Thursday, April 16, 2020

திருப்பாத தரிசனம் - 26


சோமாசி மாற நாயனார்



“அம்பரான் சோமாசிமாறனுக்கும் அடியேன்” -  என்று வன்தொண்டர் போற்றிய அந்தணர் குலத்தில் அவதரித்து மாறர் என்ற இயற்பெயரைக் கொண்டு திருவம்பர் என்ற திருத்தலத்தில் வாழ்ந்தவர் இந்நாயனார். சிறந்த சிவபக்தர். சிவனடியார்களை பெரிதும் போற்றி வணங்கி அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்தார். அத்துடன் சிவபெருமானை போற்றும் சிவயாகத்தை அவர் விதிமுறை தவறாமல் செய்து வந்தார். இவ்வாறு சோம யாகம் செய்து வந்ததால் சோமயாஜி என்று அழைக்கப்பட்டவர் தமிழில் சோமாசி என்றழைக்கப்படலாயினார்.

இவர் ஒரு சமயம்  தனது மனைவி சுசீலையுடன் சோமயாகம் செய்ய விரும்பினார்! அப்பெருமைமிகு யாகத்தில் அவிர்பாகம்' பெற, திருவாரூர் தியாகேசப் பெருமானையே அழைக்க விரும்பியது நாயனாரின் உள்ளம்! அப்பரமனையே "அவிர்பாகம்' பெற அழைப்பது அவ்வளவு எளிதானதா என்ன? "யாரை அணுகினால் இது சாத்தியமாகும்?' என எண்ணினார்! உடன் அவர் மனத்திரை முன் வந்து நின்றார், அவரது  குரு நாதராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள்! அவர்தான் தம்பிரான் தோழனாயிற்றே! உடன் திருவாரூருக்குப் புறப்பட்டார்!

சுந்தரர் தீராத கபம், நெஞ்சு சளியினால் அவதிப்பட்டு வந்தார் அதை அறிந்த சோமாசிமாற நாயனார் தினமும் தூதுவளை பூ, காய், கீரையினை அவரது இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்.  சுந்தரரின் மனைவி பரவையாரும் அதனைச் சமைத்து இட சுந்தரர் விரும்பிச் சாப்பிட்டு வந்தார். அதை உண்டதால் நாள்பட்ட அவரது கபம் தீர்ந்து நிவாரணம் கிடைக்கப் பெற்றார். ப்பேருதவியைச் செய்த மாறனாருக்கு  நன்றி தெரிவிக்கும் விதமாக சுந்தரர் ஏதாவது செய்ய விழைந்தார். ஒரு நாள் சுந்தரரை சந்தித்த சமயத்தில் தான் செய்யவிருக்கும் யாகத்தில் தியாகேசர் நேரில் கலந்து கொண்டு "அவிர்பாகம்' பெற வேண்டுமென்ற தனது வேட்கையை அவரிடம் தெரிவித்தார் சோமாசி மாறர்! அவ்வேண்டுகோள், சுந்தரர் வாயிலாக தியாகேசருக்கு எட்டியது! சுந்தரர் மூலமாக தியாகேசரைப் பணிந்த சோமாசியாருக்கு அசரீரி வாக்காக "நான் அந்த யாகத்தில் கலந்து கொள்கிறேன். ஆனால் எப்போது, எப்படி, எந்த உருவத்தில் வருவேன் என்பதைத் தெரிவிக்க மாட்டேன். என்னை கண்டு அச்சப்படவோ, அருவருப்படையவோ வேண்டாம்'' என்று கூறியருளினார்.


சோமாசியாருக்கு பெரு மகிழ்ச்சி! வ்வுருவில் வந்தால் என்ன? இறைவன் வருவதே பெரும் பாக்கியம்தானே!! வைகாசி மாதம், ஆயில்ய நட்சத்திரம் கூடிய நன்னாளில், திருவம்பரில்  "அச்சம் தீர்த்த கணபதிஆலயம் எதிரே யாகசாலை அமைக்கப்பட்டு, யாக பூஜை இனிதே தொடங்கியது! வேத விற்பன்னர்களின் வேத கோஷங்களோடு தொடங்கிய யாகத்தில் அப்பொழுது அவிர்பாகம் தர வேண்டிய நேரம்! இறைவன் வரவில்லை! ஆனால் அதற்கு மாறாய் சற்று தூரத்தில் ஒரு வினோதக் கூட்டம்! யாகத்துக்குப் பொருந்தாத அக்கூட்டத்தினரைக் கண்ட வேதியர்கள், நாலாபுறமும் பறந்தோடினர்! சோமாசியாரோ யாகத்திற்கு பங்கம் விளைந்துவிடுமோ என அஞ்சினார்!. அவர்கள் கண்ட காட்சிதலைபாகை கட்டிய ஆஜானுபாகுவான ஓர் ஆண்மகன் சண்டாள ரூபத்தில் தோளில் இறந்த கன்றுக்குட்டியை சுமந்து கொண்டு  முன்னே வர, அவனது மனைவி கள்  குடம் சுமந்தபடி பின்னே வர, இரண்டு சிறு பாலகர்கள் உடன் வந்தனர், அவர்கள் தோற்றத்தைப் பார்த்தவர்கள் பதைத்தனர்! மாறரோ ஒரு கணம் கண்மூடி கணபதியை தியானித்தார்! அச்சம் தீர்த்த கணபதியின் திருவருளால் உண்மை உணர்ந்தார்ஸ்தாணுவும், ஈசனும், ஜகத்பிரபுவும், சூலபாணியும், உலக நாயகனும், பூதநாதனும், கபாலமாலிகாபரணும், கட்வாங்கதாரியும், ஜகந்நாதனும், பிறைசூடியும், சர்வாரணபூஷிதனும், உமாநாதனும், ஞானிகளின் உள்ளத்தில் உறைபவனும், அகங்காரமற்றவர்கள் உள்ளத்தில் உறைபவனுமாகிய தியாகேசரே இவ்வேடத்தில் வந்திருக்கிறார் என்று அவருக்குப் புரிந்தது!

அடுத்த கணம் ஓடிச் சென்று அவர்கள் திருமுன் விழுந்து, அவர்களை வணங்கி வலம் வந்தார் நாயனார். பேரொளிப் பிரவாகமாக ரிஷபத்தின் மீது தேவியுடன் அத்தருணத்தில் எழுந்தருளி, அற்புத தரிசனம் தந்து, அவிர்பாகத்தினைப் பெற்று, அருள் புரிந்து மறைந்தார் ஆரூர் அண்ணல்!!

சோமயாஜி மாற நாயனார் நடத்திய புனிதமான சோமயாகம் நடந்தது "கோயில் திருமாளம்' என்று அழைக்கப்படும் திருத்தலத்தில், அம்பர் மாகாளத்திற்கும் அம்பர் பெருந்திருக்கோயிலுக்கும் இடையில் சாலையோரத்தில் உள்ள ஒரு மண்டபம் ஆகும். அவ்விடத்தை இன்று "பண்டார வாடை திருமாளம்' என்று அழைக்கின்றனர். தியாகேசப் பெருமான், பார்வதி மற்றும் விநாயகர் மற்றும் முருகர் தங்கள் திருவடி தோய நடந்த   அம்பர்மாகாள தலம். இப்பதிவுடன் திருவாரூர் தலத்தின் சிறப்புகள் நிறைவடைகின்றன. அடுத்து மற்ற சப்த விடங்கத்தலங்களின் சிறப்பைப் பற்றி காணலாம் அன்பர்களே.

                                                                                   திருப்பாத  தரிசனம் தொடரும் . . . . .

No comments: