சீதாபூரிலிருந்து கௌரிகுண்ட செல்லும் பாதை
திரு.
தேஷ்பாண்டே குடும்பத்தினரில் பலர் வயதானவர்கள் என்பதால்
முதலில் மேலே தங்கலாம் என்று நினைத்திருந்தாலும், அவர்கள்
குதிரையில் அனைவரும் சென்று அன்றே திரும்பி
வந்து விடலாம் என்று முடிவெடுத்தனர்.
எங்கள் குழுவில் திரு. தனுஷ்கோடியும், தேவராஜ்
அவர்களும் நடைப்பயணமாகவே மேலே வர விரும்பியதால்
முடிந்தால் அன்றைய தினமே திரும்பலாம்
இல்லாவிட்டால் மேலேயே சிவபெருமானின் இணையார்
திருவடி நீழலில் தங்கலாம் என்று முடிவு செய்தோம்.
கௌரி குண்ட் நுழைவாயில்
சீதாப்பூருக்கு
அடுத்த ஊர் ராம்பூர், அதற்கு
அடுத்து சோன் கங்கை நதியும்
மந்தாங்கனியும் சங்கமமாகும் சோன் பிரயாகை.
இங்கிருந்து கௌரிகுண்டம் 5 கி.மீ தூரத்தில்
சுமார் 1982 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு
தான் மலையன்னை, மலைமகள், வரைமகள், மலையரசன் பொற்பாவை, வரைமகள், பர்வதவர்த்தினி, உமையம்மை, வரையரசன் பொன் மணி,
சைலபுத்ரி, சைலசுதே என்றெல்லாம்
அழைக்கப்படும் அன்னை பார்வதி இமவான்
புத்ரியாக பிறந்து , இந்த இமயமலையில் இளமென்பிடியாக
வளர்ந்து, சிவபெருமானையே மணாளனாக அடைய வேண்டும்
என்று தவம் புரிந்த இடம்
ஆகும். அதற்கு பிரமாணம் தருவது போல் அருகில் தலை வெட்டப்பட்ட கணபதி கோவில் உள்ளது. அம்மை பார்வதி தான் நீராடும் போது யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று விநாயகரை கேட்டுக் கொண்டதால் சிவ பெருமான் வந்த போதும் அவர் தடுக்க அவர் திரிசூலத்தில் தலையை கொய்த கதை நமக்கு ஞாபகம் வருகின்றது.
ஆணவம்,
கன்மம் , மாயை
என்னும் மும்மலமாம்,
தாராகாசுரன், சிங்கமுகன்,
சூரபத்மன் என்னும்
சூரர்களை சம்ஹாரம்
செய்ய குமரன்
தோன்ற காரணமாக
அமைந்த இடமும்
இதுதான். கௌரி குண்டம் சுக்ல பக்ஷத்தில் (வளர் பிறையில்) மஞ்சள் நிறமாகவும், கிருஷ்ண பக்ஷத்தில் ( தேய் பிறையில்) பச்சை நிறமாகவும் காட்சி தருகின்றது. அருகிலேயே சுடு நீர் ஊற்றுகள் உள்ளன.
கௌரி குளம் சுடு நீர் ஊற்று
முதல்
அவதாரத்தில் ஜகத்ஜனனி, ஜகன்மாதா தக்ஷப்பிரஜாபதியின் மகளாக, சதிதேவியாக பிறந்து
வளர்ந்து தன் தந்தையின் விருப்பத்திற்கு
மாறாக சிவபெருமானை கரம் பிடித்து, அதற்காக,
தக்ஷன் சிவபெருமானை அவமதிக்க ஒரு யாகம் நடத்தி,
அதில் சிவபெருமானுக்கு அவிர்ப்பாகம் தராமல் நடத்த, அந்த
முறையற்ற யாகத்தில் தேவர்கள் அனைவரும் கலந்து கொள்ள, அங்கு
சென்ற சதிதேவி தனது தந்தையால்
அவமானப்படுத்தப்பட்டு
அவன் யாகத்தை அழித்து அவம் கொடுத்த
உடலையும் அழித்துக்கொண்டு பின் இமவான் மேனை
திருக்குமாரத்தியாக மீண்டும் பிறப்பெடுத்த கதையை அனைவரும் அறிவோமல்லவா?
இந்த முறையற்ற யாகத்தில் கலந்து
கொண்டதனால்தான் தேவர்கள் அனைவரும் சூரபதமனிடம் சிறைபட்டு துன்பம் அடைந்தனர்,
அவர்களுக்கு தனது அம்சமான சிவகுமாரனின்
மூலம் விமோசனம் அளித்தவரும் அதே பரமகருணா மூர்த்தி சிவபெருமான்தான்.
கௌரி
குண்டம் வடநாட்டுத் தேவாரம் பெற்ற தலங்களுள்
ஒன்று. இங்குள்ள ஆலயமே அநேகதங்காவதமாகும். இதில்
சந்திர சூரியர் வழிபட்டுப் பேறு
பெற்றனர். இதற்குத் திருஞானசம்பந்தரது பதிகம் ஒன்று உள்ளது.
இறைவன்
: மனோன்மனி உடனுறை அநேகதங்காவதநாதர்
இறைவி
: கௌரி
தேவாரப்பாடல்
: திருஞான சம்பந்தர்
தந்தத் திந்தத்தட மென்றரு வித்திரள் பாய்ந்துபோய்ச்
சிந்த வெந்தகதி ரோனொடு மாசறு திங்களார்
அந்த மில்லவள வில்ல வனேகதங்
காவதம்
எந்தை வெந்தபொடி நீறணி வார்க்கிட மாவதே.
பொருள்:
`தந்தத் திந்தத் தடம்` என்ற
ஒலிக்குறிப்போடு அருவிகள் பாய்ந்து சென்று ஒழுக, வெம்மையான
கதிர்களை உடைய கதிரவன் ஒளியும்,
குற்றமற்ற திங்களின் ஒளியும் பரவ, முடிவு
அற்ற அளவுபடுத்த முடியாத அனேகதங்காவதம், எந்தையாகிய,
திருநீற்றைப் பூசி மகிழும் சிவபெருமானுக்கு
இடமாக உள்ளது என்று அன்னையின்
ஞானப்பாலுண்ட ஆளுடையபிள்ளை இத்தலத்தைப் பற்றி பாடியுள்ளார்.
மலையன்னை பார்வதி தவம் செய்யும் கோலம்
அன்னையும்
ஐயனும் திடமான பக்தியை நமக்கு தெரியப்படுத்தும் பொருட்டு இந்த கௌரி குண்டத்தில்
நடத்திய சிறு நாடகத்தை பார்த்துவிட்டு கௌரிகுண்டத்தில் குளித்து விட்டு அன்னை
கௌரியை தரிசனம் செய்து விட்டு கேதார மலையேறலாமா அன்பர்களே. சூரர் கிளை மாய
சிவகுமரன் தோன்ற வேண்டும். சிவபெருமானோ யோக தக்ஷிணாமூர்த்தியாக யோகத்தில்
ஆழ்ந்திருந்தார், சிவசக்தியோ இமவான் மகளாக
அவதரித்து இமயமலையில் வளர்ந்து வந்தாள். இருவரது
திருமணம் நடைபெற வேண்டி தேவர்கள் மன்மதனை வேண்ட அவனும் சிவபெருமான் மலர்க்கணை தொடுத்து
நெற்றிக்கண்ணால் சாம்பரானான். ஆயினும் ஐயனின் யோகநிஷ்டை கலைந்தது. நாரதர்
பார்வதியிடம் சிவபெருமானை மணாளனாக அடைய தவம் செய்யுமாறு அறிவுறை கூறினார்.
பெற்றோர்களிடம் அனுமதி பெற்று கௌரி மரவுரி தரித்து இமயமலையில் கடும் தவம் செய்து வரலானாள்.
அம்மைக்கு அருள ஐயன் ஜடாமுடி தரித்த ஒரு கிழ வேதியர் வடிவம் கொண்டு வந்து சேர்ந்தார்.
அவ்வாறு வந்த வேதியரைக்கண்டு பார்வதி தேவி பெருமகிழ்ச்சியோடு அவரை வரவேற்று
உபசரித்து வழிபட்டாள். பின்னர் உணவளித்தாள். பின்னர் உறங்கி எழுந்த அந்த விருத்தரிடம் அன்னை மலைமகள் “ நீங்கள் எங்கு
வந்தீர்கள்?” என்று கேட்டாள்.
கௌரி குண்ட் குளிர்நீர் குளம்
அதற்கு
அந்த கபடவேடதாரி எதற்காக இந்த கடுமையான தவத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறாய் என்று
வினவ, அம்மையும் பிநாகம் ஏந்திய
சிவபெருமானை கணவனாக அடைய இந்த தவம் செய்வதாக கூறினாள். அதற்கு விருத்தராக வந்த
சிவபெருமான் கூறுகின்றார். ஏ தேவி! நீ சந்தனத்தை விட்டு சேற்றைப் பூசிக்கொள்ளவும்,
யானை வாகனத்தை விட்டு எருதின் மேல் ஏறி சவாரி செய்யவும், கங்கை நீரை விட்டு,
கிணற்று நீரை அள்ளிக்குடிக்கவும், சூரிய ஒளியை விட்டுவிட்டு மின்மினியின் மினுக்கு
ஒளியை கண்டு ரசிக்கவும், வீட்டு வாசத்தை விட்டுவிட்டு காட்டுவாசஞ் செய்யவும்
விரும்பியவளாய் தவம் செய்கின்றாய். +இன்னுஞ்
சொல்கிறேன் கேள். பார்வதி! கமலப்பூக்களைக் ப்போன்ற கருவிழிகள் கொண்ட கட்டழகியான நீ
எங்கே? முக்கண்ணனான அந்தச் சுடலையாடிச் சிவன் எங்கே? வெண்ணிலா முகம்படைத்த நீ
எங்கே? ஐந்தலையனான அந்த ஆண்டிப்பித்தன் எங்கே? வருணிக்க முடியாத கூந்தல்
அலங்காரியான நீ எங்கே? விரிசடையனான அந்த
ஜடாதரன் எங்கே? சந்தனம் முதலான வாசனைகள்பூசிபரிமளிக்கும் உடல் வளம் வாய்ந்த நீ எங்கே? சுடுகாட்டுச் சாம்பலை பூசித்திரியும் உடலுள்ள
அந்த சிவன் எங்கே? சுகமான வெண்பட்டாடை எங்கே? சுகமற்ற அவன் யானைத்தோல் போர்வை
எங்கே? உனது திவ்யமான தோள் வளைகள் எங்கே? அவனது பாம்பு ஆபரணங்கள் எங்கே? உனக்கும்
சிவனுக்கும் பொருத்தமோ? உருவ ஒற்றுமையோ சிறிதும் கிடையாது. அவனோ விரூபாக்ஷி (கோணல்
கண்ணன்) அவனது குலங்குடி முதலியனவும் நன்றாக அறியப்படவில்லை. அவன் என்ன
செல்வந்தனா? அப்படியிருந்தால் அவன் ஏன் திகம்பரனாய் திரிய வேண்டும்.
அநேகதங்காவதம்
அவன்
எறித்திரிவது மாடு, உடுத்தும் ஆடை யனைத்தோல், பதை வரிசைகள் பூத பைசாசங்கள், அவனது
நீல கண்டத்தில் கடுவிஷம், காடு மேடுகளில் சுற்றுபவன், ஏகாங்கி, பற்றற்ற விரக்தன்!.
ஆகையால் அவனிடன் உன் மனத்தை செலுத்துவது உசிதமல்ல! அவன் வசிப்பது ருத்ரபூமி! எனவே
உன் மனத்தை அப்படிப்பட்டவனிடமிருந்து திருப்புவதுதான் நல்லது என்று கூறினார்.
இவற்றையெல்லாம்
பொறுமையின்றி கேட்டா பார்வதிதேவி மிகவும் கோபம் கொண்டாள். அவள் அந்த முதுபெரும்
கிழவரை நோக்கிக் குமுறி குமுறி கூறலானாள். “சிவதூஷணை செய்வதில் வாய்த்தேர்ச்சி
பெற்ற கிழவரே! இவ்வளவு நேரம் உம்மை தன்யர் என்று எண்ணியிருந்தேன். இப்போதுதான்
தாங்கள் அபத்தமானவர் என்று புரிந்தது. தேவாதி தேவனை சிவபெருமானை நான் அறிவேன்
என்று நீர் கூறியது பொய். உலகை காக்கும் அந்த்த சிவபெருமானின் வாசாமகோசரமான
ஸ்வரூபத்தை நான் சொல்லுகிறேன், கேட்டுத் தெரிந்து கொள்ளும்!.....
அந்த
பரமசிவனார், யோசித்துப்பார்த்தால் நிர்க்குணர் காரணத்தால் ஸகுணராகவும்
நிர்க்குணராகவும் விளங்குகின்றாரே அவருக்கு பிறவி ஏது? ஜாதி ஏது? சகலவித்தைகளுக்கும் அவர்
பிறப்பிடமானவர். அவரே முன்பு ஒரு காலத்தில்
வேதங்களை சுவாச மார்க்கமாக விஷ்ணுவுக்கு வழங்கியவர். பரமாத்மாவும்
பரிபூரணருமான அந்த சிவனாருக்கு வித்தைகளால் ஆகவேண்டியது என்ன? ஆதிபூதரான அந்த
ஆனந்தகூத்தருக்கு வயது ஏது. பிரகிருதியே
அந்த பெருமானிடத்திலிருந்தல்லவோ தோன்றியது. எவன் அந்த பெருமானை நித்தியமாக
அடைகின்றானோ? அவனுக்குப் ப்ரஹால, உத்ஸாஹ, மந்திரஜ சக்திகள் கைகூடும். சுடலையாண்டி
என்று நீங்கள் குறிப்பிட்ட அவரே மரணத்தை
வென்ற மிருத்யுஞ்ஜயர். அவரது பூஜையால் எல்லோருக்கும் சுகம் பொங்கி வருமே தவிர
அவருக்கென்று ஏது சுகம்? துன்மதியாளரே! எந்த சிவபெருமானின் கருணைக் கண் ணோக்கினால்
தேவர்கள் ஜீவந்தர்களாக இருக்கின்றார்களோ,எந்த சிவபெருமானின் திருத்தொண்டிற்காகக்
தேவர்களும் காத்திருக்கின்றார்களோ அந்த பரம்பொருள் ஸ்வயம்பு. நீர் ஆண்டியென
இகழ்ந்த அந்த ஆனந்த மூர்த்தியை சேவித்தால்
அஷ்டலக்ஷ்மிகளையும் அடைவான். எந்த சிவபெருமானிடம் அஷ்டமாசித்திகளும்
நர்த்தனஞ் செய்கின்றனவோ, அந்த பரமேஸ்வரனுக்கு ஐசுவரியம் எப்படி எட்டாததாகும்.
அவ்ரே மங்கள மூர்த்தி, சிவம் என்ற மங்களமான பெயர் எவன் முகத்தில்
நிலைத்திருக்கிறதோ அவனைக் கண்ணால் காண்பதாலேயே அன்னியர்களும் பரிசுத்தராகி
விடுவார்கள்.
மலை வளர் காதலி உமை
தவம் செய்யும் கோலம் அருகில் கணேசர்
நீர்
சொல்வது போல பஸ்பமானது பரிசுத்தம் இல்லாத வெறும் சாம்பல் என்றால் அம்பலவாணரான அந்த
அண்ணல் மாபெரும் நடனமாடிய பிறகு தேவர்கள் அந்த சாம்பலை ஏன் தாம்து சிரசின் மீது
பூசிக்கொள்கின்றனர். பொன்னார் மேனியில் தூய பால் வெண்ணீறு அணியும் அந்த சிவபெருமான்
அகில உலகங்களுக்கும் ஆதி. அவரே சர்வேஸ்வரராக இருந்து . அனைத்தையும் ஆக்கலும்,
காத்தலும், அழித்தலும். மறைத்தலும், அருளலுமான ஐந்தொழில் புரிந்து அலகிலா
விளையாட்டுடைய தலைவராக விளங்குகிறாரோ அந்த ஆதிநாயகரை உம்மைப் போன்ற
குறைமதியாளர்களால் எப்படி அறிய முடியும்.
துஷ்ட
வேதியரே! உம் ஊனக்கண்களுக்கு சிவபெருமான்
எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவரே என் மனக்கண்ணிற்க்கு பிரியரும் என்
விருப்பத்திற்கு உரியவராவார் என்று வெகுண்டுரைத்து விட்டு, சிவநிந்தணை செய்யும்
இவர் இருக்கும் இடம் விட்டு செல்லலாம் என்று
சொல்லி விட்டு தன் தோழியரிடம் வேறிடம் செல்ல காலெடுத்து வைபப்தற்கு முன் ,
விருத்த வேதியர் வடிவில் இருந்த சிவபெருமான் தனது சுயரூபத்தை காட்டினார். அவ்வாறு
இவரைக்கண்டதும் பார்வதி தேவி நாணத்தோடு தலை குனிந்து நின்றாள். அவளை சிவபெருமான்
உற்று நோக்கி புன்னகை பூத்து, “பார்வதி நீ
என்னை விட்டு எங்கு போக முடியும்? நீ என்னால் விட்டுவிடத்தக்கவள் அல்லவே! உன் தவத்துக்கு
மகிழ்ந்த நான் உன் முன் பிரசன்னமானேன்.
உன் மனதை சோதிப்பதற்காகவே
விளையாட்டாக இப்படியெல்லாம் வாய்
கொடுத்து வார்த்தையாடினேன். உன் திடபக்தியை கண்டு உவந்தேன் என்றார். பின்னர்
முறைப்படி பர்வதராஜனிடம் சப்தரிஷிகள் பெண் கேட்க, சிவசக்தி திருமணம் அருகில் உள்ள த்ரியுக்
நாராயணில் நடைபெற்றது.
கௌரி குளம்
இவ்வாறு
சிவசக்தி திருவிளையாடல் புரிந்த கௌரி குண்டத்தில் கௌரிக்கு ஒரு தனிக்கோவில்
உள்ளது. இமயமலையின் கட்டிட அமைப்பில் ஒரு கூம்பு வடிவ கோபுரத்துடன் ஒரு பிரகாரத்துடன் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.
கோவிலின் திருவாயிலின் அருகில் அம்மை பார்வதி தவம் செய்யும் கோல அற்புத சிற்பம் ஒன்று
உள்ளது. அம்மையின் அருகில் கணபதியும் அருள்கின்றார். அன்னையை தரிசனம் செய்வதற்கு
முன்னர் அன்பர்கள் முதலில் சுடு நீர் குளத்தில் நீராடுகின்றனர். இங்கு இரு சுடு நீர்க்குளங்கள் உள்ளன. கேதார்நாத் மலையேறி சிவபெருமானை தரிசனம் செய்து விட்டு கீழிறங்கி வரும் போது எவ்வளவு களைப்பாக இருந்தாலும் இக்குளத்தில் நீராட எல்லா களைப்பும் நீங்கிவிடும் என்று எனது நண்பர் கூறியிருந்தார். இக்குளத்தில் காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை நீராடலாம்.
நீராடும்
போது பக்தர்கள்
ஸர்வ மங்கள் மாங்கல்யே சிவே ஸ்ர்வார்த்த சாதிகே |
சரண்யே
த்ரயம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே ||
என்று
கௌரியன்னையை நினைத்து மனது உடலும் தூய்மையடைய நீராடுகின்றனர். பின்னர்
அன்னை மலைமகள் தவம் செய்த கௌரி குளத்தில் சென்று அன்னையை வழிபடுகின்றர். இந்த
குளத்தில் தற்போது தண்ணீர் இல்லை. கூரையுடன் ஒரு கட்டிடமாக மாறியுள்ளது, குழாய்
வழியாக தண்ணீர் வந்து தொட்டியில் விழுகின்றது. நான்கு சுவர்களிலும் அன்னையின் சரித்திரத்தை சிற்பங்களாக அமைத்துள்ளனர்.
தற்போது இங்கு பித்ரு கர்மா செய்கின்றனர்.
கௌரி குண்டத்தின் அருகில் எங்கள் குழுவினர்
நேற்று வரும்போது த்ரியுக் நாராயண் சென்று
அங்கு மூன்று யுகங்களாக எரிந்து கொண்டிருக்கும் குண்டத்தின் விபூதி எடுத்து வரலாம்
என்று இருந்தோம் முதல் நாள் ரிஷிகேசில் நேரமாகி விட்டதால் அங்கு செல்ல முடியவில்லை.
அந்த விபூதி பிரசாதம் தீராத விணை தீர்க்கும் சக்தி கொண்டது. முடிந்தவர்கள் சென்று
வரவும். சோன் பிரயாகையில் இருந்து 14 கி.மீ தூரத்தில் த்ரியுக் நாராயண் அமைந்துள்ளது.
பின்னர் அருகில் உள்ள திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற கௌரி ஆலயத்திற்கு சென்று அன்னையை, வரையோன் பெற்ற வார் சடையாளை, மலைச்செல்வியை, அமரர் கயிலைப் பார்வதியை வழிபட்டு
விட்டு ஜோதிர்லிங்க ஸ்தலமான கேதார்நாத்திற்கான நடைப் பயணத்தை தொடங்கினோம்.
கௌரிகுண்டத்தில்
இருந்தே பாதை கேதார்நாத்திற்க்கு செல்கின்றது. மந்தாங்கினி நதிக்கரையோரமாகவே
ராம்பாரா கருடகங்கா வழியாக பாதை
கேதார்நாத்திற்க்கு செல்கின்றது. முதலில் குதிரைகள் லாயம் கண்ணில் படுகின்றது
குதிரையில் செல்பவர்களும், கண்டி மற்றும் தண்டியில் செல்பவர்களும் இங்கிருந்துதான்
கிளம்புகின்றனர். மலைப்பாதையில் வளைந்து ஏறியதும்
சுங்கச்சாவடி உள்ளது இங்கு சுங்கம் வசூலிக்கின்றனர். திரு முட்கல், திரு. தனுஷ்கோடி
மற்றும் திரு.தேவராஜன் அவர்கள் நடைப்பயணமாக வந்தனர் மற்றவர்கள் குதிரையில்
கிளம்பினோம். கேதாரீஸ்வரரை தரிசனம் செய்வதற்க்கு முன்னர் கேதார்நாத்தின் பெருமைகளை
காணலாமா அன்பர்களே. அதற்காக அடுத்த பதிவுவரை காத்திருங்கள்.
2 comments:
கௌரி குளத்தின் பெருமைகளையும், அன்னைக்கும் ஐயனுக்கும் நடந்த உரைநடையை மிக அழகாக கூறியுள்ளீர்கள் ஐயா
வாருங்கள் LOGAN ஐயா. இந்த புராணக்கதைகள் எல்லாம் நமக்கு சில பல போதனைகளை தர கூறப்பட்டவை. இதைல் திட பக்தி எப்படி இருக்க வேண்டும் என்று விளக்குவதால் அதை இப்பதிவில் இணைத்தேன் ஐயா.
Post a Comment