திருநெல்வாயில் (சிவபுரி)
பூலோக
கைலாயமாம் சிதம்பரத்தை சுற்றி பல்வேறு சிவத்தலங்கள்
உள்ளன. இந்த வருட ஆருத்ரா தரிசன மஹோத்சவம்
தில்லையில் 19-12-2012 கொடியேற்றத்துடன் தொடங்கி விட்டது. 27ம் தேதி வியாக்கிழமையன்று
ஆனந்த நடராஜரும், சிவகாம வல்லியும் திருத்தேருக்கு எழுந்தருளி அருட்காட்சி தருவர் பின்னர்
28 வெள்ளியன்று அருணோதய காலத்தில் மஹா அபிஷேகம் அன்று மதியம் ஆருத்ரா தரிசனம் இந்த
புண்ணிய வேளையில் கோயிலை சுற்றியுள்ள சிவத்தலங்களை தரிசனம் செய்யலாமா அன்பர்களே தொடர்ந்து
வாருங்கள். ஒரே நாளில் அனைத்து தலங்களையும் தரிசித்து விடலாம். முடிந்தவர்கள் சென்று
தரிசிக்க வேண்டுகிறேன்.
நாம் முதலில் தரிசனம் செய்யப்போகின்ற தலம் திருநெல்வாயில்
என்னும் சிவபுரி. சிவபுரி உச்சிநாத சுவாமி கோயில் என்றும்
அழைக்கப்படும் இத்தலம் தேவார பாடல் பெற்ற தலமாகும். அம்மையின் ஞானப் பால் உண்ட
திருஞான சம்பந்தரால் பாடப் பெற்ற தலம். திருவேட்களத்தில் தங்கி இருந்த நாட்களில் ஆளுடையப்பிள்ளை இத்தலத்திற்கு வந்து வழிபட்ட தலம். கன்வ மகரிசி வழிபட்ட தலம். சிவபுரி மான்மியம் என்னும் தலவரலாறு பெற்ற தலம். நெல் வயல்களை ஊரின் வாயிலில் கொண்டு விளங்கும் மாட்சியில் இவ்வூர் நெல்
வாயில் எனப்பெற்றது தற்போது சிவபுரி என வழங்கப்படுகின்றது.
சிதம்பரத்திலிருந்து அண்ணாமலை நகர் சாலையில் வந்து, பல்கலைக் கழகத்திற்குள் நுழையாமல் வலப்புறமாகத் திரும்பி கவரப்பட்டு சாலையில் சென்று, அது மெயின் ரோடில் சேருமிடத்தில் (கவரப்பட்டு சாலை இடப்புறமாகத் திரும்பிவிட) நாம் நேரே எதிர்ச்சாலையில் - பேராம்பட்டுச் சாலையில் சென்றால் சிவபுரியை அடையலாம். கோயில் வரை வண்டியில் செல்லலாம்.
இறைவன் - உச்சி நாதேஸ்வரர், உச்சிநாத சுவாமி. மத்யானேஸ்வரர்
இறைவி - கனகாம்பிகை.
தலமரம் - நெல்லி.
தீர்த்தம் – கிருபா
சமுத்திரம் (கோயிலின் எதிரில் உள்ளது).
சோழ நாட்டு (வடகரை) 3வது தலம்
கிழக்கு நோக்கிய கோயில். எதிரில் நீராழி மண்டபத்துடன் திருக்குளம் உள்ளது. ஐந்து நிலைகளுடன் காட்சி தரும் ராஜகோபுரத்தைக் கடந்து உட்சென்றால் கோஷ்டத்தில்
நர்த்தனவிநாயகர் தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர் அஷ்டபுஜதுர்க்கை பிரம்மா. பிரகாரத்தில் சுப்பிரமணியர், பைரவர், பஞ்சலிங்கங்கள், சனிபகவான், சூரியன் சந்திரன் சந்நிதிகள் உள்ளன. ஒரே
பிரகார வலம் முடித்து முன்மண்டபம் சென்றால் வலதுபுறம் நவக்கிரக சந்நிதியும் பள்ளியறையும் உள்ளன.
துவாரபாலகரைத் தொழுது வாயிலைக் கடந்தால் வலதுபுறம் அம்பாள் சந்நிதி உள்ளது. தெற்கு நோக்கி நின்ற திருக்கோலம். அம்மையின் பெயரால் இக்கோவிலை கனகாம்பாள் கோயில் என்று இங்குள்ளவர்கள் அழைக்கின்றனர். சபையில் ஆனந்த தாண்டவர் சிவகாமியுடன் தரிசனம் தருகின்றார்.
விருத்தனாகி வெண்ணீறு பூசிய
கருத்தனார் கனலாட்டு உகந்தவர்
நிருத்தனார் நெல்வாயில் மேவிய
ஒருத்தனார் எமது உச்சியாரே என்று
ஆளுடையப்பிள்ளை பாடிய
மூலவர் சுயம்பு இலிங்கத் திருமேனி உயரமும் பருமனும் குறைந்த அமைப்புடையது. சதுரபீடம் சுற்றளவில் சிறியது. கிழக்கு
நோக்கி அருள் பாலிக்கின்றார். சிவபெருமான் அகத்தியருக்கு காட்சி தந்த தலங்களில் இதுவும் ஒன்று. சிவலிங்கத்தின் பின்புறம் சிவ பார்வதி திருமணக்கோலத்தில் அருளுகின்றனர். முன்மண்டபத்தில் நந்தியைச் சுற்றியுள்ள முன், பின் இருதூண்களில் நால்வர் சிற்பங்கள் உள்ளன. தினமும் ஐந்து கால
வழிபாடுகள். வைகாசி விசாகத்தில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு சிறப்பு. கொடி மரம் கிடையாது பெருந்திருவிழாவும் இல்லை.
வாழ்க்கைமனைநல்வாயலெங்கு நவமணிக்குன்றோங்கு
திருநெல்வாயில் நின்றொளிரும் நீளளியே(திருஅருட்பா)
மூன்று வயதிலேயே சீர்காழித்
திருத்தலத்தில் குளக்கரையில் அம்மையின் ஞானப்பால் உண்டு தோடுடைய செவியன் என்று பாடத்தொடங்கிய
ஞானசம்பந்தப்பெருமான் பின்னர் திருக்கோலக்காவில் பஞ்க்ஷாரம் வரையப்பட்ட பொற்றாளம்
பெற்று, பல தலங்களுக்கு பதிகம் பாடி வரும் போது பட்டீஸ்வரத்தில் முத்தி சிவிகையும்
முத்து பந்தலும் பெற்று, பல தலத்து இறைவனைப் பாடி திருமறைக்காட்டிலே மூடிய கதவை
திறந்து, மதுரை சென்று ஆலவாயான் அருளால்
கூன்பாண்டியனை நின்ற சீர் நெடுமாறனாக்கி
சமணரை அனல் வாதத்திலும் புனல் வாதத்திலும் வென்று இன்னும் பல தலங்கள்
சென்று அற்புதம் பல நிகழ்த்தி மயிலாப்புரில் அங்கம்பூம்பாவையை உயிருடன் எழுப்பி
திருவான்மியூர் முதலிய தலங்களை வணங்கி சீர்காழி அடைகிறார். அவருக்கு அப்போது
திருமணத்திற்கு தக்க பருவம் வந்தமையால், அவரது தந்தையாரும் மற்ற பெரியோர்களும்
நம்பியாண்டார் நம்பி அவர்களின் திருமகளை திருமணம் பேசி நிச்சியிக்கின்றனர்.
அவர்கள் திருமணம் திருநல்லூர் பெருமணம்( தற்போது ஆச்சாள்புரம்) என்ற தலத்தில்
நடந்தது. திருஞான சம்பந்தரின் திருக்கல்யாணம் காண வந்த 12000 சிவனடியார் சிதம்பரத்திலிருந்து ஆச்சாள்புரம் செல்லும் போது உச்சிக்காலத்தில் இவ்வாலயம் வர அந்த அடியார் திருக்கூட்டத்திற்கு கோயில் வேலையாள் போல வந்து இறைவனே உச்சிப்பொழுதில் அமுது அளித்த வள்ளல் எனவேதான் இவர் உச்சிநாதர் என்றும் மத்யானேஸ்வரர்
என்றும் அழைக்கப்படுகின்றார்.இக்கோயிலில், குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டினால், காலம் முழுமைக்கும் அந்தக் குழந்தையின் வாழ்வில் உணவுப்பிரச்னை வராது என்ற நம்பிக்கை இருக்கிறது.
பிரகாரத்தில் தனி சன்னதியில் உள்ள சனி பகவானைப் பற்றிய
ஒரு சுவையான கதையும் உள்ளது. திருஞான சம்பந்தருடன் வந்த சிவனடியார் ஒருவருக்கு சனி
திசை துவங்குவதால் அவரை சனி பிடிக்க வந்தது. அப்போது அவர் பசியாக உள்ளது சாப்பிட்டுவிட்டு வருகின்றேன் என்று
வேண்ட சனியும் கருணையுடன் ஒத்துக்கொண்டு அவரை
கோவிலுக்குள் அனுப்பினார்.
திருஞான சம்பந்தரின்
திருமணம் முடிந்தவுடன் அடியார்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு , “நல்லூர் பெருமணம்”
என்ற பதிகத்தைப் பாடிக்கொண்டே கோயிலுக்குள் நுழைந்தவுடன், ஈசன் அருளால் கருவரையில்
ஒரு சோதி தோன்றியது. அப்பொழுது சம்பந்தப்பெருமான் “காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி”
என்னும் பஞ்சாக்ஷரப் பதிகத்தை பாடிக்கொண்டே
அடியார்கள் அனைவரையும் அந்த ஜோதியில் கலக்கச்செய்தார். சனி பிடிக்க வந்த அன்பரும் அப்படியே சம்பந்தப் பெருமானுடன் சிவலோகம் அடைந்து
விடுகின்றார் எனவே இன்றும் பிரகாரத்தில் சனி பகவான் அவருக்காக காத்திருக்கிறாராம். எனவே கருணைச்சனியாக இங்கே சனி பகவான் எழுந்தருளியுள்ளார்.
மறையி னார்மழு வாளி னார்மல்கு
பிறையி னார்பிறை யோடி லங்கிய
நிறையி னாரநெல் வாயிலார்தொழும்
இறைவனாரெம் துச்சி யாரே. என்று சம்பந்தப்பெருமான்
பாடிய உச்சிநாதரையும் கனகாம்பாளையும் சமயம் கிட்டும் போது தரிசனம் செய்யுங்கள்
அன்பர்களே.
No comments:
Post a Comment