Thursday, February 17, 2022

கொங்கேழ் தலங்கள் பத்தியுலா - 12

                                     திருப்பாண்டிக்கொடுமுடி தரிசனம்



தேவார மூவர்களாலும் பாடப்பட்ட ஒரே கொங்கு நாட்டுத் தலம் என்ற சிறப்பு இத்தலத்திற்கு உண்டு. அவற்றில் சுந்தரரின் பதிகம் ’நமசிவாயப் பதிகம்’ ஆகும். திருஞானசம்பந்தர் திருநல்லூர் பெருமணத்தில் சிவபெருமானுடன் ஜோதியில் தன் இல்லாள், அடியார்கள் மற்றும் சுற்றத்தாருடனும் கலக்கும் போது

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி

ஓதுவார் தமை நன்நெறிக்கு உய்ப்பது

வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது

நாதன் நாமம் நமச்சிவாயவே - என்று தொடங்கி நமச்சிவாய பதிகம் பாடுகிறார்.

 

திருநாவுக்கரசரோ பல்லவ மன்னன் அவரைக் கல்லுடன் சேர்த்துக் கட்டி கடலினுள் எறிந்த  போது.

சொற்றுணை வேதியன் சோதி வானவன்

பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்

கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்

நற்றுணை யாவது நமச்சி வாயவே - என்று நமச்சிவாய பதிகம் பாடி கல்லையே புணையாக கொண்டு கரை அடைந்தார்.  

 

சுந்தரரோ பாண்டிக்கொடுமுடி வந்து அங்குள்ள இறைவனைக் கண்டு வணங்கி நமச்சிவாய பதிகம் பாடுகிறார். அப்பதிகத்தில் எம்பிரான் தோழர் ஒவ்வொரு பாடலிலும், “உனை நான் மறக்கினு சொல்லு நா நமச்சிவாயவே “ என்று பாடிப்பரவியிருப்பது தனிச்சிறப்பாகும்.

கரூரிலிருந்து 25 கி.மீ தூரத்தில் இத்தலம் உள்ளது. ஈரோட்டில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ளது. கொடுமுடி ரயில் நிலயம் திருச்சி – ஈரோடு இருப்பு பாதையில் இருக்கிறது. கோவில் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே உள்ளது.

நெருக்கியம்  முடி நின்றிசை வானவர்

இருக்கொடும் பணிந்தேத்த இருந்தவன்

திருக்கொடுமுடி என்றலும் தீவினைக்

கருக்கெடும்  இது கைகண்ட யோகமே – என்று நாவுக்கரசர் பாடியபடி  தேவர்கள் ரிக் வேதம் ஒதி வழிபடும் இறைவன் கோவில் கொண்ட திருக்கொடுமுடி என்று மனத்தால் நினைத்தாலே போதும் நமது பிறவி நோய் நீங்கும், இனி ஒரு அன்னையின் கருவில் வந்துபிறக்க மாட்டோம்.  

காவிரிக்கரையில் அமைந்த அருமையான தலம், இதுவரை, சுவாமியை தரிசிக்க   வந்தது போல வடமேற்காக ஓடி  வரும் காவிரி இங்கு சோழ நாட்டை வளப்படுத்த கிழக்கு நோக்கி திரும்புகிறாள். காவிரியாற்றின் மேற்கு கரையில் இத்தலம் அமைந்துள்ளது.

கொடு முடி  என்றால்  பெரிய மலைச் சிகரம்! என்று பொருள். இறைவன் மேரு மலைச் சிகரம் என்பது ஐதீகம். ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் நடந்த போட்டியில் ஆதிசேஷன் சுற்றிய மேருவின் ஆயிரம் சிகரங்களுள் ஒன்று, ஐந்து மணிகளாக உடைபட்டுச் சிதறியது. அவற்றுள் சிவப்புமணி திருவண்ணாமலையாகவும், மரகதம் ஈங்கோய் மலையாகவும், மாணிக்கம் திருவாட்போக்கியாகவும், நீலம் பொதிகையாகவும், வைரம் கொடுமுடியாகவும் ஆயின என்பது தலபுராணம். மற்ற இடங்களின் அவை குன்றாக விழுந்தன, ஆனால் இங்கு விழுந்த வேகத்தில் பாதாளம் வரை சென்று விட்டதால் மேருமலையின் ஒரு கொடுமுடி (சிகரம்) இறைவனாக, சிவலிங்கமாக விளங்குகின்றது. எனவே இறைவர் மகுடேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.

மேருமலையின் ஒரு துண்டு வைரமணியாக இவ்விடத்தில் விழுந்து பெருஞ்சிகரமாகவும், அதுவே மூல லிங்கமாகவும் அமைந்ததால் கொடுமுடி, தென் கைலாயம் என்ற பெயர் பெற்றுள்ளது. பிரம்மன் இத்தலத்ததிற்கு வந்து வழிபட்டதால் பிரம்மபுரி என்றும், திருமால் பூஜித்ததால் அரிகரபுரம் என்றும், கருடன் பூஜித்து தேவலோகம் சென்று அமுதம் கொண்டு வந்ததால் அமுதபுரி என்றும்,  பரத்துவாசருக்கு நடனக் காட்சி அளித்ததால் பரத்துவாச சேத்திரம் என்றும், கன்மாடன் என்னும் வேதியன் வழிபட்டு வயிற்றிலுள்ள களங்கம் நீங்கப் பெற்றதால் கன்மாடபுரம் என்றும், கறையூர், கறைசை என்றும் இத்தலத்தில் பாண்டிய இளவரசனின் விரல் வளர்ந்து குறை தீர்ந்த தலமாதலின்  அங்கவர்த்தனபுரம் என்றாயிற்று.  பின்னர் திருப்பணிகளை சிறப்புறச் செவ்வனே செய்த, மலையத்துவச பாண்டியன் பெயரால், திருப்பாண்டிக் கொடுமுடி என்றும் பல்வேறு பெயர்கள் ஏற்பட்டன.

தட்சனுக்கு மகளாக பிறந்ததால் தாட்சாயணி என்ற பெயர் பெற்ற உமையம்மை அப்பெயர் மறைய பர்வதராஜனான இமவானுக்கு மகளாக பிறந்து சிவபெருமானை மணம்புரிய இத்தலத்தில் வந்து தவம் செய்து இறைவனை மணந்து அதி சுந்தர வடிவுடன் விளங்குவதால் அம்பாள் சௌந்தரநாயகி, வடிவுடைநாயகி என்றழைக்கப்படுகிறாள். இவ்வூரில் பாலாம்பிகைக்கு ஒரு தனி கோவில் உள்ளது.

அரியும், நான்முகனும் அடி முடி தேடிய போது முடியைக் கண்டதாக பிரம்மன் பொய் கூறினார். அத்தோஷம் தீர வன்னி மரமாக  இருந்து இத்தலத்தில் இறைவனை வழிபட்தார் என்பது ஐதீகம்.

அகத்தியர் காவிரியை தன் கமண்டலத்தில் அடைத்துக் கொண்டு இத்தலத்திற்கருகில்  வரும் போது விநாயகர் காக வடிவில் வந்து அக்கமண்டலத்தை தட்டி  விட்டு அகண்ட காவிரியாக ஓட விட்டார். காவிரியின் கீழ்க்கரையில் உள்ள ஒரு பாறையில் இதற்கான தடயங்கள் உள்ளன என்கின்றனர். காவிரியை இழந்த கோபத்துடன் மகுடேஸ்வரரை தரிசிக்க வரும் போது அவருக்கு தரிசனம் தர விரும்பாமல் பாதாளத்திற்குள் அழுந்த அகத்தியர் தன் கரங்களால் அழுத்திப் பிடித்து நிறுத்தினார். இன்றும் சுவாமியின் திருமேனியில் அகத்தியர் கை விரல்களின் தழும்புகள் உள்ளன என்கின்றனர்.

இத்தலத்தைப் போலவே எம்பெருமான் கொடுமுடியாக அருள் பாலிக்கும் தலம்  இமயமலையில் அமைந்துள்ள ஜோதிலிங்கத்தலமான  திருக்கேதாரம் ஆகும். 



காவிரி ஆறு

ஆவணி, பங்குனி மாதங்களில் நான்கு நாட்கள் சூரியனின் கதிர்கள் சுவாமி, அம்மன் திருவுருவங்களில் படுகின்ற இது சூரிய பூசை எனப்படுகிறது.  பொதுவாக இறைவன் மேல் மட்டுமே சில தலங்களில் சூரியக்கதிர்கள் விழும், ஆனால் இத்தலத்தில் இறைவி மீதும் அதுவும் வருடத்தில் இது முறை விழுவது சிறப்பு.  இவ்வளவு சிறப்புகள் பெற்ற

மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப்  பாத மேமனம் பாவித்தேன்

பெற்ற லும்பிறந் தேன்இ னிப்பிற     வாத தன்மைவந் தெய்தினேன்

கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை      யூரிற் பாண்டிக் கொடுமுடி

நற்ற வாஉனை நான்ம றக்கினுஞ் சொல்லும்நா நமச்சி வாயவே

 

பொருள் : கற்றவர்கள் வணங்கித் துதிக்கின்ற புகழையுடைய கறையூரில் உள்ள, ` திருப்பாண்டிக் கொடுமுடி ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற, நல்ல தவவடிவினனே, எனக்கு வேறு துணையில்லையாகும்படி, உனது திருவடியையே துணையாக மனத்தில் துணியப்பெற்றேன் ; அவ்வாறு துணியப்பெற்ற பின்பே, நான் மனிதனாய்ப்பிறந்தவனாயினேன் ; அதுவன்றி, இனியொரு பிறப்பிற் சென்று பிறவாத தன்மையும் என்னை வந்து அடையப்பெற்றேன் ; இனி உன்னை நான் மறந்தாலும், என் நா, உனது திருப்பெயராகிய, ` நமச்சிவாய ` என்பதனை, இடையறாது நவிலும்  என்று எம்பிரான் தோழர் பாடிய இத்தலத்தின்

 

இறைவர் திருப்பெயர்: கொடுமுடிநாதர், மகுடேஸ்வரர், மலைக்கொழுந்தீசர்.

இறைவியார் திருப்பெயர்:      பண்மொழிநாயகி, திரிபுரசுந்தரி, வடிவுடைநாயகி.

தல மரம்:     வன்னி.

தீர்த்தம் :      காவிரி, பிரமதீர்த்தம், தேவதீர்த்தம், பரத்துவாச தீர்த்தம்.

வழிபட்டோர்:         சம்பந்தர், அப்பர், சுந்தரர், சேக்கிழார், பரத்வாஜர்,   அகத்தியர்.

வாருங்கள் இனி இத்தலத்தை வலம் வந்து தரிசிக்கலாம். தெற்காக காவிரி நதி கொடுமுடி சிவஸ்தலத்தில் கிழக்கு நோக்கி திரும்பி ஓடுகிறது. காவிரி நதியின் மேல்கரையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள இத்திருத்தலத்தில், மகுடேஸ்வரர், அம்பாள் வடிவுடைநாயகி, வீரநாராயணப்பெருமாள் ஆகியோருக்கு மூன்று கோபுரங்கள் உள்ளன. உயரமான மதில் சுவர் கொண்ட  கோவில் வளாகத்தில் வடக்கில் மகுடேஸ்வரர், தெற்கில் வடிவுடைநாயகி அம்மன், நடுவில் பள்ளி கொண்ட நிலையில் வீரநாராயணப் பெருமாள் சன்னதி ஆகியவை உள்ளது. தென்மேற்கு மூலையில் ஆஞ்சநேயர், பெருமாள் சன்னதிக்கு  தெற்கில் திருமங்கை நாச்சியார் சன்னதியும், அதன் முன்பே வன்னிமரமும், பிரம்மன் சன்னதியும் உள்ளன.

சுவாமி கோபுரத்திற்கு உள்பாகத்தில் சூரியன், சந்திரனும் இருபக்கத்திலும் உள்ளனர்.  முன் மண்டபம் பிரம்மாண்ட தூண்களுடன் உயரமாக அமைந்துள்ளது. கொடிமரம், இடது காலை மடக்கிய நந்தியெம்பெருமானையும் இம்மண்டபத்தில் தரிசிக்கலாம்.  சுவாமி சன்னதிக்கு இடப்புறம் நவக்கிரகங்கள், பைரவர், சனீஸ்வரர் சன்னிதிகள் உள்ளன. சனீஸ்வரை காகத்தின் மேல் அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருவது ஒரு சிறப்பு.  கோயிலுக்கு நடுவில் மூலவரும், உள்சுற்றுப் பிரகாரத்தில் தெற்கில் நால்வர், அறுபத்து மூவரும், மேற்கில் காவிரி கண்ட விநாயகரும், உமா மகேஸ்வரர், அகத்தீஸ்வரர், கஜலட்சுமி, ஆறுமுகப்பெருமானும், காட்சி தருகின்றனர்.  அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்ற இவர் தேவியர் இருவருடன் ஆறு முகங்களுடனும், பன்னிரு திருக்கரங்களுடன் மயில் மேல் அமர்ந்த கோலத்தில்   சுப்பிரமணியரைத் தாங்கும் மயில் வழக்கத்திற்கு மாறாக எதிர்த் திசையைப் பார்த்த வண்ணம் உள்ளது. பெருமானின் பன்னிருகைகளிலும் ஆயுதங்கள் உள்ளன.

இடர்கள்பட்டலையப் புகுதாதே திருவருட்கருணைப் ப்ரபையாலே

திரமெனக்கதியைப் பெறுவேனோ அரிய யற்கறிதற் கரியானே

அடியவர்க்கெளியற் புதநேயா குருவெனச் சிவனுக் கருள்போதா

கொடிமுடிக் குமரப் பெருமாளே.

 

பொருள்: நல்வினை, தீவினை இரண்டின் காரணமாக ஏற்படும் பிறவி என்னும் கடலில் மூழ்கி துன்பங்களால் அலைக்கப்பட்டு திரியாமல் உனது திருவருளாம் கருணையென்னும் ஒளியாலே உறுதியான வகையில் அடியேன் நற்கதி பெற மாட்டேனோ? திருமாலும், பிரம்மனும் அறிவதற்கு  அரியவனே, உன் அடியவர்க்கு எளிதாகக் கிட்டும் அற்புதமான தோழனே, சிவபெருமானுக்கு குருவாக நின்ற சுவாமிநாதனே, கொடுமுடி தலத்தில் வீற்றிருக்கும் குமரப்பெருமாளே என்று அருணகிரிநாதர் இவரைப் பாடியுள்ளார்.
 
இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் கீழ் முயலகன் வடிவமும் சனகாதி நால்வர்களுக்குப் பதிலாக ஒருவருடைய வடிவமுமே உள்ளது. தட்சிணாமூர்த்திக்குச் சடாமுடி உள்ளது. ரிஷபம் உள்ளது.
வடக்கில் நடராஜர், நால்வர் சன்னதிகள்.  நடராஜர், சிவகாமசுந்தரி மிக அழகு. சித்திரை பௌர்ணமியில் பரத்வாஜருக்கு நடனக்காட்சி தந்த குஞ்சிதபாத நடராஜர் முயலகன் இல்லாமல் நின்று சதுர்முகத்தாண்டவ நடனமிடுவதாக அமைந்துள்ள மூர்த்தம்.

வாருங்கள் இனி ஐயனை தரிசிக்கலாம், தரை மட்டத்தில் சிறிய  இலிங்கமாக சதுர ஆவுடையாருடன் மகுடேஸ்வரர் அருள் பாலிக்கின்றார். கொடுமுடிநாதர், மலைக்கொழுந்தர், மகுடலிங்கர் எனப் பல பெயர்களில் போற்றப்படுகிறார். சுவாமி மீது அகத்தியரின் கை பட்ட வடு உள்ளது. சுவாமியை

தனைக்கணி மாமலர் கொண்டு தாள் தொழுவாரவர் தங்கள்

வினைப்பகையாயின தீர்க்கும்  விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில்

நினைத்தெழுவார் துயர் தீர்ப்பார்  நிரைவளை மங்கை நடுங்கப்

பனைக்கைப் பகட்டுரி போர்த்தார்  பாண்டிக்கொடுமுடியாரே.

 

பொருள்: பாண்டிக்கொடுமுடி இறைவர், தம்மைக் கொன்றை மலர் கொண்டு பூசித்து வணங்குபவர்களின் பகையாய்த் துயர் செய்யும் வினைகளைத் தீர்த்தருளும் மேலானவர். ஞானவடிவினர். நெஞ்சில் நினைத்து வணங்க எழும் அன்பர்களின் துயரங்களைத் தீர்ப்பவர். உமையம்மை அஞ்சப் பனை போன்ற கையை உடைய யானையை உரித்துப் போர்த்தவர் என்று பாலறாவாயரின் பதிகம் பாடி போற்றினோம்.

அம்பாள் சன்னதியும் தூண்களுடன் கூடிய முன் மண்டபத்துடன் அமைந்துள்ளது.  சவுந்திராம்பிகை, பண்மொழியம்மை என்று போற்றப்படும் வடிவுடைநாயகி அம்பாள், அகத்தியருக்கு மணக்கோலத்தில் காட்சியளித்ததால், மகுடேஸ்வரருக்கு வலதுபுறத்தில் மணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். அம்பாள் சன்னதி பிராகாரத்தில் வல்லபை கணபதி, சோழீச்சுரர், விஸ்வநாதர்-விசாலாட்சி,  சப்தமாதர், சரஸ்வதி சன்னதி உள்ளது. வடக்கில் பள்ளியறை. கருவறையில்  அம்பாள் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன், நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் அருள் பாலிக்கின்றாள்.

மலையான் தவஞ்செய்து பெற்றமுத் தேஒற்றி வாழ்கனகச்

சிலையான்மணக்க மணக்குங்தெய் வீகத் திருமலரே

அலையான்  மலிகடல் பள்ளி கொண்டான் தொழும் ஆரமுதே

வலையான் அருமை மகளே வடிவுடை மாணிக்கமே – என்று அம்பாளை மனதாரத் துதித்தோம்.

 

சுவாமி, அம்பாள் சன்னதிக்கு இடையில் வீரநாராயணப் பெருமாள் சன்னதி அமைந்துள்ளது. முன் மண்டபம் தூண்களுடன் கூடிய மண்டபம். இம்மண்டபத்தில் கொடிமரம், கருடாழ்வார் சன்னதி அமைந்துள்ளது. கூரையில் இராமாயண காட்சி சிற்பங்கள். பிரகாரத்தில் இருபுறமும் பன்னிரு ஆழ்வார்களும், பரமபதநாதர், உடையவர், வெங்கடாசலபதி, கருடன், நாகர் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். மூலவர் வீரநாராயணப் பெருமாள் தெற்கில் சிரசு, வடக்கில் திருவடி, கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் ஆதிசேஷனில் பள்ளிகொண்ட கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.  உபயநாச்சியார் இருவரும்  முன்னே அமர்ந்து வணங்கும் கோலத்தில் சேவிக்கலாம். நாபியிலிருந்து பிரம்ம தேவர், தும்புரு, நாரதர், கைகூப்பி வணங்கிய கோலத்தில் திருவடி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவர் ஆகியோரையும் கருவறையில் சேவிக்கலாம்.

பச்சைமா மலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்

இச் சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும்

அச் சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகருளானே – என்னும்  தொண்டரடிப்பொடியாழ்வாரின் பாசுரம் சேவித்தோம்.

 

சுந்தரபாண்டியன் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கல்வெட்டு வீரநாராயணப்பெருமாள் கருவறை சுவற்றில் உள்ளது. தூண்களில் உள்ள சிற்பங்களில் காகமாக வந்த விநாயகர் அகத்தியரின் கமண்டலத்தை தட்டி விடும் சிற்பம், கொடுமுடிநாதரை அகத்தியர் தனது கையால் பிடித்து நிறுத்தும் சிற்பம், வியாக்ர பாத விநாயகர் சிற்பம் ஆகியவற்றைக் காணலாம்.   பெருமாள் கோவிலுக்கு தெற்கில் திருமங்கை நாச்சியார் தனி சன்னதி அமைந்துள்ளது. வடக்கில் பரமபத வாசல் உள்ளது.



மகுடேஸ்வரர் கோயிலின் தல விருட்சமான வன்னிமரம் கோவில் வளாகத்தில் உள்ளது. 2000 ஆண்டுகள் பழமையான இம்மரத்தின் ஒருபுறக் கிளைகள் முட்களுடனும், மறுபுறம் முட்கள் இல்லாமலும், பூக்காமல், காய்க்காமல், தெய்வீகத்தன்மையுடன் திகழ்கிறது. வன்னிமர இலைகளை காவிரி தீர்த்தக்கலசத்தில் இட்டுச் சென்று பழனியாண்டவர் மற்றும் இதர தெய்வங்களை பூஜிக்க பக்தர்கள் கொண்டு செல்கின்றனர்.

 நான்கு திருக்கரங்களுடன் அட்சமாலை கமண்டலத்துடன் மூன்று முகம் கொண்ட பிரம்மா வன்னிமரத்தடியில் அருள்பாலிக்கிறார். வன்னி மரமே அவரது நான்காவது முகம் என்பது ஐதீகம்.

பிரம்மா வீற்றிருக்கும் வன்னி மரத்தை 12 (கால் மண்டலம்), 24 (அரை மண்டலம்), 48 (ஒரு மண்டலம்), வயதின் எண்ணிக்கை, 108 முறை வலம் வந்து அருள் பெருகின்றனர். இம்மரத்தினை பிரதட்சணம் செய்வதால், சனி, குரு, ராகு, கேது போன்ற கிரகதோஷங்களில் நிவாரணம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சனி பகவானுக்கு உரிய மரமாகவும், அவிட்ட நட்சத்திரக்காரர்களின் விருட்சமாகவும் வன்னிமரம் போற்றப்படுகிறது. பஞ்சபாண்டவர்கள் இங்கு வந்திருந்தபோது, தனது ஆயுதங்களை வன்னி மரத்தில் மறைத்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. வன்னிமர அடியில் வீற்றிருக்கும் பிரம்மாவிற்கு ஒவ்வொரு வாரமும் திங்களன்று அபிஷேக ஆராதனை செய்வதற்கும், பிரம்மாவின் முன் அமர்ந்து தியானம் செய்வதற்கும், புனர்ஜென்ம பூஜை வழிபாட்டிற்காகவும் கர்நாடக மாநிலத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கமாக உள்ளது.

ஆலயத்தின் தென் மேற்கு மூலையில் வீர ஆஞ்சநேயர் சன்னதி அமைந்துள்ளது. நின்ற கோலத்தில் வடக்கு நோக்கி ஒரு திருக்கரத்தில் சௌகந்தி மலரை தாங்கி சஞ்சீவி மலையை கொண்டு வர செல்லும் கோலத்தில் சேவை சாதிக்கின்றார் ஆஞ்சநேயர். இவரது வாலில் மணி உள்ளது. 

மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்று சிறப்புகளையுடைய, இத்திருக்கோயிலில் காவிரியுடன் சேர்த்து நான்கு தீர்த்தங்கள் உள்ளன. வன்னிமரத்தின் அருகில் உள்ள தேவ தீர்த்தம், மடப்பள்ளி அருகில் உள்ள பிரம்ம தீர்த்தம், நவக்கிரகம் அருகில் உள்ள பரத்துவாச தீர்த்தம் ஆகியவை கோவில் வளாகத்திலேயே உள்ளன. இவை மூன்றும் கிணறு என்பதால் பக்தர்களின் வசதிக்காக மோட்டர் வைத்து தண்ணீர் ஒரு குழாயின் வழியாக வருமாறு அமைத்துள்ளனர். மூன்று தீர்த்தங்களையும் சிறிது பருகினோம் தலையில் தெளித்துக் கொண்டோம்.  கோவில் நிர்வாகத்தினரிடமிருந்து இது ஒரு நல்ல ஏற்பாடு. காவிரியில் துலா ஸ்நானம் இத்தலத்தில் செய்வது கங்கா ஸ்நானத்திற்குச் சமம் என்னும் குறிப்பு சேது புராணத்தில் உள்ளது.

பித்ரு தோஷ பரிகாரத்தலமாகவும் இத்தலம் விளங்குகிறது. காவிரி மற்றும் தேவதீர்த்தத்தில் நீராடி மகுடேஸ்வரரையும், பள்ளி கொண்ட பெருமாளையும் வழிபட பித்ரு தோஷம் விலகும். அமாவாசையன்று காவிரிக் கரையில் பலர் பித்ரு காரியம் செய்கின்றனர். இத்தலத்தில்  வேப்பமரமும், அரசமரமும் இணைந்துள்ள மரத்தடியில் விநாயகர் வீற்றிருக்கிறார். இவருக்கு காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமண வரமும், குழந்தை வரமும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

 ஆதிசேஷனால் உருவான ஆலயம் என்பதால், இங்கு நாகர் வழிபாடு மிகவும் விசேஷம். இந்த ஆலயத்தைச் சுற்றிலும் நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது தற்போதும் நடைபெற்று வருகிறது. இவ்வாலயத்தில் இராகு-கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபாடு செய்தால், அத்தோஷங்கள் விரைவில் நீங்கும். மேலும் திருமணத் தடை உள்ளவர்களும் இங்கு வந்து வழிபடுகிறார்கள். குழந்தைப் பேறு கிடைக்கவும் வழிபடுபவர்களின் எண்ணிக்கை ஏராளம். நாக தோஷம் இருப்பவர்கள், வன்னி மரத்தடியில் கல்லால் செய்யப்பட்ட நாகரை பிரதிஷ்டை செய்கின்றனர்.

கல்வெட்டுகளில் அதிராஜராஜ மண்டலத்து காவிரி நாட்டுக் கறையூர்த் திருப்பாண்டிக் கொடுமுடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.பாண்டிய, பல்லவ மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்ட இக்கோயிலில் பிற்காலத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார்களாலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இக்கோயிலுக்குரிய கல்வெட்டுகள் பெருமாள் கோயிலிலும், வெளியிடங்களிலும், செப்பேட்டிலும் உள்ளன.

காவடி பூஜை : கொங்கு மண்டலத்தில் உள்ள பெரும்பாலான கோவில் திருவிழாக்களின்போது, கொடுமுடி மகுடேஸ்வரர் - வீரநாராயணப் பெருமாளை வழிபட்டு, காவிரித் தீர்த்தம் கொண்டு செல்வது ஐதீகமாக உள்ளது. கோவில் கும்பாபிஷேகத்திற்கு கொடுமுடி தீர்த்தம் கொண்டு செல்வது வழக்கம். தினந்தோறும் பல பக்தர்கள் வன்னி மரத்தின் முன் அமர்ந்து தீர்த்தம் கலசத்தில் முத்திரித்து எடுத்துச் செல்வதைக் காணலாம். எங்கள் குல தெய்வத்தின் மஹா சிவராத்திரி பூசை சமயத்திலும் கொடுமுடி தீர்த்தம் அபிஷேகத்திற்கு வரும்.

பங்குனி மாதத்தில் பழனி முருகனுக்கு காவடி எடுத்துச் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்களால் கொடுமுடி நிரம்பி வழியும். பங்குனி உத்திரக் காவடி எடுக்கும் பக்தர்கள், காவிரியில் நீராடி, தீர்த்தம் எடுத்துக்கொண்டு கொடுமுடியின் அடையாளமாய் வன்னி இலையை கலசத்தில் வைத்துக்கொண்டு பாதயாத்திரையாய் பழனிக்கு புறப்படுவர். அப்போது தப்பாட்டம், பதலைப்பறை, சிறுபறை, உடுக்கை, பம்பை, உறுமி, பேரிகை, ஊதுகொம்பு, தாரை, திருச்சின்னம், துத்தாரி என வாத்தியங்களின் முழக்கத்தால் கொடுமுடி நகரம் திருவிழா கோலம் பூண்டு காணப்படும்.

கோவிலுக்கு எதிரில் காவிரிக்கரையில் சக்தி விநாயகர் காட்சியளிக்கிறார். கோவிலின் கிழக்குப் புறம், சிவன், அம்பாள் சன்னதிக்கு இடையில் பிரம்மாண்ட மணி மண்டபமும், மணியும் அமைக்கப்பட்டுள்ளது.

"சிட்டனைச் சிவனைச் செழுஞ்சோதியை

அட்ட மூர்த்தியை ஆலநிழலமர்

பட்டனைத் திருப்பாண்டிக் கொடுமுடி

நட்டனைத் தொழநம் வினை நாசமே"  -உயர்ந்தவனை, சிவப்பரம்பொருளை, ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி வடிவானவனை, எட்டு மூர்த்தியை, கல்லால மரத்தின் கீழ் அமர்ந்த மோன குருவை, திருப்பாண்டிக்கொடுமுடிக் கூத்தனை தொழுதால் நம் வினை நாசம் என்று அப்பர் பெருமான் பாடியுள்ளார்.தினமும் நான்கு கால பூசை நடைபெறுகின்றது.

 

ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பெருவிழா நிகழும். ஆடி மாதத்தில் அம்மனுக்கும், இலக்குமிக்கும் சந்தனக்காப்பு ஆராதனை  ,நிகழும். புரட்டாசி மாதத்தில் வடிவுடை நாயகி அம்மனுக்கும், தாயார் திருமங்கை நாச்சியாருக்கும் நவராத்திரி விழா நடைபெறுகின்றது. கார்த்திகையில் தீபம், கடைசி சோம வாரத்தில் சங்காபிசேகமும் நடைபெறும். தைப்பூச நாளில் தீர்த்த விழா நடைபெறும். மாசி மாதம் மகா சிவராத்திரி நாளில் இரவில் நான்கு காலங்களிலும் அபிசேக ஆராதனைகள் நடைபெறும். சுவாமி புறப்பாட்டின் போது சிவன், பெருமாள் இருவரும் புறப்பாடு கண்டருளுகின்றனர் என்பது இத்தலத்தின் ஒரு சிறப்பு.

 

பதினோராம் திருமுறையில் இரட்டை மணிமாலையில்  இத்தலத்தைப் பற்றிய ஒரு பாட்டு, நல்ல அகத்துறையில் அமைந்திருக்கிறது. ஒரு பெண் கொடுமுடியாரிடம் காதல் கொண்டு வாடுகிறாள். அப்பெண்ணின் தாய் இறைவனிடம் சென்று இப்படி அவள் நாளுக்கு நாள் மெலிந்து வாடி நைய விடலாமா? என்று கேட்கிறாள். இக்கேள்வி கபில தேவ நாயனாரது வாக்கில் பாட்டாக வருகிறது. இதோ இப்பாடல்

நிறம் பிறிதாய், உள் மெலிந்து  நெஞ்சு உருகி வாளா

புறம் புறமே நாள் போக்கு  வாளோ? – நறுந்தேன் 

படுமுடியாய் பாய்நீர்  பரந்து ஒழுகு பாண்டிக்

கொடு முடியாய்! என்ற பாடலைப்பாடி கொடுமுடி தரிசனத்தை நிறைவு செய்தோம்.

 

இத்தலத்தில்  தேவஸ்தானத்தின் தங்கும் விடுதிகள் உள்ளன. ஒரு கொசுறு செய்தி, பல் வேறு பக்திப்பாடல்களைப் பாடிய கே. பி. சுந்தராம்பாள் கொடுமுடியில் பிறந்தவர் என்பதால் கொடுமுடி கோகிலம் என்று அழைக்கப்பட்டார்.

அடியோங்கள் தரிசனத்தை நிறைவு செய்யும் சமயத்தில் ஐயனுக்கு அர்த்தசாம பூசை நடைபெற்று நடை அடைக்க ஆரம்பித்தனர்.  யாத்திரையின் முதல்நாள் நேர விரயம் இல்லாமல் இவ்வாறு பல தலங்களை தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது. பின்னர் அங்கிருந்து திருப்பூருக்கு கிளம்பினோம், செல்லும் வழியில் காங்கேயத்திற்கு அருகில் சிவன் மலை மின் விளக்குகளால் ஒளிர்வதைக் கண்டு மனதால் சிவன்மலை ஆண்டவரை தரிசித்தோம். முன் பதிவு செய்திருந்த விடுதியில் தங்கினோம். யாத்திரையின் முதல் நாள் முதலில் காவிரிக்கரையின் மூன்று தலங்களை தரிசித்தோம், அவற்றில் இரண்டில் மலையயேற்றம் செய்தோம், அடுத்து பெருமாளின்   இரண்டு தலங்களை சேவித்தோம், அடுத்து  கொங்கேழ் தலங்களில் இரண்டு தலங்களை தரிசித்தோம். திட்டமிட்டபடி வெஞ்சமாக்கூடல், சிவன்மலை ஆகிய இரண்டு தலங்களை தரிசிக்க இயலவில்லை. இனி   இரண்டாம் நாளில் எத்தலங்களை தரிசித்தோம் என்று அறிந்து கொள்ள தொடர்ந்து அடியோங்களுடன் பயணியுங்கள் அன்பர்களே.

No comments: