Tuesday, August 29, 2017

நவ துவாரகை யாத்திரை -18

முக்தியருளும்   பிராச்சி  ஆலமரம்

\

 இத்தொடரின்  மற்ற  பதிவுகள் 


    1   2   3   4   5    6    7    8    9    10     11    12    13 


   14   15   16   17   18   19   20   21    22   23  24    25   26   27   28
 

சோமநாத்தில் இருந்து சுமார் 22  கி.மீ தூரத்தில் குஜராத் காசி என்றழைக்கப்படும் இப்புண்ணியத் தலம் அமைந்துள்ளது. “ஏக் பார் பிராச்சி சௌ பார் காசிஅதாவது ஒரு தடவை பிராச்சி செல்வது நூறு தடவை காசி செல்வதற்கு சமம்“  என்பது இவர்களின் நம்பிக்கை. மஹா பாரதப் போருக்குக் பிறகு கௌரவர்களுக்கு பாண்டவர்கள் இத்தலத்தில்தான்  நீத்தார் காரியம் செய்தனர். எனவே  பித்ரு தர்ப்பணம் அளிப்பதற்கு உகந்த தலம். கயா செல்ல முடியாதவர்கள் இத்தலத்தில் பித்ரு தர்ப்பணம் செய்தால் அது கயா சென்றதற்கு சமம். கங்கை, யமுனை, காசி பிராச்சி ஆகியவை முக்தி தலங்கள்  என்பது இவர்கள் ஐதீகம்.

மோட்சமளிக்கும் பிராச்சி ஆலமரம்

இத்தலத்தின் சிறப்பு இதன் ஆலமரம். இம்மரத்தை “பிராச்சி பிப்லா“ என்று இவர்கள் அழைக்கின்றனர். ஒரு தடவை ஸ்ரீகிருஷ்ணர் பாண்டவர்களைத் தேடிக்கொண்டு இத்தலம் வந்த போது இம்மரத்தினடியில் அமர்ந்து உத்தவருக்கு பாகவதத்தின் இரகசியார்த்தங்களை உபதேசித்தாராம். 

நாசிக்கின் பஞ்சவடி ஆலமரங்கள், அலகாபாத்தின் அக்ஷய வடம்,  பிருந்தாவனத்தின் பம்சி வடம், உஜ்ஜயினியின் சித்த வடம் மற்றும் கயாவின் போதிமரம்  போன்று  பிராச்சி வடத்திற்கும் தனி சிறப்பு உள்ளது. இந்த ஆலமரம் "மோக்ஷவாலி பீபல் பேட் "அதாவது "முக்தியளிக்கும்  ஆலமரம்" என்றும் அழைக்கப்படுகின்றது.
 
கருங்குரங்குகள்


ங்கு நீத்தார் காரியம் செய்வதும் மிகவும் எளிது. ஒரு தாமிர சொம்பில் தண்ணீர் வைத்துக் கொண்டு சங்கல்பம் செய்து வைக்கின்றனர். பின்னர் அத்தண்ணீரை ஆலமரத்தின் மேல் ஊற்றச் சொல்கின்றனர். அவ்வளவுதான் முன்னோர்கள் அனைவரும் மோட்சம் அடைகின்றனர் என்பது ஐதீகம்.

ஆலய வளாகமும் சரஸ்வதி  ஆற்றில் பிரதி பிம்பமும்நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது ஆலமரம். வண்டியில் இருந்து இறங்கியவுடன் பிராச்சி பிப்லா என்ற பெயர் பலகையை காணலாம். சுற்றிலும் கருங்குரங்குகள் அட்டகாசம் செய்து கொண்டிருந்தன.  ஆல மரத்திலும் நிறைய குரங்குகள் தாவிக்கொண்டிருந்தன. மரத்தின் அடியில் ஒரு  வயதான பண்டிட் நின்று கொண்டிருந்தார். அவர் அனைவரையும் அருகில் இருந்த ஒரு ஆற்றில்  இருந்து  சொம்பில் தண்ணீர் முகர்ந்து வரக் கூறினார்.  அனைவருக்கும் பொதுவாக சங்கல்பம் செய்து வைத்து நீரை மரத்தின் மேல் ஊற்றச் சொன்னார். அவ்வளவுதானாம்.  ஆனால் அன்னதானத்திற்கு ஏதாவது ன்கொடை தாருங்கள் என்று அனைவரிடமும் கேட்டார். விருப்பமுள்ளவர்கள் தங்களால் இயன்றதை அளித்தனர்.

சிவாலய முகப்பு 
அருகில் இருந்த ஆறு சரஸ்வதி ஆறு பூமிக்குள் சென்ற ஆறு பின்னர் இவ்விடம் மீண்டும் வெளியே வந்து தரையில் ஒடி சோமநாதத்தில்  திரிவேணி சங்கமமாகி பின்னர் கடலில் கலக்கின்றது என்று கூறினார்கள். நீர் ஓடுவது போல தோன்றவில்லை, மாசடைந்து பாசி படர்ந்திருந்தது. அதன் மறு கரையில் ஒரு ஆலய வளாகம் உள்ளது. அதில் மூன்று சிவாலயங்கள் உள்ளன. பிரதான சிவாலயத்தில் ந்தியெம்பெருமான் தனி மண்டபத்தில் அருள் பாலிக்கின்றார். இவ்வாலயத்தின் விமானமும் சற்றி வித்தியாசமாக பிரமிட் வடிவத்தில் அடுக்கடுக்க இருந்தது.  

பிரமிட் வடிவ விமானம் 

சோமநாத்தில் இருந்து காலையும் மாலையும் புறப்படும் சுற்றுலா பேருந்து இத்தலத்திற்கும் வந்து செல்கின்றது.  அன்பர் கூறியபடி பிராச்சி பிப்லாவை தரிசித்தபின் கொடினாருக்கு புறப்பட்டோம். செல்லும் வழியில் குஜராத்தைப் பற்றிய இன்னொரு தகவல் நிலக்கடலையைப் போலவே துவரம் பருப்பும் இம்மாநிலத்தில் அதிகம் விளைகின்றது. சாம்பாருக்காக நாம் பயன்படுத்தும் துவரம்  பருப்பு இங்கிருந்து வருகின்றது.  கொடினாரில் ஒரு அன்பர் மூலதுவாரகையை எளிதாக தரிசிப்பதற்கு உதவினார் அவர் யார் என்று அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே. 

                                                                               நவ துவாரகை யாத்திரை தொடரும் . . . .

Sunday, August 27, 2017

நவ துவாரகை யாத்திரை -17


முக்தி துவாரகை


 இத்தொடரின்  மற்ற  பதிவுகள்   

   1   2   3   4   5    6    7    8    9    10    11    12    13    14


   15   16   18   19   20   21    21  22   23  24    25   26   27   28

ஸ்ரீகிருஷ்ணர்நாம் அடுத்து தரிசிக்கின்ற அடுத்த துவாரகை

மண்மிசை பெரும்பாரம் நீங்க ஒரு பாரதமா பெரும்போர்
பண்ணி மாயங்கள் செய்து  சேனையைப் பாழ்பட நூற்றிட்டுப் போய்
விண்மிசை தன் தாமமே புக  மேவிய சோதி தன் தாள்
ண்ணி நான் வணங்கப்பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே?

என்று ஆழ்வார் பாடியபடி பூபாரம் குறைக்க கிருஷ்ணாவதாரம் எடுத்த பரந்தாமன்  ஸ்ரீகிருஷ்ணர்  தன் அவதார நோக்கம் நிறைவேறிய பின்  வைகுண்டம் சென்ற கதையாகும். இராம-கிருஷ்ண அவதாரங்களை இணைக்கும் அந்த சுவையான கதை என்னவென்று முதலில் காணலாம் அன்பர்களே.

பாரதப்போரில் தன் மைந்தர்கள் நூற்றுவரும் மடிய ஸ்ரீகிருஷ்ணரே காரணம் என்று அவர் மேல் கோபம் கொண்ட காந்தாரி, போருக்குப்பின் ஸ்ரீகிருஷ்ணர் அவளைக் காணச் சென்ற போது, என் மக்கள் அனைவரும் மாள காரணமாக இருந்த நீயும் உனது யாதவ குலமும் அது போலவே அழியட்டும்  என்று சாபம் கொடுத்தாள்.

யாதவர்களும் தர்மத்தை கைவிட்டு, குடியிலும், கேளிக்கையிலும் ஈடுபட்டிருந்தனர். ஒரு சமயம் முனிவர் துவாரகை வந்த போது யாதவர்கள் விளையாட்டாக, ஆண் ஒருவனுக்கு கர்ப்பிணிப் பெண் போல வேடம் அணிவித்து அவனை முனிவர் முன் நிறுத்தி, இவளுக்கு எக்குழந்தை பிறக்கும்? என்று கேட்டு கிண்டல் செய்தனர். உண்மையை உணர்ந்த முனிவர் இவன் ஒரு இரும்பு உலக்கையை பெற்றெடுப்பான் அதனால் உங்கள் யாதவ குலம் முற்றிலுமாக அழியட்டும் என்று சாபம் கொடுத்தார். பூபாரத்தைக் குறைக்க ஸ்ரீகிருஷ்ணர் தனது யாதவ குலத்தை தன்னுடன் அழைத்துச் செல்ல ஆடிய  நாடகமே இச்சாபங்கள்.

முனிவரின் சாபத்திற்கேற்ப அந்த ஆண் பிள்ளை ஒரு இரும்பு அம்மிக்குழவியை பெற்றெடுத்தான். அம்மியாக இருந்தால்தானே தமக்கு தீங்குண்டாகும் என்று கருதிய யாதவர்கள் அதை தூள், தூளாக பொடி செய்து கடலில் கரைத்தனர். இறுதியாக இருந்த ஒரு பெரிய இரும்புத்துண்டினை  அப்படியே கடலில் வீசி விட்டனர். 
இவர்கள் கடலில் கரைத்த தூள்கள் எல்லாம் பிரபாச தீர்த்தக்கரையில் ஒதுங்கின அவை அக்கரையில் வளர்ந்த கோரைப் புற்களுக்கு உரமாயின. இறுதியாக இருந்த இரும்புத்துண்டை விழுங்கிய மீன்,   ஜரா என்ற ஒரு வேடனின் கையில் வந்து சேர்ந்தது, அவனும் அம்மீனின் வயிற்றில் கிடைத்த அந்த இரும்புத்துண்டை தனது ஒரு அம்பின்  கூர் முணையாக அமைத்துக் கொண்டான்.

வைகுண்டம் செல்ல வேண்டிய நாளில் யாதவர்கள் அனைவருடன் ஸ்ரீகிருஷ்ணர் பிரபாச தீர்த்தம் வந்தார். எப்போதும் போல் குடி போதை அதிகமாக யாதவர்களிடையே பேதம் அதிகமாகியது. அதுவே ஒரு சண்டையாக மாறியது. அவர்கள் கடற்கரையில் வளர்ந்திருந்த கோரைப்புல்லை பிடுங்கி ஒருவருடன் சண்டையிட ஆரம்பித்தனர். முனிவரின் சாபத்தினால் அப்புற்களே வாளாக மாற,   ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு யாதவர்கள் அனைவரும் மாண்டனர்.பால்-கா-தீர்த்த ஆலய்ம் 

காட்டில் சென்று ஸ்ரீகிருஷ்ணரும் ஒரு பிரம்மாண்டமான ஆலமரத்தினடியில் ஒரு காலின் மேல் ஒரு காலை வைத்து  யோக நித்திரையில் ஆழ்ந்தார். தூரத்தில் இருந்து பார்க்கும் போது ஸ்ரீகிருஷ்ணரின் இடது பாத பெருவிரல் ஒரு மானைப் போல தோன்ற தூரத்திலிருந்தே  ஜரா என்ற அந்த வேடன் அம்பெய்தான். ஸ்ரீகிருஷ்ணரும் பூலோகத்தில் தன்னுடைய திவ்ய மேனியை  விடுத்து வைகுண்டம் ஏகினார். பலராமரும் அருகில் உள்ள ஒரு குகையில் தனது மேனியை விடுத்து ஆதிசேஷன் ரூபத்தில் வைகுண்டம் சென்றார். இவ்வாறு காந்தாரி மற்றும் முனிவரின் சாபத்தினால்  யாதவ குலம் முற்றிலுமாக அழிந்தது.


தவழும் கிருஷ்ணர்

ஜரா என்ற அவ்வேடனுக்கு ஏன் கிருஷ்ணர் மேல் அம்பெய்யும் பாக்கியம் கிட்டியது என்று யோசிக்கின்றீர்களா? அதற்காக   நாம் இராமாவதாரத்திற்கு செல்ல வேண்டும். இராமாவதாரத்தில் சுக்ரீவனுக்கு உதவுவதற்காக இராமர் மறைந்திருந்து வாலியின் மேல் அம்பெய்து அவனை வதம் செய்தார். இக்கிருஷ்ணாவதாரத்தில் வாலியே ஜரா என்னும் வேடனாகப் பிறப்பெடுத்தான். அவன் கிருஷ்ணராக அவதாரமெடுத்த இராமரை மறைந்திருந்து அம்பெய்தான். இராமவாதாரத்தில் சூரிய புத்திரன் சுக்ரீவன், இந்திரனுடைய புத்திரன் வாலி வதமாக காரணமாக இருந்தான், கிருஷ்ணாவதாரத்தில் அது மாறி இந்திர புத்திரனாகிய அர்ச்சுனன், சூரிய புத்திரனான கர்ணனை வதம் செய்தான்.  தெய்வமே ஆனாலும் செய்கின்ற கர்மத்தின்படி அனுபவித்தே தீர வேண்டும் என்று பகவான் இதன் மூலம் உணர்த்தினார்.
வேடன் ஜரா 

அர்ச்சுனன் சுவாமியின் திருமேனிக்கு அந்திம சம்ஸ்காரம் செய்தானாம். மேல் பாகம் அப்படியே எரியாமல் கடலில் மிதந்து ஜெகந்நாதம் (பூரி) அடைந்தது, அதை ஆதிவாசிகள் இன்றும் நல்நாராயணன் என்று   வழிபட்டுவருகின்றனர் என்றொரு நம்பிக்கை நிலவுகிறது. 

இவ்வாறு ஸ்ரீகிருஷ்ணர் யோக நித்திரையில் இருந்து அம்படி பட்ட இடமே முக்தி துவாரகை. அந்த ஆலமரம் இன்றும் உள்ளது,  நன்றாக பாராமரிக்கப்பட்டு வருகின்றது. அதனடியில் ஸ்ரீகிருஷ்ணர் சங்கு சக்கர கதாதாரியாக ஒரு காலை ஒரு காலின் மேல் போட்ட கோலத்தில் உள்ள சுதை சிற்பத்தை அமைத்துள்ளனர். அறியாமல் அம்பெய்த ஜரா மண்டியிட்டு பகவானை வணங்குகின்றான். அதனடியில் விஷ்ணு பாதமும் அமைத்துள்ளனர்.  தவழும் கோல பாலகிருஷ்ணரையும் சேவிக்கின்றோம். விஷ்ணு பாதத்தில் மலர் தூவி பக்தர்கள் வழிபடுகின்றனர். அன்பர்கள் அருகில் உள்ள  பலராமர் வைகுண்டம் சென்ற குகையையும் சென்று சேவிக்கின்றனர். இத்தீர்த்தத்திற்கு அருகில் பிரம்மகுமாரிகளின் சிவலிங்க வடிவ கலைக்கூடம் அமைந்துள்ளது.


ஆலமரம் 

திரிவேணி சங்கமம்:  ஹிரண்யா மற்றும் கபிலா மற்றும் அந்தர் வாகினியாக சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமமாகும் திரிவேணி சங்கமமும் சோமநாத்த்தில் தரிசிக்க வேண்டிய, புனித நீராட வேண்டிய இடம் ஆகும். குறிப்பாக அமாவாசை தினங்களில் சங்கமத்தில் நீராடி நீத்தார் கடன் செலுத்துவது மிகவும் சிறப்பானதாகும்.


இவ்வாறு சோமநாதத்தில் அருமையான தரிசனம் முடித்து கொடினார் (Kodinar) புறப்பட்டோம்.  சிறிது தூரத்தில் வண்டி பழுதடைந்து   விட்டதால் அதை சரி செய்ய ஓட்டுனர் ஒரு கடையில் நிறுத்தினார். சுமார் ஒரு மணி நேரமாகும் என்பதால் ஒரு ஆட்டோ பிடித்து சோமநாதம் திரும்பி வந்து ஐயன் முன் அமர்ந்து திருமுறைகள் பாராயணம் செய்து கொண்டிருந்தோம். வண்டி பழுது சரியான பின் வண்டி திரும்பி அடியோங்களை அழைத்துக்கொண்டு வண்டி அடுத்த துவாரகை நோக்கி விரைந்தது. இதற்குள் மதியம் ஆகி விட்டதால் மதிய உணவை சோமநாத்தின் தங்கும் விடுதியிலேயே முடித்துக்கொண்டு கிளம்பினோம்.
விஷ்ணு பாதம் 

இதுவரை அடியோங்கள் தரிசித்த துவாரகாதீஷ் துவாரகை என்னும் முக்கிய துவாரகை, பேட் துவாரகை,  ருக்மிணி துவாரகை, கோமதி துவாரகை, மற்றும் சோமநாதத்தில் உள்ள முக்தி துவாரகை ஆகிய இவ்வைந்து தலங்கள் பஞ்ச துவாரகை என்று பலரால் கருதப்படுகின்றது.  பொதுவாக பல  அன்பர்கள் பஞ்ச துவாரகை யாத்திரை மேற்கொள்கின்றனர். அடியோங்கள் நவதுவாரகை யாத்திரைக்காக திட்டமிட்டிருந்ததால் பயணத்தை தொடர்ந்தோம்.

பிரம்மகுமாரிகள் கலைக்கூடம் 

மூல துவாரகை அமைந்துள்ள கொடினார் செல்லும் வழியில்  அடியேனுடன் பணி புரியும்  அன்பர் கூறிய பிராச்சி (Pirachi) என்னும் புண்ணிய தலத்தை அடைந்தோம். அத்தலத்தின் சிறப்பு என்னவென்று அறிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே. 

                                                                                  நவ துவாரகை யாத்திரை தொடரும் . . . .

Thursday, August 17, 2017

நவ துவாரகை யாத்திரை -16


சோமநாதர்  தரிசனம் 

இத்தொடரின்  மற்ற  பதிவுகள்:  

     1   2   3    4   5    6    7    8    9    10    11    12  

  13    14     15   17   18   19   20    21  22   23  24    25   26   27   28

சோமநாதர்

ந்தி சாயும் வேளை அரபிக் கடலை ஒட்டிய பாதையில் சூரியன் மறையும் அழகையும் பறவைகள் தங்கள் கூட்டிற்கு திரும்பிச் செல்வதையும் இரசித்துக் கொண்டே போர்பந்தரிலிருந்து (Porbundar) பயணம் செய்தோம். வழியெங்கும் பல காற்றாலைகளைக் கண்டோம். இடையில் வேராவல் (Veraval) என்ற ஊரைக் கடந்தோம். சோம்நாத்திற்கான தொடர்வண்டி நிலையம் இவ்வூர் ஆகும். அடியோங்கள்  சோமநாத்தை அடைந்த போது  இரவு மணி 8:30 ஆகி விட்டது.  

முதலில் தங்கும் விடுதியை பதிவு செய்ய வேண்டும் என்பதால் இரண்டு பேர் மைய முன்பதிவு  அலுவலகத்திற்கு சென்றனர். மற்றவர்கள் சோமநாதரை தரிசிக்க ஆலயம் சென்றோம். ஆலயத்தில் மிகக் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆலயத்திற்கு சுமார் அரை கிலோமீட்டருக்கு முன்னரே வண்டிகள் நிறுத்தப்படுகின்றன. அதற்குப்பின் பக்தர்கள் ந்து சென்றே ஆலயத்தை அடைய முடியும், செல்பேசி, புகைப்படக் கருவி மற்றும் எந்த மின்னணு கருவியும் கோவிலின் உள்ளே கொண்டு செல்ல அனுமதியில்லை.  உலோக கண்டுபிடிப்பான் (Metal Detector) கொண்டு உடற்பரிசோதனை செய்த பிறகே வாயிலின் உள்ளே நுழைய முடியும். தோல் பொருட்கள், காலணிகள், பைகள் ஆகியவற்றுக்கும் அனுமதி இல்லை அவற்றை  பாதுகாப்பாக வைத்துச் செல்ல வசதி ஆலய வளாகத்தின்   உள்ளே உள்ளது.சோமநாதர் ஆலயம் 

விஜய்துவாரத்தில் நுழைந்தவுடன் கோவிலின் முகப்பை  அருமையாக தரிசிக்கலாம். முழுக்க முழுக்க காவி பூசப்பட்ட முன் வாசல் மண்டபம். அதன் இரு புறங்களிலும் துலங்கும் மாட உப்பரிகைகள்.  மண்டபத்தின் மையத்தில் இருக்கும் வாசல் வழியாக ஆலயத்தில் நுழைந்தால் பரந்த புல்வெளி. அதன் நடுவே ஒரு பாதை பிரதான ஆலயம் நோக்கி செல்கின்றது. புல்வெளிக்கப்பாலும், ஆலயத்திற்கு பின் புறத்திலும் அரபிக் கடல் ஆர்ப்பரிக்கின்றது.

வரிசையும் விரைவாக சென்று கொண்டிருந்தது எனவே சந்திரனுக்கு அருளிய சோமநாதரின் தரிசனம் இரவே அருமையாக கிட்டியது. இவ்வாலயத்திற்கு எத்தனையோ கதைகள் உள்ளன வாருங்கள் அவையனைத்தையும் ஒவ்வொன்றாகக் காணலாம்.

சந்திரபுரம் என்றும் சூரியபுரம் என்றும் அந்நாட்களில் அழைக்கப்பட்ட்ட பிரபாஸ்பாடன் ஸ்ரீகிருஷ்ணரின் காலத்திற்கு முன்னரே பிரபலமான ஒரு தீர்த்த யாத்திரைத் தலம். கதிரவனின் பிரகாசத்தையும், வெண் நிலவின் குளிர்ச்சியும் பொருந்தியத்தலம் என்பதால் இத்தலத்திற்கு பிரபாஸ்பாடன் என்று பெயர். பிரபாச க்ஷேத்திரம் என்பதற்கு ஒளி மிகுந்த தலம் என்றும் ஒரு  பொருள் உண்டு.கிருஷ்ண விஜயம் நிகழ்ந்த காரணத்தால் யாதவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இத்தலம் உயரிய யாத்திரை தலமானது. சந்திரன் தியானம்  செய்து சாபம் நீந்கி சிவபெருமானின் அருளைப் பெற்ற தலம் என்பதால் தியானம் செய்ய தக்கதோர் தலம் ஆகும். 

முதலில் சோமனாம் சந்திரனுக்கு அருளிய வரலாற்றை முதலில் காணலாம் அன்பர்களே. சந்திரன் கார்த்திகை மாத சுக்லபக்ஷ அஷ்டமியில் தோன்றினான். சந்திரன் பெயரால் சோமவார விரதம் தோன்றியது. சந்திரன் சிவனை ஆராதித்ததும், கிருத யுகம் தோன்றியதும், சந்திரனை சிவபெருமான் சிரசில் அணிந்ததும்  கார்த்திகை சோம வாரத்தில் தான்.

 தட்சபிரஜாபதி தன் மகள்களை  தனித் தனியாக மணம் செய்து கொடுத்தால் அவர்களிடையே ஏற்றத் தாழ்வுகள் உண்டாகும் என்று கருதி தந்து 27 மகள்களான, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம்பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம்சதயம், பூரட்டாதிஉத்திரட்டாதி, ரேவதிஅசுபதி, பரணி ஆகியோரை மஹா பேரழகனான  சந்திரனுக்கு  மணம் புரிவித்தான். ஆனால் சந்திரனோ ரோகிணி மற்றும் கார்த்திகையிடம் மட்டும்  மிகவும் அன்பு கொண்டு தனது மற்ற மனைவியர்களை புறக்கணித்தான். அதனால் மனம் நொந்த மற்ற பெண்கள் தங்கள் தந்தையிடம் சென்று முறையிட்டனர்.

ஆத்திரமடைந்த தட்சன் உனது அழகில் கர்வம் கொண்டுதானே நீ என் மற்ற பெண்களை அவமதித்தாய் எனவே நீ  உனது  அழகை இழந்து குஷ்ட ரோகியாகக் கடவது என்று   சந்திரனுக்கு சாபம் கொடுத்தான், அதனால் சந்திரன் தனது கலைகளை இழந்தான் அவனை குஷ்ட நோயும் பீடித்தது. தன் சாபம் நீங்க சந்திரன் கார்த்திகை மாதத்தின் அனைத்து திங்கட்கிழமைகளிலும் எம்பெருமானை கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடற்றினிலடக்கிய வேதியனை புனல் விரி நறுங்கொன்றைப் போதணிந்த கனல் புரி யனல் புல்கு கையவனை, ஐந்தலையரவு கொண்டரைக்கசைத்த சந்த வெண்பொடி சங்கரனை  நினைத்து இப்பிரபாச படான் தலத்தில் விரதம் அனுஷ்டித்தான், அவனது விரததிற்கு மகிழந்த  பரம கருணாமூர்த்தியான எம்பெருமான்  அவனுக்கு  சாப நிவர்த்தி  அளித்தார்.    அதனால் சந்திரன் தான்  இழந்த சோபையை பெற்றான், ஆயினும் பதினாறு கலைகளும் நாள் ஒன்றாக வளர்ந்து   பௌர்ணமியன்று பூரண சந்திரனாக திகழ்ந்து பின் தன் கலைகளை ஒவ்வொன்றாக இழந்து பின் அமாவாசையன்று ஓளியற்றவனாகவும் ஆகும் வண்ணம்  எம்பெருமானை இகழ்ந்தவனே ஆனாலும் தட்சன் அளித்த சாபத்தை முற்றிலும் நீக்காமல் மாற்றியருளினார் கருணைக் கடலாம் சிவபெருமான். என்னே பகைவனுக்கும் அருளும் ஐயனின் பண்பு.

கார்த்திகை விரதம் இருப்பவர்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதுடன் இறுதியாக அவர்களுக்கு முக்தியும் கொடுத்து அருள வேண்டும் என்று சந்திரன் வேண்ட ஐயனும் அவ்வாறே அருள் பாலித்தருளினார். சந்திரன் வழிபட்டு தன் சாபம் தீரப்பெற்ற தலத்தில் சோமநாதராக, ஜோதிர்லிங்கமாக அருள் பாலிக்கின்றார். பிரபாஸ்பாடன் சென்று சோமநாதரை வழிபட்டால் பிறவிப்பயன் பெறலாம்.  

மேலும் துவாரகைகளுள் முக்தி துவாரகை சோமநாத் ஸ்ரீகிருஷ்ணர் தனது அவதார நோக்கம் நிறைவேறிய பின் ஒரு வேடனின் அம்பினால் காயம் பட்டு திவ்ய மேனியை விடுத்து வைகுண்டம் சென்றது இங்கிருந்துதான். இத்தலம் பால்கா தீர்த்தம் என்றழைக்கப்படுகின்றது. மேலும் திரிவேணி சங்கமம்,  கோலோக் தாம் மற்றும் சற்று தூரத்தில் உள்ள பிராச்சி  ஆகிய இடங்களையும் சோம்நாதத்தில் தரிசிக்கலாம்.  தினமும் காலை 8 மணிக்கும்,  மதியம் 2 மணிக்கும்  சோமநாத் அருகில் உள்ள அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்லும் பேருந்து வசதி உள்ளது.

ஒலி ஒளி காட்சியின் சில காட்சிகள் 

அர்ச்சுனன்  தீர்த்த யாத்திரையின் சமயம்  இத்தலம் வந்த போது ஸ்ரீகிருஷ்ணரின் தங்கை சுபத்ரையின் அழகைப் பற்றி கேள்விப்பட்டான். பின்னர் ஸ்ரீகிருஷ்ணரின் உதவியுடன் சுபத்ரையை மணந்தான்.  அபிமன்யுவை வீரமகனாகப் பெற்றான். இத்தலம் ஆதி ஜோதிர்லிங்கத் தலமாகவும் போற்றப்படுகின்றது. துவாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்திரமும் சௌராஷ்ட்ரே சோமநாதம் ச என்று துவங்குகிறது.

வாருங்கள் பல முறை மிலேச்சர்களால் சிதைக்கப்பட்ட பின்னும் நெடிதுயர்ந்து நிற்கும் ஆலயத்தின் கதையைக் காணலாம். சத்ய யுகத்தில் சந்திரன் பொன்னால் இக்கோவிலை கட்டினான், எம்பெருமான் பைரவேஸ்வரர் என்று அழைக்கப்பட்டார். திரேதாயுகத்தில் இராவணன்  ஸ்வர்ணகேஸ்வரராக வெள்ளியிலும், துவாபரயுகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் சிருங்கேஸ்வரராக சந்தன மரத்திலும் கட்டினர், அவையெல்லாம் அழிந்து விட்டன.  கலியுகத்தில் சோமேஸ்வரராக கற்கோவிலாகவும் விளங்குகிறது.

முகம்மது கஜினி 17 முறை படையெடுத்து வந்து இக்கோவிலை சிதைத்து இதன் செல்வங்களையெல்லாம் கொள்ளை அடித்து சென்றான், பின்னரும் பலமுறை புனருத்தாரணம் செய்யப்பட்ட  ஆலயங்கள் பல்வேறு முகம்மதிய மன்னர்களால் சிதைக்கப்பட்டன.  நாம் அன்னிய தளையிலிருந்து விடுபட்டு  சுதந்திரம் பெற்ற பிறகு இரும்பு மனிதர் சர்தார் வல்லபபாய்  பட்டேல் அவர்களின் முயற்சியால் புனருத்தாரணம் செய்யப்பட்ட ஆலயத்தையே நாம் இப்போது தரிசிக்கின்றோம். 1950ல் தற்போதுள்ள ஆலயம்  கட்டி முடிக்கப்பட்டது. காந்தி அடிகளின் யோசனைப் படி பக்தர்களின் நன்கொடையின் மூலமாகவே  இவ்வாலயம் கட்டி முடிக்கப்பட்டது.  முன்பிருந்த செல்வச்சிறப்பில் தற்போது இல்லை என்றாலும் பிரம்மாண்ட ஆலயமாகவே விளங்குகின்றது. பழைய ஆலயத்தின்  முன் வாசலில் இருந்த அற்புத வேலைப்படுகள் கொண்ட பிரமாண்ட மரக்கதவு இன்றும் ஆக்ரா கோட்டையில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. தங்கும் விடுதி 
விடுதியின்  உட்புறம் 


நாகாரா அமைப்பில் நெடிதுயர்ந்த விமானத்துடன் கூடிய பெரிய கருவறை, 150 அடி உயரமான விமானத்தின் கலசம் மட்டும் 10 டன் எடையுள்ளது என்பதில் இருந்து 
இவ்வாலயத்தின் பிரம்மாண்டம் விளங்கும். கூம்பூ வடிவ விமானத்தின் உச்சியில் சூலமும், நந்தியும், உடுக்கையும் உடைய முக்கோண கொடி பறக்கின்றது. வட்ட விதானக்கூரையுடன் கூடிய ஆலயத்தில் முதலில் நம்மை வரவேற்பது கலையழகுடன் கட்டப்பட்ட முகப்பு மண்டபம். இதில் இடப்புறம் விநாயகர், வலப்புறம் ஆஞ்சநேயர்.

கர்ப்பகிரகத்தை இவர்கள் நிஜ மண்டபம் என்றழைக்கின்றனர். அர்த்தமண்டபத்தை  சபா மண்டபம் என்றும், மஹா மண்டபத்தை நிருத்த மண்டபம் என்றும் அழைக்கின்றனர். இவ்விரண்டு மண்டபங்களும் உயர்ந்த தூண்கள் தாங்கும் மண்டபங்களாக எழிலாக அமைந்துள்ளன. இம்மண்டபங்களின் கூரையில் குவி மாடம், வெளிப் பகுதி புறாக்கூண்டு அமைப்பு, உள் பக்கம் அருமையான சுதை சிற்பங்களை அமைத்துள்ளனர்.

கருவறை முன் மண்டபம் மிகவும் அகலமாக எத்தனை பக்தர்கள் வந்தாலும் ஐயனை தரிசிக்கும் விதமாக அமைக்க்ப்பட்டுள்ளது. இதன்  முடிவில் கருவறைக்கு  இடப்புறம் அன்னை திரிபுரசுந்தரி சன்னதி, வலப்புறத்தில் அம்பா சன்னதி.  அம்பாவுக்கு முன்னர் அகண்ட தீபம் அணையாமல் எரிகிறது.

கர்ப்பகிரகம் மற்றும் முன் மண்டபம். ங்க கவசம் மற்றும்    வரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.  முன் காலத்தில் எவ்வளவு செல்வச்சிறப்புடன் விளங்கியது அது போல இப்பொழுதும் விளங்க வேண்டும் என்ற முயற்சியில் நன்கொடைகள் பெற்று இத்திருப்பணிகளை செய்து வருகின்றனர்.  பிரம்மாண்ட ரூபத்தில் ஜோதிர் லிங்கமாக எம்பெருமான் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கின்றார். எந்நேரமும் அருமையான அலங்காரத்தில் ஐயனை தரிசிக்கலாம். ஐயனுக்கு மேலே தங்கக் குடை மற்றும் தாரா பாத்திரம் தொங்குகின்றது.   விலாசமான கருவறையில் கோட்டத்தில்  நின்ற கோலத்தில் அம்பாள், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் உடன்  அருள் பாலிக்கின்றனர்.


ஆலயத்தின் அழகிய சுதை சிற்பங்கள் 


மண்டபம் முழுவதும் சிவபெருமானின் நாட்டியக் கோலங்கள். மானாட மழுவாட புனலாட மங்கை சிவகாமியாட மேலும் சிவ பார்வதி திருக்கல்யாண சிற்பம், யானை, குதிரை வீர்ர்கள், நாட்டியப்பெண்கள் சிற்பங்கள் மிகவும் அருமை. மிகவும் பிரம்மாண்டமான கோயில், ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி வரிசை, தரிசனத்திற்கு எந்தவித கட்டணமும் இல்லை. அருகில் சென்று தரிசனம் செய்ய முடிகின்றது. ஐயனை தொட்டு அபிஷேகம் செய்ய அனுமதியில்லை, ஆனால் சன்னதியின் முன்னர் ஒரு பாத்திரம் வைத்துள்ளனர் அதில்   நாம் கொண்டு செல்லும் தீர்த்தத்தை ஊற்றினால் அது  ஐயனுக்கு  அபிஷேகம் ஆகும் வண்ணம் அமைத்துள்ளது மிகவும் சிறப்பு. மானசரோவர் தீர்த்தம் அபிஷேகம் செய்தோம்.

எண்ணற்ற முறை சிதைக்கப்பட்டிருந்தாலும் சாநித்தியத்துடன் இன்றும் விளங்குகிறது ஆலயம். புறத்தில் தரிச்னம் தரும் ஐயனை அகத்தில் இருத்தி கண்களை மூடி தியானித்தால் மனதும் உடலும் லேசாகின்றது. அப்படியே அந்தரத்தில் மிதப்பது போன்ற ஒரு உணர்வு.  ஐயனுக்கு எதிரே பிரம்மாண்ட நந்தி, ஆமை, அகண்ட தீபத்தையும் தரிசிக்கின்றோம்.

காலை 7 மணி, மதியம் 12 மணி, இரவு 9 மணி என்று ஒரு நாளில் மூன்று முறை  ஆரத்தி சிறப்பாக டைபெறுகின்றது. ஆரத்தி சமயத்தில் சங்கம் முழங்குகின்றது. ஜல் ஜல் என ஜால்ரா ஒலிக்கின்றது. டம் டம் என டமாரம் அதிர்கின்றது. சோமநாதத்தின் வரலாற்றை சொல்லும் ஒலி, ஓளிக் காட்சி இரவு 8 மணிக்கு நடைபெறுகின்றது. அடியோங்கள் தாமதமாக சோமநாதத்தை அடைந்ததால்  அக்காட்சியை காண இயலவில்லை.

சிதைக்கப்பட்ட புராதன பார்வதி ஆலயத்தின் கீழ்ப்பகுதி முக்கிய சன்னதிக்கு அருகில் உள்ளது. கடற்கரையில் கம்பீரமாக அமைந்துள்ளது இவ்வாலயம். இவ்வாலயத்திலிருந்து நேராக எந்த நிலப்பரப்பும் இல்லாமல் தென் துருவத்தை அடைய முடியும். நிலவியலில் நம் முன்னோர்களுக்கு  இருந்த  ஞானத்தை இது காட்டுகின்றது. தென் துருவத்தை நோக்கி ஒரு அம்பு அமைத்துள்ளனர். கபர்தின் விநாயகர், மற்றும் கஷ்ட் பஞ்சன் ஹனுமான் சந்நிதிகளும் உள்ளன. தியானம், பாராயணம் செய்ய  ஐயனுக்கு எதிரில் இடமுள்ளது.

ஐயனை தரிசனம் செய்பவர்கள் தரிசனம் செய்து கொண்டு செல்ல, ஸ்லோகங்கள் பாராயணம் செய்ய விரும்புபவர்கள் அமர்ந்து பாராயணம் செய்யவும் இடம் ஒதுக்கியுள்ளனர். அங்கு அமர்ந்து ஸ்ரீருத்ரம் பாராயணம் செய்தோம். முதலில் அலங்காரம் இல்லாமல் நிர்வாண தரிசனம் பெற்றோம். காலை                            ஆரத்தி  தரிசித்தோம்.  மூலவர், கர்ப்பகிரகத்தின் உள்ளே உள்ள பார்வதி அம்பாள், விஷ்ணு, பிரம்மா ஆகியோருக்கு ஆரத்தி பின்னர் கர்ப்பகிரகத்திற்கு வெளியே உள்ள பார்வதி அம்பாள், ஹனுமான், நந்தி, ஆமை, தெற்கு துவாரம் வழியாக சமுத்தித்திரத்திற்கும் ஆரத்தி நடைபெறுகின்றது.
விமான கலசம் 

இதன் பிறகு சுவாமிக்கு ச்ருங்காரம்  என்னும் மலர் அலங்காரம் அற்புதமாக செய்கின்றனர். சந்தனம் குங்குமப்பூ கலவை பூசுகின்றனர்.  முககவசம் சார்த்தி, பாணம் முழுவதும், தாமரை, சாமந்தி, வெள்ளெருக்கு, வில்வம், ஆகியவற்றைக் கொண்டு அலங்காரம் செய்தனர். மலர் மாலைகள் கொண்டு அலங்காரத்தை பூர்த்தி செய்தனர்.  ருத்ராட்சத்தினால் ஆன மகுடம் மற்றும் சந்திரன் வழிபட்ட ஈசன் என்பதால் சந்திரப்பிறை கொண்டு அற்புதமாக அலங்காரத்தை நிறைவு செய்கின்றனர். பின்னர் சிறப்பாக வேத மந்திரங்கள் முழங்க ஆரத்தி நடைபெறுகின்றது.  இரண்டாவது முறையாக ச்ருங்கார் ஆரத்தியும் தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது. அருமையான தரிசனம் தந்த சிவபெருமானுக்கு நன்றி கூறி வெளியே வந்தோம். ஆலயத்தின் பிரம்மாண்ட வெளிப் பிரகாரத்தில் வலம் போது கடற்காற்று தழுவுகிறது.  கார்த்திகை பௌர்ணமி மற்றும் மஹா சிவராத்திரி மிகவும் சிறப்பாக இத்தலத்தில் கொண்டாடப்படுகின்றது.  ஐயனை பிரிய முடியாமல் பிரிந்தோம்.

அறையின் உட்புறம் 

தங்கும் விடுதிகள் ட்ரஸ்ட் மூலம் நிர்வகிக்கப்படுகின்றது. ரூ50/- முதல் ரூ1000/- வரை அனைவருக்கும் ஏற்ற வகையில்  அறைகள் உள்ளன. லீலாவதி பவன், மஹேஸ்வரி பவன், அதிதி க்ருஹ் என்று மூன்று தங்கும் விடுதிகள் உள்ளன. மைய அலுவகத்தில் சென்று முன் பணம் கட்டி அறையை பெற்றுக் கொள்ளலாம். www.somnath.org என்ற இனைய தளத்தின் மூலம் முன் பதிவும் செய்து கொள்ளலாம். அறைகள் விலாசமாகவும், சுத்தமாகவும் உள்ளன. தொலைக் காட்சிப் பெட்டி, சுடு தண்ணீர்,  அலமாரி, கம்பளிப் போர்வைகள் என்று அனைத்து வசதிகளும் உள்ளன. அறைகள்  மிகவும் சுத்தமாக இருந்தன.  விடுதிகளை நன்றாக பராமரிக்கின்றனர். ஒவ்வொரு விடுதியிலும் பல ஆன்மீக நூல்களுடன் கூடிய  நூலகம் உள்ளது. வெளியே உட்கார்ந்து ஓய்வு எடுக்கவும் வசதிகள் உள்ளன. உணவு விடுதியில் அடக்க விலையில், சுகாதாரமான உணவும் உண்ணலாம். யாத்திரிகளுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் நிறைவாக அளிக்கின்றது கோயில் நிர்வாகம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆதி சோமநாதர் ஆலயம்
(அகல்யாபாய் கட்டியது)

குருக்கள் யாரும் தட்சணை கேட்கவில்லை. சுவாமியை மறைத்துக்கொண்டு நிற்கவில்லை. பணம் உள்ளவன் சுவாமிக்கு அருகில் சென்று சேவிக்கலாம் வறியவர்கள் தூரத்திலிருந்தே தரிசித்து விட்டு  செல்ல வேண்டியதுதான் என்று எந்த பாகுபாடும் இல்லை ஏனென்றால்,  சுவாமியை தரிசிக்க எந்தவித தனி கட்டணமும் இல்லை. வரிசையும் வேகமாக செல்வதால் அதிக நேரம் வரிசையில் நிற்க வேண்டிய அவசியமுமில்லை. அனைவரும் இங்கு  சமமாகவே நடத்தப்படுகின்றனர்.. கட்டண சேவைகள் உள்ளன அதற்கான கட்டணத்தைக் கட்டி இரசீது பெற்றுக்கொண்டு அதற்கான பிரசாதத்தையும் பெற்றுக் கொண்டு செல்லலாம். சுவாமிக்கு அர்ப்பணம் செய்யும் மலர்களை தவறாமல் சுவாமியின் திருமேனியில் சார்த்துகின்றனர். அது போலவே பிரசாதம் (இங்கு இனிப்பு) சமர்பித்தால் சுவாமிக்கு நிவேதனம் செய்து திருப்பித்தருகின்றனர்.  தரிசனம், தங்கும் விடுதி, கோயிலில் உள்ள சுத்தம், ஒழுங்கு, விதிப்பிரகாரம் நடக்கும் பூசை என்று எல்லா விதத்திலும்   அனைத்து ஆலயங்களுக்கும் ஒரு முன்னோடியாக இவ்வாலயம் விளங்குகின்றது. எதையும் எதிர்பாராமல் கோயில் பணியாளர்கள் சேவை மனப்பான்மையுடன்  பணி செய்வதைப்  பார்த்தபோது ஆச்சரியமாகவும் அதே சமயம் பிரமிப்பாகவும் இருந்தது.  மொத்தத்தில் ஒரு ஆலயம் எவ்வாறு விளங்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் இவ்வாலயம். 


லக்ஷ்மி நாராயணர் ஆலயம் பாரத தேசமெங்கும் முகம்மதியர்களால் சிதைக்கப்பட்ட பல இந்து ஆலயங்களை புனருத்தாரணம் செய்த மஹா சிவபக்தை இந்தோர் அரசி அகல்யாபாய் அவர்கள் கட்டிய ஆதி சோமநாதர் ஆலயம் சென்று ஆதி சோமநாதரை தரிசனம் செய்தோம். அருகில் நமது திராவிட பாணியில் அமைந்த லக்ஷ்மி நாராயணர் ஆலயம் சென்று ஆதி சேடன் மேல் பள்ளி கொண்ட கோலத்தில் சேவை சாதிக்கும் பெருமாளை சேவித்தோம். ஐந்து நிலை திராவிடபாணி இராஜ கோபுரம், கொடிமரம், பலிபீடம், மற்றும் பஞ்சலோக உற்சவர்கள் என்று தென்னிந்திய தென்கலை சம்பிரதாய  கோவில் அமைந்துள்ளது. அடுத்து பால்கா தீர்த்தம் என்றழைக்கப்படும் முக்தி துவாரகை சென்று ஸ்ரீகிருஷ்ணரை சேவித்தோம். 

                                                                       நவ துவாரகை யாத்திரை தொடரும் . . . .