Wednesday, December 26, 2012

சிதம்பரத்தை சுற்றியுள்ள சிவத்தலங்கள் - 3

திருவேட்களம்


இரண்டாயிரம் ஆண்டு பழமையான தலம்.  அர்ஜுனனுக்கு இறைவன் பாசுபதம் வழங்கிய தலம் திருஞானசம்பந்தப்பெருமான் இத்தலத்தில் தங்கி இருந்து தில்லைப்பெருமானை நாள் தோறும் தரிசித்ததாக  பெரிய புராணம் கூறும் தலம்.  மத்யந்த முனிவர் வண்டெச்சில் படுவதற்கு முன் மலர் பறிக்க ஏதுவாக புலி போல காலும் பார்வையும் பெற்று   வியாக்ர பாத முனிவரான பின்  நடராஜப்பெருமானின் தரிசனம் பெற தவம் செய்த தலம்.  மூங்கில் காடாக இருந்ததால் வேணுபுரம். வேடர்கள் அதிகமாக வசித்ததால் வேட்களம்.

அண்ணாமலை நகரில் உள்ளது. சிதம்பரத்திலிருந்து அண்ணாமலை நகர் செல்லும் சாலையில் சென்று, அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்துள் புகுந்து நேரே சென்றால் (பல்கலைக்கழகப் பகுதியைத் தாண்டி) சாலை ஓரத்தில் கோயில் உள்ளது.

இறைவன் - பாசுபதேஸ்வரர், பாசுபதநாதர்.
இறைவி - சற்குணாம்பாள், நல்லநாயகி.
தலமரம் - மூங்கில்.
தீர்த்தம்கிருபா காடாட்ச குளம்..
சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்றது.
சோழ நாட்டு (வடகரை) 2வது தலம் 

திருவேட்களம் பற்றி சம்பந்தர் பாடும் போது,"வேட்கள நன்னகர்' என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன்,"சிறப்புடன் வாழ வாழ்வில் ஒரு முறையாவது திருவேட்களம் போ', என்றும், அம்பிகையை "பெண்ணில் நல்லாள்' என்றும் குறிப்பிடுகிறார்.  அருணகிரிநாதர் இத்தல முருகன் மேல்  திருப்புகழ் பாடியுள்ளார்.

சாஸ்திரப்படி கோயில் எப்படி அமைக்க வேண்டும் என்று உள்ளதோ, அதன்படி அமைக்கப்பட்ட கோயில் இதுவாகும். பல்லவ அரசர்களால் செங்கற்களால் கட்டப்பட்ட இக்கோயில் 1914ல் கானாடுகாத்தான் பெத்த பெருமாள் செட்டியாரால் கற்றளியாக மாற்றப்பட்டது.

தல வரலாறு : குருஷேத்திர பாரதப்போரில் வெற்றிபெறுவதற்காக அர்ஜுனன் பாசுபதம் பெற விரும்புகிறான். இதற்காக அர்ஜுனன் மூங்கில் காடாக இருந்த இத்தலத்தில் தவம் செய்தான். அர்ஜுனனின் தவத்தை கலைக்க துரியோதனன் மூகாசுரனை பன்றி வடிவில் அனுப்பினான். உடனே சிவபெருமான் தலையில் கொக்கிறகு, கையில் வில், முதுகில் அம்புறாத் தூணியுடன்  கிராதக வேடராய் (வேடன்) கிஞ்சுக வாயவள் உமையம்மையுடன், வேதம் நாலும் அறியா மலர்ப்பாதம்  பூமியில் பட நடந்து அர்ச்சுனனுக்கு அருள் புரிய  நான்கு வேதங்களும் நாய்களாக மாறி இறைவன் பின்னே வர பூமியில் எழுந்தருளினார். வேடனாக வந்த சிவபெருமான் அம்பெய்து வந்து பன்றியை கொன்றார்.  அதே  சமயம் பன்றியின் மீது அர்ஜுனனும் அம்பு எய்தான். பன்றியை யார் கொன்றார்கள் என்பது குறித்து சிவனுக்கும், அர்ஜுனனுக்கும் சொற்போரும் விற்போரும் நடந்தது. போரில் அர்ஜுனனின் வில் முறிந்தது.

கோபமடைந்த அர்ஜுனன் முறிந்த வில்லால் வேடனை அடித்தான். அந்த அடி மூவுலகில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் விழுந்தது. வேடுவப்பெண்ணாக வந்த பார்வதி கோபமடைந்தாள். சிவன் பார்வதியிடம் உமையவளே! நீ லோகமாதா! நீ கோபப்பட்டால் இவ்வுலகம் தாங்காது,''என சமாதானப்படுத்தி "சற்குணா' (நல்லநாயகி) சற்று தள்ளி நில் என்கிறார்.

 பின் இருவருக்கும் மற்போர் துவங்கியது, சிவன் தன் திருவடியால் அர்ஜுனனை தூக்கி எறிகிறார். சிவனின் பாத தீட்சை பெற்று அன்னையின் கருணையால் இத்தல  கிருபாகடாட்ச தீர்த்தத்தில் விழுகிறான். பின் அர்ச்சுனன் சிவ பூசை செய்ய அந்த மலர்கள் எல்லாம் வேடனின் மேல் தோன்ற அர்ச்சுனன் உண்மை உணர்ந்து அம்மையப்பர் தாள் பணிய அந்த பரம கருணாமுர்த்தி தியாகராஜர்,  பார்வதியுடன் காட்சி கொடுத்து பாசுபதாஸ்திரத்தை தந்தருளினார்.

 கிழக்கு நோக்கிய மூன்று நிலை இராஜகோபுரம், கோடி புண்ணியம் தரும் இறைவனின்  ஸ்தூல வடிவமான கோபுரத்தை தரிசனம் செய்து உள்ளே நுழைந்து ஒரே பிரகாரத்தை வலம் வந்தால், சுற்றுப்பகுதியில், தல விநாயகர்-சித்தி விநாயகர் கன்னி மூலையில் அருளுகின்றார்,  கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர் அனுக்கிரக தெட்சிணாமூர்த்தி, அஷ்ட புஜ துர்க்கை, லிங்கோத்பவர் அருளுகின்றனர். தெட்சிணாமூர்த்தியின் காலடியில் உள்ள முயலகன் இடப்பக்கம் தலைவைத்துள்ளார். தென்முகக் கடவுள் முன் அமர்ந்து காயத்ரி ம‘ன்திரம் ஜெபிக்க கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர். பிரகாரத்தில் சூரியன், சந்திரன் ஆகியோர் உள்ளனர்.  சூரியனும் சந்திரனும் அருகருகே இருப்பதால் சூரிய, சந்திர கிரகணங்களின் போது இங்கு வழிபாடு செய்வது சிறப்பு கிரஹண தோஷங்கள் நீங்கும். தல மரம் மூங்கிலும் பிரகாரத்தில் உள்ளது.

அம்மன் நல்லநாயகி நான்கு திருக்கரங்களுடன் தெற்கு நோக்கி  அருள்பாலிக்கிறாள். முன் இரண்டு திருக்கரங்களில் அங்குச பாசம் இல்லாமல் தாமரையும், நீலோத்பவ மலருடனும் அருளுகிறாள் . அம்மனுக்கு  எதிரிலும் நந்தி  பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது மிகவும் சிறப்பு. மனோன்மணி என்னும் அம்மனுக்கு சந்தனக்காப்பு சார்த்தி வழிபட நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம்.

கிழக்கு நோக்கி அருள் பாலிக்கும் வண்டெச்சில் படாததற்கு முன் மலர் பறிக்க ஏதுவாக     புலிக்கால் பெற்ற  முனிவர் வியாக்ரபாதர் பாசுபதேஸ்வரர் லிங்கத் திருமேனியில் அர்ஜுனன் அக்னியை பிரார்த்தனை செய்து பெற்ற காண்டீபம் என்னும்  வில்லால் அடித்த  தடத்தை  இன்றும் லிங்கத்தின் மீது காணலாம் என்கிறார்கள்.


சந்நிதி வாயிலின் முன்னால் இருபுறமும் தலப்பதிகக் கல்வெட்டுக்கள் உள்ளன  சபையில் ஆடல்வல்லான்  மகுடமணிந்து காட்சி தருவது சிறப்புடையது. இடப்பால் நால்வர் உற்சவத் திருமேனிகளும் தொடர்ந்து உற்சவ மூர்த்தங்கள் சந்நிதி இம்மூர்த்தங்களுள்  கிராதமூர்த்தியாக பார்வதிதேவியுடன் பாசுபதாஸ்திரம் கையில் ஏந்திய இறைவனின் உற்சவ திருமேனியும், அருச்சுனன்  திருமேனியும் தல வரலாற்றுத் தொடர் புடையவை. இவை இரண்டும் மிகப் பழங்காலத்தில் குளத்திலிருந்து கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது.

தெற்கு நோக்கிய அம்பிகையின் சன்னதி முன் மண்டபத்தில்  நான்கு தூண்களிலும் அர்ஜுனன் தன் ஆயுதங்களை வைத்தல், ஒரு காலில் நின்று தவம் புரிதல், இறைவன் வேடன் வடிவம் எடுத்து அம்பாள் வேடுவச்சியாக வேட்டை நாய்களுடன் எழுந்த்ருளும் சிற்பம், சிவனும் அர்ஜுனனும்  மல்யுத்தம் செய்யும் காட்சி, இந்திரன் ஐராவதத்தில் பவனி வரும் காட்சி  போன்ற சிற்பங்கள்  சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளன..

 திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 2 பாடல்கள் உள்ளன. இத்தலத்தில் முருகப்பெருமான் பன்னிரு திருக்கரங்களுடன் தனது தேவியர் இருவருடன் இந்திர மயில் மீது கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருவாசியுடன் ஒரே கல்லில் அமைந்த  அற்புத திருவுருவம்.

ஆலயத்திற்கு எதிரில் உள்ள  நாக லிங்க மரம்

கோவிலுக்கும் திருக்குளத்திற்கும் இடையில் மிகப் பிரமாண்ட  நாக லிங்க மரமும்  ஆலமரமும் உள்ளன. இங்கு நின்று கோபுர தரிசனம் செய்து கொண்டிருந்த போது கருட தரிசனமும் கிட்டியது

கொடி மரம் கிடையாது. சித்திரை முதல் தேதி, வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, மகா சிவராத்தரி, பங்குனி உத்திரம். வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் அளித்த உற்சவம் நடைபெறுகிறது அன்று பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர்.திருநாவுக்கரசர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. தனது பதிகத்தின் முதல் பாடலில் இத்தல இறைவனைத் தொழுதால் நம் வினைகள் யாவும் தொலைந்து விடும், என்றும் இன்பம் தழைக்க இருந்து உய்யலாம் என்று குறிப்பிடுகிறார். மேலும் தனது பதிகத்தின் 6-வது பாடலில் "கவலைகளாற் கட்டப்பெற்று வீழ்ந்திடாது, விரைந்து உயிர்போவதற்கு முன்பே உயர்ந்த இறைவர் எழுந்தருளியுள்ள திருவேட்களம் இறைவனைத் கைதொழுவீர்களாக, அப்படி தொழுதால் பொருந்திய வல்வினைகள் அனைத்தும் கெடும்" என்றும் குறிப்பிடுகிறார்.

நன்று நாள் தோறும் நம்வினை போய் அறும்
என்றும் இன்பந் தழைக்க இருக்கலாம்
சென்று நீர் திருவேட்களத்துள் உறை
துன்று பொற்சடையானைத் தொழுமினே.

சோமவாரத்தன்று இத்தலத்தை 108 முறை சுற்றி வலம் வந்து இறைவனையும், இறைவியையும் வணங்க மனோபலம் கூடும் திறமை வெளிப்பதும் என்பது ஐதீகம்.


கல்வெட்டில் திருவேட்களம் கிராமம் முழுவதும் சிதம்பரம்கோவிலுக்கு அச்சுதப்ப நாயக்கரால் தானமாக கொடுக்கப்பட்ட செய்து குறிப்பிடப்படுகின்றது.


அம்பாளின் ஞானப்பாலுண்ட ஆளுடைய பிள்ளையாம் திருஞானசம்பந்தருடன் தொடர்புடைய  இந்த திருவேட்களம், சிவபுரியின் திருநெல்வேலி, திருகழிப்பாலை மற்றும் அவர் திருமணம் நடந்த நல்லூர் பெருமணம் என்னும் ஆச்சாள்புரம் ஆகிய நான்கு தலங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு. சிவபார்வதி அருளால் நல்வாழ்க்கை  கிட்டும் எனவே நாளை (27-12-12) ஆனந்த கூத்தரின் திருத்தேரோட்டம் காண வரும் அன்பர்கள். தில்லைக்கு  மிக அருகில் உள்ள இத்தலங்களுக்கு சென்று தரிசனம் செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

Tuesday, December 25, 2012

சிதம்பரத்தை சுற்றியுள்ள சிவத்தலங்கள் - 2

திருகழிப்பாலை (சிவபுரி)ஆனந்த கூத்தரின் ஆருத்ரா தரிசன சமயத்தில்  அடுத்து நாம் தரிசிக்க இருக்கும் தலம் திருக்கழிப்பாலை. மூவராலும் பாடல் பெற்ற இத்தலம் முன்பு கொள்ளிடப் பேராற்றின் வடகரையில் காரைமேடு என்னும் இடத்தில் இருந்தாம். ஒரு சமயம்  கொள்ளிடத்தின் வெள்ளப்பெருக்கு திருக்கோயிலை முற்றிலும் சேதப்படுத்திவிட்டது. பின்னர்  படுகை முதலியார் குடும்பத்தில் திரு. பழநியப்ப முதலியார் என்பவர் சிவபுரிக்குத் தெற்கில் கோயில்கட்டி அதில் கழிப்பாலை இறைவரையும், அன்னையையும், ஏனைய பரிவார தேவதைகளையும் எழுந்தருளுவித்துள்ளார். சிவபுரியில் இருந்து சுமார் ½ கி.மீ தூரத்தில் தற்போது இந்த ஆலயம் உள்ளது. பாலையப்பர் கோவில் என்றும் அழைக்கப்படுகின்றது

இறைவன் - பால்வண்ண நாதேஸ்வரர்.
இறைவி - வேதநாயகி.
தல மரம்: வில்வம்
தீர்த்தம்: கொள்ளிட நதி
மூவராலும் பாடப் பெற்ற தலம்
சோழ நாட்டு (வடகரை) 4வது தலம் 

 வான்மீகி முனிவர் பூசித்துப் பேறு எய்தினர். இத்தலத்திற்கு ஞானசம்பந்தரது பதிகங்கள் இரண்டு, திருநாவுக்கரசரது பதிகங்கள் ஐந்து, சுந்தரரது பதிகம் ஒன்று ஆக மொத்தம் எட்டுத் திருப்பதிகங்கள் இருக்கின்றன. இவற்றுள் திருநாவுக்கரசர் திருவாய் மலர்ந்துள்ள ``வனபவள வாய்திறந்து`` என்று தொடங்கும் அகப்பொருள்துறைகள் அமைந்த பாடல்கள் படித்து இன்புறத்தக்கன. அருணகிரிநாதர் இத்தல முருகன் மீது திருப்புகழ் பாடியுள்ளார்.

கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜ கோபுரம்  இராஜகோபுரத்திற்கு வெளியிலேயே ஒரு நந்தி தரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த நந்தியின் தலை திரும்பியுள்ளது. இந்த நந்தி மூலவரைப் பார்க்காமல் பைரவரை பார்க்கின்றது என்று கூறுகின்றனர். உள்பிரகார நுழைவு வாசலின் இருபுறமும் அதிகார நந்தியர் தமது துணைவியருடன் உள்ளனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர், கஜலட்சுமி, விஷ்ணு, பிரம்மா, அகோர மூர்த்தி, முயலகன் மாறிய நிலையில் தெட்சிணாமூர்த்தி, கிராதமூர்த்தி, நாயன்மார்கள், சதுரா துர்க்கை, புவனேஸ்வரி ஆகியோர் உள்ளனர். ஒரே பிரகாரம்தான். சபையில்  நடராஜரின் சடைமுடி அள்ளி முடிந்த கோலத்தில் அருள் பாலிக்கின்றார். அருகில் சிவானந்தவல்லி, தில்லையைப் போலவே  தன் தோழிகளான லக்ஷ்மி, சரஸ்வதியுடன் அருள் பாலிக்கின்றாள்.

தல வரலாறு: கபிலமுனிவர் ஒவ்வொரு சிவத்தலங்களாக தரிசித்து வரும் போது, வில்வ வனமாக இருந்த இப்பகுதியில் தங்கி சிவபூஜை செய்ய நினைத்தார். இப்பகுதியில் பசுக்கள் தானாக பால்சுரந்து வந்த காரணத்தினால் மணல் முழுவதும் வெண்ணிறமாக காட்சியளித்தது. முனிவர் இந்த வெண்ணிற மணலை எடுத்து லிங்கம் அமைத்து வழிபாடு செய்தார். ஒருமுறை அந்த வழியாக வந்த மன்னனது குதிரையின் கால் குளம்பு, மணல் லிங்கத்தின்மீது பட்டு லிங்கம் பிளந்து விடுகிறது. மனம் நொந்த முனிவர் பிளவுபட்ட லிங்கத்தை எடுத்துவிட்டு வேறு லிங்கம் பிரதிஷ்டை செய்ய நினைத்த போது, எம்பெருமான் உமையவளுடன் நேரில் அருட்காட்சி தந்து, முனிவரே! பசுவின் பால் கலந்த வெண்ணிற மணலில் செய்த லிங்கம் பிளவு பட்டிருந்தாலும் அதை அப்படியே பிரதிஷ்டை செய்து விடுங்கள். காமதேனுவே பசுவடிவில் இங்கு வந்து பால்சொறிந்துள்ளது. எனவே இந்த லிங்கத்தை வழிபடுபவர்கள் சகல செல்வங்களும் அடைவார்கள் என்றார்.

பால்வண்ண நாதர் 

எங்கேனும் இருந்துன் அடியேன் உனைநினைந்தால்
அங்கே வந்து என்னொடும் உடனாகி நின்றருளி
இங்கே என்வினையை அறுத்திட்டு எனையாளும்
கங்கா நாயகனே கழிப்பாலை மேயானே. –சுந்தரர் பாடிய பால்வண்ண நாதர் இன்றும் சதுர ஆவுடையில் பிறை வடிவத்தில் லிங்கம் உள்ளது. வெள்ளை லிங்கம், கருப்பு ஆவுடை. படத்தில் தெளிவாகக் காணலாம்.  லிங்கத்திற்கு பால் மற்றும் சந்தனம் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகின்றது. மற்ற அபிஷேகம் எல்லாம் ஆவுடையாருக்குத்தான். லிங்கத்திற்கு அபிஷேகம் செய்த பாலை அருந்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய் விலகும் என்பது நம்பிக்கை.   கருவறையில் ஐயனுக்கு பின் புறம் அம்மையப்பர் நின்ற கல்யாண  கோலத்தில் அருளுகின்றனர், அகத்திய முனிவருக்கு காட்சி தந்ததாக ஐதீகம். அம்பாள் வேத நாயகி தெற்கு நோக்கி அருள் பாலிக்கின்றாள். 

பைரவரை நோக்கி உள்ள நந்தி

இக்கோவிலின் சிறப்பு மூர்த்தி பைரவர் ஆவார், இவர் காசியில் உள்ளது போல நாய் வாகனம் இல்லாமல், ஜடாமுடி, சிரசில் கபாலம், சிங்கப்பல், சர்ப்பத்தால் கோர்க்கப்பட்ட 24 மண்டை ஓட்டு மாலை, பூணூல், சர்ப்ப அரைஞாண் அணிந்து, இடக்கையில் சர்ப்பத்துடன்  திகம்பரராக தனிக்கோயிலில் அருளுகிறார். காசியில் பைரவரை வடிவமைத்த சிற்பியே இங்குள்ள பைரவரையும் வடிவமைத்ததாக கூறப்படுகிறது. இத்தல பைரவரை வணங்கினால் காசி பைரவரை வணங்கிய பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. எனவே இப்பகுதி மக்கள் இத்தலத்தை பைரவர் கோயில் என்றே அழைக்கின்றனர். தேய்பிறை அஷ்டமி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பக்தர் கூட்டம் அன்று அலை மோதுகின்றது. இவரை வணங்கினால் காசியில் உள்ள கால பைரவரை வணங்கியதற்கு சமம்.

அம்பாள் சின்னஞ்சிறு பெண் போல சிற்றாடை இடை உடுத்தி கால் சிலங்கை ஜல் ஜல் என்று ஒலிக்க கிராமத்தை வலம் வந்து காப்பதாகவும், அது போலவே பைரவரின் வாகனமான .நாயும் கிராமத்தை காப்பதாக இக்கிராம மக்கள் நம்புகின்றனர். சபரி மலை மேல் சாந்திகளின் குல தெய்வம் இந்த பால்வண்ணநாதர்தானாம். மேல் சாந்தி யார் என்பதை நடக்கும் குலுக்கல் இக்கோவிலில்தான் நடைபெறுமாம் ஆனால் சீட்டை இங்கு பிரித்து பார்க்காமல் சபரி மலை சென்று பிரித்து பார்க்கின்றார்களாம். 

இக்கோவிலிலும் கொடிமரம் கிடையாது எனவே பெரிந்திருவிழா கிடையாது. நவராத்திரி, சிவராத்திரி, விநாயக சதுர்த்தி முதலிய விசேஷ உற்சவங்கள் மட்டும் நடைபெறுகின்றன. சோழ மன்னர்களின் நான்கு கல்வெட்டுகள் உள்ளன.

புனலா டியபுன் சடையா யரணம்
அனலா கவிழித் தவனே யழகார்
கனலா டலினாய் கழிப்பா லையுளாய்

உனவார் கழல்கை தொழுதுள் குதுமே.

என்று சம்பந்தப்பெருமான் பாடிய பால்வண்ணநாதரையும், வேத நாயகி அம்பாளையும், பைரவரையும் வழிபட பாருங்கள் சிவபுரிக்கு.