Wednesday, October 21, 2009

ஆறு படை வீடு கொண்ட திருமுருகா

ஸ்ரீ அகண்ட பரிபூரண சச்சிதானந்த திவ்ய தேஜோமய சொரூபியாய் விளங்கும் மணிமிடற்றண்ணலாம் சிவபெருமானது பால நேத்ர உத்பவராய், சரவணப் பொய்கையிலே திருஅவதாரம் செய்து, கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டு, திருவிளையாடல் புரிந்து, அம்மை உமாதேவியாரிடம் சக்தி வேல் பெற்று சூரர் குலத்தை கருவறுத்து தேவர் குழாத்தைக் காத்தருளி்ய முருகன், குமரன், அறுமுகன், திருமால் மருகன், சிவகுமரன், ஸ்கந்தன், மலையரசன் பொற்பாவை பார்வதி பாலன், ஓளி பொருந்திய ஞான சக்தி வேல் ஏந்தியவன், கார்த்திகேயன், கஜாமுகனுக்கு இளையவன், குகன், மயில் ஏறும் பெருமாள், சூரனை சம்ஹாரம் செய்தவ வள்ளல், சுப்பிரமணியன், தேவசேனாதிபதி, கடம்ப மாலை அணிந்த கதிர்வேலன், இச்சா சக்தி வளீ, கிரியா சக்தி தெய்வாணை மணாளன், செவ்வேள், காங்கேயன், சிலம்பன், ஆயிரம் பெயர் கொண்ட அழகன், தூயவன், சேவ்ற்கொடியோன், ஓம் எனும் மந்திரம் சிவனுக்கு மொழிந்த குருமூர்த்தி. அகத்தியருக்கு அருள் ஞானம் அளித்த ஞான தேசிகன்.

இவர் எழுந்தருளி அருள் பாலிக்கும் படை வீடுகள் ஆறு. சேனாபதி தன் படைகளுடன் தங்கியிருக்கும் இடம். ஆனால் இப்படை வீடுகளில் குடி கொண்டு இருப்பதோ தேவ சேனாதிபதி. இதன் விளக்கம், விடுவிப்பது வீடு. ஆறு வகைப் பகைவர் காமம், குரோதம், லோபம், மோகம், மதம் மாச்சர்யம் ஆகி்யவற்றை அழிக்கும் ஞான வீரனே முருகன்.


திருப்பரங்கிரி, அலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், திருத்தணி, பழமுதிர் சோலை என்னும் ஆறு படை வீடுகளில் எழுந்தருளியுள்ள குமரப்பெருமாளை துதி செய்தால் மலம் அழிந்து மெய்ஞான அருள் பெற்று முக்திப்பேற்றையும் அடையலாம்.

இந்த கந்தர் சஷ்டி நன்னாளில் ஆறு திருப்பதியில் உறையும் ஆறெழுத்து கூறும் அன்பர் நெஞ்சில் உறையும் ஆறு முகனின் தரிசனம் காணுங்கள். சுதை சிற்பங்கள் சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் ஆலயம் சிவசுப்பிரமணிய சுவாமி சன்னதியில் அமைக்கப்பட்டுள்ளவை.

முதல் படை வீடு

திருப்பரங்குன்றம்

தெய்வயாணை திருமணம்

குன்றே இங்கு சிவலிங்கம் என்பதால் பரங்குன்று.

மூலாதார ஸ்தலம்.


திருக்கல்யாண முருகன்.

சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலத் துஞ்சித் திரியாதே

கந்தன் என்று உற்று உனை நாளும்
கண்டுகொண்டு அன்புற் றிடுவேனோ

தந்தியின் கொம்பை புணர்வோனே
சங்கரன் பங்கிற் சிலைபாலா

செந்திலங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங் குன்றிற் பெருமாளே.இரண்டாம் படை வீடு

திருநற்சீரலைவாய் என்னும் திருச்செந்தூர்

சூர சம்ஹாரம் செய்த வள்ளல்

மலையில் இல்லாமல் கடற் கரையில் அமைந்த ஒரே படை வீடு

செந்திலாண்டவர்

சுவாதிஷ்டான ஸ்தலம்

ருத்ர முருகன்

இயலிசையிலுசித வஞ்சிக் கயர்வாகி
இரவுபகல் மனது சிந்தித்து உழலாதே

உயர்கருணை புரியும் இன்பக் கடல் மூழ்கி
உனை எனதுள் அறியும் அன்பைத் தருவாயே

மயில் தகர்கலிடைய ரித்தத் தினை காவல்
வசனகுற மகளை வந்தித் அனைவோனே

கயிலைமலை அனைய செந்திற் பதிவாழ்வே
கரிமுகவன் இளைய கந்தப் பெருமாளேமூன்றாம் படை வீடு

திருவாவினன் குடி என்னும் பழனி

ஞான தண்டாயுதபாணி

திரு- லக்ஷ்மி, ஆ - காமதேனு, வினன்- அக்னி வழிபட்ட தலம்.

மணிபூரகத் தலம்

ஞான முருகன்

அபகார நிந்தைப்பட்டு (உ)ழலாதே
அறியாத வஞ்சரைக் குறியாதே

உபதேச மந்திரப் பொருளாலே
உனைநான் நினைந்தரு(ள்) பெறுவேனோ

இபமாமு கன்தனக் கிளையோனே
இமவமான் மடந்தைஉத் தமிபாலா

ஜெபமாலை தந்தசற் குருநாதா
திருவாவி னன்குடிப் பெருமாளே


நான்காம் படைவீடு

திருவேரகம் என்னும் சுவாமிமலை

சுவாமிநாதர்

தந்தைக்கு மந்திரத்தை உபதேசம் செய்த தகப்பன் சுவாமி

அநாகத ஸ்தலம்

உபதேச முருகன்

காமியத் தழுந்தி இளையாதே
காலர்கைப் படிந்து மடியாதே

ஓம் எழுத்தில் அன்பு மிகவூறி
ஓவியத்தி லந்தம் அருள்வாயே

தூமமெய்க் கணிந்த சுகலீலா
சூரனைக் கடிந்த கதிர்வேலா

ஏமவெற் புயர்ந்த மயில்வீரா
ஏரகத்(து) அமர்ந்த பெருமாளே


ஐந்தாம் படை வீடு

குன்று தோறாடல் என்னும் திருத்தணி

வள்ளி திருமணம்

விசுத்தி ஸ்தலம்

சினம் தணிந்த முருகன்

அதிருங் கழல்ப ணிந்துன் அடியேனுள்
அபயம் புகுவ தென்று நிலைகாண

இதயந் தனிலிருந்து க்ருபையாகி
இடர்சங் கைகள்க லங்க அருள்வாயே

எதிரங் கொருவ ரின்றி நடமாடும்
இறைவன் தனது பங்கில் உமைபாலா

பதியெங் கிலும் இருந்து விளையாடிப்
பலகுன்றிலும் அமர்ந்த பெருமாளே

ஆறாவது படை வீடு

சோலை மலை என்னும் பழமுதிர்ச்சோலை

வள்ளி தேவசேனா சமேத குமரன்

ஞானப்பழம்

ஆக்ஞை ஸ்தலம்

அருள் முருகன்

காரணம தாக வந்து புவிமீதே
காலன் அணு காதி சைந்து கதி காண

நாரணனு வேதன் முன்பு தெரியாத
ஞான நட மேபுரிந்து வருவாயே

ஆரமுத மானதந்தி மணவாளா
ஆறுமுக ஆறி ரண்டு விழியோனே

சூரர்கிளை மாள வென்ற கதிவேலா
சோலை மலை மேவி நின்ற பெருமாளே


ஈன மிகுத் துள பிறவி யணூகாதே
யானுமுனக் கடிமை யென வகையாக

ஞான அருட் டனையருளி வினைதீர
நாண மகற்றிய கருணை புரிவாயே

தான தவத் தினின் மிகுதி பெறுவோனே
சாரதியுத் தமிதுணைவ முருகோனே

ஆன திருப்பதி கமரு னிளையோனே
ஆறு திருப்பதியில் வளர் பெருமாளே.4 comments:

CULTUTRE AND PHOTOS said...

தாங்களின் அருளால் முருகனை வணங்கினோம்

Kailashi said...

//தாங்களின் அருளால் முருகனை வணங்கினோம்//

அல்ல அல்ல எல்லான் அந்த முத்துக்குமரனின் அருள்

குமரன் (Kumaran) said...

ஆறு திருப்பதிகளில் அமர் பெருமாளை அவன் திருப்புகழ் பாடி வணங்க வகை செய்ததற்கு நன்றி ஐயா.

Kailashi said...

முருகனருள் முன்னிற்கும் குமரன் ஐயா. அடியேன் ஒரு சிறு துரும்பு எல்லாம் அவர் அருள்.