Wednesday, March 18, 2020

திருப்பாத தரிசனம் - 15

ஆரூர் வரலாறு கூறும் திருமண்டபங்கள்


முசுகுந்தரை இந்திரன் தேவலோகத்திற்கு வரவேற்கும் காட்சி

திருவாரூர் திருக்கோயில் எவ்வளவு சிறப்பு பெற்று திகழ்கின்றதோ அது போலவே திருக்கோவிலில் உள்ள மண்டபங்களும் சிறப்புப் பெற்று திகழ்கின்றன.  வசந்த மண்டபம், ர்த்தன மண்டபம், பள்ளித்தாம மண்டபம், மகா மண்டபம், முன் மண்டபம், அர்த்த மண்டபம், பாகற்காய் மண்டபம், கண்டிராஜா மண்டபம், கணு மண்டபம், திருக்கண் மண்டபம், அனுக்கிரக மண்டபம், பிரவசன மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், நந்தி மண்டபம், தட்டஞ்சுற்றி மண்டபம், தியாகராஜப்பெருமான் திருவிழாக் காலங்களில் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் பக்தக்காட்சி மண்டபம், மார்கழி திருவாதிரையில் பொன்  சல் ஆடும் ஊஞ்சல் மண்டபம், முசுகுந்த சக்கரவர்த்தி ஸ்ரீதியாகராஜ மூர்த்தியை நிலைபெறச் செய்ய எல்லாத் தலங்களின் மண்ணையும் எடையிட்டு இறுதியில் திருவாரூரை தேர்வு செய்த மண்டபம் மற்றும் திருக்கோவில் பராமரிப்பதற்காக மன்னர்கள் தங்கள் எடைக்கு எடை  பொருள்களை காணிக்கையாக அளித்த துலாபார மண்டபம், புராணங்கள் ஓதப்படும் புராண மண்டபம், பங்குனி உத்திரத் திருநாள் டைபெறும், தியாகேசர் எண்ணெய்க் காப்பு கண்டருளும், திருவாதிரையன்று திருப்பாத தரிசனம் தந்தருளும் இராஜநாராயண மண்டபம்,  பசு மணி அடித்து நீதி கேட்ட ஆராய்ச்சி மண்டபம், மணி மண்டபம்,  கமலாம்பாள் சன்னதிக்கு முன்னர் உள்ள கமலாம்பாள் மண்டபம், சபாபதி மண்டபம், அக்காலத்தில்  பொது மன்றமாகவும், மக்கள் கூடும் இடமாகவும் விளங்கிய இராசேந்திர சோழன் மண்டபம், ஊர் சமையினர் கூடி பல முடிவுகளை எடுத்த பொது மன்றமாக திகழ்ந்த கொங்குவேளாளர் திருமண்டபம், அம்மன் செப்புத்திருமேனிகள் உறையும், தியாகேசரின் வழிபாடு முறைகளையும், புராணக்கதைகளையும் வண்ண ஓவியங்களாக கொண்டுள்ள சந்திரசேகரர் மண்டபம்,  மற்றும்  அம்பலவாணனின் சபாமண்டபம் என்றழைக்கப்படும், எம்பிரான் தோழர் சுந்தரர் திருத்தொண்டர் தொகை பாடிய,  பல சிறப்புகளைக் கொண்ட தேவாசிரிய மண்டபமும் இத்திருக்கோவிலில் உள்ளன.


முசுகுந்தன் ஏழு தியாகராசர்களையும் ஒரு தேரில் வைத்து பூலோகம் கொண்டு வரும் காட்சி

(தேவாசிரிய மண்டபத்தின் கூரையில் வரையப்பட்டுள்ள சில ஓவியங்கள் இப்பதிவில் இடம் பெறுகின்றன. )

ஆயிரங்கால் மண்டபம்- தேவாசிரிய மண்டபம்:
திருவாரூரில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் தேவாசிரிய மண்டபம் எனப்படும். சிவனோடொக்கும் அடியார்கள் உறையும் இடம் தேவாசிரிய மண்டபம். பூங்கோயில் பெருமானும் தேவாசிரிய மண்டப அடியார்களும் ஒன்றே என்பதால் தேவர்களும் அடியார்களை வணங்கிச் செல்வதால் இது தேவாசிரிய மண்டபம் எனப்பட்டது. தேவாசிரிய மண்டபம் சைவத்தைக் காத்த இடம். சுந்தரர் பெருமான் அவதார நோக்கம் நிறைவேறிய இடம். பெரிய புராணத்திற்கு வித்திட்ட இடம். ஆண்டவன் சிறப்பும் அடியார்கள் பெருமையும் விளங்கிய இடம். சிவபெருமான் “தில்லை வாழ் அந்தணர்  என அடியெடுத்துக் கொடுக்க சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் திருத்தொண்டத் தொகை பாடியருளிய இடம். தியாகராஜப் பெருமான் ஆழித்தேர் விழா முடித்து இங்கு எழுந்தருளி மகாபிஷேகம் கொண்டு செங்கோல் செலுத்துவதால் இது இராஜதானி மண்டபம் எனப்படும். இம்மண்டபமே இத்த்ருக்கோயிலில் உள்ள மண்டபங்களில் மிகப்பெரியது ஆகும்.

இரண்டாம் குலோத்துங்கனின் அமைச்சர்களுள் ஒருவராகத் திகழ்ந்த அருண்மொழியார் தம் மன்னன் அனபாயன் சீவக சிந்தாமணி என்ற சமண காப்பியத்தை பெரிதும் பாராட்டியமை கண்டு; அவனை சைவமாகிய உண்மை நெறியில் ஆட்படுத்த எண்ணினார். சிவகதைகளே இம்மைக்கும், மறுமைக்கும் உறுதி தந்து வீடு தருவன என்று வலியுறுத்தினார். அது கேட்ட மன்னன் அச்சிவகதைகள் யாவை? எனக் கேட்டனன்.  அதற்குத் திருவாரூர் இறைவன் தாமே முதலடி எடுத்துத்தந்த, நம்பியாரூரர் பாடிய திருத்தொண்டதொகை பாடியதாகவும், பின்னர் அதனை விரித்துத் திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார் அருள் பெற்று  சிவபாத சேகரன் இராஜராஜன் மூலம் திருமுறைகளை வெளிக்கொணர்ந்த நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதி பாடியதாகவும் எடுத்துக்கூறினார். இதனால் மகிழ்ந்த அனபாயனின் விருப்பப்படி அருண்மொழியாராகிய தெய்வச்சேக்கிழார் திருத்தொண்டர் புராணம் எனும் பெரிய புராணத்தை பாடியருளினார்.

இத்தகைய சிறப்புகள் பெற்ற பெரிய புராணம் என்னும் சைவ சமய காப்பியத்தின் மூல நூலாகிய அமைந்தது தம்பிரான் தோழர் சுந்தரர் பாடிய “திருத்தொண்டதொகை” ஆகும். இது அரும்பி மலர்ந்த இடம் தேவாசிரியமண்டபம் என்றால் அதன் பெருமையை யாரே அளவிட முடியும். எனவே இம்மண்டபத்தின் பெருமையை சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் விறண்மிண்ட நாயனார் புராணத்தில் “திருவாரூர் பெருமை திகழ்கின்ற தேவாசிரியனிடைப் பொழிந்து மருவ நின்ற சிவனடியார்”. என்று போற்றிப்பாடுகின்றார்.  திருஞான சம்பந்தரரும், திருநாவுக்கரசரரும் தேவாசிரிய மண்டபத்தை தொழுத பிறகே பூங்கோயிலுக்கு சென்றனர் என்றும் குறிப்பிடுகின்றார். திருவொற்றியூரிலிருந்து திருவாரூர் திரும்பிய சுந்தரர் பரவை நாச்சியாருக்காக இம்மண்டபத்தில் காத்திருந்தார். தில்லையம்பலத்தான் ஆரூரில் உள்ள தேவாசிரிய மண்டபத்தில் தன் தேவியுடன் அமர்ந்து அழகிய பாவையரின் டனத்தை கண்டான். தியாகேசனை தரிசிக்க வரும் பக்தர்கள் அனைவரும் முதலில் தேவாசிரிய மண்டபத்தை வணங்கியபின் விறன்மிண்ட நாயனார் அனுமதி பெற்ற பின்னரே கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்பது ஐதீகம். சுந்தரர் காலத்தில் திருத்தொண்டர்தொகை மலர்ந்திலிருந்து அதன் தொடர்ச்சியாகப் பிற்காலத்தில் பல நூல்கள் இம்மண்டபத்தில் அரங்கேறியுள்ளன.

கிழக்கு கோபுரம் தாண்டி மூன்றாம் பிரகாரத்தின் வட திசையில்  நூற்றுக்கணக்கான கல் தூண்களைக் கொண்ட இம்மண்டபம் அமைந்துள்ளது. சுமார் 210 அடி நீளமும் 140 அடி அகலமும் கொண்ட ம்மண்டபத்தின் உள்ளே காணப்படும் அநேக சிற்பங்கள் நமது மூதாதையரின் திறன் பற்றிப் பேசும். மண்டப நுழைவாயில் படிக்கட்டின் அருகே, அமர்ந்த நிலையில் காணப்படும் சிங்கம், துதிக்கையை தூக்கிய நிலையில் காட்சி தரும் யானை, ரிஷபம், குதிரை, யாளி போன்ற சிற்பங்கள் நம்மை அசர வைக்கின்றன.
காற்றோட்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஆயிரங்கால் மண்டபத்தில் பல சன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளது. மண்டப மத்தியில் மேடை ஒன்று உயர்ந்து காணப்படுகிறது. இங்கு காணப்படும் 300க்கும் மேற்பட்ட கல் தூண்கள், மண்டபத்தின் பெருமையை கூட்டுகின்றன. மத்திய மேடையில் சித்திரை திருவிழா காலத்திலும், விசேஷ நாட்களிலும் அருள்மிகு தியாகராஜர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பண்டை நாட்களில் தியாகவிநோதனாம் வீதி விடங்கப்பெருமான் இம்மண்டபத்தில் உள்ள சிம்மாசனத்தில் எழுந்தருளி ஆடலும், பாடலும் கண்டு களித்தார்  என பல் கல்வெட்டுகள் பகர்கின்றன. 
இம்மண்டபத்தின் வடப்புறத்தில் மையத்தில் உள்ள உயர்ந்த சபையை 42 தூண்கள் அலங்கரிக்கின்றன. இம்மேடையின் மேற்கூரையை ஒட்டிய விளிம்பில் ஒரு எழில்மிகு சிற்பத்தொகுதி அமைந்துள்ளது. இதன் நடுப்பகுதியில் வீதிவிடங்கப்பெருமான் உமையவளுடனும், உள்ளம் கவர்ந்த முருகனுடனும் வீற்றிருக்கின்றார், இவருக்கு வலப்புறத்தில் நின்ற கோல நீலோத்பலாம்பாள். அடுத்து வலப்புறம் உள்ள பகுதியில் நான்கு கரங்களுடன், ஆழியும், சங்கமும் ஏந்தி திருமால் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேதராக அபயம் அளிக்கின்றார். இவரை அடுத்து விநாயகப்பெருமான் அமர்ந்த கோலத்தில் அருளுகின்றார். தியாகருக்கு இடப்புறம் மாலவன் குடமுழவம் இசைக்க, நான்முகன் வணங்கி நிற்க,  வலது காலை மேலே உயர்த்தி, ஊர்த்துவ தாண்டவ கோலத்தில் விரிசடைப் பெருமான் ஆடுகின்றார். அருகே ஆட்டத்தில் தோற்ற காளிதேவி தன் இரு கரங்களையும் விரித்த நிலையில் நாணத்துடன் நிற்கின்றாள், அடுத்து முருகப்பெருமான் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றார். இச்சிற்ப தொகுதிக்கு இருபுறமும் இரண்டு நடனப்பெண்கள் ஒயிலாக ஆடுகின்றனர்.
இம்மண்டபத்தில் விண்ணுலகம் விடுத்து தியாகேசர் திருவாரூர் வந்த லீலை அற்புத ஓவியங்களாக கூரையில் வரையப்பட்டுள்ளதை அன்பர்கள் கண்டு இன்புறலாம். தஞ்சை மாராத்திய மன்னை சஹாஜி என்பவரின் காலத்தில் “ஓவியர் சிங்காதனம்” என்பவர் தேவாசிரிய மண்டபத்தின் உட்புற விதானத்தில் நெடிய தொகுப்பு ஓவிய காட்சிகளை விளக்கங்களோடு தீட்டியுள்ளார். இதில் முசுகுந்த புராணம் முழுமையாக வரையப்பெற்றுள்ளது. கி.பி. 1700ல் திருவாரூரில் எவ்வாறு வசந்த விழாவும், பங்குனித் திருவிழாவும் நடைபெற்றது என்பதை விளக்கங்களுடன் வரைந்துள்ளார். ஒவ்வொரு ஓவியத்தின் கீழும் அக்காட்சி விளக்கம் தமிழில் எழுதப்பட்டுள்ளது.  சுமார் 300 ஆண்டுகளுக்கு மேலாகியும் இவ்வோவியங்கள் அன்று நடந்தவைகளுக்கு ஒரு சான்று.   முசுகுந்த புராண காட்சியில்  முகுந்தனும் வாசவனும் வழிபட்ட மூல மூர்த்தி மற்ற ஆறு விடங்கர்களுடன்  திருவாருக்கு தேரில் எழுந்தருளும் காட்சி மிகவும் சிறப்பான ஒன்றாகும்.

மனுநீதிச் சோழனின் வரலாற்றோடு இணைந்த பிற்கால புராணக் கதைகள் பலவும் வண்ண ஓவியமாக தேவாசிரிய மண்டபத்தின் வடபுறச் சுவரில் தீட்டப்பட்டுள்ளன. ஆனால் இன்று அவை இயற்கையின் சீற்றத்தால் சிதைந்து கிடக்கின்றன.  திருவாரூர் செல்லும் போது தேவாசிய மண்டபத்தில் அவசியம் இவ்வோவியங்களை கண்டு களியுங்கள்.



முசுகுந்தனும் இந்திரனும் வலனுடன் போரிடும் காட்சி
(இவ்வோவியங்களை வரைந்தவர் ஓவியர் சிங்காதனம்)

ராஜ நாராயணன் திருமண்டபம் :
ம்மண்டபம் கோயிலின் இரண்டாம் பிரகார கொடி மரத்திற்கும் அயன் கோபுரம் என்ற ஆரியன் கோபுரத்திற்கும் இடையில் கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 155 அடி; அகலம் 57 அடி. அக்காலத்தில் குடிமக்கள் கூடும் பொதுமண்டபமாக அது பயன்படுத்தப்பட்டுள்ளது. கலைச் சிறப்புகள் கொண்ட பல கல் தூண்கள் இதில் உள்ளன. பெரும்பாலான ஆலய விழாக்கள் அக்காலத்தில் இம்மண்டபத்தில்  நடைபெற்றன. இன்றும் பல திருவிழாக்கள் இந்த மண்டபத்தில்தான் நடைபெறுகின்றன. பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக அருள்மிகு தியாகேசருக்கு எண்ணெய் காப்பு உற்சவம் நடைபெறுவது இங்குதான். திருவாதிரை திருநாளன்று சிறப்பு அலங்காரங்களுடன் தியாகேசர் அபிஷேகம் கண்டருளி  பக்தர்களுக்கு  திருப்பாத தரிசனம் தருவதும் இம்மண்டபத்தில்தான். ம்மண்டபத்தின் வலப்பக்க முகப்பில் விநாயகரும் இடப்பக்கம் துர்க்கையும், தென் புறம் ஜ்வஹரேஸ்வரரும் வீற்று அருளாட்சி தருகிறனர். இம்மண்டபத்தைப் பற்றிய குறிப்பு பல கல்வெட்டுகளில் உள்ளன.



ஏழு தியாகர்களையும் திருவாரூரில் வைத்து முசுகுந்தர் வழிபடும் காட்சி
பாபதி மண்டபம் :
இத்திருக்கோவிலின் பெரிய மண்டபங்களில் இம்மண்டபம் ஒன்றாகும். இது திருக்கோயிலின் மேலக் கோபுரம் அருகே தென்புறம் அமைந்துள்ளது. இதை வன்மீகாதிபதி சபை என்றும் அழைக்கின்றனர். இம்மண்டபத்தின் மத்தியில் காணப்படும் மேடையில்தான் சில குறிப்பிட்ட திருவிழாக்களின்போது இறைவன் எழுந்தருளுகிறார். இங்கே கல் தூணில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ள பதஞ்சலி, வியாக்கிரபாத முனிவர் சிலைகள் கண்ணைக் கவர்வன.  
கமலாம்பாள் மண்டபம்:
இம்மண்டபம் அமைதி சூழும் மண்டபமாக இது காட்சியளிக்கிறது. திருக்கோயிலின் மூன்றாம் சுற்றின் வடமேற்கு மூலையில் இது அமைந்துள்ளது. இங்கு  காமக்கலையாள் என சிறப்பிக்கப்படும் அருள்மிகு கமலாம்பாள் குடிகொண்டு எழிற்காட்சி தந்து பக்தர்களை மகிழ்வித்து வருகிறாள். முன் மண்டபம் அழகுமிகு நுணுக்கமான பல மனங்கவர் சிற்பங்களை உடைய தூண்களைக் கொண்டுள்ளது. இம்மண்டபத்தின் தூண்களின் மேல் உள்ள உத்திரம் முழுவதையும் மிகச்சிறிய கற்சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. இவற்றில் விநாயகர், கஜலட்சுமி, ரிஷப வாகனர், மயில் மேல் அமர்ந்த முருகர், ஊர்த்துவத்தாண்டவர், காளி, கஜ சம்ஹார மூர்த்தி, கிடந்த கோல திருமாலின் மார்பில் தியாகராஜர், உமையம்மை, பூதங்கள், நாட்டியப் பெண்கள், மத்தளம் வாசிப்போர் என்று பல சிற்பங்களை கண்டு களிக்கலாம். அக்காலத்தில் ஆண்ட மன்னர்களின் கலை ரசனையை வெளிப்படுத்துவதாகவும் இவை உள்ளன. மண்டபத்தின் விதானத்தில் அமைக்கப்பட்டுள்ள 12 ராசிகளுடன் கூடிய சிற்பங்கள், மேலிருந்து கீழே தொங்குவதாக காணப்படும் தாமரை மொட்டுக்கொத்து சிற்பம், கிளி போன்ற அமைப்புகள் பிரமிக்கச் செய்யும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளன. இதே மண்டபத்தின் தென்பகுதியில் உச்சிஷ்ட கணதி அருட் காட்சியளிக்கிறார். சாக் நெறி அடிப்படைத் தோற்றத்துடன், காணப்படும் இவர் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அளிப்பார் என்பது வழிவழியாக கூறப்படுகிறது. குறிப்பாக பெண்களின் கர்ப்ப சம்பந்த கோளாறுகளை போக்கி அருள்வாராம். திருவாரூர் ஆலயத்தின் மண்டபங்களைப் பற்றி இதுவரை கண்டோம், இனி இறைவனே தன் திருப்பாதம் தேய நடந்த திருவீதிகளின் சிறப்பைப் பற்றிக் காணலாம் அன்பர்களே.

திருவாரூர் திருவீதிச் சிறப்பு: பூலோக கயிலாயமாகிய திருவாரூரின் திருவீதிகளில் தெய்வங்கள், தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், ரிஷிகள், சிவகணங்கள், அடியார்கள், அரசர்கள், சங்கீத மும்மணிகள் ந்துள்ளனர்.  தியாகேசப்பெருமான் இரு முறை திருமாலும் பிரம்மனும் காண முடியாத தனது பாதபங்கயம் தோய பரவை நாச்சியாரை சமாதானம் செய்வதற்காக தூதுவராக சென்ற வீதி அடிமுடி தேடிய வீதி என்றறியப்படுகின்றது.  மேலும் புகழ் ஆபரணத்திருவீதி, செந்தாமரை நாறிய திருவீதி, சித்துக்கள் நிறைந்த திருவீதி, பொன் பரப்பிய திருவீதி, ஆழித்தேரோடும் திருவீதி என்று பல திருவீதிகள் சிறப்புப் பெற்றவை.
வீதிகள் தோறும் வெண்கொடியோடு விதானங்கள்
சோதிகள் விட்டுச் சுடர் மாமணிகள் ஒளித்தோன்றச்
சாதிகளாய் பவள முத்துத் தாமங்கள்
ஆதி ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – என்று திருநாவுக்கரசர் தேரூரும் திருவாரூர் நெடுவீதி பற்றியும் அன்று நிகழ்ந்த பங்குனி உத்திரத்திருவிழா, மார்கழி ஆதிரைத்திருவிழா ஆகியவற்றில் தான் கண்ட காட்சிகளை அழகாகப் பாடியுள்ளார்.
இவ்வீதியில்தான் மனு நீதி சோழன் தன் மகனை தேர்க்காலில் இடறினான். ஆரூரா ஆரூரா என்கிறார்கள் அமரர்கள் தம் பெருமானே எங்குற்றாயே? என்று இவ்வீதிகளில் அப்பர் பெருமான் ஆரூரனை தேடித்திரிந்த  திருவீதியல்லவா ஆரூர் திருவீதிகள். இவ்வளவு சிறப்பு மிக்க வீதிகளில்தான் இன்று வசந்த உற்சவத்தின் போது  தியாகராஜர் ஆழித்தேரில் பவனி வந்து அருளுகின்றார். அப்பர் பெருமான் அவர் கண்ட ஆழித்தேரோட்டத்தை நாடிக்காணமாட்டாத தழலாய நம்பனை, திருவாரூர் அம்மானை, ஆரூர் வீதியில் பாடுவார், பணிவார், பல்லாண்டு இசை கூறும் பக்தர்கள் ஆகியோர் சித்தத்துள் புகுந்து தேடிக் கண்டு கொண்டேன் என்று பாடுகின்றார்.
அப்பர் பெருமான் “தேரூரும் நெடுவீதி” என்றும் சேக்கிழார் பெருமான் இதை “தேரோடும் நெடுவீதி திருவாரூர்” என்றும், “மங்குல் தோய் மாடவீதி” என்றும் “முரசொடு சங்கம் ஆர்ப்ப முழங்கொலி ஒரு பால் வெற்றி அரசிளங்குமரன் போலும் அணிமணி மாடவீதி” என்று பலவாறு போற்றிப் பாடுகின்றார்.
திருமகள் தவம்செய் செல்வத் திருவாரூர் பணிவன் என்ன
ஒருவன்ஏழ் அடிந்து மீண்டிடின் ஒப்பில்காசி
விரிபுனல் கங்கையாடி மீண்டவன் ஆவன் என்றால்
இருடிகாள் ஆரூர்மேன்மை பிரமற்கும் இயம்ப வற்றோ?
என்று திருவாரூர் பாடல் ஒன்றில் இத்தலத்தின் வீதிகளின் சிறப்பு கூறப்பட்டுள்ளது.  

திருவாரூர் ஆலயத்தில் எண்ணற்ற  சன்னதிகள் உள்ளன அவற்றுள் சில சன்னதிகளின் சிறப்பைப் பார்த்தோம். வாருங்கள் இனி இவ்வாலயத்தின் அம்பாள் சன்னதிகளை தரிசிக்கலாம்.

No comments: