Wednesday, March 23, 2022

கொங்கேழ் தலங்கள் பத்தியுலா - 16

 

பண்ணாரியம்மன் தரிசனம்



சுயம்புவாக தோன்றிய அம்மன்

ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ளது பண்ணாரி மாரியம்மன் கோவில். சத்தியமங்கலத்திலிருந்து  மைசூர் செல்லும் சாலையில் 12 கி.மீ. தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 209ல் அமைந்துள்ளது. பண்ணாரி அம்மன் கோவிலிலிருந்து திம்பம் மலைப்பாதை ஆரம்பம். இக்கோவிலின் தெற்கே சுமார் 6 மைல் தொலைவில் பவானி ஆறு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடுகிறது. இவ்வாற்றின் குறுக்கே  பவானிசாகர் அணை கட்டப்பட்டுள்ளது.

இத்தலத்தின் சிறப்புகள் சுயம்புவாக தோன்றிய அம்மன். அடர்ந்த காட்டுப்பகுதியில்  ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் குண்டம் திருவிழா என்னும் தீமிதி திருவிழா மிகவும் புகழ் பெற்றது. சுமார் இரண்டு லட்சம் பக்தர்கள் அதிகாலையில் இருந்து மறுநாள் மாலை வரை குண்டம் இறங்குகின்றனர். கால் நடைகள் கூட குண்டம் இறங்குகின்றன என்பது சிறப்பு. இத்தலத்திற்கு தங்கத்தேர் உள்ளது.

அவிநாசியிலிருந்து கிளம்பி இப்பகுதியில் கோபி என்றழைக்கப்படும் கோபிசெட்டி பாளையம், சத்தி எனப்படும் சத்தியமங்கலம் வழியாக பண்ணாரிக்கு பயணம் செய்தோம், பாதையில் அதிக போக்குவரத்து இருக்கவில்லை. பண்ணாரியை நெருங்க நெருங்க பாதை சுருங்கிக் கொண்டே வந்தது. பவானி ஆறு பாயும் பகுதி என்பதால் பச்சை பசேல் என்று மிகவும் செழிப்பாக இருந்தது. தென்னை, கமுகு, வாழை, கரும்பு, புகையிலை தோட்டங்கள் சாலையின் இரு பக்கமும் கண்டோம்.   கிராமங்களுக்கிடையான தூரமும் அதிகமாகிக்கொண்டே சென்றது. அடியோங்கள் பயணம் செய்து கொண்டிருக்கும் போது அம்மன் சுயம்புவாக தோன்றிய வரலாற்றைக் கூறுகிறேன் கேட்டுக்கொண்டே வாருங்கள் அன்பர்களே.

பண்ணாரி மாரியம்மன் வரலாறு: சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு தற்போது திருக்கோவில் உள்ள இடம் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. இவ்விடத்தில் வற்றாத காட்டாறு ஓடிக் கொண்டே இருக்கும். காட்டாற்றின் பெயரோ தோரணப்பள்ளம் என்பதாகும். இக்காட்டாறு இத்தலத்தின் மேற்குப்புறத்தில் உள்ளது. திம்பம்மலையின் அடிவாரத்தில் தென்மாரி தெய்வத்தின் அவதாரம் நிகழப்போகிறது என்பதை உலகினுக்கு அறிவிக்கவோ என்னவோ இக்காட்டாற்றின் துறையில் பசுவும், புலியும் ஒரே இடத்தில் நீர் குடிக்கும் நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன.

அக்காலத்தில் சத்தியமங்கலம் சுற்று வட்டார கிராம மக்கள் தங்கள் ஆடு மாடுகளை மேய்ப்பதற்கு வனப்பகுதிகளுக்குச் செல்வது வழக்கம். அங்கு இம்மக்கள் மாடுகளுக்குப் பட்டிகள் அமைத்து வனப்பகுதிலேயே தங்கிக் கொள்வார்கள். தினசரி காலையில் மாடுகளை மேய்ப்பதற்கு ஓட்டிச் செல்வார்கள். பின்னர் மாலையில் ஓட்டி வந்து பட்டியில் அடைப்பார்கள். காலையிலும், மாலையிலும் பாலைக் கறந்து மாட்டின் உரிமையாளருக்கு கொடுப்பார்கள்.

இவ்வாறு சென்று கொண்டிருந்த போது ஒரு  சமயம் பட்டியிலிருந்த காராம் பசு ஒன்று பால் கறக்கச் சென்றால் கறப்பதற்கு நில்லாமல் தன் கன்றுக்கும் கொடுக்காமல் இருப்பதை மாடுகளை மேய்ப்பவன்  அறிந்தான். மறுநாள் மாட்டினைப் பின் தொடர்ந்து சென்று கவனித்தான்.  அப்பசு தன் பாலை தினந்தோறும் ஓரு வேங்கை மரத்தின் அடியில் கணாங்குப்புற்கள் சூழ்ந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன்னிச்சையாகப் பொழிவதை மறைவிலிருந்து பார்த்தான். இந்நிகழ்ச்சியைக் கண்ணுற்ற அவர் மறுநாள் சுற்று வட்டார கிராமமக்கள் ஊர் பெரியோர்களிடம் விபரத்தை சொல்லி அனைவரையும் அழைத்துக் கொண்டு மாட்டினைப் பின் தொடர்ந்து சென்று ஓரு குறிப்பிட்ட இடத்தில் காராம் பசு பால் சொரிவதைக் காண்பித்தார். அனைவரும் இவ்வரிய நிகழ்ச்சியினை கண்ணுற்று மெய்சிலிர்ந்து நின்றார்கள். இதுதெய்வத்தின் திருவிளையாடல் என்றெண்ணிக் கைகூப்பித் தொழுதார்கள். மக்கள் அனைவரும் அவ்விடத்தைச் சுத்தம் செய்யுங்கால் கணங்குப் புற்கள் சூழ்ந்த புற்றும் அதனருகில் சுயம்பு லிங்கத் திருவுருவம் வேங்கை மரத்தின் அடியில் இருப்பதைக் கண்டார்கள்.

அப்போது அக்கூட்டத்தில் இருந்த ஓருவருக்கு அருள் உண்டாகி தான் கேரளா மாநிலம் வண்ணார்க்காடு (மண்ணார்க்காடு) என்ற ஊரிலிருந்து பொதி மாடுகளை ஓட்டிக் கொண்டு மைசூர் செல்லும் மக்களுக்கு வழித்துணையாக வந்தேன் என்றும் எழில் மிகுந்த இவ்வியற்கைச் சூழலில் தான் தங்கிவிட்டதாகவும், தன்னை இனிமேல் பண்ணாரி எனப் போற்றி வழிபட்டு வாருங்கள் எனவும் அருள்வாக்கில் கூறினார். அன்னையின் அருள்வாக்கின்படி அவ்விடத்தில் கணாங்குப் புற்கள் கொண்டு ஓரு குடில் அமைத்து கிராமிய முறைப்படி நாள்தோறும் பண்ணாரி அம்மனை வழிபட்டு வந்தனர். பின்பு ஊர் மக்களும், பெரியதனக்காரர்களும் அன்னையின் சிறப்புக்கருதி அன்னைக்கு விமானத்துடன் கூடிய சிறு கோவில் அமைத்து பத்மபீடத்துடன் திருவுருவம் அமைத்து வழிபட்டு வருகின்றனர். இதுவே அம்மன் தானாக வந்து இத்தலத்தில் அமர்ந்த ஒரு கதை.

“பண் – அரே” என்றால் பாறைகள் நிறைந்த பகுதி என்று பொருள். இதுவே மருவி பண்ணாரி என்றானது. இனி அடுத்த ஒரு ஐதீகத்தைப் பற்றி காணலாம். அக்காலத்தில்  சலவைத் தொழிலாளர் சமுதாயத்தைச் சார்ந்த கணவன் மனைவியும் துணி துவைப்பதற்காக ஒரு பெரிய மலை கீழ் அமைந்து இருந்த ஆற்றில் துணி சலவை செய்ய எடுத்து சென்றனர். அப்போது அப்பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். பின் சலவை துணி துவைக்கும் வேளையில் கடுமையான மழை பெய்து கொண்டு இருந்தது. அச்சமயத்தில் அப்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது.  கணவனே சலவைக்கு கொண்டு வந்த சேலைகளை கொண்டு நால்புறமும் கட்டி தன் மனைவிக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார். இரு பெண் குழந்தைகள் பிறந்ததாக புராண வரலாறும் செவி வழி வரலாறுமாக உள்ளது. பின் ஒரு குழந்தையை அவர் தூக்கியதாகவும் மற்றொரு குழந்தையை இருவராலும் தூக்க முடியவில்லை. பின் அவர்கள் அக்குழந்தையை அருகில் இருந்த தாழியில் வைத்துவிட்டு மூவரும் சென்று நடந்ததை ஊர் கவுண்டரிடம்  முறையிட்டுள்ளனர். பின் அவர்களுடன் அக்குழந்தை இருக்குமிடம் சென்று  தூக்க முயன்றனர் ஆனால் அப்போதும் தூக்க முடியவில்லை. பின் இரும்பு கடப்பாரை கொண்டு அத்தாழியை தூக்க முற்பட்டனர். அப்போது குழந்தையின் வலது மார்பில் கடப்பாரை பட்டு இரத்தம் கசிந்துள்ளது. அத்தாழியின் உள்ளே  இருந்த குழந்தை காலையில் சென்று பார்க்கும் பொழுது பெண் குழந்தை வடிவாகவே அம்மனாக எழுந்தருளி இருந்தது. அம்மனே கனவில் வந்து தனக்கு திருவிழா நடத்த வேண்டும் என்றும் கூறியதாக வரலாறு கூறுகிறது. பின் ஊர் திருவிழா அன்று அனைவரும் அவர்கள்  வழக்கப்படி பச்சை மாவு எடுத்து வடக்கு திசையில் சென்றனர். அப்போது அந்த சலவைத் தொழிலாளி பெண் தனது குடும்ப வறுமை காரணமாக பச்சைமாவுக்கு பதில் புளியங்கொட்டையைக் கொண்டு இடித்து அதில் மாவு செய்து தெற்கு நோக்கி கொண்டு சென்றிருந்தாள். அந்த புளிமாவுக்காக அம்மனே வடக்கிலிருந்து தெற்கு நோக்கி திரும்பி காட்சியளித்தது. அது இன்றளவும் அம்மனின் அமைப்பு அப்படியே உள்ளது என்கின்றனர்.

மூன்றாவது ஐதீகம் மலையாள மாந்த்ரீகன் ஒருவன் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் மேல் மந்திர உச்சாடனம் செய்து, அம்பாளை தன் நாட்டிற்கு எழுந்தருளுமாறு வேண்டினான். அம்மனும் சம்மதித்து ஒரு நிபந்தனை விதித்தாள். நான் என் சக்தி பரிவாரங்களுடன் உன்னை பின் தொடர்ந்து வருவேன் என் சதங்கை ஒலி கேட்டுக் கொண்டிருக்கும். ஆனால் நீ திரும்பி பார்க்கக் கூடாது, அவ்வாறு பார்த்தால் நான் அங்கேயே தங்கி விடுவேன் என்றாள். அவனும் சம்மதித்து இருவரும் கிளம்பினர்.  தோரண பள்ளம் என்ற இடத்தை அடைந்த போது அங்கே ஒடிய சிற்றோடையில்  அம்மன் காலை வைக்க சலங்கையொலி கேட்காததால் மாந்த்ரீகன் சட்டென்று திரும்பி பார்க்க அம்மன் நிபந்தனைப்படி அங்கேயே தங்கி விட்டாள். இவை அம்மன் பண்ணாரியில் கோவில் கொண்டதற்கான வரலாறுகள்.  சுமார் இரண்டு மணி நேரத்தில் பண்ணாரியை அடைந்தோம். வாருங்கள் இனி பண்ணாரி அம்மனை தரிசிக்கலாம்.

அடர்ந்த காட்டுப் பகுதியில் யானைகளும், காட்டுப்பன்றிகளும், மான்களும், நரிகளும், வண்ண மயில்களும், குரங்குகளும், முயல்களும், கரடிகளும் மற்றும் மிகக் கொடிய விஷ ஜந்துகளும் சர்வ சாதாரணமாக உலாவும் இத்தலத்தில் பண்ணாரி காட்டில் ‘மாரியம்மன்’ என்ற பெயருடன், பராசக்தியானவள் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்குகிறாள். தாமரை பீடத்தில் அமர்ந்த கோலத்தில் அம்மன் ஜுவாலா மகுடத்துடன் திருக்கரங்களில்  கத்தி, கபாலம், டமருகம்,  அமிர்த கலசம்  ஏந்தி  சாந்த ஸ்வருபிணியாக அருள் பாலிக்கின்றாள்.

வனத்திடையே அர்த்த, மகா, சோபன மண்டபம் மற்றும் தங்கத்தேர் வலம் வர சுற்றுப்பிரகார மண்டபங்களுடன் அமைந்த நீண்ட கோபுரத்தோடு விளங்கும் இக்கோவில் அமைந்துள்ளது. சோபன மண்டபத்தில் அம்மனின் வரலாறு,  சித்திரங்களாக மிளிர்கின்றன. தற்போது குண்டப்பகுதி வரை இருபக்கமும் பக்தர்கள் அமர்ந்து தரிசிக்க ஏதுவாக நீண்ட மண்டபம் அமைத்துள்ளனர். அம்மண்டபங்களின் மேல் பகுதியில் அம்மனின் பல் வேறு கோலங்களை எழிலாக சுதை சிற்பங்களாக அமைத்துள்ளனர். மற்ற ஆலயங்கள் போல கடைகள் அதிகமாக இல்லை, சாந்தமான சூழ்நிலை நிலவுகின்றது.  அமர்ந்து அருமையாக தியானம் செய்ய ஏற்ற ஆலயம்.

இத்திருக்கோவில் தினமும் விடியற் காலை 5.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு தொடர்ந்து மதிய உணவு இடைவேளையின்றி பிற்பகலில் நடை சாத்தப்படாமல் நான்கு காலங்கள் பூஜை நடைபெற்று இரவு 9.00 மணிக்கு திருக்காப்பிடப்படுகிறது. குண்டம் அமைக்கும் பகுதியில்  பக்தர்கள் வேண்டுதலுக்காக  சமர்பித்த உப்பும் குங்குமமும் மலை போல குவித்து வைத்திருந்தனர். கூட்டம் அதிகமாக இருக்கவில்லை அரைமணி நேரத்தில் வெள்ளி கவசத்தில் அருமையாக அம்மனை தரிசித்தோம்.  உற்சவர் அம்மனும், சருகு மாரியம்மனும் தனி சன்னதியில் அருள் பாலிக்கின்றனர். பின்னர் பிரகார வலம் வந்து சித்திரங்களாக வரையப்பட்டுள்ள அம்மனின் சரித்திரத்தை படித்தோம்.  இனி இத்தலத்தின் சிறப்பு குண்டம் திருவிழாவைப் பற்றி காணலாம்.

பூச்சாற்று : ஆண்டுதோறும் 20 நாட்கள் குண்டம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  பங்குனி மாதத்தில் அமாவாசைக்கு அடுத்த திங்கட்கிழமையில் உத்திரம் நட்சத்திரத்தில் இரவு சிக்கரசம்பாளையம், வெள்ளியம்பாளையம், புதூர், தாண்டாம்பாளையம், ஆகிய ஊரைச் சார்ந்த பெரியதனக்கார்களும், தர்மகர்த்தாக்களும், ஆலய அதிகாரிகளும் வந்திருந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்கின்றனர். அம்மன் சிவன் கோவில், தெப்பகுளம் பகுதியில் இருக்கும் சருகுமாரியம்மன் ஆகிய கோவில்களுக்கு சென்று அங்கிருந்து செவ்வாய்கிழமை அதிகாலை நான்கு மணிக்கு ஆலயம் திரும்பி வந்த பின், வைரக்கல் அலங்காரம் செய்வித்து  பூவரம் கேட்கின்றனர், அம்மன் வரம் கொடுத்த  பின்னர் பூச்சாற்று நடத்திடுவர். இப்பகுதியில் அதை நோம்பு சாட்டுதல் என்கின்றனர். பூச்சாற்றிலிருந்து மூலவர் அம்பிகைக்கு தினசரி அபிஷேக ஆராதனை நடைபெறுகின்றது.

அம்பிகை புறப்பாடு: பூச்சாற்று நிகழ்ந்தபின் மறுநாள் உற்சவர் அம்மனைச் சப்பரத்தில் எழுந்தருளச் செய்வர். இச்சப்பரம் சிக்கரசம்பாளையத்தில் தொடங்கி சத்தியமங்கலம், தொட்டம்பாளையம் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களின்  வழியே சருகு மாரியம்மனுடன்  உலா வரும் போது பக்தர்கள் பூசைகள் செய்தும், காணிக்கை செலுத்தியும் தம் வேண்டுதல்களை நிறைவேற்றுவர். அம்மனின் புறப்பாடு நிகழும் வேளையில் சோளகர் எனப்படும் மலைவாசிகளும், அருந்ததி இனத்தாரும் வாத்தியங்களை முழக்குவர். பூச்சாற்றிலிருந்து எட்டாம்நாள் திங்கட்கிழமை அம்மன் கோவில் வந்து சேர்கின்றாள்.

அக்னி கம்பம் நடுவிழா: அம்மன் கோவில் வந்து சேர்ந்த பிறகு அதாவது பூச்சாற்றிலிருந்து ஒன்பதாம் நாள் செவ்வாய்கிழமை இரவு அம்பிகைக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்று அன்றிரவு அக்கினிக்கம்பம் நடுவார்கள். அன்று முதல் அக்கம் பக்கத்தருகே இரவு காலங்களில் சோளர்களும், அருந்ததியினத்தாரும் தங்கள் வாத்தியங்களை முழக்கி, ஆடல், பாடல்கள் செய்வார்கள்.

 குண்டம் திருவிழா: திங்கட்கிழமை பகற்பொழுதில் மெரவணை எனப்படும் திருவீதி உலா நிகழ்கின்றது. பக்தர்கள் காட்டிற்கு  சென்று குண்டத்திற்காக  வேப்ப, ஊஞ்சல் மரங்களை வெட்டி வருகின்றனர். இது கரும்பு வெட்டுதல் என்றழைக்கப்படுகிறது.  அன்று இரவு ஓர் அக்கினிக் குண்டம் ஏற்படுத்தப்படும் அழல் வழிபாடாகிய இத்திருவிழாவைக் காண பக்தர்கள் பெருந்திரளாக வந்து ௬டியிருப்பர். திங்கள் இரவு இரண்டு மணி அளவில் அம்மனை அழைக்கப்புறப்படுவர். படைக்கலத்துடன் சென்று தெப்பக் கிணற்றருகே சென்று  அங்குள்ள சருகு மாரியம்மனை வழிபட்டு அம்மனைக் குண்டத்தருகில் அழைத்து வருவர். அனைவரும் குண்டத்தருகில் வந்து அம்மனை வணங்கிப் பணிந்து நிற்பர். பூசாரி அம்மனுக்கு பூசை செய்து, பூ தூவி  முதலில் குண்டத்தில் இறங்குவர். அவரைத் தொடர்ந்து ஆண்களும் பெண்களும் அம்மனைத் தொழுது குண்டத்தில் வரிசையாக இறங்குவர்கள். இந்நிகழ்ச்சி அடுத்த நாளாகிய செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணி வரை நடைபெறும்

  கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவிழா முழுதுமாக நடைபெறவில்லை. இவ்வருடம் நேற்று (22-03-2022)   குண்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. சுமார் 80000 பக்தர்கள் குண்டம் இறங்கி நேரடியாக சென்று அம்மனை தரிசனம் செய்தனர்.

அதன் பிறகு கால்நடைகளும் இறங்குகின்றன. நடுப்பகலில் பொங்கல் மாவிளக்கு எடுப்பர். புதன் இரவு மின்விளக்குகளில் அலங்கரிக்கப்பட்ட இரத்தில் அம்மனை எழுந்தளுளச் செய்து நாதசுரக் கச்சேரியுடன் புறப்பாடு நடைபெறும். மகாமுனி வருகையும் நடைபெறும். இரவில் அக்னிக் கம்பத்தை  கங்கையில் சேர்ப்பர்.

வியாழனன்று மஞ்சள்நீர் உற்சவமும், திருக்கோயிலாரால் அன்னதானமும் நடைபெறும். அன்றும் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றது. வெள்ளிக்கிழமையன்று மாலை அம்மன் தங்கத் தேரில் மெரவணை வந்து அருளுகின்றாள். அம்மனுக்கு திருவிளக்குப் பூசை நடைபெறுகின்றது. இப்பூசையில் ஏராளமான பெண்கள் கலந்து கொள்கின்றனர்.

மறுபூசை: குண்டம் திருவிழா நடந்த எட்டாம்நாள் திங்கட்கிழமையன்று மறுபூசைத் திருவிழா நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை இரவிலேயே ஏராளமான பக்தர்கள் வந்து கூடி விடுவர். அம்பிக்கைக்கு சிறப்பு அலங்காரம் அதாவது திருவிழாவன்று அலங்கரித்தது போலத் தங்கக்கவசம், வைரக்கல்  அமைந்த விலையுயர்ந்த ஆபரணங்கள் அணிவித்து மலர் மாலைகளால் அலங்காரம்  செய்யப்படுகிறது.  சிறப்பு அபிஷேகம்  நடைபெறும். இவ்வாறு குண்டம் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுகின்றது. இனி இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பரிவார தேவதைகள் யார் என்று காணலாம்.

உட்கோவில்கள்: அம்மன் திருச்சன்னதிக்கு அடுத்த அர்த்த மண்டபத்தில் கோவில் கட்டிடத்தை ஒட்டிய வகையில் மேற்குப் பார்த்த வண்ணமாக பொம்மையராயசுவாமியும், முன் மண்டபத்தில் கிழக்குப் பார்த்த வண்ணமாக விநாயகரும் இடம் பெற்றிருக்கின்றனர். அம்பிகையின் திருக்கோயிலுக்குத் தெற்குப் பக்கத்தில் மேடை மீது மாதேசுவரர் அருள் பாலிக்கின்றார்.

சருகு மாரியம்மன் : பண்ணாரி அம்மன் தெப்பக்கிணற்றுக்கு அருகில் மேற்குப் பார்த்த சிறு கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் சருகு மகமாரி அருள் பாலிக்கின்றாள்.

வண்டி முனியப்பன் : தெப்பக்கிணற்றுக்கு மேற்கில் பள்ளம் ஒன்று தென்வடலாகப் போகிறது. இதில் மழைக் காலத்தில் மட்டும் தண்ணீர் இருக்கும். மற்ற காலங்களில் இருக்காது. தெப்பக் கிணற்றுக்குச் செல்லும் வழிக்கு வடபுறமாக ஒரு மேடை மீது வண்டி முனியப்பசுவாமி அமர்ந்திருக்கிறார். அம்பிகையின் திருவிழா அன்று அவருக்கு சோளகர் சிறப்பாகப் பூசை செய்கின்றனர்.

ஞாயிறு, செவ்வாய் மற்றும் அம்மனுக்கு உகந்த வெள்ளிக்கிழமை தினங்களிலும், அமாவாசை நாள்களிலும் தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான கேரளம் மற்றும் கர்நாடகத்திலிருந்தும்  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து பண்ணாரி அம்மனை வழிபடுகின்றனர். அம்மனும் அவர்களது நோயைப் போக்கி, துன்பத்தைப் போக்கி அருளுகிறாள் பக்தர்களும் நேர்த்திக்கடன் செலுத்தி தங்கள் நன்றியை அம்மனுக்கு தெரிவிக்கின்றனர். கண் கண்ட தெய்வமாக விளங்கும் பண்ணாரி மாரியை தரிசித்த பின் சத்தியமங்கலத்திற்கு கிளம்பினோம்.

 

 

Saturday, March 19, 2022

கொங்கேழ் தலங்கள் பத்தியுலா - 15

 அவிநாசியப்பர் தரிசனம்- 2

அடுத்து அடியோங்கள் கருணையாத்தாளை தரிசித்தோம். அம்பாள் சன்னதியின்  முன்புறம் நந்தியும் கொடிமரமும் காட்சி தருகின்றன. அம்மன் சன்னதி  முன்மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை எனப் பெரிய அளவில் அமைந்துள்ளது. இங்குள்ள முன்மண்டபத்தில் நாககன்னி சிலை உள்ளது. மகாமண்டப வாயிலின் இருபுறமும் வாயிற்காவல் தேவியர் காட்சி தருகின்றனர். மகா மண்டபத்தில் வடபால் பள்ளியறை உள்ளது. அர்த்தமண்டபத்தில் பிள்ளையார் வீற்றுள்ளார். இறைவியின் கருணை எல்லையற்றது என்பதை விளக்கும் வண்ணம் ‘பெருங்கருணையம்மை’ என்றும் அருளையே தனக்கு பெயராக கொண்டவளாக ‘கருணாம்பிகை’ என்றும்  அழைக்கப்படுகிறாள். இத்தலத்தில் கொடுமுடி போலவே கல்யாணக் கோலத்தில் அருள் பாலி்க்கின்றாள் அம்பாள் பெருங்கருணை நாயகி. 


நல்லாற்றங்கரையில் தவம் செய்து ஐயனின் வலப்பக்கத்தில் அமர்ந்தாள்.  தனி இராஜகோபுரம், கொடிமரம் அம்பாளுக்கு இருப்பது சிறப்பு. அம்மனுக்கு வாகனமாக நந்தியெம்பெருமானே அமர்ந்திருக்கிறார்.  நின்ற கோலத்தில், நான்கு திருக்கரங்களுடனும், கருணையைப் பொழியும் திருவிழிகளுடனும், மந்தகாச புன்னகையுடன் அம்பாள் எழிலாக தரிசனம் அளிக்கின்றாள். மேற்கைகளில் தாமரையும் நீலமும் விளங்குகின்றன. கீழ்க்கைகள் அபயவரதமாகத் திகழ்கின்றன. அழகும் அருளும் நிறைந்த சன்னிதியாக இவ்விறைவியின் சன்னிதி பொலிகிறது. கருணைச் செல்வியின் திருமுகத்தில் கருணை பொங்குகிறது. அன்னையின் தோற்றப் பொலிவு நம்மை அங்கேயே கட்டிப்போட்டு விடுகிறது. அருட்கடலாக விளங்கும் அம்மையின் அடித்தாமரைகளை அகங்குளிரப் போற்றி வணங்குகிறோம். கொங்குநாட்டு தலங்களில் உள்ள அம்பாள் திருமூர்த்தங்கள் கல்திருவாசியுடன் அருள் பாலிப்பது போலவே கருணாம்பிகையும் அருள் பாலிக்கின்றாள். சந்தனக் காப்பில் அம்பாளை தரிசிப்பதே ஒரு பரவசம்.  அம்பாளை

(கருணை) ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்

பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்

காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை

சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே   என்ற அபிராமி அந்தாதிப் பாடல்பாடி அம்பாளை துதித்தோம். அம்பாள் சன்னதியின்  பின் சுவரில் தேள் உருவம் உள்ளது. இப்பகுதியில் தேள் கடித்தால், அவர்கள் இங்கு வந்து வலம் வந்தால் விஷம் இறங்கி விடும் என்ற நம்பிக்கை உள்ளது. கனவில் விஷ ஜந்துக்கள் வராது என்பது நம்பிக்கை. விருச்சிக இராசிக்காரர்கள் தரிசிக்க  நன்மை.

                              

கயிலை தீர்த்தம்

அம்பாளை திவ்யமாக தரிசித்த பின் வெளி பிரகார வலத்தை தொடர்ந்தோம். அம்மன் சன்னதி கோஷ்டத்தில் விநாயகர், இச்சாசக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி, துர்க்கை அருள் பாலிக்கின்றனர். சண்டிகேஸ்வரிக்கும் தனி சன்னதி உள்ளது.ண்டிகேசுவரி சன்னதியை ஒரு தேவகோட்டத்தில் கொற்றவையும் விளங்குவது குறிப்பிடத்தக்கது. அம்மன் விமானமும் ஒரு கலசத்துடன் ஈஸ்வரி அம்சமாகவே விளங்குகிறது. அம்மன் விமானத்தில் சிவ-பார்வதி திருக்கல்யாண கோலம், அம்மன் தவம் செய்யும் சுதை சிற்பங்களை தரிசித்தோம். 

 இராஜகோபுரத்திற்கு அருகே இருக்கும் தெப்பக்குளம் கயிலை தீர்த்தம் என்றும், சிவ தீர்த்தம் என்றும், நாக கன்னி தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் வாயிலில் பிரம்மாண்ட சுதை நந்தி சிலை அமைத்திருக்கின்றனர்.

மேற்கு பிரகாரத்தில் இருந்து சுவாமி, அம்பாள் விமானங்களுக்கு இடையே சிறிய முருகர் விமானம் சோமாஸ்கந்தரை நினைவூட்டியது. தலமரம் பாதிரி மரம் இப்பிரகாரத்தில் உள்ளது.  இம்மரம் பிரமோற்ஸவத்தின் போது மட்டுமே பூக்கும் தன்மையுடையது. மற்ற காலங்களில் பூக்காது. மரத்தின் இத்தகைய இயல்பானது, இறைவனின் மீது தலவிருட்சம் கொண்டுள்ள பக்தியை காட்டுகிறது என தலபுராணம் கூறுகிறது. ஆதி காலத்தில் மா மரமே தலவிருட்சமாக இருந்துள்ளது.

 

வெளிப்பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் நடராஜர் சன்னதி அமைந்துள்ளது. இங்குள்ள ஆடல்வல்லான் திருமேனி கொங்குநாட்டுப் பாணியில் விளங்குகிறது. நீள்வட்டமான திருவாசியும் அதன் ஒடுக்கமான அடிப்பகுதியில் இருபுறமும் அழகிய கிளி உருவங்களும் இத்திருவுருவில் அமைந்துள்ளன. திருவாசியில் ஐம்பத்தொரு நெருப்புக் கொழுந்துகள் காட்சி தருகின்றன. இருபத்தெழு சுடர்களே பெரும்பாலான திருமேனிகளில் இருக்கும். இங்கு ஐம்பத்தொரு எழுத்துகளை குறிக்கும் வகையில் இவ்வாறு அமைந்துள்ளது. இருபத்தேழு சுடர்கள் இருந்தால் அவை இருபத்தேழு நட்சத்திரங்களைக் குறிப்பதாகக் கூறுவர். இப்பெருமானது மேற்கரங்கள் இரண்டும் படுக்கை வசமாக விரித்து வைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் உடுக்கையும் தீயும் உள்ளன. வீசிய திருக்கரம் சற்றுப் புதுமையாகக் காட்சி தருகிறது. சடைகள் கீழ்நோக்கித் தொங்குகின்றன. எனவே ஆடல் மிக மெதுவாக நடைபெறுவது விளங்குகிறது. அருகில் சிவகாமியம்மை காட்சி தருகிறார்.  மாணிக்கவாசகரும் எழுந்தருளியுள்ளார்.  அடுத்து வசிஷ்டரின் சனி தோஷத்தை போக்கிய சனி பகவானின் தனி சன்னதி. இங்குள்ள சனி பகவான் அனுக்கிரக மூர்த்தியாக நல்ல பலன்கள் தந்து அருளுகிறார். சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள சனிபகவானை வழிபாடு செய்தால் தோஷத்தின் பாதிப்பு குறையும் என்பது நம்பிக்கை.  அருகில் நவகிரக சன்னதி அமைந்துள்ளது.

 

அம்பாள் விமானம் மற்றும் இரு இராஜ கோபுரங்கள் தரிசனம்


இத்தலத்தில் 32 கணபதிகள் அருள்பாலிக்கின்றனர் சிவாலயங்களில் சிவனுக்கு பின்புறம் அருள்பாலிக்கும் விஷ்ணு, இத்தலத்தில் கொடிமரத்தின் அருகில் சிவனை பார்த்தபடி அருளுகிறார். சுவாமி இராஜகோபுரத்தின் தென்திசையில் தெட்சிணாமூர்த்தி நடனமாடும் கோலத்தில் உள்ளார். நர்த்தன கணபதிக்கு முன்னால் மூஞ்சூறு வாகனத்திற்கு பதில் சிம்ம வாகனம் உள்ளது.

தினமும் ஐந்து கால பூஜை நடைபெறுகின்றது. இக்கோவில் தேர் கொங்கு மண்டலத்திலேயே  மிகப்பெரியதும்,  திருவாரூருக்கு, அடுத்தபடியான இரண்டாவது மிகப்பெரிய திருத்தேராகவும் விளங்கும்  பெருமை பெற்றது.  சித்திரைப்பெருவிழாவின்  ஐந்தாம் திருநாள் அறுபத்து மூவர் திருவிழா,  ஆறாம் திருநாள் திருக்கல்யாணம், ஏழாம் திருநாள் தேரோட்டம், மற்றும் தெப்போற்சவத்துடன் சிறப்பாக நடைபெறுகின்றது.  வைகாசியில் வசந்தோற்சவம், ஆடிப்பூர உற்சவம், அம்மன் தபசு,  ஆடி கிருத்திகை சிறப்பு வழிபாடு, ஆவணி மூல பிட்டுத்திருவிழா, புரட்டாசியில் நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், கந்தர் சஷ்டி பெருவிழா,  கார்த்திகை தீபப்பெருவிழா, மார்கழியில் திருவெம்பாவை – திருவாதிரைத் திருவிழா, தைப் பூசம், பங்குனியில் முதலை உண்ட பாலகன் விழா என்று வருடம் முழுவதும் கோலாகலம்தான் இத்தலத்தில்.


தோல் சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள்அம்மன் சன்னதியை சுற்றி வலம் வரும்போது சுவற்றில் கை வைத்து பிரார்த்தனை செய்துகொண்டால் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். எல்லாத் தீமைகளும் நீங்கி, நவகிரக தோஷங்களும் நீங்கும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். திருமணத்தடை நீங்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். இராகு காலத்தில் கருணாம்பாளுக்கு விளக்கேற்றி வழிபடும் போது நாம் நினைத்த காரியம் கைகூடும்.




தல விருட்சம் பாதிரி மரம்

கல்வெட்டுச் செய்திகள்: இத்திருக்கோயிலில் உள்ள பழைய கல்வெட்டுகளில் இத்தலம் தட்சிண வாரணாசி என்று குறிப்பிடப் பெறுகிறது. இவ்வூரில் கிடைத்த பதினேழாம் நூற்றாண்டுச் சாசனம் ஒன்று. 'பூலோக கயிலாசமான புக்கொளியூராகிய அவிநாசித்தலம்' என்று இத்தலத்தைக் குறிப்பிடுகிறது. சில கல்வெட்டுகளில் இத்தலத்து இறைவன், 'சகதாதிபதி திவ்விய ஸ்ரீகயிலாச நிவாச பார்வதி பிராணநாத எல்லாத்தேவர் வல்லபன்', 'தட்சிண வாரணாசி அவிநாசிலிங்கன்' என்று நீண்ட அடைமொழியோடு குறிப்பிடப் பெறுகிறார்.   மிகப் பழைய கல்வெட்டுகளில் இறைவன் பெயர், அவிநாசி ஆளுடைய நாயனார், அவிநாசியாண்டார், அவிநாசி ஆளுடையார் என்றெல்லாம் குறிப்பிடப் பெறுகிறது. இத்தலத்து இறைவியான கருணாம்பிகை அம்பிகையின் பெயர். திருக்காமக்கோட்டத்து நாச்சியார் பெருங்கருணைச் செல்வியார், பெருங்கருணாலயச் செல்வியார், பெருங்கருணை அம்மன் என்றெல்லாம் கல்வெட்டுகளிலும் சாசனத்திலும் குறிப்பிடப் பெறுகிறது. இங்கு தலமரமாக மாமரம் விளங்குகிறது. காஞ்சிபுரத்தில் மாமரத்தின் கீழ் உமையம்மை சிவவழிபாடு புரிந்ததைப் போலவே அவிநாசியிலும் அம்மை மாவடியில் விளங்கிய அவிநாசியப்பரைப் பூசித்தாள் என்று தலபுராணம் கூறும். எனவே அவிநாசியப்பரை ஒரு கல்வெட்டு, காஞ்சி தலத்து இறைவன் பெயரான திருவேகம்பமுடையார்' என்பதோடு இணைத்து 'திருவேகம்பமுடை யாரான மாதேவராண்டார்' என்று போற்றுகிறது.

 



இவ்வாறு அவிநாசி தலத்தின் அருமையான தரிசனத்திற்கு பிறகு, காலை சிற்றுண்டியை அவ்வூரிலேயே முடித்துக்கொண்டு பண்ணாரிக்கு கிளம்பினோம். அங்கு பண்ணாரி அம்மனின் தரிசனம் எவ்வாறு அமைந்தது என்று அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.