Friday, October 12, 2018

உலக சுற்றுலா தினப்போட்டி முதல் பரிசு

அடியேன் தினமணி இணைய தளத்தின் உலக சுற்றுலா தின கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றேன். அதைப் பற்றிய கட்டுரை இது.

******************

தினமணி இணையதளத்தின் ‘உலக சுற்றுலா தினப்போட்டி’ பரிசு பெற்றோர் பட்டியல்!

By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 09th October 2018 03:14 PM  |   அ+அ அ-   | 

செப்டம்பர் 27, சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு தினமணி இணையதளம் நடத்திய ‘உலக சுற்றுலா தினப்போட்டி’ யில் ஏராளமான வாசகர்கள் பங்கேற்றிருந்தனர். அவர்கள் அனுப்பியிருந்த சுவாரஸ்யமான சுற்றுலா அனுபவக் கட்டுரைகளில் பரிசுக்குரியவர்களது பட்டியலைத் தேர்வு செய்ய கடைசிவரையிலும் சற்று சிரமமாகத்தான் இருந்தது. ஏனென்றால் சுற்றுலா அனுபவங்கள் என்பவை எப்போதுமே சென்றோம், பார்த்தோம், ரசித்தோம், திரும்பினோம் என்று மட்டுமே இருந்து விட்டால் அதில் என்ன சுவாரஸ்யம் இருந்து விட முடியும்?! தான் பார்த்த விடயங்களை... தான் கண்டு ரசித்த இடங்களை... தனக்கு நேர்ந்த அனுபவங்களை சுவை பட ஒருவர் விவரிக்கும் போது அதை வாசிப்பவர்களுக்கு அந்த இடங்களுக்கெல்லாம் செல்லாமலே சென்று வந்த உணர்வை ஒரு அனுபவக் கட்டுரை அளிக்குமாயின் அது தான் சிறந்த சுற்றுலா அனுபவக் கட்டுரையாக இருக்க முடியும்.
போட்டிக்காக எங்களுக்கு வந்த கட்டுரைகளில் பலவும் அந்த ரகத்தில் தான் இருந்தன. ஆயினும் பரிசுக்குரியவை என 5 ஐ மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டியிருந்ததால் நிராகரிக்க மனமின்றியே சில சுற்றுலா அனுபவக் கட்டுரைகள் தேர்விலிருந்து விடுபட்டன. ஆயினும் அவற்றின் சிறப்பான தன்மைக்காக அந்தக் கட்டுரைகள் அனைத்துமே தினமணி இணையதளத்தின் சிறப்புக் கட்டுரைப் பிரிவிலும், சுற்றுலாப் பிரிவிலும் வரும் வாரங்களில் நிச்சயம் பிரசுரிக்கப் பட்டு பெருமைப் படுத்தப்படும். எனவே பரிசுக்குரியவையாக தேர்வாகாத கட்டுரைகளிலும் எதுவுமே சோடையில்லை என்பதை வாசகர்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறோம். 
பரிசுக்குரிய சுற்றுலா அனுபவக் கட்டுரைகள் லிஸ்ட்...
முதல் பரிசு
முருகானந்தம் சுப்ரமண்யன்
(திருக்கயிலாயம் மற்றும் நவதுவாரகை யாத்திரை அனுபவங்கள் )
இரண்டாம் பரிசு 
ஆத்மநாதன்
(வாடிகன் முதல் ஸ்விஸ், ஜெர்மன், ஃப்ரான்ஸ், ஹங்கேரி வரையிலான ஐரோப்பிய பயண அனுபவங்கள்)
மூன்றாம் பரிசு
ரவி அருணாச்சலம்
புலிகேட் ஏரி முதல் வண்டலூர் ஓட்டேரி சரணாலயம் வரையிலான பறவைகள் சரணாலங்களைத் தேடித் தேடிச் சென்று பெற்ற பறவைச் சுற்றுலா அனுபவம்
நான்காம் பரிசு 
நைனார் முகமது
தனியொரு ஆளாகச் சென்று அறிவைச் செறிவாக்கித் திரும்ப உதவிய லண்டன் சுற்றுலா
ஐந்தாம் பரிசு 

மீனாள் தேவராஜன் (உள்ளூரில் சிம்லா, நைனிடால் தொடங்கி இலங்கை, ரோம் வரை சென்று பெற்ற உலகச் சுற்றுலா அனுபவங்கள்)
முதல் ஐந்து இடங்களைப் பெற்ற பரிசுக்குரிய கட்டுரைகள் தவிர்த்து அமெரிக்க வாசகி திலகா சுந்தரின் மெக்ஸிகோ பயண அனுபவக் கட்டுரை, விவேக் காசிமாரியப்பனின்  சந்திரமெளலேஸ்வரர் மற்றும் மடிகேரி பயணக் கட்டுரை, ஆ.சரவணனின் கேரளா சூழல் சுற்றுலாசாய் லட்சுமி எனும் ஓவிய ஆசிரியையின் ‘மகளிர் மட்டும் ஸ்டைல்’ பாபா கோயில் தரிசனக் கட்டுரை, வைரம் நடராஜன் அலைஸ் கண்ணன் என்பவரது கேரளா மற்றும் கர்நாடகச் சுற்றுலாக்கட்டுரைகள், வாசகி லக்‌ஷ்மி கண்ணனின் சதுரகிரி ஆன்மீகச் சுற்றுலா, பரிமள செல்வியின்  வடக்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களைத் தழுவிய இந்திய சுற்றுலா அனுபவக் கட்டுரை போன்றவை அனைத்துமே அட, அட, அடடே! என்றும் வாரே வா சூப்பர் என்று பாராட்டித் தள்ளும் விதத்திலும் வாசிக்க, வாசிக்க மிக அருமையாக இருந்தது. மேற்கண்ட வாசகர்கள் அனைவரது சுற்றுலா அனுபவக் கட்டுரைகளும் அடுத்தடுத்து தினமணி இணையதளத்தில் வெளியிடப்படும் என்பதை பெருமையுடன் அறிவிக்கிறோம்.
சுற்றுலா அனுபவங்களுக்கென ஒரு போட்டி வைத்தது எதற்காக? உலக சுற்றுலா தினக் கொண்டாட்டத்துக்காக மட்டும் அல்ல. சிலருக்கு சம்பாதிக்கத் தெரியும் ஆனால் அதை வைத்து நகைகள், வீடு, கார் எனத் தேவையான அத்தனை ஆடம்பர வசதிகளையும் செய்து வைத்துக் கொண்டு கிணற்றுத்தவளைகளாக வீடு விட்டால் அலுவலகம், அலுவலகம் விட்டால் வீடு என ஒரு சின்ன வட்டத்துக்குள் செக்குமாடு போல சுழலத்தான் தெரிந்திருக்கும். இதனால் என்ன நஷ்டம் என்கிறீர்களா? நஷ்டம் தான் முதல் நஷ்டம் நம் புத்திக்கு அடுத்த நஷ்டம் நம் ஆரோக்யத்துக்கு. புத்தியும், ஆரோக்யமும் சீராக இல்லாத வாழ்வை எப்படி உயிரோட்டமான வாழ்வாகக் கருத முடியும்?
வாழ்க்கையை உயிர்ப்புடன் வைத்திருக்க நிச்சயம் பயணங்கள் அவசியம்.
உலகின் மாபெரும் ஊர்சுற்றியாகக் கொண்டாடப்படும் ராகுல சாங்கிருத்யாயன் எனும் வரலாற்றாசிரியர் மனிதன் ஓரிடத்தில் குட்டையாகத் தேங்காது நதி போல பல இடங்களுக்கும் பல்வேறு அனுபவங்களைத் தேடி பயணிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி ‘ஊர் சுற்றி புராணம்’  என்றொரு நூலே எழுதியிருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதை வாசித்தீர்கள் என்றால் குட்டை... நதியாக மாற வேண்டியதின் அவசியத்தை எவரொருவராலும் உணர்ந்து கொள்ள முடியும். அந்த அடிப்படையில் தினமணி வாசகர்களிடையே சுற்றுலாவின் முக்கியத்துவத்தை அழுத்தமாகப் பதியச் செய்வதற்காகவே இப்படி ஒரு போட்டியை அறிவித்தோம். பரிசுக்குரிய கட்டுரைகளை வாசித்தீர்கள் என்றால் அது எத்தனை உண்மை என்பதை நீங்களே உணர்வீர்கள்.
போட்டியில் உற்சாகத்துடன் பங்கேற்று சுற்றுலா அனுபவக் கட்டுரைகள் அனுப்பிய அத்தனை வாசகர்களுக்கும் தினமணி இணையதளத்தின் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்!
மீண்டும் அருமையானதொரு போட்டியில் இணைவோம்

******************

முதல் பரிசு பெற்ற கட்டுரையைப்  படிக்க இங்கே செல்லுங்கள்.

************