Showing posts with label முக்திநாத். Show all posts
Showing posts with label முக்திநாத். Show all posts

Thursday, May 28, 2015

முக்தியளிக்கும் முக்திநாதர் தரிசனம் - 7

போக்ரா திரும்பினோம்

அந்த கிராமத்தில் மதிய உணவு உண்டோம். இங்கு  உணவு விடுதிகளில் அனைவருக்கும் அளவாகவே  சாப்பாடு தருகின்றனர். ஆனால் மிகவும் சுவையாக உள்ளது. சுடு தண்ணீர் கொடுக்கின்றனர். தண்ணீர் பாட்டில் விலை  மிகவும் அதிகம்.  இதை எதற்காக எழுதுகின்றேன் என்றால் பசி தாங்க முடியாதவர்கள் கையில் பிஸ்கெட் மற்றும் நொறுக்குத்தீனி  மற்றும் குடிதண்ணீர் கையில் எடுத்துசெல்வது நல்லது. வழியில் ஒவ்வொரு இல்லத்தின் முன்னரும் சாளக்கிராமமும், திபெத்திய கலைப்பொருள்களும் விற்பனைக்காக வைத்துள்ளனர். விரும்புபவர்கள் பேரம் பேசி வாங்கிக்கொள்ளலாம்.    பின்னர் பேருந்து மூலம் திரும்பி வந்து ஜோம்சமில் தங்கினோம்.



  வழியில் ஒரு புத்த  விகாரம் 

ஒர் சிறு கிராமம்

தவளகிரியின் ஒரு சிகரம்

 மறு நாள் காலை விமான நிலையம் சென்ற போது அடியோங்கள் பயணம் செய்ய வேண்டிய விமானத்தினர் யாரையும் காணவில்லை. விசாரித்ததில் விமானம் பரிசோதனைக்கக காத்மண்டு சென்றுள்ளது எப்போது வரும் என்று தெரியவில்லை என்றார்கள். எப்படியோ 8 மணி அளவில் விமானம் வந்தது. வேண்டிக்கொண்டதின் பேரில் ஒரு சிலரை மற்றொரு  விமானத்தில் பயணம் செய்ய ஏற்பாடு செய்து தந்தனர்.  ஏதோ ஒரு  கோணல் நடைபெறும் என்பது எங்கள் குழுவினருக்கும் சரியானதாகியது. அனைவரும் அன்று போக்ரா திரும்ப முடியவில்லை. எட்டு அன்பர்கள் ஜோம்சமிலேயே ஏகாதசி தினத்தன்று தங்கும்படியாயிற்று.


விமானத்திலிருந்து வரகு அரிசி வயல்களின் காட்சி

 மலை வளம்
ஓர்  நதி


எதிரே ஒரு சிறு விமானம்

 சென்றபோது அதிகாலையில் சென்றதால் போக்ரா விமானத்தை சரியாக பார்க்கவில்லை. திரும்பி வந்த போது எடுத்த படங்கள்.


போக்ரா விமான நிலையம் 




பூக்களால் நேபாள வரை படம்

திரும்பி வரும் போது போக்ரா நகரத்தில் உள்ள பேவா ஏரியின் (Phewa Lake)  அழகை பறவைப்பார்வையாக பார்த்து இரசித்தோம். மலைகளுக்கு நடுவில் மரகத வர்ணத்தில் மிகப்பெரிய ஏரியை பார்க்கும் ஆனந்தமே தனி. தங்கும் விடுதி வந்து சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொண்டு மதிய உணவிற்குப்பின் போக்ரா சுற்றுலாவிற்காக கிளம்பினோம். 



விமானத்திலிருந்து பேவா ஏரியின் அழகு





Tuesday, May 26, 2015

முக்தியளிக்கும் முக்திநாதர் தரிசனம் - 5

ஜோம்சமிலிருந்து முக்திநாத் ஜீப் பயணம்


காளி கண்டகி நதி



கண்டகி நதியின் குறுக்கே உள்ள பழைய பழுதடைந்த பாலம்

அவனருளால் குழுவினர் சுமார் 40 பேரும் விமானம் மூலம் போக்ராவிலிருந்து ஜோம்சம் வந்தடைந்தோம். பின்னர் காலை உணவை முடித்துக் கொண்டு சிறு பேருந்து மூலம் கண்டகி நதியை அடைந்தோம். காளி கண்டகி (கறுப்பு கண்டகி) என்ற பெயருக்கேற்றார் போல - அந்த கருவிளை வண்ணன் பாதம் தொட்டு வருவதால் கருமையான நிறத்தில் அமைதியாக ஓடிக்கொண்டிருந்தாள் கண்டகி. ஆற்றங்கரையில் எதாவது சாளக்கிராமம் கிடைக்கின்றதா என்று தேடினோம். இங்குள்ளவர்கள் தாமோர் குண்டத்தில் இருந்து நதி புறப்படும் இடத்தில் இருந்தே  வலை கட்டி சாளக்கிராமங்களை சேகரித்து விடுவதால் அவரின் பிராப்தம் உள்ளவர்களுக்கு மட்டுமே சாளக்கிராமம் ஆற்றில் கிடைக்கும் என்பதால் யாருக்கும் சாளக்கிராமம் கிட்டவில்லை. சில கூழாங்கற்களை மட்டும் சேகரித்துக் கொண்டோம்.

ஆதி காலத்தில்  இமயமலைப் பிரதேசம் சமுத்திரமாக இருந்தது. அப்போது நமது இந்தியக் கண்டம் தனியாக இருந்தது. சுமார் நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய நிலப்பரப்பு மெல்ல மெல்ல வடமேற்காக நகர்ந்து வந்து  ஆசிய நிலபரப்போடு மோதியதால் உருவானவையே உலகின் உயர்ந்த மலையான இமயமலை. எனவே உயர் பீடபூமியான திபெத்தில் உள்ள பல   ஏரிகள் இன்றும் உப்பு நீராக இருப்பதற்கு இதுவே காரணம். சாளக்கிராமங்களும் அந்த கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள் என்று அறிவியலார் கூறுகின்றனர். நேபாள அரசும் சாளக்கிராமங்களை விற்பதையும், நேபாளத்தில் இருந்து வெளியே எடுத்து செல்வதையும் தடை செய்துள்ளது. ஆனால் விஞ்ஞானமும் மெய்ஞானமும் எப்போதும் ஒன்றாக இருப்பதில்லையே, கடல் வாழ் உயிரினங்களின் கூடு என்றால் இமயமலையில் இருந்து உருவாகி ஆசியா முழுவதும் பாயும் எண்ணற்ற நதிகளில் இந்த ஒரு நதியில் மட்டுமே ஏன் சாளக்கிராமங்கள் கிட்டுகின்றன என்பதை யாராலும் விளக்க முடியவில்லை.  எது எப்படி இருந்தால் என்ன நம்புகின்றவர்களுக்கு சாளக்கிராமங்கள் பெருமாள்தான்.



லூப்ரா - முக்திநாத் நடைப்பயண வரைபடம்

பழுதடைந்த பாலத்தைக் கடந்து லூப்ரா கிராமத்தை அடைந்தோம். இக்கிராமத்தில் உள்ள முக்திநாத் செல்லும் சிறு பேருந்துகளும், ஜீப்களும் புறப்படும் நிலையத்தை அடைந்தோம். இந்த பேருந்து நிலையத்தின் எதிரே போன்பா அவர்களின் புத்த விகாரம் உள்ளது. புது வர்ண கலாபத்தில் எழிலாக இருந்தது புத்த விகாரம். இங்கிருந்து நடைப்பயணம் மூலமாகவும் பலர் முக்திநாத் செல்கின்றனர். 


லூப்ராவில் உள்ள போன்பா புத்த விகாரம்

இங்கிருந்து முக்திநாத் செல்ல  சரியான பாதை கிடையாது மலையில் கல் நிறைந்த பாதையில் மேலும் கீழும் இறங்கி   குலுங்கிக்கொண்டே பயணம் செய்தோம் பின்னர் சிறிது தூரம் சென்றவுடன் பேருந்து கண்டகி நதியில் இறங்கியது மிகப்பெரிய நதி ஆனால் தண்ணீர் சிறு பகுதியில்தான் ஓடிக்கொண்டிருந்தது. பின்னர் மலையேற்றம் என்று சுமார் 20  கி.மீ தூரத்தை 3 நேரத்தில் கடந்தோம். வழியெங்கும் சிறு சிறு கிராமங்கள் உள்ளன. கடுகு, வரகு அரிசி முதலியன பயிர் செய்கின்றனர். ஆப்பிள் மரங்களையும் பார்த்தோம்.  சில கிராமங்களில் தக்காளி, முள்ளங்கி கூட விளைகின்றன. அனைத்து இல்லங்களின் முன்புறம் டிஷ் ஆன்டனாக்கள் போல  சூரிய குக்கர்கள் (Solar cookers) அமைத்துள்ளனர்.   அனைத்து கிராமங்களிலும் தங்கும் விடுதிகள் அமைந்துள்ளன. அன்னபூரணா மலைதொடரின் பனி படர்ந்திருந்த தொராங் லா கணவாயை பார்த்தோம். இந்த உயரத்தில் பொதுவாக மரங்கள் இருக்காது. ஆனால் இவ்வழியில் பல மரங்களைக் கண்டோம்.


முக்திநாத் சென்ற பாதை???

சிறு பேருந்தில் பயணம்






குலுக்கியெடுக்கும் ஜீப் பயணம்

அக்டோபர் மாதத்திற்கு பிறகு பனி பெய்ய ஆரம்பித்து முக்திநாத் முழுவதும் பனியால் மூடிவிடும் பின்னர் இளவேனில் காலத்தில் பனி
 உருக ஆரம்பிக்கும் மே மாதம் சில சமயம் குறைவாக பனி இருக்கும் சாகச பயணம் மேற்கொள்ள விரும்பும் ஐரோப்பிய  அன்பர்கள் அப்போது இங்கு வருவர், பருவ மழை துவங்குவதற்கு முன்னர் ஜூன் மாதம் இங்கு வர ஏற்ற காலம்.   நேபாள அரசு இந்த ஜோம்சம் - முக்திநாத்  பாதையை 2020க்குள் தார் சாலையாக  மாற்ற திட்டமிட்டுள்ளதாம்.  அப்படி நடந்தால்  தொராங் லா எனப்படும் கணவாய் வழியாக சீனாவில் நுழைந்து  திருக்கயிலாய யாத்திரை செல்ல இனியொரு வழி உருவாகும் என்றும் வழிகாட்டி  கூறினார்.  



 வழியில் உள்ள் கிராமங்களில் டிஷ் ஆன்டன்னா போல சூரிய குக்கர்கள்


இரு சக்கர வண்டிகள் நிலையம்

கம்பளி ஆடைகள் பின்னும் பெண்கள்



கோவில் வரை ஜீப்கள் செல்வதில்லை சுமார் அரை கி.மீ தூரம் முன்னதாக உள்ள ஜீப் நிறுத்ததில் இறக்கி விடுகின்றனர். ஜீப் நிறுத்ததில் இருந்து இரு சக்கர வண்டி நிறுத்தம் செல்ல சிறிது தூரம் நடக்க வேண்டி உள்ளது. அங்கிருந்து ஆலய வாசல் வரை இரு சக்கர வாகனங்கள் செல்கின்றன. விரும்புபவர்கள் சுமார் 100  படிகள் ஏறியும் கோவிலை அடைகின்றனர். அடியோங்களில் சிலர் இரு சக்கர வண்டியிலும் சிலர் நடந்தும் கோவில் வாசலை அடைந்தோம். வழியில் உள்ள கிராமத்தில் ஒவ்வொரு வீட்டின் முன்னரும் சாளக்கிராமங்கள் விற்பனைக்கு வைத்துள்ளனர். அன்றைய தினம் சூரியன் பிரகாசித்துக்கொண்டு இருந்தான் எனவே வெளியே அமர்ந்து கம்பளி உடைகளை பின்னிக் கொண்டிருந்தார்கள்.


த்ரில்லான இரு சக்கர வண்டி பயணம் 




 வளைந்து நெளிந்து செல்லும் பாதையில் ஏற்றத்தில் இரு சக்கர வண்டி பயணமும் த்ரிலானதாகத்தான் இருந்தது. 15 நேபாள ரூபாய்கள் செல்வதற்கும் வருவதற்குமாக வசூலிக்கின்றனர் ஒரு அடையாள அட்டை கொடுத்து விடுகின்றனர் தரிசனம் முடித்து திரும்பி வரும் போது  அடையாள அட்டையை  காண்பித்து எந்த வண்டியில் வேண்டுமென்றாலும் அமர்ந்து திரும்பி வரலாம். திரும்பும் போது முடியாதவர்களை ஜீப் நிறுத்தம்  வரை  கொண்டு வந்து விடுகின்றனர். இதனால் அப்பகுதி இளைஞர்களுக்கு வருமானம் கிட்டுகின்றது. வாருங்கள் இனி முக்திநாதரின் ஆலயத்தை தரிசனம் செய்வோம். 

Saturday, May 23, 2015

முக்தியளிக்கும் முக்திநாதர் தரிசனம் -1

முக்திநாத் யாத்திரை


முக்திநாதர்

நேபாளம் வழியாக திருக்கயிலாய யாத்திரை மேற்கொள்கின்ற அன்பர்களுக்கு கிடைக்கும் ஒரு வாய்ப்பு  முக்திநாத் தரிசனம் ஆகும். திருமாலின் அருளால் மயர்வற மதி நலம் பெற்ற ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட  108  திவ்யதேசங்களில் ஒன்றான நேபாள் நாட்டில் அமைந்துள்ள முக்திநாத் என்றழைக்கப்படும் சாளக்கிராமம் என்னும் திவ்யதேசத்தை தரிசிக்கும் வாய்ப்பும் கூடுதலாக கிட்டுகின்றது.  பொதுவாக கடினமான திருக்கயிலாய மானசரோவர் யாத்திரையை முடித்த பின் விருப்பமுள்ள பக்தர்கள் குறிப்பாக நமது தமிழகத்தில் இருந்து செல்லும் அன்பர்கள்  காத்மாண்டு வந்தடைந்து பின்னர் நான்கு நாள் பயணத்தில் இந்த முக்திநாத் பயணத்தை நிறைவு செய்கின்றனர்.


முக்திநாதர் ஆலயம்



முக்திநாத் ஆலயத்தின் 108 தாரைகள்

கண்டகி நதிக்கரையில் உள்ள "முக்திநாத்" க்ஷேத்திரம் நேபாள நாட்டின் தலைநகரம் காத்மாண்டு நகரிலிருந்து 272 கி.மீ. தொலைவில், இமயமலைத் தொடரான அன்னபூர்ணாமலைத் தொடருக்கு அப்பால் உள்ள தவளகிரிப் பிராந்தியத்தில்  3710 மீ உயரத்தில் அமைந்துள்ளது.

மனோகாம்னாவில் அமைந்துள்ள கருடன் சிலை

இயமலையின் பனிச் சிகரத்தின் இடையே அமைந்திருப்பதாலும், நேபாள நாட்டில் விமானப்பயணம் அவசியம் என்பதாலும் இந்த புனித பயணம் மிகவும் கடினமானது, அதே சமயம் அபாயகரமானது என்பதில் எந்த ஐயமுமில்லை.  யாத்திரைக் காலம் குறைந்தபட்சம் ஐந்து நாட்கள் ஆகும். எவ்வளவு கவனமாக திட்டமிட்டாலும்,  மலைப்பிரதேசம் என்பதால் இயற்கை ஒத்துழைத்தால் மட்டுமே திட்ட்மிட்டபடி யாத்திரை சுகமாக நிறைவேறும்.  பனி, மழை, நிலச்சரிவு, காற்றோட்டம்,  பாதை அடைப்பு, விமானக்கோளாறு என்று ஏதோ ஒரு தடங்கல் இல்லாமல் யாத்திரை முடித்தவர்கள் மிக குறைவாகவே இருப்பார்கள். எனவே ஓரிரு நாட்கள் அதிகமாக தங்கவேண்டி வரலாம் எனவே அதற்கு தயாராக செல்ல வேண்டும், அதற்கு அதிகப்படி செலவாகும் என்பதால் அதற்கும் சேர்த்து பணம் அதிகமாக எடுத்துச்செல்ல வேண்டும்.

நேபாளத்தில் விமான பயணம் தட்பவெப்ப நிலையைப் பொறுத்தே நடை பெறுகின்றது. அதிகாலை 5 மணி முதல் 11 மணி வரையிலேயே அதிகமான மூடுபனி, காற்றோட்டம் இல்லாத போதுதான் விமானங்கள்  இயக்கப்படுகின்றன. எப்போது வானிலை மாறும் என்று தெரியாது. எனவே தேவைப் பட்டால் நெளிந்து வளைந்து  செல்லும் கரடு முரடான பாதையில் அதிகநேரம் பயணம் செய்யவேண்டி வரலாம். சில சமயம் வானிலை திடீரென மோசமடைவதாலும், விமான கோளாற்றினாலும், பேருந்துகள் அதள பாதாளத்தில் உருண்டு விழுவதாலும் ஒரு சில விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன. ஸ்ரீமந் நாராயணா உன் பாதமே சரணம் என்று சென்றால் எல்லாவிதமான தடங்கல்களையும் நீக்கி திவ்யமான தரிசனமும் அளித்து அருளுவார் என்பதில் எந்த ஐயமும் தேவையில்லை.

மலைப்பிரதேசம் என்பதால் குளிர் அதிகமாக இருக்கும் எனவே கம்பளி உடைகள் அவசியம் எடுத்துச்செல்ல வேண்டும். ஜோம்சம் முக்திநாத் ஆகிய ஊர்களில் காய்கறிகள் அதிகம் விளைவதில்லை என்பதாலும் அனைத்து உணவுப் பொருட்களும் மேலே கொண்டு வரவேண்டும் என்பதாலும் உணவு விடுதிகளில் அளவான உணவே கிட்டும். மேலும் எதிர்பாராத விதமாக பேருந்தில் பயணம் செய்ய நேரிட்டால்  சரியான சமயத்திற்கு உணவு கிட்டாமலும் போகலாம். எனவே கை வசம் நொறுக்குத்தீனிகளான, பிஸ்கெட், சாக்கலேட், இனிப்புகள்,  காரங்கள், சிப்ஸ், மற்றும் குடி தண்ணீர் பாட்டில்கள் எடுத்து செல்வது மிகவும் அவசியம்.


சாளக்கிராமம் (முக்திநாத்) யாத்திரை செல்ல ஏற்ற சமயம். ஏப்ரல் 10 தேதிக்கு மேல் மே மாதம் மூன்றாம் வாரம் வரை ஆகும். (மே மாதக் இறுதியில் பருவ மழை ஆரம்பமாகிவிடும்). மேலும் செப்டெம்பர் இரண்டாவது வாரம் முதல் அக்டோபர் முதல் வாரம் வரை ஆனால் இச்சமயம் குளிர் அதிகமாக இருக்கும் எனவே அதிகப்படியான  கம்பளி உடைகள் எடுத்து செல்ல வேண்டி வரும்.


போக்ராவில் உள்ள பேவா ஏரி

காத்மாண்டிலிருந்து முக்திநாத்  செல்பவர்கள் முதலில் பேருந்துகள் மூலம் போக்ரா  என்னும் ஊரை அடைகின்றனர். போக்ராவை இந்தியாவில் இருந்து கோரக்பூர் வழியாகவும் நேராக அடையலாம். கோரக்பூரை சென்னையிலிருந்து புகைவண்டி மூலமாகவும் அடையலாம். தற்போது டெல்லி காத்மாண்டு இடையே பேருந்தும் ஓடுகின்றது.  காத்மாண்டில் இருந்து சிறு  விமானம் மூலமாகவும் போக்ராவை அடையலாம்.  

 பின்னர் போக்ராவில் இருந்து ஜோம்சம் என்ற இடத்தை சிறு விமானம் மூலம் சென்றடையலாம் அல்லது நெளிந்து வளைந்து செல்லும் கரடு முரடான  மலைப்பாதையில்   பயணம் செய்தும் ஜோம்சமை அடையலாம் ஆனால் பயணநேரம் அதிகம் ஆகும்.   ஜோம்சலிருந்து பின்னர் ஜீப்/சிறு பேருந்து  மூலமாக முக்திநாத் செல்ல வேண்டும்.




மனோகாம்னா தேவி ஆலயம்

காத்மாண்டிலிருந்து போக்ரா செல்லும் வழியில்  மனோ காம்னா தேவி ஆலயம அமைந்துள்ளது. மனோகாம்னா என்றால் மனதில் தோன்றும் அனைத்து ஆசைகளையும் அதாவது பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கும் அன்னை என்று பொருள். அன்னை பார்வதி விருப்பங்களை நிறைவேற்றி வைக்கும் பகவதியாக எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.  இழுவை இரயிலில் ஆலயத்திற்கு  செல்ல வேண்டும். கோயிலின் நுழைவில் அருமையான பூங்கா உள்ளது. இரண்டடுக்கு பகோடா அமைப்பில் இக்கோயில் அமைந்துள்ளது.


அன்னபூரணா மலைச்சிகரம்

னோ காம்னாவில் விருப்பங்களை நிறைவேற்றி வைக்கும் அன்னையை தரிசனம் செய்த பின் பக்தர்கள் போக்ரா வந்து தங்குகிறனர்.  போக்ராவின் சிறப்பு அதன் ஏரி. “பேவா ஏரி(Pewa Lake) என்‍ நீர் அருமையாக பிரதிபலிக்கின்றது,  அந்த அழகை இரசிப்பதே ஒரு அருமையான அனுபவம்.  போக்ராவில் காத்மாண்டுவைப் போல கூட்டம் அதிகம்   இல்லை, சப்தம் இல்லை கிராம சூழலே விளங்குகின்றது. எவ்வளவு நாள் வேண்டுமென்றாலும் அமைதியாக தங்க ஏற்ற இடம். ஏரியை சுற்றிலும் நிறைய தங்கும் விடுதிகள்  உள்ளன.  கரையில் ஆல மரங்களும் அரச மரங்களும் உள்ளன அதன் அடியில் கற்பெஞ்சுகள் இடப்பட்டுள்ளது, அதில் அமர்ந்து ஏரியின் அழகை  அமைதியாக இரசிக்கலாம்.  படகுப்பயணம் செய்யலாம். சைக்கிளில் அல்லது நடந்து ஏரியை  வலம் வரலாம். 



பேவா ஏரியில் அமைந்துள்ள பிந்துவாசினி ஆலயம் 

இந்நகரத்தில் இதன்  காவல் தெய்வம்   பிந்து வாசினி ஆலயம் ஒரு சிறு குன்றின்மேல் அமைந்துள்ளது. சிறு ஆலயம் தான். சாளக்கிராம ரூபத்தில்  பகவதியாக எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள் அன்னை பார்வதி இத்தலத்தில். மற்ற நேபாள அன்னை ஆலயங்களைப் போல இங்கும் பலியிடப்படுகின்றது. பகோடா அமைப்பில் இக்கோவில் அமைந்துள்ளது. குன்றின் மேலிருந்து போக்ரா நகரின் அருமையான அழகை இரசிக்கலாம்.


ஜோம்சமில் உள்ள  நீலகிரி  பனிச் சிகரம்

மறு நாள் போக்ராவில் காலை சூரிய உதய காலத்தில் அன்னபூர்ணா சிகரம் பொன் மயமாக மின்னும் அழகை ரசித்த பின்  அங்கிருந்து சிறு விமானம் மூலமாக ஜோம்சம் செல்கின்றனர், பேருந்து மூலமாகவும் ஜோம்சம் செல்ல முடியும் ஆனால் மிகவும் கரடு முரடான பாதை என்பதால் விமானத்தில் செல்வது நல்லது என்றாலும் சில சமயங்களில் இந்த விமானப்பயணம் விபத்தில் முடிந்துள்ளது. மேலும் தட்பவெட்ப நிலையைப் பொறுத்தே விமானப்பயணம் நடைபெறுகின்றது. விமானத்தில் செல்லும் போது அன்னபூரணா சிகரங்களின் அழகையும், மீன் வால் சிகரத்தின் அழகையும்  கண்டு இரசிக்கலாம். ஜோம்சம் நகரிலிருந்து பின்னர் ஜீப் மூலமாக முக்திநாத்தை அடையலாம்.


முக்திநாத் தரிசனம் செய்தவர்கள் பிறப்புஇறப்பு என்னும் பிறவிச் சக்கரத்திலிருந்து விடுபடுவார்கள். எம்பெருமானின் இருப்பிடமான வைகுந்தத்தில் நித்ய சூரியர்களாக வாசம் செய்வார்கள் என்பது ஐதீகம். இக்கோயிலில் இராமானுஜருக்கும் சன்னதி இருப்பது சிறப்பான அம்சம். விசுவாமித்திர முனிவரின் சாளங்காயனர் என்பவர் பிள்ளைப் பேறு வேண்டி காளி கண்டகி நதியில் நீராடி ஸால் மரத்தினடியில் இத்தலத்தில் தவம் செய்துகொண்டிருந்த போது சுயம்புவாக தோன்றிய பெருமாள் அவருக்கு அளித்த வரத்தின்படி ஸ்வயம்புவாய் இங்கே சேவை சாதிக்கின்றார். அது போலவே விஷ்ணு சாந்நித்யம் உள்ள சாளக்கிராம கல்லாகவும் அனைவருக்கும் அருள் வழங்குகின்றார்.

விஷ்ணுவின் சொரூபமாகத் திகழ்வது சாளக்கிராமம் ஆகும். இது ஒரு வகை கல். இதற்கு சுருள் என்பது பொருள். நேபாளத்தின் கண்டகி நதிக்கரையில் இவை கிடைக்கின்றன. பூஜிப்பதற்கு உகந்த மங்களகரமான சாளக்கிராமத்தின் அவதாரத் தலம் இந்த முக்திநாத் ஆகும். முக்திநாத்தில் சங்குசக்கரகதாதரராக திருமகளுடன் பெருமாள் தரிசனம் தருகிறார். இதற்கு பின்னால் விஷ்ணுவின் அம்சமான மிகப்பெரிய அபூர்வ சாளக்கிராம மூர்த்தியை தரிசிக்கலாம். எனவே இத்தலம் சாளக்கிராமம் என்றும் அறியப்படுகின்றது. பாக்கியமுள்ள பக்தர்கள் அங்கு சென்று சாளக்கிராம மூர்த்திகளைதாங்களே சேகரித்து எடுத்து வருகின்றனர். சாளக் கிராமத்தில் பெருமாளின் அத்தனை அவதாரங்களும் அடங்கி உள்ளதாம். பக்தர்கள் இறைவனை வேண்டி துளசி செடியை கண்டகி ஆற்றில் போட்டு கைகளை விரித்து தண்ணீரில் மூழ்கியபடி நின்றால் தங்களுக்கு இறைவனின் அருள்படி சாளக் கிராமம் கிடைக்கும் என்கிறார்கள். நம் வீட்டிலும் இந்த சாள கிராமத்தை வைத்து வழிபடலாம். 12 சாளக் கிராமங்கள் இருந்தால் அந்த வீட்டில் பெருமாளே குடியேறி இருப்பதாக ஐதீகம்.
  
இத்தலம் பெருமாள் தானாகவே எழுந்தருளிய ஸ்வயம்வக்த ஸ்தலங்களுள்  ஒன்று. மற்ற தலங்கள் ஸ்ரீரங்கம்ஸ்ரீமுஷ்ணம்திருப்பதிவானமாமலைபுஷ்கரம்நைமிசாரண்யம்பத்ரிகாச்ரமம்  ஆகியவை ஆகும்மயர்வற மதிநலம் பெற்ற ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களுள் இந்த முக்திநாத் என்னும் சாளக்கிராமமும் ஒன்று. இந்த திவ்ய தேசத்தை

இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில் இமையோர் வணங்கமணம் கமழும்
தடம் சூழ்ந்து எங்கும் அழகு ஆய சாளக்கிராமம் அடைநெஞ்சே!

என்று திருமங்கையாழ்வாரும்,


பாலைக்கறந்தடுப்பேறவைத்துப் பல்வளையாளென்மகளிருப்ப
மேலையகத்தேநெருப்புவேண்டிச்சென்று இறைப்பொழுதங்கே பேசி நின்றேன்
சாளக்கிராமமுடையநம்பி
 சாய்த்துப்பருகிட்டுப்போந்து நின்றான்
ஆலைக்கரும்பின்மொழியனைய அசோதைநங்காய்! உன்மகனைக்கூவாய்.
 மொத்தம் 12 பாசுரங்களில் இருவரும் இத்தலத்தை   மங்களாசாசனம் செய்துள்ளனர். பெரியாழ்வார் சாளக்கிராமமுடைய நம்பியை கண்ணனாகவும் காண்கிறார். திருமங்கையாழ்வார் இவரை இராமனாக காண்கிறார். இங்கு பகவான் தீர்த்த ரூபியாக எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.


வடநாட்டில் உள்ள முக்கிய நதிகள் எல்லாம் விஷ்ணு சம்பந்தம் பெற்றிருப்பதைக் கண்ட கண்டகி நதியானவள் தானும்  மஹாவிஷ்ணுவைக் குறித்து கடுந்தவம் செய்து மஹாவிஷ்ணு தன்னிலும் அவதாரம் செய்ய வேண்டுமென தவமிருக்க அதற்கு மகிழ்ந்த எம்பெருமான் கண்டகி நதியில் நித்ய அவதாரம் (சாளக்கிராம ரூபியாக) செய்து கண்டகி நதிக்கு சிறப்பளிக்கிறார் என்பது ஓர் வரலாறு.


முக்திநாத் யாத்திரை நூல் தரவிறக்கம் செய்து கொள்ளவும்.