திருமுருகன் பூண்டி ஐதீகம்
யாத்திரையின்
இரண்டாம் நாள் அதிகாலை எழுந்து அனைவரும் தயாராகி முதலில் திருப்பூரிலிருந்து 7 கி.
மீ தூரத்தில் அமைந்துள்ள சுந்தரரால் பாடப்பெற்ற திருமுருகன்பூண்டித் தலத்தை
தரிசிக்கச் சென்றோம். முருகப்பெருமான் சூரபத்மனை சம்ஹாரம் செய்த பிரம்மஹத்தி தோஷம்
நீங்க வழிபட்ட இத்தலம் நொய்யலாற்றின் கரையில் அமைந்துள்ளது எனவே நொய்யலாற்றைப்
பற்றிய ஒரு சிறு குறிப்பு.
நொய்யல் ஆறு தமிழ்நாட்டின், கோவை மாவட்டத்தின், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்த, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில், சிற்றோடைகள் இணைந்து உருவெடுக்கிறது. சமவெளிக்கு இறங்கும் நொய்யல் ஆறு, கிழக்கு நோக்கி பேரூர், குனியமுத்தூர், வெள்ளலூர், இருகூர், சூலூர், மங்கலம், திருப்பூர், ஒரத்துப்பாளையம் என 180 கி.மீ
தூரம் பயணித்து, கரூர் அருகே நொய்யல் கிராமத்தில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது. இவ்வாற்றின் சங்ககாலப் பெயர் காஞ்சியாறு என்பதாகும்.
தமிழகத்தில் கொங்கு மண்டலத்தின் அடையாளமாகவும், அங்கு
விவசாயம் வளமாக அமையக் காரணமாகவும் இருந்தது நொய்யல் ஆறு. தொல்லியல் பழமைவாய்ந்த கொடுமணல் இவ்வாற்றின்
கரையில்தான் அமைந்துள்ளது. மேலைச்
சிதம்பரம் என்றழைக்கப்படும் பேரூர் திருத்தலமும் இவ்வாற்றின் கரையில்தான் அமைந்துள்ளது. பேரூரில்
கரைக்கப்படுகின்ற அஸ்தி பின்னர் கல்லாக மாறி விடுகின்றது என்பது ஐதீகம். எனவே
இத்தலத்தில் அஸ்தியை கரைத்து பித்ரு காரியங்கள் செய்ய எண்ணற்ற பக்தர்கள் தினந்தோறும் வருகின்றனர்.
சுவாமி முருகநாதர் விமானம்
சோழர்கள்
நொய்யலில் மேற்கொண்ட நீர் மேலாண்மை தொழில் நுட்பம் அபாரமானது. ஆற்றின் தண்ணீர் சிறிதும்
வீணாகாமல் ஆற்றின் இருபக்கமும் 40-க்கும் மேற்பட்ட குளங்களை கட்டினர். ஆனால், நொய்யலின்
இன்றைய நிலை மனம் நோக செய்கிறது. தற்போது 19 குளங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஆறு இருந்த இடம் தெரியாமல் சிதைக்கப்பட்டு, கோவை
மாநகரத்தின் கழிவுகளும், திருப்பூர் சாயப்பட்டறை கழிவுகளும் இவ்வாற்றில் கலந்து அதன் மொத்த நீளமான
180 கி.மீட்டரில் சுமார் 152 கி.மீ சாக்கடையாக ஓடுகிறது. மெள்ள மெள்ள இறந்து
வருகிறது நொய்யல்.
திருப்பூர்
– கோவை நெடுஞ்சாலைக்கு மிக அருகில் இவ்வாலயம் அமைந்துள்ளது. செல்லும் வழியில்
இருபக்கமும் கற்சிற்பகூடங்களைக் கண்டோம். கல்லை கடவுளாக்கும் சிற்ப கலைஞர்கள்
2000க்கு மேற்பட்டோர் இங்கு உள்ளனர். சென்னைக்கு அருகில் உள்ள மஹாபலிபுரத்தை போலவே
இங்கும் பல கலைஞர்கள் உள்ளனர். வாருங்கள் இத்தலத்தை இனி தரிசிக்கலாம்.
வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர் விரவ லாமைசொல்லிக்
கல்லி னாலெறிந் திட்டும் மோதியுங் கூறை கொள்ளுமிடம்
முல்லைத் தாது மணங்க மழ்முரு கன்பூண்டி மாநகர்வாய்
எல்லைக் காப்பதொன் றில்லை யாகில்நீர் எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.
பொருள்: எம்பெருமானே, முல்லை மலரின் மகரந்தம் நறு மணத்தை வீசுகின்ற இம் முருகன்பூண்டி மாநகர் வருவோரை, வேடுவர்கள், வில்லைக் காட்டி, வெருட்டியும், பொருந்தாத சொற்களைச் சொல்லிக் கல்லால் எறிந்தும், கையால் அறைந்தும் அவர்களது உடைமைகளைப் பறித்துக்கொள்ளும் இடம். இதன் எல்லைக்குக் காவல் ஒன்றும் இல்லாமை நீர் அறிந்ததேயானால்,
இதன்கண் இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர்? என்று
வன்தொண்டர் எம்பெருமானை உரிமையுடன் கேட்ட இத்தலத்தின்
இறைவன்: திருமுருகநாதஸ்வாமி, திருமுருகநாதர், முருக நாதேஸ்வரர்
இறைவி: முயங்கு பூண்முலை வல்லியம்மை, ஆலிங்க பூஷண
ஸ்தனாம்பிகை, ஆவுடை நாயகி, மங்களாம்பிகை
தீர்த்தம்: சுப்பிரமணிய தீர்த்தம், ஞானதீர்த்தம், பிரம்ம தீர்த்தம்
தல விருட்சம் : வில்வம்
பதிகம் சுந்தரர்
சுப்பிரமணிய தீர்த்தம்
கோவில் வரலாறு: ஆதி
காலத்தில் இத்தலம் முல்லை வனமாக இருந்துள்ளது. துர்வாசர் கற்பக உலகிலிருந்து மாதவி மரத்தை இங்கு கொண்டு வந்தார் என்பர்; ஆதலால் இதற்கு மாதவி வனம் என்றும் பெயர். அப்போது
சுவாமி மங்களாம்பிகை உடனுறை மாதவிவனேஸ்வரர் என வழிபடப்பட்டார்.
தட்சன்
நடத்திய முறையற்ற யாகத்தில் கலந்து கொண்ட தேவர்கள் அனைவரும் அதற்காக ஆயிரத்தெட்டு
அண்டங்களை ஆளும் திறமும், நூற்றெட்டு கோடி ஆண்டு ஆயுளும், சிவனின் சக்தியால்
மட்டுமே தனக்கு மரணம் என்று சிவபெருமானிடம் வரம் பெற்ற சூரபத்மனால் மிகவும்
துன்பமுற்றனர். முருகப்பெருமான் ஆறு முகம் கொண்டு அன்னை அளித்த சக்தி
வேலால் சூரபத்மனையும் அவனது இளையோர்களையும் சம்ஹாரம் செய்தருளினார். பிரம்மஹத்தி தோஷம்
பீடிக்கப்பட்டதால் சித்தம் கலங்கி பித்துப் பிடித்து திரிந்த வெற்றி வடிவேலவர்
கயிலையில் சிவபெருமான் அருளியபடி மாதவ வனநாதரை வழிபட்டு தோஷத்தைப் போக்கிகொள்ளும் பொருட்டு இத்தலத்திற்கு
வந்து சிவலிங்கத்தை நிறுவி அதற்கு பூஜை செய்தார் பூஜைக்கு
வேண்டிய நீருக்கு தன் வேலை ஊன்றி ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி அக்கங்கையால்
மங்களாம்பிகை உடனாய மாதவிவனேஸ்வரரை இதனால் அவரது பிரம்மஹத்தி தோஷம் விலகியது.
முருகன் வழிபட்டதால் சுவாமி
முருகநாதேஸ்வரரென்று அழைக்கப்படலானார், தலமும் திருமுருகன்பூண்டியானது, கந்தமாபுரி
என்றும் அழைக்கப்படுகின்றது. அவ்வாறு நீங்கிய பிரம்மஹத்தி, தற்போது கோயிலின் வெளியே வேப்பமரத்தின் கீழ் எழுந்தருளியுள்ள வேம்படி முருகன் சன்னதியின் அருகில் உள்ள சதுரக்கல்லாக இருப்பதாகப் புராண வரலாறு கூறுகிறது.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 206 வது தேவாரத்தலம் ஆகும். கொங்கேழ் தலங்களில் இரண்டாவது தலம். சுந்தரரின் ஒரு பதிகம் பெற்ற தலம். இதுவரை இத்தலத்திற்கு திருமுருகன்பூண்டி என்னும் பெயர் வரக்காரணமான ஐதீகத்தைப் பற்றி அறிந்து கொண்டோம். வாருங்கள் இனி தன் தோழன் சுந்தரருடன் எம்பெருமான் இத்தலத்தில் விளையாடிய திருவிளையாடல் என்ன என்று காணலாம்.
பூவுலகில்
ஆருரராக பிறந்த எம்பிரான் தோழர் சுந்தரர், திருக்கயிலையில் ஆலால சுந்தரர் என்ற
பெயரில் சிவபெருமானுக்கு அணுக்கத் தொண்டராக இருந்தவர். ஒரு சமயம் நந்தவனத்தில்
மலர் கொய்ய சென்ற போது அவர் அங்கு வந்த உமையம்மையின் சேடியர்களான மலர் கொய்யும் கமலினி,
அநிந்திதை என்கிற மதிமுக மங்கையரைக் கண்டு மையலுற்றார். எனவே சிவபெருமான்
”மண்ணுலகில் பிறந்து காதலின்பம் கலந்து பின் வருக’ என்று அருளினார். அதற்கு சுந்தரர்
பெருமானே ’ உலகியலில் அடியேன் மயங்கும் போது தடுத்தாளக் கொள்ள வேண்டும் “ என்று வேண்டுகிறார்.
பெம்மானும் அவ்வண்ணமே அருளினார்.
பூவுலகில்
பிறந்த சுந்தரர் மணப்பருவம் எய்தினார். புத்தூர் சடங்கவி சிவாச்சாரியாரின் பெண்ணை திருமணம்
பேசத் தொடங்குகின்றனர். திருமணத்திற்கு முதல்
நாள் காப்பணிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது எம்பெருமான் ஒரு கிழ வேதியர்
வடிவில் வந்து ஓலை காட்டி அவரை ஆட்கொண்டார். திருவெண்ணைநல்லூர் தலத்திற்கு
அழைத்துச்சென்று பித்தா பிறைசூடி என்று பாட வைத்து அவரை தன் அன்பனாக்கினார்.
சுந்தரரை தனது தோழனாக ஆரூர் எம்பெருமான் முதலில் பரவை நாச்சியாரை மணக்கச்
செய்தார். தன் தோழனுக்காக சிவபெருமான் செய்த அற்புத திருவிளையாடல்கள் பலப் பல அவற்றுள் சிலவற்றை இப்பாடல் இயம்புகின்றது.
வெங் கரா வுண்ட பிள்ளையை நல்குமே; வெள்ளை யானையின் மீதேறிச்
செல்லுமே:
மங்கை பாகனை தூது நடத்துமே; மருவியாறு வழிவிட்டு நிற்குமே:
செங்கலாவது தங்கமதாக்குமே; திகழும் ஆற்றிட்டு செம்பொன் எடுக்குமே;
துங்க வன் பரி சேரர்க்கு நல்குமே ; துய்ய நாவலூரர்ச் சுந்தரர் பாடலே என்ற பாடல் இவருக்காக எம்பெருமான் செய்த விளையாடல்கள்
சிலவற்றை கூறுகிறது. இனி இத்தலத்தில் நடைபெற்ற வேடுபறி திருவிளையாடல் பற்றிக்
காணலாம் அன்பர்களே.
தீபஸ்தம்பம்
திருவஞ்சிக்குளத்தை ஆண்டு வந்த பெருமாக்கோதையார் என்ற சேரமன்னன்
தில்லையில் அம்பலக்கூத்தனிடம் சுந்தரரின் பெருமையைப் பற்றிக் கேள்விப்பட்டு
திருவாரூர் அடைந்தார். சுந்தரர் அவரை வரவேற்று தோழராக ஏற்றுக்கொண்டார். எனவே அவர்
சேரமான் தோழர் என்றழைக்கப்பட்டார். இருவருமாக பிறை சூடும் பெம்மான்
எழுந்தருளியுள்ள பல தலங்களுக்கு சென்று பதிகம் பாடி மகிழ்ந்தனர். பின்னர் ஒரு
சமயம் சேரமான் பெருமாள் சுந்தரரை சேரநாட்டிற்கு எழுந்தருள பிரார்தித்தார்
சுந்தரரும் தன் தோழருடன்
திருவஞ்சிக்களத்தை
அடைந்தார். சேரமான் பெருமாள் சுந்தரரை அஞ்சைக்களத்தப்பர் ஆலயத்திற்கு அழைத்துச்
சென்றார். அங்கு இறைவனை வழிபட்டு பின்னர் அரண்மனையடைந்து சேரமான் பெருமாளின்
விருந்தோம்பலை அனுபவித்து சில நாள் தங்கியிருந்தார். அச்சமயம்
திருவாரூர்ப்பெருமானின் நினைவு வர, பொன்னு மெய்ய்பொருளுந் தருவானை . . . ஆரூரனை மறக்கலுமாமே - என்று பதிகம் பாடி குறிப்பினாலுணர்த்த, தன் தோழரைப்
பிரிய மனமில்லாவிட்டாலும் ஆரூரருக்கு விடை கொடுத்து பெரும் செல்வத்தை பொதி செய்து ஆட்களின் மேல் ஏற்றி அனுப்பினார்.
சுந்தரரும் தம்
தோழரை அன்பினால் தழுவி விடைபெற்று சேரநாட்டை விடுத்து கொங்குநாட்டின் திருமுருகன்பூண்டி
என்னும் தலத்தைக் கடக்கும் போது சிவபெருமான்
தனது பூதகணங்களை வழிப்பறி திருடர்கள் வேடத்தில் அனுப்பி சுந்தரரின் பரிசுப்
பொருள்களை கொள்ளையடித்து வரச் செய்தார். கவலை அடைந்த சுந்தரர் திருமுருகன்பூண்டி
சென்று இறைவன் மேல் பதிகம் பாடி முறையிட்டார். வழிப்பறித் திருடர்கள் இருக்கும் இவ்வூரில்
அப்பயத்திலிருந்து பக்தர்களைக் காப்பாற்றாமல் நீயும் அம்பிகையும் எதற்காக இங்கு
இருக்கிறீர்கள் என்று தனது தேவாரப் பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் “எத்துக்கு இங்கு
இருந்தீர் எம்பிரானீரே” என்று நிந்திப்பதைப் போலப் பாடியவுடன் சுவாமி
அத்தனை பொருள்களையும் பூத கணங்கள் மூலம் சுந்தரரிடம் திரும்ப சேரும்படி செய்தார்.
சுந்தரனுக்கு வேறு ஒருவர் பொன் அளிப்பது கூடாது, தாமே அதனை அளிக்க வேண்டும் எனச் சிவபெருமான் கருதினான் போலும்! அதற்காகவே அவர் சேரரிடம் இருந்து கொண்டு வந்த பொன்னைப் பறிக்கச் செய்து தானே கொடுக்க இவ்வாறு செய்தானோ என்பார் சேக்கிழார் பெருமான் இதனை,
திருமுருகன்பூண்டி அயல் செல்கின்ற போழ்தின் கண்
பொருவிடையார் நம்பிக்குத் தாமே பொன் கொடுப்பது அலால்
ஒருவர் கொடுப்ப கொள்ள ஒண்ணாமைக்கு அது வாங்கிப்
பெருக்கு அருளால் தான் கொடுக்கப் பெறுவதற்கோ? அது அறியோம்’’
- என்று குறிப்பிட்டுள்ளார்.
இக்கோவிலில்
உள்ள மண்டபத்தில் வில் கையில் ஏந்தியபடி வேட்டுவன் கோலத்தில் நிற்கும் சிவபெருமான்
சிற்பமும், அவருக்கு இருபுறமும் சுந்தரர் கவலையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கும்
இரு சிற்பங்கள் காணப்படுகின்றன. பரிசுப் பொருள்களை பறி கொடுத்த நிலை ஒன்று, பறி கொடுத்த
பொருள்களை மீண்டும் பெற்ற நிலை மற்றொன்று ஆக இந்த இரு நிலைகளைக் காட்டும் வகையில்
இருப்பதே சுந்தரரின் இரண்டு சிற்பங்கள்.
“இழந்த பொருளை மீண்டும் பெற்றிட, பரிகாரத் தலமாக
திருமுருகன்பூண்டி விளங்குகிறது”. இத்தலத்து விநாயகர் கூப்பிடு விநாயகர் என்ற
பெயரில் இங்கு காட்சி தருகிறார். சுந்தரரின் பரிசுப் பொருள்கள் சிவபெருமானால்
கொள்ளையடிக்கப்பட்ட பிறகு, விநாயகர் சுந்தரரைக் கூப்பிட்டு பொருள் இருக்கும்
இடத்தைக் காட்டி அருளியதால் அவர் கூப்பிடு விநாயகர் என்ற பெயர் பெற்றார். ’கூப்பிடுவிநாயகர்' அவிநாசிக்குப் போகும்
வழியில் 1 கி.மீ தொலைவில் பாறைமேல் உள்ளார்.
நொய்யல் ஆற்றின் வடபகுதியில்
அமைந்த மேற்கு நோக்கிய தலம் திருமுருகன் பூண்டி. இத்தலத்தில் மற்ற கோவில்களைப் போல
நுழைவு கோபுரம் இல்லை. நான்கு புறமும் உயர்ந்த மதில்களை அரணாகக் கொண்டு, சுமார் 1 ஏக்கர்
பரப்பரளவில் அமைந்துள்ளது. கோவிலுக்குள் 2
பிரகாரங்கள் உள்ளன. கோவில் பூமி மட்டத்திலிருந்து சற்று கீழே உள்ளது. நுழைவு வாயிலில்
உள்ள பதினாறுகால் மண்டபத்தில் விநாயகர் அருள்பாலிக்கின்றார். கோயிலுக்கு வெளியே கொங்கு நாட்டுத் தலங்களுக்கே
உரித்தான கருங்கல் தீபஸ்தம்பம் உள்ளது.
தூணின்
கீழ் பாகத்தில் விநாயகர், கிராதக (வேடர்) வேடத்தில் சிவபெருமான், எம்பெருமானை நோக்கியபடி
தாளமிட்டபடி பதிகம் பாடும் சுந்தரர், சுயம்பு
லிங்கத்திற்கு பால் சொரியும் கோ மாதா சிற்பங்கள் அலங்கரிக்கின்றன.
கோவிலில்
மூலவராக வீற்றிருக்கும், திரு முருகநாதர், சிவலிங்க வடிவில் மேற்கு திசை நோக்கி
காட்சியளிக்கிறார். ஆயிரத்தெட்டு கிழக்கு பார்த்த சிவாலயத்தை வணங்கிய பலன், ஒரு
மேற்கு பார்த்த சிவாலயத்தை வணங்கினால் கிடைத்து விடும். அது மட்டுமல்ல. ஒரு மேற்கு
பார்த்த சிவாலயத்தை வணங்கினால் ஆயிரத்தெட்டு அசுவமேத யாகம் செய்த பலன் உண்டு. கொடி
மரத்திலிருந்து பார்த்தால் பதினாறு கால் மண்டபத்தின் முகப்பில் இத்தலத்தின்
ஐதீகமான ஆறுமுகப்பெருமான் சிவபெருமானை பூஜைக்கும் சுதை சிற்பத்தை கண்ணுறுகின்றோம்.
சுந்தரர் வேடராக சிவபெருமான்
சுவாமி சன்னதிக்கு முன்பாக வடதிசையில் ஆறு முகங்களுடன் காணப்படும் சண்முகர் சன்னதி உள்ளது. இரு தேவியருடன் அருள் பாலிக்கும் முருகருக்கு முன்பக்கம் 5 முகங்களும், பின்பக்கம் ஒரு முகமும் உடையதாக அமைந்துள்ளது. முருகன் வழிபட்டதற்கு அடையாளமாக முருகன் சன்னிதியின் கருவறையில் மேற்கு நோக்கியவாறு இலிங்கம் உள்ளது. ஆறாவது முகம், பின்னால் அமைந்துள்ளது. அம்முகம், “அதோ முகம்” என அழைக்கப்படுகிறது. இம்முகத்தை நேரடியாக பார்க்கக் கூடாது என்பதால், கண்ணாடியில் மட்டுமே பார்க்க முடியும் வகையில் அமைந்துள்ளது. முன் பக்கம் உள்ள முகங்கள் சிவபெருமானுக்குரிய ஈசானம், தத்புருஷம், அகோரம், சத்யோஜாதம், வாமதேவம் ஆகும். ஆறாவது முகம் அம்பிகைக்குரியது, ஞானியருக்கு மட்டுமே இம்முகம் புலப்படும் என்பது ஐதீகம். தமிழகத்தில் தெற்கு நோக்கி முருகப்பெருமான் அருள் பாலிப்பது ஒரு தனிச்சிறப்பு. மேலும், திருச்செந்தூரில், சூரனை வதம் செய்தபின், செந்தில் வேலவன் திருமுருகன்பூண்டிக்கு வந்து விட்டதால், திருச்செந்தூர் கோவில் மூல ஸ்தானத்துக்கான மூலவர், இங்கு அமைந்துள்ளதாகவும் வரலாறு உள்ளது. இங்குள்ள முருகனிடம் வேலும் மயிலும் இல்லை. அவற்றைக் கோயிலுக்கு வெளியே விட்டுவிட்டு வந்து சிவனை முருகன் வழிபட்டதாகத் தொன்நம்பிக்கை உள்ளது. அருணகிரிநாதர் தமது திருப்புகழில் இம்முருகனை இவ்வாறு வேண்டுகின்றார்.
அவசியமுன்
வேண்டிப் பலகாலும்
அறிவினுணர்ந்த
தாண்டுக் கொருநாளில்
தபசெபமுந்
தீண்டிக் கனிவாகிச்
சரணமதும்
பூண்டற் கருள்வாயே
சவதமொடுந்
தாண்டித் தகரூர்வாய்
சடுசமயங்
காண்டற் கரியோனே
சிவகுமரன்
பீண்டிற் பெயரோனே
திருமுருகன்
பூண்டிப் பெருமாளே
பொருள்: உன்னைப் பணிவது அவசியம் என்று
உணர்ந்து பல முறையும் துதித்து, என் அறிவில் உன்னை உணர்ந்து, ஆண்டுக்கு ஒரு நாளாவது
தவ நெறியுடனும், செப ஒழுக்கத்துடனும் உள்ளம் கனிந்து உன் திருவடியைத் தரிப்பதற்கு அருள்
புரிவாயாக. இதை அடக்குவேன் என்றஉறுதியுடன் ஆட்டின்மீது ஏறி அதைச் செலுத்துபவனே, ஆறு
சமயத்தாலும் காணுதற்கு அரியோனே, சிவ குமாரனே, அன்பு கொண்டு நெருங்குபவரை விட்டுப் பிரியாதவனே,
திருமுருகன் பூண்டி என்னும் தலத்தில் உறைபவனே, உன் திருவடியைப் பூண்டற்கு அருள் புரிவாயாக. வேறு எந்த திருப்புகழிலும் இல்லாத ஒரு அற்புத
வேண்டுகோளை இப்பாடலில் வைக்கிறார் அருணகிரிநாதர்.
ஆண்டுக்கு ஒரு நாளில் மட்டுமாவது தப ஜபத்தை நான் மனக் கனிவுடன் மேற்கொண்டு
உன் திருவடியை மனக்கனிவுடன் போற்ற அருளமாட்டாயா?
மேற்குப் பார்த்து மூலவர் சன்னதி உள்ளது. முன் மண்டபத்திற்கு வெளியே நந்தியெம்பெருமான். மண்டபத்தில்
கொடிமரம். திருமுருகநாதர் சிவலிங்க ரூபத்தில்
தரிசனம் தருகிறார். கருவறையின் பின்புறச் சுவரில் யானை ஒன்று தும்பிக்கையால் சிவலிங்கத்தைத்
தூக்கிப் பிடித்திருப்பதை அழகிய புடைப்புச் சிற்பமாக வடித்துள்ளனர். உட்பிராகாரத்தில்
நிருதி விநாயகர், 63 நாயன்மார்கள், சண்முகர், துர்க்கை, பைரவர், சனீஸ்வரர், நவகிரகங்கள்
சன்னதிகள் உள்ளன. கருவறையின்
மூன்று கோஷ்டங்களிலும் பிரம்மன், அண்ணாமலையார், தட்சிணாமூர்த்தி திருவடிவங்கள் உள்ளன.
திருச்சுற்றில் க்ஷேத்திர பாலகராக எட்டு திருக்கரங்களுடன்
பைரவர் காட்சி நல்கும் திருக்கோவில் அமைந்துள்ளது. பைரவர் என்ற பதத்திற்கு பீஷணாது
– துக்கத்தை அழிப்பவர், ரக்ஷணாது – ஞானம் அளித்து இரட்சிப்பவர், சம்சார பயத்திலிருந்து
காப்பாற்றுபவர், வமனாது – மோட்சத்தை அளிப்பவர் என்பது பொருள். எனவே இம்மூன்றையும் வேண்டி
பைரவரை வணங்கினோம். மழுவை சுமந்தவாறு அமர்ந்த கோலத்தில் அருளும் சண்டீசரின்
சிற்றாலயமும் உள்ளது. வெள்ளி சபையில் துர்வாசருக்கு பிரம்ம தாண்டவ தரிசனம் அளித்த ஆடல்
வல்லான் சிவகாமசுந்தரியுடன் அருள் பாலிக்கின்றார்.
சுவாமி சன்னதியின் பூத வரிசையில் சுந்தரர் வேடுபறி நிகழ்ச்சியும், அவிநாசியில்
இறைவனருனால் முதலை உண்ட பாலனை உயிரோடு கொண்டு வரும் காட்சியும், ஆளுடையப்பிள்ளையார்
பல்லக்கில் எழுந்தருளுதலும், அப்பர் பெருமான் சமணத்தை விடுத்து சைவத்திற்கு திரும்பும்
காட்சியும், காரைக்காலம்மையார் பேயுறு பெற்று தவழ்ந்து திருக்கயிலாய மலை ஏறும் காட்சியும்,
திருப்புன்கூரில் நந்தனாருக்காக நந்தி விலகியது ஆகிய வரலாறுகள் அற்புத சிற்பங்களாக
அமைந்துள்ளது.
இன்றும், சிவன் திருடி வந்து மறைத்து வைத்த, வேடுவ பறிகுழி கோவிலில் உள்ளது.
வீட்டில் பொருட்கள் திருட்டு போனால், செய்வினை, திருமண தடை உள்ளிட்ட எத்தடைகள் வந்தாலும்,
சுந்தரமூர்த்தி நாயனார், சிவனை பாடிய இப்பத்து பாடல்களையும், பாடி வணங்கினால், பொருட்கள்
மீண்டும் கிடைக்கும்.
மூலவர் சன்னதியின் இடதுபுறம் மேற்குப் பார்த்த நிலையில் அம்பாள் முயங்கு பூண்முலை
வல்லியம்மையின் சன்னதி அமைந்துள்ளது. இறைவியின் இப்பெயரை சுந்தரர் தனது பதிகத்தின்
5 பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
தயங்கு தோலை உடுத்துச் சங்கர சாம வேதமோதி
மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுணும் மார்க்க மொன்றறியீர்
முயங்கு பூண்முலை மங்கை யாளொடு முருகன்பூண்டி
மாநகர்வாய் இயங்க வும்மிடுக் குடைய ராய்விடில் எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.
பொருள்: எம்பெருனே, நீர், விளங்குகின்ற
தோலை உடுத்து, இன்பத்தைச் செய்கின்ற சாம வேதத்தைப் பாடிக்கொண்டு, அப்பாட்டினால் மயங்கி
ஊரில் உள்ளார் இடுகின்ற பிச்சையை ஏற்று உண்பதற்கு வழி ஒன்றும் அறியீரோ? பல இடங்களுக்குச்
செல்ல வலிமையும் உடையீரென்றால், தழுவுகின்ற, அணிகளை அணிந்த தனங்களையுடைய தேவியோடும்,
இம் முருகன்பூண்டி மாநகரிடத்து இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர்?
காஞ்சியில் கம்பா
நதியில் ஏற்பட்டது போல, சவுந்திரமாநதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, கோவிலை சூழ்ந்து,
சுயம்புவாக உருவான லிங்கத்தை அடித்துச் சென்றது. இதைப்பார்த்த, அம்மன், கீழிறங்கி வந்து,
சிவனை தனது மார்பில் அணைத்து, வெள்ளத்தில் இருந்து காப்பாற்றினார். இதனால், இங்குள்ள
அம்மனுக்கு முயங்கு பூண் முலை வள்ளியம்மை, வட மொழியில் “ஆலிங்க
பூஷண ஸ்தனாம்பிகை” என்று
பெயர் வந்ததாக வரலாறு உள்ளது. ஆவுடை நாயகி, மங்களாம்பிகை
என்றும் அம்பாள் அழைக்கப்படுகிறாள். அம்மன் சன்னதி தனியாக அமைந்துள்ளதோடு, காற்று நுழைய
முடியாத அளவுக்கு சன்னதி அமைந்துள்ளது. மேலும், ஸ்ரீசக்கரத்தில் அம்மன், ஆக்ரோஷ கோலத்தில்
அருள்பாலித்து வருகிறார். சன்னதிக்குள் நுழைந்தாலே, ஒரு அதிர்வு ஏற்படுகிறது. இதனால்,
எந்நோய் இருந்தாலும், நீங்கும் என்பது ஐதீகம். மேலும், சுயம்புலிங்கம், சுப்ரமணியர்,
நந்தி ஆகியவை வடிவில் சிறியதாகவும், கோவில் பள்ளத்தில் இருந்தாலும், அம்மன் சிலை மட்டும்
பெரியதாக உள்ளது. அம்மனுக்கு வாகனமாக நந்தி உள்ளது ஒரு சிறப்பு.
கோவிலுக்கு உள்ளே தெற்கு பிரகாரத்தில் சுப்பிரமணிய தீர்த்தம் உள்ளது, தீர்த்தத்தின் அருகில் சுதையாலான பிரம்மாண்ட நந்தி வடிவம் அமைத்திருக்கின்றனர். அனுமனுக்கு ஒரு சிறு சன்னதியும் உள்ளது. கோவிலுக்கு வெளியே பிரம்ம தீர்த்தமும், ஞான தீர்த்தமும் இருக்கிறது. தீர்த்தத்தின் சுற்று சுவர் முழுவதும் நாகர்களை பிரதிஷ்டை செய்துள்ளனர். சித்த பிரமை பிடித்தவர்களை இந்த்ச் சிவஸ்தலத்திற்கு அழைத்து வந்து தங்கியிருக்கச் செய்து அன்றாடம் மூன்று தீர்த்தங்களிலும் நீராடச் செய்து சுவாமியை ஒரு மண்டலம் வழிபட்டு வர அவர்களுடைய சித்த பிரமை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருவிழா:
மாசியில் 13 நாட்கள் பிரதான திருவிழாவாகும். வேடுபறி உற்சவம், தேரோட்டம்,
தெப்போற்சவம், பிரம்மதாண்டவ காட்சி, மயில் வாகன காட்சி, மஞ்சள் நீராட்டம் என்று
சிறப்பாக இத்திருவிழா நடைபெறுகிறது. மேலும் மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை,
ஆருத்ராதரிசனம், அன்னாபிஷேகம், கந்தசஷ்டி, தைப்பூசம், நவராத்திரி, வைகாசி விசாகம்
ஆகிய விழாக்களும் கொண்டாடப்படுகின்றன.
திருமுருகநாதசுவாமி
ஆலயத்தின் பின்புறம் இவ்வாலயத்தின் மிக அருகே மாதவனேஸ்வரர் கோவில் என்ற ஒரு
கோவிலும் உள்ளது. இவ்வாலயத்தின் முகப்பு மண்டபத்தின் மேற்கூரையில் பெரிய நந்தியெம்பெருமான்
சிற்பம் உள்ளது. இக்கோவிலின் வடமேற்கு மூலையில் கேது பகவானுக்கு தனி சன்னதி
அமைந்துள்ளது. இத்தலத்தில் கேது பகவான் இறைவனை பூஜித்ததாக இத்தல வரலாறு கூறுகிறது.
எனவே இவ்வாலயம் கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓர் அரிய பரிகாரத்தலமாக விளங்குகிறது.
ஆலயத்திற்கு எதிரே உள்ள இராஜகணபதியை தரிசனம் செய்தபின் திருப்புக்கொளியூர்
அவிநாசியை தரிசிக்க கிளம்பினோம்.
No comments:
Post a Comment