Tuesday, December 6, 2011

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -12


 
 அமுத கலசத்துடன் முக்திதாயினி  கங்கை


கங்கையைப் பற்றிய மற்ற புராண கதைகள் வாமனனாக, மாணிக்குறளனாக வந்து  மஹாபலியிடம் மூன்றடி மண் கேட்டு, அம்பர மூடறுத்து ஓங்கி உலகளந்து  திரிவிக்ரமனாக ஒரடியில் பூமியை அளந்து மறு அடியால் வானை அளந்த போது பிரம்மதேவன் தன் கமண்டலத்தில் இருந்த   நீரால் பெருமாளின் உயர்த்திய பாத்திற்கு  பாத பூஜை செய்த போது உருவானவளே ஆகாயகங்கை. இவளை த்ரிவிக்ரம பாத தீர்த்தம் என்று ஆழ்வார்கள் கொண்டாடுகின்றனர்,   பெரியாழ்வார் தமது தேவப்ரயாகை பாசுரத்தில் கங்கையை  இவ்வாறு பாடுகின்றார்.

அதிர்முகமுடையவலம்புரிகுமிழ்த்திஅழலுமிழாழிகொண்டெறிந்து அங்
கெதிர் முகவசுரர் தலைகளிடறும் என்புருடோத்தமனிருக்கை
சதுமுகன்  கையில்சதுப்புயன்தாளில் சங்கரன் சடையினில் தங்கி
கதிர்முகமணி கொண்டிழிபுனற்கங்கைக் கண்டமென்னுங்கடிநகரே.

 கங்கை உருவானதைக் கூறும் இன்னொரு புராணம்.  திருக்கயிலையிலுள்ள ஓரு தோட்டத்தில் சிவபெருமான் நடைபயின்றுக் கொண்டிருந்தார். பார்வதி தேவி ஓசைப்படாமல் சென்று  அவரது இரு கண்களையும் விளையாட்டாய் பற்றினார். உடன் உலக உயிர்கள் அனைத்திற்கும் அளவிலாத  துன்பம் ஏற்பட்டது. அதனால் உலகம் முழுவதும்  பேரிருள் சூழ்ந்தது. இதனையறிந்த சிவபெருமான்  தனது நெற்றிக்கண்ணைத் திறந்து அனைவரையும் காத்தார். ஒளி வந்ததால் அனைத்து உயிர்களும் துன்பம் நீங்கி இன்பமடைந்தனர்.  அனைவரும் சிவபெருமானைப் போற்றினர். இதனைக் கேள்விப் பட்ட பார்வதி தேவி  அவசரமாக தன் கைகளை நொடிப்பொழுதில் எடுத்தார். இதனால் இவரது பத்து கைவிரலில்  இருந்த  வியர்வைத் துளிகள் பத்தும் கங்கையாக மாறி மூவுலம் முழுவதும் பரவி  பெருத்த சேதத்தையும், அழிவையும்  உண்டாக்கியது.  இதனைக் கண்ட மூவுலகத்தினரும் சிவபெருமானிடம் முறையிட்டனர்.சிவபெருமானும் அவ்வெள்ளத்தை  அடக்கி  அதனை  தனது சிரசில் ஓர் மயிர் முனையில் தரித்தார். இதனைக்கண்ட அனைவரும்  சிவபெருமானைப் போற்றித் துதித்தனர்.  நான்முகன், இந்திரன், திருமால்  ஆகிய  மூவரும் சிவபெருமானிடம் சென்று கயிலைநாதா பார்வதி தேவியின்  கைவிரல் வியர்வையால்  உண்டான கங்கை பெரும் புனிதமானது, அதை உங்கள் முடியில் தரித்ததால் அது மேலும் புனிதமடைகிறது. அத்தகைய புனிதப் பொருளை  எங்களுக்கும் கொஞ்சம் கொடுத்தருள வேண்டும் என்றனர். அதன்படியே  இந்திரன் தனது அமராவதி நகருக்கும், நான்முகன் தனது மனோவதி நகருக்கும், திருமால் தனது வைகுண்டத்திற்கும் கங்கையைக் கொண்டு சேர்த்தனர்

 ரிஷிகேசத்தில் கங்கை
கங்கையின் வெள்ளத்தையும், வேகத்தையும் குறைத்து தனது சடைமுடியில்  தாங்கியிருப்பதால்  சிவபெருமானுக்கு  கங்காதர மூர்த்தி  என்ற பெயர் ஏற்பட்டது.  கங்காதர மூர்த்தியை தரிசிக்க இமயத்திற்கு தான் செல்ல வேண்டும். இமயமலையே கங்காதர மூர்த்தியின் இருப்பிடமாகும். அங்கு சென்று கங்காதர மூர்த்தியை மானசீகமாய் வணங்கி அங்கு கிடைக்கும்  கங்கை நீரை வீட்டிற்கு  எடுத்து வந்து தெளிக்க  இடம் புனிதமாகும்.

 கங்காதர மூர்த்தி 

சூரபத்மனின் கொடுமையால் துன்பபட்ட தேவர்கள் வேண்ட சிவபெருமான் தன்னுடைய ஐந்து முகங்கள் மற்றும் அம்பிகைக்கு உரிய அதோ முகத்திலிருந்து ஆறு தீப்பொறிகள் உண்டாயின இப்பொறிகளை அக்னி தேவன் ஏந்தி சென்று கங்கையிலே சேர்த்தான், கங்கை பின் அவற்றை சரவணப்பொய்கையில் சேர்பிக்க அங்கு அவை ஆறு அழகிய குழந்தைகளாக உருவாகின. எனவே கங்கை முருகனின்  ஒரு அன்னையாக  விளங்குகிறாள். முருகனும் காங்கேயன் என்று அழைக்கப்படுகின்றான்.  இதை அருணகிரிநாதர் இவ்வாறு பாடுகின்றார்.

சிங்கா ரமடந் தையர்தீ நெறிபோய்
மங்கா மலெனக் குவரந் தருவாய்
சங்க்ரா மசிகா வலசண் முகனே
கங்கா நதிபா லக்ருபா கரனே

கண்ணனால் புனிதமடைந்தது யமுனை என்றால் இராமனால் புனிதமடைந்தது கங்கையாகும். இராமபிரானின் ஜன்மம் கங்கை நதியின் கிளை நதியான சரயு நதிக்கரையில்தான் நிகழ்ந்தது. குகன் கடத்த கங்கையை கடக்கின்றான் நம்முடைய பிறவிக்கடலைக் கடத்தும் தாரக பிரம்மம் இராமபிரான்

மஹாபாரதத்தில் கங்கை சந்தனு மஹாராஜாவின் மனைவியாகவும், அஷ்டவசுக்களுக்குத் தாயாகவும். தேவவிரதானாக இருந்து யாரும் செய்ய முடியாத சபதத்தை எடுத்த பீஷ்ம பிதாமகரின்  அன்னையாகவும் கொண்டாடப்படுகின்றாள். 

 தேவ ப்ரயாகை - கண்டம் என்னும் கடிநகர்

( பாகீரதியும் அலக்நந்தாவும் சங்கமமாகி கங்கை ஆகும் புண்ணிய இடம்)


4255 மீ உயரத்தில் உள்ள கங்கோத்ரி பனியாற்றில்  கோமுக் என்னும் இடத்தில் ஒரு சிறிய குகையிலிருந்து   உற்பத்தியாகின்றது  பாகீரதி. ஒரு காலத்தில் கோமாதவின்(பசு) முகம் போல் இருந்ததால் இவ்விடத்திற்கு கோமுக் என்று பெயர்.  பின்னர் சறுக்கு பனிப்பறைகளின் வழியாக நுரைத்துக்கொண்டு  வீராவேசமாக நம்மை எல்லாம் தூய்மைப்படுத்த ஒடி வருகின்றாள். வடமேற்காக திரும்பி  கங்கோத்ரியை அடைகின்றாள் பாகீரதி  வடக்கில் திரும்பியதால் கங்கோத்ரி ஆயிற்று.உத்ரி என்றால் இறங்குதல் என்றும் பொருள் எனவே கங்கோத்ரி ஆயிற்று.  

  த்ரிவேணி சங்கமம் அலகாபாத்

 
நமது இந்திய நாட்டின் மிகப்பெரிய வற்றாத ஜீவநதியான கங்கை இமயமலையில் 3892 மீ (12769 அடி) உயரத்தில் அமைந்துள்ள கங்கோத்திரி பனியாற்றில் பாகீரதியாக உருவாகி ஓடி வருகின்றாள், நர நாரயண மலைத்தொடரில் வஸுதரா நீர் வீழ்ச்சியில் உருவாகி   பாய்ந்து வரும் அலக்நந்தா,  விஷ்ணு பிரயாகையில் தவுலி கங்கையுடன் சங்கமம் ஆகி , பின்னர் நந்த பிரயாகையில்  நந்தாங்கினியுடன் சங்கமம் ஆகி, கர்ண பிரயாகையில்  பிண்டாரியுடன் சங்கமம் ஆகி, ருத்ரபிரயாகையில்  மந்தாங்கினியுடன் சங்கமம் ஆகி நிறைவாக  தேவபிரயாகையில் பாகீரதியுடன் சங்கமம் ஆகி கங்கையாக ஹரித்வாரில் சமவெளியில் இறங்கி பாய்கின்றாள், பின்னர் கங்கை  உத்திரபிரதேசம், பீகார் மாநிலங்களின் வழியாக பாய்ந்து மேற்கு வங்காளத்தில் நுழைந்து ஹூக்ளி, பத்மா என்று இரண்டாக பிரிந்து வங்கக் கடலில் சமுத்திரத்தில் கலக்கின்றாள்.

 ஹரித்வார் ஹரி ஹா பௌடி( ஹரியின் பாதம்)

சிவ பெருமான் தனது ஜடா முடியிலிருந்து கங்கையை பூலோகத்தில் பாயவிட்ட போது அவள் ஏழு தாரைகளாக ஓடினாள் இவை சப்த சிந்து அழைக்கப்படுகின்றன. இமயமலையில் பல்வேறு இடங்களில் இருந்து உற்பத்தியாகும் இவை எல்லாம் ஒன்றாக சங்கமமாகி கங்கையாகி நம்மை புனிதப்படுத்துகின்றாள் இந்திய தேசத்தை வளப்படுத்துகின்றாள்.
     

  மகர வாஹினி கங்கா மய்யா( ரிஷிகேஷம்)
 
கங்காஜீ என்றும் கங்கா மய்யா (கங்கை அன்னை), கெங்கம்மா, கங்கையம்மன், கங்கா மாதா என்றும் அழைக்கப்படும் கங்கை அன்னை மகரவாஹினி, முதலை இவளது வாகனம், இவள் வெண்ணிறமானவள், மிக்க அழகு பொருந்தியவள், ஒளி பொருந்திய வைர கிரீடத்துடன் தன் இரு மேற்கரங்களில் அமுத கலசம், அல்லி மலர் தாங்கிய கோலத்தில் அருள் பாலிக்கின்றாள். தசமஹா வித்யா தேவிகள்  என்று அழைக்கப்படும் அன்னைகளுள் முதன்மையானவள் கங்கை. கங்கா, பவானி, காயத்ரி, காளி, லக்ஷ்மி, சரஸ்வதி, ராஜ ராஜேஸ்வரி, பாலா, சியாமளா, லலிதா தசா என்று லலிதா சகஸ்ரநாம பலசுருதியில் கூறப்பட்டுள்ளது.  இவை கங்கை பற்றிய சில புராண கதைகள் இனி நமது யாத்திரையை தொடர்வோம்
 
மலர்களே!  மலர்களே! 

இது வரை ஒரு சிறு விபத்து காரணமாக வீட்டின் உள்ளேயே இருந்த காரணத்தால் இதுவரை சார்தாம்  யாத்திரைப் பகுதியை வெகு வேகமாக பதிவிட முடிந்தது, இனி பணிக்கு செல்ல வேண்டும் மற்ற வீட்டு வேலைகளை கவனிக்க வேண்டும் என்பதால் சிறிது  இடைவெளி விட்டு  பதிவுகள் தொடரும். தொடர்ந்து வந்து படித்து ஊக்குவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். 

14 comments:

Sankar Gurusamy said...

நேரம் கிடைக்கும்போது இந்த அற்புத அனுபவத்தை எங்களுடன் தொடர்ந்து பகிருங்கள்..

Kailashi said...

நிச்சயம் பதிவுகள் தொடரும், பொறுமையாக வந்து தரிசியுங்கள் சங்கர் ஐயா.

DrPKandaswamyPhD said...

அருமையான விவரங்கள்.

Kailashi said...

மிக்க நன்றி கந்தசாமி ஐயா.

ஸ்பார்க் ஆர்ட்ஸ் said...

எல்லா பதிவையும் படித்தேன் அருமையாக இருந்தது,, அடுத்த பதிவை எதிர் நோக்குகிறேன், உங்களுக்கு பூரண உடல் நலத்தை கொடுக்க எல்லாம் வல்ல ஆண்டவனை பிராத்திக்கிறேன், மறக்காமல் அடுத்த முறை செல்லும் போது தெரிவிக்கவும்.

Logan said...

கங்கையை வரலாற்றை மிக அழகாகவும் அது பாய்ந்து வரும் மாநிலத்தையும் அதற்குரிய பெயரையும் மிக அழகாக விவரித்துள்ளீர்கள் ஐயா.

பனி நிமித்தம் காரணமாக, தங்களின் இடுகைகளை ஒருசேர இன்று தான் படித்தேன். விபத்து நேர்ந்ததாகவும் தற்போது பணிக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளீர்கள் .உடல் நலத்தை தயவு கூர்ந்து கவனித்து கொள்ளவும்.

resume said...

Dear Sir,
Iam sunder from chennai.

Your writing skill is wonderful and very interesting, your photos also superb, there is no word about your yathrai ungalukku namaskaram.

OM NAMA Sivaya

Kailashi said...

மிக்க நன்றி கந்தசாமி ஐயா.

Kailashi said...

//உங்களுக்கு பூரண உடல் நலத்தை கொடுக்க எல்லாம் வல்ல ஆண்டவனை பிராத்திக்கிறேன்//

அனந்த கோடி நன்றிகள் ஸ்பார்க் ஐயா.

Kailashi said...

//மறக்காமல் அடுத்த முறை செல்லும் போது தெரிவிக்கவும்.//

இந்த யாத்திரைய? இல்லை மற்றுமுள்ள இமயமலை யாத்திரைகளா?

Kailashi said...

//உடல் நலத்தை தயவு கூர்ந்து கவனித்து கொள்ளவும்.//

அனந்த கோடி நன்றிகள் LOgan ஐயா. எல்லாம் அவன் பார்த்துக்கொள்வான். சகலம் சிவார்ப்பணமஸ்து.

Kailashi said...

Welcome Sundar (resume). I am also in Chennai Ashok Nagar. Please do visit often.

ஸ்பார்க் ஆர்ட்ஸ் said...

இது போல சார் தாம் யாத்திரை செல்லும் பொது தெரிவிக்கவும் 9865442911

Kailashi said...

//இது போல சார் தாம் யாத்திரை செல்லும் பொது தெரிவிக்கவும்//

நிச்சயம் தெரிவிக்கின்றேன்.