Sunday, March 8, 2020

திருப்பாத தரிசனம் - 13

ஸ்ரீதியாகராஜர் திருக்கோயில் முதல் திருசுற்று



முசுகுந்தரும் இந்திரனும் தியாகேசரை வழிபடும் காட்சி


தொண்டை மண்டலத்தின் உபவிடங்கத்தலங்களின் ஒன்றானதும் சுந்தருக்காக சங்கலியிடம் தூது சென்ற தியாகேசப்பெருமான் எழுந்தருளியுள்ள திருவொற்றியூரில் தற்போது மாசிப் பெருவிழா  சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அப்பெருவிழாவின் போது தியாகேசரின் அற்புத நடனத்தை முதலில் தரிசித்து  பின்னர் திருவாரூரின் பூங்கோவிலை சுற்றி வந்து திருமூலட்டானத்தாரையும், தியாகேசரையும் அற்புதமாக தரிசிக்கலாம் அன்பர்களே.



திருவொற்றியூர் சுந்தரநடனம்

நமது உடலில் ஐந்து சுற்றுகள் அமைந்துள்ளது போல திருவாரூர் கோயிலும் ஐந்து சுற்றுகளைக் கொண்டுள்ளது. திருவீதிகள் அன்னமய கோசம், மடவிளாகங்கள் – பிராணமய கோசம், பெரிய சுற்று – மனோமய கோசம்,   இரண்டாம் சுற்று – விஞ்ஞானமய கோசம்,   கருவறை திருச்சுற்று – ஆனந்தமய கோசம்.

இவ்வாலயத்தில் மொத்தம் 7 இராஜ கோபுரங்கள் அலங்கரிக்கின்றன. தென்வடலாக 656 அடி அகலமும், கிழமேற்காக   846 அடி நீளமும் சுமார் 30 அடி உயரமுள்ள பிரம்மாண்ட வெளி மதிலில் மொத்தம் 4 பெரிய கோபுரங்கள், மற்றும் ஒரு சிறு கோபுரமும் அணி செய்கின்றன. இரண்டாம் மதிலை இரண்டு திருக்கோபுரங்களும், மூன்றாம் மதிலை அணுக்கன் திருக்கோபுரமும் அலங்கரிக்கின்றன.



திருவாரூர் ஆலய கிழக்கு கோபுரம்



திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 118 அடி உயர அதன் கிழக்கு   இராஜகோபுரமாகும். இக்கோபுரம் மகாமதுரம் என்று வாஸ்து நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி கட்டப்பட்டுள்ளது. மேல் தளம் வரை கருங்கல் அதற்கு மேல் 6 பிரஸ்தலங்கள் 7 துவாரங்களுடன் எழிலாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கோபுரம் ஒரு கலை களஞ்சியம் என்றால் அது மிகையாகாது. கோட்டங்களில் தெய்வத்திருவுருவங்கள் அமைந்துள்ளது இக்கோபுரத்தின் ஒரு சிறப்பு. சிவபெருமானின் பல்வேறு கோலங்கள், எண் திசைக் காவலர்கள், ஆதித்தன், திருமால் திருவுருவங்கள், நாட்டியச் சிற்பங்கள், யாளி வரிசையின் எழிற்கோலம் ஆகியவை இக்கோபுரத்தை அலங்கரிக்கின்றன. இக்கோபுரத்தை அமைத்தவன் நம் தோழன் என்று இறைவனால் அழைக்கப்பட்ட மூன்றாம் குலோத்துங்கன், “திருக்கயிலை சிவனருளால் தேசமெல்லாம் புகழ்ந்து பாட அரசோச்சிய” பெருமகன்.  அவனது சிற்பமும்  மற்றும் அவரது குரு, பதினெட்டு சிவபுராணங்களை தெளிவாக அறிந்த, சித்தாந்த ரத்னாகரம் என்னும் நூலை இயற்றிய ஈஸ்வர சிவர் எனும் சோமேஸ்வரர்  ஆகிய இருவரது சிலைகள் மற்றும்  பல கல்வெட்டுகளும்  அமைந்துள்ளன என்று இக்கோபுரத்தில் உள்ள கல்வெட்டுகளில் உள்ளதாக அறிஞர்கள் கூறுகின்றனர். வெளிப்புற வாயிலின் வலப்புறம் விநாயகர் திருக்கோவிலும், இடப்புறம் முருகர் திருக்கோவிலும் உள்ளன.  கிழக்கு கோபுரத்தின் உட்புறத்தில் உள்ள 1000 கால் தூண்கள் முற்காலத்தில் திருவிழாவின் போது பந்தல் போட அமைக்கப்பட்டது. காவணம்  என்று  பண்டைக் காலத்தில் அழைக்கப்பட்டது.

மேலைக் கோபுரம் 15ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். இரு புறமும் நாட்டிய மங்கைகள் மற்றும் புராண சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. கமலாலயத் திருக்குளத்தை ஒட்டி ஏழு நிலை மேலைக்கோபுரம் அமைந்துள்ளது. இக்கோபுரம், கமலாலயம் மற்றும் ஆழித்தேர் மூன்றையும் ஒரே நேரத்தில் தரிசிப்பது பரவசமூட்டும் காட்சியாகும். இக்கோபுரத்தை சுமார் 650 எழிலார்ந்த சுதை   சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. அவற்றில் சிவகதைகளும், மாலவன்,  நான்முகன், சரபமூர்த்தி, மற்ற தேவர்களின் சுதை சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன  தென்புறத்தில் சரபரையும் தரிசிக்கலாம். இக்கோபுரத்தின் நுழை வாயிலில்  சொல்லின் செல்வர் அருள்பாலிக்கின்றார்.

மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள  வடக்கு கோபுரம் நீலகண்ட யாழ்ப்பாணர் தன்னை வந்து வணங்குவதற்காக எம்பெருமான் வகுத்த வாசலில் அமைந்த கோபுரம் ஆகும். இக்கோபுர நுழை வாயிலின் கூரையில் நவக்கிரக சிற்பங்கள் அடங்கிய இராசிச் சக்கரம் உள்ளது. இக்கோபுரத்தில் தஞ்சையை ஆண்ட செவ்வப்ப நாயக்கர் மற்றும் கமலை ஞானப்பிரகாசர் சிலைகள் இடம் பெற்றுள்ளன. மூன்றாம் பிரகாரத்தின் கிழக்கு மதிலில் வட கீழ்த்திசையில் கீழைச்சிறிய  கோபுரம் உள்ளது, இக்கோபுரம் தேவாசிரிய மண்டபத்தின் கிழக்கு வாயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. உட்பகுதியில் சண்டிகேஸ்வரர் சிற்பம் இடம் பெற்றுள்ளது.  வடமேற்கு மூலையில் தெற்கு கோபுரமும் அமைந்துள்ளன.



இரண்டாம் பிரகாரத்தில் இரண்டு கோபுரங்கள் கிழக்கு மற்றும் மேற்கில் அழகு செய்கின்றன. மேலைக்கோபுரத்தை விஜயநகர மன்னர் இலக்கண்ண தண்ணநாயகர்  சார்பாக நாகராசர் அமைத்ததாக கல்வெட்டு  பகர்கின்றது. கீழைக் கோபுரம் ஆரியன் கோபுரம் என்றழைக்கப்படுகின்றது. இக்கோபுரத்தின் வெளிப்புறம் விநாயகர் மற்றும் முருகர் திருக்கோயில்கள் அமைந்துள்ளன. வெளி கோட்டத்தில் வலப்புறம் கண்ணப்பர் சிற்பமும், இடப்புறம் விறன்மிண்ட நாயனாரின் சிற்பமும் இடம் பெற்றுள்ளது. தம்பிரான் தோழரையும், இறைவனையும் விலக்கிய இந்நாயானாரை வணங்கிய பிறகே திருக்கோவிலின் உள்ளே புக வேண்டும் என்பது மரபு.

மந்திரமயமான கருவறை திருச்சுற்றாகிய ஆனந்தமய கோசத்திற்குள் செல்ல அமைந்த கோபுரம் “அழகியான் கோபுரம்”. புற்றிடங்கொண்டார் சன்னதிக்கு எதிராக இக்கோபுரம் அமைந்துள்ளது.  கோபுர வாசலில் சுதையாலாகிய பிரம்மாண்ட   கம்பீரமும், கர்வமும் நிறைந்த துவாரபாலகர்கள். எதிரே கொடிக்கம்பம் இக்கொடிக்கம்பத்தில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் முதலாம் சரபோஜியின் சிலை இடம் பெற்றுள்ளது.  கருவறையில் திருமாலின் கர்வத்தை நீக்க புற்றிலிருந்து சுயம்புவாக தோன்றிய புற்றிடம்கொண்டார். இவருக்கு தெற்கே ஐங்கலப் பொற்காசு விநாயகர், இவருக்கும் தெற்கே விண் துறந்து ஆருர் மண் உவந்து  வந்தமர்ந்து அருள் புரியும் கமல வசந்த தியாகேசர்.




திருவாரூர்க் கோயில் வரைபடம்

அழகியான் கோபுரத்தை அமைத்தவன் சுந்தர சோழன்.  இவனே   ஐந்து கலம் பொன் கொண்டு விநாயகரை அமைத்தான் எனவே இவர் அழகிய சோழ விநாயகர் என்றும் அழைக்கப்படுகின்றார். வாயிற்கூரையில் 27 நட்சத்திரங்களின் தேவதைகளும், 12 இராசிகளில் மூன்று சக்கர கட்டங்களாக அமைக்கப்பட்டுள்ள அருமையான சிற்பம். ஐங்கல பொற்காசு விநாயகருக்கு வடப்புறம் புற்றிடங்கொண்ட ஈசர் சுயம்புவாய்  எழுந்தருளி அருள் பாலிக்கும் பூங்கோயில். 

“ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ”
“நிலந்தரத்து நீண்டுருவம் ஆன நாளோ”
“கோலமே நீ கொள்வதற்கு முன்னோ பின்னோ
அணியாரூர் கோயிலாக்கொண்ட நாளோ”
என்று பலவிதமாகப் பாடி இறைவன் அருவமாயும், உருவமாயும் கோயில் கொண்டது முதலில் ஆரூரில்தான் என இத்தலத்தின் தொன்மையைப் பாடுகிறார்.

அப்புராதனன், திருமூலட்டானன், திருமகளின் தவத்திற்கிணங்கி திருமாலை அவளுக்களித்த பெருமான், கற்றவர்கள் உண்ணும் அருட்கனி, கழலடைந்தார் செல்லும் கதி, அற்றவருக்கு ஆரமுதமானவர் அருள் பாலிக்கின்றார். திருவாரூர் சக்திபுரம் என்பதால் இம்மூர்த்தம் சற்றே வாமபாகத்தில் அமைந்துள்ளது. எத்தலத்தும் தீராத சாபம், தோஷம் இத்தலத்தில் இவர் முன் தீரும், இவர் முன் தீரா சாபம் எத்தலத்தும் தீராது என்று தலபுராணம் கூறுகின்றது. ஒரு கோடி முனிவர்கள் பெருமானை போற்றி துதித்த போது அனைவருக்கும் பொதுவாக காட்சி தராமல் முனிவர்தம் வகையறிந்து தவமறிந்து தனித்தனியாக காட்சி தந்தருளிய தக்கார்க்கு தக்கான். வெள்ளிக் கவசமிட்டு புற்றுரையும் பெருமான்.

 இவரை
கற்றவர்க ளுண்ணுங் கனியே போற்றி
      கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி
அற்றவர்கட் காரமுதமா னாய் போற்றி
      அல்லலறுத் தடியேனை யாண்டாய் போற்றி
மற்றவ ரொப்பில்லா மைந்தா போற்றி
      வானவர்கள் போற்று மருந்தே போற்றி
செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி
      திருமூலட் டானனே போற்றி போற்றி
என்று போற்றிப் பாடியுள்ளார் நாவுக்கரசப்பெருமான்.

புற்றிடங்கொண்டார் எனும் திருமூலட்டானேசுவரர், பெரிய லிங்க வடிவில் முப்பட்டை பூண்டு, அகன்ற ஆவுடையாரில் திருக்காட்சி தருகிறார். அது தரிசிக்கும் பக்தர்களை மெய் சிலிர்க்கவைக்கும் திருமூலட்டானர், வன்மீக நாதர், திருமூலஸ்தானமுடையார், ஆரூர் அதிபதி, பூர்வாரூர்வாசி, ஸ்ரீஆரூரதிபஸ்ய என்று பல திருநாமங்களில் அழைக்கப்படுகின்றார்.  ஐயனுக்கு வெள்ளிக்கவசம் சார்த்தியுள்ளனர்.  ஐயனுடன் போக சக்தி - பிரியாவிடை அம்மை,   சோமகுலாம்பிகை என்ற திருநாமத்துடன் பிருத்வி தலம் என்பதை உணர்த்தும் விதமாக அமர்ந்த நிலையில் ஒரு திருக்கரத்தை முழங்காலில் அமர்த்தி, மறு திருக்கரத்தை தரையில் ஊன்றிய கோலத்தில் நான்கு யாளிகள் தாங்கிய மேடை மேல் கம்பீரமாக அமர்ந்து அருள்பாலிக்கின்றார்.

கருவறையுடன் அமைந்த அந்தராளம் நான்கு கற்றூண்களை உள்ளே பெற்று திகழ்கிறது. அந்தராள வாயிலின் வெளிப்புறம் துவார பாலகர்கள், நிலையின் மேல்  சிவபெருமானின் திருமணக்காட்சி இடம் பெற்றுள்ளது. இவரின் முக மண்டபமும், தியாக விநோதரின் முக மண்டபமும் இணைந்துள்ளது.

மஹாமண்டபத்தில் இருந்து நாம் பெருமானை தரிசிக்கின்றோம். நந்தி மண்டபத்தின் கூரையில் 11X11 சிறு சதுரங்களில் 27 நட்சத்திரங்கள், 12 இராசிகளின் நுண்ணிய சிற்பங்கள் அருமை. நந்தியெம்பெருமான் அவருக்கு பின்னே பித்தளைக் கண்ணாடி போன்ற அமைப்பு. இது எதற்கென்று விசாரித்தபோது பிரம்மஹத்தி போன்ற பெரும்பாவம் செய்தவர்கள் ஆலயத்திற்குள் நுழையும் போது அவர்களின் பாவத்தை இக்கண்ணாடி இழுத்துவிடுமாம் அதன் பிறகு அவர்கள் இறைவனை தரிசிக்கலாம் என்று கூறினார்கள். 

ஐயனின் கருவறைச் சுவர்களிலும் கூரையிலும் அருமையான ஓவியங்கள். சிவ மூர்த்தங்கள் அனைத்தும் அப்படியே தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன. அவற்றை பாதுகாப்பதற்காக கண்ணாடி சட்டம் அமைத்திருக்கின்றனர்.  கோட்டத்தில் கோட்ட தேவதைகள் முறைப்படி எழுந்தருளியுள்ளனர். கோட்டங்களின் மேல்புறத்தில் எழிலுறு மகரதோரணங்கள் அணி செய்கின்றன. ஐம்பதற்கும் மேற்பட்ட சிற்பதொகுதிகளும் பூங்கோயிலில் இடம்பெற்றுள்ளன அவற்றுள் துர்க்கை, ஆலிலைக் கண்ணன், கஜசம்ஹார மூர்த்தி, மகிஷாசுரமர்த்தினி சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. 

பூங்கோயிலாம் இப்புனிதத் திருக்கோயிலுக்கு மாமன்னன்  மூன்றான்  குலோத்துங்கன் பொன் வேய்ந்து பொற்கோயிலாக்கினான். பாண்டிய நாட்டை வெற்றி கொண்டு திரிபுவன வீரதேவன் என்று பட்டம் சூடிப் பெருமையோடு திரும்பிய இம்மன்னர், பாண்டி நாட்டு பண்டாரத்திலிருந்து கொண்டு வந்த பொன்னால் புற்றிடங்கொண்டாரின் திருக்கோயிலை பொன்மயமாக்கினான் என்றும் மற்றும் அவன் செய்த பல்வேறு திருப்பணிகளையும் கல்வெட்டுகள் இயம்புகின்றன.



வன்மீகர் எழுந்தருளும் பூங்கோயில் அருகே  பொற்கோயிலில் வீதி விடங்க தியாகேசப் பெருமான் எழுந்தருளியுள்ளார்.  கருவறை விமானத்திற்கு மாமன்னன்  இராசேந்திர சோழன் பொன் வேய்ந்தான். ஒரு காலத்தில் தியாகேசர் சன்னதி பொற்கோயிலாக இருந்துள்ளது. “கங்கை நதியும் கடாரமும் கைக்கொண்டு சிங்காசனத்திருந்த செம்பியர் கோன்” – என்னும் இராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழீச்சரம் என்னும் பெருங்கோவிலை எடுத்த பெருமையுடையவன். இப்பெருமகன் தன் ஆருயிர் காதலி அனுக்கியார் பரவை என்னும் நங்கையோடு தேரில் திருவாரூர் திருவீதிகளில் பவனி வந்தான்.  பரவை நங்கையார் எல்லையற்ற சிவபக்தி உடையவள்.  அவளுக்கு உடனிருக்கை அளித்து தேரில் பவனி வந்ததன் நினைவாக ஒரு குத்துவிளக்கும் திருவாரூர் கோவிலில் வைத்தான் இராஜேந்திர சோழன். இதை கல்வெட்டிலும் பொறித்தான்.

பரவை நங்கை அதுவரை செங்கற்கட்டாக இருந்த வீதிவிடங்க தேவரின் கோவிலை கருங்கற்கோவிலாக புதுப்பித்து 20634 கழஞ்சு எடையுள்ள பொன்னால் கர்ப்பகிரகம் முழுவதையும் பொற்தகடு போர்த்தி அலங்கரிக்க செய்தாள். 42000 பலம் எடையுள்ள பொற்தகடுகளைக் கொண்டு கதவுகள், மண்டபத்தூண்கள் மற்றும் விதானங்களை அலங்கரித்தாள் என்று கல்வெட்டிலிருந்து அறிய முடிகின்றது. மேலும் அப்பெருமாட்டி தியாகப்பெருமானுக்கு இரண்டு  சாமரங்கள் அளித்தாள்.  பச்சை பாவை உமை நங்கை, பாவை சரியா முலை நங்கை என்ற இரு பாவை விளக்குகளை வீதிவிடங்கர் முன் வைக்க அளித்தாள். மேலும் பாவைகளுக்கு பொன்னணிகளை அளித்த செய்தியையும் கல்வெட்டில் காணலாம்.

ஆனால் இன்று வெறும் கற்கோவிலாகத்தான் உள்ளது. இப்பொற்கோவில் எம்பெருமான் எழுந்தருளும் கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபத்துடன் விளங்குகின்றது. மகா மண்டபத்தில் நின்ற நந்தியும் பலி பீடமும் உள்ளன.


பாற்கடலில் தனது மார்பில் வைத்து திருமால் தியாகரை வழிபடும் காட்சி


பாற்கடலில்  திருமால் மார்பில் விளங்கியது போல பெருமாளின் சிரசாகிய கருவறை விடுத்து, திருமாலின் திருமார்பாகிய அர்த்தமண்டபத்தில்  ராஜகம்பீர ராஜராஜேஸ்வர கோலம் கொண்டு,

“சிங்கஞ் சுமந்த செழுமணித் தவிசிற்
கங்குலும் பகலுங் கலந்தினி திருத்தாங்
கிடவலம் பொலிந்த விறைவியும் நீயும்
நடுவண் வைகு நாகிளங் குழவியை
ஒருவிரினெரு விருள்ள நெக்குருக . . . . என்று திருவாரூர் நான்மணி மாலையில் குமரகுருபர சுவாமிகள் பாடியபடி இளமுருகு உடனுறையும் அம்மையப்பராக, திருக்கயிலை நாதராக  தியாகவினோதர்  தரிசனம் அருளுகின்றார்.  திருமாலின் சிரசாகிய கருவறை ஸ்ரீவாசம் அல்லது லட்சுமி வாசம் என்கிற விலாசத்துடன் தாழிடப்பட்டு விளங்குகிறது.  மகா மண்டபம் பெருமாளின்   வயிறு,  தொடை, திருப்பாதம் என்று ஐதீகம். 


தென்னன் திருவாசல் எனப்படும் தென்புற வாயில் வழியாக எம்பெருமான் திரிபுர சம்காரத்திற்காக வெளியே வருவார். இத்திருவாசல் பித்தளை கவசம் பூண்டுள்ளது.  வாசல் பக்க சுவற்றின் இரு புறமும் இந்திரனும், முசுகுந்தனும் புடைப்புச் சிற்பங்களாய் தியாகேசரை தொழுத வண்ணம் காட்சி தருகின்றனர்.
சித்தந் தெளிவீர்காள், அத்த னாரூரைப்
பத்தி மலர்தூவ, முத்தி யாகுமே.
என்று அம்மையின் ஞானப்பாலுண்ட திருஞானசம்பந்தர் பாடிப் பரவிய  ஆயிரம் திருநாமம் கொண்ட பெருமான் ஸ்ரீபீடத்தில் இரத்தின சிம்மாசனத்தில் முகம் காட்டி, உடல் மறைத்து தரிசனம் தருகின்றார். உடனுறையும் அம்பிகை கொண்டியம்மையும் இவ்வாறே. இருவருக்கும் இடையில் கந்தன் தன்னுரு காட்டாது அமர்ந்துள்ளார்.


தியாகேசப்பெருமான்

தியாகேசர் கங்கை மற்றும் வளர் பிறையை இருபக்கமும் தரித்திருக்கின்றார். இவரின் முன்புறம் இவரது பராக்கிரமத்தை உணர்த்தும் வீரகட்கம் மற்றும் அஞ்ஞானத்தை   வேரறுக்கும் ஞானகட்கம். பெருமான் எழுந்தருளும் மண்டப விதானத்தை தாங்கும் நான்கு தூண்களும் நான்கு வேதங்கள். இவையும் பித்தளை கவசம் பூண்டுள்ளன. தியாக கற்பத்தின் சிரசிற்கு மேலே அக்னி பந்தல்; திருநீற்றுப் பந்தல்; முத்து விதானம் என்கிறது அப்பர் தேவாரம்.

காமகலா சொரூப அதி ரகசிய மூர்த்தமாகிய இவரை நடை சார்த்தும் முன்னர் மறைத்துச் சூழ வெளிர் சிவப்பிலான திரஸ்கரணி என்ற திரையால் மறைக்கின்றனர். கண்டவர் தம் மனத்தை கவர்ந்திழுக்கும் மந்தகாச புன்னகையுடன் தியாக விநோதம் என்னும் நறுந்திலகத்துடன், பொன்னாலும், மணியாலும், மணங்கமழ் மலர்களாலும் திருமேனி மறைத்து கலாதீதன்; தத்வாதீதனை மனமார தரிசிக்கின்றோம். ஐயனின் திருக்கோலம் கண்டு நெஞ்சு நெகிழ்கின்றது, கண்ணீர் மல்குகின்றது. 

தியாகேசர் சந்நிதியில் மேல் வரிசையில் ஒன்பது விளக்குகள் உள்ளன. நவக்கிரகங்கள் இங்கு தீப வடிவில் பெருமானை வழிபடுவதாக ஐதீகம்! பெருமானுக்கு முன் ஆறு மற்றும் ஐந்து அடுக்குகள் கொண்ட இரு விளக்குகள் உள்ளன. இவை ஏகாதச ருத்திரர்களைக் குறிக்கின்றது.


ஐயனுக்கு வலப்புறத்தில்  ஒரு இரும்புப்பெட்டியில் பாதுகாப்பாக   வெள்ளிப் பேழையில் மரகத வீதி விடங்கப்பெருமான் எழுந்தருளுகிறார். அனு தினமும் காலசந்தி, உச்சிக்காலம், மாலை இரண்டாம் காலம் என்று  மூன்று முறை அபிஷேகம் கண்டருளுகின்றார். பின்னர் சந்தனம் சாற்றப்பட்டு மலருடன் பேழையில் எழுந்தருளுகின்றார்.

மஹா மண்டபத்தில் உலோக நின்ற நந்தி   அதன் பின்னர் பித்தளை கண்ணாடி அமைப்பு. இருவருக்கும் இடையில் ஐங்கலக்காசு விநாயகர். உற்சவ காலங்களில் பஞ்ச மூர்த்தியாக உலா வருபவர் இவரே.

தியாகேசப்பெருமானின் கோட்டத்தில் ஐந்து தலை பாம்பு சுருண்டு படுத்துக் கிடக்க அதன் நடுவில் தாமரையின் மேல் பாசம் அங்குசம் மோதகம் தந்தத்துடன் நர்த்தன கணபதியாக மூலாதார கணபதி,   தட்சிணா மூர்த்தி, மஹா விஷ்ணு,   பிரம்மா,   மகிஷாசுரமர்த்தினி ஆகியோரை சேவிக்கலாம். இரு பெருமான்களையும் தரிசித்த பின்னர் வாருங்கள் அன்பர்களே திருச்சுற்றை வலம் வரலாம்.




பூங்கோயிலில் உள்ள ஒரு நடராஜர் ஓவியம்


இத்திருச்சுற்றின் பெரும்பகுதி மண்டபங்களால் சூழப்பட்டுள்ளது.  கிழக்கு திருச்சுற்றில்  அழகியான் கோபுரத்திற்கு அருகே மிகப்பெரிய சிவசூரியன், அருகே சூரியன் நிறுவிய ஆதித்த லிங்கம், அடுத்து தியாகேசரை தொழுதவாறு எம்பிரான் தோழர் சுந்தரர் பரவை நாச்சியாருடனும் தன் தோழர் சேரமான் பெருமாளுடனும் அருள் பாலிக்கின்றார். சாயரட்சை பூசையின் போது தியாகராஜப்பெருமானுக்கும் எம்பிரான் தோழர் சுந்தரருக்கும் ஒரே சமயத்தில் ஆரத்தி நடைபெறுகின்றது.  அடுத்த சன்னதி கமலாலய திருக்குளத்தை செப்பனிட்ட தண்டியடிகள். இத்திருசுற்றின் தென்கிழக்கு மூலையில் இத்தலத்திற்கே உரிய   குடமுழா என்கிற பஞ்சமுக வாத்தியம்.

 அடுத்து
சைவத்தின் மேற்சமயம் வேறில்லை அதில்சேர் சிவமாம்
தெய்வத்தின் மேல்தெய்வம் இல்லெனும்  நான்மறை செம்பொருள்
வாய்மை வைத்த சீர்திருத் தேவாரமும், திருவாசகமும்
உய்வைத் தரச்செய்த நால்வர்  பொன் தாள் எம் உயிர்த்துணையே என்று நாம் பாடிப்பரவும், அப்பர், சம்பந்தர்,  மாணிக்கவாசகர் சன்னதி.  அக்னி மூலையில் மணித்தண்டு பாதுகாக்கும் அறை.

திருச்சுற்றின் தென்புறம் நடைமேடையில் “அரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே” என்று சுந்தரர் பணிந்த அறுபத்து மூன்று நாயன்மார்களின் பஞ்சலோகத் திருமேனிகள். அடுத்து விலாசமான பிறை மாடத்தில் பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் பெருமான். அடுத்து அறுபத்து மூவர் மற்றும் தொகையடியார்களின் கற்திருமேனிகள். எதிரே  தெற்கு வாயில். பித்தளை கவசம் பூண்டுள்ளது. ஒரு புறம் இந்திரனும், மறுபுறம் முசுகுந்தனும் தியாகேசரை வணங்கும் புடைப்பு சிற்பம். தியாகேசர் அஜபாநடனமிட்டு இவ்வாசல் வழியாக வெளியே வருவார். கருவறை சுவரில் திருமால் பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் தன் மார்பில் தியாகேசரை வைத்து பூசிக்கும் சுதை சிற்பம். கண்ணாடி கொண்டு பாதுகாப்பு செய்திருக்கின்றனர். அருகில் தென்றல் வரும் சாளரம். கோட்டத்தில் அன்று நால்வருக்கு அறம் அருளிய  ஆலமர் செல்வர்.


மேலை பிரகாரத்தில் ஐயன் அளந்த படி இருநாழி கொண்டு உய்ய அறம் வளர்த்த அன்னபூரணி. அடுத்து அழகுத் திருமேனியாக இடபத்தின் மேல் ஒயிலாக சாய்ந்து கொண்டு நிற்கும் “காட்சி கொடுத்தார்”. அடுத்து தல விநாயகர் என்றழைக்கப்படும் வாதாபி கணபதி. முத்துசாமி தீட்சிதரின் “வாதாபி கணபதிம் பஜேஹம்” என்கிற கிருதி இவர் திருமுன்னே பிறந்தது. பஞ்ச முக விநாயகர், அடுத்து ஆயிரம் லிங்க உருவங்கள் அமைந்த சகஸ்ரலிங்கம், விசுவநாதர், அடுத்து சித்திர பீடம். அகத்தியர் நிறுவிய இப்பீடத்தில் சப்த கோடி மந்திர சாரம் ஆவாகனம் செய்யப்பட்டுள்ளது. தீயசக்திகளால் துன்புறுவோர் இங்கு வழிபட ஆபிச்சார பிரயோகங்களை எதிர்கொள்ள இயலும். அடுத்து பிட்சாடனர் – உற்சவ மூர்த்தி.

மின் ஒளியில் கமலாலயக்குளமும் மேற்கு கோபுரமும்


அடுத்து வருணன் மகளாக பிறந்து திருமாலின் கரம் பற்ற வேண்டி தவம் இயற்றிய திருமகள் சன்னதி. தனி சன்னதியில் திருமகளை சன்னல் வழியாகத்தான் சேவிக்க இயலும். இனி பராசக்திபுரம் என்கிற ஆரூருக்குகமலாலயம்என்ற பெயர் வரக் காரணமான புராண சம்பவம் பற்றிப் பார்ப்போமா?  . வடமேற்கில்
நீதானெத் தணையாலும்- நீடுழிக் க்ருபையாகி;
மாதானத் தனமாக- மாஞானக் கழல்தாராய்
வேதாமைத் துனவேளே- வீராசற் குணசீலா;
ஆதாரத் தொளியானே- ஆரூரிற் பெருமாளே – என்று திருப்புகழில் அருணகிரிநாதர் பாடிய   வள்ளி தெய்வானை உடனாய  சுப்பிரமணியர் சன்னதி.   அடுத்து சந்தனாச்சாரியார் கற்திருமேனிகள்.

இத்திருச்சுற்றின் வடமேற்கு மூலையில் நவக்கிரகங்கள் நேர் வரிசையில் காணப்படுகின்றன. திருவாரூர் பிறந்தவர்கள் அனைவரும் சிவகணங்கள் என்பதால் அவர்களின் மீது தங்களின் ஆணை செல்லாது என்று திகைத்து நிற்கின்றனரோ? அருகே சனிபகவான் பூசித்த லிங்கம், அதன் அருகே சனியின் ஆலோசனையினால் நளன் பூசித்த லிங்கம். நவக்கிரக மாடத்தூண் ஒன்றில் சிறிய பிறையில் நெல்லிக்கனி பிள்ளையார்.

வடக்கு திருச்சுற்றில் இரண்டு துர்க்கைகள், திருநீலகண்டர், லிங்கோத்பவர் எழுந்தருளியுள்ளனர்.  சண்டிகா மகிஷாசுரமர்த்தினி தனிக் கோட்டத்தில் எட்டுக்கரங்களுடன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றாள். நுணுக்கமான வேலைப்பாடுகளுடன்  கூடிய அற்புதத் திருமேனி. திருவிழிகளில் அபார கருணையும், நாசி வளைவில் ரௌத்ரமும் கலந்த தோற்றம், இவளை வழிபட சத்ரு பயம், வழக்கு, நோய், தீய சக்திகளின் பாதிப்பு சூரியனைக் கண்ட பனி போல விலகும். நவமியில் பூசித்தால் நன்மை அனைத்தும் வழங்குகின்றாள். பௌர்ணமியன்று பூசித்தால் பரிபூரண வாழ்வளிப்பாள்.

இச்சுற்றில் ஆதி சங்கரரின் கற்திருமேனி உள்ளது. அவரின் ஆணவம் களைய கமலாம்பிகை சுவடி ஒன்றை கருவறையில் வைத்து அதனை குருக்கள் கனவிலும் எடுத்துரைத்து மறுநாள் அச்சுவடியின் விளக்கத்தை ஆதிசங்கரரிடம் குருக்கள் கேட்க  சரஸ்வதியின் அருள் பெற்ற சங்கரர் புரியாமல் சங்கடப்பட கமலாம்பிகையின் சரண் பணிந்து ஆணவம் நீங்கினார் என்கிறார்கள்.

புற்றிடங்கொண்டாரின் சன்னதியின் வடபுறம் நிர்மால்ய வாசலுக்கு நேராக ருணஹரேஸ்வரர். பிறவிக் கடனை தீர்ப்பதுடன்,  தீராத நோய்களையும், திரும்பி வராத கடனையும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும், இவரை வழிபடும் பக்தர்களுக்கு தீர்த்து வைப்பதால் இவர் ருண விமோசனர் என்றழைக்கப்படுகிறார். இலிங்க ரூபத்தில் அருள் பாலிக்கும் இவரை அமாவாசையன்று அபிஷேகம், உப்பு, மிளகு காணிக்கை செலுத்தி வழிபட்டால் மிகவும் பலன் கிட்டும். தற்போது பித்தளைக் கவசத்தில் ஒளிர்கின்றது இவர் சன்னதி.

இவருக்கு அருகே ஆதி சண்டிகேஸ்வரர். அற்புதமான செப்புத்திருமேனி. வீதி விடங்கப்பெருமான் திருவீதி வலம் வரும் போது பஞ்சமூர்த்திகளில் ஒருவராக வலம் வருபவர்,  பங்குனி உத்திரப் பெருவிழாத் திருநாள் குறித்து ஓலை அறிவிப்பவர்,  எம்பெருமானின் ஆழித்தேரோட்டத்தின் போது உடன் வலம் வருபவரும் இவரே. இவர் பூசித்த லிங்கத்திருமேனி இவரது சன்னதிக்கு  அருகில் உள்ளது.

அனைத்து சிவஸ்தலங்களிலும் ஒரு சண்டிகேஸ்வரர் மட்டுமே அருள் பாலிப்பர் ஆனால் திருவாரூரில் மட்டுமே இரண்டு சண்டிகேஸ்வரர்கள் அருள் பாலிக்கின்றனர். முதலாமவர் ஆதி சண்டிகேஸ்வரர், இரண்டாமவர் எம சண்டிகேஸ்வரர்.  திருவாரூரில் பிறந்தவர்கள் அனைவரும் சிவகணங்களே ஆவர். ஆதலால் எமனுக்கு இவ்வூரில் வேலை இல்லை என்பதால் அவன் தியாகேசரிடம் முறையிட  எம்பெருமானும் கருணையுடன் எமனுக்கும்                          சண்டிகேஸ்வரப் பதவி அளித்தார் என்பது ஐதீகம்.

எமனுக்கு சண்டிகேஸ்வர பதவி கொடுத்த தலம் என்பதால், எமபயமுள்ளவர்கள் இத்தலத்தில் வழிபடுவது நலம் பயக்கும். எமசண்டிகேஸ்வரர் சடை, தாடியோடு ஒரு காலை ஊன்றி முழங்காலில் முகம் வைத்து,   நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றார். மனு வேந்தனை சோதிக்கப் புறப்பட்ட தியாகேசப் பெருமான் தாய்ப்பசு வேடம் கொண்டார். எமனை அழைத்தார், ஆணையிட்டார். எமன் கன்றாகினான். வீதிவிடங்கன் தேர்க்காலில் கன்று (எமன்) மாய்ந்தது. எமன் உயிர்த்தெழும் வரை சண்டிகேஸ்வரரை எமன் பதவிக்குரிய பணியை பார்க்கப் பணித்தார் பெருமான் என்பர் பெரியோர்.



பூங்கோவிலின் கூரை ஓவியம்


வடக்குத் திருச்சுற்றின் இறுதியில் கிளிக்குறடு மேடையில் சந்திரசேகரர், தருணேந்து சேகரியுடன் அருள் பாலிக்கின்றார். தியாகேசர் திருமுன் பட்டம் புனைந்து திருக்கோயில் உற்சவங்களில் எழுந்தருளுபவர் இவர். சந்திரனுக்குரிய இவ்வாலயத்தில் ஈசான மூலையில் எழுந்தருளியுள்ள இவர் சாதகனின் சிரசில் ஈசான அனுபவத்தை உணர்த்துகிறார்.

வடகிழக்குப்பகுதியில் காலபைரவர் அருள் பாலிக்கின்றார். இவரது திருமேனியில் 12 இராசி சக்கரங்களும் உள்ளன என்பர். அடுத்து ஐயனின் ஐம்முகங்களைக் குறிக்க பஞ்ச லிங்கங்கள். இவர்கள் வன்மீகர் எழுந்தருளும் பூங்கோயில், தியாகேசர் எழுந்தருளும் பொற்கோயில் முதல் திருசுற்றில் அருள் பாலிப்பவர்கள். 

புற்றிடங்கொண்டார் மற்றும் தியாகேசரின் கருவறை சுற்றுச்சுவரில் பெருமானின் பல ஆடற்கரணங்கள் அவரே ஆடுவது போல அருமையான ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. அஷ்டபுஜங்களுடன் ஸ்வதிக்க கரணத்திலும், விஷ்ணுக்கிராந்த கரணம், ஊர்த்வஜானு கரணம், நிகுஞ்சிதம், லலிதம், ஊர்த்துவதாண்டவம் என்று பல் வேறு ஆடற்கரணங்களின் ஓவியங்கள் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்து. அவையனைத்தையும் இப்போது புதிதாக வர்ணம் தீட்டி கண்ணாடி காப்பிட்டு காப்பாற்றியுள்ளனர். இனி இரண்டாம் சுற்றில் அமைந்துள்ள சன்னதிகள் எவை என்று காணலாம் அன்பர்களே.


                                                           திருப்பாத தரிசனம் தொடரும் . . . . 

3 comments:

கோமதி அரசு said...

//தியாகேசரின் அற்புத நடனத்தை முதலில் தரிசித்து பின்னர் திருவாரூரின் பூங்கோவிலை சுற்றி வந்து திருமூலட்டானத்தாரையும், தியாகேசரையும் அற்புதமாக தரிசிக்கலாம் அன்பர்களே.//

தியாகேசரின் அற்புத நடனத்தை தரிசனம் செய்தேன்.தியாகேசரை தரிசனம் செய்தேன்
நன்றி நன்றி.

கோமதி அரசு said...

பகிர்ந்த தேவார பாடல்களை பாடி இறைவனை வேண்டிக் கொண்டேன். கோவிலை வலம் வந்தேன்.
தொடர்கிறேன்.

S.Muruganandam said...

//பகிர்ந்த தேவார பாடல்களை பாடி இறைவனை வேண்டிக் கொண்டேன். கோவிலை வலம் வந்தேன்.//


மிக்க நன்றி. கோமதி அம்மா.