Saturday, May 21, 2022

கொங்கேழ் தலங்கள் பத்தியுலா - 20

                                                           பவானி தரிசனம்

இத்தலம் சேலத்தில் இருந்து 56 கிமீ தொலைவிலும், ஈரோட்டில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவிலும் உள்ளது. சத்தியமங்கலத்திலிருந்து கிளம்பிய போது பவானி 54 கிமீ தூரம் தானே சிறிது நேரத்தில் சென்று விடலாம் என்று  வேகமாகவே பயணம் செய்தோம். நடை அடைப்பதற்கு முன்னர் சென்றாலும் திருக்கோவிலை முழுவதுமாக தரிசிக்க சமயம் கிட்டாது  என்பதால்  பிறகு சீர் வேகத்தில் பயணம் செய்து காவிரி நதி ஒருபுறமும், பவானி நதி மறுபுறமும் சூழ்ந்திருக்க, எழிலாக  தீவு போல காட்சியளிக்கும்  ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த  பவானி வேதநாயகி உடனுறை சங்கமேஸ்வரர் ஆலயத்தை  அடைந்த போது நடை சார்த்தியிருந்தனர். எத்தலத்திலும் தீர்த்தத்தில் நீராடவில்லை, இங்கு முக்கூடலில் நீராடட்டும் என்று எம்பெருமான் திருவுள்ளம் என்று எடுத்துக்கொண்டு வடக்கு பக்கம் உள்ள இராஜ கோபுரத்தை முதலில் தரிசனம் செய்தோம். இக்கோபுரத்தையொட்டி பரமபதவாசலும் உள்ளது. சைவமும் வைணவமும் இத்தலத்தில் இணைந்துள்ளன என்பதை உணர்த்தும் வகையில்   இராஜ கோபுரத்திற்கு முன்னர் இருபுறமும் விநாயகர் மற்றும் அனுமன் திருசன்னதிகள் உள்ளன. இராஜகோபுரமே இலிங்கம் என்பதால் கோபுரத்தை  நோக்கியவாறு சிவனாரை என்றும் சேவிக்கும் நந்தி இராஜ நந்தியாக சிறு சன்னதியில் அருள் பாலிக்கின்றார்

இராஜநந்தி

 அவரை தத்புருஷாய வித்மஹே சக்ர துண்டாய தீமஹி  |

தந்நோ நந்தி ப்ரசோதயாத் || என்று வணங்கினோம். பின்னர் மதிய உணவை முடித்துக்கொண்டு கூடுதுறைக்கு சென்றோம்.  

வடக்கிலிருந்து பாய்ந்து வரும் காவிரியும், மேற்கிலிருந்து பாயும்  பவானியும்  மற்றும் அந்தர்வாகினியாக அமுதநதி கூடும் சங்கமத்தில் கை, கால், முகம் கழுவி பின்னர் கரையில் அமர்ந்து சங்கமத்தின் அழகை இரசித்தோம்.  வடநாட்டில் கங்கையும், யமுனையும் அந்தர்வாகினியாக சரஸ்வதியும் சங்கமாகும் அலகாபாத் திரிவேணி சங்கமம் (பிரயாகை) என்றழைக்கப்படுகிறது. எனவே பவானி தக்ஷிண திரிவேணி என்றழைக்கப்படுகின்றது.  தக்ஷிண திரிவேணி மட்டுமல்ல, தக்ஷிணப் பிரயாகை என்றும் மூன்று நதிகளும் கூடுவதால் முக்கூடல், கூடுதுறை என்றும், குபேரன் வழிபட்டதால்  தட்சிண அளகை, தட்சிண கைலாயம், போன்ற சிறப்புப் பெயர்களும் இத்தலத்திற்கு உள்ளது.  வடநாட்டின் திருக்காசியைப் புண்ணியத் தலமாக வழிபடுவதற்கு இணையாகத் தென்நாட்டில் பவானி கூடுதுறையை “இளைய காசி” என்று அழைத்து வழிபடுகிறார்கள். காசியைப் போன்றே இங்கு இறந்தாலும், மோட்சம் என்றும்,  இலந்தை மரம் தல விருட்சம் என்பதால் பத்ரி வனம் என்றும்,    பராசர முனிவரால் வழிபடப்பட்டதால் பராசர தலம் என்றும், குபேரனால் வழிபடப்பட்டதால் குபேரபுரி என்றும் வக்கிராசுரன் இறைவனை வழிபட்டதால் வக்கிரபுரி என்றும், விஜய அரசரால் வழிபடப்பட்டதால் விசயபுரி என்றும் அழைக்கப்படுகிறது.

வேதகிரி (ஊராட்சிக் கோட்டை மலை), சங்ககிரி, நாககிரி (திருச்செங்கோட்டு மலை), மங்களகிரி (பெருமாள் மலை), பதுமகிரி ஆகிய ஐந்து மலைகளுக்கிடையே “பவானி” திருத்தலம் அமைந்துள்ளதால் “பஞ்சகிரி மத்திய பிரதேசம்” என்றும் அழைக்கப்படுகிறது. ஒரே இராஜகோபுரத்தின் கீழ், சிவன் மற்றும் விஷ்ணு கோவில்கள் அமைந்துள்ளதால் “க்ஷேத்திர சங்கமம்” என்றும், அமிர்தலிங்கேஸ்வரர், சகஸ்வரலிங்கேசுவரர் மற்றும் காயத்ரி லிங்கேசுவரர் என பல்வேறு மூர்த்திகள் ஒருங்கிணைந்து உள்ளதால் “மூர்த்தி சங்கமம்” என்றும் வழங்கப்படுகிறது.

கிழக்கு இராஜகோபுரம்

பிறப்பு முதல் இறப்பு வரையான அனைத்து தோஷங்களுக்கும் பரிகாரம் செய்யும் கூடுதுறை. பூமிக்குள் பல சிவலிங்கங்களை கொண்ட அற்புதமான தலம். பித்ருக்களுக்கு செய்யவேண்டிய சிரார்த்தங்களை செய்ய உகந்த தலம். இளைய காசி என்பதால் கூடுதுறையில் அஸ்தியை கரைக்க பலர் இத்தலத்திற்கு வருகின்றனர். பரிகாரம் செய்பவர்களுக்காகவே ஒரு மண்டபம் ஆற்றுக்கும் ஆலயத்திற்கும் இடையில் அமைத்துள்ளனர்.

இவ்வளவு சிறப்புப்பெற்ற இத்தலத்தின் இறைவனை தரிசிக்க அடியோங்கள் சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. அப்போது கரையில் இருந்த  விநாயகரையும் மற்றும் மூன்று  திருச்சன்னதிகளை தரிசித்தோம்.  நாக தோஷம் உள்ளவர்கள் இவ்விநாயகர் சன்னதியில் கல் நாகர் சிலை பிரதிஷ்டை செய்தால் நாகதோஷம் விலகும் என்பதால் பல நாகர் சிலைகள் இருப்பதைக் கண்டோம்.  கோயிலுக்கு வெளியில் தெற்கே காவிரிக்கரையில் அமைந்த அச்சன்னதிகள்  காயத்ரிலிங்க சன்னதி, சகஸ்ர லிங்க சன்னதி, அமுதலிங்கேசர் சன்னதி ஆகும். விஸ்வாமித்திரர் ஸ்தாபித்து காயத்ரி மந்திரம் ஓதி வழிபட்ட இலிங்கம் காயத்ரி லிங்கம் என்றழைக்கப்படுகிறது. இச்சன்னதிக்கு  அருகில் காயத்ரி தீர்த்தம் உள்ளது.  ராவணன்  சகஸ்ரலிங்கத்தை பூஜை செய்துள்ளான் என்பது ஐதீகம். இவருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் இராகு – கேது தோஷம் விலகும் என்பது ஐதீகம். 

பராசர முனிவர் சங்கமேஸ்வரரை குறித்து தவம் செய்து கொண்டிருந்த காலத்தில் தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்ற நாகத்தை கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்தனர். முதலில் ஆலாலம் என்ற விஷம் வந்தது அதை சிவபெருமான் அருந்தி தேவர்களையும் அனைத்து ஜீவராசிகளையும் காத்து தியாகராஜர் ஆனார். பின்னர் அமுதம் வந்தது. மஹாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து சாதுர்யமாக அதை தேவர்களுக்கு மட்டும் அளித்தார்.  பின்னர் அமுத கலசத்தை பராசர முனிவரிடம் அளித்தார், அவரும் அதை இப்பத்ரிவனத்தில் மறைத்து வைத்தார். இதை அறிந்த அசுரர்கள் அமிர்தத்தை கவர்ந்து செல்ல வந்தனர். பாராசரர் வேதநாயகி அம்பாளிடம் வேண்ட அம்மனும் அசுரர்களை அழித்தாள். சிறிது காலம் சென்று அமிர்த கலசம் வைத்திருந்த இடத்தை தோண்டிப்பார்த்த போது அமுதம் காவிரி, பவானி சங்கமத்தில் சென்று கலந்திருந்தது. அமிர்த கலமும் சிவலிங்கமாக மாறி இருந்தது. எனவே அவ்விலங்கம் அமுத லிங்கம் எம்றழைக்கப்படுகின்றது.

கூடுதுறையில்

குழந்தையில்லாதவர்கள் இந்த லிங்கத்தை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு ஆவுடையாரைச் சுற்றி வந்தால் குழந்தை பாக்யம் கிடைக்கும் என்பது பக்தர்களிடையே இருந்து வரும் நம்பிக்கையாகும். ஆலயம் திறப்பதற்காக காத்திருந்த சமயத்தில் இச்சன்னதியின் முன் மண்டபத்தில் அமர்ந்திருந்தோம். இச்சமயத்தில் இத்தலத்தின் மற்ற வரலாறுகளை சிந்திப்போம் பின்னர் ஆலயத்தை தரிசிக்கலாம் அன்பர்களே.

அம்பாள், தலம், நதி ஆகிய மூன்றுக்கும் பவானி என்று பெயர். அம்பாளின் ஆயிரம் நாமங்களில் ஒன்று இந்நாமம்.  "பவானி, பாவனா கம்யா, பவாரண்யா குடாரிகா “ என்பது லலிதா சகஸ்ரநாமத்தின் ஒரு ஸ்லோகம். பவானி என்பதன் பொருள்  பவன் என்ற சிவபெருமானின் பத்னி. பவ: என்பது சம்சார சாகரம் அதற்குப் பிராணனை கொடுப்பவள்.  அதாவது இயற்கையின் சக்தி அல்லது படைப்பு ஆற்றலின் ஆதாரம். தனது பக்தர்களுக்கு அருளை வழங்கும் ஒரு அன்னை என்றெல்லாம் பொருள். அருணகிரிநாதர் வேல் விருத்தத்தில் 

கங்காளீ சாமுண்டி வாராகி யிந்த்ராணி

     கௌமாரி கமலாசனக்

கன்னிநா ரணிகுமரி த்ரிபுரைபயி ரவியமலை

      கௌரிகா மாக்ஷிசைவ

சிங்காரி யாமளை பவாநி  கார்த்திகை கொற்றி …… என்று அம்பாளைப் பாடியுள்ளார். 

இனி  பவானியாற்றின் சிறப்பைப் பற்றிக் காணலாம்.  பவானி ஆறு  காவிரி ஆற்றின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றாகும். இது சங்கநூலில் வானி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்து சேர மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு, அதில் பெருங்குன்றூர்க்கிழார் என்ற புலவர் இளஞ்சேரல் இரும்பொறை எனும் சேர மன்னனைப் பற்றிய பாடலில்,

புனல்பாய் மகளிராட வொழிந்த

பொன்செய் பூங்குழை மீமிசத்தோன்றுஞ்

சாந்துவரு வானி நீரினுந்

தீந்தன் சாயலன் மன்றதானே  - என அரசனுடைய உடல் வானியாற்று நீரைப் போல் மென்மையும் தூய்மையும் உடையதாக இருந்தது என்று பாடுகிறார். 

பவானி ஆறு  தமிழகத்தின் நீலகிரி மலைத்தொடரில் உள்ள குந்தா மலைப்பகுதியில் தென்மேற்கு மூலை முகட்டில் உருவாகிறது. மலை முகட்டிலிருந்து கீழிறங்கத் தொடங்கும் பகுதியில் மேல் பவானி அணை கட்டப்படுள்ளது. அங்கிருந்து தென்மேற்காக கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள அட்டப்பாடி பள்ளத்தாக்கில் பாய்ந்து அங்குள்ள முக்கலி என்னுமிடத்தில் கிழக்கு நோக்கி திரும்பி பாய்கிறது.  கோவை நகருக்கு  சுவையான குடிநீரை  வழங்கும் சிறுவாணி ஆறு பவானியுடன் இணைந்த பின் மீண்டும் தமிழகத்துக்குள் பவானி நுழைகிறது.  பின் குந்தா ஆறு பவானியுடன் இணைகிறது. இதற்கு கீழ் பில்லூர் அணை பவானியில் கட்டப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆறு சமவெளியை அடைகிறது. பின் சிறுமுகை  வழியாக கொத்தமங்கலம் அருகே  கீழ் பவானி அணைக்கட்டு எனப்படும்  பவானி சாகர் அணையை அடைகிறது .பவானி சாகர் நீர்த்தேக்கத்தில் மோயார் ஆறானது இணைந்து கொள்கிறது. இந்த அணையினால் ஈரோடு,  கரூர் மாவட்டங்கள் வளம் பெறுகின்றன. பின் பவானி ஆறு கோபிசெட்டி பாளையம்  வழியாக பாய்ந்து பவானி நகரில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது. காவிரி ஆற்றுடன் கலக்கும் முன் இதிலிருந்து  காளிங்கராயன் வாய்க்கால்  தொடங்குகிறது.  

பவானி நகரம் கைத்தறித் தொழிலுக்குப் பெயர் பெற்றது. பவானி ஜமக்காளங்கள் உலகப் புகழ்பெற்றவை. இனி இத்தலத்தின் மற்ற வரலாறுகளைப் பற்றிக்காணலாம்.

Friday, May 13, 2022

கொங்கேழ் தலங்கள் பத்தியுலா - 19

 

சத்தியமங்கலம் வேணுகோபால சுவாமி ஆலய தரிசனம்

பண்ணாரி அம்மனை திவ்யமாக தரிசித்த பின் அங்கிருந்து சுமார் 11:30 மணிக்கு புறப்பட்டோம் சத்தியமங்கலம் வந்து சேர்ந்தபோது 12:00   மணி ஆகிவிட்டது. அவ்வூரில் உள்ள வேணுகோபால பெருமாள் ஆலயத்தை சேவிக்க இவ்வாலயம் சென்றோம். சுமார் 800  ஆண்டுகளுக்கும் முந்தைய ஆலயம் வாணி என்று புகழ் பெற்ற பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. பெருமாள் இவ்வாலயத்தில் மூன்று நிலைகளில் சேவை சாதிக்கின்றார். வேணுகோபால சுவாமியாக நின்ற நிலையிலும், லக்ஷ்மி நாராயணாராக அமர்ந்த நிலையிலும், அரங்கநாதராக கிடந்த நிலையிலும் அருள் பாலிக்கின்றார். இராமானுஜர் சோழநாட்டிலிருந்து மேலகோட்டை  சென்ற போது இவ்வாலயத்தில் தங்கியிருந்தார் என்று கேள்விப்பட்டிருந்தோம், ஆனால் ஆலயத்தில் விசாரித்த போது அப்படியொன்றும் இல்லை என்றார்கள். ஆனால் மாலிக்காபூர் படையெடுப்பின் போது ஸ்ரீரங்கம் உற்சவரும் நகைகளும் மதுரை, கன்னியாகுமரி, கேரளா, மைசூர் வழியாக வந்து இக்கோவிலின் சுரங்க பாதை / பாதாள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்ததாகக் கூறினார்கள். மேலும் திப்பு சுல்தானின்  வரி வசூல் அதிகாரியான ரங்கய்யா என்ற அன்பர் தான் வசூலித்த வரியை செலுத்தாமல் இக்கோவிலின் 108 கால் மண்டபத்தை கட்டினார்,  இதனால் அவர் சிலை ஒரு தூணில் உள்ளது என்றார்கள்.

கொங்கு நாட்டுக்கே உரிய விளக்குத்தூண் இங்கு  பிரம்மாண்டமாக 80 அடி உயரத்தில்  அமைந்துள்ளது. இத்தூண் ஒரே கல்லால் ஆனது என்பது இதன் சிறப்பு.

 
ஐந்து யானைகள் உதவியுடன்  40 அடி ஆழத்தில் இத்தூணை ஸ்தாபித்தார்கள் என்று கூறுகின்றனர்.  விளக்குத்தூணின் கீழ் சதுரப்பகுதியில் பெருமாளை நோக்கியவாறு கருடாழ்வார் வெளியே பார்த்தவாறு ஆறு அடி உயரத்தில் கம்பிரமாக நின்ற கோல அனுமன் மற்றும் சங்கு சக்கரங்கள் நான்கு திசைகளில் அருள் பாலிக்கின்றனர் என்பதால் அதை தற்போது அனுமன் திருச்சன்னதியாக மாற்றி உள்ளனர். இச்ச்சன்னதியின் முகப்பில் பட்டாபிஷேக இராமர், நம்மாழ்வார், ரகோத்வஜ தீர்த்தர் சுதை சிற்பங்களை புது  பஞ்ச வர்ணத்தில் கண்டு களித்தோம்.     இரு பக்கமும் நம்மாழ்வார் மற்றும்  ஸ்ரீரகோத்வஜ  தீர்த்தர் திருச்சன்னதியும் அமைந்துள்ளன. இம்மத்வ யதியின் பிருந்தாவனம்  இவ்வாலயத்திற்கு அருகில் அமைந்துள்ளது.   நாம் துவஜஸ்தம்பத்தை வலம் வந்து வணங்க முடியும்.


                            

                                                                         வேணு கோபால சுவாமி   விமானம்

இம்மண்டபத்தை அடுத்து செப்பு கவசம் பூண்ட கொடி மரம் மற்றும்  பலிபீடமும் உள்ளது.  அடுத்து கிழக்கு பார்த்த மூன்று  நிலை இராச கோபுரம்  அதில் சதுர் புஜராக சங்கு சக்கரங்களுடனும், ருக்மணி சத்யமாமா சகிதராக கருவறையில் சேவை சாதிப்பது போல  வேணு கோபாலர் சுதை சிற்பம் அலங்கரிக்கின்றது.

இத்தலத்தில்  ருக்மணி சத்யபாமா சமேதராக வேணு கோபால சுவாமி நின்ற கோலத்திலும், லக்ஷ்மிநாராயணராக அமர்ந்த கோலத்திலும், கஸ்தூரி ரங்கநாதராக கிடந்த கோலத்திலும் சேவை சாதித்து அருளுகின்றார்.  தாயார்  சகல மங்களங்களையும் அருளும் கல்யாண மஹாலக்ஷ்மியாக அருள் பாலிக்கின்றாள். மேலும் சுதர்சன நரசிம்மர், ஆண்டாள், ஹயக்ரீவர், தன்வந்திரி பகவான்,  கல்யாண விநாயகர், ஐயப்பனும்  இத்தலத்தில் அருளுகின்றனர். கிருஷ்ணர் விமானத்தில் எழிலாக தசவதார கோலங்களை தரிசிக்கலாம்.

வெளிப்பிரகாரத்தில் வாமனரின் சிற்பம் சூரிய சந்திரர்களுடன் உள்ளது. காஞ்சிபுரம் போல இவ்வாலயத்திலும் மோட்ச பல்லி சிற்பம் உள்ளது. விஷ ஜந்துக்களால் பாதிக்கப்பட்டோர் இப்பல்லியை வந்து தொட்டு வணங்கி விட்டு செல்கின்றனர். பல மீன் சிற்பங்கள் காணக்கிடைக்க்கின்றன எனவே பாண்டியர்கள் திருப்பணி செய்திருக்கலாம்.  சூரிய சந்திர கிரகண புடைப்பு சிற்பங்களையும் காணலாம்.

மண்டபத்தில் ஒரு சுரங்கப்பாதை உள்ளது. மாலிக்காபூர் படையெடுப்பின் போது ஸ்ரீரங்கம் உற்சவரும் நகைகளும் மதுரை, கன்னியாகுமரி, கேரளா, மைசூர் வழியாக வந்து இக்கோவிலின் சுரங்க பாதை / பாதாள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்ததாகவும், (எனவே அரங்கநாதர் திருசன்னதி இத்தலத்தில் உள்ளது) திப்பு சுல்தான் போர் காலங்களில் இச்சுரங்க வழியை உபயோகப்படுத்தியதாவும் இரு செய்திகள் இச்சுரங்கப்பாதையைப் பற்றி கூறுகின்றனர்.தீபஸ்தம்ப மண்டப முகப்பு


இவ்வாலயத்தில் அதிகநேரம் இருக்கவில்லை, அடுத்து பவானியை தரிசிக்க வேண்டும் என்பதால் மதியம் நடை சார்த்துவதற்கு முன் முடிந்தால் சென்று விடலாம் என்று அவசர அவசரமாக புறப்பட்டோம். சமயத்தில் சென்று சேர்ந்தோமா? என்று அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே. 

 

Thursday, April 21, 2022

கொங்கேழ் தலங்கள் பத்தியுலா - 18

                        உடுமலைப்பேட்டை மாரியம்மன் தேர்த் திருவிழா 

இன்று மாரியம்மனின் திருத்தேரோட்டம் நடைபெறுகின்றது என்பதால் இந்நிறைவுப்பகுதி பதிவு.   

கம்பம் போடுவதற்கு இரண்டு நாள் முன்னர் கோவிலுக்கு வெள்ளையடிப்பார்கள், விமானத்திற்கும் சுண்ணாம்புதான் அடிப்பார்கள். தேரோட்டம் உள்ளது என்பதால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமலிருக்க, கிராம சாந்தி, வாஸ்து சாந்தி பூஜை நடைபெறும். கம்பம் செவ்வாய்க்கிழமை இரவில் போடுவார்கள்.  அதற்காக பகலில்  பால் வடியும் மரத்தில் (வேம்பு, அரச மரம் போன்றவை) மூன்று கவட்டைகள் உள்ள கிளையாக பார்த்து வெட்டிக்கொண்டு போய் கம்பம் கொண்டு வரும் கங்கையில் (கவுண்டர் தோட்டத்து கிணறு) வைத்து விட்டு வருவார்கள்.  இரவு அம்மனுக்கு பூசை செய்து, மேள தாளத்துடன் கங்கைக்கு சென்று, கம்பத்தை எடுத்து முதலில் மஞ்சள் துணி சுற்றுவார்கள். பிறகு முல்லைச் சரம் கொண்டு கம்பம் முழுவதையும் அலங்கரிப்பார்கள். அங்கிருந்து கோவிலுக்கு கொண்டு வருவார்கள். ஆலயம் முழுவதும் பக்தர்களால் நிறைந்திருக்கும்.  கோவிலை சுற்றி வந்து கம்பம் போடுவார்கள். கம்பம் அம்மனின் கணவன் என்பது ஐதீகம், இதற்கான ஒரு கதை இப்பகுதியில் வழங்கப்படுகிறது  அது பொய் சொல்லி ஏமாற்றி தன்னை திருமணம் செய்து கொண்ட கணவன் மேல் அனலை  எடுத்து வீசியதன் நினைவாக இச்சடங்கு நடத்தப்படுகின்றது.  

இவ்வாலயத்தில் நடைபெறும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் சமூக அடிப்படையில் நடைபெறுகிறது. அவ்விதம் கம்பம் போட்ட மறுநாள் புதன்கிழமை முதல் கரகம் செலுத்துபவர்கள் எமது சமூகத்தினர். நேரு வீதி காமாட்சியம்மன் ஆலயத்திலிருந்து வேப்பிலையால் அலங்கரிக்கப்பட்ட குடங்களில் மஞ்சள் நீர் கொணர்ந்து அம்மன் முன்னர் வைத்து பூசை செய்தபின் கம்பத்திற்கு அபிஷேகம் செய்து விட்டு செல்வோம். பல பெண்கள் அவரவர்கள் வீட்டிலிருந்து தங்களுக்கு முடிந்த  சமயத்தில் கரகம் கொணர்ந்து செலுத்தி விட்டு செல்வர். 

கரகம் செலுத்துபவர்களில் தேவாங்கர்களின் (சேடவார் என்றும் அழைப்பார்கள்) கரகம் செலுத்தும் முறையைப் பற்றி சொல்ல வேண்டும். அவர்களின் சக்தி கரகம் வாழைப்பழத்தில் தொங்கிக்கொண்டு வரும். காவடி போல இருவர் சக்தி கரகம் ஏந்தி வருவர். கரகம் நகராமல் நிற்கும் போது அவர்கள் சமூகத்தினரின் வீர குமார இளைஞர்கள் அலகு போடுவார்கள். மணிகள் பூணப்பட்ட புனித வாளால் ("கத்தி") "தீசுக்கோ தாயே", "தெகதுக்கோ தாயே"," தோ பாரக், தளி பராக் "என கூறிக்கொண்டே தங்களை காயப்படுத்திக் கொள்வார்கள். இரத்தம் மார்பில் துளிர்க்கும், விபூதி பூசிக் கொள்ளுவர். அதை பார்க்கும் போதே மெய் சிலிர்க்கும். சிறுவர்களான நாங்கள் வியப்புடன் இதைப் பார்த்துக் கொண்டே உடன் செல்வோம்.   இவ்வாறு கம்பம் கங்கை சேரும் வரை எந்நேரமும் மஞ்சள் நீரால் கம்ப மண்டபம் எப்போதும் ஈரமாகவே இருக்கும்.

இத்திருவிழாவின் அடுத்த முக்கிய நிகழ்வு வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றம். வைதீக முறைப்படி கொடியேற்றம் நடைபெறுகிறது. அக்னி ஜுவாலா மகுடத்துடன் திரிசூலத்துடன் சிம்மவாகினியாக அம்மனின் படம் வரையப்பட்ட கொடி ஏற்றப்படுகிறது. அடுத்து தேர் அலங்காரத்திற்காக ஆரக்கால் பூசை செய்யப்பட்டு தேரில் நாட்டப்படுகிறது. பக்தர்கள் பூவோடு எடுப்பதும் இதற்கப்புறம் துவங்குகிறது. பூவோடு எடுப்பது மாரியம்மனுக்குரிய ஒரு முக்கிய நேர்த்திக்கடன். இப்பகுதியில் அக்னியை,  பூ என்று அழைப்பார்கள் எனவே பூவோடு என்பதை மற்ற இடங்களில் அக்னி சட்டி என்றும் அக்னி கரகம் என்று அழைப்பார்கள்.  அதற்கான சட்டியில் பூ வளர்த்து மூன்று முறை கோவிலை வலம் வருவார்கள். அவரவர் கோவிலிருந்து மொத்தமாக கொண்டு வந்து செலுத்துபவர்களும் உண்டு. ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கானவர்கள் பூவோடு எடுப்பார்கள். திருவிழா காலங்களில் மட்டுமே பூவோடு எடுக்க அனுமதி, அம்மனின் திருக்கல்யாணத்திற்கு முன்னர் வரை மட்டுமே பூவோடு எடுக்க அனுமதி உண்டு.

அடுத்து அம்மன் புறப்பாடு வெள்ளி இரவிலிருந்து தொடங்குகிறது. ஒவ்வொரு நாள் புறப்பாட்டிற்கான உபயத்தை ஒவ்வொரு சமூகத்தினர் செய்கின்றனர். காமதேனு, யானை, ரிஷபம், அன்னம், சிம்மம், மயில் வாகனங்களில் சிறப்பு மலர் மற்றும் மின் விளக்கு அலங்காரத்துடன் அம்மன் எழுந்தருளி இப்பகுதியில் மெரவணை எனப்படும் ஊர்வலம் வந்து அருள் பாலிக்கின்றாள். உண்மையிலேயே இது ஊர்வலம்தான், ஆதிகாலத்தில் ஊர் எல்லையாக இருந்த வீதிகளில் அம்மன்  இன்றும் வலம் வருகின்றாள்.

வெள்ளி இரவிலிருந்து கலை நிகழ்ச்சிகளும் துவங்கும். பாட்டுக்கச்சேரிகள், சொற்பொழிவுகள், பட்டிமன்றம், நாடகங்கள், மெல்லிசை என்று அனைத்து விதமான நிகழ்ச்சிகளும் இரவில் நடைபெறும். மறக்க முடியாதது கிருபானந்த வாரியார் அவர்களின் சொற்பொழிவுகள். நடுநடுவே கேள்விகள் கேட்பார், சரியாக பதில் சொல்பவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக அளிப்பார். அடுக்கு மொழியில் பேசுவார்

வருவதும் போவதும் இரண்டு இன்பம் துன்பம்

வந்தால் போகாதது இரண்டு புகழ்  பழி

போனால் வராதது இரண்டு மானம் உயிர்

தானாக வருவது இரண்டு இளமை மூப்பு

நம்முடன் வருவது இரண்டு பாவம் புண்ணியம்

அடக்க முடியாதது இரண்டு  ஆசை துக்கம்.

தவிர்க்க முடியாதது இரண்டு பசி தாகம்

நம்மால் பிரிக்க முடியாதது இரண்டு பந்தம் பாசம்.

அழிவைத் தருவது இரண்டு பொறாமை கோபம்.

எல்லோருக்கும் சமமானது இரண்டு பிறப்பு இறப்பு.

முதலில் கலைநிகழ்ச்சிகள் பிரசண்ட விநாயகர் கோவிலுக்கு அருகில் நடைபெறும். இவர் அக்கோவிலுக்கு இராஜகோபுரம் இல்லை என்பதை அறிந்து தன் முயற்சியால் பணம் வசூலித்து இராஜகோபுரம் அமைத்துக் கொடுத்தார்.  சீர்காழி கோவிந்தராஜன் கச்சேரியும் மறக்க முடியாத ஒன்று.

முதலில் ஊரின் நடுவில் ஒரு குட்டை இருந்தது, சிறு வயதில் அதில் இறங்கி நண்டு பிடித்து விளையாடி இருக்கிறோம், தட்டையான கற்களை எடுத்து வீசி அலை அலையாக செல்வதைப் பார்த்து இரசித்திருக்கிறோம். மழைக்காலம் வந்த பின் தவளைக் குஞ்சுகள் அப்பகுதி முழுவதும் மொய்ப்பதை பார்த்து வியந்திருக்கிறோம். அதன் கரையில் இருந்த பூவரச மரங்களில் மார்கழி மாதத்தில் வீட்டிற்கு முன் போடப்படும் பிரம்மாண்ட கோலங்களை அலங்கரிக்க வைக்கப்படும் புள்ளார்களில் வைக்க மலர் பறித்துச் சென்றிருக்கிறோ௯க்ம். புளிய மரங்களில் ஏறி விளையாடி புளியம்பழத்தின் அனைத்து நிலைகளையும் சுவைத்து மகிழ்ந்திருக்கிறோம். குட்டையின் ஒரு கரையில் இருந்த மாட்டு வண்டிகளும், குதிரை வண்டிகளும் இன்னொரு மறக்க முடியாத அம்சம். ஆட்டோக்கள் வருவதற்கு முந்திய காலம் அது. யாருக்காவது ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என்றால் இவ்வண்டிகளில்தான் அழைத்துச்செல்வோம். பலரின் பிரசவத்திற்கு தர்மாஸ்பத்திரி செல்லவும்  இவ்வண்டிகள் பயன்படுத்தப்பட்டன.

தமிழகத்தின் தலையெழுத்தே நீர்நிலைகளை அழிப்பதுதானே, எங்கள் குட்டைக்கும் இந்நிலை ஏற்பட்டது. மண்ணைக் கொட்டை நிரப்பி, கரையில் இருந்த மரங்களையெல்லாம் வெட்டிவிட்டனர். உடுமலை நாராயண கவி அவர்களுக்கு ஒரு மணி மண்டபம் தற்போது ஒரு பக்கத்தில் அமைத்துள்ளனர். ஒரே ஒரு ஆறுதல் அதிக கட்டிடங்கள் இது வரை வரவில்லை திடலாக பராமரிக்கின்றனர்.  தற்போது கலை நிகழ்ச்சிகள் இக்குட்டை திடலில் நடைபெறுகின்றன.

தினமும் இரவு பூசாரி பூவோடு எடுத்துக்கொண்டு வந்து கோவிலை வலம் வந்து  மூன்று முறை கம்பத்தின் மேல் வைத்து செல்கின்றார். எதற்காக இப்படி செய்கின்றீர்கள் என்று கேட்ட போது, அம்மன் தன் கணவன் மேல் தணலை வாரி இறைத்தால் எனவே இவ்வாறு செய்கிறோம் என்றார் பூசாரி.

மாரியம்மன் திருவிழாவில் மூன்று கிளையோடு கூடிய கம்பத்தை ஆரம்ப நாளில் கோயிலின் முன் கொண்டுவந்து நடுவார்கள். கம்பம் மாரியம்மனின் கணவன் என்று அர்த்தம். விழா முடியும் மட்டும் மாரியம்மனை  சுமங்கலியாக அலங்காரம்  செய்வார்கள். அக்கினிச் சட்டியை ஏந்தி வருபவர்கள் அதை அந்த முக்கிளைக் கம்பத்தில் வைப்பார்கள். கம்பம் கங்கை  சேருகின்ற அன்று மாரியம்மனுக்கு வெள்ளைச் சேலையும் விபூதியும்தான்.


ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதியுலா

இவ்வாறு கரகம், பூவோடு, இரவு மெரவணை (புறப்பாடு) என்று கோலாலமாக ஒரு வாரம் செல்கின்றது. ஒருபுறம் தேரில் அலங்காரத்திற்கான உட்கூடு  கட்டி முடிக்கப்பட்டு தயாராகிறது. பச்சை மூங்கில்களை உள்ளே கொடுத்து கட்டி பலம் சேர்க்கின்றனர். தேருக்கு எண்ணெய் பூசி பளபளக்க செய்கின்றனர். கழற்றி வைக்கப்பட்டிருந்த வெளி சக்கரங்கள் நான்கினையும் பழுதுபார்த்து தேரோட்டத்திற்காக மாட்டுகின்றனர். 

தேரோட்டத்திற்கு முதல் நாளான புதன்கிழமை பல சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றது. அதிகாலை தேரின் கலசம் முதலில் பூசிக்கப்பட்டு ஸ்தாபிதம் செய்யப்படுகின்றது. அன்று மாலைக்குள் முழு அலங்காரமும் முடிக்க வேண்டும் என்பதால் வேலை வேக வேகமாக நடைபெறுகின்றது. ஒவ்வொரு நிலையாக முடித்துக்கொண்டு கீழ் நிலைக்கு வருகின்றனர், அம்பாள் ஊஞ்சலில்தான் எழுந்தருளுவாள் என்பதால் ஊஞ்சலை பொருத்துகின்றனர். இந்நிலையில் வாழை மரம், பாக்கு மரம், கரும்பு, செவ்விளனி தென்னங்குலை, பனங்குலை, ஈச்சங்கொத்து, மாவிலை கொண்டு அலங்கிரிக்கின்றனர். நான்கு துவாரங்களிலும் துவார பாலகர்கள், நான்கு மூலைகளில் யாழி கொண்டு அலங்காரம் செய்தபின், தேரோட்டியாக பிரம்மனும் பாயும் இரண்டு பொம்மைகளும் பொருத்தப்படுகின்றது. அம்மன் எழுந்தருளும் ஊஞ்சல் மற்றும் அக்கூடு சந்தனம் மற்றும் வாசனை திரவியங்களைக் கொண்டு நறுமணமாக்கப்படுகின்றது. ஊஞ்சலின் மேற்புறம் எழிலான மேல் விதானம் பொருத்துகின்றனர்.   தேர் அலங்காரம் இரவு வரை நடைபெறுகின்றது.

ஆலயத்தில் மா விளக்கு பூசை என்பதால் அதிகாலை நான்கு மணியிலிருந்தே பெண்கள் மாவிளக்கு தட்டுடன் கோவிலுக்கு படை எடுக்கின்றனர். பெண்கள் கூட்டமாக மாவிளக்கிற்கு மேலே அலங்காரமாக வண்ணகாகித சக்கரம் செருகி ஒன்றாக மாவிளக்கு தட்டை ஏந்தி வருவதே ஒரு  தனி அழகு.  இனி மாவிளக்கு எப்படி செய்தோம் என்று காணலாம் பச்சரிசியை நன்றாக களைந்து கல், உமி நீக்கி இரண்டு மணி நேரம் ஊற வைப்போம். பின்னர் தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு, ஒரு வெள்ளைத்துணியில் அரைமணி நேரம் ஆற வைப்போம். அப்போது மிக்சி கிடையாது என்பதால் உரலில்தான் மாவு இடிப்போம். சிறுவர்களாகிய நாங்கள் உலக்கை கொண்டு மாவு இடிப்பதில் அம்மாவிற்கு உதவி செய்வோம். இடித்த மாவை நைசான மாவிற்கான சல்லடை கொண்டு சலித்து எடுத்து வைத்துக் கொள்வோம். அடுத்து வெல்லத்தை பொடி செய்து கம்பிப் பதம் வரும் வரை காய்ச்சி வெல்லப்பாகு தயார் செய்வோம், பாகில்  வாசனைக்காக ஏலக்காய் பொடி சேர்ப்பதும் உண்டு. பாகு சூடாக இருக்கும் போதே அதை மாவில் ஊற்றி பிசைந்து பதத்தில் உருண்டைகளாகவோ அல்லது செவ்வக வடிவிலோ செய்து அதில்  விளக்கு திரி போடுவதற்காக குழி செய்து வைப்போம். மா விளக்கின் மேல் பகுதியில் குங்கும பொட்டு வைத்து   நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு விளக்கேற்றி அம்மனுக்கு படைப்போம். ஒரு சிலர் சர்க்கரையிலும் செய்வர், சுவைக்காக பொட்டுக்கடலை மாவு சிறிது  சேர்ப்பவர்களும் உண்டு.அன்றைய தினம் கோவில் நிறைந்து கூட்டம் கோவிலுக்கு வெளியிலும் நீண்டிருக்கும். அர்த்தமண்டபத்தில் ஒரு சமயத்தில் ஐம்பது பேர் மட்டுமே  நிற்க முடியும் என்பதாலும், அனைவரின் மாவிளக்கையும் அம்மன் முன் வைத்து தேங்காய் உடைத்து பூசை செய்து தர வேண்டும் என்பதால் அம்மன் தரிசனத்திற்கு இரண்டு மூன்று மணி நேரம் கூட அக்காலத்திலேயே ஆகும். நள்ளிரவு பன்னிரண்டு மணி வரைக்கும் மாவிளக்கு பூசை தொடரும். பள்ளியில் சாரணர் இயக்கத்தில் இருந்ததினால் கூட்டத்தை முறைப்படுத்தும் சேவையும் செய்துள்ளேன்.

கோவிலின் உள்ளேயே திருக்கல்யாண மேடை அமைத்து மலர்களால் அலங்கரித்து தயாராக இருக்கும். திருக்கல்யாணம் செய்வதற்கு முன் பூவோடு எடுப்பது நிறைவடைய வேண்டும் என்பதால் நாலா பக்கமும் ஆட்கள் சென்று யாரும் பூவோடு செலுத்த வரவில்லை என்பதை உறுதி செய்த பின் திருக்கல்யாணம் ஆரம்பமாகும். சுவாமி திரிசூல ரூபத்தில் அருள் பாலிப்பார். வைதீக முறைப்படி திருக்கல்யாணம் சுமார் இரண்டு மணி நேரம் நடைபெறும்.    திருக்கல்யாணம் முடிந்த கையோடு அதிகாலை அம்மன் தேரில் எழுந்தருளி விடுவாள். காலையில் சூரியன் உதிக்கும் போது அன்று சூரியன் அம்பாளை பூசிப்பான். தேரோட்டம் மாலை மூன்று மணிக்குத்தான் நடைபெறும் என்பதால் பக்தர்கள் தேரில் உள்ள அம்மனை கீழே நின்று தரிசித்து விட்டுச்செல்வர்.

அப்போது இருந்த தற்போது நிறுத்தப்பட்ட ஒரு நேர்த்திக்கடன் வேஷம் போடுவது. அம்மனுக்கு வேண்டிக் கொண்டவர்கள், அம்மன், சிவன், முருகர், கிருஷ்ணர், அனுமன்  என்று வேஷம்  போட்டது  பின்னர் எம்.ஜீ.ஆர், சிவாஜி, மகாத்மா காந்தி என்று மாறியது. புருஷன் பொண்டாட்டி  வேஷம் போடுபவர்களும் உண்டு.  இவர்களை சுற்றி கூட்டம் கூடுவதாலும், இவர்களில் சிலர் தவறாக நடந்து கொண்டதாலும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டினால் இந்நேர்த்திக்கடன் செலுத்துவது தற்போது நின்று விட்டது.

இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மாலை மூன்று மணிக்கு துவங்கும். காலையிலிருந்தே சுற்று வட்டார கிராம் மக்கள் உடுமலையில் குவிய துவங்குகின்றனர். சுமார் லட்சம் பக்தர்கள் அன்று தேரோட்டத்தை கண்டு களிப்பர். தேரோட்டத்திற்கு முன்பாக திருவிழாவிற்கு தங்கள் சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களுக்கு பரிவட்ட மரியாதை செய்யப்படுகிறது. நினைவு தெரிந்த நாளில் இருந்தே தேரோட்டத்திற்காக யானை பயன்படுத்தப்படுவதால் சுமார் மூன்று மணி  நேரத்தில் தேர் நிலையை அடைந்து விடும்.

 தேரில் உள்ள மணிகள் ஒலிக்க, மேலே கட்டியுள்ள கொடிகள் காற்றில் அசைந்தாட, பிரமிட் வடிவில்  அலங்கரிக்கபட்ட வண்ண வண்ண காகிதங்கள் மிளிர, ஒரு யானை வருவது போல அசைந்தாடி வருவதை தரிசிப்பதே ஒரு பரவசம். அதில் அம்மன் ஊஞ்சலில் ஆடி வருவது அதி பரவசம். யானை பயன்படுத்துவதால் தேரின் பின்னால் இருக்கும் உலுக்கு மரம் என்னும் சன்னையை வடம் பிடித்து இழுக்கும் போது பயன் படுத்திவிட்டு கழற்றி விடுகின்றனர்.

தேருக்கு அலங்காரம் செய்பவர்கள்தான் தேரை முறையாக ஓட செய்கின்றனர். நாம் முட்டுக்கட்டை என்றால் தடங்கல் என்று நினைக்கிறோம், ஆனால் தேரை ஒழுங்காக செலுத்த முட்டுக்கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. சக்கரங்களின் கீழே சரியாக இம்முட்டுக்கட்டைகளை கொடுத்து சரியாக திருப்பவும், நிறுத்தவும் செய்கின்றனர். யானை அநாயசமாக தேரை தள்ளுவதையும், சக்கரங்களில் முட்டி தேரை திருப்புவதையும் பார்த்துக்கொண்டே தேர் நிலையை வந்து அடையும் வரை உடன் வருவோம்.


இப்போதுள்ள மரத்தேர் நூற்றாண்டுகள் பழமையானது, ஆறு சக்கரங்கள் கொண்டது, பல புராண நிகழ்ச்சிகளைக்குறிக்கும் சிற்பங்கள் நிறைந்த தேர். தற்போது புதுத்தேர் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது.    


 தேர் நிலையை வந்து அடைந்தவுடன் அம்மன் தேரிலிருந்து இறங்கி தேர்கால் பார்க்க பல்லக்கில் செல்லுவார். அம்மன் ஆலயம் திரும்பியவுடன் கோவில் அடைக்கப்படுகின்றது. கணவன் இறந்துவிட்டதால் அம்மனுக்கு  வெள்ளை சேலை அலங்காரம் செய்வதால் யாரும் தரிசனம் செய்யக்கூடாது என்று அவ்வாறு செய்கின்றனர். அன்றிரவு கம்பம் கங்கை சேர்கின்றது. அதையும் யாரும் பார்ப்பதில்லை.  

தேரோட்டத்தின் மறுநாள் திருவிழாவின் நிறைநாள்  இரவு நையாண்டி மேளம், கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டத்துடன் மாரியம்மன் குதிரை வாகனத்தில் புறப்பாடு, இன்றைய தினம் உச்சி மாகாளியம்மனும்  உடன் புறப்பாடு கண்டருளுகிறார். (உஜ்ஜயினி மாகாளி), மாரியம்மனின் தமக்கை என்பது தொன்நம்பிக்கை.  நள்ளிரவில் குட்டைத்திடலில் சிறப்பு வாணவேடிக்கை இதற்காகவே காத்திருப்போம். மறுநாள் காலை கொடியிறக்கம், பின் மஹாபிஷேகம் முடித்து  மஞ்சள் நீராட்டத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.  சிறிது விலகி சென்று விட்டோம் வாருங்கள் இனி அடியோங்கள் தரிசித்த அடுத்த ஆலயமான சத்தியமங்கலம் வேணுகோபால சுவாமி ஆலய தரிசனத்துடன்  நமது பத்தியுலாவை தொடரலாம்.இப்பதிவில் உள்ள படங்கள் அனைத்தும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை அந்தந்த வலைத்தளத்தினருக்கு நன்ற்

Tuesday, April 5, 2022

கொங்கேழ் தலங்கள் பத்தியுலா - 17

 

உடுமலைப்பேட்டை மாரியம்மன் தேர்த் திருவிழா


உற்சவர் அம்மன்

(நன்றி : நம்ம ஊரு உடுமலை  முகநூல் பக்கம்)

இந்த கொங்குதேச பாடல் பெற்ற தலங்கள் பத்தியுலாவின் இடையே பண்ணாரியம்மனின் குண்டம் திருவிழாவை எழுதும் போது சிறு வயதில் எங்கள் ஊர் உடுமலைப்பேட்டையில் அடியேன் கண்டு களித்த மாரியம்மன் தேர்த்திருவிழா நிகழ்வுகளை அன்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றியது.

ஏனென்றால்  கொங்கு மண்டலத்தில் மாரியம்மன் ஆலயங்களில் கோடைக்காலத்தில் சிறப்பாக மாரியம்மன் திருவிழா கொண்டாடப்படுகிறது. கம்பம் போடுதல் இம்மண்டலத்திற்கே உரிய சிறப்பு.  அடியேன் அறிந்த வரையில்  தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இவ்வாறு கொண்டாடுவதில்லை. எனவே  அதை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பகுதி. அடியேன் இரசித்த திருவிழாவை தாங்களும் தரிசிக்க வாருங்கள் அன்பர்களே

தை மாதம் அறுவடைக்கு பிறகு கிராம மக்கள் ஓய்வாக இருப்பர், கோடைக்காலம் துவங்கிவிட்டதால் அம்மை போன்ற நோய்கள் வர வாய்ப்பு இருந்ததால், வேப்பிலை, மஞ்சள் பயன்படுத்தும் விதமாக இவ்விழாக்கள் கொண்டாடப்பட்டன. ஊர் கூடித்தான் தேர் இழுக்க வேண்டுமென்றபடி கிராமத்தார் அனைவரும் ஒன்றாக சேர்ந்து விழாவைக் கொண்டாடினர். பொதுவாக விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் இயற்கை ஒளியுள்ள பௌர்ணமி காலத்தில் வருமாறு பார்த்துக்கொண்டனர். இவ்வாறு கொண்டாடுவதால் மழை பொழியும் என்ற நம்பிக்கையும் இருந்தது. இதனால் மாசி மாதம் துவங்கி சித்திரை வரை மாரியம்மன் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டன. மாரியம்மனின் திருவிழாவை தரிசிப்பதற்கு முன்னர்  எமது  ஊரின் சிறப்பு என்ன என்று காணலாம் அன்பர்களே.

அக்காலத்திய அம்மன் விமானம்

மூன்று பக்கமும் அர்த்த சந்திர வடிவில் மலைகளால் சூழப்பட்டதால், கடந்த காலங்களில் சக்கரகிரி என்று அழைக்கப்பட்ட உடுமலைப்பேட்டையானது இராண்டாயிரம் ஆண்டு கால வரலாற்றைக் கொண்டு விளங்குகிறது.  பாலக்காட்டு கணவாய் வழியே வரும் இதமான காற்றும் மேற்குமலைச்சாரலில் தொடங்கும் மழையும் உடுமலையை எப்போதும் ஒரே மாதிரியான சீதோஷண நிலையை உணர வைக்கிறது. ஈரக்காற்று எப்போதும் உடுமலை பகுதி மக்களின் மனதை வருடிக்கொண்டே இருக்கும் ஆகவே உடுமலை "ஏழைகளின் ஊட்டி" என்ற சிறப்பை பெற்றுள்ளது! எனவே ஆதி காலத்தில் இருந்தே பல பஞ்சாலைகள் இவ்வூரில் அமைந்துள்ளன. காற்று வருடம் முழுவதும் வீசுவதால் தற்போது காற்றாலைகள் அமைந்துள்ளன. 

மும்மூர்த்திகளும் ஒரு மூர்த்தியாகி அதுவும் திருமூர்த்தியாக அருள் பாலிக்கும் மண். திருமூர்த்தி மலை அருகில் உள்ளதால் திருமூர்த்தி மண் என்றும் அறிப்படும் இந்நகரத்திற்கு திருமூர்த்தி அணையிலிருந்து குடிநீர் வழங்கப்படுகிறது. சிறுவாணிக்கு அடுத்து சுவையானது திருமூர்த்தி தண்ணீர். இம்மலையில் முன்னர் உடும்புகள் அதிகம் இருந்ததால் உடும்பு மலைப்பேட்டை என்பதே உடுமலைப்பேட்டை  ஆகியது. ஈழத்திலிருந்து மேற்கு கடற்கரைக்கு செல்லும் பாதையில் மலைபடும் பொருட்களை விற்கும் சந்தையாக விளங்கியதால் பேட்டை என்று அழைக்கப்பட்டது என்பது ஒரு கருத்து.    அதற்கு சான்றாக ரோமானிய நாணயங்கள் இப்பகுதியில் கிடைத்துள்ளன.

கிழக்கே பழனி மலையையும், மேற்கே ஆனைமலையையும், வடக்கே செஞ்சேரி மலையையும், தெற்கே திருமூர்த்தி மலையையும் கொண்டு இவற்றிக்கு ஊடே இருப்பதால் உடுமலை என்று பெயர் பெற்றது என்பது ஒரு சாரார் கருத்து.

இவ்வளவு சிறப்புப்பெற்ற ஊரின் மையத்தில் அமைந்துள்ள 500 வருடங்களுக்கு மேற்பட்ட புராதான ஆலயமே மாரியம்மன் ஆலயம். இந்த அம்மனும் சுயம்புவாக தோன்றியவள்தான், பசு மாடு பால் சொரிந்து காண்பித்துத்தர வந்து கோவில் கொண்ட அம்மன். ஊர்க்கவுண்டர் பின்னர் அம்மனுக்கு கோவில் கட்டினார், தர்மகர்த்தாவாக  அவர் சந்ததியினர் இன்றும் ஆலயத்தை நிர்வகிக்கிறார்.

                         

மாரி என்றால் மழை என்று பொருள். சகல உயிர்களும் வாழ தேவையான நீரை வழங்குகின்ற மழையின் பெயரைக் கொண்டு அருள்பாலிக்கின்றாள் மாரியம்மன். அம்மனுக்கான முதல் புராணக்கதை. ஜமதக்னி முனிவர் – ரேணுகா தேவி தம்பதியர் பரசுராமரின்  பெற்றோர். இரைவத மஹாராஜாவின் மகளான ரேணுகாதேவி ஜமதக்னி முனிவரை மணந்தார். பதிவிரதையானதால் கமண்டல ஆற்றுக்கு சென்று ஈர மணலால் குடம் செய்து அதில் தண்ணீர் கொண்டு வருவது வழக்கம். இவ்வாறு ஒரு நாள் ஆற்றில் தண்ணீர் முகர்ந்து கொண்டிருந்த போது ஒரு கந்தவர்வன் மேலே பறந்து சென்றான், அவனது பிம்பம் தண்ணீரில் பிரதிபலித்தது. எவ்வளவு அழகாக இருக்கிறான் என்று மனதில் ரேணுகா தேவி நினைத்தவுடன், அம்மண் குடம் உடைந்தது. தண்ணீர் இல்லாது ஆசிரமம் வந்த ரேணுகா தேவியைப் பார்த்து நடந்ததை தனது ஞான திருஷ்டியினால் அறிந்து கொண்டார். கோபத்தில் தனது மகன்களை அழைத்து தங்கள் தாயை கொல்ல உத்தரவிட்டார். பரசுராமரின் ஆறு அண்ணன்மார்களும் மறுத்துவிட்டனர். ஆனால் பரசுராமர் தன் பரசுவினால் தன் தாயின் தலையை கொய்தார். பின் தந்தையிடம் ஒரு வரம் கேட்டார், தன் தாயை உயிர்ப்பித்து தருமாறு வேண்டினார்.  தாயின் தலையையும் உடலையும் சேர்த்து வைத்து தந்தை தந்த தீர்த்தத்தை தெளித்து  உயிர் பெறச் செய்யும் அவசரத்தில் அருகில் கிடந்த வேறு ஒரு பெண்ணின் தலையை வைத்து உயிர்பித்து விட்டார். இவ்வாறி தலை மாறியதால் அம்மன் மாரியம்மன் என்று பெயர் பெற்றாள் என்பது ஒரு ஐதீகம். தமிழகத்தின் வட மாவட்டங்களில் ரேணுகா தேவியாக அம்மனின் சிரசை வழிபடும் வழக்கம் உள்ளது.

கிருஷ்ணனருடன் பிறந்த மகாமாயையே,  மகமாயி என்பது இன்னொரு ஐதீகம். வடமதுரையில் தேவகிக்கும் வசுதேவனுக்கும் திருமணம். வசுதேவன் தன் மனைவி தேவகியை அழைத்துச் செல்லும் தேரை தேவகியின் அண்ணன் கம்சன் ஓட்டிச்சென்றான். தேவகியின் எட்டாவது பிள்ளையால் கம்சனுக்கு மரணம் என்று அசரீரி சொல்கிறது. தேவகியைக் கொல்ல முயன்ற கம்சனைத் தடுத்த வசுதேவன், பிள்ளைகள் பிறந்தவுடன் கம்சனிடம் தருவதற்கு ஒப்புக்கொண்டான். அப்படியே ஏழு குழந்தைகளையும் கம்சன் கொன்றான். ஆயர்பாடியில் நந்தகோபனும் யசோதையும் குழந்தை வேண்டி கடவுளிடம் வந்தனர். மகாமாயையை அழைத்த கடவுள் யசோதையின் கர்ப்பத்திற்குள் போகச்சொன்னார். யசோதைக்குப் பிறக்கும் பெண் குழந்தையை தேவகியிடமும் தேவகியின் ஆண் குழந்தையை யசோதையிடமும் மாற்றி விடும்படி நந்தகோபனுக்குக் கட்டளையிட்டார். அப்படியே நடந்தது. கம்சன் இதுதான் தேவகியின் எட்டாவது குழந்தை என எண்ணி, கொல்வதற்காகத் தூக்கும்போது நழுவிய பெண் குழந்தை வில் அம்பு வாள் ஏந்திய மகாமாயையாக மாறினாள். அம்மாயாதேவியே மாரியம்மனாகத் தோன்றி அரக்கர்களையும், தீவினைகளையும், நோய்களையும் போக்கி கண்கண்ட தெய்வமா விளங்குகிறாள்.

அம்மன் தேர்

அடியேனின் இல்லத்தில் இருந்து ஐந்து நிமிட நடை தூரத்தில்தான் கோவில் இருந்தது என்பதால் நோன்பு சாட்டுகின்ற தினத்தில் இருந்து திருவிழா முடியும் வரை தூங்கும் நேரம் தவிர மற்ற நேரம் கோவிலே கதி என்று இருந்தேன். நடக்கின்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் அருகிருந்து கவனித்துள்ளேன், முக்கிய நிகழ்வுகளை சுருக்கமாக பகிர்ந்து கொள்கிறேன். 

பங்குனி மாதம் அமாவாசைக்கு அடுத்த செவ்வாய்க்கிழமையன்று நோன்பு சாட்டுதல் நடைபெறும், சிறப்பு அபிஷேகம் செய்து அம்மனிடம் உத்தரவு வாங்கிய பின் அனைவருக்கும் திருவிழா நடப்பதை அறிவித்தலே நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியாகும். ஒருவர்  சிறு பறையுடன்  வீதி வீதியாக சென்று மாரியம்மன் நோன்பு சாட்டியுள்ளது,  கம்பம் என்றைக்கு தேரோட்டம் என்றைக்கு என்று அறிவித்து வருவார். பொதுவாக நோன்பு சாட்டிய பின் திருவிழா முடியும் வரை யாரும் ஊரை விட்டு வெளியூருக்கு செல்ல மாட்டார்கள்.

நோன்பு சாட்டிய செவ்வாய்க்கு அடுத்த செவ்வாய் கம்பம் போடுதல், வெள்ளிக்கிழமையன்று கொடியேற்றம், தேர் அலங்காரத்திற்காக தேரில் ஆரக்கால் ஸ்தாபிதம் செய்யப்படுகிறது.   பூவோடு எடுத்தல் ஆரம்பம். அன்றிரவிலிருந்து அம்மன் வாகன புறப்பாடு. கலை நிகழ்ச்சிகள் ஆரம்பம்.  அடுத்த புதன்கிழமை காலையிலிருந்து மாவிளக்கு, நள்ளிரவில்  திருக்கல்யாணம். வியாழன் அதிகாலை அம்மன் தேரில் எழுந்தருளுதல், அன்று மாலை தேரோட்டம், தேர் நிலைக்கு வந்த பின் இரவு கம்பம் கங்கை சேர்தல். வெள்ளிக்கிழமை இரவு நையாண்டி மேளம், கரகாட்டத்துடன் குதிரை வாகனத்தில் உச்சி மாகாளியுடன் அம்பாள் புறப்பாடு. சிறப்பு வாண வேடிக்கை. மறுநாள் சனிக்கிழமை காலை கொடி இறக்கம், மஹா அபிஷேகம், மஞ்சள் நீராட்டத்துடன் திருவிழா நிறைவு. 

ஆலயத்தின் இன்றைய தோற்றம்

நோன்பு சாட்டிய நாள் பழனியிலிருந்து தேர் அலங்காரம் செய்பவர்கள் வந்து தங்கள் வேலையை ஆரம்பிப்பார்கள். முதலில் கம்ப மண்டபம் அலங்காரம் ஆரம்பமாகும்.  வண்ண வண்ண காகிதங்களால் விதானம் தூண்களுடன் அமைப்பர், இரு பக்கங்களிலும் சிறு சிறு சுவாமிப்படங்கள் அழகுக்கு அழகு சேர்க்கும். கம்பத்திற்கு நேர் மேலே மாலை தாங்கிய அழகிய தேவதையை தொங்க விட்டிருப்பார்கள். அருமையாக அலங்காரம் செய்வார்கள்.  கோவிலை அறநிலையத்துறை எடுத்துக் கொண்டபின் முதலில் இந்த அலங்காரத்தை நிறுத்திவிட்டனர்.

அடியேன் பள்ளி படிப்பை முடித்த பின்னர் படிப்பிற்காக சென்னை வந்து, படிப்பை முடித்த பிறகு வேலை நிமித்தமாக இந்தியா முழுவதும் சுற்றிய காலத்தில் பழைய ஆலயம் மாறி புது ஆலயமாக மாறி விட்டது, தரை மட்டத்தில் இருந்த அம்மனும் உயரமாக சென்று விட்டாள். இவ்வருடம் (2022) நடந்த கும்பாபிஷேகத்தின் போது  கம்ப மண்டபம் முன்பு அலங்காரம் செய்வது போல பல்வேறு   ஆலய அம்மன் திருஉருவங்கள் சுதை சிற்பங்களாக மிளிர அருமையாக அமைத்துள்ளதைப் பார்த்து மகிழ்ச்சியாக இருந்தது.

அப்போது தேர் அலங்காரம் முழுவதும் வண்ண காகிதங்களைக் கொண்டு செய்யப்பட்டது.  அலங்கார பொம்மைகள் எல்லாம் மூங்கிலால் செய்யப்பட்டிருக்கும், அதில் முதலில்  சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம் ஆகிய வண்ண காகிதங்களை ஒட்டுவார்கள், மஞ்சள் ஜிகினா காகிதம் கொண்டு மேலும் கீழும் அலங்கரிப்பார்கள், அதன் மேல் அலங்காரமாக வெள்ளை கோலங்களை ஒட்டுவார்கள்.  தேரோடும் சமயத்தில் பறக்கும் விதமாக அடிபாகத்தில் விசிறி காகிதம் ஒட்டி அலங்காரத்தை நிறைவு செய்வார்கள். கலசத்துடன் சேர்ந்து மொத்தம் ஐந்து நிலைகள் ஒவ்வொரு நிலையாக அலங்காரம் செய்து பாதுகாப்பாக எடுத்து வைப்பார்கள். அடியேன் அரசமரத்தடி விநாயகர் ஆலயத்திற்கு அருகில் அமர்ந்து  அவர்கள் செய்வதையெல்லாம் உன்னிப்பாக கவனிப்பேன்.  அவர்களுக்கு சிறு சிறு உதவியும் செய்துள்ளதால் அப்படியே சொல்ல முடிகிறது. தற்போது துணியால்  தேரை அலங்கரிக்கப்பதால் புதிதாக இருக்கும் போது பளிச்சென்று இருக்கும், வருடம் செல்ல செல்ல வர்ணம் மங்குகின்றது. ஆனால் அப்போது ஒவ்வொரு வருடமும் அலங்காரம் செய்ததால் எப்போதும் தேர் மின்னிக் கொண்டிருந்தது.

                                   

அடியேன் படித்த அரசினர் உயர்நிலைப் பள்ளி

சிறுவர்களுக்கு பிடித்த ரங்கரட்டினம், குடை ராட்டினம், மற்றும் சோப்பு, சீப்பு, கண்ணாடிக் கடைகள் குட்டையை சுற்றி வந்து விடும். அடம் பிடித்து  அங்கு சென்று அதில் விளையாடி மகிழ்வோம். சுற்றி வந்து வேடிக்கை பார்ப்போம். இக்குட்டைக்கு அருகில் அடியேன் படித்த பள்ளியும் உள்ளது. 

இன்று நோன்பு சாட்டுதல் என்பதால் இப்பதிவு. அடுத்த பதிவில் திருவிழாவைப்பற்றி விரிவாக காணலாம் அன்பர்களே. 


இப்பதிவில் உள்ள படங்கள் அனைத்தும்    

 https://www.facebook.com/NammaOoruUdumalpet/  இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டது. அவர்களுக்கு மிக்க நன்றி.