Saturday, March 12, 2022

கொங்கேழ் தலங்கள் பத்தியுலா - 14


அவிநாசியப்பர் தரிசனம்

கருணாம்பிகை உடனாய அவிநாசியப்பர்

அடுத்து அடியோங்கள் தரிசித்த தலம் இறைவனருளால் சுந்தரர் முதலையுண்ட மதலையை உயிருடன் வரச்செய்த அற்புதம் நடந்த தலம். தேவாரத்திருத்தலங்களில் 208வது தலம். கொங்கேழ் தலங்களில் முதல் தலம். தேவாரகாலத்தில் திருப்புக்கொளியூர் என்றும் அறியப்பட்ட தலம். சுந்தரர் ஒரு பதிகம் பாடியுள்ளார். மாணிக்கவாசகர்  திருவாசகத்தில் ஆனந்தமாலையில் "அரிய பொருளே அவிநாசியப்பா பாண்டி வெள்ளமே" என்று பாடுகிறார். அப்பரும் திருத்தாண்டகத்தில் 'அவிநாசி கண்டாய்' எனப் பாடுகிறார். திருப்புகழில் அருணகிரிநாதர் இத்தல முருகன் மேல் மூன்று பாடல்கள் பாடியுள்ளார்.

முதலில் இத்தலம்   ‘திருப்புக்கொளியூர்’ என அழைக்கப்பட என்ன காரணம் என்று காணலாம். சிவபிரானின் அக்கினி தாண்டவத்தின் வெம்மை தாங்காமல், தேவர்கள் இத்தலத்தில் புகுந்து ஒளிந்து கொண்டதால் அப்பெயர் வந்தது (புக்கு – ஒளி – ஊர்).  பின்னர் அவர்களுக்கு அருளவும் செய்த இடம் இது. பழைய பதியாகிய புக்கொளியூர் நத்தம் தற்போது அழிந்து வெட்ட வெளியாகவுள்ளது. பிற்காலத்தில் தோன்றிய புதிய நகரமே தற்போதுள்ள அவிநாசி.

அவிநாசி என்ற வார்த்தைக்கு ஒரு அற்புதமான பொருள் உண்டு. ‘விநாசம்என்றால் அழியக்கூடியது. அவிநாசிஎன்றால் அழிவு இல்லாதது என்று பொருள். அழிவு இல்லாத திருக்கோவில் இந்த அவிநாசி. இவ்வாலயம் சுமார்  2000 வருடங்கள் பழமை வாய்ந்ததுவிநாசிஎன்றால் பெருங்கேடு என்றும் பொருள். அவிநாசி என்றால் பெருங்கேட்டை நீக்கவல்லது என்று பொருள்படும்.  எனவே எம்பெருமான் ‘பெருங்கேடிலியப்பர்’ என்றும் அழைக்கப்படுகிறார். காலப்போக்கில் கோயிலின் பெயரும், ஊரின் பெயரும் அவிநாசி ஆயிற்று.

அவிநாசி அப்பர் சுயம்பு மூர்த்தி, காசி விஸ்வநாதரது வேரில் கிளைத்த மூர்த்தி என்பார்கள் இதனால் 'காசியில் வாசி அவிநாசி' என்றும், இத்தலத்தையே தென்காசி, வாரணாசி என்றும் கூறுகின்றனர்.  இங்குள்ள அவிநாசியப்பர், பைரவர், காசி தீர்த்தம் மூன்றும் காசியிலிருந்து கொண்டு வரப்பட்டவை. அமாவாசையன்று இங்குள்ள காசிக்கிணற்றில் நீராடி இறைவனை வழிபடுவது சிறப்பு. அன்றைய தினம் மதியம் இடைவேளையில்லாமல் திறந்தே இருக்கும். 


சுவாமி இராஜகோபுரம்

நல்லாற்றங்கரையில் சிவமணம் போல் மணம் வீசும் மாமரத்தின் கீழ் அமர்ந்து ஞானச்செல்வியாகிய உமா தேவியார் சிவபெருமானை ஆயிரம் ஆண்டுகள் பூசித்து வலப்பாகம் பெற்று பெருங்கருணாலயச்செல்வி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்க்கின்றாள். இப்பகுதி மக்கள் அம்பாளை கருணையாத்தாள் என்று உரிமையுடனும், வாஞ்ஞையுடனும் அழைத்து வழிபடுகின்றனர்.

மைசூர் மகாராஜா வம்சத்தை சேர்ந்தவர்கள் அரச பதவி ஏற்கும் போது, நேராக காசிக்குச் செல்வார்கள். காசியில் இருந்து பூஜை செய்த சிவலிங்கத்தை எடுத்துக்கொண்டு, முதலில் அரண்மனைக்கு செல்ல மாட்டார்கள். அச்சிவலிங்கத்தை அவிநாசியப்பர் திருக்கோவிலில் வைத்து பூஜை செய்த  பின்னர் அவர்கள் அரண்மனைக்கு எடுத்துச் செல்வார்கள். திறமையான நிர்வாகத்தை நடத்துவதற்கான அருளை அவிநாசியப்பர் அருளுகின்றார் என்பது அவர்கள் நம்பிக்கை. இவர்கள் வழிபட்ட லிங்கங்களை நவரங்க மண்டபத்தில் தரிசிக்கலாம்.

அவிநாசி என்று கேட்க முக்தி என்று போற்றப்படும் இத்தலத்தில் இறையருளால் வண்தொண்டர் செய்த அற்புதத்தை கொங்கு மண்டல சதகப் பாடல் ஒன்று  இவ்வாறு போற்றுகிறது:

பூவென்ற சீரடி யாரூர்ப் பரவைதன் போங்கொளும்
பாவென்ற செந்தமிழ்ச் சுந்தரன் பாடிப் படர்குளத்தில்
ஆவென்ற வாயின் முதலைகொள் பிள்ளையை  யன்றுகொண்டு
வாவென்றழைத்த அவிநாசி சூழ்கொங்கு மண்டலமே - வாருங்கள் இனி இத்தலத்தில் சுந்தரர் மூலம் ஐயன் நடத்திய அந்த  அற்புதத்தைப் பற்றி காணலாம்.
 

கொடிமரத்தில் வித்தியாசமான தலைப்பாகையுடன் சுந்தரர்

அவிநாசியப்பர் திருக்கோவில் மடுவின் கரையில் சில அந்தண சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு சிறுவன் அம்மடுவில் நீந்தி விளையாடிக் கொண்டிருக்கும் போது அச்சிறுவனின் தாய், தந்தை, நண்பர்களின் கண் முன்னே ஒரு முதலையானது அவனை விழுங்கிவிட்டது. இச்சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகள் கழிந்தது.

திருமுருகன்பூண்டியில் இறைவன் சுந்தரரின் பொன்னைப் பறிக்க, கோபம் கொண்டு அவர்  பதிகம் பாட,  பின் பொன்னை பெற்று திருவாரூருக்கு எழுந்தருளி சில காலம் புற்றிடங்கொண்டாரையும், தியாகராஜரையும் தரிசித்து கொண்டிருந்தார். மறுபடியும் சேரமான் பெருமாளுடன் அளவளாவ விருப்பம் கொண்டு திருவஞ்சிக்களம் செல்லும் வழியில் திருப்பொக்கொளியூரை அடைந்தார்.

இறைவனின் பாடல்களை பாடிக்கொண்டு அங்குள்ள அக்ரகாரம் உள்ளே நுழைந்தார். வேத மந்திரங்கள் முழங்க ஒரு வீட்டில் பூணூல் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதற்கு எதிர் வீட்டிலேயே அழுகைக் குரல் ஒலித்தது. மூன்று வருடங்களுக்கு முன்பு தன் மகனை அம்முதலைக்கு இரையாக கொடுத்த பெற்றோர்களின் அழுகை சத்தம்  அது. தன் மகன் உயிரோடு இருந்திருந்தால் தங்கள் வீட்டிலும் பூணூல் சடங்கு நடந்திருக்கும் என்று எண்ணி அழுது கொண்டிருந்தனர். இவர்களின் வேதனையை அறிந்த எம்பிரான் தோழர்  சுந்தரர், அங்கிருந்து நேராக மடுவிற்கு சென்று பதிகம் பாடினார் முதல் பாடல் பாடியவுடன் குளத்தில் நீர் நிறைந்தது,

உரைப்பார் உரைப்பவை உள்க வல்லார் தங்கள் உச்சியாய்
அரைக்காடு அரவா ஆதியும் அந்தனும் ஆயினாய்
புரைக்காடு சோலை புக்கொளியூர் அவிநாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளைத் தரச்சொல்லு காலனையே.
 
பொருள்: உன்னைப் புகழ்கின்றவர்களது சொல்லை விரும்புபவனே, உன்னை எஞ்ஞான்றும் மறவாது நினைக்க வல்லவரது தலைமேல் இருப்பவனே, அரையின்கண் ஆடுகின்ற பாம்பைக் அணிந்தவனே, எல்லாப் பொருட்கும் முதலும் முடிவுமானவனே, சிறந்த முல்லை நிலத்தையும், சோலைகளையும் உடைய திருப்புக்கொளியூரில் உள்ள,    `அவிநாசி` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, கூற்றுவனையும் முதலையையும், இக்குளக் கரைக்கண் பிள்ளையைக் கொணர்ந்து தருமாறு ஆணையிட்டருள் என்ற நாலாவது பாடலைப் பாடி இறைவனை வேண்ட அம்முதலை பிள்ளையை கொண்டு வந்து கரையில் உமிழ்ந்து விட்டு  சென்றது. பாலகனும் மூன்று வருடங்கள் எவ்வளவு வளர்ந்திருப்பானோ அவ்வாறு வெளியே வந்தான். பின்னர் அவனுடன் ஆலயம் வந்து இறைவன் முன் நிறுத்தி பதிகத்தை பூர்த்தி செய்தார் சுந்தரர். அச்சிறுவனுக்கு உபநயனமும் நடத்தி வைத்தார்.

 

முதலையுண்ட மதலை உயிருடன் வரும் காட்சி 



இவ்வாறு பிள்ளையை  முதலை வாயிலிருந்து மீட்டுத் தந்தது இத்தலம்.  எமன் வாயில் சென்றவனை கூட இத்தலம் மீட்டுத்தரும் என்பது இதன் பொருள். நீண்ட ஆயுளை கொடுக்கக் கூடியவர் அவிநாசியப்பர். சிவபெருமானுக்கு ‘ஆசுதோஷன்’ என்ற பெயரும் உண்டு. ஆசுதோஷன் என்றால் எளிதில் அருள் புரியக் கூடியவன் என்று பொருளாகும். அப்படிப்பட்ட இறைவன்தான் அவிநாசியப்பர்.

அவிநாசியப்பர் கோவிலில் இருந்து சுமார் ½ கி.மி. தூரத்தில் தென்மேற்குத் திசையில் தாமரைக் குளம் என்ற ஒரு ஏரி உள்ளது. அக்குளக்கரையில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் கோவில் உள்ளது. இக்கோவிலின் சிறப்பு இங்குள்ள முதலை வாய்ப்பிள்ளை சிற்பம் ஆகும். முதலை வாயிலிருந்து குழந்தை வெளிவருவது போன்ற சிற்ப அமைப்பு இங்கு உள்ளது. பங்குனி உத்திரத் திருநாளில் அவிநாசியப்பர் இக்குளக்கரைக்கு வருகை தருகிறார். முதலை வாய்ப்பிள்ளையை அழைத்த திருவிளையாடல் வருடந்தோறும் பங்குனி மாதத்தில் உற்சவமாக கொண்டாடப்படுகிறது. இவ்வரலாற்றினை,

நாட்டார் அறிய முன்னாளில் நன்னாள் உலந்த ஐம்படையின்
பூட்டார் மார்பில் சிறிய மறைப் புதல்வன் தன்னைப் புக்கொளியூர்
தாட்டாமரையின் மடுவின்கண் தனிமா முதலைவாய் நின்று
மீட்டார் கழல்கள் நினைவாரை மீளா வழியில் மீட்பனவே.
 
பொருள்: நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் நன்கு அறியுமாறு முன்னைய நாளில் சிறந்த ஐம்படைத்தாலியை அணிந்த மார்பையுடைய சிறிய மறையவர் மைந்தனைப், புக்கொளியூரில் தாளோடு கூடிய தாமரைகளையுடைய நீர் நிறைந்த பொய்கையில் பெரிய முதலை வாயினின்றும் நல்ல நாளில் மீட்டவரான சுந்தரமூர்த்தி நாயனாரின் திருவடிகளே தம்மை நினைவார்களை மீளாவழியினின் றும் மீட்பவையாம்!  என்று நமிநந்தியடிகள் புராணத்தில் தெய்வச் சேக்கிழார் பெருமான்  பாடுகிறார்.
 
அருணகிரிநாதர் ‘ஐங்கரனை’ என்று தொடங்கும் திருப்புகழ் பாடலில், “கொங்கில் உயர் பெற்று வளர் தென் கரையில் அப்பர் அருள் கொண்டு உடலுற்ற பொருள் அருள்வாயே!’’ என்று  வேண்டுகிறார் (அப்பர்-இறைவன்). ‘சிவபெருமானின் அருள் கொண்டு, குழந்தையை முதலையின் வாயினின்றும் மீட்டுத் தந்ததின் ரகசியப் பொருளை, முருகா, எனக்கு நீ அருள வேண்டும்!’ என்கிறார்.
 
அக்காலத்தில் தான் இந்த அதிசயம் நடந்ததென்றில்லை. சில நூறு ஆண்டுகளுக்கு முன் குருநாத பண்டாரம் என்பவர் அவிநாசியில் வாழ்ந்திருக்கிறார். குளத்தில் ஏற்பட்ட உடைப்பை அடைக்க வரவில்லை என்பதற்காக அரசாங்க ஊழியர்கள் அவர் பூசித்த சிவலிங்கத்தை எடுத்துக் குளத்தில் எறிந்திருக்கிறார்கள். குருநாத பண்டாரமோ பூசை செய்யாமல் உணவருந்துவதில்லை. பூசை செய்யவோ இலிங்கம் இல்லை. பட்டினியாய்க் கிடந்திருக்கிறார். வேறு வழியில்லை அவிநாசியப்பருக்கு. பண்டாரத்தின் இலிங்கத்தை ஒரு மீனை விழுங்கச் செய்து அம்மீனை நீந்தி வந்து இலிங்கத்தைக் கரையில் உமிழவும் செய்திருக்கிறார். இதற்குக்கூட ஒரு சிற்ப வடிவம் இத்தலத்தில் உள்ளது. இதுவரை இத்தலத்தின் சிறப்புகள் சிலவற்றைப் பற்றிப் பார்த்தோம் வாருங்கள் இனி  இத்தலத்தை தரிசிக்கலாம்.
 
நரியைக் குதிரைப் பரியாக்கி     ஞால மெல்லாம் நிகழ்வித்துப்
பெரிய தென்னன் மதுரையெல்லாம்   பிச்ச தேற்றும் பெருந்துறையாய்
அரிய பொருளே அவினாசி     அப்பா பாண்டி வெள்ளமே
தெரிய அரிய பரஞ்சோதீ      செய்வ தொன்றும் அறியேனே. 

பொருள் : நரியைப் பரியாக்கி உலகம் எல்லாம் பரவச் செய்து, மதுரைப் பகுதி முழுதும் பித்தேற்றிய பெருந்துறைப் பெருமானே! அரும் பொருளே! அவினாசி அப்பனே! பாண்டி நாட்டின் கடலே! தெரிதற்கரிய மேலான ஒளியே! நான் உய்யும் பொருட்டு விடுப்பதாகிய காரியத்தைச் சிறிதும் அறிந்திலேன் என்று மாணிக்கவாசகர் பாடிய அவிநாசி தலத்தின்

சுவாமி விமானம்

இறைவர்: அவிநாசியப்பர், அவிநாசி லிங்கேஸ்வரர், பெருங்கேடிலியப்பர்.
இறைவி : கருணாம்பிகை, பெருங்கருணை நாயகி,  கருணையாத்தாள்.
தல மரம் : பாதிரி
தீர்த்தம் ; காசிக்கிணறு, நாக கன்னிகை தீர்த்தம், ஐராவத தீர்த்தம்.
பதிகம் : சுந்தரர்.
 
ஆலயத்தின் வெளியில் இருந்து பார்த்தால் கம்பீரமான இரட்டைக் கோபுரங்களை அருகருகே தரிசிக்கலாம். ஏழு கலசங்களுடன் கூடிய ஏழுநிலை இராஜகோபுரம் சுவாமி சன்னிதிக்கு எதிரிலும், அதை ஒட்டி தென்புறமாக ஐந்து நிலை இராஜகோபுரம் அம்பாள் சன்னிதிக்கு எதிரிலும் அமைந்திருப்பது நெடுஞ்சாலையில் பயணிக்கும் போதே கண்கொள்ளாக் காட்சியாக தென்படுகிறது.
 
சுவாமி இராஜகோபுரத்துக்கு முன்பு உள்ள பெரிய விளக்குத் தூண் சுமார் 70  அடி உயரம் உடையது. ஒரு உயரமான நாலு கால் மண்டத்துடன் அமைந்துள்ளது. தூணின் கீழ்ப்பகுதியில் கிழக்கு நோக்கி விநாயகர்,   சுவாமியைப் பார்த்தபடி  வித்தியாசமான தலைப்பாகையுடன் சுந்தரர், மற்ற இரு பக்கங்களிலும் முதலைவாய்ப் பிள்ளை சிற்பம் உள்ளது.  மேலும் ஒரு நந்தி சிலையும் இரு முதலை வாய்ப்பிள்ளை உருவங்களும்  உள்ளன. அடுத்து ஏழு நிலை இராஜ கோபுரம் ஒன்பது கலசங்களுடனும், அழகிய சுதை சிற்பங்களுடனும் கம்பீரமாக காட்சி தருகின்றது.
 
இராஜகோபுரத்திற்கு முன்னர் தவம் செய்த பாதிரி மரத்து அம்மன் வணங்கி ஆலயத்தின் உள்ளே நுழைகின்றோம்.  இராஜகோபுரத்தின் கோபுரத்தின் நுழைவாயிலின் இருபுறமும் நர்த்தன கணபதி சிலைகள் உள்ளன.  சுந்தரரும், மாணிக்கவாசகரும் சுவாமியை தரிசிக்கும் கோலத்தில் எழுந்தருளியுள்ளனர்.  உள்ளே ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. அவர் எதிரே ஒரு வானரம் கீழே இறங்குவது போல உள்ள புடைப்பு சிற்பம் அருமை.
 
அடுத்து கொடிமரமும், பலி பீடமும் உள்ள நவரங்க மண்டபம் அமைந்துள்ளது. இம்மண்டபத்தின் தூண்களில் 6  அடி உயரத்தில் கலை நுணுக்கம் நிறைந்த வீரபத்திரர், ஊர்த்த தாண்டவர் மற்றும் தில்லை காளியின் சிலைகள் உள்ளன. இம்மண்டபத்தைக் கட்டிய பெரிய காளியப்ப கவுண்டர் மற்றும் அவரது இளவலின் சிலைகளும் உள்ளன.
 
சுவாமி  சன்னிதி கர்ப்பகிரகம், அர்த்தமண்டபம், மஹா மண்டபம் என்று மூன்று பிரிவாக உள்ளது. மஹா மண்டபத்தின் முகப்பில் துவார பாலகர்கள். சுவாமி சன்னதியின் உட்பிரகாரத்தில்  முதலில் நந்தி தேவரை தரிசிக்கின்றோம். வடமேற்கு கோஷ்டத்தில் பால தண்டபாணி  சன்னதி, அடுத்து 63 நாயன்மார்களின் திருமேனிகள்,  கன்னி மூலையில் கணபதி, அடுத்து பஞ்ச லிங்கங்கள், கஜ லக்ஷ்மி,  வடகிழக்கில் சுப்பிரமணியர் சன்னதி, அடுத்து வியாத வேடன் சன்னதி, திருடனாக இருந்த இவனுக்கும் அவிநாசியப்பர் முக்தி அளித்துள்ளார். அவன் தை பூசத்தன்று அங்க பிரதட்சணம் செய்து கொண்டே முக்தி அடைந்தான்.
 


அடுத்து   காலபைரவர் சன்னதி. இத்தல பைரவர் "ஆகாச காசிகா புராதிநாத பைரவர்' எனப்படுகிறார். இவர் காசியில் உள்ள பைரவருக்கும் முற்பட்டவர் என தலபுராணம் கூறுகிறது. ஜுவாலா மகுடத்துடன் நான்கு திருக்கரங்களுடன் அருள் பாலிக்கிறார் இவர்.  காலபைரவருக்கு வடைமாலை சார்த்துதல் சிறப்பு பிரார்த்தனையாகும். எதிரி பயம், வழக்கு விவகாரம் தீர பௌர்ணமி, அமாவாசை, அஷ்டமி தினங்களில் வடை மாலை சார்த்தி வழிபடுகின்றனர் பக்தர்கள். குடும்ப ஒற்றுமை ஏற்பட ஞாயிற்றுக்கிழமை இராகு காலத்தில் தேங்காய், எலுமிச்சை, பூசணிக்காய் ஆகியவற்றில் விளக்கேற்றி, செவ்வரளியால் அர்ச்சனை செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.  தேய்பிறை அஷ்டமி தினங்களில் இவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. கார்த்திகை மாத பைரவாஷ்டமியன்று சிறப்பு ஹோமம், அபிஷேகம் கண்டு புறப்பாடு கண்டருளுகிறார் பைரவர்.   இவர் சன்னதிக்கு அருகே காசி தீர்த்தம் கிணறு. இவ்வாறு பிரகாரத்தில் சுவாமிக்கு எதிரே தீர்த்தம் அமைந்திருப்பது ஒரு சிறப்பு. இக்கிணற்று நீரை, சுவாமி அபிஷேகத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். கங்கைக்குச் சமமான புனிதநீர் திருவிழாக் காலங்களில் கலசங்களில் நிரப்பப்பட்டு, பிற ஊர்களுக்கு கொண்டு சென்று வழிபடப்படுகிறது.
 
சுவாமி கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி,  லிங்கோத்பவர், துர்க்கை அருள் பாலிக்கின்றனர். அர்த்தமண்டபத்தில்  தக்ஷிணாமூர்த்திக்கு மேலே சிவயோகி என்ற முனிவர் யோகாசனத்தில் உள்ளார். இவர் தென் முகக் கடவுளை வழிபட்டு அளப்பரிய  கலைகளைக் கற்று குருவுக்கு மிஞ்சிய சீடனானார் என்பதால் இவர் ஆதி குருவுக்கு மேலே உள்ளார் என்கின்றனர். சண்டிகேஸ்வரர் சன்னதியும் உள்ளது.
 
அர்த்தமண்டபத்தில்  ஸ்ரீவல்லி விநாயகர், சந்திரசேகரர், சொக்கநாதர் உற்சவத்திருமேனிகள் எழுந்தருளியுள்ளனர். சொக்கநாதர் பள்ளியறைக்கு எழுந்தருளுகிறார் அது நித்தியோற்சவம் என்றழைக்கப்படுகின்றது.  அடுத்து கருவறையில்
 
எங்கேனும் போகினும் எம்பெருமானை நினைந்தக்கால்
கொங்கே புகினும் கூறை கொண்டு ஆறலைப்பர் இலை
பொங்காடு அரவா புக்கொளியூர் அவிநாசியே
எங்கோனே உனை வேண்டிக் கொள்வேன் பிறவாமையே

பொருள்: ஆடுகின்ற பாம்பை ஆபரணமாக அணிந்தவனே, திருப்புக்கொளியூரில் உள்ள, ` அவிநாசி ` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள எங்கள் தலைவனே, எம்பெருமானாகிய உன்னை நினைத்தால், கொங்கு நாட்டிலே புகுந்தாலும், மற்றும் எங்கேனும் சென்றாலும், என்னை ஆறலைத்துக் கூறையைப் பறித்துக்கொள்பவர் இலராவர் ; ஆகவே , உன்னிடம் நான் பிறவாமை ஒன்றையே வேண்டிக் கொள்வேன் என்று சுந்தரர் பாடிய அவிநாசியப்பரை, வாரணாசி கொழுந்தை,  முதலை வாயுண்ட பாலகனை திருப்பியளித்த வள்ளலை மனதார தரிசிக்கின்றோம்.  ஐந்தலை அரவின் கீழ் சுயம்பு மூர்த்தியாக எழிலாக ஐயன் அருட்காட்சி அருள்கின்றார். பங்குனி மாதம் முதல் வாரத்தில் அதிகாலை சூரிய உதயத்தின் போது, கோயிலில் மூலவர் சிவலிங்கதிருமேனியின் மீது சூரிய ஒளி நேரடியாக விழுகின்றது. இறைவனை பிரம்மா நூறு ஆண்டுகளும், இந்திரனுடைய ஐராவதம் எனும் வெள்ளையானை 12 ஆண்டுகளும், தாடகை மூன்று ஆண்டுகளும், நாகக் கன்னி 21 மாதங்களும் வழிபட்டுள்ளனர். சுவாமியுடன் மனோன்மணி அம்பாளும் உடன் அருளுகின்றார். காசியில் போய் வழிபட்டால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அது அவிநாசி லிங்கேஸ்வரரை வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதீகம். பிரமன் பூசித்ததால் பிரமபுரீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். ‘அரிய பொருளே அவிநாசியப்பா’ என்று மாணிக்கவாசகரும்,  ‘அவிநாசி கண்டாய், அண்டத்தான் கண்டாய்’ என்று அப்பர் பெருமானும் இவரை போற்றுகின்றனர். இவரை  வழிபட்டால் மீண்டும் பிறவாத்தன்மை கிடைக்கும். அழியாப்புகழ் கிடைக்கும் என்பது தொன் நம்பிக்கை.




சுவாமி சன்னதிக்கு வலப்புறத்தில் கல்யாண மண்டபம், சித்திரைப் பெருவிழாவின் போது ஆறாம் திருநாளன்று சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் இம்மண்டபத்தில் நடைபெறுகின்றது. இவ்வாலய உற்சவர்கள் இம்மண்டபத்தில் அருளுகின்றனர். சோமாஸ்கந்தர், வேடன் வடிவத்தில் முருகர், குமார சுப்பிரமணியர், வீரபாகுத் தேவர் திருமேனிகள் மிகவும் அருமை. இம்மண்டபத்திற்கு எதிரே சிவசூரியன் சன்னதி.

அடுத்து அடியோங்கள் தரிசித்த சன்னதி  அறுகோண அமைப்பிலுள்ள செந்தில்நாதன் சன்னதி  ஐயன் மற்றும் அம்மை சன்னதிக்கு இடையில்  சோமாஸ்கந்த அமைப்பில் சன்னதிகள் அமைந்துள்ளன.   இக்கோவிலில் பாலதண்டாயுதபாணி சன்னதியும், சுப்பிரமணியர் சன்னதியும் உள்ளன. மூலவர் தேவியர்களுடன் அறுமுகவராக மயில் வாகனத்துடன் அருள் பாலிக்கின்றார். உற்சவராக முருகப்பெருமான் ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் விளங்குகிறார். குமார சுப்பிரமணியர் உற்சவ மூர்த்தமும் இவ்வாலயத்தில் உள்ளது. அருணகிரிநாதர் தனது திருப்புகழில் இவ்வாலய முருகர் மீது மூன்று பாடல்களைப் பாடியுள்ளார். அவர் "அவிநாசிப் பெருமாளே", "புக்கொளியூருடையார் புகழ் தம்பிரானே" என்று பலவிடங்களில் பாடியுள்ளார்.  அவரது ஒரு திருப்புகழ்

இறவாமல் பிறவாமல்  எனையாள் சற்குருவாகிப்
பிறவாகித் திரமான  பெருவாழ்வைத் தருவாயே
குறமாதைப் புணர்வோனே குஹனே சொற்குமரேசா
அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் பெருமாளே.

பொருள்:  இனி இறவாமலும், பிறவாமலும் நிலையான   
மோட்சத்தை அருளும்  சற்குருநாதனே. பக்தர்களின் இதய குகையில் வசிப்பவனே, குறமகள் வள்ளியின் மணாளனே,  அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு புருஷார்த்தங்களை உபதேசிக்கும் அவிநாசிப் பெருமாளே! என்று பாடியுள்ளார் அருணகிரிநாதர்.

கருணாம்பிகையின் தரிசனத்தை அடுத்த பதிவில் காணலாம் அன்பர்களே.

1 comment:

கோமதி அரசு said...

அவினாசிக்கு பல முறை சென்று இருக்கிறோம்.

தேவார பாடல்களும் விளக்கமும் மிக அருமை.