி குந்தாளமிட்டு அமர்ந்து யோக பட்டயத்துடனும், தந்தையைப் போல வல திருக்கரத்தில் சின் முத்திரையுடன் கூடிய விக்கிரகத்தை தந்தருளினார். இவ்வாறு பந்தளராஜா  மானிடப் பிறவியின் நற்கதி பெற அருள் புரிந்தார்.


சன்னிதானம் 

ஆண்டுதோறும் லட்சோப லட்சம் மக்கள் ஜாதி, மத பேதமின்றி மாலை அணிந்து 41 நாட்கள் கடும் விரதம் அனுஷ்டித்து சபரிமலை வந்து சத்தியமான பொன்னு  பதினெட்டுப்படி ஏறி ஐயப்பன் அருள் பெற்று வருகின்றனர். ஆண்டுதோறும் மகர சங்கராந்தி தினத்தன்று ஐயப்பன் பக்தர்களுக்கு "ஜோதி" வடிவில் காட்சியளித்து அருள்பாலிக்கிறார். மணிகண்டன் தனது குருவுக்கு குரு தட்சணையாக ஆண்டு தோறும் "மகர ஜோதியாக" காட்சிஅளிக்கிறார்.  இது மணிகண்டன் வரலாறு.
******

ஐயப்பமார்கள் அனைவரும் தாய் தந்தையருக்கும் , குல தெய்வத்திற்கும் உரிய மரியாதை கொடுத்து வணங்க வேண்டும் என்று ஐயப்பன் தனது வாழ்க்கையில் தானே நடந்து காட்டினா. எனவே முதல் தடவை மாலையிடும் போது பெற்றோர்களின் அனுமதி பெற்ற பின்பே மாலை அணிய வேண்டும். அதுவும் அவர்கள் மாலை அணிந்து கொள்வது மிகவும் உத்தமமானது.

அது போலவே சபரி மலை செல்வதற்கு முன் ஒரு குலதெய்வத்தின் ஆலயம் சென்று வழிபடுவது சிறப்பு என்று குருசாமி அவர்கள் கூறுவார்.

குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா


ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .