Showing posts with label கங்கோத்ரி. Show all posts
Showing posts with label கங்கோத்ரி. Show all posts

Sunday, December 25, 2011

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -13


கங்கோத்ரி கோவிலின் முன் குழுவினருடன்

முதற்கண் அன்பு உள்ளம் கொண்ட  அனைவருக்கும் அனந்த கோடி நன்றிகள்.  மின்னஞ்சல் மூலமும், பின்னூட்டம் மூலமும்  நலம் விசாரித்த அனைவருக்கும், மற்றும் பின் தொடரும் வந்து தரிசனம் பெற்றுச் செல்பவர்களுக்கும்   மிக்க நன்றி.  இன்றிலிருந்து பதிவுகள் தொடர்கின்றன. 

கங்கோத்ரி ஆலயம் 

 
 பக்கவாட்டுத்தோற்றம்
  
சிவன் சன்னதியுடன்  



 அம்மன் சன்னதி  மதியம் 2 மணி முதல் 3 மணி வரை 
சார்த்தியிருக்கும் என்னும் அறிவிப்புப் பலகை

வெகு நேரம் கங்கா மாதாவின் தரிசனத்திற்கு அழைத்துச் செல்லாமல் நிறுத்தி வைத்து விட்டேனா? பரவாயில்லை வாருங்கள் அடியேனுடன்.  முன்னரே கூறியது போல கங்கோத்ரி ஆலயம் வரையில் வண்டிகள் செல்கின்றன. வண்டியில் இருந்து இறங்கியவுடன் கண்ணில் கங்கோத்ரி ஆலயத்தின் பளிங்கு கோபுரம் கண்ணில் பட்டது. கூடவே மூன்று  முக்கோண முகப்பு வாயிலும் கண்ணில் பட்டது. நுழைவு வாயில் தொடங்கி கோயில் வரையில் இருபக்கமும் கடைகள். 

 பரம கருணாமூர்த்தி சிவபெருமான் கங்கையை
தனது ஜடாமுடியில் தாங்கும்  சுதை சிற்பம் 

ஆலயத்தில் இருந்து நதிக்கு செல்ல படிகள் உள்ளன , நதிக்கரையில் உள்ள கணேசரை வணங்கி விட்டு,   முதலில் பாகீரதியில் ஸ்நானம் செய்து விட்டு  பின்னர் கங்கம்மாவை தரிசனம் செய்யலாம் என்று அனைவரும் பாகீரதியில் குளிக்க சென்றோம். இங்கு தண்ணீர் மிகவும் குளிர்ந்ததாக உள்ளது. மூன்று முழுக்கு போடுவதற்குள் உடம்பெல்லாம் விறைத்து விட்டது. அவசர அவசரமாக குளித்து விட்டு வெளியே ஓடி வந்து தலை  துவட்டிக்கொண்டு, கம்பளி உடைகளை அணிந்து கொண்டோம்.  மானசரோவரில் இருந்ததை விட இங்கு  தண்ணீர் குளிர்ச்சியாக இருந்தது.  அதை அடியேனுடன் திருக்கயிலாயம் பயணம் செய்த திரு. முட்கல் அவர்கள் இரண்டாம் தடவை பயணம் செய்த போது உறுதி செய்தார். அவர் மிகவும் குளிர்ந்த குளங்கலில் முதலாவதாக மலர் பள்ளத்தாக்கில்   உள்ள ஹேமகுண்ட சாஹிப் குள நீரும், இரண்டாவதாக கங்கோத்ரி நீரும், மூன்றாவதாக திருக்கயிலாய கௌரி குளத்து நீர் என்று வரிசைப்படுத்தினார். எனவே இந்த மாதிரி இடங்களில் முதலில் கரையில் அமர்ந்து செம்பின் மூலம் தண்ணீரை முகர்ந்து உடம்பில் ஊற்றிக் கொள்வது நல்லது. மேலும் தலையில் நீரில் உள்ளே கொண்டு செல்லாமல் நீரை உற்றிக்கொள்வது உத்தமம் என்று கூறினார். 

 பாகீரதி நதிக்கரையில் திரு.இரவி 

 பாகீரதி கங்கோத்ரியில் பாயும் அழகு 

 கங்கா மாதாவிற்கு பூஜை 



கங்கா ஸ்நானத்திற்குப்பின் கங்கா மாதாவிற்கு, முக்தி தாயினிக்கு, வாழ்வளிக்கும் அன்னைக்கு  தூப தீப நைய்வேத்யம் படைத்து பூஜைகள் செய்தோம்.
பகவத்கீதா கிஞ்சித் அதீதா

கங்கா ஜலலவ கணிகா பீதா

ஸக்ருதபி ஏன முராரி சமார்ச்சா

க்ரியதே தஸ்ய யமேந ந சர்ச்சா

கொஞ்சமாவது கீதையை பாராயணம் செய்து, துளியாவது கங்கா தீர்த்தம் பருகி  ஒரு முறையாவது அர்ச்சனை  செய்கிறானோ அவன் எமலோகமான நரகத்திற்குப்போகாமல் புண்ணிய லோகத்திற்கு போகின்றான் என்றபடி  முக்தியளிக்கும் கங்கா தீர்தத்தை கேதாரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யவும், வீட்டிற்கும், நண்பர்களுக்கு கொடுக்கவும் கங்கா தீர்த்தம் சேகரித்துக்கொண்டோம்.  பின்னர் பாகீரதியின் கரையில் அமைந்துள்ள பாகீரதனின் சன்னதியில் சென்று நாம் எல்லாரும் உய்ய கங்கையை ஆகாயத்திலிருந்து பாகீரத தவம் செய்த செம்மலை வணங்கினோம். இவர் அமர்ந்துள்ள பாறை பாகீரதன் சிலா என்று அழைக்கப்படுகின்றது. இங்கு அமர்ந்ததுதான் இவர் கங்கையை பூலோகத்திற்கு வரவழைக்க தவம் செய்தாராம். தன் முன்னோர்களை கரையேற்ற பாகீரதன் தவம் செய்த இடம் என்பதால் இவ்விடத்தில் பித்ரு தர்ப்பணம் செய்வது சிறந்தது. 

பாபாவுடன் சொக்கலிங்கம் மற்றும் இரவி


பின்னர் கணபதி சன்னதிக்கு சென்று முழு முதற்கடவுளுக்கு தோப்புக்கரணம் இட்டு வணங்கி  கங்கோத்ரி கோவிலுக்கு வலப்பக்கத்தில் அமைந்துள்ள சிவ பெருமான் சன்னதிக்கும் சென்று சிவ லிங்கத்திற்கு கங்கா தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வணங்கினோம். பின்னர் கங்கா மாதாவின் சன்னதிக்கு சென்று வணங்கினோம். கூட்டம் அதிகம் இருக்கவில்லை ஆயினும் அனைவரும்  வரிசையில் நின்று சென்றனர். லலிதா சகஸரநாமம் ஜபித்துக்கொண்டே மூன்று முறை அருமையாக சன்னதியை சுற்றி வந்து தரிசனம் செய்தோம்.

தேவதாரு வனம்


கருவறையில் கங்கை அன்னை நடு நாயகமாக சிலா ரூபத்தில் அமர்ந்த ரூபத்தில் பட்டுப்பீதாம்பரதாரியாய், சர்வாபரணபூஷிணியாய்  எழிலாக கொலு வீற்றிருக்கின்றாள். அன்னையின் இரு புறங்களிலும் இவளது சகோதரிகள் யமுனையும் சரஸ்வதியும் சேவை சாதிக்கின்றனர். மேலும் இராதாகிருஷ்ணரும் சேவை சாதிக்கின்றனர். இமயமலையின் பல ஆலயங்களில் தெய்வ மூர்த்தங்கள் பஞ்சாதாயன முறையில் முக்கிய மூர்த்தி நடுவிலும் மற்ற மூர்த்தங்கள் அவருடன் இருக்கும் முறையில்  அமைக்கப்படுகின்றன.   
  நடராஜர் அபிஷேகத்திற்கு கங்கா தீர்த்தம் சேகரிக்கும்
வைத்தி அவர்கள் 

வெளியே வந்து  சிவ பெருமான் பெருங்கருணையுடன் தன் ஜடா முடியில் கங்கையை தாங்கும் சிலா ருபத்தை புகைப்படம் எடுத்தோம். அங்கு ஒரு வயதான பாபா புறாக்களை வளர்த்துக்கொண்டிருந்தார் அவரை வணங்கி ஆசீர்வாதம் பெற்றோம். பனிபடர்ந்த சிகரங்களை கண்டு களித்தோம். அனைவரும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.  மணி இரண்டாகிவிட்டது கோவில் சன்னதியும் சார்த்தப்படும்  உடனே கிளம்பிவிடலாம், நமது பேருந்து இல்லை என்பதால்  ஜீப்பில்தான்  தான் செல்ல வேண்டும், இங்கிருந்து பகல் மூன்று மணிக்கு மேல் பேருந்து இல்லை என்று வழிகாட்டி கூறியதால் அற்புத   தரிசனத்திற்கு கங்கா மாதாவிற்கு நன்றி கூறி கிளம்பினோம். இனி இக்கோவிலைப்பற்றி காண்போமா? 
பாகீரதன் சிலா பித்ரு தர்ப்பணம் செய்யும் இடம்
 
பாகீரதியின்  வலக்கரையில் 3753 மீ (12313 அடி) உயரத்தில் வெள்ளைப் பளிங்கு கற்களால் ஆன  கங்கோத்ரி கோயில் அமைந்துள்ளது  கர்வாலின் கூர்க்கா பிரிவைச் சார்ந்த ஜெனரல் அமர்சிங் தாபா 18ம் நூற்றாண்டில்   இக்கோவிலைக் கட்டினார்.  அருகிலேயே சிவபெருமானுக்கு  ஒரு தனிக்கோவில் உள்ளது.    கோயில் அமைந்திருக்கும் கல் பகீரதன்  காலை ஊன்றி  தவம் செய்த இடம் என்பது ஐதீகம். அதனால் தான் இது பாகீரத சிலா   என்னும் பெயர் பெற்றது. இங்குதான் பாண்டவர்கள் அசுவமேத யாகம் செய்ததாக நம்பிக்கை. ஆதிசங்கர பகவத்பாதாள் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூவருக்கும்  கோயில் எடுத்தாராம். 

இக்கோவில் தாருகாவனம் எனப்படும் தேவதாரு மரங்கள் சூழ்ந்த காட்டில் அமைந்துள்ளது. கங்கோத்ரியில் உள்ள ஆலயம் 20 அடி உயரம் கொண்டது. அற்புதமான இயற்கை சூழல் அமைந்த அந்த இடத்தில் சிவலிங்கத்தையும், கங்காதேவியையும் வணங்கிப் பணிவது அற்புதமான ஓர் அனுபவம். நம் மனதில் தொக்கி நிற்கும் அற்பமான ஆசைகள் அங்கு தானாக விடைபெற்றுக் கொள்கின்றன.


கங்கோத்ரி நுழைவு வாயில் பின்பக்க தோற்றம் 
 
கங்கோத்ரி பகுதியில் ஓடும் பாகீரதி நதிக்குள்ளே ஒரு சிவலிங்கம் இருக்கிறது. நீர் மட்டம் குறையும்போது இந்த லிங்கத்தை தரிசிக்கும் பேறு பக்தர்களுக்குக் கிடைக்கிறது. இவ்வளவு உயரத்தில் அமைந்திருந்தாலும் பல்வேறு சிரமங்களுக்கிடையில்தான் கங்கோத்ரியை அடைய முடியும் என்றாலும்,  ஆண்டு தோறும் இரண்டரை லட்சம் பேர் இங்கு கூடி ஈசனையும், கங்காதேவியையும் தரிசித்து  மகிழ்கின்றனர். திபெத்திய எல்லைக்கருகே இந்த இடம் இருக்கிறது. மகாபாரதப் போருக்குப் பிறகு பாண்டவர்கள் இங்கு யாகம் செய்துள்ளனர். கங்கோத்ரியில் இயற்கை எழிலுக்குப் பஞ்சமே இல்லை. அழகிய பள்ளத்தாக்குகள், அற்புத வனங்கள், ட்ரெகிங் எனப்படும் மலையேற்றப் பயிற்சியையும் இங்கு செய்கின்றனர். ஆலயத்தின் மறுபுறத்தில் நிறைய ஆசிரமங்கள் உள்ளன. மொத்தத்தில் அமைதி அளிக்கும் சூழல் இங்கு நிலவுகிறது.
 
நவம்பர் மாதத்தில் இந்த பகுதி முழுவதும் பனி சூழ்ந்து விடும். ஆலயத்தையும் பனிப்படலம் மூடி விடும். எனவே, தீபாவளி திருநாள் முடிந்தவுடன் இங்கு இருக்கும் கங்கை அம்மன் திரு உருவத்தை அலங்காரம் செய்து பல்லக்கில்  இங்கிருந்து 12 கி.மீ., கீழே உள்ள ஹர்சில் என்னும் கிராமத்திற்கு அருகில் உள்ள முக்பா என்ற இடத்தில் உள்ள ஆலயத்தில் நிறுவுகின்றனர். அடுத்த மே மாதம் தான்  பூஜாரிகள் அம்மனின் சிலையை மீண்டும் கங்கோத்ரி ஆலயத்திற்கு எடுத்துச்செல்வர். அக்ஷய திருதியை அன்று முக்பாவிலிருந்து கங்கையன்னை திரும்பி கங்கோத்ரிக்கு பல்லக்கில் திரும்பி வருகின்றாள் அன்றையதினம் சன்னதியிலும் நதிக்கரையிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. தீபாவளியன்று ஆலயம் மூடும் போதும் கோயில் முழுவதும் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.  இரண்டு நாட்களிலும் பக்தர் கூட்டம் கங்கோத்ரியில் அலை மோதும். 

கோடை காலத்தில் ஆலயம் காலை 6:15 மணி முதல் 2 மணி வரையிலும் பின்னர் 3 மணி முதல் 9:30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். குளிர் காலத்தில் காலை 6:45 மணி முதல் 2 மணி வரையிலும் பின்னர் 3 மணி முதல் 7 மணி வரையிலும்  திறந்திருக்கும். தினமும்  காலை 6 மணிக்கு மங்கள ஆரத்தி சன்னதியில் நடைபெறுகின்றது அதற்கு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. கோடைக் காலத்தில் மாலை  7:45 மணிக்கும், குளிர் காலத்தில் 7 மணிக்கும் கங்கோத்ரிக் கரையில் ஆரத்தி நடைபெறுகின்றது. 

இந்திய திபெத் எல்லைக்கு மிக அருகில் அமைந்துள்ளது கங்கோத்ரி, டேராடுனிலிருந்து 300  கி.மீ, ரிஷிகேஷிலிருந்து 250  கி.மீ. உத்தரகாசியிலிருந்து 105 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது கங்கோத்ரி. பார்க்கோட்டிலிருந்து  செல்லும் பாதை சிறிது தூரத்தில் இரண்டாக பிரிகின்றது இடப்பக்கம் செல்லும் பாதை யமுனைக் கரையோரம் யமுனோத்திரிக்கு செல்கின்றது. வலப்பக்கம் செல்லும் பாதை பிரம்மகால், கல்யாணி, தராசு, உத்தரகாசி வழியாக வழியாக கங்கோத்ரிக்கு செல்கின்றது.. ரிஷிகேஷிலிருந்து நரேந்திர நகர், ஜகல், சம்பா, தேஹ்ரி, தராசு, உத்தரகாசி வழியாகவும்  கங்கோத்திரிக்கு ஒரு பாதை உள்ளது. 


அன்னையை அற்புதமாக தரிசனம் செய்தபின் வாகனங்கள்  நிற்கும் இடத்திற்கு திரும்பி வந்து பார்த்தபோது  ஜீப் ஒன்றும் இருக்கவில்லை, கடைசி அரசு பேருந்து மட்டுமே இருந்தது, வேறு வழியில்லாமல் அதி ஏறி உத்தரகாசி வரை பயணம் செய்தோம். பேருந்து   பயணத்தின் போது ஏற்பட்ட அனுபவங்களையும், அடுத்து உத்தரகாசியில் இரண்டு நாட்கள் மாட்டிக்கொண்ட அனுபவத்தையும் அடுத்த பதிவில் காணலாமா அன்பர்களே. 

Wednesday, December 7, 2011

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -12


 
 அமுத கலசத்துடன் முக்திதாயினி  கங்கை


கங்கையைப் பற்றிய மற்ற புராண கதைகள் வாமனனாக, மாணிக்குறளனாக வந்து  மஹாபலியிடம் மூன்றடி மண் கேட்டு, அம்பர மூடறுத்து ஓங்கி உலகளந்து  திரிவிக்ரமனாக ஒரடியில் பூமியை அளந்து மறு அடியால் வானை அளந்த போது பிரம்மதேவன் தன் கமண்டலத்தில் இருந்த   நீரால் பெருமாளின் உயர்த்திய பாத்திற்கு  பாத பூஜை செய்த போது உருவானவளே ஆகாயகங்கை. இவளை த்ரிவிக்ரம பாத தீர்த்தம் என்று ஆழ்வார்கள் கொண்டாடுகின்றனர்,   பெரியாழ்வார் தமது தேவப்ரயாகை பாசுரத்தில் கங்கையை  இவ்வாறு பாடுகின்றார்.

அதிர்முகமுடையவலம்புரிகுமிழ்த்திஅழலுமிழாழிகொண்டெறிந்து அங்
கெதிர் முகவசுரர் தலைகளிடறும் என்புருடோத்தமனிருக்கை
சதுமுகன்  கையில்சதுப்புயன்தாளில் சங்கரன் சடையினில் தங்கி
கதிர்முகமணி கொண்டிழிபுனற்கங்கைக் கண்டமென்னுங்கடிநகரே.

 கங்கை உருவானதைக் கூறும் இன்னொரு புராணம்.  திருக்கயிலையிலுள்ள ஓரு தோட்டத்தில் சிவபெருமான் நடைபயின்றுக் கொண்டிருந்தார். பார்வதி தேவி ஓசைப்படாமல் சென்று  அவரது இரு கண்களையும் விளையாட்டாய் பற்றினார். உடன் உலக உயிர்கள் அனைத்திற்கும் அளவிலாத  துன்பம் ஏற்பட்டது. அதனால் உலகம் முழுவதும்  பேரிருள் சூழ்ந்தது. இதனையறிந்த சிவபெருமான்  தனது நெற்றிக்கண்ணைத் திறந்து அனைவரையும் காத்தார். ஒளி வந்ததால் அனைத்து உயிர்களும் துன்பம் நீங்கி இன்பமடைந்தனர்.  அனைவரும் சிவபெருமானைப் போற்றினர். இதனைக் கேள்விப் பட்ட பார்வதி தேவி  அவசரமாக தன் கைகளை நொடிப்பொழுதில் எடுத்தார். இதனால் இவரது பத்து கைவிரலில்  இருந்த  வியர்வைத் துளிகள் பத்தும் கங்கையாக மாறி மூவுலம் முழுவதும் பரவி  பெருத்த சேதத்தையும், அழிவையும்  உண்டாக்கியது.  இதனைக் கண்ட மூவுலகத்தினரும் சிவபெருமானிடம் முறையிட்டனர்.சிவபெருமானும் அவ்வெள்ளத்தை  அடக்கி  அதனை  தனது சிரசில் ஓர் மயிர் முனையில் தரித்தார். இதனைக்கண்ட அனைவரும்  சிவபெருமானைப் போற்றித் துதித்தனர்.  நான்முகன், இந்திரன், திருமால்  ஆகிய  மூவரும் சிவபெருமானிடம் சென்று கயிலைநாதா பார்வதி தேவியின்  கைவிரல் வியர்வையால்  உண்டான கங்கை பெரும் புனிதமானது, அதை உங்கள் முடியில் தரித்ததால் அது மேலும் புனிதமடைகிறது. அத்தகைய புனிதப் பொருளை  எங்களுக்கும் கொஞ்சம் கொடுத்தருள வேண்டும் என்றனர். அதன்படியே  இந்திரன் தனது அமராவதி நகருக்கும், நான்முகன் தனது மனோவதி நகருக்கும், திருமால் தனது வைகுண்டத்திற்கும் கங்கையைக் கொண்டு சேர்த்தனர்

 ரிஷிகேசத்தில் கங்கை
கங்கையின் வெள்ளத்தையும், வேகத்தையும் குறைத்து தனது சடைமுடியில்  தாங்கியிருப்பதால்  சிவபெருமானுக்கு  கங்காதர மூர்த்தி  என்ற பெயர் ஏற்பட்டது.  கங்காதர மூர்த்தியை தரிசிக்க இமயத்திற்கு தான் செல்ல வேண்டும். இமயமலையே கங்காதர மூர்த்தியின் இருப்பிடமாகும். அங்கு சென்று கங்காதர மூர்த்தியை மானசீகமாய் வணங்கி அங்கு கிடைக்கும்  கங்கை நீரை வீட்டிற்கு  எடுத்து வந்து தெளிக்க  இடம் புனிதமாகும்.

 கங்காதர மூர்த்தி 

சூரபத்மனின் கொடுமையால் துன்பபட்ட தேவர்கள் வேண்ட சிவபெருமான் தன்னுடைய ஐந்து முகங்கள் மற்றும் அம்பிகைக்கு உரிய அதோ முகத்திலிருந்து ஆறு தீப்பொறிகள் உண்டாயின இப்பொறிகளை அக்னி தேவன் ஏந்தி சென்று கங்கையிலே சேர்த்தான், கங்கை பின் அவற்றை சரவணப்பொய்கையில் சேர்பிக்க அங்கு அவை ஆறு அழகிய குழந்தைகளாக உருவாகின. எனவே கங்கை முருகனின்  ஒரு அன்னையாக  விளங்குகிறாள். முருகனும் காங்கேயன் என்று அழைக்கப்படுகின்றான்.  இதை அருணகிரிநாதர் இவ்வாறு பாடுகின்றார்.

சிங்கா ரமடந் தையர்தீ நெறிபோய்
மங்கா மலெனக் குவரந் தருவாய்
சங்க்ரா மசிகா வலசண் முகனே
கங்கா நதிபா லக்ருபா கரனே

கண்ணனால் புனிதமடைந்தது யமுனை என்றால் இராமனால் புனிதமடைந்தது கங்கையாகும். இராமபிரானின் ஜன்மம் கங்கை நதியின் கிளை நதியான சரயு நதிக்கரையில்தான் நிகழ்ந்தது. குகன் கடத்த கங்கையை கடக்கின்றான் நம்முடைய பிறவிக்கடலைக் கடத்தும் தாரக பிரம்மம் இராமபிரான்

மஹாபாரதத்தில் கங்கை சந்தனு மஹாராஜாவின் மனைவியாகவும், அஷ்டவசுக்களுக்குத் தாயாகவும். தேவவிரதானாக இருந்து யாரும் செய்ய முடியாத சபதத்தை எடுத்த பீஷ்ம பிதாமகரின்  அன்னையாகவும் கொண்டாடப்படுகின்றாள். 

 தேவ ப்ரயாகை - கண்டம் என்னும் கடிநகர்

( பாகீரதியும் அலக்நந்தாவும் சங்கமமாகி கங்கை ஆகும் புண்ணிய இடம்)


4255 மீ உயரத்தில் உள்ள கங்கோத்ரி பனியாற்றில்  கோமுக் என்னும் இடத்தில் ஒரு சிறிய குகையிலிருந்து   உற்பத்தியாகின்றது  பாகீரதி. ஒரு காலத்தில் கோமாதவின்(பசு) முகம் போல் இருந்ததால் இவ்விடத்திற்கு கோமுக் என்று பெயர்.  பின்னர் சறுக்கு பனிப்பறைகளின் வழியாக நுரைத்துக்கொண்டு  வீராவேசமாக நம்மை எல்லாம் தூய்மைப்படுத்த ஒடி வருகின்றாள். வடமேற்காக திரும்பி  கங்கோத்ரியை அடைகின்றாள் பாகீரதி  வடக்கில் திரும்பியதால் கங்கோத்ரி ஆயிற்று.உத்ரி என்றால் இறங்குதல் என்றும் பொருள் எனவே கங்கோத்ரி ஆயிற்று.  

  த்ரிவேணி சங்கமம் அலகாபாத்

 
நமது இந்திய நாட்டின் மிகப்பெரிய வற்றாத ஜீவநதியான கங்கை இமயமலையில் 3892 மீ (12769 அடி) உயரத்தில் அமைந்துள்ள கங்கோத்திரி பனியாற்றில் பாகீரதியாக உருவாகி ஓடி வருகின்றாள், நர நாரயண மலைத்தொடரில் வஸுதரா நீர் வீழ்ச்சியில் உருவாகி   பாய்ந்து வரும் அலக்நந்தா,  விஷ்ணு பிரயாகையில் தவுலி கங்கையுடன் சங்கமம் ஆகி , பின்னர் நந்த பிரயாகையில்  நந்தாங்கினியுடன் சங்கமம் ஆகி, கர்ண பிரயாகையில்  பிண்டாரியுடன் சங்கமம் ஆகி, ருத்ரபிரயாகையில்  மந்தாங்கினியுடன் சங்கமம் ஆகி நிறைவாக  தேவபிரயாகையில் பாகீரதியுடன் சங்கமம் ஆகி கங்கையாக ஹரித்வாரில் சமவெளியில் இறங்கி பாய்கின்றாள், பின்னர் கங்கை  உத்திரபிரதேசம், பீகார் மாநிலங்களின் வழியாக பாய்ந்து மேற்கு வங்காளத்தில் நுழைந்து ஹூக்ளி, பத்மா என்று இரண்டாக பிரிந்து வங்கக் கடலில் சமுத்திரத்தில் கலக்கின்றாள்.

 ஹரித்வார் ஹரி ஹா பௌடி( ஹரியின் பாதம்)

சிவ பெருமான் தனது ஜடா முடியிலிருந்து கங்கையை பூலோகத்தில் பாயவிட்ட போது அவள் ஏழு தாரைகளாக ஓடினாள் இவை சப்த சிந்து அழைக்கப்படுகின்றன. இமயமலையில் பல்வேறு இடங்களில் இருந்து உற்பத்தியாகும் இவை எல்லாம் ஒன்றாக சங்கமமாகி கங்கையாகி நம்மை புனிதப்படுத்துகின்றாள் இந்திய தேசத்தை வளப்படுத்துகின்றாள்.
     

  மகர வாஹினி கங்கா மய்யா( ரிஷிகேஷம்)
 
கங்காஜீ என்றும் கங்கா மய்யா (கங்கை அன்னை), கெங்கம்மா, கங்கையம்மன், கங்கா மாதா என்றும் அழைக்கப்படும் கங்கை அன்னை மகரவாஹினி, முதலை இவளது வாகனம், இவள் வெண்ணிறமானவள், மிக்க அழகு பொருந்தியவள், ஒளி பொருந்திய வைர கிரீடத்துடன் தன் இரு மேற்கரங்களில் அமுத கலசம், அல்லி மலர் தாங்கிய கோலத்தில் அருள் பாலிக்கின்றாள். தசமஹா வித்யா தேவிகள்  என்று அழைக்கப்படும் அன்னைகளுள் முதன்மையானவள் கங்கை. கங்கா, பவானி, காயத்ரி, காளி, லக்ஷ்மி, சரஸ்வதி, ராஜ ராஜேஸ்வரி, பாலா, சியாமளா, லலிதா தசா என்று லலிதா சகஸ்ரநாம பலசுருதியில் கூறப்பட்டுள்ளது.  இவை கங்கை பற்றிய சில புராண கதைகள் இனி நமது யாத்திரையை தொடர்வோம்
 
மலர்களே!  மலர்களே! 

இது வரை ஒரு சிறு விபத்து காரணமாக வீட்டின் உள்ளேயே இருந்த காரணத்தால் இதுவரை சார்தாம்  யாத்திரைப் பகுதியை வெகு வேகமாக பதிவிட முடிந்தது, இனி பணிக்கு செல்ல வேண்டும் மற்ற வீட்டு வேலைகளை கவனிக்க வேண்டும் என்பதால் சிறிது  இடைவெளி விட்டு  பதிவுகள் தொடரும். தொடர்ந்து வந்து படித்து ஊக்குவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.