மகர வாகினி முக்திதாயினி கங்கா மாதா
சார்தாம் யாத்திரையின் இரண்டாவது தலம் கங்கோத்ரி. பாரத கண்டத்தில் பாயும் அனைத்து நதிகளிலும் மிகவும் புனிதமானதாக கருதப்படுவது கங்கை நதிதான். சிவபெருமானின் ஜடாமுடியில் அமரும் பாக்கியம் கங்கைக்கு உண்டு. கங்கா தீர்த்தம் மிகவும் புனிதமானது என்பதால் எல்லா இந்துக்களின் இல்லத்திலும் கட்டாயம் கங்கா தீர்த்தம் இருக்கும் எவ்வளவு காலம் வைத்திருந்தாலும் கங்கா தீர்த்தம் அப்படியே இருக்கும். இறக்கும் தருவாயில் இருப்பவர்களுக்கு கங்கா தீர்த்தம் உற்றுவது அவர்களுக்கு மோஷமளிக்கும் என்பது ஐதீகம். கங்கா தீர்த்ததில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது மிகவும் புண்ணியம் தரக்கூடிய செயல். ஒவ்வொரு இந்துவும் தனது வாழ்நாளில் ஒரு தடவையாவது காசி சென்று புனித கங்கை நதியில் நீராட வேண்டும் என்ற நியதி உள்ளது.
பாற்கடலைக் கடைந்தபோது முதலில் வந்த ஆலகால விஷத்தை உண்டு நீலகண்டரான சிவபெருமானுக்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்யும் போது அவருக்கு விஷத்தால் ஏற்பட்ட எரிச்சல் குறைகின்றது என்பது நம்பிக்கை. இராமேஸ்வரத்தில் உள்ள இராமேஸ்வர ஜோதிர்லிங்கத்திற்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்பவர்களுக்கு மோஷம் அளிப்பதாக சிவபெருமானே நாரதருக்கு கூறுகின்றார். இவ்வளவு சிறப்புக் கொண்டது கங்கை தீர்த்தம். கங்கையில் ஒரு தடவை நீராடினால் ஒருவரது அனைத்து பாவங்களும் களையப்படுகின்றது. கங்கையை “என்னருள் கங்கை ஆறெங்கள் ஆறே இங்கிதன் மாண்பிற்கு வேரெதிரில்லையே” என்று பாரதியார் பாடிப்பரவுகின்றார்.
கெங்கையம்மன்
உத்தர்கண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தில் இருக்கிறது கங்கோத்ரி. கந்த புராணத்தில் கேதார் ஷேத்ரம் என்று வர்ணிக்கப்படும் பிரதேசம் இதுதான். தேவ லோகத்திலிருந்து பகீரதனின் தவத்திற்கு இணங்கி பூலோகத்திற்கு வந்த ஆகாய கங்கை பூமியில் இறங்கிய இடம் கங்கோத்ரி. அந்த புராண வரலாறு சகரன் என்பவன் சூரிய வம்சத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி. அவனுக்கு இரண்டு மனைவிகள், அறுபதினாயிரம் புதல்வர்கள். சகரன் வீரம் மிக்கவன். தேவர்களையும், முனிவர்களையும் அச்சுறுத்தி வந்த அசுரர்களை அழித்தான் அந்த மன்னன். பிறகு, தன் உயர்வை அங்கீகரித்துக் கொள்ளும் வகையில் அஸ்வமேத யாகம் என்ற வேள்வியை நடத்த விரும்பினான். அசுவமேத யாகம் என்பது குதிரையை வைத்துச் செய்வது. அசுவ லட்சணங்கள் முழுமையாக அமைந்துள்ள உத்தம ஜாதிக் குதிரையை அலங்கரித்து, அதைத் தம் நாட்டிலிருந்து புறப்படச் செய்து, அதுபாட்டுக்குப் போகுமாறு செய்வார்கள். அதன் பின்னால் ஒரு பெரிய பட்டாளமே போகும். அந்தக் குதிரை எங்கெல்லாம் செல்கிறதோ அங்குள்ள அந்த நாட்டு மன்னன் அந்தக் குதிரைக்கு மரியாதை செய்து குதிரையின் சொந்தக்காரனாகிய மன்னனைப் பேரரசனாக ஏற்றுக்கொண்டு, அவனுக்குக் கப்பம் செலுத்த வேண்டும். மறுத்தால் போர் புரிந்து அவனைப் அவனைப் பணியவைத்து அந்த நாட்டைக் கைப்பற்றி கப்பம் கட்டச்செய்வர். எல்லா நாடுகளையும் இந்த மாதிரி வென்ற பிறகு, அந்த குதிரையை பலிகொடுத்து யாகத்தில் போட்டுவிடுவார்கள்.
சகரனுடைய மகன்களில் அறுபதினாயிரம் பேர் ஒரு குதிரையை முன் அனுப்பி, அதன் பின்னால் வந்தனர். சகரன் செய்யவிருக்கும் அசுவமேத யாகத்தைக் கண்டு பயந்த இந்திரன் எங்கே தனது பதவிக்கு ஆபத்து வந்து விடுமோ என்று பயந்து அந்தக் குதிரையை வஞ்சகமாகக் கவர்ந்து அப்படியே அதைப் பாதாளலோகத்திற்குக் கொண்டு சென்றான். அங்கு ஓரிடத்தில் கபிலர் என்னும் ரிஷி ஒருவர் ஆழ்ந்த தவத்தைச் செய்து கொண்டிருந்தார். இந்திரன் அந்தக் குதிரையைக் கபிலமுனிவரின் பின்னால் கட்டி வைத்து விட்டு அகன்றான். குதிரையைத் தேடி வந்த சகரர்கள், அது கபிலரின் பின்னால் நிற்பதைக் கண்டு கபிலரிடம் அதட்டி விபரம் கேட்டனர். ஆனால் ஆழ்ந்த நிஷ்டையிலிருந்த கபிலரிடமிருந்து பதிலேயில்லை. அதனால் கோபமடைந்த சகரர்கள், கபிலரை அடித்து உசுப்பிவிட்டனர். விழித்துப் பார்த்த கபிலரின் பார்வையின் ஆற்றலால் சகரர்கள் சாம்பலாகிப் போயினர்.
பாகீரதன்
சகரனுடைய பேரன் அம்சுமான் அவர்களுடைய சாம்பலை எடுத்து ஓரிடத்தில் சேர்த்து வைத்தான். அவனுடைய வம்சத்தில் மூன்றாவது தலைமுறையில் பகீரதன் என்பவன் தோன்றினான். அவனுக்கு ஒருகாட்சி தென்பட்டது. தன்னுடைய முன்னோர்கள் தலைகீழாகத் தொங்கிக்கொண்டு நற்கதி கிட்டாமல் வேதனையை அனுபவித்துக் கொண்டிருப்பதாகக் கண்டான். முனிவரின் கோபத் தீயால் சாம்பலானதால் அவர்கள் ஆத்மா சாந்தியடையாமல் இருந்த வரலாற்றை அவன் அறிந்தான் தன்னுடைய குலகுருவாகிய வசிஷ்டரிடம் விபரம் கேட்டான். அவர் கூறியபடி பின்னர் சகரர்கள் நற்கதியடைய வேண்டி பிரமனை நோக்கி பத்தாயிரம் ஆண்டுகள் தவமிருந்தான். பிரமன் தோன்றி ஆகாசகங்கையைக் கொண்டு வந்து அந்த நீரில் சாம்பலைக் கரைத்தால் அவர்களுக்கு நற்கதி கிட்டும் என்றும் அதற்கு ஆகாசகங்கையையும் சிவனையும் நோக்கித் தவமியற்றும்படி சொல்லிவிட்டு மறைந்தார். அவ்வாறே பகீரதனும் பல்லாயிரம் ஆண்டுகள் தவம் இருந்தான். ஆகாசகங்கை தோன்றினாள். தான் ஆகாசத்திலிருந்து இறங்கிவரத் தயாராக இருப்பதாகவும், தான் அவ்வாறு இறங்கி வரும்போது தன்னுடைய வேகத்தைத் தாங்கிக் கொடுக்கும் வல்லமை உடையவர் தாங்கிக் கொள்ள வேண்டும் என்று நிபந்தனையிட்டாள். ஆகவே பகீரதன் சிவனை நோக்கித் தவமியற்றினான். சிவபெருமான் தோன்றியதும் சிவனிடம் ஆகாசகங்கையைத் தாங்கிக் கொள்ளுமாறு வேண்டினான்.
கங்கை தேவ லோகத்திலிருந்து இறங்க பரம கருணாமூர்த்தி சிவபெருமான்
அவளை தனது ஜடாமுடியில் தாங்கும் காட்சி - கங்கோத்ரி
அடுத்தாற் போல மீண்டும் கங்கையை நோக்கித் தவமியற்றினான். தேவலோகத்திலிருந்து ஆகாசகங்கை மிகவும் உக்கிரத்துடன் பிரளயத்தையும் விட அதிவேகத்துடன் பூமியையை நோக்கி இறங்கினாள். பூமியையே மூழ்கடித்துக் கொண்டு செல்லக்கூடிய வேகம் அவளுடைய வேகம். ஆனால் சிவபெருமான் தன்னுடைய சடாமகுடத்தை விரித்து விட்டுக்கொண்டார். அந்த விரித்த செஞ்சடையில் ஆகாசகங்கையை வாங்கிக்கொண்டார். அந்த வ்யோமகேசரின் சடைகற்றைகளுக்குள் சிக்கிக் கொண்ட கங்கை திணறி விட்டாள். அவளை அங்கேயே தங்க வைத்துக் கொண்டு ஒரு சிறிய நீர்க்கற்றையை மட்டும் வெளியில் விட்டு கங்காதர மூர்த்தியாக நின்றார் தியாகராஜரான சிவபெருமான். இவ்வாறு கங்கையின் ஆணவத்தையும் அழித்தார் சிவபெருமான். அதானால் பெருமான் கங்காதரர் ஆனார்
கங்கைக்கு பூஜைகள் செய்கிறோம்
மலைமகளை ஒருபாகம் வைத்தலுமே மற்று ஒருத்தி
சலமுகத்தால் அவன்சடையில் பாயும்அது என்? ஏடீ!
சலமுகத்தால் அவன்சடையில் பாய்ந்திலனேல் தரணிஎல்லாம்
பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடுஆம் சாழலோ!
பொருள்: “ஏடீ, தோழி! உன் தலைமகன் மலையரசன் தன் திருமகள் பார்வதியை ஒரு பாகம் கொண்டும் வேறொருத்தியாகிய கங்கை கோபம் கொண்ட நீர் உருவத்தோடு அவர் சடையில் பாய்வது, யாது காரணமடீ?” எனத்தோழி தலைமகனை இயற்பழித்துரைக்க, நீர் வடிவத்தோடு அப்பரமசிவத்தின் சடைமுடியில் பாய்ந்திலளாயின் , பூலோகமெல்லாம் பாதாளத்தின் கண்ணே உட்புகும்படி பாய்ந்து , பொல்லாக் கேடு விளையும் சாழலோ! என்று தலைமகள் தோழிக்கு அவனை இயற்பட மொழிந்தாள்.
கங்கையை தலையில் தாங்கி கங்காதர மூர்த்தியாக சிவபெருமான் நின்ற அருளை அன்பர்கள் இவ்வாறு பாடிப்பரவுகின்றனர்.
கொன்றை வார்சடை மேல்பணி தரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த புனிதர்
தாவு கங்கை பொங்கு அலை தங்கும் புரி சடையோன்
கங்கையோடு தும்பையும் அணிந்தவர் என்றெல்லாம் பாடுகின்றார் அபிராமி பட்டர்.
அன்னையின் ஞானப்பாலுண்ட ஆளுடையப்பிள்ளையாம் திருஞான சம்பந்தர் கோளறு பதிகத்தில் பல்வேறு பாடல்களில் பரம கருணா மூர்த்தி சிவபெருமான் கங்கையை அணிந்ததை இவ்வாறெல்லாம் பாடுகின்றார்.
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
நதியோடு கொன்றைமாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
நாள்மலர் வன்னிகொன்றை நதி சூடீ வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒப்பிளமதியும் அப்பும் முடிமேலணிந்தென் ( அப்பு = நீர் )உளமே புகுந்த அதனால்
சலமக ளோடுஎருக்கு முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
என்று பல்வேறு விதமாக தியாகராஜனாம் சிவபெருமானின் அருட்திறத்தை தமது கொஞ்சு தமிழால் பாடுகின்றார் சம்பந்தப்பெருமான்.
இவ்வாறு தேவலோகத்திலிருந்து பூவுலகிற்கு வந்த கங்கை பகீரதன் முன் செல்ல, பின் தொடர்ந்தாள். ஆனால் வழியில் ஜானு முனிவரின் ஆசிரமத்தைத் தாண்டும்போது தன்னுடைய ஆசிரமம் மூழ்காமல் இருப்பதற்காக அம்முனிவர் கங்கையை விழுங்கி விட்டார். பின்னர் பகீரதன் அவரையும் மிகவும் வேண்டி கங்கையை விடுமாறு கேட்டுக்கொண்டான். அவர் கங்கையை தனது செவியின் மூலம் பாய விட்டார் எனவே கங்கை ஜானவி என்றும் அழைக்கப்படுகின்றாள்.
அதன் பின்னர் கங்கையை சகரர்களின் சாம்பல் எலும்புக் குவியலில் பாய்ந்து புனிதப்படுத்தச் செய்தான். சகரர்கள் சொர்க்கத்துக்குச் சென்றனர். கங்கை பாய்ந்த இடத்தில் ஒரு கடல் தோன்றியது. சகரர்களின் சாம்பல் இருந்த இடம் என்பதால் அதற்கு ‘சாகரம்’ என்று பெயர் ஏற்பட்டது. பகீரதனின் கடும் முயற்சியால், பூமிக்கு வந்த காரணத்தினால் பாகீரதி என்றும் அழைக்கப்படுகிறாள் கங்கை அவனது முயற்சியும் பாகீரதப் பிரயத்தனம் என்று அழைக்கப்படுகின்றது. கங்கையின் மகிமை இன்னும் தொடரும்.
3 comments:
அருமையான பதிவு.
அற்புதமான தகவல்கள்.. பல அரிய நிகழ்வுகளுடனும், புகைப்படங்களுடனும், தொடர் சிறப்பாக உள்ளது...
மிக்க நன்றி குருசாமி ஐயா.
Post a Comment