Friday, December 2, 2011

அண்ணாமலையெம் அண்ணா போற்றி

திருச்சிற்றம்பலம் 

அண்ணாமலையெம் அண்ணா போற்றி!
கண்ணார் அமுதக்கடலே போற்றி!  




விண் ஆளும் தேவர்க்கும் மேல் ஆய வேதியனை
மண் ஆளும் மன்னவர்க்கும் மாண்பாகி நின்றானைத்
தண் ஆர் தமிழளிக்கும் தண்பாண்டி நாட்டானைப்
பெண் ஆளும் பாகனை பேணு பெருந்துறையில்
கண்ஆர் கழல் காட்டி நாயேனை ஆட்கொண்ட
அண்ணாமலையானை ஆடுதும் காண் அம்மானாய்!

பொருள்: விண்ணுலகத்தை ஆளுகின்ற தேவர்களுக்கும் மேலாகிய அந்தனனை, மண்ணுலகத்தை ஆளுகின்ற அரசர்களுக்கும் மாட்சிமைப்பட்டு நின்றவனை, குளிர்ச்சியமைந்த தமிழை வளர்க்கின்ற தண்மையாகிய தென்பாண்டி நாட்டை உடையவனை, மாதொருபாகனை, யாவரும் விரும்புகின்ற திருப்பெருந்துறையில் பெருமை பொருந்த தனது திருவடிகளைக் காட்டி நாயேனை ஆட்கொண்ட் வள்ளலை, திருவண்ணாமலையனை யாம் புகழ்ந்து பாடுவோம் அம்மானை(என்றாள்).

கார்த்திகைப்பெருவிழாவின் நான்காம் திருநாளாகிய இன்று  உண்ணமுலை உமை உடனாகிய திருவண்ணாமலையரை தரிசனம் செய்யலாமா அன்பர்களே நேற்று விட்ட இடத்திலிருந்து தொடங்குவோமா?  

நான்காவது பிரகாரத்தில் ஒரு கோபுரம் கிழக்கு நோக்கிய கிளி கோபுரம். சம்பந்தாண்டன்சூழ்ச்சியால் பாரிஜாத மலர் கொண்டுவர கூடு விட்டு கூடு பாய்ந்து கிளி ரூபத்தில் சென்ற அருணகிரி நாதரின் மனித உடலை எரித்து விட கிளி ரூபமாக முருகனிடம் சேர்ந்த கோபுரம். அருணகிரி நாதர் கந்தரனுபூதி பாடிய கோபுரம் என்றும் கூறுவர். கிளிக் கோபுரத்திற்குள் நுழைந்தால் முதலில் தரிசனம் தருவது தீப தரிசன மண்டபம். இம்மண்டபம் பதினாறு கால் மண்டபம், பஞ்ச மூர்த்திகள் திருக்கார்த்திகையன்று தீப தரிசனத்திற்காக எழுந்தருளி அருள் பாலிக்கும் மண்டபம், இதற்கு எதிர்ப்புறம் கொடி மரம் மற்றும் பலி பீடம்கிளி கோபுரத்தின் இடப்புறம் பன்னீர் மண்டபமும் கோவில் மடப்பள்ளியும் உள்ளனஇப்பிரகாரத்தில் ஸ்தல விருட்சம் மகிழ மரம் உள்ளது. இம்மரத்தில் குழந்தை வரம் வேண்டுபவர்கள்   தொட்டில் கட்டி நேர்ந்து கொள்கின்றனர். மகிழ மரத்தினடியில் இருந்து பார்த்தால் ஒன்பது கோபுரங்களையும் ஒரு சேர காணலாம்.   மற்றும் பங்குனி உத்திரத்தன்று அம்மையப்பர் திருக்கல்யாணமும், பிரம்மோற்சவத்தின் போது பஞ்ச மூர்த்திகள் அலங்காரம் கொண்டருளும் கல்யாண மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவை உள்ளன.    வசந்த மண்டபத்தை சுற்றி மற்ற பஞ்ச பூத லிங்கங்களின்    ( சிதம்பரேஸ்வரர், ஜம்புகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், காளத்தீஸ்வரர்) சன்னதிகளும்பிடாரி அம்மன் சன்னதியும் உள்ளன. பிடாரி அம்மன் முன் உள்ள கல் திரி சூலம்  வேறெங்கும் காண முடியாத ஒன்றாகும்.

 

முதலில்  அம்மன் திருக்கோவிலுக்கு செல்வோம், அம்மனுக்கு இரண்டு பிரகாரம் முன் மண்டபத்துடன் கூடிய தனிக்கோவில்அம்மையும் கிழக்கு நோக்கி திருமுக மண்டலம்       கொண்டு எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள்முன் மண்டபத்தில் நவக்கிரக சன்னதி, எமன் மற்றும் சித்ர குப்தன் சன்னதி  உள்ளதுஅம்மனின் கருவறையை  சித்திர விநாயகரும் கார்த்திகேயனும் காத்து நிற்கின்றனர். அம்மையின் அருந்தவப்புதல்வர்கள் இருவரையும் வணங்கி உள்ளே சென்றால் தூண்களிலே அற்புதமான அஷ்ட லக்ஷ்மிகள் மற்றும் லோக நாயகியின்  கவினுறு சிற்பங்கள் கன்ணுக்கு விருந்துஅம்மனின் இரண்டாவது பிரகாரத்தில் அம்மையின்  பல்வேறு தோற்றங்கள் சித்திரமாக வரையப்பட்டுள்ளன. மேலும் மாணிக்க வாசகர் சக்தியை வியந்து பாடிய திருவெம்பாவை பாடல்களும்  எழுதி வைக்கப்பட்டுள்ளன. கருவறைக்கு இடப்புறம் விஜய இராகவ வினாயகர் கம்பீரமாக வீற்றிருக்கின்றார். லிங்கோத்பவர், கணபதி, சண்முகர், வள்ளி, தேவசேனை ஆகியோரை கண்டு வணங்கி, துவார பாலகிகளிடம் அனுமதி பெற்று உள்ளே சென்றால் அங்கே உண்ணாமுலையம்மையை கண் குளிரக் காணலாம். அந்த ஜகத் ஜனனி, மஹா திரிபுர சுந்தரி. கொடியிடை அம்பிகை   நம்மை எல்லாம் காக்க நின்ற கோலத்தில் தங்க கவசத்தில் எழிலாக காட்சி தருகின்றாள். மன்றாடி வேண்டுகின்றோம் அந்த தாயிடம், ஐயனின் உடலில் இடப்பாகம் பெற்ற அழகு மயிலிடம்,   அனைத்து  செல்வங்களும், மோக்ஷமும் தனது மந்தஹாச புன்னகையால்  அனைத்தையும் வழங்குகின்றாள் அன்னை


உண்ணாமுலையம்மை



தேடுந் தனமே தன கணமே      தெய்வ மணியே செழும் பணியே

    தேவ தருவே மலர் மருவே தேயா மதியே



நாடுந் தவமே அனுபவமே ஞானச் சுடரே சுகக் கடலே

      நாத வடிவே மறை முடிவே



பாடுங் கிளியே இசை அளியே பருகுந் தேனே மட மானே

      பச்சைக் கொடியே இளம்பிடியே பரமர் உளமே அம்பலமாய்



ஆடும் மயிலே அம்பிகையே கருணைக் குயிலே வருகவே

      அலகில் விளையாட்டு அருள் அம்மே வருக வருகவே!



என்று என்று உண்ணாமுலையம்மன்  பிள்ளைத்தமிழிலிருந்து ஒரு பாடலை  மனமுருகப் பாடி அன்னையை வணங்கி அந்த அத்தி வரதன் தங்கை சக்தி சிவ ரூபிணிணியை, ஆறதனில் மணல் குவித்து அரிய பூஜை செய்த அன்னை ஏகம்பரியை,   வணங்கி  தரிசனம்   செய்ததில் என்ன ஒரு மன நிறைவு. தாயே உனது தரிசனம் மறு படியும் மறுபடியும் கிடைக்க வேண்டும், அல்லும் பகலும் அனவரதமும் உன்னுடைய நினைவே நெஞ்சில் நிறைய வேண்டும் என்று வேண்டிக்    கொண்டு  இனி ஐயன் சன்னதிக்கு செல்வோம்.


