Sunday, March 29, 2020

திருப்பாத தரிசனம் - 20

திருவாரூர் பரவையுண்மண்டலி

திருவாரூரில் அமைந்துள்ள மூன்றாவது தேவாரப்பாடல் பெற்ற தலம். கீழ வீதியில் ஆழித்தேரின் எதிரே விளங்கும் பழனியாண்டவர் கோயில் எதிரே அமைந்துள்ளது சீர்மிகு செல்வத் திருவாரூரில் பூங்கோயில், அரநெறி என்னும் அசலேசம், பரவையுண் மண்டலி ஆகிய மூன்று தேவாரத் தலங்கள் உள்ளன. இத்தலத்து இறைவனின் திருப்பெயர் தூவாயர், இறைவியின் திருப்பெயர் பஞ்சின் மெல்லடியாள். துர்வாசர் வழிபட்ட பெருமான் என்பதால் இத்தலத்து இறைவனை துர்வாச நாயனார் என்று அழைக்கின்றனர். ஆனால், தூவாயர் என்றே பெயரே புராணங்களில் காணப்படுகிறது. இக்கோயில் பிராகாரத்தில் சிவலிங்கத்திற்குப் பின்புறம் விநாயகருக்கு அருகே துர்வாசரின் சிலை உள்ளது.

பரவை என்பது கடல். மண்தளி என்பது மண்கோயில். கடலை உட்கொண்ட மண்கோயில் என்ற அடிப்படையில் இக்கோயிலுக்குப் பரவையுண்மண்டலி என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு முறை பிரளய காலம் வந்தது. அப்போது கடல் பொங்கி எழுந்தது. இதையடுத்து உலகை காப்பாற்றக் கோரி, தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமான் துர்வாச முனிவரிடம், தற்போதைய தூவாய்நாதர் திருக்கோவிலின் அக்னி மூலையில் குளம் அமைத்து வழிபட்டால், கடல் அமைதி அடையும். உயிர்கள் காப்பாற்றப்படும் என்று கூறினார். அதன்படி துர்வாச முனிவரின் தலைமையில், மற்ற முனிவர்கள் அனைவரும் இங்கு ஒன்று கூடி குளம் அமைத்து ஈசனை வழிபட்டு வந்தனர்.  முனிவர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவபெருமான், பொங்கி வந்த கடலை, அக்னி மூலையில் முனிவர்கள் அமைத்த குளத்தின் மூலம் ஈர்த்துக்கொண்டார். எனவே இத்தலம் பரவையுண்மண்டலி ஆனது. துர்வாச முனிவர் வழிபட்டவர் என்பதால் இறைவன் துர்வாசநாதர் என்றும் அழைக்கப்படுகின்றார். இவர் சுயம்பு மூர்த்தி. அக்னி மூலையில் திருக்குளம் அமைந்திருப்பது ஒரு தனி சிறப்பாகும். முற்காலத்தில்  மண்டலி (மண்ணால் அமைக்கப்பட்டிருந்த ஆலயம்)  தற்போது கற்றளி ஆக விளங்குகிறது.  
சுந்தரமூர்த்தி நாயனார்  திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரைக் கண்டபோது அவர் மேல் காதல் கொண்டு அவர் கேட்டுக் கொண்டபடி அவரை விட்டுப் பிரிவதில்லை என்று இறைவன் திருமுன்னர் உறுதி மொழி கூறி திருமணம் செய்து கொண்டார். ஆனால், சிலகாலம் சென்று இளவேனில் காலம் வந்தது. திருவாரூரில் அப்போது நடைபெறும் வசந்த விழாவை நினைத்தார் சுந்தரர் இதை
பொங்கு தமிழ்ப் பொதிய மலைப் பிறந்து பூஞ்சந்தனத்தின்
கொங்கணைந்து குளிர்ச்சாரலிடை வளர்ந்த கொழுந்தென்றல்
அங்கணையத் திருவாரூர் அணிவீதி அழகரவர்
மங்கலநாள் வசந்தம் எதிர் கொண்டருளும் வகை நினைந்தார் - என்று சேக்கிழார் பாடுகின்றார். 

தியாகேசர் மேல் கொண்ட பக்தியால், அவரது அவ்வசந்த விழாவை தரிசிக்க ஆவல் கொண்டு தாம் சங்கிலி நாச்சியாருக்குக் கொடுத்திருந்த உறுதிமொழியை மீறி திருவாரூர் தலத்திற்கு பயணம் மேற்கொண்டார். சுந்தரர் திருவொற்றியூர் எல்லையைத் தாண்டியதுமே அவரது கண்கள் இரண்டும் ஒளி இழந்தன. பார்வை இழந்த சுந்தரர் மிகுந்த சிரமத்துடன் பல தலங்களுக்கும் சென்று இறைவனை வழிபட்டார்.


காஞ்சிபுரம் சென்றபோது ஏலவார் குழலி ஏத்தி வழிபட்ட காலகாலனை கம்பனெம்மானைப் பாடி இடக்கண் பார்வை பெற்றார். பிற தலங்களுக்கும் சென்று இறைவனைத் தரிசித்து திருவாரூர் வந்தடைந்தார். திருவாரூரில் முதலில் பரவையுண் மண்டலிக்கு (துர்வாசர் கோயில்) வந்து அங்குள்ள புனித தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு,
தூவாயா! தொண்டு செய்வார் படுதுக்கங்கள்

காவாயா! கண்டு கொண்டார் ஐவர் காக்கினும்
நாவாயால் உன்னையே நல்லன சொல்லு வேற்கு
ஆவாஎன் பரவையுண் மண்டலி அம்மானே -

 எனத் தொடங்கி பத்து பாடல்களை மனமுருகப் பாடினார்.  வண்தொண்டர் என்பதால்  ‘கண்பார்வையைத் திருப்பித்தா’ என்று அவர் ஈசனிடம் உரிமையுடன் உருகி வேண்டிய பாடல்களுள் ஒன்று.


விற்றுக்கொள்ளீர் ஒற்றி அல்லேன் விரும்பி ஆட்பட்டேன்
குற்றம் ஒன்றும் செய்த தில்லை கொத்தை ஆக்கினீர்
எற்றுக் கடிகேள் எண்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர்
மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால் வாழ்ந்து போதீரே - என்பது அப்பாடல்.  தோழரான சுந்தரரின் வேண்டுதலை ஏற்ற இறைவன் "இத்தலத்தின் அக்னி மூலையில் உள்ள குளத்தில் நீராடி என்னை வணங்க கண் பார்வை கிடைக்கும் என்றார். அதன்படியே இறைவனருளாக் சுந்தரருக்கு வலது கண் பார்வையும் திரும்பக்கிட்டியது. 
சுந்தரருக்கு இங்கு கண் கிடைத்த்தன் அடையாளமாக இறைவருக்கு அபிஷேகம் செய்யும் போது அவரது திருமேனியில் கண் தடம் தெரிவதைக் காணலாம். கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் அக்னி தீர்த்தத்தில் நீராடி செவ்வள்ளி மலர் சார்த்தி வழிபட பார்வை குறைபாடு சரியாகும் என்பது ஐதீகம்.
ஐயன் சன்னிதியை ஒட்டி தெற்கு நோக்கிய சன்னிதியில் அம்பாள் திருஉருவம் அமைந்துள்ளது. இந்த அம்மனை சுந்தரர், ‘பஞ்சேரும் மெல்லடி யாளை ஓர் பாகமாய்’ என்று கூறுகிறார். இதற்கு இந்தத் தலத்து அம்பாள், பஞ்சை விடவும் மென்மையான பாதங்களை உடையவள் என்பது பொருள்.

மூலவரின் தேவக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, பெருமாள், நான்முகன், துர்க்கை ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தின் தெற்கில் தற்போது அமைக்கப்பட்டுள்ள ஐயப்பன் சன்னிதியும், துர்வாச முனிவர் வழிபட்ட சிவலிங்கமும், கன்னி மூலையில் கணபதியும், வள்ளி – தெய்வானை சமேத முருகப்பெருமானும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். வடக்கில் நந்தவனமும், அதன் அருகே தீர்த்தக் கிணறும் உள்ளன. இவ்வாலயத்தில் உள்ள அனைத்து விக்கிரகங்களும், விஸ்வகர்மாவால் செய்யப்பட்டது என்கிறது தல புராணம். சனி பகவான் தெற்கு நோக்கியபடி, அனுக்கிரக மூர்த்தியாக தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றார்.   

சுவாமியின் மகாமண்டபத்திற்கு முன் உள்ள மண்டபத்தில், கயிலாயநாதரும், அவர் அருகே சுந்தரரும், பரவை நாச்சியாரும், சுந்தரரின் தோழர் சேரமான் பெருமானும் கைகூப்பியபடி நிற்கின்றனர். எதிரே மேற்கு நோக்கிய நிலையில் பைரவர் காட்சியளிக்கிறார்.  இத்திருக்கோயிலுக்குச் செல்பவர்கள் இக்கோயிலுக்கு எதிர்ப்புறம் அமைந்துள்ள பழனி ஆண்டவர் கோயிலுக்குச் சென்று முருகப் பெருமானையும் தரிசித்து அவனருளும் பெறலாம். வாருங்கள் அன்பர்களே அடுத்து ஐயன் நித்ய பாத தரிசனம் தந்தருளும் திருவிளமல் தலத்தை தரிசிக்கலாம்.

                                                          திருப்பாத தரிசனம் தொடரும் . . . . 

Friday, March 27, 2020

திருப்பாத தரிசனம் - 19


ஆருர் அரநெறி அசலேஸ்வரர்திருவாரூர் திருக்கோவில் வளாகத்தில் இரண்டாம் பிரகாரத்தின் தென் கிழக்கு மூலையில் அமைந்துள்ள திருக்கோயிலே அரநெறி ஆகும். தேவாரப்பாடல் பெற்ற சிறப்பும்  இக்கோவிலுக்கு உண்டு. திருநாவுக்கரசர் இரு பதிகங்கள் அசலேஸ்வரரைப் பற்றி பாடி அருளியுள்ளார்.

பொருங்கைமத கரியுரிவை யானைப் பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தினானை
கரும்புதரு கட்டியை இன்னமிர்தைத் தேனை காண்பரிய செழுஞ்சுடரைக் கனககுன்றை
இருங்கனம மதிலாரூர் மூலட்டானத் தெழுந்தருளி இருந்தானை இமையோர் ஏத்தும்
அருந்தவனை அரநெறியிலப்பன் தன்னை அடைந்தடியேன் அருவினை நோய் அறுத்தவாறே - 

என்று  பாடிய அரநெறி ஆலயம் புற்றிடங்கொண்டார் ஆலயத்தை விட மிகவும் பழமையானதாகவும், முதன்மையானதாகவும் இருந்துள்ளது. 

இறைவன் - அசலேசுவரர்; இறைவி  - வண்டார்குழலி என்கிற புவனேஸ்வரி. சுவாமிக்கு திருஅரநெறி பட்டாரகர், அரநெறி ஆழ்வார் என்ற திருநாங்களும் உண்டு. சமற்காரன் என்ற அரசனின் கடும் தவத்துக்கு மகிழ்ந்து அவன் பிரதிஷ்டை செய்த இலிங்கத் திருமேனியில் சலியாது எழுந்தருளியதால் அசலேசர் என்று திருநாமம். அசலேசுவரரோடு, பஞ்சபூத லிங்கங்களாக இறைவன் காட்சி தருவது சிறப்பு. தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு தாம் வேண்டியவாறு வரம் தந்து அருள் பாலிப்பவர் இவர். அப்பர் பெருமான் மற்றும் சேக்கிழாரின் பாடல்களின் மூலம் இவ்வாலயத்தின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.

கமலாலய சிறப்பு என்னும் தலபுராணத்தில் அசலேஸ்வரத்தின் சிறப்பு விரிவாகக் கூறப்பட்டுள்ளது. சமற்காரன் என்னும் மன்னர் ஒரு சமயம் காட்டிற்கு வேட்டையாட சென்ற போது கன்றுக்கு பாலூட்டிக் கொண்டிருந்த மானின் மீது கணை தொடுத்தான். அதனால் மான் மன்னனுக்கு குட்ட நோய் பற்றுமாறு சாபம் கொடுத்தது. நோய் தீர வேண்டி சமற்காரன் பல் வேறு ஆலயங்களுக்குச்சென்று பல்வேறு தீர்த்தங்களில் நீராடினார். ஆயினும் நோய் தீரவில்லை. நிறைவாக அரசன் திருவாரூரை அடைந்தான்.

அங்கிருந்த அந்தணர்களிடம் தன் உடலின் அவலத்தை மாற்றும் உபாயம் வினவ அவர்களும் சங்க தீர்த்தத்தில் நீராட உனது உடலுற்ற நோய் நீங்கும் என்று அத்தீர்த்தத்தின் சிறப்பைக் கூறினர். ஒரு சமயம் சங்கமுனி என்ற அந்தணன், வனத்தில் லிகிதமுனி என்னும் முனிவரின் ஆசிரமத்தில் நுழைந்து மிகுந்த பசியால் நீதி நூல்களில் கூறப்பட்ட விதிகளை மீறி அங்கிருந்த கனியை புசித்தான். அதற்கு தண்டனையாக தனது கரங்களை வெட்ட சங்கமுனி வேண்ட லிகித முனி அவனது கரங்களை துண்டித்தார்.
சங்கமுனி வனத்தை விடுத்து திருவாரூரை அடைந்து பந்தவினை தீர்க்கும் பாற்குண்டம் என்னும் சங்க தீர்த்தத்தில் நீராடி புற்றிடங்கொண்ட புனிதனை பணிந்து போற்றி கடுந்தவம் செய்தான். அவனது தவத்திற்கு இரங்கி விமலேசன் அம்மையுடன் ரிஷபாரூடராக எழுந்தருளி வேண்டிய வரம் கேட்க என்று பணித்தார்.  சங்க முனியும் இழந்த இரு கரங்ளை பெற வேண்டும் என்று இறைஞ்சினான்.

பெருமானும் சித்திரை நட்சத்திரம் கூடிய பௌர்ணமியில் உபவாசம் இருந்து சங்க தீர்த்தத்தில் நீராட உன் உடல் குறை தீரும் என்று அருளினார். சங்க முனியும் அவ்வாறே புற்றிடங்கொண்ட பெருமானை துதித்து சங்க தீர்த்தத்தில் நீராடி தன் உடற்குறை நீங்கப்பெற்றார். எனவே மன்னா நீயும் இத்தீர்த்தத்தில் உனது குட்ட நோய் தீரும் என்று உபாயம் அருளினர்.

அரசனும் ஆயிரங்கால் மண்டபத்தின் அருகில் உள்ள பாற்குண்டம் என்னும் சங்கதீர்த்தத்தில் சித்ரா பௌர்ணமியன்று நீராடி தன் உடல் நோய் தீரப்பெற்றான். அந்தணர்களுக்கு ஒரு கிராமத்தை பரிசளித்தான். பின்னர் தனது பாவத்தை தீர்த்த சங்க தீர்த்ததின் கரையில் அமர்ந்து பல நூறு வருடங்கள் தவம் செய்தார்.  மன்னனது தவத்திற்கு மகிழந்த விடையேறும் விமலன் காட்சி தந்து வரம் அளித்தார். அரசனும் பெருமானே சிறப்பு மிக்க இத்தலத்தில் சிவலிங்கம் ஒன்றை நிலை பெற கருதினேன். அதில் கணப்போதும் நீங்காமல் உறைதல் வேண்டும் என்று வேண்டினான். பெருமானும் அந்த லிங்கத்தினின்றும் பிரியோம் என்றும் தமக்கு அசலேஸ்வரம் என்று திருநாமம் விளங்கும் என்றும் அருளினார்.

அசலேஸ்வரரை மாசி மாத சதுர்த்தியன்று (சிவராத்திரி) பசு நெய்யாலும், கம்பளத்தாலும் அருசித்தவர்கள் கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களிலும் தீவினைப்பயன் நீங்கி புனிதம் எய்துவர் என்று திருவாரூர் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
சிவலிங்கத்தின்றும் பெருமான் நீங்காதிருப்பாரா? என்ற ஐயம் மன்னன் மனதில் எழுந்த போது தியாகேசர் ஆகாய வாணியின் மூலம் லிங்கத்தின் நிழல் ஒரு பக்கமே அன்றி மறு திசையில் விழாது என்று அருளினார்.

தேவாரப் பாடல் பெற்ற அசலேச்சுரம் அரநெறி என்றே அழைக்கப்படுகின்றது. அப்பர் பெருமான்
எந்த மாதவம் செய்தனை நெஞ்சமே
பந்தம் வீடவை யாய பராபரன்
அந்தமில் புகழ் ஆரூர் அரனெறி
சிந்தையுள்ளும் சிரத்துள்ளும் தங்கவே - என்று பாடியுள்ளார். 

அரன்நெறி – அரநெறி, அதாவது சிவநெறி, சிவனை அடையும் நெறி என்றும், அ(ஹ)ரநெறி- பாவத்தைப் போக்கும் நெறி  என்றும் பொருள் உண்டு. பல நாயன்மார்களுடன் நெருங்கிய தொடர்புடைய ஆலயம் அசலேச்சுரம் ஆகும்.
நீரால் விளக்கேற்றியமி நந்தி அடிகள்:

அரு நம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – என்று சுந்தரர் போற்றிய  மி நந்தி அடிகள்  இவ்வாலயத்தில் தீபம் ஏற்றுபவராக பணி புரிந்தவர் இவர்.  ஒரு நாள் விளக்கேற்ற எண்ணெய் இல்லாத காரணத்தினால் அருகில் உள்ள ஒரு வீட்டிற்குச் சென்று விளக்கேற்ற எண்ணெய் கேட்டார்.  அது ஒரு சமணரின் வீடு. அதில் இருந்த சமணர்கள், அடிகளை நோக்கி “கையில் ஒளிவிட்டு விளங்கும் தீயினை ஏந்திய உங்கள் இறைவனுக்கு” விளக்குத் தேவையில்லை என்று எள்ளி கையாடி எண்ணெய் இல்லை என்று கை விரித்து விட்டனர். மேலும் “விளக்கெரீப்பீராகில் நீரை முகந்து எரிப்பீராக’ என்று ஏளனமாக கூறினர். அதைக் கேட்ட அடிகள் கவலையுற்றார். அசலேசுவரர் சன்னதிக்கு சென்று வீழ்ந்து வணங்கினார். அப்போது ஒரு ஆகாயவாணி ஒலித்தது. இவ்வாலயத்தில் உள்ள திருக்குள நீரை முகந்து வந்து விளக்கேற்று என்று பெருமான் அருளினார். அவ்வாணி கேட்ட அடிகளும் கமலாலய திருக்குளத்தை அடைந்து நீரை முகந்து வந்து திரியிட்டு விளக்கேற்றினார். இவ்வாறு நீரால் விளக்கெரித்த அற்புதம் நிகழ்ந்த கோவில் இது.

நமிநந்தியடிகளின் பெருமையை வாகீசப் பெருமான்
“ஆருர் நறுமலர் நாதன் அடித்தொண்டர் நம்பிநந்தி
நீரால் திருவிளக் கிட்டமை நீணாடறியு மன்றே”, என்றும் “தொண்டர்க்கு ஆணி” என்றும் “நந்தி பணி கொண்டருளும் நம்பன்” என்றும் போற்றியுள்ளார்.

நமிநந்தி அடிகளது பெருமையை அறிந்த சோழ மன்னன் திருவாரூர் பெருமானுக்குரிய அனைத்து பூசைகளையும், சிறப்பு விழாக்களையும் நமிநந்தியடிகளையே பொறுப்பேற்று நடத்தச்செய்தான். ஒரு சமயம் ஆரூர் பெருமான் திருமணலிக்கு எழுந்தருளியபோது நாயனார் கண்டு மகிழ்ந்து தம்மூருக்கு திரும்பினார்.  பலரை தொட்டு வந்ததால் தீட்டு உண்டாயிற்று என எண்ணி வீட்டிற்கு வெளியே இருந்து தம் துணைவியாரை நீர் கொண்டு வர பணித்தார். வாசல் திண்ணையில் திருவருளால் அடியார்க்கு உறக்கம் வந்தது. அவர் கனவில் ஆரூர் பெருமான் “அன்பனே! திருவாரூரில் பிறந்தவர்கள் அனைவரும் சிவகணங்களே!’ என்று அருளினார். மறுநாள் திருவாரூர் புகுந்து அங்குள்ளோர் அனைவரும் சிவசொரூபர்களாக விளங்குவது கண்டு வியந்து அடிவீழ்ந்து வணங்கினார்.

திருக்கயிலை வீற்றிருந்த சிவபெருமான் திருக்கணத்தார்
பெருக்கிய சீர்த்திருவாரூர் பிறந்தார்கள் ஆதலினால்
தருக்கிய ஐம்பொறியடக்கி மற்று அவர்தான் வணங்க
ஒருக்கிய நெஞ்சுடையவர்க்கே அணித்தாழும் உயர்நெறியே – என்று சேக்கிழார் பெருமான் திருவாரூர் பிறந்தார் புராணத்தை பாடியுள்ளார்.

அரசியின் மூக்கை அரிந்த செருந்துணை நாயனார்: 

செருந்துணையார் இவ்வாலயத்தில் இறைவனுக்கு பூமாலை கட்டித் தொண்டு செய்து வந்தார். ஒரு நாள் காடவ குல வேந்தனாகிய கழற்சிங்கர் தனது தேவியோடு திருவாரூர் வந்து இத்திருக்கோவிலினுள் வழிபடச்சென்றார். அப்போது அச்சங்காதேவி இறைவனுக்கு மாலை தொடுப்பதற்காக வைத்திருந்த மலரை எடுத்து முகர்ந்தாள். இதைக்கொண்டு கோபம் கொண்ட செருந்துணையார் “இறைவனுக்கு சார்த்த இருந்த மலரை முகர்ந்த மூக்கை அரிந்தார்”. செருந்துணை நாயனார் பூமாலை தொடுத்த இடம் என நம்பப்படும் முக மண்டபத்தின் ஒரு பகுதியில் இன்றும் பூமாலைகள் தொடுக்கப்படுகின்றன. இவ்வாலயத்திற்கே சிறப்புடைய செங்கழுநீர் மாலையும் இப்பள்ளித்தாம மண்டபத்தில் தொடுக்கப்படுகின்றது. அரசியின் கையை வெட்டிய கழற்சிங்நாயனார்:

கடல் சூழ்ந்த உலகெல்லாம் காக்கின்ற பெருமான்
காடவர் கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன் - என்று வண்தொண்டர் பாடிய கழற்சிங்கர் அரசி செய்த தவறை உணர்ந்து அவள் செய்த தவறுக்கு பூவை முதலில் எடுத்த கையையன்றோ முதலில் தண்டித்தல் வேண்டும் என்று தன் வாளினால் அத்தேவியின் செங்கையை வளையொடும் வெட்டினார். ஆலய வழிபாட்டிற்குரிய மலர்கள் எங்கிருந்தாலும் அவற்றை நுகர்தல் கூடாது என்ற அரன் கோயில் நெறியில் இருந்து பிறழாது தனது பட்டமகிஷியே ஆனாலும் அவளது கரத்தையே துணித்த கழற்சிங்கனை விண்ணவரும், மண்ணவரும் “மறுவிய வாச மலர் மழை பொழிந்து” வாழ்த்தினார்கள் ரிஷப வாகனத்தில் உமையம்மையுடன் எம்பெருமான் எழுந்தருளி இருவருக்கும் அருள் பாலித்தார்.
எம்பெருமான் தோழர் சுந்தரரை விலக்கிய விறன்மிண்ட நாயனார்:

விரி பொழில் சூழ் கொன்றையார் விறன்மிண்டற்கு அடியேன் - என்று தம்பிரான் தோழர் போற்றிய  இந்நாயனார் இவ்வாலயத்தில் மெய்க்கவலாராக பணி புரிந்தார். அடியார்களை வணங்கத் தவறியதால் சுந்தரரை விலக்கி வைத்து திருத்தொண்டர் தொகை பாட காரணமாக இருந்தவர் விறண்மிண்டர் ஆவார்.

இவ்வாலயம் 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னன் சமற்கார பெருமானாரால் கட்டப்பட்டது.  ஆதிகாலத்தில் செங்கற்கோவிலாக இருந்தது, பின்னர் 10ம் நூற்றாண்டில் சோழப் பேரரசி செம்பியன் மாதேவி இக்கோவிலையை முழுவதும் கற்றளியாக மாற்றிக் கட்டினார்.

தனி தேவாரப் பாடல் பெற்ற தலம். அப்பர் பெருமான் திருத்தாண்டகம் பாடியுள்ளார். தனி கொடி மரம், தனி திருமந்திரம் உள்ளது. நால்வர் பெருமக்களும் இத்தலத்தைப் பாடியுள்ளனர். துவாரபாலகர்களின் அங்க அழகு அப்படியே சொக்க வைப்பது. பிரம்மாண்ட நந்தி, கொடிமரம், பலி பீடம் மூன்றும் ஒரே நேர் கோட்டில் இல்லாமல் விலகி இருக்கின்றன.

இத்திருக்கோவிலில் கருவறை, அர்த்த மண்டபம், இடைநாழி, மகாமண்டபம், முகப்பு மண்டபம், வெளி மண்டபம் கொண்டு எழிலாகவும், பிரம்மாண்டமானதாகவும் அமைந்துள்ளது. இம்மண்டபத்தில் தியாகராஜப்பெருமானுக்கு விழாக்கள் டைபெறுகின்றன. சதுரவடிவ கருவறையில் அசலேஸ்வரர் வட்ட வடிவமான ஆவுடையாருடன் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். உருளை வடிவ பாணத்தில் கோடுகள் அமைந்துள்ளன. முன் பகுதியில் செப்புத் திருமேனியராக அம்பாள் வண்டார் குழலி காட்சி தருகிறாள். கருவறை வெளியே கம்பீர வடிவில் இரு பக்கமும் துவார பாலகர்களும், மண்டப நந்தியும் இடம் பெற்றுள்ளனர்.
இத்திருக்கோயிலின் முன் மண்டப இடப்பக்கம் பிள்ளையாரும் இரண்டு லிங்கங்களும் இடம் பெற்றுள்ளன.  ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்று ஐயனின் ஐம்முகங்களை குறிக்கும்  ந்து லிங்கத்திருமேனிகள் உள்ளன. இரண்டாம் மண்டபத்தில் இடப்புறம் உமாசகிதர், நடராஜர், சிவகாமி அம்பாள், போக சக்தி உற்சவத் திருமேனிகளும், வலதுபுறத்தில் செருந்துணை நாயனார், விறமிண்ட நாயனார், கழற்சிங்கர், கங்கா தேவி, நமி நந்தியடிகள் ஆகியோரின் மூலத்திருமேனிளும் அமைந்துள்ளன. நந்தியெம்பெருமானுக்கு கூரை உள்ளது.
அரசி செம்பியன் மாதேவியால் கற்றளி கோயிலாக உருவான இதன் அழகிய விமானத்தில் பண்டைய சோழ கால சிற்பச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இவ்வாலயம் ஒரு கலைக்கூடம் என்றால் அது மிகையாகாது.  மகா மண்டபம், முகப்பு மண்டபம், டராசர் சபை மண்டப விதானத்திலும், சுவற்றிலும், பல வண்ண பழங்கால ஓவியங்கள் கண்ணுக்கும் மனத்திற்கும் விருந்து. மாப்பெருங்கருணை கொண்டு வானுலகை விடுத்து பூலோகத்திற்கு தியாகேசப்பெருமான் வந்த வரலாறு, அருமையான ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. மேலும் காலசம்ஹார மூர்த்தி, துர்கா பரமேஸ்வரி, சரபர் ஓவியங்கள் அருமை. இவற்றை வரைந்தவர் “சிவம் ஓதுவார்”.  படிகளில் அற்புதமான உயிரோட்டமுள்ள கற்சிலைகள் அலங்கரிக்கின்றன.
மேற்கு நோக்கிய இவ்வாலயத்தின் விமானத்தின் நிழல் கிழக்குப்பக்கம் மட்டும் விழும்படி கட்டப்பட்டுள்ளது இது தஞ்சை பெரிய கோயிலின் விமானத்திற்கு முன்னோடி என்றும் கூறலாம்.  இவ்வாலயத்தில் கோட்டங்களில் கங்கை, திருமகள், முருகன், கணபதி, அகத்தியர், அர்த்தநாரீஸ்வரர்,  பிச்சாடனர், பிரம்மா, இலிங்கோத்பவர், துர்க்கை திருமேனிகள் எழிலாக அமைந்துள்ளன. கொற்றவை தன் திருக்கரங்களில் திரிசூலம், ஆழி, சங்கம், வாள், தனுசு, கேடயம் ஏந்தி அபய கரம் அருள் பாலிக்க மகிடன் தலை மேலும், வெண்கொற்றக் குடைக்கு கீழும் எழிலாக  அருள் பாலிக்கின்றாள். தேவிக்கு அருகே சிரப்பலி கொடுக்கும் வீரனின் உருவத்தையும் காணலாம்.  இவ்வாலயத்தின் கோமுகியின் எழிலும் வியக்கும்படி உள்ளது. பல அரிய சுதை வடிவங்களையும் கண்டு களிக்கலாம். இத்திருக்கோயிலில் பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அசலேசம் எனும் அரநெறி ஆலயம் சிறந்த கலைக் கருவூலம் மட்டுமல்லாமல் ஒரு வரலாற்றுப் பெட்டகமும் ஆகும்.  திருவாரூர் ஆலய வளாகத்திலேயே அமைந்துள்ள தேவாரப்பாடல் பெற்ற ஒரு தலத்தைத் தரிசித்தோம் வாருங்கள் திருவாரூரில் அமைந்துள்ள மற்றொரு தேவாரப்பாடல் பெற்ற தலத்தை தரிசிக்கலாம்.

                                                          திருப்பாத தரிசனம் தொடரும் . . . . 

Wednesday, March 25, 2020

திருப்பாத தரிசனம் - 18


திருவாரூரின் சிறப்பு மிகு தீர்த்தங்கள்

கமலாலயத் திருக்குளம்


தலம், தீர்த்தம், மூர்த்தி என்னும் முப்பெருமைகளும் உடையது திருவாருர். சகல புண்ணிய தீர்த்தங்களும் விரும்பி அடைந்து உறையும் தலம் திருவாரூர், எனவே இத்தலம் சர்வ தீர்த்த ஆசிரயம் என்றும் அறியப்படுகின்றது.  திருவாரூரில் பல தீர்த்தங்கள் ஆலயத்தின் உள்ளேயும், புறத்தேயும் அமைந்துள்ளன.  ங்கு முனிவரால் உண்டாக்கபட்ட ங்கு தீர்த்தம் கிழக்கு கோபுரம் உட்புறம் தேவாசரியம் அருகே அமைந்துள்ளது. சங்க முனிவர் இதில் நீராடி தமது அறுபட்ட கரங்களை மீண்டும் பெற்றார். சித்ரா பௌர்ணமியன்று நீராட தொழுநோய் நீங்கும். சமற்காரன் என்ற மன்னன் இவ்வாறு இத்தீர்த்தத்தில் நீராடி தொழுநோய் நீங்கப்பெற்றான் என்று தலவரலாறு இயம்புகிறது.

நந்தவனத்தில் அமைந்திருப்பது பார்வதி தீர்த்தம், மேற்குப் பக்க நந்தவனத்திற்கு அருகில் அமைந்திருப்பது பெரிய கேணி வாணி தீர்த்தம், நவராத்திரி மற்றும் பௌர்ணமி அன்று மேதா சூக்தம் அல்லது சகலகலாவல்லி மாலை பாராயணம் செய்து நீராடல் சிறப்பு. சரஸ்வதி தீர்த்தத்தின் சிறப்பு திருவாரூர் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஊமையாக இருந்த ஒரு மன்னன் இத்தீர்த்தத்தில் நீராடி பேசினான் மற்றும் கமலாம்பிகையின் தரிசனமும் பெற்றான்.

கமலாம்பிகை திருக்கோவிலின்  கமலாம்பிகை தீர்த்தம், விசுவாமித்திர தீர்த்தம் இரண்டும் கேணிகள். வடக்கு கோபுரம் அருகே அமைந்துள்ளது  முக்திக்கேணி தீர்த்தம், அம்பிகை தன் மூக்குத்தியை  தவறவிட்ட மூக்குத்தி கேணி என்பர் சில அன்பர்கள். பாதிரி மரத்தின் அருகே பாதிரீஸ்வரர் தீர்த்தம் இருந்துள்ளது.  இரண்டாம் திருச்சுற்றில் ஆடகேச்சுரம் அருகே அமைந்துள்ளது திருத்தீர்த்தம் (இலட்சுமி தீர்த்தம்). கிழக்கே மடப்பள்ளி அருகே அமைந்துள்ளது கௌமாரி தீர்த்தம். கௌமாரியின் விருப்பத்தை ஏற்று இறைவன் நடனமாடிய பகுதி, பௌர்ணமியன்று நீராட அனைத்து துன்பங்களும் விலகும். நீலோத்பலாம்பாளின் ஆலயத்திற்கு பின்புறம் அமைந்துள்ளது அகத்திய தீர்த்தம். ஆனந்தீச்வரர் கோவில் அருகில் அமைந்துள்ளது ஜ்யேஷ்டா தீர்த்தம். மேலும் விடங்கர் தீர்த்தம், வேத தீர்த்தம், ஹம்ஸ தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம்,  கயா தீர்த்தம், அமுத தீர்த்தம், முக்தி தீர்த்தம்  ஆகிய தீர்த்தங்களும் உள்ளன. செங்கழு நீர் ஓடை, ஓடம் போக்கி ஆறு என்றழைக்கப்படும் கபில  தீர்த்தம் ஆகியவையும் இத்தலத்தின் தீர்த்தங்கள்.

இவ்வூரில் அமைந்திருக்கும் கிணறுகள் கூட புண்ணிய தீர்த்தமாக கூபஆதி என்றழைக்கப்படுகின்றன.  திருவாரூரில் அமைந்துள்ள தீர்த்தங்களில் தலையானதும் திருவாரூரின் சிறப்பான தீர்த்தமும் ஆனது கமலாலய திருக்குளம். வாருங்கள் அதன் சிறப்புகளைக் காணலாம்.

கமலாலயத்தின் சிறப்பு: சிவபெருமானின் ஆனைப்படி திருவாரூர் கரமும், ஆலயமும், கமலாலய திருக்குளமும் முசுகுந்த சக்கரவர்த்தியால் நிர்மாணிக்கப்பட்டது என்கின்றன புராணங்கள். கோவில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, செங்கழுநீர் ஓடை நந்தவனம் ஐந்து வேலி என்ற பழமொழி மூலம் கமலாலயத்தின் சிறப்பை நாம் அறியலாம். (ஐந்து வேலி என்பது 1000 அடி நீளம் 700 அடி அகலம் ஆகும்) திருவாரூர் தீர்த்தங்களில் கமலாலயத் தீர்த்தம் மிக தொன்மை வாய்ந்தது. பராசக்தியால் தோற்றுவிக்கப்பட்டது, தேவதீர்த்தம் என்றும் அழைக்கப்படுகின்றது. மூன்றரைக் கோடி விண்ணுலகத் தீர்த்தங்களும் திருவாரூர் திருத்தலத்தின் 21 தீர்த்தங்களுள் அடங்கும்.

திருவாரூரில் மட்டுமே ஆலயத்தின் பெயரிலேயே கமலாலயக்குளம் அமைந்துள்ளது. திருக்கோவிலின்  மேற்கு வாயிலை ஒட்டி சதுர வடிவில் நேர்த்தியான சாலைகள் சூழ கண்டோர் நெஞ்சை மகிழ வைக்கும் பாங்குடன் மையத்தில் ஒரு சிறு கோவிலுடன் எழிலாக அமைந்துள்ளது கமலாலய திருக்குளம். சேரமான் பெருமாள் நாயனார் தமது திருவாரூர் மும்மணிக்கோவையில் திண்ணிய கரைகளுடன் திகழ்ந்த இத்திருக்குளம் பற்றிப் பாடியுள்ளார்.கமலாலய குளத்தின் மையத்தில் யோகாம்பாள் உடனாய நாநாதர் கோவில் அமைந்துள்ளது. அழகிய திருக்குளத்துக்கு மேலும் எழில் சேர்க்கும் விதமாக அதன் மையப்பகுதியில் மிதக்கும் ஆலயம் போல், கோபுரத்துடன் கோயில் உள்ளது. அங்கே குடிகொண்டுள்ளார் அருள்மிகு யோகாம்பாள் உடனுறை நாகநாத சுவாமி. இந்த அம்பாளை குண்டலினி நாக சக்தியாகவும், ஈசுவரனை சிவராஜ யோக சக்தியாகவும் கருதி வழிபாடு செய்கிறார்கள் பக்தர்கள். பிரதோஷ காலத்தில் இவர்களை வழிபட சகல நன்மைகளையும் பெறலாம். அச்சமயத்தில் படகு சவாரி உள்ளது.   நாக தோஷம் உள்ளவர்கள்  நாகநாதரை வழிபட அத்தோஷம் அகலும்.  பல அழகிய செடி கொடி மரங்களுடன் காட்சி தரும் வ்வாலயத்தின் பிரகாரங்களில் பல பரிவார தேவதைகளும் காட்சி தருகிறார்கள்.
இந்நடுக்கோயிலை சுற்றி ஆதி சேது, விநாயக சேது, குமார சேது, ருத்திர சேது, கௌரி சேது, விஷ்ணு சேது, லெக்ஷ்மி சேது, பிரம்ம சேது, வாணி சேது, சோம சேது, வனிதா சேது, இந்திர சேது, அக்னி சேது, துர்க்கா சேது, ஆதித்ய சேது, என்று மொத்தம் 16 ஸ்நான கட்டங்கள் அமைந்துள்ளன. இக்கோவிலில் உள்ள ஒரு சிற்பத்தில் குரங்கு முகமுடைய  முசுகுந்தன் சிவலிங்கத்திற்கு திருமஞ்சனம் ஆட்டுதலும், அருகே இரு முனிவர்கள் அமர்ந்து ஆசி கூறுவதும் வடிக்கப்படுள்ளது.

மூன்றரைக் கோடி விண்ணுலகத் தீர்த்தங்களை அடக்கிய திருவாரூர் கமலாலய குளத்தில் பங்குனி உத்திரத்தன்று நீராடினால், கும்பகோண க்ஷேத்திரத்தில் 12 மகாமகம் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். பங்குனி உத்திர திருநாளன்று, கமாலாலயத்தில் நீராட வேண்டும். பின்னர், ஆரூரின் சமீபத்தில் உள்ள குருவி இராமேசுவரம் என்ற இடத்தில் தம் முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டும். அதன் பின்னர், அருகில் உள்ள கேக்கரை என்ற குளத்தில் க்ஷேத்திர பிண்டத்தை போட்டுவிட்டு, பின்பு சுவாமி தரிசனம் முடித்து, கடைசியாக தியாகேசன் திருக்கோயில் வந்து பிரம்ம முகூர்த்தத்தில் இறை பூஜை செய்து வழிபட்டால், தெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிட்டும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
கமலாலயத்தின் நேர்த்தியான கருங்கல் படிகள், காசியில் கரையெல்லாம் துறையானது போல அமைந்துள்ளது. 64 தீர்த்த கட்டங்கள் அமைந்த திருவாரூர் கமலாலயம் 25 ஏக்கர் விஸ்தீரணம், என்றுமே வற்றாத புண்ணிய தீர்த்தம் ஆகும். கீழ்க்கரையில் 12 கட்டங்களும், மேற்கரையில் 13 கட்டங்களும், நடுவிலாங்கோவிலில் 16 கட்டங்களும், தென்கரையில் 20 கட்டங்களும், வடகரையில் 19 கட்டங்களும் அமைந்துள்ளன. ஒவ்வொரு கட்டத்துக்கும் ஒவ்வொரு பெயரும். அதில் குளித்தபின் கொடுக்க வேண்டிய தானம் பற்றியும், அங்கு நீராடினல் உண்டாகும் பலன் பற்றியும் தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மாற்றுரைத்த பிள்ளையார் சன்னதி
( பிள்ளையார் மாற்றை சரி பார்த்து சுந்தரருக்கும் பரவையாருக்கும் கூறுதல்)

 திருமுதுகுன்றத்தில் மணிமுத்தாற்றில் இட்ட பொன்னை கமலாலய திருக்குளத்தில் சுந்தரர் பெறுதல்
இந்த 64 ஸ்நான கட்டங்களில் தலையாய சிறப்பினைக் கொண்டது, தேவ தீர்த்த கட்டம் கமலாலயத் திருக்குளத்தின் சமீபமும் ஆலய மேல கோபுரம் எதிரே அமைந்துள்ள மாற்றுரைத்த பிள்ளையார்” என்னும் பெயருடைய விநாயகர் குடி கொண்ட சிறு கோயில் அருகில் தேவ தீர்த்த கட்டம் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் தேவர்களின் அதிபதி இந்திரன் இழைத்த கொடுமைகளிலிருந்து பாதிக்கப்பட்ட மன்னன் திரிசங்கு த்தேவ தீர்த்தத்தில் நீராடி அதிலிருந்து விடுதலை அடைந்ததாக தல வரலாறு கூறுகிறது.
திருவாரூர் தியாகராஜப் பெருமானின் 364 லீலைகளில் பெரும்பாலான கதைகளில், கமலாலயத்தின் பெருமை, அருமை, அற்புதம், அதிசயம் சிறப்பாக கூறப்பட்டுள்ளன. தேவர்கள், மகாமுனிவர்கள், அருளாளர்கள், அடியார்கள் தீர்த்தமாடிய சிறப்புடையது கமலாலயம். திருவாரூர் புராணத்தில் தேவதீர்த்தச் சருக்கத்திலும் இக்குளத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன.

துர்வாச முனிவருக்காக சிவபெருமான் கமலாலய தீர்த்தத்தில் கங்கையை வரவழைத்தார். அதனால் இத்தீர்த்தத்திற்கு கங்காஹரதம் என்றும், துர்வாசரின் தாபத்தை தீர்த்ததால் தாபஹாரணி என்றும் திருநாமம் உண்டு. இக்குளத்தின் தென்கரையில் துர்வாச முனிவர் கமலாம்பிகையை பூசித்த   திருமடம் உள்ளது. தன்னால் உருவாக்கப்பட்ட ஹம்ஸ தீர்த்தம் என்னும் புண்ணிய புஷ்கரணியை தியாகேசர் வற்றச்செய்து, அதன் தீர்த்தத்தை கமலாயத்தில் சேரச்செய்தார். 

கமலாலயத்தில் பங்குனி உத்திரத்தன்று தீர்த்தவிழா நடைபெறும், மற்றும் விஷு, மார்கழித்திருவாதிரை, அருணோதயம், மகோதயம் முதலான புண்ணிய காலங்களிலும் தீர்த்தவிழா நடைபெறுகிறது. தெப்பத்திருவிழாவும் ஆண்டுக்கு ஒரு முறை சிறப்பாக நடைபெறுகிறது.

தியாகேசர் வயோதிகராய் குளத்தில் வீழ, நீலோத்பலாம்பாள் பாவம் செய்யாதவர்கள் மட்டுமே தொட்டு தூக்கலாம் என்று கூறுதல்

சுந்தரர் கமலாலயத்தில் குதித்து வயோதிகரை காப்பாற்றுதல்

சுந்தரருக்கு சிவபெருமான் திருக்காட்சி நல்குதல்
(கமலாலயத்தில் நீராடுவதால் பாவம் நீங்கும் என்பதை விளக்கும்  சரிதம்)


கமலாலயக் குளத்தில் புனித நீராடுவதால் பாவங்கள் கரையும் என்பதற்கான ஒரு கதை உண்டு.  கமலாலய குளத்தில் இறைவன் முதியவர் வேடத்தில் வந்து தவறி விழுந்தார், அவரின் மனைவி பதறிப்போய், “என் கணவரைக் காப்பாற்றுங்கள்” என்று சத்தம் போட்டார். அவ்வழியே வந்த சுந்தரர் அவரை காப்பாற்ற வந்த போது, முதியவரின் மனைவி, “நீங்கள் எப்பாவமும் செய்யாதவராக இருந்தால் மட்டுமே என் கணவரைக் காப்பாற்ற வேண்டும் என நிபந்தணையிட்டார். சுந்தரரும் கமலாலய குளத்தில் நீராடியவர் என்பதால் அந்நிபந்தணைக்கு உட்பட்டு அக்கிழவரை காப்பாற்றினார். இதன் மூலம் கமலாலயத்தில் நீராடுபவர்களின் பாவங்கள் அனைத்தும் விலகும் என்று அம்மையப்பர் உணர்த்தினர்.  கமலாலய குளத்தில் மாற்றுரைத்தப் பிள்ளையார் சன்னதிக்கு அருகில் உள்ள மண்டபத்தின் கூரையில் இவ்வரலாறு கவின் மிகு ஓவியமாக வரையப்பட்டுள்ளது.

பெரிய புராணத்தில் தெய்வ சேக்கிழார் தண்டியடிகள் புராணத்தில் கமலாலயத்தின் சிறப்பைப் பாடுகின்றார். சிறந்த தீர்த்தக்குளமாக இருந்த கமலாலயத்தை சமணர்கள் தூர்த்துப் பாழிகள் கட்டி உறைந்தனர் எனவும் அதனால் வெகுண்டெழுந்த தண்டியடிகள் தாம் பிறவி அந்தகராக இருந்த போதும், கரையில் கயிற்றைக் கட்டி அதனைப் பிடித்துக் கொண்டு சென்று குளத்தை தூரெடுத்து தூய்மைப் படுத்தினார் என்றும், இதனால் விரிசடைக் கடவுளும் மகிழ்ந்து அவருக்கு பார்வை அருளினார் இதனை
செங்கண் விடையார் திருக்கோயிற் குடபால் தீர்த்தக் குளத்தின் பாங்
கெங்கும் அமணர்ப்பாழிகளா யிடத்தாற் குறைபா டெய்துதலால் 
அங்கந் நிலைமை தனைத்தண்டி யடிகள் அறிந்தே யாதரவால்
இங்கு நானிக்குளம்பெருகக் கல்ல வேண்டு மென்றெழுந்தார் – என்று பாடுகிறார் சேக்கிழார். இத்திருக்கோயில் வளாக மூன்றாவது சுற்றில் மூலாதார கணபதிக்கு அருகில் தண்டியடிகள் நாயனாரின் திருவுருவச் சிலை உள்ளது. இவரை சுந்தரர் நாட்டம் மிகு தண்டிக்கும் மூர்க்கற்கும் அடியேன் என்று போற்றுகிறார்


கமலாலய குளத்தில் எம்பெருமான் நிகழ்த்திய  சில அதிசயங்கள்,  தண்டியடிகள்  பிறவி அந்தகராக இருக்கும் போது கமலாலய தீர்த்தத்தில் மூழ்கி கண் பார்வை பெற்றார். மிந்தி அடிகள்  இத்திருக்குளத்தின் நீரை எடுத்து விளக்கேற்றினார். சிவபெருமான் சுந்தரமூர்த்தி நாயனாருக்காக 12 ஆயிரம் பொன் கட்டிகளை திருமுதுகுன்ற ஆற்றில் இட்டு திருவாரூர் கமலாலய குளத்தில் இருந்து பொன்னை எடுத்தார். அப்பொன்னின் மாற்று சரிதானா என்று சரி பார்த்து விநாயகர் கூறினார். இவர் மாற்றுரைத்த பிள்ளையாராக இன்றும் கமலாலய திருக்குளக்கரையில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.


திகழ்ந்த பங்குனி யுத்திர நாளினில் தேவதீர்த்தப் பொய்கை
மகிழ்ந்து மூழ்கிய யடயா டகம்பசு மாநிலம் முதற்றானம்
புகழ்ந்து நூன்முறை வஞ்சமின் புற்றிடங் கொண்டோனே
அகங்கொ ளன்போடு போற்றினோர் முத்தியாங்கடைதல் சத்தியமம்மா – தேவர் தொழும் நாயகரான திருமூலட்டானரை வணங்கி பங்குனி உத்திர திருநாளன்று தீராத பாவங்களையும் போக்கும் கமலாலய திருக்குளத்தின் 64 தீர்த்தக் கட்டங்களுள் பிரதான தீர்த்தக் கட்டமான  தேவதீர்த்த கட்டத்தில் நீராடியோர் சகல வித செல்வங்களையும் இகபர சுகங்களையும் அடைந்து இந்திரனுக்கு ஒப்பான வாழ்வடைவதோடு பிறவிக் கடன் தீர்ந்து தியாகேசன் பதம் அடைவார் என்பது சத்தியம் என்பது தலபுராணம்.   இவ்வளவு சிறப்புகள் கொண்ட இக்குளத்தில் ஒரு முறை மூழ்கி நீராடினால் சிவலோகம் அடைந்து சாமீப முக்தி பெறுவர். பங்குனி உத்திர நாளில் இத்தேவதீர்த்தத்தில் நீராடி தானம் செய்து புற்றிடங்கொண்டாரை போற்ற முத்தி கிட்டும்.

சிதம்பரம் திருமறைஞானசம்பந்த நாயனாரால் இயற்றப்பட்ட கமலாலய சிறப்பு என்னும் நூல் 1547 திருவிருத்தங்களைக் கொண்ட 94 பகுதிகளைக் கொண்டதாகும். அந்நூலில் அசலேஸ்வர சருக்கம், தேவ தீர்த்த சருக்கம், கயா தீர்த்த சருக்கம் தசரத சருக்கம் என்று பல சருக்கங்கள் உள்ளன.  தசரத சருக்கத்தில் கூறப்பட்டுள்ள ஓர் வரலாறு.

இராமபிரானின் தந்தையும், அயோத்தி மன்னனான தசரத சக்கரவர்த்திக்கும் கமலாலய ஆரூருக்கும் தொடர்பு உண்டு எனில் அது ஆச்சரியத்தையே தரலாம். த்தொடர்பை விளக்கும் புராணக் கதையைப் பார்ப்போம். தசரதன் தந்தையான அசன் திருவாரூரில் சிவபெருமானையும் அம்பாளையும் பூசித்து தசரதனை மகனாகப் பெற்றான். தசரதன் வேதங்கள் முதலான நூல்களை ஆய்ந்தறிந்த பண்டிதனாக திகழ்ந்தான், ஒரு சமயம் ஆதித்தன் புதல்வனான சனிபகவான் ரோகிணியை பேதித்துக்கொண்டு செல்ல இருப்பதால், அதன் விளைவாக மழை இன்றி நாட்டில் பஞ்சம் தோன்றக்கூடும் பசியால் மண்ணுலகில் மனிதரெல்லாம் துன்புறுவர். பன்னிரெண்டாண்டுகள் துன்பம் நிகழும் என்று புரோகிதர்கள் தசரதனிடம் கூறினர்.

கார்த்திகை நட்சத்திரத்தை விட்டு ரோகிணிக்குச் செல்ல சனி பகவான் இரதத்தில் ஏறி செலுத்திய போது தசரதன் அங்கு சென்றான். ரோகிணியை ஊடறுத்துச் செல்லக்கூடாது. என் விருப்பத்தை மிறிச் செல்வாயானால் வாளினால் உன்னை கூறு செய்வேன் என்றான். அவனது வீர்த்தை கண்ட சனி அவன் வேண்டிக்கொண்டபடி ரோகிணையை பேதிக்காமல் அதன் பக்கமாய் சுற்றுக்கொண்டு சென்றான்.  தயரதன் சனியிடம், சனிக்கிழமை நல்லெண்ணெய் ஸ்நானம் செய்வோரை எந்நாளும் இடர் செய்யக்கூடாது. அன்று மறையோருக்கு எள், அன்னம் முதலியவற்றை அளிப்போருக்கு அட்டம சனியிலும் துன்புறுத்தக்கூடாது. பசுநெய்,   எள் முதலான திரவியங்களைக் கொண்டு தில ஹோமம் செய்கின்றவர்களை ஏழரைச் சனியிலும் துன்புறுத்தக்கூடாது என்று பல வரங்களையும் கேட்டார். சனியும் அவ்வாறே வரம் அளித்தார்.  தசரதனின் பராக்கிரமத்தை கண்டு இந்திரன் தசரதனை நண்பனாக்கிக் கொண்டான்.

ஒரு சமயம் தசரதன் இந்திரலோகம் சென்று நட்பு பாராட்டி திரும்பி வந்தான். பிள்ளைப் பேறில்லாதவன் என்று அவர் உட்கார்ந்திருந்த இடத்தை நீர் தெளித்து சுத்தம் செய்தான். இதை நாரத முனிவர் மூலம் அறிந்த தசரதன் மீண்டுமொரு முறை இந்திரலோகம் சென்றான் இம்முறையும் இவ்வாறே இந்திரன் செய்வதைக் கண்டு மனம் நொந்த தசரதன் திருவாரூர் வந்து சிவலிங்கம் ஸ்தாபித்து பூசை செய்ய தியாகேசரும் அவர் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்றார். மன்னனும் புத்திரப்பேறு வேண்டினார். இந்நகரில் கமல மலர் தடாகம் அமைத்து அதன் கரையில் திருமாலை வழிபட அவரே உனக்கு மகவாய் பிறப்பார் என்று அருளினார். தயரதனும் திருவாரூர் வந்து கமலாய குளத்தில் நீராடி புற்றிடங்கொண்டாரை வணங்கி இராமனை மகனாகப் பெற்றார். இவ்வாறு புத்திரப்பேறு தரவல்ல திருத்தலம் திருவாரூர் -  கமலாலயம்.இத்திருக்குளத்து நீரால் விளக்கு எரித்தார் நமிநந்தியடிகள், கண் பெற்றார் தண்டியடிகள், மணிமுத்தாற்றில் இட்ட பொன்னை சுந்தரருக்கு இங்கு வழங்கியது ஆகிய சிறப்புகள் மட்டுமல்லாமல், ஆளுடையப்பிள்ளையாரும், அருள் திருநாவுக்கரசரும் மற்றும் பல நாயன்மார்களும் புனித நீராடியதும் இத்திருக்குளத்தில்தான். 

இது வரை திருவாரூரின் தீர்த்தங்களின் சிறப்பைப் பற்றிக் கண்டோம் வாருங்கள் திருவாரூர் ஆலயத்தின் பிரகாரத்தில் அமைந்துள்ள நான்கு முக்கியத் திருக்கோயில்களான அசலேசம், ஆடகேசம், அனந்தீச்சுரம், சித்தீசுரம் என்பனவற்றுள் அசலேசமே அரநெறி என்றழைக்கப்படுகின்றது. மற்ற மூன்று திருக்கோவில்களின் சிறப்பை முன்னரே கண்டோம். வாகீசர்  தமது திருவிருத்தத்திலும், தாண்டகப் பகுதியிலும் பாடிய அசலேசத்தின் சிறப்பை  அடுத்துக் காணலாம். 

                                                           திருப்பாத தரிசனம் தொடரும் . . . .