ஆருர் அரநெறி அசலேஸ்வரர்
திருவாரூர் திருக்கோவில் வளாகத்தில் இரண்டாம் பிரகாரத்தின் தென் கிழக்கு மூலையில் அமைந்துள்ள திருக்கோயிலே அரநெறி ஆகும். தேவாரப்பாடல் பெற்ற சிறப்பும் இக்கோவிலுக்கு உண்டு. திருநாவுக்கரசர் இரு பதிகங்கள் அசலேஸ்வரரைப் பற்றி பாடி அருளியுள்ளார்.
பொருங்கைமத
கரியுரிவை யானைப் பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தினானை
கரும்புதரு
கட்டியை இன்னமிர்தைத் தேனை காண்பரிய செழுஞ்சுடரைக் கனககுன்றை
இருங்கனம
மதிலாரூர் மூலட்டானத் தெழுந்தருளி இருந்தானை இமையோர் ஏத்தும்
அருந்தவனை
அரநெறியிலப்பன் தன்னை அடைந்தடியேன் அருவினை நோய் அறுத்தவாறே -
என்று பாடிய அரநெறி ஆலயம் புற்றிடங்கொண்டார்
ஆலயத்தை விட மிகவும் பழமையானதாகவும், முதன்மையானதாகவும் இருந்துள்ளது.
இறைவன்
- அசலேசுவரர்; இறைவி - வண்டார்குழலி என்கிற
புவனேஸ்வரி. சுவாமிக்கு திருஅரநெறி பட்டாரகர், அரநெறி ஆழ்வார் என்ற திருநாமங்களும்
உண்டு. சமற்காரன் என்ற அரசனின் கடும்
தவத்துக்கு மகிழ்ந்து அவன் பிரதிஷ்டை செய்த இலிங்கத் திருமேனியில் சலியாது
எழுந்தருளியதால் அசலேசர் என்று
திருநாமம். அசலேசுவரரோடு, பஞ்சபூத லிங்கங்களாக இறைவன் காட்சி தருவது
சிறப்பு. தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு தாம் வேண்டியவாறு
வரம் தந்து அருள் பாலிப்பவர் இவர். அப்பர் பெருமான் மற்றும் சேக்கிழாரின்
பாடல்களின் மூலம் இவ்வாலயத்தின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.
கமலாலய சிறப்பு
என்னும் தலபுராணத்தில் அசலேஸ்வரத்தின் சிறப்பு விரிவாகக் கூறப்பட்டுள்ளது. சமற்காரன்
என்னும் மன்னர் ஒரு சமயம் காட்டிற்கு வேட்டையாட சென்ற போது கன்றுக்கு பாலூட்டிக் கொண்டிருந்த
மானின் மீது கணை தொடுத்தான். அதனால் மான் மன்னனுக்கு குட்ட நோய் பற்றுமாறு சாபம் கொடுத்தது.
நோய் தீர வேண்டி சமற்காரன் பல் வேறு ஆலயங்களுக்குச்சென்று பல்வேறு தீர்த்தங்களில் நீராடினார்.
ஆயினும் நோய் தீரவில்லை. நிறைவாக அரசன் திருவாரூரை அடைந்தான்.
அங்கிருந்த
அந்தணர்களிடம் தன் உடலின் அவலத்தை மாற்றும் உபாயம் வினவ அவர்களும் சங்க தீர்த்தத்தில்
நீராட உனது உடலுற்ற நோய் நீங்கும் என்று அத்தீர்த்தத்தின் சிறப்பைக் கூறினர். ஒரு சமயம்
சங்கமுனி என்ற அந்தணன், வனத்தில் லிகிதமுனி என்னும் முனிவரின் ஆசிரமத்தில் நுழைந்து
மிகுந்த பசியால் நீதி நூல்களில் கூறப்பட்ட விதிகளை மீறி அங்கிருந்த கனியை புசித்தான்.
அதற்கு தண்டனையாக தனது கரங்களை வெட்ட சங்கமுனி வேண்ட லிகித முனி அவனது கரங்களை துண்டித்தார்.
சங்கமுனி
வனத்தை விடுத்து திருவாரூரை அடைந்து பந்தவினை தீர்க்கும் பாற்குண்டம் என்னும் சங்க
தீர்த்தத்தில் நீராடி புற்றிடங்கொண்ட புனிதனை பணிந்து போற்றி கடுந்தவம் செய்தான். அவனது
தவத்திற்கு இரங்கி விமலேசன் அம்மையுடன் ரிஷபாரூடராக எழுந்தருளி வேண்டிய வரம் கேட்க
என்று பணித்தார். சங்க முனியும் இழந்த இரு
கரங்ளை பெற வேண்டும் என்று இறைஞ்சினான்.
பெருமானும்
சித்திரை நட்சத்திரம் கூடிய பௌர்ணமியில் உபவாசம் இருந்து சங்க தீர்த்தத்தில் நீராட
உன் உடல் குறை தீரும் என்று அருளினார். சங்க முனியும் அவ்வாறே புற்றிடங்கொண்ட பெருமானை
துதித்து சங்க தீர்த்தத்தில் நீராடி தன் உடற்குறை நீங்கப்பெற்றார். எனவே மன்னா நீயும்
இத்தீர்த்தத்தில் உனது குட்ட நோய் தீரும் என்று உபாயம் அருளினர்.
அரசனும்
ஆயிரங்கால் மண்டபத்தின் அருகில் உள்ள பாற்குண்டம் என்னும் சங்கதீர்த்தத்தில் சித்ரா
பௌர்ணமியன்று நீராடி தன் உடல் நோய் தீரப்பெற்றான். அந்தணர்களுக்கு ஒரு கிராமத்தை பரிசளித்தான்.
பின்னர் தனது பாவத்தை தீர்த்த சங்க தீர்த்ததின் கரையில் அமர்ந்து பல நூறு வருடங்கள்
தவம் செய்தார். மன்னனது தவத்திற்கு மகிழந்த
விடையேறும் விமலன் காட்சி தந்து வரம் அளித்தார். அரசனும் பெருமானே சிறப்பு மிக்க இத்தலத்தில்
சிவலிங்கம் ஒன்றை நிலை பெற கருதினேன். அதில் கணப்போதும் நீங்காமல் உறைதல் வேண்டும்
என்று வேண்டினான். பெருமானும் அந்த லிங்கத்தினின்றும் பிரியோம் என்றும் தமக்கு அசலேஸ்வரம்
என்று திருநாமம் விளங்கும் என்றும் அருளினார்.
அசலேஸ்வரரை
மாசி மாத சதுர்த்தியன்று (சிவராத்திரி) பசு நெய்யாலும், கம்பளத்தாலும் அருசித்தவர்கள்
கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களிலும் தீவினைப்பயன் நீங்கி
புனிதம் எய்துவர் என்று திருவாரூர் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
சிவலிங்கத்தின்றும்
பெருமான் நீங்காதிருப்பாரா? என்ற ஐயம் மன்னன் மனதில் எழுந்த போது தியாகேசர் ஆகாய வாணியின்
மூலம் லிங்கத்தின் நிழல் ஒரு பக்கமே அன்றி மறு திசையில் விழாது என்று அருளினார்.
தேவாரப்
பாடல் பெற்ற அசலேச்சுரம் அரநெறி என்றே அழைக்கப்படுகின்றது. அப்பர் பெருமான்
எந்த மாதவம் செய்தனை நெஞ்சமே
பந்தம் வீடவை யாய பராபரன்
அந்தமில் புகழ் ஆரூர் அரனெறி
சிந்தையுள்ளும் சிரத்துள்ளும் தங்கவே - என்று
பாடியுள்ளார்.
அரன்நெறி – அரநெறி, அதாவது சிவநெறி,
சிவனை அடையும் நெறி என்றும், அ(ஹ)ரநெறி- பாவத்தைப் போக்கும் நெறி என்றும் பொருள் உண்டு. பல நாயன்மார்களுடன்
நெருங்கிய தொடர்புடைய ஆலயம் அசலேச்சுரம்
ஆகும்.
நீரால் விளக்கேற்றிய நமி நந்தி அடிகள்:
அரு நம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – என்று
சுந்தரர் போற்றிய நமி
நந்தி அடிகள் இவ்வாலயத்தில்
தீபம் ஏற்றுபவராக பணி புரிந்தவர் இவர். ஒரு நாள் விளக்கேற்ற எண்ணெய்
இல்லாத காரணத்தினால் அருகில் உள்ள ஒரு வீட்டிற்குச் சென்று விளக்கேற்ற எண்ணெய் கேட்டார். அது ஒரு சமணரின் வீடு. அதில் இருந்த
சமணர்கள், அடிகளை நோக்கி “கையில் ஒளிவிட்டு விளங்கும் தீயினை ஏந்திய உங்கள்
இறைவனுக்கு” விளக்குத் தேவையில்லை என்று எள்ளி நகையாடி எண்ணெய்
இல்லை என்று கை விரித்து விட்டனர். மேலும் “விளக்கெரீப்பீராகில்
நீரை முகந்து எரிப்பீராக’ என்று
ஏளனமாக கூறினர். அதைக் கேட்ட அடிகள் கவலையுற்றார். அசலேசுவரர் சன்னதிக்கு சென்று வீழ்ந்து வணங்கினார். அப்போது ஒரு ஆகாயவாணி ஒலித்தது.
இவ்வாலயத்தில் உள்ள திருக்குள நீரை முகந்து
வந்து விளக்கேற்று என்று பெருமான் அருளினார். அவ்வாணி கேட்ட அடிகளும்
கமலாலய திருக்குளத்தை அடைந்து நீரை முகந்து வந்து திரியிட்டு விளக்கேற்றினார். இவ்வாறு
நீரால் விளக்கெரித்த அற்புதம் நிகழ்ந்த கோவில் இது.
நமிநந்தியடிகளின் பெருமையை வாகீசப் பெருமான்
“ஆருர் நறுமலர் நாதன் அடித்தொண்டர் நம்பிநந்தி
நீரால் திருவிளக் கிட்டமை நீணாடறியு மன்றே”, என்றும் “தொண்டர்க்கு ஆணி” என்றும் “நந்தி பணி கொண்டருளும் நம்பன்” என்றும் போற்றியுள்ளார்.
நமிநந்தி
அடிகளது பெருமையை அறிந்த சோழ மன்னன் திருவாரூர் பெருமானுக்குரிய அனைத்து பூசைகளையும்,
சிறப்பு விழாக்களையும் நமிநந்தியடிகளையே பொறுப்பேற்று நடத்தச்செய்தான். ஒரு சமயம் ஆரூர்
பெருமான் திருமணலிக்கு எழுந்தருளியபோது நாயனார் கண்டு மகிழ்ந்து தம்மூருக்கு திரும்பினார். பலரை தொட்டு வந்ததால் தீட்டு உண்டாயிற்று என எண்ணி
வீட்டிற்கு வெளியே இருந்து தம் துணைவியாரை நீர் கொண்டு வர பணித்தார். வாசல் திண்ணையில்
திருவருளால் அடியார்க்கு உறக்கம் வந்தது. அவர் கனவில் ஆரூர் பெருமான் “அன்பனே! திருவாரூரில்
பிறந்தவர்கள் அனைவரும் சிவகணங்களே!’ என்று அருளினார். மறுநாள் திருவாரூர் புகுந்து
அங்குள்ளோர் அனைவரும் சிவசொரூபர்களாக விளங்குவது கண்டு வியந்து அடிவீழ்ந்து வணங்கினார்.
திருக்கயிலை வீற்றிருந்த சிவபெருமான் திருக்கணத்தார்
பெருக்கிய சீர்த்திருவாரூர் பிறந்தார்கள் ஆதலினால்
தருக்கிய ஐம்பொறியடக்கி மற்று அவர்தான் வணங்க
ஒருக்கிய நெஞ்சுடையவர்க்கே அணித்தாழும் உயர்நெறியே – என்று சேக்கிழார் பெருமான் திருவாரூர் பிறந்தார் புராணத்தை
பாடியுள்ளார்.
அரசியின் மூக்கை அரிந்த செருந்துணை
நாயனார்:
செருந்துணையார் இவ்வாலயத்தில் இறைவனுக்கு பூமாலை கட்டித் தொண்டு செய்து
வந்தார். ஒரு நாள் காடவ குல வேந்தனாகிய
கழற்சிங்கர் தனது தேவியோடு திருவாரூர் வந்து
இத்திருக்கோவிலினுள் வழிபடச்சென்றார். அப்போது அச்சங்காதேவி இறைவனுக்கு மாலை தொடுப்பதற்காக
வைத்திருந்த மலரை எடுத்து முகர்ந்தாள்.
இதைக்கொண்டு கோபம் கொண்ட செருந்துணையார் “இறைவனுக்கு சார்த்த
இருந்த மலரை முகர்ந்த மூக்கை அரிந்தார்”. செருந்துணை நாயனார் பூமாலை தொடுத்த இடம் என நம்பப்படும் முக
மண்டபத்தின் ஒரு பகுதியில் இன்றும் பூமாலைகள் தொடுக்கப்படுகின்றன. இவ்வாலயத்திற்கே
சிறப்புடைய செங்கழுநீர் மாலையும் இப்பள்ளித்தாம மண்டபத்தில் தொடுக்கப்படுகின்றது.
அரசியின் கையை வெட்டிய கழற்சிங்க நாயனார்:
கடல் சூழ்ந்த உலகெல்லாம் காக்கின்ற பெருமான்
காடவர் கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன் - என்று வண்தொண்டர் பாடிய கழற்சிங்கர் அரசி செய்த தவறை உணர்ந்து அவள் செய்த தவறுக்கு பூவை முதலில் எடுத்த கையையன்றோ முதலில் தண்டித்தல்
வேண்டும் என்று தன் வாளினால் அத்தேவியின் செங்கையை வளையொடும் வெட்டினார். ஆலய வழிபாட்டிற்குரிய
மலர்கள் எங்கிருந்தாலும் அவற்றை நுகர்தல் கூடாது என்ற அரன் கோயில் நெறியில் இருந்து
பிறழாது தனது பட்டமகிஷியே ஆனாலும் அவளது கரத்தையே துணித்த கழற்சிங்கனை விண்ணவரும்,
மண்ணவரும் “மறுவிய வாச மலர் மழை பொழிந்து” வாழ்த்தினார்கள்
ரிஷப வாகனத்தில் உமையம்மையுடன் எம்பெருமான் எழுந்தருளி இருவருக்கும்
அருள் பாலித்தார்.
எம்பெருமான் தோழர் சுந்தரரை விலக்கிய விறன்மிண்ட நாயனார்:
விரி பொழில் சூழ் கொன்றையார் விறன்மிண்டற்கு அடியேன் - என்று தம்பிரான் தோழர் போற்றிய இந்நாயனார் இவ்வாலயத்தில் மெய்க்கவலாராக பணி புரிந்தார். அடியார்களை வணங்கத் தவறியதால் சுந்தரரை விலக்கி வைத்து திருத்தொண்டர் தொகை பாட காரணமாக இருந்தவர் விறண்மிண்டர் ஆவார்.
இவ்வாலயம்
7ம் நூற்றாண்டில்
வாழ்ந்த மன்னன் சமற்கார பெருமானாரால் கட்டப்பட்டது. ஆதிகாலத்தில் செங்கற்கோவிலாக
இருந்தது, பின்னர் 10ம் நூற்றாண்டில் சோழப் பேரரசி செம்பியன்
மாதேவி இக்கோவிலையை முழுவதும் கற்றளியாக மாற்றிக் கட்டினார்.
தனி தேவாரப்
பாடல் பெற்ற தலம். அப்பர் பெருமான் திருத்தாண்டகம் பாடியுள்ளார். தனி கொடி மரம், தனி
திருமந்திரம் உள்ளது. நால்வர் பெருமக்களும்
இத்தலத்தைப் பாடியுள்ளனர். துவாரபாலகர்களின் அங்க அழகு அப்படியே
சொக்க வைப்பது. பிரம்மாண்ட நந்தி, கொடிமரம், பலி பீடம் மூன்றும்
ஒரே நேர் கோட்டில் இல்லாமல் விலகி இருக்கின்றன.
இத்திருக்கோவிலில் கருவறை, அர்த்த மண்டபம், இடைநாழி, மகாமண்டபம், முகப்பு மண்டபம், வெளி மண்டபம் கொண்டு எழிலாகவும்,
பிரம்மாண்டமானதாகவும் அமைந்துள்ளது. இம்மண்டபத்தில்
தியாகராஜப்பெருமானுக்கு விழாக்கள் நடைபெறுகின்றன. சதுரவடிவ கருவறையில்
அசலேஸ்வரர் வட்ட வடிவமான ஆவுடையாருடன் எழுந்தருளி அருள்
பாலிக்கின்றார். உருளை வடிவ பாணத்தில் கோடுகள் அமைந்துள்ளன. முன் பகுதியில் செப்புத் திருமேனியராக அம்பாள் வண்டார் குழலி காட்சி தருகிறாள். கருவறை வெளியே கம்பீர வடிவில் இரு பக்கமும் துவார பாலகர்களும், மண்டப நந்தியும் இடம் பெற்றுள்ளனர்.
இத்திருக்கோயிலின் முன் மண்டப இடப்பக்கம் பிள்ளையாரும் இரண்டு இலிங்கங்களும் இடம் பெற்றுள்ளன. ஈசானம்,
தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்று ஐயனின் ஐம்முகங்களை குறிக்கும் ஐந்து லிங்கத்திருமேனிகள்
உள்ளன. இரண்டாம் மண்டபத்தில் இடப்புறம் உமாசகிதர், நடராஜர், சிவகாமி அம்பாள், போக சக்தி உற்சவத் திருமேனிகளும், வலதுபுறத்தில் செருந்துணை நாயனார், விறமிண்ட நாயனார், கழற்சிங்கர், கங்கா தேவி, நமி நந்தியடிகள் ஆகியோரின் மூலத்திருமேனிகளும் அமைந்துள்ளன. நந்தியெம்பெருமானுக்கு கூரை உள்ளது.
அரசி செம்பியன் மாதேவியால் கற்றளி கோயிலாக உருவான இதன் அழகிய விமானத்தில் பண்டைய சோழ கால சிற்பச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இவ்வாலயம் ஒரு
கலைக்கூடம் என்றால் அது மிகையாகாது. மகா
மண்டபம், முகப்பு மண்டபம், நடராசர் சபை மண்டப விதானத்திலும்,
சுவற்றிலும், பல வண்ண பழங்கால ஓவியங்கள்
கண்ணுக்கும் மனத்திற்கும் விருந்து. மாப்பெருங்கருணை
கொண்டு வானுலகை விடுத்து பூலோகத்திற்கு தியாகேசப்பெருமான் வந்த
வரலாறு, அருமையான ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. மேலும்
காலசம்ஹார மூர்த்தி, துர்கா பரமேஸ்வரி, சரபர் ஓவியங்கள் அருமை. இவற்றை வரைந்தவர் “சிவம் ஓதுவார்”. படிகளில் அற்புதமான உயிரோட்டமுள்ள கற்சிலைகள் அலங்கரிக்கின்றன.
மேற்கு நோக்கிய இவ்வாலயத்தின் விமானத்தின் நிழல் கிழக்குப்பக்கம்
மட்டும் விழும்படி கட்டப்பட்டுள்ளது இது தஞ்சை பெரிய கோயிலின்
விமானத்திற்கு முன்னோடி என்றும் கூறலாம். இவ்வாலயத்தில்
கோட்டங்களில் கங்கை, திருமகள், முருகன்,
கணபதி, அகத்தியர், அர்த்தநாரீஸ்வரர், பிச்சாடனர், பிரம்மா, இலிங்கோத்பவர்,
துர்க்கை திருமேனிகள் எழிலாக அமைந்துள்ளன. கொற்றவை தன் திருக்கரங்களில்
திரிசூலம், ஆழி, சங்கம், வாள், தனுசு, கேடயம் ஏந்தி அபய கரம் அருள் பாலிக்க மகிடன்
தலை மேலும், வெண்கொற்றக் குடைக்கு கீழும் எழிலாக
அருள் பாலிக்கின்றாள். தேவிக்கு அருகே சிரப்பலி கொடுக்கும் வீரனின் உருவத்தையும்
காணலாம். இவ்வாலயத்தின் கோமுகியின் எழிலும்
வியக்கும்படி உள்ளது. பல அரிய சுதை வடிவங்களையும் கண்டு களிக்கலாம்.
இத்திருக்கோயிலில் பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அசலேசம் எனும் அரநெறி ஆலயம் சிறந்த
கலைக் கருவூலம் மட்டுமல்லாமல் ஒரு வரலாற்றுப் பெட்டகமும் ஆகும். திருவாரூர் ஆலய வளாகத்திலேயே அமைந்துள்ள தேவாரப்பாடல்
பெற்ற ஒரு தலத்தைத் தரிசித்தோம் வாருங்கள் திருவாரூரில் அமைந்துள்ள மற்றொரு தேவாரப்பாடல்
பெற்ற தலத்தை தரிசிக்கலாம்.
திருப்பாத தரிசனம் தொடரும் . . . .
No comments:
Post a Comment