Friday, April 10, 2020

திருப்பாத தரிசனம் - 24

நீதி காத்த திருவாரூர்



திருவாரூரைத் தலை நகரைக் கொண்டு ஆட்சி செய்த மனுநீதிச் சோழமன்னன் செம்மையான சிவபக்தர். யாருக்கும் எவ்விதக்குறையும் இருக்கக்கூடாது என்பதற்காக, யார் வேண்டுமானாலும் தன்னை வந்து மிக எளிதாகச் சந்திப்பதற்காக அரண்மனை வாசலில் ஆராய்ச்சி மணி கட்டி வைத்திருந்தார்.

பிள்ளைப் பேறு இல்லாத மனு வேந்தர் அதற்காக இலிங்கப் பிரதிஷ்டை செய்து பூசித்தார். இவ்விலங்கம் திருமூலட்டானார் பிரகாரத்தில் உள்ளது. திருவாரூர்ப் பெருமானை வழிபட்டு சிவபூசை செய்த பேரரசனுக்கு  தியாகேசரின் திருவருளால் அழகிய புதல்வன் பிறந்தான். அவனுக்கு வீதிவிடங்கன் என்று பெருமானின் பெயரையே சூட்டினான். இளவரசனாக உயர்ந்த அவன் ஒரு நாள் தேர் ஏறி வீதியுலா சென்றான். வீதியில் தேர் சென்று கொண்டிருந்த போது கன்றுக்குட்டி ஒன்று குறுக்கே பாய்ந்தோடி வந்தது. அதை சற்றும் எதிர்பாராத இளவரசனால் தேரை உடனே நிறுத்த இயலவில்லை. இதனால் அக்கன்றுக்குட்டி தேர் சக்கரத்தில் சிக்கி இறந்தது. பசுவின் கன்று இறந்ததைக் கண்ட இளவரசன் பதைபதைத்தான்.

கன்றை இழந்து கதறியழுத தாய்ப்பசு மனுசோழன் அரண்மணையை அடைந்து ஆராய்ச்சி மணியைக் கொம்பினால் அடித்தது. கட்டிய நாளிலிருந்து ஒரு நாளும் ஒலிக்காத மணி திடீரென ஒலித்ததைக் கேட்டு மன்னர் வியப்படைந்தார். முகமெல்லாம் கண்ணீர் மல்க தாய்ப்பசு மணியடித்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். நடந்த நிகழ்ச்சியைக் காவலர்கள் வேந்தனுக்கு உரைத்தனர். பசுவிற்குத் தன் மகனால் உண்டான துயரத்தை கண்டு துன்பம் அடைந்தார். எவராலும் தீர்க்க முடியாத பசுவின் துன்பம் கண்டு துயரம் தாளாமல் துடித்தார். நீதி கேட்டு வந்து நிற்கும் தாய்ப்பசுவிற்கு நியாயம் வழங்க முடிவு செய்தார். எவ்வீதியில் பசுக்கன்று தேர் சக்கரத்தில் சிக்கி மடிந்ததோ அதே வீதியில் இளவரசனையும் தேர்சக்கரத்தில் மடியச் செய்யுமாறு மந்திரிக்கு ஆணையிட்டார். மன்னனின் ஆணையை கேட்டு மந்திரி தன் உயிரையே மாய்த்துக்கொண்டார். மனுநீதிச்சோழர் தாமே தேரின் மேல் ஏறி தவப் புதல்வனை வீதியில் கிடத்தி மகனான இளவரசன் மேல் தேர் சக்கரத்தை ஏற்றினார்.

மண்ணவர் கண் மழை பொழிந்தார்
வானவர் பூ மழை பொழிந்தார்
அண்ணலவன் கண்ணெதிரே அணிவீதி – மழவிடை மேல்
விண்ணவர்கள் தொழ நின்றான் வீதிவிடங்கப்பெருமான்
என்றபடி நீதிநெறி நின்ற தந்தையும் புதல்வனும் வீதியில் புரிந்த செயற்கரிய செயலைக் கண்டு வீதிவிடங்கப் பெருமான் திருக்காட்சி தந்தருளினார். பசுக்கன்று, மந்திரி, இளவரசன் ஆகிய அனைவரும் மீண்டும் உயிர் பெற்று எழுந்தனர். தியாகேசரின் திருக்காட்சி கண்டு அளவில்லா ஆனந்தம் அடைந்த மன்னர் உயிர் பெற்று எழுந்த மகனை வாரி அனைத்து உள்ளம் மகிழ்ந்தார். தாய்ப் பசு கன்றிடம் ஓடிச் சென்று பாலைச் சொரிந்தது. மனுநூல் கூறியவாறு, நீதியை யார்க்கும் எவ்வுயிர்க்கும் பொதுவில் வைத்துச் செயல்பட்ட மனு வேந்தன் மனுநீதிச் சோழன் என்று புகழ் பெற்றார்.


தமிழகத்தின் பெருமைக்கு குறிப்பாக சோழப் பெருமன்னர்களின் சிறப்புக்கு திலகமாக விளங்கும் இவ்வரிய நிகழ்ச்சி திருவாரூர் திருவீதியில் நடைபெற்று, இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது இத்திருக்கோயிலின்  பெருமைக்கு ஒரு சான்று.


எம்பெருமான் தியாகேசனே தாய்ப்பசுவாகவும், தர்மதேவதையான எமதர்மராஜா கன்றாகவும் மாறி மனுநீதிச் சோழன் பெருமையை உலகிற்கு உணர்த்தினர் என்பர் பெரியோர். மனுநீதி சோழனின் சிலை சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் பாரபட்சமின்றி நியாயம் வழங்கவேண்டுமென்பதை இது உணர்த்துகின்றது. இந்நிகழ்வை
வாயிற் கடை மணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுடத்தான் தன்
அரும் பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும் பெயர்ப்புகார் என் பதியே
 நீதி தவறாமல்  திருவாரூரை ஆண்ட, அறம் பிழையாமல்  ஆட்சி செய்த மனுநீதிச்  சோழன்  குறித்து  சிலப்பதிகாரத்தில் ண்ணகி  வாயிலாக  இளங்கோவடிகள்  மூன்றே வரிகளில் பாடியுள்ளார்.
 திருவாரூரில் கீழைக்கோபுர வாயிலை ஒட்டி மூன்றாம் பிரகாரத்தின் வடகீழ் மூலையில் ஓர் சிறிய கோபுர வாசல் உள்ளது. இதை விட்டவாசல் என்றழைப்பர். ஆழித்தேருக்கு எழுந்தருளும் போது ஈசான மூலையில் உள்ள இவ்வாசல் வழியாகத்தான் தியாகேசர் அஜபா நடனத்துடன் எழுந்தருளுவார். ஆத்ம பூஜையை மறந்த இந்திரன் தன் கலைகளை இழந்து நீச வேடத்துடன்  கிழக்கு வாசலில் காத்திருப்பதால், தனது அருட்பார்வை அவன் மேல் படக்கூடாது என்று பெருமான் விட்டவாசல் வழியாக செல்கிறார் என்பர். 
இவ்வாயிலின் வெளிப்புறம் திருவீதியில் மனு நீதி சோழனின் வரலாற்றைக் கூறும் சிற்பங்கள் அடங்கிய தேரினைப் போன்று வடிவமைக்கப்பட்ட மண்டபம் அமைந்துள்ளது. ஆறு தூண்கள் அணி செய்யும் இம்மண்டபம் நான்கு தேராழிகளும் இரண்டு குதிரைகளும் பூட்டிய வண்ணம் காட்சி தருகின்றது. மண்டபத்தின் உட்பீடத்தில் எழில் மிகு சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. மனுவின் பிரிய மகன் விருத்தன் நிலத்தில் கிடக்கின்றான். தேரின் அருகே சிறிய நான்கு கால் மண்டபம் அதில் ஓர் மணி, உயிர் நீத்த கன்று, கன்றை இழந்த பசு சிற்பங்கள், கன்றின் வயிற்றில் தேர் சக்கரம் ஏறிய வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. கற்தேரின்  மத்தியில் அழகிய பீடத்தில் வீதி விடங்கப் பெருமான் அமர்ந்திருக்கின்றார். மான் மழுவேந்தி நந்தியின் தலை மேல் வலது கரத்தை வைத்த கோலத்தில் உமையம்மையுடன் எழிலாக காட்சி தருகின்றார். பெருமானுக்கு வலப்புறம் பசுவும் கன்றும். இடப்புறம் மனு வேந்தன், கரம் கூப்பிய வண்ணம் மனுவின் மகன் பிரிய விருத்தனும், அமைச்சர் உபயகுலாமவனும் நிற்கின்றனர். இந்நினைவு கூடத்தின் தென்புற சுவரில் மனுநீதிச் சோழனின் வரலாறு ஓவியமாக வரையப்பட்டுள்ளது. 

இரண்டாம் பிரகாரத்தில் விசுவகன்மீஸ்வரம் சன்னதியின் கருவறை வெளிப்புறம் இவ்வரலாறு சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.  திருவாரூர்த் திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத் தென்புறச் சுவரிலுள்ள விக்கிரம சோழர் கால கல்வெட்டொன்றில், வீதி விடங்கப்பெருமானே பேசுவது போன்று இவ்வரலாறு இடம்பெற்றுள்ளது. நிறைவாக திருவாரூரின் இன்னும் சில சிறப்புகள்.


திருவாரூரில் ஆடற்கரணங்கள்: பரத முனிவர் இயற்றிய நாட்டிய இலக்கண சாத்திர நூலில் 108 ஆடற்கரணங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. தஞ்சை பெரிய கோவிலின் உட்சுவர்களில் இக்கரணங்களில் 87 வகை சிற்ப வடிவில் எழிலாக விளங்குகின்றன. இது போன்ற கரணங்களை தில்லையிலும், திருக்குடந்தையிலும், திருமுதுகுன்றத்திலும், திருவண்ணாமலையிலும் காணலாம். திருவாரூரிலும் பல அபூர்வமான கரணங்களைக் காணலாம். கீழைக்கோபுர சுவர்களிலும், கல்தேரின் புறச்சுவர்களிலும் மங்கையரின் ஆடற்கரணங்களைக் காணலாம், புற்றிடங்கொண்டாரின் சன்னதி புறச்சுவர்களிலும், கூரையிலும்  சிவபெருமானின் ஆடற்கரணங்களைக் கண்டு  களிக்கலாம்.


திருவாரூக்கே உரிய சில பழமொழிகள்:

  1. ஒரு பெண் மெதுவாக நடந்து வருவதை திருவாரூர் தேர் அசைவது போல் அசைந்து வருகிறாள் என்று கூறுவார்கள். 
  2. பெண்களுக்கு அலங்காரம் செய்வதை திருவாரூர் தேரழகு செய்வது போல செய்ய வேண்டும் என்பார்கள்.
  3. ஒருவரை திட்டும் போது “ஏன் திருவாரூர் தீவட்டி போல் நிற்கின்றாய்? என்பார்கள்.
  4. கலியுகம் முடியும் போது கமலாலயம் வற்றி, காராம்பசு பால் கறந்து, கல் தேர் ஓடி, கமலாம்பாள் கல்யாணம் நடக்கும் என்று கூறுவார்கள்.
  5. பெரிய சொத்து வைத்திருக்கிறார் பாரு… கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, ஓடை ஐந்து வேலி என்பர்.
  6. திருவாரூர் தேரழகு, திருவிடை மருதூர் தெருவழகு, மன்னார்குடி மதிலழகு வேதாரண்யம் விளக்கழகு.
  7. தியாகராஜப்பெருமானைப் பற்றி அசைந்தாடி அகிலமும் ஆட்டுந்தியாகர், ஆடாதும் அடிபாகற்க் காய் பறிக்கும் தியாகர் என்று பழமொழிகள் உள்ளன.
  8. கையில் வெண்ணயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவார் போல் என்னும் பழமொழி போல பட்டினத்துப் பிள்ளை
ஆரூரர் இங்கிருக்க  அவ்வூர்த் திருநாளென்று
ஊரூர்கள் தோறும் உழலுவீர் – நேரே
உளக்குறிப்பை நாடாத ஊமர்காள் நீவிர்
விளக்கிருக்கத் தீதேடு வீர்
திருவாரூர் உடையார் இவ்விடத்தில் இருக்க, அவ்வூரில் திருநாள் என்று ஊர்கள் தோறும் சென்று அலைவோரே! நேராக மனக்கருத்தை ஆராயாத மூடர்களாக நீங்கள் தீபம் இருக்க நெருப்பை தேடுகின்றீர்கள்  என்று பாடியுள்ளார். இது வரை சப்த விடங்கத் தலங்களின் முதன்மைத் தலமான திருவாரூரின் சிறப்புகளை பற்றி பார்த்தோம், இனி மற்ற விடங்கத் தலங்களை தரிசிக்கலாம் அன்பர்களே.

                                                        திருப்பாத  தரிசனம் தொடரும் . . . . . 

No comments: