Sunday, March 15, 2020

திருப்பாத தரிசனம் - 14


ஸ்ரீதியாகராஜர் திருக்கோயில் சுற்றுக்கோயில்கள்


மேற்கு கோபுரம்


புற்றிடங்கொண்டாரின் கருவறைக்கு மேற்கே திருமகள் சிவலிங்கத்தை ஸ்தாபித்து திருமாலை கணவனாக பெற்றாள்.  அதற்கு வடக்கில் பிரம்மன் சிவலிங்கம் ஸ்தாபித்து அர்சித்து பலன் பெற்றான்.  மேற்கு பக்கம் அக்னியும், அதற்கு வடக்கில் தேவர்கள் விருத்திராசுரனை வதைக்க வரம் வேண்டி ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வணங்கினர்.  அதற்கு வடக்கில் இந்திரன் ஒரு சிவலிங்கத்தை நிறுவினான்.  அதற்கு வடதிசையில் அசுவினி தேவர்கள் சிவலிங்கம் நிறுவி மலர்களால் அர்ச்சித்து பல விதமான சித்திகளைப் பெற்றனர்.  மேற்கே இயமனும், வாயு திக்கில் ஜேஸ்டாவும் சிவபூசை செய்தனர். ஈசான திக்கில் சுக்கிரன் சிவலிங்கம் நிறுவி வழிபட்டு இறந்தாரை எழுப்பும் மிருத சஞ்சீவி மந்திர சக்தியைப் பெற்றார்.   மூலத்தானத்தின் கிழக்கில் இந்திரன் சிவ பூசை செய்து அகலிகை கொடுத்த சாபத்தில் இருந்து விடுபட்டான்.  அதற்கு வடபால் விசுவதேவரும், அதன் வடக்கே வேதங்கள் பூசித்த லிங்கங்கள் உள்ளன அதன் வடபால் கலைமகள் பூசித்த லிங்கம் அமைந்துள்ளது.  வடபுறம் திருமால் சிவபூசை புரிந்தார்.  அதற்கு வடக்கே ஆணவத்தால் சிவபெருமானை அவமதித்த தட்சன் பூசித்தான். மேலும் துர்க்கை, சப்த மாதர்கள், யமன், விநாயகர், வாலி, நாரதர், தும்புரு, வசிட்டர், அருந்ததி,   வீரபத்திரர், காளி, சந்திரன், சூரியன், நளன், மன்மதன், சாஸ்தா, நந்தி, பிருங்கி வாயு, கௌசிகர், காசியபர், உபமன்யு, பரசுராமர், பகீரதன், வாசுகி, அனந்தன், கார்க்கோடகன், தட்சன், பதஞ்சலி ஆகிய ஐந்து சிறந்த நாகங்கள், சனற்குமாரர், பஞ்ச பாண்டவர்கள் இன்னும் பலர் பூசித்த லிங்கங்கள் உள்ளன. மூன்றாம் பிரகாரத்தில் உள்ள விஸ்வகர்ம லிங்கத்திற்கு ஒற்றைப் படை எண்ணிக்கையில் செங்கல் வைத்து அபிஷேகம் செய்து வழிபட்டால் வாஸ்து தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இவ்விஸ்வகர்மேஸ்வரர் சன்னதி பீடம் முதல் கலசம் வரை கருங்கல்லாலேயே அமைந்துள்ளது. விமான கோஷ்டம் மற்றும் கருவறை கோட்டங்களில் உள்ள சிற்பங்களும் கருங்கல்லால் அமைந்திருப்பது தனிச் சிறப்பு. இனி பிரகாரத்தில் அமைந்திருக்கும் சில சிறப்புமிக்க சன்னதிகளைக் காணலாம்.

ஆனந்தேச்சுரம்:  வன்மீகர் எழுந்தருளும் பூங்கோயிலுக்கு வடமேற்காக தேவதீர்த்தத்தின் கிழக்காகவும், கமலாம்பாள் ஆலயத்திற்கு தென்கிழக்காகவும் ஆனந்தீஸ்வரர் ஆலயம் அமைந்திருக்கின்றது.   வைகாசி மாதம் விசாகத்தன்று புனிதமான தேவதீர்த்தத்தில் நீராடி ஆனந்தேஸ்வரரை வழிபட சிறப்பு.  காஞ்சி மன்னன் பத்திரசேனனும் அவனது மனைவி கமலாவதியும் தமது முற்பிறவியில் வணிகனாக இருந்ததாகவும் செல்வத்தை எல்லாம் இழந்து திருவாரூர் அடைந்து கமலப்பொய்கையிலிருந்து மலர் கொய்து மாலை கட்டி விற்கும் போது ஒரு வைகாசி விசாகத்தன்று மாலை விற்காமல் போகவே அதை தியாகேசருக்கு சமர்ப்பித்து இரவு முழுவதும் இறைவனை தொழுது பசியினால் இருவரும் இறைவனடி சேர்ந்தனர். முற்பிறவியின் புண்ணியத்தால் காஞ்சி நகரில் அரச பரம்பரையில் பிறந்தான். அவன் மனைவியும் தேசனாம்புரியில் அரச பரம்பரையில் பிறந்தாள். இருவருக்கு திருமணமும் முடிந்தது. இப்பிறப்பிலும் ஆனந்தேஸ்வரரை மறக்காமல் வணங்கி திருக்கயிலாயம் அடைந்தனர்.

ஆனந்தேஸ்வரர் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இவரின் தென்புறம் கமலமுனி சித்தர் சமாதி உள்ளது. இது கபில முனி சித்தியான இடம் என்று கருதுவாரும் உண்டு. வாராகி, கௌமாரி புடைசூழ முகடி, தவ்வை, மூத்தவள் என்றழைக்கப்படும் ஜ்யேஷ்டா தேவி கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளாள். இவள் மாதர்களின் கரு உறுப்பு, மாதவிடாய் தொடர்பான சிக்கல்களை தீர்த்தருளுகின்றாள். இக்கோவிலின் தென்புற பிறை மாடத்தில் இரு புறமும் சனகாதி முனிவர்கள் வீற்றிருக்க நடுவே இராஜேந்திர சோழனும் அவனது காதலி பரவை நங்கையும் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கின்றனர். கருவறையின் வடபுறம் கூத்தாடும் பிள்ளையார் அருள் பாலிக்கின்றார். அவரை நாம் ஒரு பக்கத்திலிருந்து எட்டிப் பார்த்தால் அவர் நம்மை நோக்கி தலையை சாய்த்துப் பார்ப்பது போல தோன்றும்.  தியான மண்டபத்துடன் கூடிய ஆலயம் இது.

ஆனந்தேஸ்வரத்தின் இன்னொரு வரலாறு. ஆலய இரண்டாம் பிரகாரத்தில் இடம் பெற்ற சிவலிங்கத்தை ஒரு காலத்தில் மங்கண முனிவர் என்ற புண்ணிய புருஷர், அருகே உள்ள வாணி தீர்த்தத்தில் நீராடி, நாள்தோறும் பூஜித்துவந்தார். அதன் நற்பலனாக அவருக்கு பெரும் சித்துகள்  கைவரப் பெற்றது. அதனால் பெரும் களிப்புக்கு ஆளான அவர் தரையிலிருந்து ஜிவ் என எழுந்து பூமிக்கும் வானுக்குமாக ஆனந்தக் கூத்தாட ஆரம்பித்தார். இதனால் ஏற்பட்ட விபரீத விளைவாக மூன்று உலகங்கள், கடல், மலைகள் என அனைத்தும் அதிரத் தொடங்கின. போதாதற்கு சிவ மைந்தன் விநாயகனும் அக்கூத்தை தானும் ஆடத்தொடங்கிவிட்டார்.
இதனால் அச்சமுற்ற தேவர்கள் பிரம்மதேவன் தலைமையில் கூட்டமாகச் சென்று சிவபெருமானிடம் சரண் புகுந்தனர். உடனே ஈசன் ஆனந்த கூத்து நிகழ்த்தும் மங்கண முனிவரிடம் சென்று காட்சி தந்துமுனிவா, ஆட்டம் போதும். நிறுத்திக்கொள்! நீ இதுவரை பக்தியுடன் பூஜித்த லிங்கம் ஆனந்த ஈசன்என இனி அழைக்கப்படுவார். இந்த ஊர் ஆரூர் என்ற பெயரோடு ஆனந்தபுரம் என்ற பெயரையும் கொள்ளும் என வரமளித்ததோடு மேலும் இப்படி அருளினார். “இம்மூர்த்தியை ஒரு தரம் நினைப்பவர், நாவினால் புகழ்பவர், காண்பவர் கொலைப்பழி கொண்டவராக இருந்தாலும் கோடி பாவங்களை செய்திருந்தாலும் அவை அழிக்கப்பட்டு முக்தியை அடைவர்.”
மேலும் எவரொருவர் ஆனந்த ஈசனை வைகாசி மாத விசாக நாளில்,  இரவில் உணவு உறக்கம் நீக்கி செழுமை மிக்க 1000 தாமரை மலர்கள் கொண்டு அர்ச்சித்துவிட்டு, மறுதினம் எளியோருக்கு தானம் புரிந்து பாராயணம் முறைப்படி மேற்கொள்ள, அவர்கள் இவ்வுலகில் இந்திரனுக்கு ஒப்பான செல்வம் பெற்று சிறந்து நீடூழி வாழ்ந்து பின்னர் முக்தியின்பத்தையும் அடைவர்!” என அருளி மறைய, மங்கண முனிவர் கூத்தை நிறுத்திவிட்டு, களிப்புடன் இறைவன் காட்சி தந்த இடத்தை நமஸ்கரித்தார். அன்றிலிருந்து ச்சிவலிங்கத்தை ஆனந்தேசுவரன் என்ற பெயரில் பக்தர்கள் வணங்க ஆரம்பித்தனர்.  மங்கண முனிவர் ஆனந்தக் கூத்தை நிகழ்த்தியபோது தானும் நடனம் புரிந்த விநாயகர் “ஆனந்த நடன விநாயகர் ஆவார்.





ஆடகேச்சுரம்: பூங்கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் தென்புறம் தல விருட்சத்தின் அருகே காணப்படும் சிறு கோயிலே ஆடகேச்சுரம். இச்சன்னதிக்கு மூலாதார பத்மம், சுஷும்னா வாயில், குல குண்டம், நாக பிலம், நாடி கந்தம், மோக்ஷ துவாரம் என்று பல்வேறு இராஜயோகம் தொடர்பான பல பெயர்கள் உண்டு.  இச்சன்னதியில் பிலவாயில் ஒன்றுள்ளது. இதை நாகபிலம் என்பர். இப்பெரும்பிலத்தில் அநாதியாய் உமையோடு இலங்கொளி ஹாடகேச்சுரப்பேர் ஒப்பிலா மூர்த்தி உலகெல்லாம் உய்ய ஊழிதொறும் வீற்றிருக்கின்றார் என்றும். இவரை. பிரம்மா, விஷ்ணு, இந்திரன், திக்பாலகர்கள், சப்த நதிகள், தேவ கணங்கள், ருத்ர கணங்கள் சனகாதி முனிவர்கள் பூசித்துள்ளனர்.

தேவர்கள் எழுப்பிய புற்றில் ஆடகேசத்து புகுந்ததை அப்பர் பெருமான் 
நீள் வான முகடதனை தாங்கி நின்ற நெடுந்தூணை பாதாளக்கருவை
ஆரூர் ஆள்வானை கடுகச் சென்று அடைவேன் – என்று பாடுகிறார். இம்மூர்த்தியை தொழும் மானிடர் யாவரும் அமரர் உலகம் சென்று அந்தம் இல் இன்பம் பெறுவர். ஹாடகேஸ்வரரை சித்திரை மாத சதுர்த்தியன்று இரவு பூசிக்க இந்திரப்பதவியடைவர் என்றும்.  இம்மூலாதார பத்மத்தில் உள்ள நான்கு இதழ்களில் வரதா, ஸ்ரீ, ஷண்டா, சரஸ்வதி ஆகிய சக்திகளும், மையத்தில் சிவ குருவான ஞானஸ்கந்தர் ஸ்தாபித்த சக்தி வேலும் விளங்குவதாயும், சித்திரை மாதம் வளர்பிறை சஷ்டியன்று     இரவு, சக்திகள் நால்வரையும் தொழுபவர் வேண்டியதை எல்லாம் அடைவர் என்றும் திருவாரூர் புராணம் கூறுகின்றது.  சிவராஜ யோகத்தின் குறியீடாக இவ்வாலயம் அமைந்துள்ளது.   

இச்சன்னதியில் உருவ வழிபாடோ, அலங்காரங்களோ, வேறு ஆரவாரங்களோ கிடையாது. ஆகையினால் இயற்கை சூழலுடன் கூடிய அமைதி தவழும் தியான மண்டபமாக திகழ்கின்றது. எனவே தூய அன்பர்கள் மன ஒருமையுடன் தொழுது தியானிக்க அமைதியான சூழலோடு அமைந்துள்ளது. இச்சன்னதியின் அருகில் வருபவர்கள். அவர்களை அறியாமலே ஈர்க்கப்பட்டு, பயபக்தியுடம் உள்ளே வந்து அமர்ந்து தியானத்தில் அமர்வர் என்பது கண்கூடு. 

பிராணன் ஒவ்வொரு மனிதரிடத்திலும் மூலாதாரத்தில் இருந்து கொண்டு இயங்குகின்றது. பிராணனையே குண்டலினி என்று கூறுவர். குண்டலினி ஒரு பாம்பைப் போல சுருண்டு மூலாதாரத்தில் உறங்குகின்றது என்று கூறுகின்றது யோக மரபு. இச்சன்னதிக்கு அருகில் தலமரம் அமைந்துள்ளது. இம்மரத்தின் நுனி கிளைகள் எல்லாம் வளைந்து நெளிந்து செல்லும் பாம்பைப் போலவும், இலைகள் எல்லாம் படம் எடுத்த பாம்பின் தலையைப் போலவும் தோற்றமளிக்கின்றன. கருஞ்சிவப்பு நிறத்திலுள்ள இதன் ஒரு மலரைக் காம்புடன் சேர்த்துப் பார்த்தால் ஒரு அழகிய பறவையைப் போல தோற்றமளிக்கின்றது. மலரின் நடு வயிற்றுப்பகுதியை சற்று கிழித்துப் பார்த்தால் விரல்களுடன் கூடிய ஒரு பறவையின் கால்களைப் போல மலர்களின் இரு மகரந்த தாள்கள் வெளி வரும். மரத்தின் அடியில் கணபதி அமர்ந்திருக்கின்றார். இதைப் போன்றதொரு உருவகம்தான் ஸ்ரீதியாகராஜர் சன்னதியிலுள்ள மூலாதார கணபதியும். குண்டலினி எழும்பி விட்டால் காமம் கெட்டு ஒழியும் என்பதை விளக்கவே இச்சன்னதிக்கு எதிரே உள்ள காமத்தின் உருவான நந்தி உடல் சோர்ந்து, தலை ஒரு பக்கம் சாய்ந்துள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக பலி பீடத்தில் பிற ஆசைகளை பலி கொடுத்துவிட்டு மேலே சென்றால் கைலாசத் தியாகரை தரிசிக்கலாம். கைலாயத்திற்கும் உயர்ந்தது எதுவும் இல்லை என்பதை உணர்த்த கைலாசநாதருக்கு மேலே ஸ்தூபி ஏதும் அமைக்கப்படவில்லை.  வடப்புறம் ரௌத்ர துர்க்கை சன்னதி.



சித்தீசுவரம்:வ்வாலயமும் ஒரு தல வரலாற்றைக் கொண்டுள்ளது. சிறந்த சிவ பக்தனான அரசன் அம்சன் நீண்ட காலம் பஞ்சாட்சர ஜெபத்தை கடுமையாக ஜெபித்து, அதனால் சில சித்துக்கள் கைவர பெற்றான். அம்மன்னனை சித்தீசன் என்ற சிறப்புப் பெயர் கொண்டு அனைவரும் அழைத்தனர். சித்தீசனுக்கு புத்திர பேறு கிடைக்காத நிலையில் அவன் சுக்கிராச்சாரியாரை சந்தித்து, வணங்கி  அதற்கான வழிமுறைகளை அருள வேண்டினான். அவர் தந்த ஆலோசனையின் படி மன்னன் ஒரு சிவலிங்கத்தை நிறுவி, வழிபட்டு, அதன் பலனாக புத்திர பேற்றை அடைந்தான். அந்த லிங்கம் குடி கொண்ட இடம்  மன்னன் பெயரால் சித்தீசுவரமானது.

ஒரு சந்தர்ப்பத்தில் அந்தணர் குலத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன், தண்ணீர் பாம்பை பிடித்து விளையாடுகையில், அவன் பாம்புடன் முனிவர்கள் பலர் தவம் செய்யும் இடத்திற்கு சென்றுவிட்டான். அப்பாம்பை அவர்கள் மீது அவன் குழந்தைத் தனமாக வீச, நிஷ்டையில் ஆழ்ந்திருந்த ஒரு முனிவரின் ஏகாந்த நிலையை பாதித்து விட்டது. அச்செயலால் அவர் சினமுற்று, சிறுவனை சபித்துவிட்டார். பாதிப்புற்ற சிறுவன் கண்ணீர் மல்க அம்முனிவரிடம் மன்னிப்பு கோரினான். சற்று கோபம் தனிந்த முனிவர், சாப விமோசனம் அருளிய முறையில் அவன் சித்தீசுவரர் முன்பு தினமும் ஷடாட்சர மந்திரத்தை ஓதி, சிவனருளால் சாபம் நீங்கப் பெற்றான் என்ற செய்தியும் தல வரலாற்றில் உள்ளது.
விசுவகர்மேசுவரம்: தியாகேசர் திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் இடம் பெற்றுள்ள தனி கருங்கற் பணிகள் நிறைந்த கோயிலாக திகழும் விசுவகர்மேசுவரம். அழகிய கொடுங்கைகளும், வரிகளும், திருவுருவங்களும் செறிந்து இதற்கு அணி சேர்க்கின்றன. சிற்பக்கலையை பின்னனியாக கொண்ட ஆலய நாயகர் விசுவகர்மேசுவரர் அருட்காட்சி அளிக்கிறார். புதிதாக வீடு கட்ட எண்ணமிடும் பக்தர்கள், வேலையை ஆரம்பிக்கும் முன்பாக சில செங்கற்களை இறைவன் முன்பு வைத்து பூஜை செய்யும் வழக்கமும் உள்ளது. இங்கே தட்சிணாமூர்த்தி, கணபதி, துர்க்கை, பிரம்மா, முதலான தெய்வங்களையும் ஒருங்கே தரிசிக்கலாம்.




ரௌத்ர துர்க்கை – இராகு கால துர்க்கை – எரிசின கொற்றவை: திருவாரூர் ஆலயத்தின் தெற்கு பிரகாரத்தில் தனி சன்னதியில் ரௌத்ர துர்க்கை நின்ற கோலத்தில் எட்டுக் கரங்களுடன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றாள். இவள் சன்னதியில் இராகு காலத்தில் அர்ச்சனை செய்பவர்களுக்கு நினைத்தக் காரியங்களை முடித்து இராகு தோஷத்தினால் உண்டாகும் திருமணத் தடைகளை நிவர்த்தி செய்கிறாள் இத்துர்க்கை. பிரதி வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் இராகுகால பூஜை விசேஷம். பதவி உயர்வு வேண்டுவோரும், பணி மாற்றம் வேண்டுவோரும் இத்துர்க்கையை வழிபடுகின்றனர்.

சப்த மாதர்கள்: திருக்கோவிலின் இரண்டாம் திருச்சுற்றில் மணிமண்டபம் அருகே வடக்கு நோக்கி சப்த மாதர்கள் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். பழமையான பல்லவர் கால மூர்த்தமாகும். பல்லவர், சோழ, பாண்டியர், விசயகரர், மராட்டியர் போன்ற பல்வேறு அரச பரம்பரையினர் வழிபட்ட அம்மன்கள் இவர்கள் ஆகும்.

மேதா தட்சிணாமூர்த்தி: தட்சிணாமூர்த்திக்கு வழக்கமாக பிரம்மாவின் மனதில் தோன்றிய மகன்களான சனகர், சனத்குமாரர், சதானந்தர் மற்றும் சனாதனர் ஆகிய 4 சீடர்களுடன் அருள் பாலிப்பார். திருவாரூர் திருத்தலத்தில் மேதா தட்சிணாமூர்த்தியாக தனி சன்னதி கொண்டு அருள் பாலிக்கும் தலம் திருவாரூர். இடபத்தின் மேல் அமர்ந்து ஞானம் உபதேசிக்கும் கோல தட்சிணாமூர்த்தியை மேதா தட்சிணாமூர்த்தி என்பர். இடபதேவர் தர்மத்தின் வடிவம், தர்மத்தின் பொருளை உபதேசிக்கும் தட்சிணாமூர்த்தியுடன் இடபதேவரையும் வழிபடுவது சிறப்பு.

அனுமந்தேஸ்வரர்:  சீதையைத் தேடி இலங்கை சென்ற போது இராவணனால் தீக்கிரையாக்கப்பட்டுப் புண்ணாகிப் போன அனுமனது வால் ரணமாயிற்று, பல தலங்களுக்கு சென்றும் புண் ஆரவில்லை. பின்னர் ஆரூரை அடைந்த அனுமன் ஒரு லிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்தார். ஈசன் அருளால் மீண்டும் அழகிய வால் பெற்றார் ஆஞ்சநேயர். அவர் பூஜித்த லிங்கம் அனுமந்தேஸ்வரர் என்ற பெயரில் அருள் பாலிக்கின்றார்.  தீயினால் ஏற்படும் காயங்களை நிவர்த்தி செய்பவர் அனுமந்தேஸ்வரர்.

ஒட்டுத் தியாகராஜர்: சுந்தரருக்காக தியாகராஜர் காட்சி கொடுத்த கோயில். இச்சிறுகோயில் வடக்கு இராஜ கோபுரத்தின் எதிரே உள் பிரகாரத்தில் உள்ளது.  எம்பிரான் தோழரான சுந்தரர் ஒரு நாள் தியாகேசரை தரிசிக்கச் சென்றபோது தேவாசிரிய மண்டபத்தில் இருந்த அடியார்களை வழிபடாது சென்றார். இதனால் கோபம் கொண்ட விறண்மிண்ட நாயனார் சுந்தரரை ஆலயத்திற்குள் செல்ல முடியாதபடி தடுத்தார். இதனால் மனம் வருந்திய சுந்தரருக்கு தியாகேசப்பெருமான் தனியே காட்சிக்கொடுத்தார். அவரே இந்த ஒட்டுத் தியாகராஜர் ஆவார்.

ஜுரதேவர்: இத்திருக்கோவிலின் இரண்டாம் திருச்சுற்றில் இராஜநாராயண மண்டபத்தின் வெளிப்புறம் தென்முகமாய் ஜுரதேவர் சன்னதி உள்ளது. இவர் த்ரிபாதர். மாகேசுவர மூர்த்தங்களில் ஒருவர். விடாத காய்ச்சல் இருப்பின் ரசம் நிவேத்யம் செய்ய உடன் காய்ச்சல் நீங்கும். இச்சன்னதி இப்போது பித்தளைக் காப்பில் மிளிர்கின்றது.





திருத்தமனக நந்தவனம்: இரண்டாம் பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் நாவுக்கரசர் திருநாமத்தால் இரண்டாம் குலோத்துங்க சோழனால் உருவாக்கப்பட்ட நந்தவனம் உள்ளது.  தியாகப்பெருமானுக்கும், நம்பியாரூரருக்கும், நங்கை பரவையாருக்கும் பச்சை சாத்தும் திருவிழாவின் போது மருக்கொழுந்து(தமனகம்) சார்த்துவதற்காக இந்நந்தவனம் தோற்றுவிக்கப்பட்டதாக இம்மன்னனின் கல்வெட்டு பகர்கின்றது. இதுவரை பூங்கோவிலை வலம் வந்து தரிசித்தோம் இனி திருவாரூர் ஆலயத்தில் உள்ள மண்டபங்களைப் பற்றி காணலாம் அன்பர்களே.

சித்தந் தெளிவீர்காள், அத்த னாரூரைப்
பத்தி மலர்தூவ, முத்தி யாகுமே.


2 comments:

கோமதி அரசு said...

திருவாரூர் தல வரலாறும், படங்களும் மிக அருமை.
தொடர்கிறேன்.

S.Muruganandam said...

அனைத்தும் அவன் கருணை. அழைத்து தரிசனம் கொடுத்தால் அதைப் பகிர்ந்து கொள்கிறேன். தொடர்ந்து வாருங்கள் மிக்க நன்றி.