Friday, May 25, 2012

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -26

திருக்கேதாரம் 
 ஜோதிர்லிங்க ஸ்தலம்


ஆளுடையப் பிள்ளையும்  
எம்பிரான் தோழரும் பாடிப்பரவிய 
தேவாரத்தலம்


வாழ்வாவது மாயம்மிது மண்ணாவது திண்ணம் 
பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய்செய்த பறிதான்
தாழாதறஞ் செய்ம்மிந்தடங் கண்ணான் மலரோனும்
கீழ்மேலுற நின்றான் திருக் கேதாரமெனீரே இரவில் திருக்கேதாரத்தின் அழகு  
நாங்கள் சன்னதியை அடைந்த நேரம் லேசாக மழை தூறியது. எங்கும் மேகமயமாகி விட்டதால் ஹெலிகாப்டர் இயக்கமும் நிறுத்தப்பட்டது. திரு. தேஷ்பாண்டே குடும்பத்தினர் குளி அதிகமாகி விட்டதால் இரவு இங்கு தங்க வேண்டாம் என்று முடிவு செய்து சீக்கிரமாக தரிசனம் செய்து விட்டு கிளம்பினர். நாங்கள் முன்னரே திட்டமிட்டிருந்தபடி இரவு அங்கேயே தங்க முடிவு செய்தோம். என்னுடன் பணிபுரியும் அன்பர் கபுர்வன் அவர்கள் அவருடைய உறவினர் ஒருவர் கோவிலின் அருகிலேயே கடை வைத்துள்ளார்  ஏதாவது உதவி தேவையென்றால் அவரை கலந்து கொள்ளவும் என்று கூறியிருந்தார். அந்தக்கடையில் விசாரித்தோம்.நரேந்திர உபாத்யாய் என்னும் அவ்வன்பரை கலந்து கொண்டோம். தங்குவதற்கான இடமும் மற்றும் பூசைக்கும் ஏற்பாடு செய்து தந்தார். நடந்து வருபவர்கள் வந்து சேரும் போது மணி இரண்டிற்கு மேலே ஆகிவிட்டது. காலையில் இருந்து மதியம் மூன்று மணி வரை ஐயன் நிர்வாண தரிசனம் என்னும் எந்த அலங்காரமும் இல்லாமல்  மலை உச்சியாகவே தரிசனம் அளிக்கின்றார். நாமே நமது கையால் அபிஷேகம் செய்து கொள்ளலாம். கட்டி அனைத்துக்கொள்ளலாம். அவர் மேலேயே தலைவைத்து வணங்கலாம். எங்களுக்கும் அந்த அரிய வாய்ப்பு கிடைத்தது.

நர நாராண சிகரங்கள் 

 நாங்கள் உள்ளே சென்ற சமயம் நிர்வாண தரிசனம் முடியும் சமயம். திரு உபாத்யா அவர்கள் எங்களை உள்ளே அழைத்துச் சென்றார். அவர் அக்கோவிலின் பூசாரியும் ஆவார். மிகவும் திருப்தியாக  திரு. முட்கல் கொண்டு வந்திருந்த மானசரோவர் தீர்த்தம், வைத்தி அண்ணன் கொண்டு வந்திருந்த திருநீறு, சந்தனம், சென்ற வருடம் யமுனோத்ரியில் சேகரித்த யமுனை தீர்த்தம், கங்கோத்ரியில் சேகரித்த கங்கை தீர்த்தம்  ஆகியவற்றால் ஆண்டளக்கும் ஐயனுக்கு  மிகவும் மகிழ்ச்சியாக அபிஷேகம் செய்தோம். திருக்கேதார நாதருக்கு நெய்யபிஷேகம் மிகவும் பிரியம் என்பதால் இங்கிருந்தே நெய் எடுத்துச் சென்றிருந்தோம் அந்த ஆவின் ( பசுவின் - சென்னை பால் பண்ணையின் பெயர் ) நெய் கொண்டு  ஐயனின் மனம் குளிர அபிஷேகம் செய்தோம்.   பின்னர் வி்ல்வம் மற்றும் பிரம்மகமல் சார்த்தி அலங்காரம் செய்து, கர்ப்பூர தீபம் காட்டி மனதார நன்றி கூறி வணங்கினோம். 

ஈசானேஸ்வரர் சன்னதி

திருக்கேதார ஜோதிர் லிங்கத்தின் மேற்குப்பகுதி சிவபெருமான், வடக்கு நோக்கி தும்பிக்கையுடன் கணேசர்,  மற்றும் ஸ்ரீசக்ர வடிவில் கௌரியன்னை பார்வதி ஆகிய மூவரும் ஒன்றாக காத்சி தருகின்றனர். ஸ்ரீ சக்கரத்தின் மேல் தலை வைத்து வணங்குமாறு திரு உபாத்யா அவர்கள் கூறினார்.  மலையரசன் பொற்பாவையின் அருளைப் பெறும் போது மனதில் இந்த நினைப்பு வந்தது. இன்றைய தினம் சாரதா நவராத்திரியின் மஹா அஷ்டமி அல்லவா? இன்றைய தினம் அம்மனுக்கு மிகவும் உகந்த நாள் அல்லவா இன்று தரிசனம்  தர வேண்டும் என்றுதான் சென்ற வருடம் தரிசனம் தராமல் திருப்பி அனுப்பி விட்டாயா தாயே! உன் கருணை என்ன என்று மனம் உருகி அன்னையை வணங்கினோம். மிச்சமிருந்த நெய்யை தெற்குப்பக்கம் இருந்த அகண்ட தீபத்தில் சேர்த்தோம். இந்த தீபம்தான் திருக்கோவில்  பனிக்காலத்திற்காக மூடப்பட்டு ஆலயம் பின் அக்ஷய த்ரிதியையன்று திறக்கப்படும் போது  எரிந்து கொண்டு இருக்குமாம். 

ஆதி சங்கர பகவத் பாதாள்

    ஸ்படிக லிங்கம்

 
 ஹனுமன்
 ஆதி சங்கரர் சமாதி
இனி திருக்கோவில் அமைப்பைப் பார்ப்போமா? வெள்ளிப்பனிமலையாம் திருக்கயிலையில் விளங்கும் நாதரின் இன்னொரு வெள்ளிப்பனிமலை ஆலயம் இந்த திருக்கேதாரம். கேதார மலைத்தொடர்களின் அடிவாரத்தில் அமைந்துள்ளது இப்புனிதமான ஆலயம். மூன்று பக்கமும்   பனி மூடிய மலைகள்,  நர நாராயண சிகரங்கள் பின் புறம் எழிலாக விளங்க 8ம் நூற்றாண்டில் ஆதி சங்கர பகவத் பாதாள் கட்டிய கோவில் இமய மலைப்பகுதியில் ஓங்கி உயர்ந்த ஒரு விமானத்துடன் கற்றளியாக இக்கோவில் கட்டப்பட்டுள்ளது இமயமலைக் கோவில்களின் கலை அம்சத்துடன் கட்டப்பட்டுள்ளது. ஓங்கி உயர்ந்து எழிலாக காடசி தருகின்றது திருக்கோவில். எல்லோரையும் வரவேற்கின்றது தோரண வாயில் அதையடுத்து எண்ணற்ற  விதவிதமான மணிகள் சாயங்கால ஆரத்தியின் போது அந்த மணிகளை அடிக்கும் போது மணியொளியும் சங்க நாதமும்  மலை முகட்டில் முட்டி எதிரொலிக்கும் அந்த அற்புதத்தை என்ன என்று சொல்ல. அங்கிருந்தால் தான் அந்த தெய்வீக உணர்வை தாங்கள் உணர முடியும்.   முன் மண்டபத்தின் உட்பகுதியில் அழகிய சிற்பங்கள். சிங்கி, பிங்கி என்று இரண்டு துவார பாலகர்கள், அருகில் கணேசர், அற்புத சிற்பங்கள் ஒவ்வொரு கதவிலும் மற்றும் சுவற்றிலும். மேலே மரசட்டங்கள் கொண்ட சாளரம் அதற்கு மேல் கலசம். ஐயனை எப்போதும் சுமக்கும் நந்தியெம்பெருமான்      பெரிய வடிவில் கோவிலுக்கு எதிரே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார் நந்தி தலையைத் தூக்கி  எம்பெருமானை தனது மூச்சுக் காற்றால் குளிர்விக்கும் கோலம்.


  


 
 திருக்கேதாரம் பின்னழகு
(வைத்தி அண்ணன்)

 கதவில் தசாவதார  கோலங்கள், மஹா மண்டபத்தில் உள் கோஷ்டத்தில் லக்ஷ்மி நாராயணர் மற்றும் பஞ்ச பாண்டவர்களுக்கும், திரௌபதி தேவிக்கும், குந்தி அன்னைக்கும்  சிலை, இம்மண்டபத்தில் நடுநாயகமாக சிறிய வெள்ளிக்கவசம் பூண்ட நந்தி. இதை அடுத்து முன் மண்டபம் இம்மண்டபத்தில் எதிரெதிரே விநாயகர் மற்றும் கௌரி அன்னை. வெள்ளி கவசத்தில் அன்னை எழிலாக அருட்காட்சி தருகின்றாள். மனமார ஐயனையும் அம்மையையும் வணங்கி விட்டு வெளியே வந்து பிரகார வலம் வந்தோம். ஒரு பிரகாரம் தான் பின் பகுதியில் தமிழில் ஞானசம்பந்தர் மற்றும் சுந்தரர் திருவுருவப்படங்கள் மற்ரும் பாசுரங்கள் கண்டு அப்பாசுரங்களை பாடிப்பரவசம் அடைந்தோம். பின்னர் விச்வரூப நந்தியெம்பெருமானை வணங்கினோம். 

நர நாராயண  சிகரங்களின் முன்னர் 
திருக்கேதாரம் 
 
கோவிலுக்குப் பின்னே ஆதி சங்கரரின் சமாதி உள்ளது. விஜய கொடியுடன் அவருடைய தண்டத்தை இங்கு அமைத்துள்ளனர்.அதற்கு பின் லங்கார் எனப்படும் அன்னம் பாலிக்கும் இடம். அதற்காவும் மழை மற்றும் வெயிலில் இருந்து தரிசனம் செய்ய வரிசையில் காத்திருக்கும் அன்பர்களை காக்க அமைத்திருக்கும் கூரைகளும் உள்ளன.  பின்னர் ஆதி சங்கரர் திருக்கயிலையில் கொண்டு வந்து ஸ்தாபிதம் செய்த  ஸ்படிக லிங்கம் தரிசனம் செய்தோம். இவ்வாலயத்தில் ஆதி சங்கரர், சுக்ராச்சாரியார் மற்றும் அனுமன்  சிலைகளும் உள்ளன. அங்கு தரிசனம் செய்து விட்து வரும் போது இருட்டிவிட்டதால் கோபுரத்தில்  விளக்குகள் போடப்பட்டது. அந்த காத்சி மிகவும் அருமையாக இருந்தது.  பின்னர் அறைக்கு வந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டோம். திரு கபுர்வன் அவர்கள் இரவில் திருக்கேதார கோவில் சோடியம் விளக்கு வெளிச்சத்தில் மிகவும் அருமையாக காட்சியளிக்கும், எனவே அங்கு தங்குங்கள்  என்று கூறியிருந்தார் அந்த அற்புத காட்சியைக் கண்டு களித்தோம். ஆனால் குளிர்தான் மிகவும் அதிகமாக இருந்தது.  


   திருக்கேதாரம் முக்தி ஸ்தலமாகவும் கருதப்படுகின்றது. இங்கு இறந்தால் புனர் ஜன்மம் கிடையாது. திருக்கோவிலின் பின்புறம் ஈசானேஸ்வரர் சன்னதி உள்ளது. இங்கு பூஜை முறையை ஆதி சங்கரர் வகுத்தார் எனவே மலபாரை சார்ந்த  லிங்காயத் பிராம்மணர்களே பூஜை செய்கின்றனர். அவர் ராவல் எனப்படுகின்றார். அவருடைய சிஷ்யர்கள்  பூஜை  செய்கின்றனர்

 பைரவர்

பைரவர் காவல் தெய்வம் என்பதால் அவருக்கு கோவில் எதுவும் கிடையாது வெட்ட வெளியில் இருந்து கேதார்நாத் கோவிலைக் காத்துக்கொண்டிருக்கிறார். ஒரு சமயம் கோவில் மூடப்படும் போது கோவிலை பூட்ட மறந்த போது பைரவர் வந்து பூசாரிகளை நடக்க விடாமல் செய்து பின்னர் கோவிலை பூட்டிவிட்டு சென்றார்களாம்.  

 பைரவர் கோவிலிருந்து  பறவைப் பார்வையில் 
திருக்கேதாரம்

படத்தை பெரிதாக்கி நடுவில் திருக்கேதார தலத்தை தரிசிக்கலாம். இப்படத்தில் உள்ளவர்தான் திரு. ராகேஷ் குமார் கபுர்வன் ( Shri Rakesh Kumar Kapurwan).  இவர்தான் திருக்கேதாரத்தைப் பற்றிய பல அரிய தகவல்களை அடியேனுக்கு கூறியவர் . இப்பதிவில் உள்ள பல படங்கள் அவருடையது.  


 பீமன் பாதம்

திருக்கேதாரத்தை சுற்றிலும் எட்டு திசைகளிலும் எட்டு ஆலயங்கள் உள்ளன. ரேதஸ் குண்டத்தின் தீர்த்தம் பருகினால் இந்த புனித யாத்திரை பூர்த்தி அடைவதாக ஐதீகம். இந்த தீர்த்தத்தை உட்கொள்பவர்களின் இருதயத்தில் நான் அமிர்தமாக அமர்வேன்  என்று பார்வதி தேவியிடம் சிவபெருமான் இந்த தீர்த்தத்தின் மஹிமையை விளக்கியதாகவும், இங்கிருந்து தான் ஐயன் ஜோதிர்லிங்கமாக எழுந்தருளியதாகவும் ஐதீகம்.

 திருக்கேதாரத்தில் தினமும் அதிகாலை 4மணிக்கு நடை திறக்கின்றது. அது முதல் நிர்வாண தரிசனம் நாமே அபிஷேகம் செய்து கொள்ளலாம். அப்போது பால் போக், மஹா அபிஷேகம், ருத்ராபிஷேகம் நடைபெறுகின்றது. மாலை சிவ அஷ்டோத்திரம், அஷ்டோத்திரம், சிவ நாமாவளி,  சிவ மஹிமா ஸ்தோத்திரம்.  மாலை நான்கு மணியளவில் முழு அலங்காரத்துடன் தரிசனம் வெள்ளிக்கிரீடத்துடன்ம் பட்டாடையுடன், மலர் மாலைகளுடன் அற்புத தரிசனம். ஏகாந்த தரிசனம் கண்டு களித்தோம். இரவி 8 மணியளவில் ஆரத்தி. ஐயனின் ஆரத்தி தரிசனம் கண்டு களிக்கும் வாய்ப்பு கிட்டியது. முதலில் கேதாரீஸ்வர்ரருக்கு ஆரத்தி பின்னர்  பரிவார தேவதைகளுக்கு  ஆரத்தி ஆகி பின்னர் சன்னதி தெரு வழியாக ஆரத்தி மந்தாங்கினி மாதா சனன்தி வரை வருகின்றது. பின்னர் திரும்பி வௌம் போது ஆரத்தியை தொட்டு நாம் வணங்கலாம்.  மிகுந்த மனமகிழ்ச்சியுடன் அறைக்கு வந்தோம். திரு உபாத்யா அவர்கள் சுடச்சுட ரொட்டி (சப்பாத்தி) கிடைக்க ஏற்பாடு செய்திருந்தார். சுடு தண்ணீர் கிடைக்கவும் ஏற்பாடு செய்திருந்தார். இரவு மிகவும் குளிராக இருந்தது, இரண்டு ரஜாய் போர்த்திக் கொண்ட பிறகுதான் குளி கொஞ்சம் மட்டுப்பட்டது.  மலையேறியதால் கால் வலி இருந்ததால் சரியாக தூக்கமும் வரவில்லை.  காலை 4 மணிக்கே தரிசனம் செய்து விட்டு    கீழிறங்கலாம்  முடிவு செய்தோம்.  

திரு நரேந்த்ர  உபாத்யாய் அவர்கள்

திருக்கேதாரத்தின் எதிரே சுமார் 1.5  கி.மீ ஏறிச்சென்றால் பைரவர் ஆலயம் உள்ளது. எங்களால் போக முடியவில்லை. திரு கபுர்வன் அவர்கள் ஒரு தடவைச் சென்றிருந்தார் அந்தப் படங்கள் இப்பதிவில்  இடம் பெற்றுள்ளன. ஹெலிகாப்டர் தளமும் அருகில்தான் உள்ளது.   அதற்கு சிறிது மேலே பீமன் பாதம் உள்ளது. இங்குதான் பீமன் காளை வடிவில் இருந்த சிவபெருமானை பிடித்ததாக ஐதீகம் . மேலும் காந்தி சரோவரும் கேதாரில் பார்க்க வேண்டிய ஒரு இடம்.

அதிகாலை எழுந்து ஐயனின் அற்புத தரிசனம் செய்தோம். வெளிநாட்டவர் பலர் முற்றத்தில் சிவ நாமம் பாடி ஆடியது அருமையாக இருந்தது. சீதோஷ்ண நிலை மாறி விட்டதால் இரண்டு நாட்களில் பனி பெய்ய வாய்ப்பு உள்ளது என்று உபாத்யா அவர்கள் கூறினார்.

 
இமயமலையில் தமிழ் பாசுரங்கள் 

 பின்னர்

ஆழ்ந்து காணார் உயர்ந்து எய்தகில்லார் அலமந்தவர்
தாழ்ந்த தம்தம் முடி சாய நின்றார்க்கு இடம் என்பது 
வீழ்ந்து செற்று நிழற்கு இறங்கும் வேழத்தின் வெண் மருப்பினன்று
கீழந்து சிங்கம் குருகு உண்ண முத்து உதிரும் கேதாரமே

என்று ஆளுடையப்பிள்ளை அவர்கள் பாடிய திருக்கேதாரத்தில் ஜோதிர் லிங்கமாக எழுந்தருளி அருள் பாலிக்கும் எம்பெருமானை, தேவ தேவனை, மஹா தேவனை, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனை, சகல புவன ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹார காரணனை தியாகராஜனை  உள்ளன்போடு வழிபட திருமணம் கூடுகிறது. ஒழுக்கமான வாழ்வு கிடைக்கின்றது மனக்கவலை நீங்குகின்றது, ஐயனை தரிசித்தவர்களுக்கு கனவில் கூட துன்பம் வாராது என்பது ஐதீகம். பத்ரியிலும் கேதாரத்திலும் இறைவனை வழிபடுபவர்களுக்கு சம்சார பந்தம் விலகும், கேதாரத்தில் தானம் செய்பவர்கள் சிவரூபம் பெறுவர் என்பது திண்ணம்


 திருக்கேதாரத்தில் மஹா சங்கராந்தி, வசந்த பஞ்சமிசிவராத்திரி,. நந்த அஷ்டமி, ஹோலி, பைசாகி, ரக்ஷபந்தன், தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது சிறப்பு வழிபாடுகள்  செய்யப்படுகின்றதுஇமய மலையின் உயரத்தில் கோவில் கொண்டயோகிகளும், முனிவர்களும், சித்தர்களும், அசுரர்களும், தேவர்களும் மஹா நாகமும் வழிபடுகின்ற என் ஐயனே உனக்கு ஆயிரம் நமஸ்காரம் என்று ஆதி சங்கர பகவத் பாதாள் போற்றிய திருக்கேதார நாதனையும், கௌரியம்மையும் மஹா அஷ்டமி மற்றும் மஹா நவமியன்று தரிசனம் செய்த மன மகிழ்ச்சியுடன் மலையிறங்கி , களைப்பு தீர கௌரி குண்டத்தில் (வெந்நீர்) நீராடி பின்னர் சீதாபூர் வந்தடைந்தோம். திரு தேஷ்பாண்டே அவர்கள்  குடும்பத்தினர் அதிகாலையிலேயே கிளம்பி பத்ரிநாத் சென்று விட்டிருந்தனர். நாங்கள் சீதாபூரை விட்டு கிளம்பும் போது மணி 11 எனவே பத்ரிநாத் செல்வது கடினம்  முடிந்தவரை பயணம் செய்து நடுவில் எங்காவது தங்கிக்கொள்ளலாம் என்று ஓட்டுநர் சதீஷ் அவர்கள் கூறினார் எனவே ஐயனை தரிசித்த மகிழ்ச்சியுடன் பத்ரிநாத்திற்கு புறப்பட்டோம்.

Tuesday, May 22, 2012

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -25

குதிரை லாயம் அடுத்து சுங்கச்சாவடி

சென்ற வருடம் திருக்கேதாரீஸ்வரரை தரிசனம் செய்ய முடியவில்லை என்பதால் இந்த வருடமும் திரும்பி வந்தோம் அவர் தன் கருணை மழையை  வர்ஷித்து அருளினார் ஆகவே அவனருளால் அவன் தாள் வணங்க மலைப்பாதையிலே புறப்பட்டோம். யமுனோத்ரியில் வெறும் ஐந்து கி,.மீ தூரம்தான் நடைப்பயணம் ஆனால் இங்கோ பதினான்கு கி.மீ நடைபயணம். இரு நெடிதுயர்ந்த மலைகள் இரண்டு மலைத்தொடர்களுக்கு இதையில் பொங்கி நுப்பும், நுரையுமாக பாய்ந்து வரும் மந்தாங்கினி நதி. வழியெங்கும் இயற்கையன்னையின் எழிற் காட்சிகள் கொட்டிக்கிடக்கின்றன. இரு பக்கமும் எண்ணற்ற நீர் வீழ்ச்சிகள் சிற்றரசர்கள் சக்ரவர்த்திக்கு கப்பம் கட்டுவது   போல தங்களுடைய தண்ணீரைக் கொண்டு வந்து மந்தாங்கினியில் சேர்க்கின்றன. இந்த தண்ணீர் எல்லாம் பனி உருகுவதால் உண்டானவை எனவே வருடம் முழுவது தண்ணீர் இருந்து கொண்டே இருக்கின்றது. 

 நர நாராயண மலைச்சிகரம் 
மலைப்பாதையின் இரு புறமும் மலை ஏறுபவர்கள் சிரமபரிகாரம் செய்வதற்காக, தேநீர், சிற்றுண்டி கடைகள் அமைந்துள்ளன.  இங்கு கவனித்த இன்னும் ஒரு அருமையான சௌகரியம். குடி தண்ணீர் வசதியும், கழிவறை வசதியும் பாதையெங்கும் அமைத்துள்ளனர்.  அதிக தூரம் என்பதால் அதிக நேரம் மலை ஏற வேண்டும் என்பதால்  இவ்வளவு வசதிகளை செய்திருக்கின்றனர். இரு பக்கமும் பச்சை கம்பளம் போர்த்தியது போல் உள்ள மலைத்தொடர்களில் நெடிதுயர்ந்த மரங்கள், பல்வேறு வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் மலர்கள், பாய்ந்து வரும் வெள்லி அருவிகள் என்று இயற்கை அழகை இரசித்துக்கொண்டே மலையேறுகிறோம். 
இன்னிசை வீணையர் யாழினர் ஒரு பால்
  இருக்கொடு தோத்திரம்  இயம்பினர் ஒரு பால்
துன்னிய பினை மலர்க் கையினர் ஒரு பால்
  தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒரு பால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒரு பால் . . . .
என்று சிவபெருமானையே குருவாகப் பெற்ற மாணிக்கவாசப் பெருமான் தமது திருப்பள்ளியெழுச்சியிலே பாடியபடி நடந்தே மலையேறி ஐயனைக்காண வருபவர்கள் , குதிரையேறி ஒய்யாரமாக, பய‘ன்து கொண்டே வருபவர்கள்,  பல்லக்கில் அமர்ந்து வருபவர்கள், பிட்டு என்னும் கூடையில் வருபவர்கள், மேலும் சாமான்களை தங்களின் தோளிலும், தலையிலும் சுமந்து வரும் அன்பர்கள் என்று அனைவரும்  ஒரே பாதையில் போட்டி போட்டுக்கொண்டு எறுகின்றனர். வண்டுகளின் ரீங்காரம், பறவைகளின் சப்தங்கள், சோ என்று ஓடிக் கொண்டிருக்கும் மந்தாங்கினியின் சப்தம், குதிரைகளின் குளம்படி சத்தம், அதனை வழி நடத்தும் வழி காட்டிகளின் அதட்டல் ஒலி, பக்தர்கல் எழுப்பும் ஜெய் கேதார்நாத் ஜீ கீ ஜெய், ஓம் நமசிவாய என்னும் கோஷம், இவற்றுடன் தலைக்கு மேல் பறந்து செல்லும் ஹெலிகாப்டர்களின் சத்தம் இந்தக் கலவை சப்தத்துடன், கேதார ஜோதிர் லிங்க தரிசனத்திற்காக மலையேறிச் சென்றோம்.
குதிரையில் பயணம் செய்யும் இரவி அவர்கள்

முன்னரே கூறியது போல ஃபாடா, குப்த காசி, டேராடூன் ஆகிய இடங்களில் இருந்து ஹெலிகாப்டர்கள் இயக்கப்படுகின்றன. கேதாரத்தில் பைரவர் ஆலயத்திற்கு அருகில் ஹெலிகாப்டர் தளம் உள்ளது. ஹெலிகாப்டரில் வருபவர்கள் ரூ.1000/- சிறப்பு தரிசன  அனுமதி சீட்டு பெற்றுக்கொண்து உடனே தரிசனம் முடித்து விட்டு திரும்பிச் செல்கின்றனர்.  

வளைந்து செல்லும் மலைப் பாதையில் 
தொங்கும் பாறைகள்

ராம்பாராவில் சிற்றுண்டி
 நடு நடுவே நீர் வீழ்ச்சிகள் கடக்கும் இடங்களில் தகரத்தால் ஆன பாலங்கள், கிளம்பி சுமார் 4  கி. மீ தூரத்தில் அப்படி ஒரு பாலத்தை தவிர்க்க குதிரை மலையோரம் செல்ல, அதனால் பயந்து விட்ட ஒரு இளம் பெண் குதிரைக்காரனிடம் சரியாக குதிரையை நடத்திச்செல் என்று சொல்லிக்கொண்டிருந்த போது, பின்னே அந்தப் பெண்ணின் கணவணுடன் குதிரையில் வந்த கொண்டிருந்த குழந்தை அம்மா என்றி அழைக்க அந்த அம்மாவின் முகத்தில் வந்த ஆனந்தத்தை என்னவென்று சொல்ல.  இளம் தம்பதியர் பலர் சிவபெருமானின் அருள் பெற கைகோர்த்துக் கொண்டு பொறுமையாக மலை ஏறினர். அருவிகளின் பெயர்கள் சிவபெருமானின் நாமங்களாக உள்ளன.  மலை ஏற ஆரம்பித்த போது மேகங்களே இல்லை நல்ல வெயில் இருந்தது  ஆனால் சிறிது நேரத்திலேயே எங்கிருந்தோ மேகக்கூட்டம் வந்து சீதோஷண நிலை  மோசமாகி விட்டது , எனவே ஹெலிகாப்டர் இயக்கம் நிறுத்தப்பட்டு விட்டது. குளிர் காற்று வீசியதால் மலை ஏறி வருபவர்களுக்கு இதமாக இருந்தது. வளைந்து வளைந்து மேலே ஏறும் போது மலைப்பாதை குறுகலாகிக்கொண்டே சென்றது. இது நாம் மலை  சிகரத்தை  நெருங்குகின்றோம் என்பதை உணர்த்தியது. 

தகரப் பாலங்கள் 

மந்தாங்கினி மாதா ஆலயம்

இவ்வாறாக மிக்கார் அமுதுண்ண தான் ஆலகால விஷத்தை உண்ட நீலகண்டரின் தரிசனம் காண மலையேறி ராம்பாடாவை அடைந்தோம். நடந்த வந்த களைப்பு தீர சிறிது நேரம் அங்கு இளைப்பாறினோம். காலை சிற்றுண்டி அளவாக உண்டோம் தேநீர் அருந்தினோம். பின்னர் மலையேற்றத்தை தொடர்ந்தோம். இப்பாதையில் ஒன்றை கவனித்தோம். குதிரைகள் தினமும் இதே பாதையில் செல்வதால்  மிகவும் சரியாக அதன் பாதையில் செல்கின்றது ஒரு இடத்தில்தான் தண்ணீர் குடிக்கின்றது, சிறுநீர் கழிப்பதும் ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான்  என்று வழக்கப்படுத்திக் கொண்டுள்ளன. நம் ஊரில் ஆட்டோ உரிமையாளர்கள் ஒருவரும் ஓட்டுநர் ஒருவராகவும் உள்ளது போல குதிரை சொந்தக்காரர்கள் ஒருவராக இருக்க குதிரை நடத்துபவர்கள் இப்பகுதி இளைஞர்கள், இவ்வாறு இங்கு மலையேற்ற அவசியத்தினால் பலருக்கு வேலை வாய்ப்பும் கிட்டுகின்றது. 

 இறுதியில் ஐயனின் தரிசனம் 


மலர்களே! மலர்களே!

ராம்பாராவில் இருந்து கருட்சட்டியின் கட்டிடங்கள் கண்ணில் படுகின்றன. அதுதான் கேதார்நாத் என்று எண்ணி மலையேறினோம். அங்கு சென்றபின்னர் தான் அது கருட்சட்டி என்று தெரிந்தது. அங்கு கருடபகவானுக்கு ஒரு சிறு கோவில் உள்ளது. மேலே செல்ல செல்ல பாதை குறுகலாகிக்கொண்டே சென்றது மேலும் செங்குத்தாகிக் கொண்டே  சென்றது. இவ்வாறு கேதார்நாத்தை நெருங்கும் போது திருக்கேதாரத்தின் கோபுர கலசம் கண்ணில் பட்டது மனதில் மகிழ்ச்சியுடன் மந்தாங்கினியை கடந்து அதன் கரையில் உள்ள மந்தாங்கினி மாதாவை வணங்கி விட்டு திருக்கேதாரீஸ்வரரின் சன்னதி தெரு அடைந்து ஐயனின் திருக்கோவிலைக் கண்டு வணங்கினோம். ஐயனின் தரிசனம் எவ்வாறு அமைந்தது அறிந்து கொள்ள அடுத்த பதிவு வரை பொறுத்திருங்கள் அன்பர்களே.