Friday, October 23, 2009

கந்தன் கருணை

வள்ளி தெய்வாணை திருக்கல்யாணம்

தாரகாசுரன் மாயா மலம், சிங்கமுகா சூரன் கன்ம மலம், சூரபத்மன் ஆணவ மலம் இந்த மூன்று மலங்கள் என்னும் அஞ்ஞான இருளை தன் ஞான வேலாம் ( ஞான சக்தி) சக்தி வேலால் அழித்த வள்ளல் முருகன். முருகன் தன்னுடன் போர் புரிந்த சூரனையும் கொல்லவில்லை மயிலாகவும் , சேவலாகவும் மாற்றி ஆட்கொண்டார். எந்த குற்றம் செய்தவார்களானாலும் மனமுருகி, முருகா என்று அவன் தாள் பற்றினால் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் பரம கருணா மூர்த்தி முருகன்.

அந்த கருணை வள்ளல் இச்சா சக்தி வள்ளியையும் , கிரியா சக்தி தெய்வானையும் மணந்து கொள்ளும் நிகழ்ச்சி மஹா கந்த சஷ்டிப் பெருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக எல்லா ஆலயங்களிலும் சிறப்பாக நடைபெறுகின்றது. இப்பதிவில் பல் வேறு ஆலயங்களின் திருக்கலயாணக் கோலங்கள் .

சென்னை திருமயிலை சிங்கார வேலவர்


தெய்வாணை திருக்கல்யாணத்திற்கு பிறகு திருமயிலையில் முருகர் ஐராவதத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். திருப்போரூரிலும் இவ்வாறே சூரசம்ஹாரம் முடிந்ததும் தங்க மயில் வாகனத்திலும், திருக்கல்யாணத்திற்க்கு பின் யாணை வாகனத்திலும் அருட்காட்சி தருகின்றார் முருகர்.

சென்னை சைதை செங்குந்தக்கோட்டம்
சிவசுப்பிரமணிய சுவாமி
பச்சை மயில் வாகனத்தில்சென்னை புலியூர் கோட்டம்
பாரத்வாஜேஸ்வரம்

கல்யாண முருகன்


பச்சை மயில் வாகன சேவைசென்னை சைதை காரணீஸ்வரம்
சிவசுப்பிரமணிய சுவாமி
வடபழனி ஆண்டவர் திருக்கல்யாணக் கோலம்
கந்த கோட்டம் முத்துக்குமார சுவாமி
( மேல் உள்ள முத்துக்குமார சுவாமி படத்தின் மீது கிளிக்கி முழுப்படத்தையும் கண்டால் நிச்சயமாக அதை உங்கள் Desktopல் screensavsr ஆக வைத்துக்கொள்வீர்கள்)


சென்னை திருமயிலை
வெள்ளீ்ச்சுரம்திருவான்மியூர் முருகர்


வடபழனி வேங்கீஸ்வரம் முருகர்

யாராவது சூலாயுதம் அல்லது சக்ராயுதம் என்று பெயர் வைத்துக் கொள்வார்களா? ஆனால் வேலாயுதம் என்று பெயர் வைத்துக் கொள்கிறார்களே. ஏனென்றால் ஆயுதங்களுக்கெல்லாம் தலைமையானது அன்னை சிவசக்தி அளித்த சக்தி ஞான வேல். இவ்வேல் யாரையும் அழிப்பதில்லை ஆனால் மாற்றத்தான் செய்கின்றது. ஆம் நம் மாசை அழித்து நம்மை தூயவர்களாக மாற்றும் ஆற்றல் கொண்டது ஞான வேல். ஆகவே தான்

வேலை வணங்குவதே வேலை தினமும்
காலை மாலை என்று எப்போதும்
வேலை வணங்குவதே வேலை

என்று பாடிப் பரவி அந்த வேலாயுதன் கந்தப்பெருமானை வணங்கி நன்மையடைவோமாக.

வேலும் மயிலும் துணை.

கந்தர் சஷ்டி அருட்காட்சிகள்

இப்படங்கள் எல்லாம் சென்ற வருட கந்தர் சஷ்டி உற்சவத்தின் போது பல் வேறு திருக்கோவில்களில் அடியேன் தரிசித்தவை. அன்பர்களாகிய தாங்களும் கந்தர் சஷ்டி நன்னாளில் கண்டு கந்தன் அருள் பெறுக.


திருப்போரூர் முருகன் கோவிலில்
கார் மயிலின் ஆட்டம்

என் முருகனின் கந்தர் சஷ்டி வந்து விட்டது என்று கார் மயில் தோகை விரித்து ஆடுகின்றதோ?

ஆறுமுகம் வாழி ஆறிரண்டு தோள் வாழி

தேறு பதம் வாழியிரு தேவிமார் - வீறுடை

வாழி வேல் வாழி மயில் வாழிபோ ரூரா

வாழி சகம் வாழி மகிழ்ந்து.

***********************

சென்னை சைதாப்பேட்டை செங்குந்தக் கோட்டம்
சிவசுப்பிரமணியர் ஆலயம்


பிரதமை முதல் பஞ்சமி வரை தினமும் காலை மங்கள கிரி விமானத்தில் வீரபாகுத்தேவருடன் எழுந்தருளுகின்றார் சுப்பிரமணிய சுவாமி. மாலை தொட்டி உற்சவம் சுப்பிரமணியருக்கு.

தினமும் திருக்கோவிலில் காலையும் மாலையும் சிவசுப்பிரமணிய சுவாமி, சண்முகசுவாமி மற்றும் உற்சவருக்கு லக்ஷார்ச்சணை நடைபெறுகின்றது.


மஹா கந்தர் சஷ்டியன்று காலை
சக்தி வேல் வாங்கி புறப்படும்
சுப்பிரமணீய சுவாமிஉடன் வீரபாகுத்தேவர்


சூரர் குலம் கருவறுக்க சக்திவேல் கொண்டு புறப்படும்
சிவ சுப்பிரமணிய சுவாமி


சூரனை வென்ற ஜெயந்தி நாதர்
( வேல் இருக்கும் நிலை மயில் மற்றும் சேவற் கொடியை கவனியுங்கள்)

முருகப்பெருமான் கருணை வள்ளல் அவர் சூரனை கொல்லவில்லை. ஞான வேல் பட்டதும் சூரனின் ஆணவம் மாண்டது அவன் மயிலும் சேவலுமாக மாறினான். மயில் முருகருக்கு வாகனமானது. சேவலை கொடியில் கொண்டார் குமரர்.


மயில் வாகனத்தில் கல்யாணக் கோலத்தில்
சிவ சுப்பிரமணீய சுவாமி


சப்தமியன்று மாலை வள்ளி தெய்வாணை திருக்கல்யாணம் பின் பச்சை மயில் வாகனத்தில் பாகம் பிரியா அம்மைகளுடன் சுவாமியும். வள்ளி தெய்வாணை தனித் தனியாகவும் திருவீதி உலா வந்து அருள் பாலிக்கும் காட்சி
வள்ளி நாயகி

தெய்வ நாயகி


அஷ்டமியன்று கந்தப்பொடி உற்சவம்.


********************************

சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் ஆலயம்
சிவசுப்பிரமணிய சுவாமி உற்சவம்

சுப்பிரமணியசுவாமி வீரபாகுத்தேவருடன் புறப்பாடு

பிரதமை முதல் பஞ்சமி நாள் வரை தினமும் காலை சுப்பிரமணிய சுவாமிக்கும் வீரபாகு தேவருக்கும் சிறப்பு அபிஷேகம் மாலை உள் புறப்பாடுமஹா கந்தர் சஷ்டியன்று காலை
சக்திவேல் வாங்கிய சுப்பிரமணிய சுவாமி
(படத்தின் மீது கிளிக்கி பெரிதாக தரிசிக்கலாம்)

மூலவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் பார்த்திருக்கின்றோம் இங்கோ உற்சவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம். சிவிகையில் சந்தனக் காப்புடன் சக்தி வேல் தாங்கி வலம் வரும் சுப்பிரமணியர். உடன் நவ வீரர்களும் உலா வருகின்றனர்.

உடன் வீரபாகுத்தேவர்


ஆணவமாம் சூரனை சம்ஹாரம் செய்ய வரும்
சிவசுப்பிரமணிய சுவாமி


சூரனை வென்ற தேவ சேனாதிபதி


திருக்கல்யாணக் கோலத்தில் வள்ளி தெய்வாணையுடன் பச்சை மயில் வாகனத்தில் பவனி வரும் சிவசுப்பிரமணிய சுவாமி

*****************************

சென்னை வடபழனி ஆண்டவர் திருக்கோவில்பன்னிரு கரங்களில் பல் வேறு ஆயுதமேந்தி
சூரனுக்கு பெருவாழ்வு நல்க வரும் வடபழனி ஆண்டவர்.

தொண்டை மண்டல ஸ்கந்த தலங்களில் சுவாமி சூர சம்ஹாரத்திற்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளுவது வழக்கம் இங்கு சண்முகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளுகின்றார். 21 நாதஸ்வரங்கள் மங்கல கீதம் ஒலிக்க, வாண வேடிக்கைகளுடன் சுவாமி எழுந்த்ருளும் அழகை வர்ணிக்க ஆயிரம் நாவு கொண்டா ஆதி சேஷனுக்கும் கூட அரிது. சூர சம்ஹாரத்தின் போது அப்படியே கந்த புராணத்தின் சாரத்தை வர்ணனையாக கூறும் அற்புதத்தை என்னவென்று சொல்ல. முடிந்தால் நிச்சயம் ஒரு தடவை வடபழனி வந்து பாருங்கள், வடபழனி ஆண்டவர் அருள் பெறுங்கள்.சப்தமியன்று திருக்கல்யாணம்

திருக்கல்யாண கோலத்தில் எழில் குமரன் தேவியருடன்

Wednesday, October 21, 2009

ஆறு படை வீடு கொண்ட திருமுருகா

ஸ்ரீ அகண்ட பரிபூரண சச்சிதானந்த திவ்ய தேஜோமய சொரூபியாய் விளங்கும் மணிமிடற்றண்ணலாம் சிவபெருமானது பால நேத்ர உத்பவராய், சரவணப் பொய்கையிலே திருஅவதாரம் செய்து, கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டு, திருவிளையாடல் புரிந்து, அம்மை உமாதேவியாரிடம் சக்தி வேல் பெற்று சூரர் குலத்தை கருவறுத்து தேவர் குழாத்தைக் காத்தருளி்ய முருகன், குமரன், அறுமுகன், திருமால் மருகன், சிவகுமரன், ஸ்கந்தன், மலையரசன் பொற்பாவை பார்வதி பாலன், ஓளி பொருந்திய ஞான சக்தி வேல் ஏந்தியவன், கார்த்திகேயன், கஜாமுகனுக்கு இளையவன், குகன், மயில் ஏறும் பெருமாள், சூரனை சம்ஹாரம் செய்தவ வள்ளல், சுப்பிரமணியன், தேவசேனாதிபதி, கடம்ப மாலை அணிந்த கதிர்வேலன், இச்சா சக்தி வளீ, கிரியா சக்தி தெய்வாணை மணாளன், செவ்வேள், காங்கேயன், சிலம்பன், ஆயிரம் பெயர் கொண்ட அழகன், தூயவன், சேவ்ற்கொடியோன், ஓம் எனும் மந்திரம் சிவனுக்கு மொழிந்த குருமூர்த்தி. அகத்தியருக்கு அருள் ஞானம் அளித்த ஞான தேசிகன்.

இவர் எழுந்தருளி அருள் பாலிக்கும் படை வீடுகள் ஆறு. சேனாபதி தன் படைகளுடன் தங்கியிருக்கும் இடம். ஆனால் இப்படை வீடுகளில் குடி கொண்டு இருப்பதோ தேவ சேனாதிபதி. இதன் விளக்கம், விடுவிப்பது வீடு. ஆறு வகைப் பகைவர் காமம், குரோதம், லோபம், மோகம், மதம் மாச்சர்யம் ஆகி்யவற்றை அழிக்கும் ஞான வீரனே முருகன்.


திருப்பரங்கிரி, அலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், திருத்தணி, பழமுதிர் சோலை என்னும் ஆறு படை வீடுகளில் எழுந்தருளியுள்ள குமரப்பெருமாளை துதி செய்தால் மலம் அழிந்து மெய்ஞான அருள் பெற்று முக்திப்பேற்றையும் அடையலாம்.

இந்த கந்தர் சஷ்டி நன்னாளில் ஆறு திருப்பதியில் உறையும் ஆறெழுத்து கூறும் அன்பர் நெஞ்சில் உறையும் ஆறு முகனின் தரிசனம் காணுங்கள். சுதை சிற்பங்கள் சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் ஆலயம் சிவசுப்பிரமணிய சுவாமி சன்னதியில் அமைக்கப்பட்டுள்ளவை.

முதல் படை வீடு

திருப்பரங்குன்றம்

தெய்வயாணை திருமணம்

குன்றே இங்கு சிவலிங்கம் என்பதால் பரங்குன்று.

மூலாதார ஸ்தலம்.


திருக்கல்யாண முருகன்.

சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலத் துஞ்சித் திரியாதே

கந்தன் என்று உற்று உனை நாளும்
கண்டுகொண்டு அன்புற் றிடுவேனோ

தந்தியின் கொம்பை புணர்வோனே
சங்கரன் பங்கிற் சிலைபாலா

செந்திலங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங் குன்றிற் பெருமாளே.இரண்டாம் படை வீடு

திருநற்சீரலைவாய் என்னும் திருச்செந்தூர்

சூர சம்ஹாரம் செய்த வள்ளல்

மலையில் இல்லாமல் கடற் கரையில் அமைந்த ஒரே படை வீடு

செந்திலாண்டவர்

சுவாதிஷ்டான ஸ்தலம்

ருத்ர முருகன்

இயலிசையிலுசித வஞ்சிக் கயர்வாகி
இரவுபகல் மனது சிந்தித்து உழலாதே

உயர்கருணை புரியும் இன்பக் கடல் மூழ்கி
உனை எனதுள் அறியும் அன்பைத் தருவாயே

மயில் தகர்கலிடைய ரித்தத் தினை காவல்
வசனகுற மகளை வந்தித் அனைவோனே

கயிலைமலை அனைய செந்திற் பதிவாழ்வே
கரிமுகவன் இளைய கந்தப் பெருமாளேமூன்றாம் படை வீடு

திருவாவினன் குடி என்னும் பழனி

ஞான தண்டாயுதபாணி

திரு- லக்ஷ்மி, ஆ - காமதேனு, வினன்- அக்னி வழிபட்ட தலம்.

மணிபூரகத் தலம்

ஞான முருகன்

அபகார நிந்தைப்பட்டு (உ)ழலாதே
அறியாத வஞ்சரைக் குறியாதே

உபதேச மந்திரப் பொருளாலே
உனைநான் நினைந்தரு(ள்) பெறுவேனோ

இபமாமு கன்தனக் கிளையோனே
இமவமான் மடந்தைஉத் தமிபாலா

ஜெபமாலை தந்தசற் குருநாதா
திருவாவி னன்குடிப் பெருமாளே


நான்காம் படைவீடு

திருவேரகம் என்னும் சுவாமிமலை

சுவாமிநாதர்

தந்தைக்கு மந்திரத்தை உபதேசம் செய்த தகப்பன் சுவாமி

அநாகத ஸ்தலம்

உபதேச முருகன்

காமியத் தழுந்தி இளையாதே
காலர்கைப் படிந்து மடியாதே

ஓம் எழுத்தில் அன்பு மிகவூறி
ஓவியத்தி லந்தம் அருள்வாயே

தூமமெய்க் கணிந்த சுகலீலா
சூரனைக் கடிந்த கதிர்வேலா

ஏமவெற் புயர்ந்த மயில்வீரா
ஏரகத்(து) அமர்ந்த பெருமாளே


ஐந்தாம் படை வீடு

குன்று தோறாடல் என்னும் திருத்தணி

வள்ளி திருமணம்

விசுத்தி ஸ்தலம்

சினம் தணிந்த முருகன்

அதிருங் கழல்ப ணிந்துன் அடியேனுள்
அபயம் புகுவ தென்று நிலைகாண

இதயந் தனிலிருந்து க்ருபையாகி
இடர்சங் கைகள்க லங்க அருள்வாயே

எதிரங் கொருவ ரின்றி நடமாடும்
இறைவன் தனது பங்கில் உமைபாலா

பதியெங் கிலும் இருந்து விளையாடிப்
பலகுன்றிலும் அமர்ந்த பெருமாளே

ஆறாவது படை வீடு

சோலை மலை என்னும் பழமுதிர்ச்சோலை

வள்ளி தேவசேனா சமேத குமரன்

ஞானப்பழம்

ஆக்ஞை ஸ்தலம்

அருள் முருகன்

காரணம தாக வந்து புவிமீதே
காலன் அணு காதி சைந்து கதி காண

நாரணனு வேதன் முன்பு தெரியாத
ஞான நட மேபுரிந்து வருவாயே

ஆரமுத மானதந்தி மணவாளா
ஆறுமுக ஆறி ரண்டு விழியோனே

சூரர்கிளை மாள வென்ற கதிவேலா
சோலை மலை மேவி நின்ற பெருமாளே


ஈன மிகுத் துள பிறவி யணூகாதே
யானுமுனக் கடிமை யென வகையாக

ஞான அருட் டனையருளி வினைதீர
நாண மகற்றிய கருணை புரிவாயே

தான தவத் தினின் மிகுதி பெறுவோனே
சாரதியுத் தமிதுணைவ முருகோனே

ஆன திருப்பதி கமரு னிளையோனே
ஆறு திருப்பதியில் வளர் பெருமாளே.முருகாஸ்ரமத்து பாலன் (முருகன்)

செங்குந்த கோட்ட சுப்பிரமணியர்
வீரபாகுத்தேவருடன் புறப்பாடுஎந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ!
சிந்தா குலம் ஆனவை தீர்த்து எனையாள்
கந்தா! கதிர் வேலவனே! உமையாள்
மைந்தா! குமரா! மறை நாயகனே!

தர்மமிகு சென்னையின் ஒரு பகுதிதான் மேற்கு மாம்பலம். ஒரு காலத்தில் இப்பகுதி பெரும் காடாக இருந்தது அப்போது இவ்விடத்தே ஒரு மா பிலம் அதாவது பெரிய குகை இருந்தது அதுவே இன்று மருவி மாம்பலம் ஆகி அதுவும் இருப்புப்பாதை வந்த பின் இரண்டாக பிரிந்து மேற்கு மாம்பலம் ஆகியது. தமிழகமெங்கும் உள்ளது போல் இங்கும் பல் வேறு ஆலயங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் ஆலயம், நஞ்சை அமுதாக்கிய கோதண்டராமர் ஆலயம், சத்ய நாராயணப்பெருமாள் ஆலயம், காஞ்சி மட காமாக்ஷியம்மன் ஆலயம், எல்லையம்மன் ஆலயம், ஆதி கேசவர் ஆலயம் என்று அமைந்துள்ளது. அது போலவே முருகாஸ்ரமும் மேற்கு மாம்பலத்தில் அமைந்துள்ளது, இந்த ஆஸ்ரமத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் பார்வதி பாலனை. முருகனை, முத்துக்குமரனை, கந்தக் கடம்பனை கார் மயில் வாகனனை இப்பதிவில் கண்டு தரிசனம் செய்ய உள்ளோம் இந்த கந்தர் சஷ்டி காலத்தில்.

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பது பழமொழி. இப்பகுதி மக்களின் துயர் துடைத்து அருளும் பாலகன் எங்கள் முருகாஸ்ரமத்து முருகன், மாமனும் மருகனும் ஒரே வீதியில் கோயில் கொண்டுள்ளனர். ஆம் சீனிவாச பிள்ளை வீதியில் மாமன் சத்ய நாராயணப் பெருமாளாகவும், மருகன் மயிலைதாங்கி, மயிற்பீலி தலையில் சூடி தேர் போன்ற மண்டபத்தில் மாமனைப் போல நாகக் குடை கொண்டு ஒங்காரத்தின் நடுவே இரு பக்கமும் அண்ணன் கணேசனுடன், ஒய்யார வள்ளி லோலன் அற்புதமாய் அருட்காட்சி தந்து நம் துயர் போக்குகின்றான். வலது கரம் நம் துன்பம் தீர்க்கும் அபய கரம். இடது கரம் மயிலை ஒய்யரமாக அணைத்துக் கொண்டு இருக்கின்றது. இடக்கால் நேராக இருக்க வலது காலை சி்றிது மடித்து ஒய்யாரமாக நிற்கின்றான் வள்ளி மணாளன். அப்படியே தலை ஒரு பக்கம் சாய்ந்து நம்மை கருணைக் கண் கொண்டு பார்க்கின்றான். அவனைக் காண வரும் பக்தர் கூட்டமே அவன் அருளுக்கு ஒரு சாட்சி. ஆறுமுக வேலவனுக்கு ஆறு கோண கர்ப்பகிரகம். துவார பாலார்களாக இடும்பனும் வீரபாகுவும். கந்தர் சஷ்டியன்று சக்தி வடிவேலவனுக்கு, பால தண்டாயுதபாணீக்கு, தேவ குஞ்சரி மணாளணுக்கு கங்கணம் தரித்து 45 நாட்கள் விரதமிருந்து பால் குடம் சுமந்து வந்து செலுத்துவோர் ஆயிரம்.


வில்லுடன் அருள் பாலிக்கும் சாய்க்காடு முருகர்

ஹரிஹர பேதமற்ற இச்சன்னதியில் நாம சங்கீர்த்தனம் நாள் தோறும் நடைபெறுகின்றது. முருகாஸ்ரமத்து சுவாமிகளின் வழி காட்டுதலில் தினமும் உற்சவம் தான் இத்திருக்கோவிலில், முருகனுக்குரிய செவ்வாய், சஷ்டி, கார்த்திகை அன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகின்றது. வருடோற்சவமாக கந்தர் சஷ்டி உற்ஸவம் வெகு சிறப்பாக நடைபெறுகின்றது. செவ்வாயன்று வியாதி, கோபம், எழ்மை, என்னும் பகைவர்கள் அழிய சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை நடைபெறுகின்றது.

மற்ற ஆலயங்களில் இருந்து மிகவும் வேறுபட்டது இக்கோவில், இங்கு உண்டியல் கிடையாது. அர்ச்சனை அனைத்தும் முருகன் ஒருவனுக்குத்தான். அபிஷேக, ஆராதனைப் பொருள்களை விரும்பும் அன்பர்கள் பொருளாக வழங்க மட்டுமே முருகனின் அனுமதி உள்ளது. பன்னீர் ப்ளாஸ்டிக் பாட்டில்களில் வழங்கினால் முருகன் ஏற்பதில்லை. கண்ணாடி பாட்டில்களை மட்டுமே முருகர் விரும்புகிறார். இவ்வாறு நம் சுற்றுச் சூழலை நாம் நன்றாக வைத்துக்கொள்ளுவதற்கு முருகன் கூறுகின்றார். “ யாரையாவது பார்த்தால் ம*ம* என்று அழைப்பதால் என்ன பயன், முருகா என்று அழைத்துப் பழகிக்கொள்ளுங்கள்.

முருகா என்றால் முன்னை விணை தீரும்
முருகா என்றால் செல்வம் பெருகும்
முருகா என்றால் கவலை தீரும்

அவ்வாறு ஆயிரம் தடவை அவன் நாமம் கூறுவதால் அந்த குகன், கார்த்திகை பாலன், காங்கேயன் நம்மை நன்றாக வாழ வைப்பான்” என்னும் வாசகம் நாம் எல்லோரும் அந்த பரமாத்மா சொரூபமே, நமக்குள் எந்த பேதமுமில்லை, அல்லும் பகலும் அனவரதமும் அந்த கந்தப் பெருமானின் நாமத்தினை நாம் உள்ளத்தில் கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக உணர்த்துகின்றது. கந்தர் சஷ்டி உற்சவம் எவ்வாறு சிறப்பாக முருகனுக்கு நடைபெறுகின்றது என்பதைக் காணலாமா அன்பர்களே.

இரண்டு மாதங்கள் முன்பே பால் குடம் எடுக்கும் அன்பர்கள் முருகனை வணங்கி கங்கணம் தரித்துக் கொள்கின்றனர். ஞாயிறு தோறும் நடைபெறும் உஞ்சவிருத்தி பஜனையில் ஒரு தடவையாவது கலந்து கொள்கின்றனர். செவ்வாயன்று நடக்கும் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணத்தில் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு முறையாக விரதம் இருந்து கந்தர் சஷ்டிக்காக காத்துக் கிடக்கின்றனர் பக்தர்கள்.

கந்தர் சஷ்டி ஆறு நாட்களும் கொண்டாட்டம் தான் முருகாஸ்ரமத்து பாலனுக்கு. தீபாவளியன்று சிறப்பு பூஜை. தினமும் காலையில் சிறப்பு ஹோமத்துடன் மஹா அபிஷேகம், பின் லக்ஷார்ச்சனை, ஆறு கால பூஜை, மாலை சிறப்பு அலங்காரம், இரவு டோலோற்சவம், இரவு மஹா தீபாரதனை என அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரை நாம சங்கீர்த்தனமும் அர்ச்சனைகளும் தொடந்து நடைபெறுகின்றது.


நாக முடியுடன் காஞ்சி குமரகோட்டம் முருகன்


பிரதமையன்று கந்தர் சஷ்டி உற்சவம் ஆரம்பம். காலை கணபதி ஹோமம், கோ பூஜை, கொடியேற்றம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கடஸ்தாபனம், முருகன், வள்ளி தேவசேனாவிற்கு மூன்று கடங்கள். வேல் ஸ்தாபிதம் செய்யப்படுகின்றது. பின்னர் முதல் நாள் முத்துக்குமரனுக்கு, முக்கண்ணன் புதல்வனுக்கு மூஞ்சூறு வாகனன் இளையவனுக்கு மஹா சந்தன அபிஷேகம். அபிஷேகம் கண்டருளிய கந்த கடம்பனுக்கு அதோமுக சகஸ்ரநாம அர்ச்சனை. சிவபெருமானுக்கு சத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், அகோரம், ஈசானம் என்னும் ஐந்து முகங்களுடன் கீழ் நோக்கிய சக்தியின் அம்சமான முகமான அதோ முகத்தையும் கொண்டு பால நேத்ர உத்பன்னாராய் ஆறுமுகப்பெருமான் அவதாரம் நிகழ்ந்தது. அந்த அதோமுக ஆயிரம் நாமங்கள் கொண்டு அர்ச்சனை நடைபெறுகின்றது. சமஸ்கிருத 51 அக்ஷரங்களைக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது அதோமுக சஹஸ்ரநாமம். அன்பர்கள் அனைவரும் தானாக தங்கள் தங்கள் இடத்தில் அமர்ந்து வாழை இலையில் மலர் கொண்டு திருமுருகனின் பாதங்களில் அர்ச்சனை செய்கின்றனர். அர்ச்சனைக்காக அன்பர் கூட்டம் அலை மோதும். அர்ச்சனை முடிந்ததும் இலவச அன்னதானம் அனைவருக்கும். இரவு என்னப்பனுக்கு எந்தாயானவனுக்கு சிறப்பு சந்தனப் காப்பு அலங்காரம். அப்படியோர் அழகு அழகன் முருகனுக்கு, முருகு என்றாலே அழகு, இளமை, புதுமை, என்றல்லாவா அர்த்தம். மலை போல குவியும் மலர்கள் அர்ச்சனை முடிந்ததும் கார்மயில் வாகனனின் காலடியில் சேர்பிக்கப்படுகின்றன.

துவிதியையன்று காலை சுப்ரமண்ய ஹோமம், இன்று மஹா விபூதி அபிஷேகம், மருந்தாகும் விபூதி நதியாக பாய்கின்றது செந்தில் வேலவனுக்கு சுமார் ஒரு மணி நேரம் சிறப்பாக நடைபெறுகின்றது ஐஸ்வர்ய (திருநீர்) அபிஷேகம். அபிஷேக திருநீறு அனைத்தும் அன்பர்களுக்கு ஆறு நாளும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. இரண்டாம் நாள் காலை இளையோனுக்கு அதோமுக லக்ஷார்ச்சனை. இரவு விபூதிக்காப்பு சிறப்பு அலங்காரம் கண்டு மகிழலாம்.
மருதமலை மாமணி முருகையன்


திரிதியையன்று காலை புவனேஸ்வரி ஹோமம். ஆஸ்ரமத்தின் அதிஷ்டான தேவதை புவனேஸ்வரி அம்பாள். லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யப்படுகின்றது. மூன்றாம் நாளான இன்று மஹா பஞ்சமிர்த அபிஷேகம், ஹோம புனித நீரால் அபிஷேகம். அன்னை சுவாஸினி பிரியை அல்லாவா? எனவே சுவாஸினி பூஜை மற்றும் கன்னிகளை அம்பாளாக பாவித்து கன்னிகா பூஜை. இன்றும் அதோமுக லக்ஷார்ச்சனை. மாலை சிறப்பு அலங்காரம் என்ன என்று அறிய ஆவலாய் அடியேனும் ஒரு வருடம் பக்தர் கூட்டத்தில் கலந்து நின்று கொண்டிருந்தேன். திரை விலகியது கண்ட தரிசனம் பால முருகனை தரிசிக்க வந்தேன் அங்கு தரிசனம் தந்து கொண்டு நின்றது என்ன? என்ன? இடக்கையிலே வலம்புரி சங்கு (அப்படியே உண்மையான வலம்புரி சங்கைக் கொண்டு அலங்காரம் செய்திருந்தார்கள்) வலக்கையிலே ஒளி உமிழும் சக்கரம் தலையிலே மயிற்பீலி இடையிலே வெண் பட்டு பீதாம்பரம், காலகளிலே கொலுசு, இடுப்பிலே புல்லாங்குழல் மருகனுக்கு பதிலாக மந்தகாச புன்னகையுடன் மாமன், குருவாயூரப்பானக அருட்தரிசனம் தந்து கொண்டு நின்றார் பால முருகன். நாளையும் கட்டாயம் மாலை அலங்காரம் வந்து காண அக்கணமே உறுதி கொண்டேன்.

வள்ளி கல்யாணம் வேடன் கோலம்சதுர்த்தியன்று காலை மஹா தேன் அபிஷேகம். இன்று ஹோமம் இல்லை என்பதால் இன்று ஆறு முக லக்ஷார்ச்சனை நடைபெறுகின்றது. ஆறு முகங்களுக்கும் அர்ச்சனை முடியும் போது மதியம் ஆகி விடுகின்றது. ஒவ்வொரு சகஸ்ரநாமம் முடிந்ததும் முருகனுக்கு தீபாரதனை. நிறைவாக ஸ்கந்தர், வள்ளி, தேவசேனா அஷ்டோத்திர அர்ச்சனையும் நடைபெறுகின்றது. விரதம் இருந்து காலை உணவு உண்ணாமல் அன்பர்கள் அர்ச்சனை செய்து பின் ஆசிரமத்திலே பிரசாதம் உண்டு செல்கின்றார். வள்ளி லோலனுக்கு இன்று என்ன அலங்காரம்? தலையில் கொக்கிறகு சொருகி இடையில் புலித்தோலாடை அணிந்து, கட்டாரி கொண்டு காலில் வீரக்கழல் தாங்கி செருப்பணிந்து, ஒரு கையில் வில்லும், மறு கையில் அம்பும் கொண்டு வள்ளி மானைத் தேடும் வேடன் அலங்காரம். கண்கள் கூட அப்படியே விழித்து தேடும்படி அலங்காரம் செய்திருப்பது அற்புதம் அற்புதம். பின்புறம் காடு போல் அலங்காரம் அதை விட அற்புதம் அதிலே நாகம் விளையாடுவது போல் அமைத்துள்ளது அருமை அருமை. மாலை பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது முருகனின் திருமுன்பு.

திருஆவினன்குடி முத்துக்குமாரசுவாமிபஞ்சமியன்று காலையில் மஹா பன்னீர் அபிஷேகம். சுமார் 200 குடம் பன்னீர் நதியாக பாய்கின்றது காங்கேயனுக்கு, கார்த்திகை பாலனுக்கு. பின்னர் இன்றும் ஆறு முகங்களுக்கும் லக்ஷார்ச்சனை. மதியம் எப்போதும் போல் பஜனை. மாலை அலங்காரம் என்னவென்று யூகித்துவிட்டீர்களா? அன்பர்களே இல்லையா? சரி அடியேனே சொல்கின்றேன். வேடன் வந்த பின் விருத்தன் தானே வர வேண்டும். ஆம் இன்று பால முருகனுக்கு வயோதிகர் அலங்காரம், சந்தன காப்பில் வெள்ளைத் தாடி தொங்க, கண்கள் இடுங்கி நோக்க முகம் எல்லாம் சுருக்கம் விழுந்த வள்ளியை மயக்க வந்த கள்ள தாத்தாவைக் கண்டு நம் உள்ளம் உவகை கொள்கின்றது. ஒரு கையில் கம்பு ஊன்றி மறு கையில் கமண்டலம் கொண்டு கள்ளச் சிரிப்பு சிரிக்கின்றான் கண்ணுக்கு கண்ணான கந்தன். என்னங்க அச்சிறு முருகனை அக்குறமகளுடன் அக்கணம் சேர்த்த அண்ணன் கணேசன் இல்லையா ? என்று கேட்கிறீர்களா அவர் இல்லாமல் எப்படீங்க யானை ரூபத்தில் கணேசரையும் சேவிக்கலாம். இரண்டு நாள் அலங்காரத்தில் வள்ளி திருமணத்தையே நம் கண் முன் கொண்டு வந்து காட்டி விட்டனர்.

சென்னை சைதாபேட்டை செங்குந்த கோட்ட முருகன்மஹா கந்தர் சஷ்டியன்று காலை விஸ்வருப தரிசனம் கண்டு பாற்குடங்கள் மற்றும் பாற் காவடிகள் ஊர்வலம் புறப்படுகின்றன, குடங்களின் முன்னும் பின்னும் பல் வேறு பஜனை குழுக்கள் நாம சங்கீர்த்தனம் செய்தபடி உடன் செல்கின்றனர். ஆஸ்ரமத்தை வலம் வந்து மஹா பால் அபிஷேகம் ஸ்ரீ ருத்ரம் பாராயணம் செய்யப்பட்டு குடம் குடமாய் சுமார் மூன்று மணி நேரம் முருகாஸ்ரம முருகனுக்கு, முத்து குமரனுக்கு, விளங்கு வள்ளி காந்தனுக்கு, செங்கல்வராயனுக்கு, சக்தி வடிவேலனுக்கு அருமையான பாலாபிஷேகம். கந்தரனுபூதியும், முருகன் பஜனைப் பாடல்களும் அன்பர்களால் பாராயணம் செய்யப்படுகின்றது. ஆஸ்ரம சுவாமி அவர்கள் பார்த்து பார்த்து அபிஷேகம் செய்கின்றார். பால் சிறிது குளிந்ததாக இருந்தால் (ரெப்ரிஜரேட்டரில் வைத்ததால்) முருகனின் திருமேனியில் அபிஷேகம் செய்யாமல் ஏனென்றால் பால முருகனுக்கு ஜில்லிடுமே என்று திருவடியில் மட்டுமே அபிஷேகம் செய்வார். மஹா கந்தர் சஷ்டியன்று அற்புத பாலாபிஷேகம் செய்யப்பட்ட முருகனின் முகப்பொலிவைக் கண்டாலே மனம் ஆனந்தக் கூத்தாடும். ஆயிரக்கணக்கான மக்கள் பொறுமையுடன் வரிசையில் நின்று முருகப்பெருமானின் அபிஷேகத்தை தரிசித்து பிரசாதம் சுவீகரித்து செல்கின்றனர். நாள் முழுவதும் திருப்புகழ் எதிரொலிக்கின்றது ஆசிரமம் முழுவதும்.

மாலை மற்ற திருக்கோவில்கள் போல் இங்கு சூர சம்ஹாரம் கிடையாது. என்ன என்ன முதலில் இன்றைய அலங்காரம் என்னன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கீங்களா ? இரண்டு நாட்கள் வள்ளியை கள்ள மணம் புரிய வந்த வேடனாகவும், விருத்தனாகவும் கண்டோமல்லவா? இன்று சூரனை வென்ற தேவ சேனாபதியாக அழகனை தரிசிக்கின்றோம். ஆம் முருகனுக்கே உரிய இராஜ அலங்காரம். தலையிலே தலைப்பாகை, திருமுக மண்டலத்திலே பால் வெண்ணீறு, யாமிருக்க பயம் ஏன் என்று உற்சாகமாக ஆறுதல் அளிக்கும் அற்புத ஒளி வீசும் கண்ணழகு, மார்பிலே தங்க பதக்கம், இடுப்பிலே உடைவாள், பட்டு பீதாம்பரம், கால்களிலே தண்டை, சதங்கை, பாதங்களிலே இராஜ பாதுகைகள் என்று தேவ குஞ்சரி மணவாளனாக சிறப்பு கோலத்தில் சிறப்பு மாலைகளுடன் எழிலாக அருட்காட்சி தருகின்றார் ஜெயந்தனை சிறை மீட்ட தேவ சேனாபதி.

திருமுருகன் பூண்டி சண்முகர்


சூர சம்ஹாரம் கிடையாது என்பதால் சஷ்டி இரவன்றே வள்ளி தேவ சேனா திருக்கல்யாணம். ஆஸ்ரமம் முழுவதும் மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. உற்சவ மூர்த்திகள் மரத்தால் ஆனவர்கள் ஆகவே முருகனுக்கு ரோஜா நிற வர்ணம், குற வள்ளி நாயகிக்கு பச்சை வர்ணம், தேவ குஞ்சரிக்கு சிவப்பு வர்ணம், அலங்காரம் அப்படியே நம் மனதை கொள்ளை கொள்கின்றது. தலையிலே முத்து கிரீடம், தேவியர் இருவரும் கொண்டை முடித்து பட்டுச் சேலையில் முத்து சரம் தொங்க, காதுகளிலே தடாகங்கள், மூக்கிலே புல்லாக்கு, கைகளிலே நவரத்ன வலையல்கள், கழுத்திலே நவரத்ன மாலைகள், காலிலே கொலுசு, சிலம்பு, என்ற சர்வாபரணத்தில் மின்னுகின்றனர் மண மக்கள். பஜனை சம்பிரதாய பத்ததி முறையில் திருக்கலயாணம் நடைபெறுகின்றது. பகதர்கள் அனைவரும் பஜனைப் பாடல்களை மனமுருகப்பாடி திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொள்கின்றனர். மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றுதல், ஊஞ்சல். நலங்கு, , திருமாங்கல்ய தாரணம், என்று விஸ்தாரமாக நள்ளிரவு வரை நடைபெறுகின்றது. பின் தேவ சேனாதிபதியின் மஹா தீபாரதனை கண்டு மனம் கனிந்து அருள் செய் முருகா என்று வேண்டி வணங்கி மிக்க மகிழ்ச்சியுடன் இல்லம் திரும்புகின்றனர் பக்தர்கள்.

சப்தமியன்றும் திருவிழா தொடர்கின்றது அன்று காலை வீரபாகுத்தேவர் இடும்பன் பூஜை நடைபெறுகின்றது. இன்றும் காலையில் இராஜ அலங்காரத்தையும் மணமக்களையும் தரிசனம் செய்ய்யலாம், மாலை ஒரு அற்புதமான அலங்காரம் முருகனுக்கு, ஆம் ஆஞ்சனேயர் அலங்காரம். வடைமாலை தரித்துக்கொண்டு கதையை கையில் தாங்கி ஆஞ்சனேயராக தரிசனம் தருகின்றார். பிள்ளையாரில் ஆரம்பித்து ஆஞ்சனேயரில் முடிகின்றது கந்தர் சஷ்டி உற்சவம்.

வயலூர் முருகன்


இதைப்படித்தவுடன் முருகனை குருவாயூரப்பனாக, வேடனாக விருத்தனாக, இராஜனாக, ஆஞ்சனேதராக பார்க்க ஆவல் பிறக்கின்றதா? யோசிக்காமல் சென்னை கிளம்பிவாருங்கள்.

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!
முருகாஸ்ரமத்து பாலனுக்கு அரோகரா!
திருச்செந்தில் ஆண்டவனுக்கு அரோகரா!

இந்த வருடம் கந்தர் சஷ்டி ஆறு நாட்களும் கந்தன் கருணையை பதிவிட முடியவில்லை ஆகவே சென்ற வருடம் இட்ட இடுகைகளை கண்டு களியுங்கள் அன்பர்களே.

கந்தன் கருணை 1


கந்தன் கருணை 2


கந்தன் கருணை 3


கந்தன் கருணை 4


கந்தன் கருணை 5


கந்தன் கருணை 6 - சூர சம்ஹாரம்


கந்தன் கருணை 7 - திருக்கல்யாணம்

பல அற்புத முருகன் கோலங்களை கண்டு களித்தீர்களா? இன்னும் கந்தன் கருணை மழை பொழியும் வந்து நனையுங்கள் அன்பர்களே.