Saturday, November 25, 2017

சுவாமியே சரணம் ஐயப்பா -5

சொரி முத்து ஐயனார்


இப்பதிவுகளையும்  காணலாமே         4   6   7   8   9   10  11   12   13   14   15   16   17   18   19   20   21



அலங்கார வளைவு 

ஐயப்ப வழிபாடு என்பது யோக மார்க்கம்  என்று குருசாமி அவர்கள் கூறுவார்கள். தலையில் இருமுடி தாங்கி சரணகோஷத்துடன் பெருவழிப்பாதையில் செல்லுவதே சிறந்த யோகாப்பியாசம். தாங்கள் அறியாமலே ஆஞ்நா சக்கரத்தில் விழிப்பு ஏற்படுகின்றது என்பார்.  யோகத்தில் கூறப்பட்டுள்ள நியம யமங்களே விரத முறைகள் இவ்விரதத்தால் உடல் பக்குவப்படுகின்றது, ஐயனையே எப்போதும்  நினைப்பதால் மனதும் பக்குவப்படுகின்றது.  இவ்வாறு விரதம் மற்றும் சபரிமலை  யாத்திரையினால் தத்வம்ஸி  அதாவது இந்த ஜீவாத்மாவும் , பரமாத்மாவான ஐயப்பனும் ஒன்றே என்ற உண்மையை நாம் உணரலாம் என்பார் குருசாமி.   

ஐயன் அமர்ந்துள்ளதும் யோகாசானத்தில்தான், யோக பட்டமும் அணிந்துள்ளார்.  வலத்திருக்கரத்தில் உள்ளதும் யோக முத்திரையான சின்முத்திரைதான். இவ்வாறு யோகா நிலையில் அமர்ந்து நாம் எல்லோரும் தவம் செய்து கொண்டிருக்கிறார் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்பன். எனவேதான் இன்றும் பல பக்தர்களுக்கு பல்வேறு ரூபங்களில் வந்து அவர்களின் குறைகளை தீர்த்து அருளுகின்றார். 


நமது உடலில் ஆறு சக்கரங்கள் உள்ளன அவற்றை உணர்த்தும் வகையில் முருகனுக்கு ஆறு படை வீடுகள் அமைந்துள்ளன என்று அனைவருக்கும் தெரியும். அது போலவே  முருகனின் சோதரர்களான கணபதிக்கும், ஐயப்பனுக்கும் ஆறு ஆதாரத்தலங்கள் (படை வீடுகள்) உள்ளன என்று பலருக்கு தெரியாது.

 ஐயனின் ஆறு ஆதாரத்தலங்கள்:

சொரி முத்து ஐயனார் : மூலாதாரம்

அச்சன் கோவில் :  சுவாதிஷ்டானம்.

ஆரியங்காவு :  மணிபூரகம்.

குளத்துப்புழை : அநாகதம்.

எருமேலி : விசுத்தி

சபரிமலை : ஆக்ஞை

இத்தலங்களில்  முதலாவதாக மூலாதார  ஸ்தலமாக விளங்குபது  பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவில். இங்கு தர்மசாஸ்தா, பூர்ணா, புஷ்கலா தேவியருடன் அருள்பாலிக்கிறார்.


பந்தள மன்னர் அரண்மனையில் வளர்ந்து வந்த சாஸ்தாவின் அம்சமான ஐயப்பன், தன் இளவயதில், இப்பகுதியில், வீர விளையாட்டுகளை கற்க வந்தார். அதன் காரணமாக, இங்கு முதன் முதலில், சாஸ்தாவிற்கு கோவில் எழுந்ததாகவும், பின், அவரது வரலாற்று நிகழ்வுகள் நடந்த குளத்துப்புழை, ஆரியங்காவு மற்றும் அச்சன்கோவில் ஆகிய இடங்களில் கோவில்கள் எழுப்பப்பட்டதாகவும், இறுதியாக அவர் தவம் மேற்கொண்ட சபரிமலையில் கோவில் தோன்றியதாகவும் ஒரு  தகவல் உண்டு.



தாமிரபரணியில் குளியல் 



திருக்கயிலாயத்தில் சிவ பார்வதியின் திருமணம் நடந்தபோது, தேவர்கள் முனிவர்கள் அனைவரும் கயிலையில் கூடியதால் வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தது.  உயர்ந்துவிட்ட தென்பகுதியை சமன்படுத்த ஈசனின் ஆணைப்படி பொதிகை மலைக்கு வந்தார் அகத்திய மாமுனிவர். பல தலங்களுக்குச் சென்ற அவர், ஆடி அமாவாசை அன்று பொதிகை மலைக்குத் திரும்பி விடுவார். அதேபோல ஓர் ஆடி அமாவாசையில் தாமிரபரணியின் முகத்துவாரத்தை அடைந்து நீராடினார். அங்கு ஈசன் அவருக்குத் தன் திருமணக் காட்சியை காட்டியருளினார். அந்தப் பகுதி தற்போது கல்யாணி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

ஒரு பாறை மீதமர்ந்து யோக நித்திரையில் ஆழ்ந்தார் அகத்தியர். அவர் அகத்திற்குள் ஒரு ஜோதி பரவிற்று. அந்த ஒளியினூடே பிரம்ம ராட்சசி, பேச்சி, சாஸ்தா முதலிய எல்லா தெய்வங்களும் மகாலிங்கம் எனும் பெயர் தாங்கிய பரமனை பூஜிப்பதைக் கண்டார். சட்டென்று தன் அக ஒளிக்குள் கண்ட அந்த திவ்ய காட்சி புற உலகிலும் நடைபெறுவதைப் பார்த்து தன்னை மறந்து நெக்குருகிப் போனார். தீர்த்தத்தின் விசேஷமும், தலத்தின் சாந்நித்தியமும் இத்தனை மகாசக்தி வாய்ந்ததாக உள்ளதே என்று ஆச்சரியப்பட்டார். 

உடனே அகத்தியர் இந்த தீர்த்த கட்டத்தில் யார் நீராடி, இங்குள்ள மூர்த்திகளை வழிபாடு செய்கிறார்களோ, அவர்களுக்கு எல்லா இன்னல்களும் நெருப்பு பட்ட பஞ்சு போல சாம்பலாக வேண்டும். புத்திர பாக்கியத்துடன் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைத்து அவர்கள் நல்வாழ்வு பெற வேண்டுமென்று ஈசனை வணங்கி நின்றார். ஈசனும் இசைந்து அந்த வரத்தை அருளினார். தேவர்கள் அனைவரும் இத்திருக் காட்சியை கண்டனர். மெய்சிலிர்த்தனர். மலர்களை மழையாகப் பொழிந்தனர். இவ்வாறு பூக்களை தேவர்கள் சொரிந்ததால் அத்தலத்தில் உறைந்து ஈசனையும் பூஜித்து வரும் அய்யனாரையும் (மலர்ச்)சொரி முத்து அய்யனார் என்று பிற்காலத்தில் அழைத்தனர். அவரின் அருள் விலை மதிக்க முடியாத முத்தாக இருப்பதால் சொரி என்பதோடு முத்தையும் சேர்த்து ஏற்றம் கொடுத்து வணங்கினர். அகத்தியரால் வணங்கப்பட்ட புகழ்பெற்ற இந்த ஆலயம், புராண காலத்திற்குப் பிறகு மெல்ல பூமிக்குள் மறைந்தது. 




அரிய வகை கள்ளிச்செடிகள்


மக்கள் பண்டமாற்று முறை மூலம் பொருட்களை வாங்கி, கொடுத்து வாழ்க்கை நடத்திய காலம். பாண்டிய நாட்டிலிருந்து மாட்டு வண்டியில் சுமை ஏற்றி வந்து பொதிகை மலை உச்சியில் சேரநாட்டவர்களுடன் பண்ட மாற்றம் செய்து வந்தனர். திருடர்கள் பயம் மிக அதிகமாக இருந்தது. எனவே மாட்டு வண்டிகள் கூட்டம் கூட்டமாகத்தான் வரும். அப்படி வந்த வண்டிகளில் முதல் வண்டி சொரிமுத்து அய்யனார் இருப்பிடம் வந்தபோது அந்த அற்புதம் நடந்தது. வண்டியின் சக்கரம் ஒரு கல் மீது மோதியது. கல்லிலிருந்து ரத்தம் வடிந்தது. வண்டியோட்டி அதிர்ச்சியில் அலறினார். அனைவரும் ஓடி வந்து பார்த்தனர். செய்வதறியாது திகைத்தனர். வானத்தில் மின்னல் வெட்டியது. கூடவே அசரீரி ஒலித்தது. ‘‘இந்த இடம் அகத்திய மாமுனிவர் ஞானதிருஷ்டி மூலம் மகாலிங்க சுவாமி, சொரிமுத்து அய்யனார் புடை சூழ  இருந்ததை தரிசித்த இடம். ஆகவே இங்கு ஆகம விதிப்படி பூஜைகள் நடத்த வேண்டும். வருங்காலத்தில் இவ்விடம் மிகச் சிறப்பான புண்ணிய தலமாக விளங்கும்’’ என்று ஓங்கி ஒலித்தது. 

களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய வனப்பகுதிக்குள் பொதிகை மலையில் மரங்கள் சூழ, தென்றல் தாலாட்டு பாட தாமிரபரணி சதங்கைகள் ஒலிப்பது போல சலசலத்து ஓட, ஒருமித்து மிளிரும் அந்த மொத்த அழகின் மையத்தே சொரிமுத்து அய்யனார் ஆலயம் அழகுற அமைந்துள்ளது. அகத்தியர் அனுபவித்த அதே உணர்வை நாமும் அடைய முடிகிறது. காட்டு பகுதியான இவ்விடத்தில் கொடிய விலங்குகள் இருந்தும், அவை எதுவும் பக்தர்களைச் சிறிதும் துன்புறுத்தியதாக தகவலே இல்லை.


பூர்ணா புஷ்கலா சமேத சொரி முத்து ஐயனார்


இக்கோயிலில் மகாலிங்கம், சொரி முத்து அய்யனார், பூதத்தார், பிரம்ம ராட்சசி, தளவாய் மாடசாமி, தூசி மாடசாமி, பட்டவராயர் ஆகியோருக்குத் தனித்தனியே சந்நதிகள் உள்ளன. நாககன்னியரும், கிருஷ்ணரும் கூட்டு சாஸ்தா என்ற பெயரில் இங்கு உள்ளனர். இது வேறு எங்கும் இல்லாத சிறப்பு அம்சமாகும். பேச்சியம்மன் துஷ்ட அவதானி கோலத்திலும் காட்சி தருகிறார். 

இந்த கோயிலில் காத்தவராயர், மேலவாசல் பூதம், மேலவாசல் வினாயகர், தட்சிணாமூர்த்தி, கும்ப மாமுனி, பெரியசாமி, பாதாள பூதம், கரடிமாடன், பிரம்ம ராட்சசி, பேச்சி, சுடலைமாடன், கருப்பன், கருப்பி, தளவாய் மாடன், தூண்டில் மாடன் மற்றும் பட்டவராயர் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர். இந்த கோயிலில் குழந்தை வரம் தரும் தெய்வமாக பிரம்ம ராட்சசி அம்மன் திகழ்கிறார். இவள் மகிஷாசுரமர்த்தினியின் அம்சமாகும். இவளுக்கு பூஜை முதலான நியமங்களைச் செய்பவர்கள் வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் பொதுமக்களுக்கு அருள் வாக்கு வழங்குகின்றனர். 

. இந்த கோயிலில் வீற்றிருக்கும் தெய்வமான முத்துப்பட்டனை பக்தர்கள் ட்டவராயர் என அழைக்கிறார்கள். பக்தர்கள் இவருக்கு காலணிகளை காணிக்கையாக அளிக்கின்றனர். அந்த செருப்புகள் கோயில் சுவரில் தொங்கவிடப்பட்டுள்ளன. அதை யாரும் தொடுவதில்லை. ஆனால் இந்த செருப்புகள் தேய்வதும், அவற்றில் சகதி, மண், புல், மிருகங்களின் கழிவு என்று ஒட்டிக்கொண்டிருப்பது காண வியப்பாக இருக்கும்அந்த செருப்புகளை பட்டவராயர் அணிந்துகொண்டு வேட்டைக்கு சென்று வருவதாக ஒரு நம்பிக்கை உள்ளது. பட்டவராயர் சந்நதியில் பொம்மக்கா, திம்மக்கா ஆகியோரும் உள்ளனர். இக்கோயிலில் தை, மாசி, ஆடி மாத அமாவாசை தினங்கள் மிகவும் விசேஷமான நாட்களாகும்.

இக்கோயிலுக்கு அருகே உள்ள பாணதீர்த்த அருவிக்கு பக்தர்கள் சென்று புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு நீத்தார்கடன் மேற்கொள்வார்கள்.இந்த பாணதீர்த்தத்தில்தான் ராமர் தனது தந்தை தசரதனுக்கு திதி செய்தார் என்று ஓர் ஐதீகம் நிலவுகிறது. இந்த பாணதீர்த்தத்திற்கும், சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கும் இடையே முன்பு சாலை வசதி இருந்தது. 1992ல் ஏற்பட்ட புயல் வெள்ளத்தில் இந்த பாதை தூர்ந்து போய் விட்டது. ஆகவே தற்போது இந்த இடத்திற்கு பாபநாசம் மேலணை வழியாக படகில்தான் செல்ல முடியும்.

ஆடி அமாவாசையில் பக்தர்கள் பூக்குழி இறங்குவர். பூதத்தார், தளவாய் மாடசாமி, பட்டவராயர் ஆகிய சந்நதிகள் முன்பு மூன்று கட்டமாக பூக்குழி இறங்கும் வைபவம் நடக்கும். பிரம்மராட்சசி, பூதத்தார், பேச்சியம்மன் சந்நதி முன்பு பக்தர்கள் பொங்கலிட்டும், தளவாய் மாடசாமி,  தூசி மாடசாமி, பட்டவராயர் சன்னிதிகள் முன்பு பக்தர்கள் மாமிச உணவுகளை படைத்தும் வழிபடுவார்கள். சங்கிலி பூதத்தார், தளவாய் மாடன், தூசி மாடன் தெய்வங்கள் முன்பு பக்தர்கள் தங்களது மார்பில் சங்கிலியால் அடித்துக்கொண்டு வழிபடுகிறார்கள்

குரங்குகள் ஏராளம் 

மழை முறையாக பெய்யவில்லை என்றால் இந்த கோயிலுக்கு வந்து சொரிமுத்து அய்யனாருக்கு சிறப்பு யாகம் செய்து பின் தாமிரபரணி தாயை விவசாயிகள் வணங்குகின்றனர். பூஜை முடிந்த உடனேயே மழை பொழியும் அதிசயத்தை இப்போதும் காணலாம்.

ஒரு காலத்தில் இப்பகுதியை ஆண்ட பாளையக்காரர்களான சிங்கம்பட்டி ஜமீன் சேர மன்னருக்கு உதவியாக போர் புரிய சென்ற போது தனது மூத்த வாரிசை இழக்க நேரிட்டதுசேர மன்னன் இளவரசரின் இழப்புக்கு ஈடாக என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு ஜமீன் அந்தக் காட்டில் குச்சி ஒடிக்க அனுமதி கேட்டார். உடனடியாக சேர மன்னன் சுமார்   2500 ஏக்கர் நிலத்தை சிங்கம்பட்டி ஜமீனுக்கு அளித்தார். இந்த இடத்துக்கு ஜமீன் சொந்தக்காரர் ஆகிவிட்டார். மேலும் இந்த இடத்தில் தாமிரபரணி தீர்த்தம் நிறைந்து இருப்பதாலும், அதற்கு அதிபதியாக சிங்கம்பட்டி ஜமீனே இருப்பதாலும் அவருடைய வாரிசுகள் தீர்த்தபதி என்றழைக்கப்பட்டனர். சொரிமுத்து அய்யனார் கோயில் விழாக் காலங்களில் சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி ராஜ உடையில் கம்பீரமாய் காட்சியளிப்பதும் இங்கு விசேஷமான ஒன்றாகும்

மணி விழுங்கி மரம் 
இக்கோயிலில்  உள்ள ஒரு மரத்தில் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் மணிகளைக் கட்டிவைக்கிறார்கள்.அந்த மணியை மரமே விழுங்கி விடுமாம். இதனால் அந்த மரத்தை மணி விழுங்கி மரம் என்று அழைக்கிறார்கள்.

ஆடி அமாவாசையன்று இக்கோயிலில் ஆண்களும், பெண்களும் பாணதீர்த்தம் சென்று அங்கு நீராடிவிட்டு வந்து சொரிமுத்து அய்யனாரை வணங்குகின்றனர்தோளிலும் இடுப்பிலும் சிறு குழுந்தைகளை தூக்கிக்கொண்டு ஆடி அமாவாசையில் பொழியும் மழையில் நனைந்து ஐயனை வணங்கி அருள் பெற, பக்தர்கள் லட்சக்கணக்கில் இங்கு கூடுகிறார்கள். பாபநாசத்தில் இருந்து பொதிகை மலையை பார்த்தால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பது கண்கொள்ளா காட்சியாகும்.   

ஐயப்பனின் முதல் நிலையாக  சொரிமுத்து அய்யனார் விளங்குவதால் கார்த்திகை மாதங்களில் பக்தர்கள் இங்கு வந்து மாலை அணிந்து சபரிமலை செல்கின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக எந்த காலமும் இரண்டு பூசாரிகள் இங்கே உள்ளனர். தினமும் மூன்று வேளை பூஜை நடத்தப்படுகிறது.

காது குத்துதல், முடி காணிக்கை செலுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தங்கும் விடுதி மற்றும் சமையல் பாத்திரங்களும் கிடைக்கும். இந்த வசதியை செய்து  தர அலுவலகத்தில் எப்போதும் ஊழியர்கள் உள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் குருசாமி அவர்கள் இவ்வாலயத்திற்கு அழைத்துச்செல்வார். காட்டுப்பகுதியில் உள்ளதால் பகலில் மட்டுமே செல்ல முடியும்.  காட்டு இலக்கா அலுவகத்தில் அனுமதி பெற்றே உள்ளே செல்ல முடியும் மிருகங்களின் நடமாட்டம் இருக்கும் என்பதால் மெதுவாக செல்லவும், ஒலிப்பான்களை (Horn) பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்துகின்றனர்.  ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தைத் தாண்டி கோயிலை அடைய வேண்டும்.

முதலில் மணிமுத்தாற்றில் நீராடுவோம். மூலிகை நீரில் நீராடி வெளியே வரும் போது  ஒரு புத்துணர்வு பெறுகின்றோம்.   மயில்களும், குரங்களும் சுதந்திரமாக சுற்றித்திரிகின்றன. வழியில் அபூர்வ கள்ளிச்செடிகளைக் காண்கிறோம்.  தக்ஷிணாமூர்த்தியுடன் அமைந்த அலங்கார வளைவு நம்மை வரவேற்கின்றது அதன் உள்ளே  நுழைந்தவுடன்  பிரம்மாண்டமான இலுப்பை மரம் அதன் அடியில் விநாயகர் அவருக்கு இரு புறமும் யானைகள் இருப்பது சிறப்பு.  மற்றும்  சங்கிலி பூதத்தார், மொட்டையர், பாதாள கண்டிகை, கும்பாமணி ஆகிய காவல் தெய்வங்களும் அருள் பாலிக்கின்றனர் . மரத்தில் கருங்குரங்குகள் அட்டகாசம் செய்து கொண்டிருக்கின்றன. விநாயகரை வணங்கி அனுமதி பெற்றுக்கொண்டு ஆலயத்தில் உள்ளே நுழைந்தால்  தனி சன்னதியில் பிரம்ம ராட்சசி,  பேச்சி, துளசி மாடன் ஆகியோர்  அருளுகின்றனர். பைரவரின் சன்னதிக்கு எதிரே நாய் வாகனம் அமைந்திருப்பது ஒரு சிறப்பு.

அடுத்து அகத்தியர் பூசித்த மகாலிங்கர் சன்னதி, அகத்தியரும் உடன் எழுந்தருளியுள்ளார். அதை அடுத்து பூர்ணா புஷ்கலா சமேதராக அய்யனார் அருட்காட்சி அருளுகின்றார்.  இடது காலை குத்துக்காலிட்டு, வலது காலை தொங்கவிட்டபடி சற்றே வலப்புறமாக  சாய்ந்தவாறு எழிலாக அருட்காட்சி தருகின்றார். சந்தனக்காப்பில் ஐயனை தரிசிக்கும் போது அப்படியே மெய் சிலிர்க்கின்றது. இவர்களூடன் சப்த கன்னியரும் அருள் பாலிக்கின்றனர்.  இவருக்கு எதிரே ஒரே பீடத்தில் நந்தி, யானை, குதிரை மூன்றும் ஒன்றாக அமைத்திருப்பது தனி சிறப்பு. அடுத்தடுத்து தூசி மாடன்,  இருளப்பன், இருளம்மன், வித்தியாசமாக கரடி மாடசாமி சன்னதிகள் இம்மண்டபத்தில் அமைந்துள்ளன.


பட்டவராயர் 

ஐயனின் பரிவார தெய்வமான பட்டவராயர்  சன்னதி சற்றுத்தள்ளி தனியாக அமைந்துள்ளது.  பொம்மக்கா திம்மக்கா சமேதராக கையில் வாளேந்தி அருள் பாலிக்கின்றார் பட்டவராயர்.  அங்குள்ள பூசாரி முத்துப்பட்டனின்  கதையை அருமையாக சொல்லுகின்றார்.

இப்பகுதியில் வசித்த பிராமணரான முத்துப்பட்டன் சூழ்நிலை காரணமாக தாழத்தப்பட்ட குலப்பெண்களை மணந்து கொள்கிறார். ஒரு சமயம் பசுக்களைக் காக்க செல்லும் போது சூழ்ச்சியால் இவரை எதிரிகள் கொன்று விடுகின்றனர், பட்டன் இறந்து கிடந்த இடத்திற்கு  மனைவிகள் இருவரும்  வந்தனர். இறந்த கணவனைப் பார்த்ததும் அலறிப் புலம்பி சட்டியை எறிந்துவிட்டு அவன் மேலே விழுந்து அழுதனர். பட்டனை எடுத்தத் தோள் மேல் போட்டுக்கொண்டு சிங்கம்பட்டி அரண்மனைக்குச் சென்றனர். அரசனிடம் தங்கள் வரலாற்றைக் கூறி தாங்கள் பட்டனுடன் தீயிலே இறக்க அனுமதி கேட்டனர். பழிபாவம் ஏற்படும் என்று மன்னன் மறுத்துப் பார்த்தான். பெண்கள் ஒரேயடியாய் கெஞ்சினர்.
பொதிகை மலை
 மனதை மயக்கும் மாலைக் காட்சி
அவர்கள் கற்பின் உறுதியைக் கண்ட மன்னன் பெரும் தீ வளர்க்க உதவினான். அத்தீயில் இருவரும் பாய்ந்து உயிரை விட்டனர், கூடவே ஆச்சி நாயும் பூச்சி நாயும் தீயில் விழுந்து உயிர் விட்டது. அவர்களின்  கதையைக்  கேட்ட ஊரார் அவர்கள் தெய்வங்களாகி விட்டதை அறிந்தனர். சிங்கம்பட்டி மன்னன் அவர்களுக்கு சொரி முத்து ஐயனாரின் ஆலயத்திற்கு அருகில்  கோயில் எடுப்பித்து பலியும் பூசனையும் செய்வித்தான். பட்டவராயாரை  வணங்கி விட்டு திரும்பி வரும் போது பொங்கல் வைக்கும் மடத்தைக் கடக்கின்றோம். வலது பக்கம் சைவமும், இடது பக்கம் அசைவமும் சமைக்கப்படுகின்றது என்றார் குருசாமிகள். உளுந்து வடை இத்தலத்தின் சிறப்பு பிரசாதம்.

காரையாறு என்று அழைக்கப்படும் இத்தலத்திற்கு நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து பாபநாசம் வழியாக பொதிகை மலை செல்ல வேண்டும்பின் லோயர் கேம்பில் இருந்து அப்பர் கேம்ப் செல்லும் வழியில் இடது புறம் செல்லும் சாலையில் சென்று ஆற்றை கடந்தால் கோயிலை அடையலாம்ஆடி அமாவாசையில் இந்த கோயிலுக்கு செல்ல அம்பாசமுத்திரத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றனவேன் மற்றும் ஆட்டோ வசதியும் உண்டு சமயம் கிட்டும் போது  சொரிமுத்து ஐயனாரை தரிசித்துவிட்டு வாருங்கள்.

********
ஒரு சில தலங்களை மட்டும் ஆதாரத்தலங்கள் என்று குறிப்பிடுவதன் தாத்பர்யம் என்ன என்பதற்கு குருசாமி அவர்கள் கூறிய விளக்கம். இத்தலங்களில் அமைந்துள்ள இறைசக்தியானது நமது உடலில் அமைந்துள்ள சக்கரங்களைத் தூண்டுகின்றன. எனவே இத்தலங்களுக்கு செல்லும் போது இச்சக்கரங்கள் தூய்மையடைகின்றன. நாம் அறியாமலே யோக நிலைக்கு செல்கின்றோம். 

குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா


ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .



2 comments:

வெங்கட் நாகராஜ் said...

அறிந்திராத தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

S.Muruganandam said...

சுவாமியே சரணம் ஐயப்பா. மிக்க நன்றி ஐயா.