Sunday, March 22, 2020

திருப்பாத தரிசனம் - 17

கமலாம்பாள்




ஸ்ரீபுரம், கமலாபுரி, கமலாபுரம், பராசக்திபுரம், பரையூர், கமலாலயம் என்றெல்லாம் திருவாரூரை அழைக்கக் காரணமாக உள்ள கமலாம்பாள் பெரிய கோவிலின் மூன்றாம் திருச்சுற்றில் வடமேற்கு மூலையில் வடகீழ்த்திசையை நோக்கிய வண்ணம் தனிக் கோவில் கொண்டுள்ளாள்.  உலகெலாம் காக்கும் அருள்நாயகி இங்குத் தவக்கோலம் பூண்டு அருள்பாலிக்கின்றாள்.  கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், பிரகாரம், நந்தி, பலி பீடம், கொடிமரம், அனுக்கிரக மண்டபம் மற்றும் தனித்த திருமதில்களுடன் இக்கோயில் அமைந்துள்ளது. கமலாம்பாளுக்கு இவ்வாறு அமைந்துள்ளது ஒரு தனிச் சிறப்பு.

த்ரிநேத்ராம் துவிபுஜாம் ஸ்யாமாம் கரண்டமகுடான்
யோகாசன சம்யுக்தாம் ஊறு ஹஸ்த சமன்விதாம்
நீலோத்பலதராம் தேவீம் பாதுகா குடிகாசனாம்
ஏவம் த்யாயேத் பராசக்தீம் அர்ச்யித்வா விசேஷத:

பொருள்: முக்கண்கள், இரு தோள்கள், ஸ்யாமள நிறம், கரண்ட மகுடத்தில் யோகாசனத்தில் ஒரு திருகரத்தை தொடையிலே வைத்து, மறு திருக்கரத்தில் நீலோத்பல மலரைத் தாங்கிய தேவி, திருப்பாதங்களை குடிகாசனத்தில் அமர்ந்திருக்கின்றாள். அப்பராசக்தியை அர்சிக்கின்றேன்.

மகா மண்டபத்தில் கொடி மரத்திற்கு தென் புறம் நீலவேணி சமேதராய் உச்சிஷ்ட கணபதி அன்னைக்கு எதிராக அருள் பாலிக்கின்றார். ஆதிகாலத்தில் அம்பாள் மிகவும் உக்ரமாக இருந்த்தாகவும், அம்பாளின் உக்ரத்தைக் குறைக்க இவ்வாறு அவரது மகனின் சன்னதியை அம்மனுக்கு எதிரே அமைத்தனர் என்பர்.  கோபுர வாயிலின் மேற்கூரையில் பத்து முத்திரைகளும் பத்து துவாரங்களாக அமைந்திருக்கின்றன. அர்த்தமண்டபத்தில் அம்பிகையின் வாமபாகத்தில் மந்திரிணியாகிய இராஜ மாதங்கி, இம்மண்டபத்தின் நிலைவாசல் வெளிப்புறம் சாமரம் வீசும் அலைமகள் மற்றும் கலைமகள் இருவரும் துவாரபாலகிகளாய் யாழும், வீணையும் தாங்கி சுதை வடிவில் விளங்குகின்றனர். கருவறையின் அணுக்க வாயிலின் இருபுறமும் சங்நிதியும் பத்ம நிதியும் அமைத்துள்ளனர். 



திருசுற்றில் தென்மேற்கு மூலையில் அட்சர பீடமும், திருவாசியும் உள்ளன. திருவாசியில் மாத்ருகா புஷ்ப மாலை எனப்படும் ஐம்பத்தொரு அட்சரங்களும் எழுதப்பட்டுள்ளன.  அட்சர பீடத்தின் உட்பொருள், மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியிலிருந்து முதலில் அவ்யக்தமான விளங்காத சப்தம் உண்டாகிறது. சப்த ப்ரஹ்மம் என்ற குண்டலினியிலிருந்து சக்தியும், சக்தியிலிருந்து த்வனியும், த்வனியிலிருந்து நாதமும், நாதத்திலிருந்து நிரோதிகையும், நிரோதிகையிலிருந்து அர்த்தேந்தும், அர்த்தேந்திலிருந்து பரையும், பரையிலிருந்து மத்யமையும், மத்யமையிலிருந்து வைகரீயும் பிறக்கின்றன. இந்த வைகரீதான் அகரம் தொடங்கி க்ஷகரம் ஈறான அட்சரங்களின் உருவங்களாய் மலர்கின்றது.

பிந்து மூலாதாரத்தில் இச்சா சக்தி வடிவமாய் பரா என்றும், சுவாதிட்டானத்தில் ஞான சக்தி வடிவில் பச்யந்தி என்றும், இதயத்தில் கிரியா சக்தியாக விளங்கி மத்யமை என்றும், முகத்தில் வைகரீ என்றும் பெயர் பெறுகின்றது. இதில் முதல் மூன்றும் காதில் படாத த்வனிகள், நான்காவதான வைகரீதான் அகாரம் முதல் க்ஷகாரம் ஈறான காதில் படும் வர்ணங்கள். எனவே யாவற்றுக்கும் மூல காரணமாயிருக்கும் குண்டலினியே சப்தபிரஹ்மம் என்ற பெயராலும் கமலாம்பிகை என்ற பெயராலும் அழைக்கப்படுகிறாள். சிதம்பரம் சிதாகாசம் எனில் திருவாரூர் அக்ஷராகாசம். கமலாம்பிகை ஸ்ரீசக்ர வடிவமாக விளங்குகிறாள்.

கமலாம்பிகையே மாத்ருகா ஸ்வரூபிணி என்பதால் துர்வாசர் நிருதி திக்கில் அக்ஷர பீடத்தை நிறுவியுள்ளார். இப்பீடத்தின் பிரபையில் முன்னும் பின்னும் 51 அக்ஷரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. பீடத்தின் மத்தியில் புவனேஸ்வரி பீஜம் பொறிக்கப்பட்டுள்ளது. ஐயனின் சன்னதியில் அகத்தியரின் சித்ரபீடம். அம்மனின் சன்னதியில் அட்சர பீடம். “எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பாள்” என்ற அருள்நந்தி சிவத்தின் கூறியது கமலாம்பாளுக்கு சாலப் பொருந்துகின்றது.

கமலாம்பாளின் ஆலயத்தில் சங்கரநாராயணி, இராஜராஜேஸ்வரி, டுக்கம் தீர்த்த விநாயகர், காசியபலிங்கம், வள்ளி தெய்வானையுடன் கருணை புரியும் முருகவேள், சண்டிகேஸ்வரி, வாக்தேவி, வீணையின்றி விளங்கும் ஆதி சரசுவதி ஆகியோர் பிரகாரத்தில் அருள் பாலிக்கின்றனர். மேலும், ஜமதக்னி, கௌதமர், வசிஷ்டர், விசுவாமித்திரர் பூசித்த சிவலிங்ங்கள், விஷ்ணு துர்க்கை ஆகியோரும் அருள் பாலிக்கின்றனர்.

கிழக்குச்சுற்றில்  சதாசிவத்தின் சுத்த சக்தியாகிய  உற்சவர் மனோன்மணி தென்முகமாய் தனி சன்னதியில் நின்ற கோலத்தில் தரிசனம் தருகின்றாள். ’வாக்கும் மனமும் கடந்த மனோன்மணி’ சாதகனின் புருவ நடுவில் விளங்கும் பெருமையுடையவள். மனோன்மணி விளங்கும் பீடத்தை இரண்டாம் சன்னதி என்று அழைப்பது மரபு. சாதகன் சிரசில் விளங்கும் பிரம்மரந்திரம் – சகஸ்ர கமலம் முதல் சன்னதி; புருவ மத்தி இரண்டாம் சன்னதி.   வெளிப்பிரகாரத்தில் அற்புதமான ஓவியங்களைக் கண்டு களிக்கலாம். அம்மனின் கோபுரத்தின் உச்சியில் ஆகாச பைரவர் காவல் காத்து வருகின்றார். இவர் சித்தி பைரவர் ஆவார். 
 
கமலாம்பாள் ஆலயம், அம்பாள் பெண்ணின் ஐந்து நிலைகளாக வணங்கப்படும் ஐந்து அக்ஷித்தலங்களுள்  ஒன்று. காசியில் உறையும் விசாலாக்ஷி குழந்தையாகவும், காஞ்சியில் வீற்றிருக்கும் காமாக்ஷி  சிறுமியாகவும், நாகையில் விளங்கும் நீலாயதாக்ஷி பூப்படைந்த கன்னியாகவும் (யௌவனப்பருவம்), திருவாரூரில் திகழும் (கமலாம்பிகை) கமலாக்ஷி இளம் பெண்ணாகவும், மதுரையில் அரசாளும் மீனாக்ஷி  திருமணமான சுமங்கலிப்   பெண்ணாகவும் வணங்கப்படுகிறார்கள்.

சக்தி பீடங்களில் அம்பாள் விசாலாக்ஷியாக அம்மன் அருள் பாலிக்கும் காசி மணி கர்ணிகா பீடம் ஆகும், காமாக்ஷியாக அருள் பாலிக்கின்ற காஞ்சி.  காமகோடி பீடம் ஆகும், மீனாக்ஷியாக அருள் பாலிக்கும்  மதுரை,  இராஜ மாதங்கி சியாமளா பீடம் ஆகும். அன்னை கமலாம்பாளாக (கமலாக்ஷி) அருள் பாலிக்கும் திருவாரூர் கமலை பீடம் ஆகும். மேலும் 64 பராசக்தி பீடங்களுள் முதன்மையானதாகவும் ஆதார பீடமாகவும் போற்றப்படுகின்றது. ஏனென்றால் திருவாரூர் மூலாதாரத் தலம் அல்லவா?

நெறிகளில்  காஞ்சி வேக நெறியையும், தில்லை போக நெறியையும் திருவாரூர் யோக நெறியையும் உணர்த்துகின்றன. கமலாம்பாள் யோக நெறிகளில் குண்டலினி சக்தியை அடையும் வழிபாட்டு நெறியைக் காட்டுகின்றாள்.  அஜபாகல்பம் என்ற நூல் இந்நெறியை விரிவாக விளக்குகிறது.

விளங்கு தென்னாரூர் வியன்பதி தழைக்க
உளங்கனிவாக யோகாசனத்தில்
அண்டருந் துதிக்க அரசிருந்தருள் பூ
மண்டலம் துதிக்க வளர் பராசக்தி – கமலாம்பாள் காலம் கடந்த மூர்த்தியாய் ஸ்ரீசக்ரேச்வரி, லலிதா திரிபுர சுந்தரி – ராஜ யோக சுகி – திரிபுரேசி – சாகம்பரி , ஞான சக்தியாக அருள் பாலிக்கின்றாள். கலைமகள், அலைமகள், மலைமகள் ஆகிய முப்பெருந்தேவியரின் சங்கமம் கமலாம்பாள். தன் சிரசில் பரமேஸ்வரனைப் போல கங்கையையும், சந்திரனையும் பிறையாக சிரசில் கரண்ட மகுடத்தில் சூடிக்கொண்டு, அஞ்சன விழிகளை மூடிக்கொண்டு, சிவானந்த தென்றலை சுவாசித்து, மோனம் ததும்பும் ஞானத்தின் உச்சியில் சிவராஜ யோகத்தில் அருள் பாலிக்கின்றாள். துறவறம் மேற்கொண்டோர்களுக்காக அன்னை கமலாம்பிகையாக யோக கோலத்தில் கால் மேல் காலிட்டு குட்டிகாசத்தில் ஆத்ம தத்துவம், வித்யா தத்துவம், சிவ தத்துவம் ஆகிய மூன்றடுக்கு பீடத்தில் மகாராணியைப் போல் அருட்காட்சி தருகின்றாள். வல திருக்கரத்தில் கமலம் தாங்கி இடது  திருக்கரத்தை தொடையில் வைத்த அருட்கோலத்தில் எழுந்தருளியுள்ளாள் ஆருர் கமலாம்பிகை. அன்னை  அசபை வித்தைக்கு அரணாக அமைந்தவள். கமலாம்பிகை வன்மீக நாதரைப் போலவே சுயம்பு. இவ்வாறு இரு அம்மன் சன்னதிகளிலும் உமையவளின் திருவுருவங்கள் இரு வேறுபட்ட நிலைகளில் காணப்படுவது ஒரு சிறப்பு.




பராசக்தி மகாத்மியம் என்னும் நூலில் உள்ள பாடல் ஒன்று கமலாம்பிகையின் தவத்திற்கான காரணத்தை இயம்புகின்றது.

அறந்தழைய கலைத் தெரிவை வனப்பெய்தச்
      சசியெனும் பேரரிவை வாழ
நிறங்கெழுபூ மடந்தை யொடுநில மங்கை
மங்கலத்தில் நிறைந்து மல்கப்
பிறங்குமுயிர் தொகை யனைத்தும்
      களிகூரத் தவம்புரியும் பீடுசான்ற
சிறந்த கமலாலய நாயகி செம்பொற்
      சேவடிகள் சென்னி சேர்ப்போம்.

பொருள்: தர்மம் தழைத்தோங்கவும், கலைமகள், இந்திராணி, மகா லட்சுமி, பூதேவி இவர்கள் சகல மங்களங்களுடன் வாழவும், சகல உயிர்களும் இன்புறவும், பீடும் பெருமையும் நிறைந்த கமலாலயத் திருத்தலத்து நாயகி கமலாம்பிகை தவம் இயற்றுகிறாள்.

சுத்த சித்தி நிலை என்பது யோக நிலையிலே தோன்றுவதே ஆகும், கமலாம்பாள் அதற்கு அருள் புரிகின்றாள். முக்தி அடைய அற நிலையில் வாழ்ந்திட வேண்டும், அற நிலையில் வாழ்ந்திட பொருள் வேண்டும், அப்பொருளை உயிர்கள் அனைத்திற்கும் தந்துதவ வேண்டும் இப்படி மனத்தூய்மையோடு அறம் புரிந்தால் இன்பம் பெறலாம். இப்பேரின்ப வாழ்க்கையோடு அன்னையை தியானம் செய்தால் அவள் மாயையை அகற்றி மனம் தூய்மை பெற அருளுவாள்.

காமகலா ரூபிணி ஸ்ரீகமலாம்பாள். விளையாட்டாக உலகைப் படைத்து உயிர்களை அருள்வயப்படுத்த வேண்டுமென்ற எண்ணத்தில் பிரம்மமே சிவம் – சக்தி என்ற கூறுகளாக பிரிந்தது. இவ்வாறு பிரிந்த சிவமும் சக்தியும் மீண்டும் இணைந்தன. இந்த சிவமும் சக்தியும் இணைந்த அபேத பாவமே காமகலை என்பதாகும்.  காமம் என்பது சிவம், கலா என்பது சக்தி.   சிவம் பிரகாச பிந்து, சக்தி விமர்ச பிந்து, இந்த விமர்ச பிந்துதான் சித்சக்தி. சித்சக்தியின் வெளிப்பாடே மாயை. மாயையிலிருந்து பரிணமிப்பதே காட்சிக்குத் தட்டுப்படுகின்ற உலக படைப்பு. அம்மையே தன் அருள் திறத்தால் ஆன்மாக்களுக்கு அப்பனை உணர்த்துகின்றாள். இவளுக்கு அருட்சக்தி என்ற திருநாமமும் உண்டு. இக்காமகலைதான் சகல பிரபஞ்ச சிருஷ்டிக்கும் காரணமாக உள்ளது. இத்தகைய காமகலை அதிடித்து விளங்கும் பீடமே கமலாலய சக்தி பீடம் ஆகும்.

பிரணவ சாதனையான குண்டலினி உணர்வில் சாதகன் சித்சக்தியால்தான்  சிவத்தை உணர்கிறான். இந்த சித்சக்தியே  ஆதார நிலையான கமலாம்பிகை. அம்பாளின் உற்சவத்திருமேனி மனோன்மணி. வாக்கும் மனமும் கடந்த மனோன்மணி என்பார் திருமூலர்.

சிவம்(காமா), சக்தி(கலா) வெவ்வேறாக பிரிந்திருப்பினும் தத்துவத்தால் இரண்டும் ஒன்றே. காமேஸ்வரர், காமேச்வரி இவர்களின் சாமரஸ்ய வடிவமாக இருப்பதாலும், காமா என்ற பெயருடன் கலா ரூபமாக திழ்வதாலும்,  அம்பிகைக்கு காமகலா என்று திருநாமம். காமம் என்பது விருப்பம் என்று பொருள்படும். தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்ற புருஷார்த்தங்களில் காமம் என்பது இல்லறத்தில் நல்வழியில் பொருளீட்டலும், தர்மம் செய்யவும் ஆசைப்படுதல். துறவறத்தில் முக்தியை விரும்புதல். ஆகவே காமத்திற்குப் பிறகு மோட்சம். இதனால் காமகோடி என்ற பெயர் அம்பாளுக்கு ஏற்பட்டது. காமம் அனைத்தும் காணாமற்போன கோடி இடமான அத்வைதமாக அம்பாள் விளங்குகிறாள்.

காமகலையாகும் ஸ்ரீகமலாம்பிகையே மகாசோடசி, ஸ்ரீவித்யை, பஞ்சதசாக்ஷரி, பாலை, பகளா, மாதங்கீ, ஸ்வயம்வர கல்யாணி, புவனேஸ்வரி, சண்டிகை, மகாவாராகி, இராஜ மாதங்கி, திரஸ்கரணி, சுகச்யாமளை, லகுச்யாமளை, அஸ்வாரூடா, பிரத்யங்கிரா, தூமவதி, சாவித்ரி, காயத்ரி, சரஸ்வதி, பிரம்மானந்த சித்கலை.


கமலாம்பாள் சன்னதி


ஒரு காலத்தில் மாமுனிவர் துர்வாசரால் பூஜிக்கப்பட்ட கமலாம்பிகை தன்னை முழு மனதோடு வழிபடும் பக்தர்களுக்கு அருள்பவற்றை இப்பாடல் உரைக்கிறது.

ல்வியு ஞானமும் பல்வகை போகமுங் கட்டழகுஞ்
செல்வமு மின்பமு நன்மனையாளுந் தைறலரசு
நல்லன மைந்தருஞ் சித்தியு மத்தியு நாடியுனைப்
பல்வகைப் பக்தி புரிவோர்க் கருளும் பராசக்தியே.
அறம், பொருள், இன்பத்தை நீலோத்பலாம்பாளும், தவ நிலை மேற்கொண்டு முக்தியான வீடுப்பேறு அருளுபவள் கமலாம்பாள்.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான  முத்துசுவாமி  தீக்ஷிதர்  ஸ்ரீவித்தை எனப்படும் ஸ்ரீ சக்கரத்தை ஆதாரமாகக் கொண்டு கமலாம்பிகை நவாவரண கிருதிகள்  பாடியுள்ளார். அவை தொகுக்கப்பட்டுத் தினமும் அம்பாளின் முன் இசைக்கப்படுகின்றன.

கமலாம்பாள் ஆடிப்பூர தேரோட்டம்

ஆடிப்பூரத்தின் போது அம்பாளுக்கு 10 நாட்கள் பிரம்மோற்சவம் கொடியேற்றம், தினமும் வாகன சேவை, தேரோட்டம் , தீர்த்தம் வழங்குதல் என்று  சிறப்பாக நடைபெறுகின்றது.  ஆடிப்பூரத்தன்று தீர்த்தம் வழங்குகின்றாள் அன்னை. அன்றிரவு அம்மனுக்கு வெள்ளை சார்த்தி மகிழ்கின்றனர். ஐப்பசி பூரத்தன்று சிறப்பு மங்கல வழிபாடுகள் நடைபெறுகின்றது.  தீபாவளியன்று மகாலட்சுமிக்கு சொர்ணாபிஷேகம். பௌர்ணமியன்று கமலாம்பிகைக்கு வழிபாடும், திருவிளக்கு பூசையும் சிறப்பாக நடைபெறுகின்றது.

அம்மன் சன்னதிக்கு அருகே வலப்புறம் கமலமுனி சித்தர் பீடம் உள்ளது. கமலாம்பிகை திருக்கோவிலின் உட்பொருள் உணர்ந்து  தரிசனம் செய்பவர்களுக்கு பாரத தேசத்தில் விளங்கும் 51  சக்திபீடங்களையும் தரிசித்த நிறைவு கிட்டும். எனவே நாடெங்கிலும் இருந்து ஸ்ரீவித்யா உபாசகர்கள் குருவின்  வழிகாட்டுதலின் பேரில் திருவாரூரை தரிசிக்க வருகின்றனர்.

ஸ்ரீபுரம் என்பது திருவாரூர். ஸ்ரீநகரம் என்றும் அழைப்பர். கமலாம்பிகையே காமகலை என்னும் சித்சக்தி. இவளே லலிதை மற்றும் மகா திரிபுரசுந்தரி. இவள் நிலை பெற்று விளங்கும் சக்கரம் ஸ்ரீசக்கரம் ஆகும். இவளின் ரதம் ஸ்ரீசக்ர ராஜ ரதம் ஆகும்.

அல்லியங் கோதை நல்வன் மீகநாதருக்கார்ந்த கொண்டி
மெல்லியல் பாகம் பிரியாள் நன்பா லொத்த மென்மொழியாள்
நல்ல தியாக வினோதருக்காகி நலமருளிப்
பல்லியல் நாமம் பெறுவாள் கமலை பராசக்தியே
அசபை மந்திரத்தின் உந்துதலால் குண்டலினியை மூலாதாரத்திலிருந்து எழுப்பி சிரசுக்கு மேல் விளங்கும் ஒளி மண்டபத்தில் சீவனின் நினைவை கலக்கச் செய்தலே சிவயோகமாகிய பிரணவ வித்தை.   இந்த யோக வித்தைகளின் அடித்தளமாகிய குலம் மூலாதாரத்திற்கு கீழ் வெளிர் சிவப்பானதால் கமலத்தின் பெயர் கொண்டு கமலாம்பிகையாகவும், சாதனையின் முடிவில் சிரசின் மேல் அகுலமாக வெளிர்நீல ஒளியுணர்வில் சாதகன் சிவத்தை உணர்வதால் நீலோத்பல மலரைப் பெயராகக் கொண்டு ஒரு அம்பிகையும் எழுந்தருளியுள்ளனர். நீலோத்பலாம்பாளே யோக முடிவு. 

சாதனையின் சந்திரதீபம் உணர்த்த வன்மீகருக்கு அருகில் அமர்ந்தவள் சோமகுலாம்பிகை. பரியங்க யோகம் உணர்த்தியதால் ஆரூர் அண்ணலின் அருகே அமர்ந்தவள் கொண்டி என பெயரேற்றாள் என்று விளக்கம் தருவர் பெரியோர். அன்னையர் இருவரையும் தரிசித்தப்பின் வாருங்கள் அன்பர்களே திருவாரூர் ஆலயத்தின் தீர்த்தங்களின் சிறப்புகளைப்பற்றிக் காணலாம்.

                                                           திருப்பாத தரிசனம் தொடரும் . . . . 

5 comments:

கோமதி அரசு said...

அன்னையர் இருவர் பற்றியும் அழகான விளக்கத்தை படித்து அனையை தொழுது உலக மக்கள் அனைவரும் நலமாக இருக்கவேண்டும் என்ற வேண்டுதலை வைத்துவிட்டேன்.
இக்காட்டான இந்த சூழ்நிலையை நலவிதமாக கடக்க மனதைரியத்தை தா அம்மா.

தொடர்கிறேன்.

கோமதி அரசு said...

//பராசக்தி மகாத்மியம் என்னும் நூலில் உள்ள பாடல் ஒன்று கமலாம்பிகையின் தவத்திற்கான காரணத்தை இயம்புகின்றது.//

சகல உயிர்களும் இன்புற தவம் இயற்றுகிறாள் அன்னை.
அன்னை நம்மை காப்பாள்.
பாடலை பாடி மகிழ்ந்தேன்.

S.Muruganandam said...

//அனைவரும் நலமாக இருக்கவேண்டும் என்ற வேண்டுதலை வைத்துவிட்டேன்.
இக்காட்டான இந்த சூழ்நிலையை நலவிதமாக கடக்க மனதைரியத்தை தா அம்மா.//


அம்மையப்பரிடம் சரண்டைவதைத் தவிர நாம் வேறென்ன செய்ய முடியும். அனைவருக்கும் பிரார்த்தனை செய்ததற்கு மிக்க நன்றி அம்மா.

Shanti elangovan said...

கமலை பராசக்தி மாலை வாசிக்க ஆவல்.உங்களிடம் இருந்தால் பகிர இயலுமா

S.Muruganandam said...

கமலை பராசக்தி மாலை
காப்பு
திருவார் கமலைத் திகழ்யோக பீடஞ் செழித்து வளர்
உருவர் யருவ முபயமுமாகும் உயர் பரை தான்
மருவார்வத்தால் நற் பராசக்தி மாலை வழுத்தி உய்ய
அருள் நாளும் நல்குவன் வாதாபிவாரண ஐங்கரனே.

திருவும் வெண்தாமரைச் செல்வியுமாகிச் சிவனிடத்தில்
மருவும் உமையாய் மகேஸ்வரியாகி மனோன்மணியாய்த்
தருபரையாய் உன்சரணே சரனெண்றும்சாரும் அன்பர்
பருகும் சிவானந்தமே தென்கமலைப் பராசக்தியே - 1

உன்னை தியானிக்க மெய்ஞானமேனியும் உண்மை அன்பால்
பன்னித் துதிக்க திருநாமமும் பல பக்தி செய்ய
மன்னித் திகழ் கோயிலும் கொண்டு யெமையாள் மனோன்மணியே!
பன்னித்திள நகைத்தாயே! கமலைப் பராசக்தியே - 2

புத்தகக் கையும் பளிங்கொளிர் மாலை புனை கரமும்
அந்தமிரண்டில் வரதாபயமும் அணிபலவும்
மொய்த்த சரத் சந்திர மேனியுமாய் உன்னை உன்னுமுயர்
பக்தருக்கு வித்தையை நல்கும் கமலைப் பராசக்தியே – 3

திருப்பாற் கடல் நடுமாமணித் தீவிற் செனித்த கற்பகத்
தருப்பால் நெருக்கிய வேலியின் நாப்பண்தழை கதம்ப
விருப்பாரணியச் சிந்தாமணி மாளிகை மேவும் சிவப்
பருத்தாள் மணி மஞ்சம் வாழும் கமலைப் பராசக்தியே -4


செக்கச்சிவந்த திருமேனியும் இடச் செம்மலர்கை
ஒக்கற் செறிய வலக்கர மலரொளிரத்தி
தக்க யோகாசன மாயோக பீடத்தில் சார்ந்து அமலன்
பக்கத் தமர்ந்தவளே! கமலைப் பராசக்தியே - 5

அரனார்க்கு இலங்கணியேது? உருவேது? திசையதுமேது?
உரமாந் தொழிலைந்துமேது? இன்பமேதரி ஒண்படையுந்
தரமாம் மனைவியும் ஏது? இல்லை நீ எனில் தற்பரையே
பரனாரை யாரறிவார் தென்கமலைப் பராசக்தியே - 6

தூண்டிய சோதியணையாய் நின்பாதம் தொழுபவர்க்கு
வேண்டிய யாவையும் வேண்டுமளவில் மிகவருள்வோய்
ஈண்டிய வல்வினை யெல்லா மகற்றும் இறைவி செல்வப்
பாண்டியன் மாமகளாகும் கமலைப் பராசக்தியே - 7

உயிரே! உயிரிணுணர்வே! உணர்வு உணர ஒண்ணாச்
செயிர் தீர் சிவமே! சிவவறிவே! அச்சிவவறிவின்
அயிராதெழும் பரமானந்தமே! அவ்வானந்தம்மார்
பயிரே நிகர் பத்தி தந்தாள் கமலைப் பராசக்தியே - 8

அல்லியங் கோதை நல்வன் மீகநாதருக்கார்ந்த கொண்டி
மெல்லியல் பாகம் பிரியாள் நன்பா லொத்த மென்மொழியாள்
நல்ல தியாக வினோதருக்காகி நலமருளிப்
பல்லியல் நாமம் பெறுவாள் கமலைப் பராசக்தியே - 9

காலைத் தினகரன் அஅன்ன செம்மேனியுங் கையிற்பற்றும்
மாலைச் சிலையும் நற்பாசாசாங்குசமும் மலர் கணையும்
சேலைப் பொருள் அருள் நோக்கும் கத்தூரித் திலகமுமாய்
பாலைக் கடுத்த உருவள் கமலைப் பராசக்தியே - 10

*****

அடியார்க்கு நல்லான் என்ற அன்பர் எழுதிய நீலோத்பலம் என்ற நூலில் கிட்டியது. மற்ற விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

மிக்க நன்றி.