Friday, February 11, 2022

பாரத்வாஜேஸ்வரர் இரதசப்தமி தரிசனம்

தை மாதத்தின் வளர்பிறை சப்தமி என்னும் ஏழாம் நாள் இரத சப்தமி என்றும் சூரிய ஜெயந்தி என்றும் கொண்டாடப்படுகின்றது.   ஒரு வருடமானது சூரியனது  இயக்கத்தை அடிப்படையாக  இரண்டு அயனங்களாக  பிரிக்கப்பட்டுள்ளது. சூரியன் வடக்கு நோக்கி நகரும் தைமாதம் முதல் நாள் முதல் ஆனி மாதம் நிறைவு நாள் வரையான காலம் உத்தராயணம் என்று அழைக்கப்படுகின்றது. கோவில் கும்பாபிஷேகம் முதலான புண்ணிய காரியங்களுக்கும். கல்யாணம் முதலிய சுப நிகழ்ச்சிகளுக்கும் உகந்த காலம். மறுமைப் பேறு, நற்கதி அடையவும் உகந்த காலம், வைகுண்டத்தின் கதவுகள் திறந்திருக்கும் காலம் என்பது ஐதீகம். உத்தராயணத்தின் முதல் நாள் மகர சங்கராந்தி தலை சிறந்த புண்ணிய நாள். யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத சபதம் செய்து காலம் முழுவதும் நைஷ்டிக பிரம்மச்சாரியாக வாழ்ந்த பீஷ்ம பிதாமகர், தம் தந்தை அளித்த வரத்தின் படி மோக்ஷம் பெற காத்திருந்த காலம் உத்தராயண புண்ணிய காலம்.

                

முதலில்  உற்சவர்கள் எழுந்தருளியுள்ள அலங்கார  மண்டபத்தில் சேவை பின்னர் மண்டப முகப்பில்  வாகன சேவை நடைபெற்றது. 

                                         அதிகாலை  அதிகாரநந்தி சேவை - 1  

பொதுவாக சிவாலயங்களில் அதிகாலை நேரத்தில்  அதிகாரநந்தி சேவை நடைபெறும் என்பதால் முதலில் அதிகார நந்தி சேவை மண்டப முகப்பில்.

 சந்த்ரமானம் எனப்படும் சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாக கொண்ட பஞ்சாங்கங்களில் மாதத்தின் முதல் நாள் அமாவாசை அல்லது பிரதமையன்று ஆரம்பம் ஆகும். அதற்கடுத்த ஏழாவது நாளே சப்தமி ஆகும்.    சப்தம் என்றால் ஏழு. இதனால் தான் அமாவாசை அல்லது பவுர்ணமி கழிந்த ஏழாம் நாளை, “சப்தமி திதி’ என்கிறோம். தை அமாவாசைக்கு பிறகு வரும் சப்தமி திதியே ரதசப்தமி.   தை அமாவாசையன்று ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் சூரியனின்  வடக்கு நோக்கிய பயணம் துவங்குகிறது. ஓசை வடிவான இந்தப்பூமியில், இந்தப் பூமியும், மற்ற கிரகங்களும் சூரியனை மையமாக வைத்தே சுழல்கின்றன. ஓசையை ஏற்படுத்தும் சங்கு அதனாலேயே சூரியன் கையில் உள்ளது. இந்தப் பூமி சுழல்வதை நினைவு படுத்தும் விதமாய்ச் சக்கரம் உள்ளது. காலமாகிய தேரில் சுற்றும் ஒற்றைச் சக்கரமான நாட்கள், மாதங்கள், வருடங்களைக் கிழமைகள் என்னும் ஏழு குதிரைகள், அருணனின் துணையுடன் ஓட்டப் படுகின்றது என்றும் சொல்லுவதுண்டு. பொதுவாகவே சப்தமி திதியை சூரியனுக்கே உரித்தானதென்று சொன்னாலும், சூரியன் மகர ராசிக்குள் பிரவேசம் ஆனதின் பின்னர் வரும் வளர்பிறை சப்தமி திதியை சூரியனின் சுற்றும் சக்கரமான காலச்சக்கரத்தின் பெயராலும், ரதத்தின் பெயராலும் ரதசப்தமி என்றே அழைப்பார்கள்.

                  

                   

                  

பின்புலத்தில் சோமாஸ்கந்தர் உற்சவரை  தரிசிக்கலாம்

அலங்கார மண்டபம்

                                      

சூரியப்பிரபை வாகன சேவை - 2

பொதுவாக விஷ்ணு ஆலயங்களில்  அதிகாலையில் சூரியப்பிரபை வாகனத்தில் ஆரம்பித்து இரவு சந்திரப்பிரபை வாகனம் உட்பட ஏழு வாகனங்களில் பெருமாள் சேவை சாதித்து அருளுவார். பொதுவாக சிவாலயங்களில் காலை சூரியப்பிரபை அல்லது இரவு சந்திரப்பிரபை வாகனத்தில் சந்திர சேகரர் எழுந்தருளுவார்.

இவ்வருடம் முதல் முறையாக சென்னை புலியூர் கோட்டம் என்றழைக்கப்பட்ட இன்றைய கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள சொர்ணாம்பிகா உடனுறை பாரத்வாஜேஸ்வரர் ஆலயத்தில் காலை முதல் இரவு   வாகனங்களில் சுவாமி தரிசனம் தந்தருளினார் அக்காட்சியை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு. முதலில் இவ்வாலயத்தைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு.

                                                                            


                            

நாக வாகன சேவை - 3

 தொண்டைநாடு சான்றோர் உடைத்து என ஆன்றோரால் போற்றப்படும் பெருமை பெற்றதாகும். இநன்னாட்டில் பொலிவு பெற்று விளங்கும் இருபத்து நான்கு கோட்டங்களுள்  புலியூர் கோட்டம் இரண்டாவது கோட்டமாகும்.  இப்புலியூர் கோட்டத்தில் தற்போதைய   தருமமிகு சென்னையின் ஒரு பகுதியான  கோடம்பாக்கத்தில் சிவபெருமான்  சொர்ணாம்பிகையுடன் எழுந்தருளி அருள் பாலித்து  வருகின்றார்.  இவ்வாலயம்  திரேதா யுகத்தில் ஏற்றம்  மிகுந்த ஏழு முனிவர்களுள் ஒருவரான ஸ்ரீபாரத்வாஜ முனிவர் வழிபட்டமையால் திருபாரத்வாஜேஸ்வரம் எனவும்,  வீரம் செறிந்த மகாசிவ பூஜா துரந்தரனும் வானர அரசனுமான வாலி வழிபட்டமையால்  திருவாலீஸ்வரம் எனவும், ஸ்ரீராமபிரானும், ஸ்ரீநளமஹாராஜாவும் மற்றும் ஸ்ரீஊர்வசியும்  வழிபட்டு அருள் பெற்றுள்ளனர் என்று புகழப்படுகின்றது.



 உச்சிக் காலத்தில்    வில்வ மாலையுடன்  ரிஷப வாகன சேவை  - 4



 மாலையில்  சந்திரப்பிரபை வாகனம் - 5

அடியேன் ஒரு வருடம் அகஸ்மாத்தமாக திருவீதியில் சுவாமி உலா வரும் போது தரிசிக்க ஒரு வாய்ப்புக்கிட்டியது. அப்போது சுவாமிகளின் அலங்காரம் சற்று வித்தியாசமாக மிகவும் உன்னதமாக இருப்பதை கவனித்து இத்தலத்திற்கு செல்ல ஆரம்பித்தேன்.  பின்னர் இவ்வாலயத்தின் குருக்கள் பல ஆலயங்களுக்கு சென்று அலங்காரம் செய்து தருகின்றார் என்று தெரிந்தது. அது போலவே பூசைகளும் மிகவும் ஆத்மார்த்தமாக நடைபெறுகின்றது.



 இரவு   புருஷா மிருக வாகன சேவை - 6

பழைய ஆலயத்தை புதிதாக மாற்றி 2015ல் திருக்குட முழுக்கு நடைபெற்றது அப்போது புதிதாக ஒரு ஐந்து நிலை இராஜ கோபுரம், உற்சவ மண்டபம் ஆகியவை புதிதாக கட்டப்பட்டன. மேலும் அம்மன் சன்னதி தேர் வடிவில் எழிலாக அமைக்கப்பட்டது. பல கலை நுணுக்கம் நிறைந்த  சுதை சிற்பங்கள், கல் சிற்பங்கள் . ஆகம மற்றும் புராண வரலாறுகளை விளக்கும் பல அம்சங்கள் இக்கோவிலில்  தற்போது அமைந்துள்ளன. 


தரிசனம் முழுமையாக முடித்து விட்டீர்களா அன்பர்களே?

இக்கேள்விக்கு விடை அளியுங்கள்,  என்ன ஒரு சிறப்பை கவனித்தீர்கள்?

.  
.  
.
.
.
.
.
.  
.  
.
.
.
.
.
..  
.  
.
.
.
.
.
.
.

மாலை, அம்பாளின் வஸ்திரம், சுவாமியின் வஸ்திரம்  மற்றும் குடை மூன்றும் ஒரே நிறத்தில் அனைத்து சேவைகளிலும் உள்ளது.



No comments: