Sunday, March 29, 2020

திருப்பாத தரிசனம் - 20

திருவாரூர் பரவையுண்மண்டலி





திருவாரூரில் அமைந்துள்ள மூன்றாவது தேவாரப்பாடல் பெற்ற தலம். கீழ வீதியில் ஆழித்தேரின் எதிரே விளங்கும் பழனியாண்டவர் கோயில் எதிரே அமைந்துள்ளது சீர்மிகு செல்வத் திருவாரூரில் பூங்கோயில், அரநெறி என்னும் அசலேசம், பரவையுண் மண்டலி ஆகிய மூன்று தேவாரத் தலங்கள் உள்ளன. இத்தலத்து இறைவனின் திருப்பெயர் தூவாயர், இறைவியின் திருப்பெயர் பஞ்சின் மெல்லடியாள். துர்வாசர் வழிபட்ட பெருமான் என்பதால் இத்தலத்து இறைவனை துர்வாச நாயனார் என்று அழைக்கின்றனர். ஆனால், தூவாயர் என்றே பெயரே புராணங்களில் காணப்படுகிறது. இக்கோயில் பிராகாரத்தில் சிவலிங்கத்திற்குப் பின்புறம் விநாயகருக்கு அருகே துர்வாசரின் சிலை உள்ளது.

பரவை என்பது கடல். மண்தளி என்பது மண்கோயில். கடலை உட்கொண்ட மண்கோயில் என்ற அடிப்படையில் இக்கோயிலுக்குப் பரவையுண்மண்டலி என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு முறை பிரளய காலம் வந்தது. அப்போது கடல் பொங்கி எழுந்தது. இதையடுத்து உலகை காப்பாற்றக் கோரி, தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமான் துர்வாச முனிவரிடம், தற்போதைய தூவாய்நாதர் திருக்கோவிலின் அக்னி மூலையில் குளம் அமைத்து வழிபட்டால், கடல் அமைதி அடையும். உயிர்கள் காப்பாற்றப்படும் என்று கூறினார். அதன்படி துர்வாச முனிவரின் தலைமையில், மற்ற முனிவர்கள் அனைவரும் இங்கு ஒன்று கூடி குளம் அமைத்து ஈசனை வழிபட்டு வந்தனர்.  முனிவர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவபெருமான், பொங்கி வந்த கடலை, அக்னி மூலையில் முனிவர்கள் அமைத்த குளத்தின் மூலம் ஈர்த்துக்கொண்டார். எனவே இத்தலம் பரவையுண்மண்டலி ஆனது. துர்வாச முனிவர் வழிபட்டவர் என்பதால் இறைவன் துர்வாசநாதர் என்றும் அழைக்கப்படுகின்றார். இவர் சுயம்பு மூர்த்தி. அக்னி மூலையில் திருக்குளம் அமைந்திருப்பது ஒரு தனி சிறப்பாகும். முற்காலத்தில்  மண்டலி (மண்ணால் அமைக்கப்பட்டிருந்த ஆலயம்)  தற்போது கற்றளி ஆக விளங்குகிறது.  
சுந்தரமூர்த்தி நாயனார்  திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரைக் கண்டபோது அவர் மேல் காதல் கொண்டு அவர் கேட்டுக் கொண்டபடி அவரை விட்டுப் பிரிவதில்லை என்று இறைவன் திருமுன்னர் உறுதி மொழி கூறி திருமணம் செய்து கொண்டார். ஆனால், சிலகாலம் சென்று இளவேனில் காலம் வந்தது. திருவாரூரில் அப்போது நடைபெறும் வசந்த விழாவை நினைத்தார் சுந்தரர் இதை
பொங்கு தமிழ்ப் பொதிய மலைப் பிறந்து பூஞ்சந்தனத்தின்
கொங்கணைந்து குளிர்ச்சாரலிடை வளர்ந்த கொழுந்தென்றல்
அங்கணையத் திருவாரூர் அணிவீதி அழகரவர்
மங்கலநாள் வசந்தம் எதிர் கொண்டருளும் வகை நினைந்தார் - என்று சேக்கிழார் பாடுகின்றார். 

தியாகேசர் மேல் கொண்ட பக்தியால், அவரது அவ்வசந்த விழாவை தரிசிக்க ஆவல் கொண்டு தாம் சங்கிலி நாச்சியாருக்குக் கொடுத்திருந்த உறுதிமொழியை மீறி திருவாரூர் தலத்திற்கு பயணம் மேற்கொண்டார். சுந்தரர் திருவொற்றியூர் எல்லையைத் தாண்டியதுமே அவரது கண்கள் இரண்டும் ஒளி இழந்தன. பார்வை இழந்த சுந்தரர் மிகுந்த சிரமத்துடன் பல தலங்களுக்கும் சென்று இறைவனை வழிபட்டார்.


காஞ்சிபுரம் சென்றபோது ஏலவார் குழலி ஏத்தி வழிபட்ட காலகாலனை கம்பனெம்மானைப் பாடி இடக்கண் பார்வை பெற்றார். பிற தலங்களுக்கும் சென்று இறைவனைத் தரிசித்து திருவாரூர் வந்தடைந்தார். திருவாரூரில் முதலில் பரவையுண் மண்டலிக்கு (துர்வாசர் கோயில்) வந்து அங்குள்ள புனித தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு,
தூவாயா! தொண்டு செய்வார் படுதுக்கங்கள்

காவாயா! கண்டு கொண்டார் ஐவர் காக்கினும்
நாவாயால் உன்னையே நல்லன சொல்லு வேற்கு
ஆவாஎன் பரவையுண் மண்டலி அம்மானே -

 எனத் தொடங்கி பத்து பாடல்களை மனமுருகப் பாடினார்.  வண்தொண்டர் என்பதால்  ‘கண்பார்வையைத் திருப்பித்தா’ என்று அவர் ஈசனிடம் உரிமையுடன் உருகி வேண்டிய பாடல்களுள் ஒன்று.


விற்றுக்கொள்ளீர் ஒற்றி அல்லேன் விரும்பி ஆட்பட்டேன்
குற்றம் ஒன்றும் செய்த தில்லை கொத்தை ஆக்கினீர்
எற்றுக் கடிகேள் எண்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர்
மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால் வாழ்ந்து போதீரே - என்பது அப்பாடல்.  தோழரான சுந்தரரின் வேண்டுதலை ஏற்ற இறைவன் "இத்தலத்தின் அக்னி மூலையில் உள்ள குளத்தில் நீராடி என்னை வணங்க கண் பார்வை கிடைக்கும் என்றார். அதன்படியே இறைவனருளாக் சுந்தரருக்கு வலது கண் பார்வையும் திரும்பக்கிட்டியது. 
சுந்தரருக்கு இங்கு கண் கிடைத்த்தன் அடையாளமாக இறைவருக்கு அபிஷேகம் செய்யும் போது அவரது திருமேனியில் கண் தடம் தெரிவதைக் காணலாம். கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் அக்னி தீர்த்தத்தில் நீராடி செவ்வள்ளி மலர் சார்த்தி வழிபட பார்வை குறைபாடு சரியாகும் என்பது ஐதீகம்.
ஐயன் சன்னிதியை ஒட்டி தெற்கு நோக்கிய சன்னிதியில் அம்பாள் திருஉருவம் அமைந்துள்ளது. இந்த அம்மனை சுந்தரர், ‘பஞ்சேரும் மெல்லடி யாளை ஓர் பாகமாய்’ என்று கூறுகிறார். இதற்கு இந்தத் தலத்து அம்பாள், பஞ்சை விடவும் மென்மையான பாதங்களை உடையவள் என்பது பொருள்.

மூலவரின் தேவக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, பெருமாள், நான்முகன், துர்க்கை ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தின் தெற்கில் தற்போது அமைக்கப்பட்டுள்ள ஐயப்பன் சன்னிதியும், துர்வாச முனிவர் வழிபட்ட சிவலிங்கமும், கன்னி மூலையில் கணபதியும், வள்ளி – தெய்வானை சமேத முருகப்பெருமானும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். வடக்கில் நந்தவனமும், அதன் அருகே தீர்த்தக் கிணறும் உள்ளன. இவ்வாலயத்தில் உள்ள அனைத்து விக்கிரகங்களும், விஸ்வகர்மாவால் செய்யப்பட்டது என்கிறது தல புராணம். சனி பகவான் தெற்கு நோக்கியபடி, அனுக்கிரக மூர்த்தியாக தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றார்.   

சுவாமியின் மகாமண்டபத்திற்கு முன் உள்ள மண்டபத்தில், கயிலாயநாதரும், அவர் அருகே சுந்தரரும், பரவை நாச்சியாரும், சுந்தரரின் தோழர் சேரமான் பெருமானும் கைகூப்பியபடி நிற்கின்றனர். எதிரே மேற்கு நோக்கிய நிலையில் பைரவர் காட்சியளிக்கிறார்.  இத்திருக்கோயிலுக்குச் செல்பவர்கள் இக்கோயிலுக்கு எதிர்ப்புறம் அமைந்துள்ள பழனி ஆண்டவர் கோயிலுக்குச் சென்று முருகப் பெருமானையும் தரிசித்து அவனருளும் பெறலாம். வாருங்கள் அன்பர்களே அடுத்து ஐயன் நித்ய பாத தரிசனம் தந்தருளும் திருவிளமல் தலத்தை தரிசிக்கலாம்.

                                                          திருப்பாத தரிசனம் தொடரும் . . . . 

2 comments:

கோமதி அரசு said...


பஞ்சின் மெல்லடியாளையும், தூவாயரையும் வழி பட்டு இருக்கிறோம்.
எதிரில் இருக்கும் பழனி ஆண்டவரையும் வழி பட்டு இருக்கிறோம்.
திருவாரூரில் உள்ள மூன்று தேவாரத்தலங்களுக்கும் சென்று இறைவனை வணங்கி இருக்கிறோம்.

மீண்டும் தரிசனம் கிடைத்தது.

S.Muruganandam said...

//திருவாரூரில் உள்ள மூன்று தேவாரத்தலங்களுக்கும் சென்று இறைவனை வணங்கி இருக்கிறோம்.//


ஓம் நமசிவாய.