Sunday, May 31, 2015

முக்தியளிக்கும் முக்திநாதர் தரிசனம் - 10

காத்மாண்டு  தர்பார்   சதுக்கம்

மறு நாள் காலையிலும் மழை தொடர்ந்தது,  ஜோம்சம் விமான போக்குவரத்து அதிகாலையில் நடைபெறவில்லை. போக்ராவிலிருந்தவர்கள்  பேருந்து மூலம் காத்மாண்டிற்கு புறப்பட்டோம். சுமார் 9  மணியளவில் வானிலை சரியாகி ஜோம்சமில் மாட்டிக்கொண்டவர்கள் போக்ரா வந்து உடனே காத்மாண்டிற்கு கிளம்பினார்கள்.
படான் தர்பார் சதுக்கம்
நரசிம்மர் சிலை

அடியேன் - ஜனார்த்தனன்
( அரண்மணை வளாகம்)

பைரவர்


ஓர் அழகிய கருடன் சிலை

சுவற்றில்தான் எத்தனை விதமான முகங்கள்
(இவ்வருட நில நடுக்கத்தில் இந்த புராதன கட்டிடங்கள் பல் சேதமடைந்து விட்டன, மறுபடியும் புதுப்பொலிவுடன் கட்டுவார்களா???)  

 அடியோங்கள் மாலை காத்மாண்டை அடைந்தோம் தேமல் பகுதியில் உள்ள ஹாரதி ஹோட்டலில் தங்கினோம். இங்கும் மழை பெய்து கொண்டிருந்தது. ஹாரதி என்பது ஒர் யக்ஷிணி. புத்த விகாரங்கள் மற்றும் ஸ்தூபங்களின் காவல் தெய்வம். நம்மூர் மாரியம்மன் போல் அம்மை நோயில் இருந்து காப்பவளாக வணங்கப்பட்கிறாள்.. அங்கு இந்த  அம்மனின் கதையை இவ்வாறு கூறினார்கள்.  குழந்தைகள் மேல் மிகுந்த பிரியம் கொண்ட இவள் காத்மாண்டு பள்ளத்தாக்கில் உள்ள குழந்தைகளை கடத்திச் சென்று தன்னுடன் வைத்துக்கொண்டு அவர்களை நன்றாக போஷித்து வந்தாள். இதனால் துன்பமுற்ற அந்தக் குழந்தைகளின் பெற்றோர் புத்தரிடம் முறையிட்டனர். புத்தரும் ஹாரதி தேவியை திருத்த ஒரு உபாயம் செய்தார். அவளது குழந்தையை புத்தர் எடுத்துக் கொண்டு வந்து விட்டார். தாய் பாசம் என்பது அப்போது ஹாரதி தேவிக்கு புரிந்தது. புத்தரின் அறிவுரையின் பேரில் அனைத்து குழந்தைகளையும் விடுவித்தாள். அப்போது புத்தர் அளித்த வரத்தின் படி குழந்தைகளை மற்றும் புத்தரின் புனித தலங்களை  காக்கும் பேறு பெற்றாள். எனவேதான் அனைத்து புத்த தலங்களிலும் ஹாரதி தேவிக்கு தனி சன்னதி உள்ளது.      இனி அந்த ஹோட்டலில் அழகிய மரவேலைப்பாடுகளுடன் கூடிய அரிய சிற்பங்கள் மற்றும் இவர்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பல ஓவியங்கள் இருந்தன.  


 ஹாரதி ஹோட்டலில்


 இவ்வாறு இந்த மூன்றாவது யாத்திரையின் போது அவனருளால் சிவசக்தி தரிசனமும், ஹரிஹர தரிசனமும் திவ்யமாக  கிட்டியது. இத்தடவை  இரண்டு கடினமான யாத்திரைகளும் எந்தவிதமான விக்னமும் இல்லாமல் நிறைவடையும்படி அருள் பாலித்தார் மலையரையன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதர்.

பசுபதி நாதர் ஆலயம் 
 .    
பல் வேறு ஆலயங்களும் அரண்மணைகள்ம் நிறைந்த் காத்மாண்டின் படான் தர்பார் சதுக்கம் சுமார் 10  நிமிட நடை தூரத்தில் இருந்ததால் சிலர் மாலையிலும் சிலர் காலையிலும் அங்கு சென்று சுற்றிப்பார்த்து விட்டு வந்தனர்.நேபாளத்தில் கன்னிப் பெண்ணை அம்மனாக வணங்கும் வழக்கம் உள்ளது.  அந்த வாழும் அம்மன் சிக்கும் அரண்மணை குமாரி பஹல் என்று அழைக்கப்படுகின்றது. அங்கு சென்று     குமாரியின் தரிசனமும் பெற்று வந்தனர். சிலர் மறுபடியும் பசுபதிநாதர் ஆலயம் சென்று நன்றி கூறிவிட்டு வந்தனர். அடியோங்களுக்கு ஐயனின் காலை அபிடேகம் தரிசனம் செய்யும் பெரும்  பாக்கியம் கிட்டியது. காத்மாண்டுவில் ருத்ராக்ஷம் வாங்கினோம்.

ருத்ராக்ஷம் வாங்குகின்றோம்


காத்மாண்டு விமான நிலையம்






இவ்வாறாக திருக்கயிலாயம் மற்றும் முக்திநாத் யாத்திரைகள் அவனருளால்  நிறைவு செய்து விமானம் மூலம் சென்னை திரும்பினோம். இதுவரை வந்து யாத்திரையை இரசித்த அன்பர்கள் அனைவருக்கும் குறிப்பாக கந்தசாமி ஐயா அவர்களுக்கும் நன்றி.

அடியேனின் நண்பர் ஒருவர் கோரக்பூர்,  போக்ரா வழியாக முக்திநாத் சென்று வந்தார். சமயம் கிட்டும் போது அவ்வழியின் யாத்திரை பற்றியும் விவரங்கள் தர முயற்சி செய்கிறேன்.

Saturday, May 30, 2015

முக்தியளிக்கும் முக்திநாதர் தரிசனம் - 9

ஃபேவா ஏரி

போக்ராவின் சிறப்பே அதன் ஏரிதான். இந்த ஏரியில் படகுப்பயணம் செய்யாவிட்டால் போக்ரா சென்றதே வீண் என்று சொல்லலாம்.  “ஃபேவா ஏரி” (Phewa Lake) என்று அழைக்கப்படும் இந்த அழகான ஏரி  நேபாள் நாட்டின் இரண்டாவது பெரிய ஏரி ஆகும். சுற்றிலும் நெடிதுயர்ந்த பனி மூடிய மலைச்சிகரங்கள் அதன் அடிவாரத்தில் பச்சை நிரத்தில் மிகவும் விலாசனமான ஏரி. அருமையான சூழலில் அமைந்துள்ளது பேவா ஏரி. 

பேவா ஏரியில் படகுகள்



பனி மூடிய அன்னபூர்ணா மலைச் சிகரங்களின் அழகை இந்த ஏரியின் நீர் அருமையாக பிரதிபலிக்கின்றது, கரையில் போடப்பட்டுள்ள பெஞ்சுகளில் அமர்ந் து  அந்த அழகை இரசிப்பதே ஒரு அருமையான அனுபவம்.  போக்ராவில் காத்மாண்டுவைப் போல கூட்டம் அதிகம் இல்லை, சப்தம் இல்லை கிராம சூழலே விளங்குகின்றது. எவ்வளவு நாள் வேண்டுமென்றாலும் அமைதியாக தங்க ஏற்ற இடம். ஏரியை சுற்றிலும் நிறைய தங்கும் விடுதிகள்  உள்ளன.  கரையில் ஆல மரங்களும் அரச மரங்களும் உள்ளன அதன் அடியில் கற்பெஞ்சுகள் இடப்பட்டுள்ளது, அதில் அமர்ந்து ஏரியின் அழகை  அமைதியாக இரசிக்கலாம்.  படகுப்பயணம் செய்யலாம். சைக்கிளில் அல்லது நடந்து ஏரியை  வலம் வரலாம். 



ஏரியின் மத்தியில் லேக் வாராஹி ஆலயம்



கூரையில் மீன் கொத்திப் பறவைகள்            

ஏரியின் நடுவில் லேக் வராஹி ஆலயம் அமைந்துள்ளது.  ஐரோப்பியர்கள் அதிகம் வருவதால், கண்காணிப்பு கோபுரம், அதி வேக மீட்புப் படகுகள், படகில் பயணம் செய்யும் அனைவரும் பாதுகாப்பு கவசம் அணிய வேண்டும் எல்லா வகையான பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன. நேரம் குறைவாக இருந்ததால் அடியோங்கள்  லேக் வாராஹி ஆலயம் படகில் சுற்றி வந்து வணங்கி விட்டு தங்கும் விடுதிக்கு திரும்பி வந்தோம். வரும் வழியில் மழை பெய்ய ஆரம்பித்து விட்டது, சூரியன் மறையும் அழகையும் இரசித்தோம்.

அந்தி சாயும் வேளையில் ஏரியின் அழகு
இவ்வாறாக அரை நாளில் அவசரம் அவசரமாக போக்ராவின் சுற்றுலாவை முடித்தோம்.

Friday, May 29, 2015

முக்தியளிக்கும் முக்திநாதர் தரிசனம் - 8

போக்ரா சுற்றுலா

சுற்றுலா செல்ல தயாராகி நிற்கின்றோம்

போக்ரா நேபாள நாட்டில் காத்மாண்டு நகருக்கு அடுத்த  பெரிய நகரம் ஆகும். அருமையான பனி மூடிய அன்னபூரணா, தவுளகிரி, மனசுலு  சிகரங்கள் பின்னணியில் விளங்க,  மிகப்பெரிய ஏரி, அருங்காட்சியகங்கள், கோவில்கள், நீர்வீழ்ச்சி, பாதாள ஆறு, குகைகள் என்று சுற்றுலா பயணிகள் பார்த்து இரசிக்க  வேண்டிய பல அம்சங்கள் இந்நகரத்தில் அமைந்துள்ளன.  மற்றும் அன்னபூரணா மலை சிகர ஏற்றதிற்காக செல்பவர்கள், முக்திநாத் செல்பவர்கள் ஆகியோர் வந்து செல்வதாலும் பல  தங்கும் விடுதிகளும் உணவு விடுதிகளும் இவ்வூரில் அமைந்துள்ளன. இவ்வூரிலிருந்து நமக்கு அன்னபூரணா மலைச்சிகரங்களின் அருமையான காட்சி நமக்கு கிட்டுகின்றது என்று முன்னமே பார்த்தோமல்லவா? எனவே அனைத்து சுற்றுலாப் பயணிகளும் இங்கு ஒரு நாளாவது தங்கி சுற்றிப்பார்த்து விட்டுத்தான் செல்கின்றனர். எனவே நாங்களும் போக்ராவை சுற்றிப்பார்க்க கிளம்பினோம்.

 சிறு  குன்றின் மேல் உள்ள அம்மன் கோயில் வளாகத்திற்கு செல்லும் படிகள்
(குமாரசாமி, இளங்கோவன், அடியேன், இராமகிருஷ்ணன்)

விநாயகர் சன்னதி முன் சுந்தர்
(இப்பதிவுகளில் உள்ள பல புகைப்படங்கள் இவர் கை வண்ணம் ஆகும்)

மூஞ்சூறு வாகனம்

விந்தியாவாசினி அம்மன் சன்னதி
( நெற்றிச்சுட்டியை கவனித்தீர்களா?)

 அம்மன் சன்னதி முகப்பு[ பலகை

சிவன் சன்னிதி முன் நந்தி வாகனம்


சிவன் சன்னிதியின் சில கற்சிற்பங்கள்

முதலில் நாங்கள் சென்றது விந்தியாவாசினி ஆலயம் ஆகும். போக்ரா நகரின் காவல் தேவதை இந்த அம்மன் என்று போற்றப்படுகின்றாள். அஷ்டபுஜ துர்க்கையாக அருள் பாலிக்கின்றாள் அன்னை. இப்பிரதேச அரசன் விந்திய மலையிலிருந்து அம்மன் சிலையை கொணர்ந்ததால் அம்மனுக்கு இந்தத்திருநாமம்.  ஒரு சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது ஆலய  வளாகம். ஒரு தனி சன்னதி வட இந்தியக்கோவில்கள் போல  விமானம்  உள் பக்கம் ஸ்ரீசக்ரம் அமைத்துள்ளனர். அம்மனை தொட்டு வணங்க அனுமதிக்கின்றனர். மேலும் கணபதி. பசுபதிநாதர், லக்ஷ்மி நாராயணர், இராதா கிருஷ்ணர், சீதா இராமன் சந்நிதிகளும் இவ்வளாகத்தில் அமைந்துள்ளன. ஒரு ருத்ராட்ச மரமும் ஆலய வளாகத்தில் உள்ளது. அருமையான மர வேலைப்பாடுகள் கொண்ட கதவுகள், ஜன்னல்கள் இவ்வாலயத்தின் ஒரு தனி சிறப்பு ஆகும்.  குன்றின் மேலிருந்து போக்ரா நகரத்தின் அழகைக் கண்டு இரசிக்கலாம்.

இராதா கிருஷ்ணர் - லக்ஷ்மி நாராயணர் - சீதா இராமர் சன்னதி
லக்ஷ்மி நாராயணர்
(கதவின் மர வேலைப்பாட்டை கவனியுங்கள்)
 கருட பலகை

இராதா கிருஷ்ணர் சன்னதி முன் இருந்த பித்தளை குத்து விளக்கு
(நுண்ணிய வேலைப்பாட்டை கவனியுங்கள்)

கோவிலைக் கட்டிய அரசர்

அடுத்து நாங்கள் சென்றது  செட்டி கண்டகி நதி என்னும்  வெள்ளை கண்டகி நதி, முக்திநாத் சென்ற போது நாங்கள் பார்த்தது காளி கண்டகி நதி அதாவது கருப்பு கண்டகி நதி, இந்நதி பூமி மட்டத்தில் பாய்கின்றாள். இங்கு பாய்வது சேதி கண்டகி நதி அதாவது வெள்ளை கண்டகி நதி இவள் பாதாளத்தில் பாய்கின்றாள். K. I. சிங் என்ற இந்தியர்  நீர் மின்சாரம் உற்பத்தி செய்ய   இந்நதியின் ஓட்டதைப் பயன்படுத்தினார் எனவே அந்த நீர் மின் நிலையம் அவர் பெயரால் அழைக்கப்படுகின்றது. அவ்விடம் சென்று Calcium Carbonate என்னும் தாதுப் பொருள் அதிகமாக உள்ளதால் வெண்மையாக  பூமிக்குக்கீழ் பாயும் ஆற்றை கண்டோம். எனவே இந்நதியின் குறுக்கே உள்ள பாலம் இவர் பெயரால் K.I.சிங் பாலம் என்றே அழைக்கப்படுகின்றது.   அருகிலேயே கூர்க்காக்களின் அருங்காட்சியகம் உள்ளது.
பாதாளத்தில் பாய்கின்றாள் வெள்ளை கண்டகி நதி

நீர் மின் நிலையத்தில் வெள்ளை கண்டகி நதி

                கூர்க்கா அருங்காட்சியகம்                         

 அடுத்து நாங்கள் இங்கு பாதாளே சாங்கோ (Patale Chhango - Nether Fall) என்றும் தற்போது Devi’s  Falls என்றும் அழைக்கப்படும் அருவியைக் காணச்சென்றோம். பேவா ஏரியிலிருந்து உருவாகி ஓடி வரும் ஒரு ஆறு இங்கே பாதாளத்தில் சென்று மறைந்து ஓடி மீண்டும் வெளியே வருகின்றாள். Davis என்ற ஐரோப்பியர் தவறி இந்நதியில் விழுந்து  பாதாளத்தில் சென்று மறைந்து பின்னர் வெளியே வந்ததால் அவர் நினைவாக தற்போது இப்பெயரில் அழைக்கப்படுகின்றது. அருகே பல கடைகள் உள்ளன பல திபெத்திய கலைப் பொருட்கள் விற்பனைக்கு உள்ளன.  இதன் எதிரே குப்தேஸ்வர் மஹாதேவ் என்னும் ஒரு குகைக்கோவில் சென்று சிவபெருமானை வழிபட்டு நிறைவாக இவ்வூரில் அவசியம் பார்க்க வேண்டிய   பேவா ஏரியை அடைந்தோம். 


ஒரு மழலை






கலைப் பொருட்கள் விற்கும் கடைகள்



குப்தேஸ்வர் மஹா தேவ் குகைக் கோவில்

Thursday, May 28, 2015

முக்தியளிக்கும் முக்திநாதர் தரிசனம் - 7

போக்ரா திரும்பினோம்

அந்த கிராமத்தில் மதிய உணவு உண்டோம். இங்கு  உணவு விடுதிகளில் அனைவருக்கும் அளவாகவே  சாப்பாடு தருகின்றனர். ஆனால் மிகவும் சுவையாக உள்ளது. சுடு தண்ணீர் கொடுக்கின்றனர். தண்ணீர் பாட்டில் விலை  மிகவும் அதிகம்.  இதை எதற்காக எழுதுகின்றேன் என்றால் பசி தாங்க முடியாதவர்கள் கையில் பிஸ்கெட் மற்றும் நொறுக்குத்தீனி  மற்றும் குடிதண்ணீர் கையில் எடுத்துசெல்வது நல்லது. வழியில் ஒவ்வொரு இல்லத்தின் முன்னரும் சாளக்கிராமமும், திபெத்திய கலைப்பொருள்களும் விற்பனைக்காக வைத்துள்ளனர். விரும்புபவர்கள் பேரம் பேசி வாங்கிக்கொள்ளலாம்.    பின்னர் பேருந்து மூலம் திரும்பி வந்து ஜோம்சமில் தங்கினோம்.



  வழியில் ஒரு புத்த  விகாரம் 

ஒர் சிறு கிராமம்

தவளகிரியின் ஒரு சிகரம்

 மறு நாள் காலை விமான நிலையம் சென்ற போது அடியோங்கள் பயணம் செய்ய வேண்டிய விமானத்தினர் யாரையும் காணவில்லை. விசாரித்ததில் விமானம் பரிசோதனைக்கக காத்மண்டு சென்றுள்ளது எப்போது வரும் என்று தெரியவில்லை என்றார்கள். எப்படியோ 8 மணி அளவில் விமானம் வந்தது. வேண்டிக்கொண்டதின் பேரில் ஒரு சிலரை மற்றொரு  விமானத்தில் பயணம் செய்ய ஏற்பாடு செய்து தந்தனர்.  ஏதோ ஒரு  கோணல் நடைபெறும் என்பது எங்கள் குழுவினருக்கும் சரியானதாகியது. அனைவரும் அன்று போக்ரா திரும்ப முடியவில்லை. எட்டு அன்பர்கள் ஜோம்சமிலேயே ஏகாதசி தினத்தன்று தங்கும்படியாயிற்று.


விமானத்திலிருந்து வரகு அரிசி வயல்களின் காட்சி

 மலை வளம்
ஓர்  நதி


எதிரே ஒரு சிறு விமானம்

 சென்றபோது அதிகாலையில் சென்றதால் போக்ரா விமானத்தை சரியாக பார்க்கவில்லை. திரும்பி வந்த போது எடுத்த படங்கள்.


போக்ரா விமான நிலையம் 




பூக்களால் நேபாள வரை படம்

திரும்பி வரும் போது போக்ரா நகரத்தில் உள்ள பேவா ஏரியின் (Phewa Lake)  அழகை பறவைப்பார்வையாக பார்த்து இரசித்தோம். மலைகளுக்கு நடுவில் மரகத வர்ணத்தில் மிகப்பெரிய ஏரியை பார்க்கும் ஆனந்தமே தனி. தங்கும் விடுதி வந்து சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொண்டு மதிய உணவிற்குப்பின் போக்ரா சுற்றுலாவிற்காக கிளம்பினோம். 



விமானத்திலிருந்து பேவா ஏரியின் அழகு