அண்ணாமலையார்


ஐயன் சன்னதிக்கு வலப்புறம் சம்பந்த வினாயகர் சன்னதி, இடப்புறம் பழனியாண்டவர் சன்னதி உள்ளன. இனி இவ்வளவு சிறப்புக்களையுடைய ஐயனின் சன்னதிக்குள் நுழைந்தோமென்றால் அந்த தெய்வீக அனுபவத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை ஐயனின் அதிர்வலைகளை நாம் உணரலாம்இரண்டாவது பிரகாரம் கர்ப்பகிரகத்தை சுற்றி அமைந்துள்ளன, இப்பிரகாரத்தில் அறுபத்து மூவரின் மூலவர், மற்றும் உற்சவர்களை தரிசனம் செய்வதுடன்கோஷ்டத்தில் தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர்துர்கா தேவி, மற்றும் பிரகாரத்தில்  சோமாஸ்கந்தர், நடராஜர், சண்டிகேஸ்வரர், கஜ லக்ஷ்மி, ஆறு முக சுவாமி,    சொர்ண பைரவர் ஆகியோரை தரிசனம் செய்கின்றோம். அண்ணாமலையாரின் சன்னதிக்கு பின்புறம் வேணுகோபாலர் சன்னதியுள்ளது இத்தலத்தின் ஒரு தனி சிறப்பு. சிவனும் விஷ்ணுவும் ஒன்று என்பதை குறிக்கும் அமைப்பு. இப்பிரகாரத்தின் வடக்குப்புறம் வைகுந்த வாசல் உள்ளது இவ்வாசல் வழியாக வெளி வந்தால் அம்மன் சன்னதிக்கு செல்லலாம் மற்றும் திருவருணை மலை உச்சியை தரிசனம் செய்யலாம். கார்த்திகை தீபத்தன்று மலைக்கு தீபம் ஏற்றுவதற்கான சமிக்ஞை இந்த வாயில் வழியாகத்தான் காட்டப்படுகின்றது.


அருணாசலேஸ்வரர் உற்சவர் 




ஐயனின் கருவறையை வலம் வந்தபின் ரத விளக்குகளையும் நந்தியையும் கடந்து உள்ளே    சென்றால் சுயம்பு எம்பெருமானை தரிசிக்கலாம், லிங்க வடிவில் சர்வ அலங்காரத்தில் அருட் காட்சி தருகின்றார் அந்த சர்வேஸ்வரன், விஸ்வேஸ்வரன், சம்பு நாதர், சந்திர சூடர்சாம கானப் பிரியர், கால கண்டர் கையிலாய வாசர் கரும்பணக் கச்சை கடவுள், நச்சரவாட்டிய நம்பன்.



ஒருமானைக் கரத்தில்வைத் தொருமானை சிரத்தில்வைத் துலகமேலுந்

தருமானை யிடத்தில் வைத்தருள்வானை பவளநெடும் சயிலம் போல

வருமானை முகத்தானை அளித்தானை பெருமானை மகிழவேறும்

பெருமானை அருணகிரி பெம்மானை அடி பணிந்து பிறவி தீர்ப்பாம்


என்று துதி பாடி வணங்கி  எம்பெருமான் முன்பு நிற்கும் போது என்னே மன நிம்மதி, ஓம் நமசிவாய என்னும் பஞ்சாட்சர மந்திரம் தவிர மற்ற எல்லாம் மறந்து விடுகின்றது அவ்வளவு ஈர்ப்பு       எம்பெருமானிடம், மனமுருக உலக நன்மைக்காக வேண்டிக்    கொண்டு வெளியே வரும் போது நாம் அடையும் ஆனந்தத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. என்ன ஒரு தெய்வீக அனுபவம். தாங்களும் சென்றால் தான் அதை அனுபவிக்க முடியும்

குகை நமச்சிவாயர் என்ற சிவ பக்தர் ஒருவர் திருவண்ணாமலைக்கு வந்தார். அவர் பல அற்புதங்கள் செய்தார். இதைக் கண்டு பொறாமை கொண்ட சிலர்  அவரை அடிக்கடி சீண்டினர். ஒரு சமயம் அவரை அவமானப்படுத்த  சில இளைஞர்கள் சேர்ந்து கொண்டு இறந்ததாக நடித்த ஒரு இளைஞரை உயிருடன் எழுப்பும்படி கூறினர். இதனால் கோபம் கொண்ட அவர்            '  கெட்டவர்கள் மட்டுமே நிறைந்திருக்கும் இந்த கொடிய ஊரில் நான் வசிக்க மாட்டேன் இங்கு வசிப்பவர்கள் அனைவரும் பாவிகள், இவர்கள் அழியட்டும்என்று சாபம் அளித்தார். அப்போது அண்ணாமலையார்  அவர் முன் தோன்றி ' நானும் இவ்வூரில்தான் குடியிருக்கின்றேன் எனக்காக இம்மக்களை விட்டுவிடப்பா!' என்று வேண்டிக் கொண்டார். அவருக்காக குகை நமசிவாயர் ' அழியா ஊர் அண்ணாமலை என்று பாடிய பாடல்



கோளர் இருக்குமூர் கொன்றாலும் கோளாவூர்

காளையரே நின்று கதறுமூர் நாளும்

பழியே சுமக்குமூர் பாதகரே வாழுமூர்

அழியாவூர் அண்ணாமலை ! என்று பாடி வாழ்த்தினார். இவ்வாறு அழிய இருந்த திருவண்ணாமலையை காப்பாற்றிய அருட்தெய்வமே அண்ணாமலையார். அவரை வழிபட   அவர் இம்மை பேற்றைத் தருவதுடன் முக்தியும் கொடுப்பார் என்பது திண்ணம்இதுவரை கோவில் அமைப்பைப் பார்த்து எம்கோனையும் எம்பிராட்டியையும் தரிசனம் செய்தோம் இனி இத்திருதலத்தின் சிறப்பு நேர்த்திக் கடன்களைப் பற்றிப் பார்ப்போம்.

கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் முதலில் சிவகங்கை குளத்தில் நீராடி புற அழுக்கு போக்கி பின் பிரம்ம தீர்த்தத்தில் நீராடி அண்ணாமலையாரை, பிஞ்ஞக பித்தனை, நீல கண்டனை, முக்கண் முதல்வனை, திரிசூலதாரியை  வழிபட்டு தீப தரிசனம் காண பிரம்ம ஞானம் கிட்டும் என்பது ஐதீகம். கார்த்திகை தீபத்திற்கு நெய் குடம் கட்டுவது  இத்தலத்தின் ஒரு சிறப்பு நேர்த்திக்கடன்கார்த்திகை தீப கொப்பரையில் படியும் மை அண்ணாமலையார் மை என்று அழைகப்படுகின்றது இது மிகவும் புனிதமானது என்று கருதப்படுவதால் இம்மை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றது. கிழக்கு இராச கோபுரத்தின் உச்சியில்  பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள அகல் விளக்குகளில் இறந்தவர்கள்     பெயரில் அவர்கள் அடக்கம் செய்யப்படும் நாள் அல்லது திதி அன்று மோட்ச தீபம் ஏற்றப்படுகின்றது எங்குமே இல்லாத ஒரு சிறப்பு. வள்ளாள ராஜனுக்கு அருணாசலேஸ்வரரே பிள்ளையாக வந்ததால் பிள்ளை வரம் வேண்டி கரும்புத்    தொட்டில் கட்டுவதாக வேண்டுதல் நடைபெறுகின்றது. வள்ளால மகாராஜவுக்கு திருவண்ணாமலையாரே குழந்தையாக வந்து ஆண்டு கொண்ட கதையைக் காண்போமா?

 

 திருவண்ணாமலை

திருவண்ணாமலையை ஆண்டவர்களுள் வள்ளால மஹாராஜனும் ஒருவர். அவர் மிகச் சிறந்த சிவ பக்தர். இவருக்கு மல்லம்மா தேவி, சல்லம்மா தேவி என்று இரண்டு மனைவிகள்  இருந்தும் குழந்தைப் பேறு மட்டும் இல்லாமலிருந்ததுஅதனால் குழந்தை வரம் வேண்டி மன்னன் திருவண்ணாமலையாரிடம் மனமுருக வேண்டினார். அரசனின் பக்தியை உலகுக்கு உணர்த்தவும்  அவருக்கு அருளவும் திருவுளம் கொண்ட அண்ணாமலையார் மன்னனது கனவில் வந்து , "உன்னை நாடி வரும் சிவனடியார்களின் விருப்பத்தை நிறைவேற்றினால் உனக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்று கூறினார். அதன் பிறகு வள்ளால மஹாராஜாவும் சிவனடியார்கள் வந்து கேட்டதை நிறைவேற்றி வந்தார். அப்போது சோதனையாக ஒரு நாள்ஆயிரம் சிவனடியார்கள் கூட்டமாக  வந்து மன்னனிடம்   ' அவர்கள் காமப்பசியை தீர்க்க உதவ வேண்டும் ' என்று மன்னனிடம் கேட்டனர். அரசனும் ஊரில் உள்ள அனைத்து விலை மாதர்களையும்  அவர்களுக்கு அளித்தான். இறுதியில் ஒரு சிவனடியாருக்கு மட்டும் பெண்ணே கிடைக்கவில்லை என்ன செய்வது என்று புரியாமல் மன்னன் திகைத்து நின்ற போது , அரசனின் இளைய மனைவி சல்லமா தேவி அரசன் தன்னுடைய விரதத்தை முடிக்க தானே சென்று சிவனடியாரின் காமப்பசியை தீர்க்கிறேன் என்று கூற மன்னனும் சம்மதித்து  அனுப்பினான். சிவனடியார் தங்கி இருந்த அறைக்கு  சல்லமா தேவி சென்ற போது அங்கு இருந்த சிவனடியார் மறைந்து, சகல ஜீவராசிகளையும் படைத்தும், காத்தும், அழித்தருளும் ஐயன், எழுதற்கரிய வேதமாகிய சிலம்புகள் ஒலிக்க, அன்பர்களின் இதயமாகிய செழிய மலரோடையில் மலர்ந்து, சிவானந்தமாகிய தேன் ததும்பி வழியும் தெய்வத்தன்மை பொருந்திய  தாமரை மலர் போன்ற யாவரும் வணங்கத்தக்க  திருவடியின் பெருவிரலை வாயில் வைத்துக் சுவைத்துக்  கொண்டு  மை தீட்டிய நீண்ட கண்களில் நீர் ததும்ப வாய் திறந்து ஒரு பச்சிளம்  குழந்தையாய்  தோன்றி சல்லம்மா மடியில் தவழ்ந்து பின் மறைந்தது. பூவுலகில் வல்லாள மஹாராஜவிற்கு குழந்தை பாக்கியம் இல்லாததால்  அவரது பக்திக்கு மகிழந்து அண்ணாமலையாரே குழந்தையாக வந்து அருள் பாலித்தார் என்பதால் குழந்தை வரம் கேட்டு வரும் பகதர்களுக்கு இன்றும் அண்ணாமலையார் குழந்தைப்பேறு அருளுவார் என்பது ஐதீகம்இவ்வாறு அண்ணாமலையாரிடம் குழந்தைப்பேறு பெற்ற தம்பதியினர் . கார்த்திகை தீபத்திருவிழாவின் போது, கரும்பில் தொட்டில் கட்டி குழந்தையை அமர வைத்து நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர்.   பிள்ளை வரம் வேண்டி      பெற்றவர்கள் கார்த்திகை பெருவிழா  தேர்த்திருவிழா அன்றும் திருஊடல் திருவிழா அன்றும் அண்ணாமலையார் சன்னதிக்கு அக்குழந்தையை கொண்டு வந்து அர்ச்ச்னை செய்து, கரும்பு கட்டுகளில் புதுப்புடவையில் தொட்டில் கட்டி அதில் அக்குழந்தையை படுக்க வைத்து மாட வீதி வலம் வந்து நேர்த்திக் கடனை அடைக்கின்றனர். மொட்டை போடுதல், துலாபாரம்      செலுத்துதல்,அம்மனுக்கு புடவை சார்த்துதல், அபிஷேகம், திருக்கல்யாண உற்சவம் முதலிய நேர்த்தி கடன்களும் செலுத்துகின்றனர் பக்தர்கள்.   இனி  அருணாசல கிரிவலத்தின் சிறப்புகளைப்  பற்றி காண்போமா?.


No comments: