Wednesday, April 29, 2020

திருப்பாத தரிசனம் - 29


திருநள்ளாறு – உன்மத்த நடனக விடங்க செண்பகத் தியாகேசர் - 1


தர்ப்பாரண்யேஸ்வரர்இத்தலத்தின் மற்றொரு பதிவைக் காண இங்கு செல்லவும் :  திருநள்ளார்  -2


அடுத்து நாம் தரிசிக்க இருக்கின்ற விடங்கத்தலம் திருநள்ளாறு ஆகும். இத்தலத்தின் சிறப்பு பச்சைப் பதிகம் பெற்றதாகும். அது என்ன பச்சைப் பதிகம் சிவபெருமானின் அருளினால் திருநள்ளாறு பதிகம் தீயில் இட்ட போதும் எரியாமல் இருந்ததால் இத்தலப் பதிகம் பச்சைப் பதிகம் என சிறப்புப் பெற்றது. வாருங்கள் முதலில் அவ்வரலாறு என்ன என்று காணலாம்.


கூன்பாண்டியன் என்ற மன்னன் மதுரையை ஆண்டு வந்தான். அப்போது மதுரைப் பகுதியில் சமணர்களின் ஆதிக்கம் மிகுந்திருந்தது. எனவே மன்னனும் சமணப் பற்றுடையவானாகினான். ஆனால் அரசி மங்கையர்க்கரசியார் மட்டும் அரசன் இசைவு பெற்று சைவ சமயத்தை பின்பற்றியிருந்தார். சீகாழிப்பதியில் அவதரித்த திருஞான சம்பந்தப்பெருமான், அம்மையின் ஞானப்பால் உண்டு  சிவஞானம் பெற்ற செய்தியை அறிந்த மங்கையர்க்கரசியார் அமைச்சர் குலச்சிறையாரை திருமறைக்காட்டிற்கு அனுப்பி அப்பிள்ளையாரை மதுரைக்கு வரவழைத்தார். ஆளுடையபிள்ளையாரும் மதுரைக்கு வந்து ஒரு மடத்தில் தங்கியிருந்தார். ஞானப்பிள்ளையார் தங்கியிருந்த மடத்திற்கு சமணர்கள் தீயிட்டனர். அதனால் ஈசன் பாண்டிய மன்னனுக்கு வெப்பு நோயை அளித்தார்.
சமணர்கள் மற்றும் சம்பந்தப்பெருமான் இருவரும் அரசனின் நோயை தீர்க்க முயன்றனர். சமணர்கள் செய்த வைத்தியம் பலனளிக்கவில்லை மாறாக அரசனது நோய் அதிகமாகியது. ஞானப்பிள்ளையார் திருநீற்றுப் பதிகம் பாடி ஈசனது திருநீறு பூசி அரசனது நோயை போக்கினார். அது வரை கூன் பாண்டியனாக இருந்த மன்னனை நின்றசீர் நெடுமாறனாக்கினார். தோற்ற சமணர்கள் பிள்ளையாரை அனல் வாதத்திற்கும், புனல் வாதத்திற்கும் அழைத்தனர்.

சமணர்களுடன் அனல் வாதம் செய்த போது சம்பந்தர் தாம் அருளிய பதிகங்கள் அடங்கிய ஓலை சுவடிகளில் ஈசனை வேண்டி கயிறு சாத்திப் பார்த்ததில் திருள்ளாற்றின் இப்பதிக ஓலை கிடைத்தது. அதனை "தளரிளவளரொளி" என்ற பதிகத்தைப் பாடிக் கொண்டே தீயில் இட்டார். என்னே அதிசயம்! அந்த ஓலை எரியாமல் அப்படியே பச்சையாகவே இருந்தது. எனவே அப்பதிகம் "பச்சைப் பதிகம்" என்று அழைக்கப் படுகின்றது. சமணர்கள் இட்ட ஓலை எரிந்து சாம்பலாகியது. வைகையாற்றில்  பிள்ளையார் இட்ட ஓலை எதிர்த்து வந்தது, சமணர்கள் இட்ட ஓலை ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டது. இவ்வாறு சிவனருளால் அனல் வாதம், புனல் வாதம் இரண்டிலும் வென்று சைவ சமயத்தின் மேன்மையை மீண்டும் நிலை நிறுத்தினார் சம்பந்தப்பெருமான். 


கோபுரவாசல் தரிசனம் 


இவ்வாறு சைவ சமயம் மீண்டும் தழைத்தோங்கியது. இப்பச்சைபதிகத்தின் முதல் பாடல்

போக மார்த்த பூண்முலையாள் தன்னொடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின் மேல்
நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே!

பொருள்: போகமார்த்த பூண்முலையாளை தன் இடபாகத்தில் கொண்ட எம்பெருமான், வெள்ளை எருது மேல் எழுந்தருளும் எம்பெருமான் தனது கோவண ஆடையின் மேல் அணிந்துள்ளது அரவக் கச்சை. ப்பெருமான் எழுந்தருளியுள்ள தலம் நள்ளாறு" என்று திருநள்ளாற்றிலே எழுந்தருளியிருக்கும் "போக மார்த்த பூண் முலையாள் உடனுறை தர்ப்பாரண்யேஸ்வர சுவாமியை" குறித்து பாடிய பதிகம் ஆகும் இத்தகைய சிறப்புடைய இத்திருத்தலத்தையும் இத்தலத்தில் அருள் பாலிக்கும் போகமார்த்த பூண் முலையாள் உடனாய தர்ப்பாரண்யேஸ்வரப் பெருமானையும்,  நீலோத்பலாம்பாள் உடனாய  நக விடங்க செண்பக தியாகேசரையும் தரிசிக்கலாம் வாருங்கள் அன்பர்களே.


புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் பகுதியில் திருநள்ளாறு அமைந்துள்ளது. காரைக்காலுக்கு மேற்கே 5 கி.மீ தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து  45 கி.மீ தொலைவிலும், மயிலாடுதுறையிலிருந்து 30 கி.மீ தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 23 கி.மீ தொலைவிலும்  இத்தலம் அமைந்துள்ளது.

த்தலத்தின்  கணபதி "சொர்ண விநாயகர்" எனப்படுகிறார், இக்கோவிலுக்கு திருப்பணி செய்து வந்த மன்னன் பொருளில்லாது தவித்த போது விநாயகப் பெருமானே மன்னனுக்கு பொற்காசுகளை கொடுத்து திருப்பணியை முடிக்கச் செய்ததால் இத்தலத்து விநாயகருக்கு இப்பெயர். இத்தலத்து முருகனை அருணகிரி நாதர்  தமது திருப்புகழில் பாடியுள்ளார். நவ கிரகத் தலங்களுள் சனி பகவானின் தலமாக விளங்கும் சிறப்புடையது இத்தலம்.  

நளனுக்கு நன்னெறி காட்டியதால் நள்ளாறு என்னும் பெயர் ஏற்பட்டது என்பர்.  நளன் சனியின் பிடியிலிருந்து விலகி ஆறுதல் பெற்றதனால் திருநள்ளாறு. மேலும் அரசலாறுக்கும் நூலாற்றுக்கும் நடுவில் இருப்பதால் இப்பெயர் வந்தது என்பர். இத்தலத்தின் மற்ற பெயர்கள் பிரமன் வழிபட்டதால் "ஆதி புரி", தல விருட்சம் தர்ப்பை என்பதால் "தர்ப்பாரண்யம்", நீலோத்பலாம்பாள் உடனுறை நக விடங்க செண்பக தியாகர் எழுந்தருளியிருப்பதால் "நக விடங்க புரம்" என்றும், நளன் வழிபட்டதால் "நளேச்சுரம்" என்றும், விஷ்ணு வழிபட்டதால் "விஷ்ணு புரம்" என்றும் இந்திரன் வழிபட்டதால் "இந்திரபுரி" என்றும் அழைக்கப்படுகின்றது.


புராண காலத்தில் படைப்புக் தொழிலால் செருக்கடைந்த பிரம்மா, சிவபெருமானால் தண்டிக்கப்பட்டு சிருஷ்டி தொழிலை இழந்தார். எம்பெருமானை வேண்டி பூசனை புரிவதற்காக பிரம்மன் வந்த இடமே தர்ப்பாரண்யம் என்ற இத்தலம் ஆகும்.   அந்தணர்களின் மரபுப்படி தர்ப்பைகளால் ஆன கூர்ச்சத்தில் சிவபெருமானை ஆவாகனம் செய்து பிரம்மா பூஜை செய்தார். அந்த கூர்ச்சம் வைத்த இடத்தில் பிரம்மாவினுடைய பக்திக்கிரங்கி சிவபெருமான் கூர்ச்சத்தின் அடியில் சுயம்பு மூர்த்தியாய் தோன்றினார். எனவே லிங்கம் தர்ப்பைக் கொழுந்துகள் சேர்ந்தது போல் உள்ளது. பிரம்மன் அங்கு ஒரு ஆலயம் அமைத்தான்.


பிரம்மனைத் தொடர்ந்து மஹா விஷ்ணுவும், விராட மன்னன் போஜன், சிகண்டி, துரோணர், கௌதம ரிஷி, அகஸ்திய மகரிஷி, கலிங்க மன்னன், அஷ்டதிக் பாலகர்கள் எண்மரும், நளனும் இத்திருத்தலத்தில் பூஜைகள் செய்து புண்ணியப் பேறு பெற்றனர். வ்வரலாறுகள் எல்லாம் இக்கோவிலின் கூரையில் மிக அழகிய ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. முன் மண்டபத்தில் அம்மையின் சன்னிதிக்கெதிரே திருவிளையாடற் புராணத்தின் ஒவியங்களும் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளன.


தேரில் நகவிடங்க செண்பகத் தியாகேசர்


நக விடங்க செண்பக தியாகர்:  தர்ப்பாரண்யேஸ்வர்ருக்கு வலப்புறம் திருவோலக்க மண்டபம் ஆகியவற்றுடன் கூடிய தியாகராஜரின் சந்நதி அமைந்துள்ளது. இதனுள் தியாகராஜர் பெரிய வெள்ளி விதானத்தின் கீழ் வெள்ளி மஞ்சத்திலுள்ள சிம்மாசனத்தில் எழுந்தருளியுள்ளார். இவருக்கு முன்பாக இரண்டு வீரகட்கங்கள் வைக்கப்பட்டுள்ளன. அம்பாள் நீலோத்பலாம்பாளாக திரிபங்கியாக வலதிருக்கரத்தில் நீலோத்பல மலரை ஏந்திய கோலத்தில் அருள் பாலிக்கின்றாள்.
இவருக்கு நகவிடங்கர் என்ற பெயர் வழங்குகின்றது. நாகவிடங்கர் என்ற பெயரே, மருவி நகவிடங்கர் என வழங்குகிறதென்பர். 'நாகம் பூண்டு கூத்தாடு நள்ளாறனே' என்று தேவாரம் குறிப்பதால் இவர் நகவிடங்கர் என்று அழைக்கப்பட்டார் என்பர். மேலும் நகர் என்பதற்கு மலை என்பது பொருள். இவர் மலைபோல கம்பீரமாக இருப்பதால் இப்பெயர் பெற்றார் என்பர். இவருக்குச் 'செண்பகத்தியாகர்' என்பதும் சிறப்புப் பெயராகும்
வைகாசி மாதம் பூரட்டாதியில் கொடியேற்றி தொடர்ந்து வசந்தவிழா தேரோட்டம் பக்தக்காட்சி ஆகியன நடைபெறுகின்றன. விழாவில் தியாகராஜர் பெரிய தேரிலும், நீலோத்பலாம்பாள் சிறிய தேரிலும், மற்றும் முருகர், கணேசர், சண்டிகேசர் என்று பஞ்சமூர்த்திகளும் வலம் வருவது  கண்கொள்ளாக் காட்சியாகும்.  ஆலயத்தின் வடமேற்கில் தியாகராஜர் எண்ணெய்க்காப்பு (அபிஷேகம் கொண்டருளும்) பெரிய மண்டபம் உள்ளது. வசந்த மண்டபம், திருவோலக் மண்டபம் ஆகியனவும் உள்ளன.

வசந்த விழாவின் போது ஆலயப் பிராகாரத்தில் தியாகராஜர் வலம் வந்து எட்டு திசையிலும் கொடியேற்றி வசந்த மண்டபத்திற்கு எழுந்தருள்கின்றார். மேலும் திருவிழாவின் போது தியாகராஜர் இக்கோயிலில் அமைந்துள்ள இடையன்- இடைச்சியருக்குப் பக்தகாட்சி அருளும் ஐதீகமும் நடைபெறுகின்றது. கோயிலுக்கு ஒரு கி.மீ. தொலைவில் சம்பந்தரோடை என்ற ஒரு ஓடை உள்ளது. இங்கு மலரும் செங்கழுநீர் பூக்களைக் கொண்டே தியாகராஜருக்குத் தினசரிப் பூஜைகள் நடைபெறுகிறது  என்று கூறுகின்றனர்.

இங்குள்ள தியாகருக்குப் 'புத்திரத்தியாகர்' என்பதும் பெயராகும், நெடுநாளாகப் புத்திரப் பேறு இன்றி வருந்திய இந்திரன் இவரை நோக்கித் தவம் புரிந்தான். இப்பெருமான் அவனுக்கு இந்திரலோகத்தில் இன்பத்திற்கு மட்டுமே இடமுண்டு. இனவிருத்திக்கு இடமில்லையாதலால் ஆயிரம் யாகங்களைச் செய்து முடித்து இந்திரனாகும் தகுதி பெற்றிருந்த ஒரு மன்னனை அவனுக்கு மானச மைந்தனாகக் கொடுத்தார். அவனே ஜயந்தன் என்ற இந்திர குமாரனாவான்,  ஜயந்தனும் இவரை வணங்கிப் பேறுபெற்றான் என்பர்.

மரகத விடங்கர்:  இவருடைய சந்நதியில் ஜாதிப்பச்சைக் கல்லாலான அளவில் பெரிய மரகதலிங்கம் அமைந்துள்ளது. ம்மரகத விடங்கருக்கே  ஐந்து கால நாட்பூஜைகள் நடைபெறுகின்றன.  தியாகப்பெருமானுக்கு வருடத்தில் ஆறு முறை மட்டுமே அபிஷேகம் நடைபெறுகின்றது.

உன்மத்த நடனம் : த்தலத்தில் ம் ஐயன் ஆடும் நடனம் உன்மத்த நடனம், உன்மத்தம் என்பதற்கு பித்து பிடித்தவன் என்று பொருள், எனவே இவரின் நடனம் மேலும் கீழுமாக மாறி மாறி ஆடும் நடனமாகும். வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் போது தியாகப்பெருமான் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளும் போதும்,  தேருக்கு எழுந்தருளும் போதும், இடையனுக்கு காட்சி தரும் போதும் யதாஸ்தானத்தை விட்டு எம்பெருமான் வரும் போது இத்திருநடனத்திலேயே ந்தருளுவார்.தியாகேசர் - நீலோத்பலாம்பாள் தேர்கள் 


சகோபுர தரிசனம்இடையனுக்கு காட்சி கொடுத்த லீலை :  எம்பெருமானுக்கு ழை பணக்காரன் என்ற வேறுபாடு இல்லை தூய பக்தியையே அவர் விரும்புகின்றார் என்பதை பல தலங்களிலே  தனது திருவிளையாடல்களின் மூலம் உணர்த்தியுள்ளார் அத்தகைய ஒரு திருவிளையாடல் தான் இடையனுக்கு காட்சி கொடுத்த லீலை. தியாகருடைய அபிஷேகத்திற்கு ஒரு இடையன் தினமும் பால் கொடுத்து வந்தான். ஒரு நாள் கோவில் அதிகாரி ப்பாலை தனது உபயோகத்திற்காக எடுத்து கொண்டுவிட்டார். அன்றைய தினம் பார்த்து அரசன் கோவிலுக்கு அபிஷேகத்தை பார்வையிட வந்தவர், குருக்கள் பால் அபிஷேகம் செய்யாததைக் கண்டு ஏன் என்று வினவ, அபிஷேகப் பாலை இடையன் கொடுக்கவில்லை என்று கோவில் அதிகாரி பொய் கூறினான். கோபம் கொண்ட மன்னன் இடையனைக் கூப்பிட்டு விசாரிக்க, அவன் தான் பாலை கொடுத்ததாகக் கூறினான். மன்னன் நீ பால் கொடுத்ததற்கு யார் சாட்சி என்று வினவ, இடையனும், அந்த தியாகப்பெருமானே சாட்சி என்றான். அப்படியென்றால் உனது இறைவனை சாட்சிக்கு அழை என்று மன்னன் கூற, இடையனும் மனமுருகி தூய பக்தியுடன் பெருமானையே சாட்சிக்கு அழைத்தான்.

தனது அன்பனுக்காக அங்கே தோன்றிய எம்பெருமான் தவறு செய்த அதிகாரியின் தலையை கொய்து உண்மையை அரசனுக்கு உணர்த்தினார். பின் இடையனின் வேண்டுகோளுக்கிணங்கி கோவில் அதிகாரியை மன்னித்து உயிருடன் எழுப்பித் தந்தார். திருக்கோவிலின் வாயிலில் இடையன், இடையனின் மனைவி மற்றும் கோவில் அதிகாரியின் சிலைகள் இன்றும் உள்ளன. வைகாசி பிரம்மோற்சவத்தின் பதினெட்டாம் நாள் இடையனுக்கு காட்சி கொடுத்த இந்த லீலை இப்போதும் நடத்தப்படுகின்றது.
தர்ப்பாரண்யேஸ்வர்ருக்கு எதிரே உள்ள கொடிமரம் சற்று விலகி உள்ளது, பொய் கூறிய அதிகாரியின் தலையைக் கொய்ய சூலத்தை எறிந்த போது அது செல்ல ஏதுவாக கொடி மரம் விலகியது என்பது ஐதீகம். 


சனீஸ்வர பகவான்: நவகிரகத் தலங்களுள் சனித்தலமாகவும் விளங்குகிறது இத்தலம். சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்தவர் சனி. சூரியனின் இன்னொரு மனைவியான சஞ்ஞிகையின் பிள்ளைகளை சாயாதேவி கொடுமைப் படுத்தினாள். சஞ்ஞிகையின் மகனான இயமன் தன் சிறிய தாயான சாயாதேவியைக் காலால் உதைக்க, அவன் கால் முறியுமாறு சபித்தாள். இயமன் சனியை அடிக்க அதில் சனியின் கால் முறிந்தது. தட்ச யாகத்தில் கலந்து கொண்டதால் சனிக்கு ஒரு கண் பறிபோனது. எனவே சனி வேகமாகச் செல்ல இயலாது. அவனுக்கு மந்தன், சனைச்சரன் என்ற பெயர்களும் உண்டு. மெல்லச் செல்பவன் என்று பொருள். நான்கு கரங்களும் காகத்தை வாகனமாகவும் கொண்டவர். ஜாதகத்தில் ஆயுள் காரகனாக விளங்குபவர்.  .நவக்கிரகங்களுள் சனியைப் போல கொடுப்பாரும் இல்லை. கெடுப்பாரும் இல்லை என்று பழமொழி உள்ளது. அத்தகைய சனி பகவான் இத்தலத்தில் சிவபெருமானின் கருணையினால் சனீஸ்வரன் என்ற பட்டம் பெற்று, நளனுக்கு அருளி, ஆயுதங்கள் இல்லாமல் தனியாக அனுகிரக மூர்த்தியாக விளங்குகின்றார். மற்ற கிரகங்களுடன் இல்லாமல் தனியாக சனி பகவான் மட்டும் எழுந்தருளியுள்ள தலம் இத்தலம். மற்ற தலங்களைப் போல் அல்லாமல் இங்கு சனிபகவானுக்கு ஐந்து கால பூஜை நடைபெறுகின்றது. சனியின் மற்ற பெயர்கள் வருமாறு மந்தன், காரி, கரியோன், முடவன், அந்தன், நீலன், கதிர்மகன், கீழ்மகன், பங்கு, மேற்கோள், சௌரி, முதுமகன், சந்தில், சாவகன் என்று சேந்தன் திவாகரம் செப்புகின்து. சனி பகவானுக்குரிய நாள் சனிக்கிழமை, தானியம் எள், நெய் விளக்கேற்றி  எள் படைத்து வழிபட்டால்  சனிபகவானின் கருணையை பெறலாம்.  சனி பகவான் இத்தலத்திற்கு வந்து கோவில் கொண்ட நளனின் கதையை சிறிது பார்ப்போமா?


நளன் சரித்திரம்:  மஹாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசம் சென்ற போது தாங்கள் இவ்வளவு துன்பம் அனுபவிக்கின்றோமே என்று வருந்திய போது  வேத வியாசர்  ங்களை விட கொடிய துன்பத்தை அடைந்தான் ளன்,  என்று ளனின் சரித்திரத்தை அவர்களுக்குக் கூறுகின்றார். ஒரு காட்டில் ஒரு வேடனும் அவன் மனைவியும் ஒரு குகையில் வசித்து வருகின்றனர். ஒரு நாள் ஒரு முனிவர் அங்கு வருகின்றார். தங்களை நாடி வந்த முனிவரை அவ்வேடுவ தம்பதியினர் வரவேற்று சிறப்பாக உபசரித்தனர்.  இரவாகிவிட முனிவரையும் தன் மனைவியையும் அச்சிறு குகையினுள் உறங்கச் சொல்லிவிட்டு, வேடன் குகைக்கு வெளியே உறங்கினான். இரவு ஏதோ துஷ்ட மிருகம் வந்து அவனை கொன்று தின்று விட்டு சென்றது. காலை வேடுவச்சியும் தன் உயிரை நீத்தாள். அவர்கள் இருவருமே ளன், தமயந்தியாகவும், முனிவர் அன்னமாகவும் பிறந்தனர்.   


நில வளமும் நீர் வளமும் நிறைந்த நிடத நாட்டு மன்னனாக நளன் பிறந்தான்.  வீரமும், ஈரமும், அழகும், ஆற்றலும், தயையும் கொடையும் நிரம்பியவனாக விளங்கினான். விதர்ப்ப நாட்டு மன்னன் மகளாக  தமயந்தி பிறந்தாள்.  மிகவும் அழகும் குணமும் நிரம்பியவளாக விளங்கினாள். அன்னமாகப் பிறப்பெடுத்த முனிவரால் இருவரும் காதல் வயப்பட்டனர். தமயந்தியின் சுயம்வரத்தில் தேவர்கள் நால்வர் மற்ற மன்னர்களுடன் நளனைப் போல் உருவெடுத்து அமர்ந்திருந்தனர். கண்கள் இமைத்தலும், பாதங்கள் பூமியில் பதிதலும், சூடிய மாலை வாடுதலும் மனித இயல்பல்லவா? இதை வைத்து தமயந்தி நளனுக்கு சரியாக மாலை சூடினாள். இதனால் கோபம் கொண்ட கலி புருஷன் பன்னிரண்டு வருடம் கழித்து ஒரு நாள் சரியாக புறங்கால்களை கழுவாததால் அவனைச் சேர்ந்தான்.நளனது தமையன் முறை கொண்ட புட்கரனுடன் நடந்த சூதாட்டத்தில் தன் செல்வம், படை, அரச பதவி எல்லாவற்றையும் தோற்ற நளன், தன் மனைவியுடன் காடு ஏகினான். மனைவியுடன் ஒரு பாழடைந்த மண்டபத்தில் அவர்கள் இருந்த போது இரண்டு சுவர்ண பறவைகள் அங்கு வர, தமயந்தி அவற்றைப் பிடித்து தர கேட்க அவற்றின் பின்னே நளன் சென்றான். அப்பறவைகள் அவன் அரையில் உடுத்தியிருந்த ஒற்றை ஆடையையும் பறித்துக்கொண்டு புஷ்கரன் ஆடிய பகடைக்காய்கள் நாங்கள் என்று பறந்து சென்று விட்டன. வேறு வழியில்லாமல் தனது மனையின் ஆடையை கிழித்து வாங்கி உடுத்திக் கொண்டான். தன்னுடன் தமயந்தியும் ஏன் துன்பப்பட வேண்டும் என்று நினைத்து அவளை விட்டு விலகினான். கார்கோடகன் என்ற பாம்பு தீண்ட அவனது உடலும் கருத்தது தன் சுய உருவத்தை இழந்தான். அப்பாம்பு அவனுக்கு ஒரு உடையை கொடுத்து சமயம் வரும் போது நீ இவ்வாடையை அணிந்தால் உன் பழைய உருவை அடைவாய் என்று கூறியது.


பின்னர் நளன் அயோத்தி அரசனிடம் சென்று தேரோட்டியாக பணி புரிந்து வந்தான். இதற்கிடையில் தமயந்தி மிகவும் தொல்லைக்கு ஆளாகி இறுதியாக தன் தந்தையின் நாட்டை அடைந்தாள். தன் கணவன் அயோத்தியில் அடையாளம் தெரியாமல் உருமாறி வாழ்ந்து வருவதை ஒற்றர்கள் மூலம் அறிந்தாள். அவள் தந்தை ளனுடன் அவளை சேர்த்து வைப்பதற்காக மீண்டும் சுயம்வரம் டத்த ஏற்பாடு செய்து, அதற்கு அயோத்தி மன்னனையும் அழைத்தார். தேரோட்டி வந்ளன் அரசனுக்கு தேரோட்டும் கலையைக் கற்றுத்தர அரசனும் நளனுக்கு சூதாடும் போது வெல்ல உதவும் கணிதக்கலையை கற்றுத்தந்தான்.  உண்மையுணர்ந்து தன் மனைவி மக்களுடன் சேர்ந்து புஷ்கரனுடன் மீண்டும் சூதாடி இழந்த இராச்சியத்தை திரும்பப் பெற்று நிடத நாட்டை ஆண்டு வரலானான். ஆனாலும் அவன் சித்த பிரமை பிடித்தவன் போல் இருப்பதை கேள்வியுற்று நாரத முனிவர் அவனிடம்  ந்து தீர்த்த யாத்திரை மேற்கொண்டு தென்னாடு சென்று தர்ப்பாரண்யேஸ்வரரை வழிபடுமாறு அறிவுறுத்தினார். அதன் படி ளனும் காளிந்தி, சோணை நதி, காசி, கலிங்கேச்சுரம், கழுக்குன்றம், அண்ணாமலை, திருப்பருப்பதம், விருத்தாசலம், தீர்த்தகிரி, முக்கூடல், சிதம்பரம், சீர்காழி, புள்ளிருக்கு வேளூர், திருவெண்காடு, திருப்பனந்தாள், திருக்கடையூர் தரிசனம் செய்து கோகர்ணத்தை அடைந்து ஒரு மாதம் தங்கி சிவபெருமானை வழிபட்டான். அங்கு பரத்துவாச முனிவர் தர்ப்பாரண்யம் அடைந்து வினை தீர்த்துக்கொள்ள அறிவுறுத்தினார். தர்ப்பாரண்யம் வந்து பிரம்ம தீர்த்தத்தில் நீராடி தர்ப்பாரண்யேஸ்வரரை வழிபட சனி நீங்கியது. நீங்கிய சனியும் கோபுரத்தின் இடப்பக்கத்தில் கோவில் கொண்டான்.


மஹாவிஷ்ணு தர்ப்பாரண்யேவரை  வணங்கும் ஓவியம் 


நளன் விடுதலை பெற்று முதலில் விநாயகரை தொழுது தானங்கள் பல செய்தான். பிறகு சிவபெருமான் தரிசனம் அளித்தார். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நல்ல எண்ணத்தினால் நளன் இறைவனிடத்தில் வரங்களை வேண்டினான்.  இங்கு என்னைப்போல் ஸ்ரீசனிபகவானை வந்து வணங்கும் பக்தர்களுக்கு ஸ்ரீசனிபகவான் அருள் செய்து துன்பம் போக்கி நலம் பல செய்திடல் வேண்டும் என்று ஒரு வரமும். இரண்டாவதாக இத்தலத்தின் ஒருகாத விஸ்தீரணம் பரப்புகளில் சனிபகவான் அனுக்கிரஹ பார்வை உடையவராக இங்கு இருப்பவர்களுக்கு நன்மையளிக்க வேண்டும் என்று ஒரு வரமும் மூன்றாவதாக, ப்பகுதிக்கு இன்று முதல் மூர்த்தி தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் என் பெயரில் விளங்கிட வேண்டும் என்று வேண்டினான். இறைவனும் அவ்வாறே அருளினார். பின்னர் நளன் திருப்பணிகள் செய்து முடித்து திருக்கோவில் அமைத்து, தன் பெயரால் ஒரு தீர்த்தம் அமைத்து மகுடாகமத்தில் உள்ளபடி பூசை, திருவிழா நடத்தினான்.  வைகாசி மாத புனர்பூச நாளில்  கொடியேற்றி, தேர்த்திருவிழா நடத்தி, வைகாச விசாக நாளில் தீர்த்தவாரியுடன் சிறப்பாக திருவிழா கொண்டாடினான். ஆகையால் இங்கு நளனுக்கு விமோசனம் அளித்தபடியால் இறைவனுக்கு ஸ்ரீநளேஸ்வரர் என்ற பெயரும் திருக்குளத்திற்கு நளத்தீர்த்தம் என்ற பெயரும் இவ்வூருக்கு திருநள்ளாறு என்ற பெயரும் விளங்கலாயிற்று.

இவ்வரலாற்றை திருஞானசம்பந்தர்
விளங்கிழை மடந்தை மலைமங்கை யொருபாகத்
துளங்கொள விருத்திய வொருத்தனிட மென்பர்
வளங்கெழுவு தீபமொடு தூப மலர்தூவி
நளன்கெழுவி நாளும்வழி பாடுசெய்நள் ளாறே  - என்று பாடியுள்ளார்.
நளன் சரித்திரம் மிகவும் பெருமை வாய்ந்தது. இச்சரிதத்தை கேட்பவர்களுக்கு சனி பகவானால் எவ்வித துன்பமும் ஏற்படாது.

சனி தோஷத்திற்கு பரிகாரம் செய்பவர்கள் முதலில் நளதீர்த்தம் சென்று அத்தீர்த்த குளத்தை வலமாக பிரதட்சிணம் செய்து குளத்தின் நடுவில் இருக்கும் நளச்சக்கரவர்த்தி தமயந்தி குழந்தைகளின் உருவச்சிலைகளை வணங்கி வழிபடுதல் வேண்டும். பின்னர் நல்லெண்ணெயை தலையில் தேய்த்துக் கொண்டு வடக்கு முகமாகவோ அல்லது கிழக்கு முகமாகவோ ஒன்பது முறை ஸ்நானம் செய்து தலை முழுக்காட வேண்டும்.
பின்னர் பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் ஆகிய திருக்குளத்திலும் தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம். பிறகு கோவிலுக்குள் நுழைந்து வலமாக வந்து ஸ்ரீசொர்ண கணபதியை முதலில் வழிபட்டு ஸ்ரீசுப்ரமணியர் சன்னதியை தரிசனம் செய்து பின், மூலஸ்தானத்தில் ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரருக்கு அர்ச்சனை பூஜைகள் செய்து ஸ்ரீ தியாகேசர் சன்னதியை தரிசிக்க வேண்டும்.

பிறகு இரண்டாவது முறை வலமாக வந்து அம்மன் சன்னதியை அடைந்து அர்ச்சனை பூஜைகள் முடித்துக்கொண்டு கடைசியாக சனிபகவான் சன்னதியில் வந்து வழிபடுதல் வேண்டும். அவரவர்களுடையே வசதிக்கும், சக்திக்கும் ஏற்றபடி சனிபகவானுக்கு அர்ச்சனை, தீபாராதனை, அபிஷேகம், ஜபம், ஹோமம், தர்ப்பணம், தானம் முதலியன செய்யலாம். காலை, மாலை இரு வேளையிலும் சனிபகவானை நவப்பிரதட்சிணம் செய்வது நல்ல பயன் தரும்.

 2 1/2 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சனிப் பெயர்ச்சி இத்தலத்தில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. சனி தோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் குறிப்பாக சனிக்கிழமை வந்து நள தீர்த்தில் எண்ணெய் தேய்த்து நீராடி, சனிபகவானை வழிபட, அத்தோஷத்திலிருந்து விடுபடுவர் என்பது ஐதீகம். எனவே சனிக் கிழமைகளில் பக்தர்கள் இக்கோவிலில் குவிகின்றனர். பிரம்மோற்சவத்தின் போதும் சனிப்பெயர்ச்சியின் போதும் சனி பகவான் தங்க காக வாகனத்தில் காட்சி தந்து அருள் பாலிக்கின்றார்.வைகாசி பிரம்மோற்சவத்தின் போது பஞ்ச மூர்த்திகள் 


திருநள்ளாறு வைபவம் தொடரும் .  . . . .