Showing posts with label சோன் பிரயாகை. Show all posts
Showing posts with label சோன் பிரயாகை. Show all posts

Wednesday, July 11, 2012

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -27



பொன்னர் மேனியனை, புலித்தோலை அரைக்கசைத்த புண்ணியனை, இமயமலையில் ஜோதிர்லிங்கமாக கோயில் கொண்டு அருள்புரியும் பரமனை, மின்னார் செஞ்சடையில் மிளிர் கொன்றை அணிந்த வள்ளலை தரிசனம் செய்த திருப்தியோடு இரண்டாவது தடவையாக பத்ரிநாதரை தரிசனம் செய்ய புறப்பட்டோம். 

 சோன் ப்ரயாகை 
 
சீதாப்பூரை அடுத்து முதலில் சோன்ப்ரயாகையை கண்டு களித்தோம். சோன் கங்கையும் மந்தாங்கினியும் இங்கு சங்கமம் ஆகின்றது இங்கிருந்து த்ரியுக் நாராயணக்கு பாதை செல்கின்றது. சென்ற போது இரவு என்பதால் இந்த சங்கமத்தை காண முடியவில்லை இப்போது பகலில் நன்றாக தரிசனம் செய்தோம். அடுத்த ஊர் ஃபடா , அடுத்தது நலா இங்கிருந்து காளி மாதா என்னும் ஊருக்கு பாதை செல்கின்றது ,காளி மாதா ஆலயம் பாதாளத்தில் உள்ளது. காளிதாசனுக்கு அருளியவள் இந்த காளிஅம்மன் தான் என்பது இந்தப்பகுதி மக்களின் நம்பிக்கை. பின்னர் குப்தகாசி வந்தடைந்தோம். 
 மலைக்கிராமத்தின் எழில் தோற்றம்


 மரங்களில் வைக்கோற்போர்

 திருக்கேதாரத்திலிருந்து பத்ரிநாதம்  செல்ல இரண்டு பாதைகள் உள்ளன. ஒன்று நெடும்பாதை,  திரும்பி ருத்ரப்ரயாகை வரை வந்து பின் அங்கிருந்து பின்னர் டில்லியிலிருந்து மானா கிராமம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்து பத்ரிநாதம் அடைவது. இரண்டாவது பாதை அருமையான காடுகள் மலை உச்சி வழியாக செல்லும் ரம்மியமான குறுக்கு வழிப்பாதை, அகலமான பாதை அல்ல ஆனால் அற்புத இயற்கை எழில் கொஞ்சும் பாதை, நாங்கள் இவ்வழியாக பயணம் செய்தோம். அடியோங்கள் பயணம் செய்த வழி

புறப்படும் இடம்
செல்லும் இடம்
தொலைவு கி.மீ
உயரம் மீ
கௌரி குண்ட்
குப்த் காசி
31
1479
குப்த் காசி
குண்ட் சட்டி
5
976
குண்ட் சட்டி
ஊக்கிமட்
5
1311
ஊக்கிமட்
சோப்டா
30
2680
சோப்டா
கோபேஸ்வர்
39
1300
கோபேஸ்வர்
சமோலி
10
1069

இப்பாதையைப்பற்றி திரு முட்கல் அவர்கள் கூறிய தகவல்களை பார்க்கலாமா? இப்பகுதியில் உள்ள கிராம மக்களின் வேண்டுக்கோளுக்கிண‘ங்க இப்பாதை போடப்பட்டதாம். ஆயினும் அரசு பேருந்துகள் எதுவும் இதன் வழியாக செல்ல முன் வரவில்லையாம். எனவே இங்குள்ள மக்கள் இதன் வழியாக பேருந்துகள் செல்ல வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தார்களாம் எனவே இப்பாதை உண்ணாவிரதப் பாதை என்று அழைக்கபடுகின்றது.  இப்போதும் அரசு பேருந்துகள் அதிகம் இவ்வழியாக செல்வதில்லையாம் தனியார் பேருந்துகளும், சுற்றுலாப்பயணிகளுமே இப்பாதையை அதிகமாக பயன் படுத்துகின்றனர். எனவே இப்பாதை உண்ணாவிரதப்பாதை என்று அழைக்கபப்டுகின்றதாம்.

அலக்நந்தா செல்லும் வழியை விட இந்த மந்தாங்கினி பள்ளத்தாக்கு மிகவும் இரம்மியமாக உள்ளது. இப்பள்ளத்தாக்கில் மரங்கள் அதிகமாக வெட்டப்படவில்லை. பூக்கள் நிறைந்து காணப்படுகிறது, வண்டுகளின் ரீங்காரம், மந்தாங்கினி பாயும் நாதம், நீர் வீழ்ச்சிகளின் கல கல என்று விழும் ஓசை  எல்லாம் இணைந்து ஒரு இனிய நாதமாக் ஓம் என்னும் நாதமாக காதில் பாய்வது ஒரு அருமையான அனுபவம்.

சோப்டா வரை மலையேற்றம் பின் இறக்கம். முதலில் வழியில் ஊக்கிமட் வருகின்றது. இந்த  கிராமம் இந்த குப்தகாசிக்கு எதிரே உள்ள மலைகளின் மடியில் உள்ளது.  ஸ்ரீகிருஷ்ணரின் பேரன் அநிருத்தன் மற்றும் உஷா ஆகியோருக்கு  இங்கு கோவில் உள்ளது. அவர்கள் திருமணம் இங்குதான் நடந்ததாம். உஷாவின் பெயராலே இக்கிராமம் ஊக்கிமட் என்னும் பெயர் பெற்றது. மேலும் சிவன், பார்வதி, ஸ்ரீராமரின் பாட்டனார் மந்தாத்தா அவர்களின் ஆலயங்களும் இங்கு உள்ளன.

கோபேஸ்வரில் அருமையான ஒரு சிவாலயம் உள்ளது. ஒரு பசு தினமும் சுயம்பு லிங்கத்திற்கு பால் சொரிந்து செல்வதைக்கண்டு சாகர் என்னும் அரசன் கட்டிய கோவில் இது. தோகால்பட்டா என்னும் இடத்தில் காட்டு இலாகாவின் தங்கும் விடுதி உள்ளது. இவ்விடம் சோதணைச்சாவடியும் உள்ளது. இங்கிருந்து மந்தாங்கினி பள்ளத்தாக்கின் அருமையான கண்டு இரசிக்கலாம். மேகமாக இருந்தால் பனி சிகரங்களை காணக்கிடைக்கவில்லை. மேகமூட்டம் இல்லாத நாட்களில் இமயமலைத்தொடரின் திரிசூல், சௌகம்பா, நந்தாதேவி   ஆகிய மிகவும் இரம்மியமான பாதை மேலே செல்ல செல்ல மரங்களின் உயரமும் கூடிக்கொண்டே சென்றது. குளிரும் அதிகமாகிக் கொண்டே வந்தது பாதையும் குறுகிக்கொண்டே வந்தது, அதிக போக்குவரத்து இருக்கவில்லை மரங்களில் எல்லாம் வைக்கோற்போர்கள் என்று அருமையான பயணம் இவ்வாறு காலையில் இருந்து பயணம் செய்து மதியம் இரண்டு மணியளவில் சோப்டாவை (2700மீ) அடைந்தோம். பஞ்ச கேதாரங்களில் ஒன்றான துங்கநாத்திற்கும் மற்றும் அங்கிருந்து சந்திரசிலாவிற்கும் இங்கிருந்துதான் நடைப்பயணம் ஆரம்பமாகின்றது. துங்கநாதம்(3680 மீ) செல்ல செங்குத்தாக சுமார் 2.5 கி.மீ நடைப்பயணம் அங்கிருந்து 4000 மீ  உயர சந்திர சிலா  1.5 கி.மீ தூரத்தில் உள்ளது. 

துங்கநாத் செல்லும் பாதையின் அலங்கார வளைவு


 சோப்டாவின் எழில் தோற்றம்

ஆதிகாலத்தில் இராவணன் திருக்கயிலாயத்திலிருந்து இலங்கை செல்லும் போது   தனது புஷ்பக விமானத்தை சந்திரசிலாவில் நிறுத்தி பின்னர் இலங்கை சென்றதாக கூறுகின்றனர். ஸ்ரீராமர் தவம் செய்த இடம் என்று கூறுவாரும் உண்டு. நாங்கள் சோப்டாவில் மதிய உணவை முடித்துக் கொண்டு சமோலியை நோக்கிப் புறப்பட்டோம். இங்கிருந்து பாதை கீழிறங்கிச் செல்கின்றது ஆனால் இதற்கு மேல்  பாதை மிகவும் மோசமாக இருந்தது.

இவ்வாறு நாள் முழுவதும் பயணம் செய்தீர்களே இயற்கை காட்சிகளை இரசிப்பதல்லாமல் வேறு என்ன செய்தீர்கள் என்ற ஐயம் மனதில் எழுகின்றதா?  எப்போதும் போல் முட்கல் அவர்களின் அனுபவங்களையும் மற்றும் குட்டிக்கதைகளையும் கேட்டுக்கொண்டே  பயணம் செய்தோம். நாம் எல்லோரும் பெருமாள் தானே நர நாராயணராக அவதரித்து பத்ரி வனத்தில் தவம் செய்தார் என்று பார்த்தோம் ஆனால் அவர் எதற்காக அவ்வாறு தவம் செய்தார் என்பதற்கு முட்கல் அவர்கள் கூறிய குட்டிக்கதை இதோ.

அசுரர்கள் கடுமையான தவம் செய்து வரம் பெறுவது  நாம் அறிந்ததுதானே இந்த அசுரனும் கடுந்தவம்  செய்து  வரம் பெற்றான் அது என்ன வரம் தெரியுமா? தனக்கு ஆயிரம் உடல் கவசம் வளர வேண்டும் அது மட்டுமா? அந்த கவசம் யாராலும் உடைக்க  முடியாததாய் இருக்க வேண்டும் என்று  வரம் கேட்டான். அதன் மூலம் தான் சாகாவரம் பெறலாம் என்று எண்ணினான் அது மாதிரி வரம் முடியாது என்றவுடன் யார் ஆயிரம் வருடங்கள் தவம் செய்கிறாத்களே அவர்களால் மட்டுமே ஒரு கவசத்தை உடைக்க முடியும் என்ற வரம் பெற்றான்.  ஆயிரம் தடவை ஆயிரம் அதாவது பத்து லட்சம் வருடமாவது தான் வாழமுடியும் என்ற ஆணவத்தில் தன் கொடுமைகளை துவங்கினான், தேவர்கள் அனைவரும் ஆபத்பந்துவானவரும், அசுரர்களை அழித்து காப்பவருமான் மஹா விஷ்ணுவை சரணடைந்து  அபயம் வேண்டினர். அவரும் சகஸ்ர(ஆயிரம்)கவசனை அழித்து தேவர்களை காப்பாற்றுவதாக வாக்குக்கொடுத்தார்.

பிறகு பெருமாள் நாரதரை அழைத்து , த்ரிலோக சஞ்சாரியே இப்பூவுலகில் எங்கு ஒரு வருடம் தவம் செய்தால் ஓராயிரம் வருடம் தவம் செய்த பலம் கிடைக்குமோ அந்த இடத்தை கண்டுபிடித்து வா என்று அனுப்பினார். நாரதரும் பூவுலகம் வந்து எல்லா இடமும் சுற்றினார் இமயமலையின் இந்த பத்ரிவனத்தில் அவர் சுற்றிய போது தன்னையே மறந்து அங்கு மூன்று நாழிகை நேரம் தங்க நேர்ந்தது. வெங்கடேச சுப்ரபாத்தில் ஒரு ஸ்லோகம் வரும் “ ஓரிடத்தில் நிலையாக நின்றறியா நாரதரும், நீ இங்கு கோவில் கொண்டததனால், இங்கே நிலை கொண்டார்” என்று வரும். இவ்வாறு ஒரே இடத்தில் தங்காத நாரதர் பத்ரிநாத்தில் மூன்று நாழிகை இருந்ததால் இந்த இடமே பெருமாள் தவம் செய்வதற்காக சிறந்த இடம் என்று பெருமாளிடம் வந்து தெரிவித்தார். எனவே பெருமாள் நர நாராயணராக பத்ரிநாத் வந்து தவம் செய்ய ஆரம்பித்தனர். இருவராக ஏன் வந்தார் ஒருவர் தவம் செய்யும் போது அடுத்தவர் சகஸ்ரகவசனுடன் போர் புரிந்தார். இவ்வாறு வருடம் ஒருவர் போர் புரிந்து அசுரன் கவசத்தை உடைக்க அடுத்தவர் தவம் செய்தார், இவ்வாறு தவம் செய்யும் போது மஹாலக்ஷ்மித்தாயார் பத்ரிமரமாக நிழல் தந்தார், இவர்கள் தவத்தை கலைக்க அழகிய பெண்களை அசுரன் அனுப்ப பெருமாள் தனது தொடையில் இருந்து  பேரழகியான ஊர்வசியை பிறப்பித்தார் (ஊரூ என்றால் வடமொழியில் தொடை, தொடையில் இருந்து தோன்றியதால் அவள் பெயர் ஊர்வசியாயிற்று) அவளின் அழகைக்கண்ட அசுரப்பெண்கள் நாணி திரும்பிச்சென்று விட்டனர். எனவே பத்ரிநாத்தில் ஊர்வசி தாரா என்று ஒரு நீர் வீழ்ச்சிக்கு பெயர். மேலும் பத்ரிநாத்தில் நவராத்திரி கொண்டாட்டமும் ஊர்வசி நவராத்திரி என்று கொண்டாடப்படுகின்றது. இவ்வாறு 999 வருடங்கள் முடிந்தன. இன்னும் ஒரு கவசம் மட்டுமே பாக்கி இருந்தது. யுகம் மாறியது அவர்கள் மூவரும் யாராக பிறந்தார்கள் தெரியுமா?


இரவில் ஜோஷிர்மட் ஆலயம் மின் ஓளியில் மிளிரும் அழகு



நமக்கு தெரிந்த மஹாபாரதக் கதையின் கர்ணன்தான் சகஸ்ரகவசனாக கவச குண்டலங்களுடன் பிறந்தான், நர நாராயணர்கள் அர்ச்சுனன், கிருஷ்ணராக அவதாரம் எடுத்து அசுரனின் இறுதி கவசத்தையும் நீக்கி அவனை தோற்கடித்தனர்.  இவ்வாறு இங்கு செய்கின்ற ஒவ்வோரு புண்ணிய செயலும் ஆயிரம் மடங்கு பலன் தரவல்லது என்று  பத்ரி க்ஷேத்திரத்தின் பெருமையையும்,சகஸ்ரகவசனனின் கதையையும் மற்றும் சில கதைகளையும் முட்கல் கூறிக்கொண்டு வந்தார் நாங்களும் சமோலி அடைந்தோம். பின்னர் தேசிய நெடுஞ்சாலையை அடைந்து பின்னர் பத்ரிநாத் நோக்கி பய்ணத்தை தொடர்ந்தோம். இது தான் ஸ்ரீநகர் இங்கு சென்ற தடவை பணத்தை திரும்பிப்பெற்றோம், இங்குதான் சென்ற தடவை தேநீர் அருந்தினோம் என்று பேசிக்கொண்டே பீப்பல்கொடியை தாண்டி ஜோஷிமட்டை மாலை  சுமார் 6 மணியளவில்  அடைந்தோம். மேலே செல்ல அனுமதித்தால் பத்ரிநாத் செல்லலாம் இல்லாவிட்டால் இங்கேயே தங்கி விடலாம் என்று முடிவு செய்து ஜோஷிமட்டை அடைந்தோம். மாலை ஆகிவிட்டதால் பயணிகளின் நலன் கருதி போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. சுங்கச்சாவடி அருகே இரண்டு மூன்று வாகனங்கள் நின்றிருந்தன. நாங்களும் வண்டியை அங்கேயே வரிசையில் நிறுத்தி விட்டு அருகில் ஒரு ஹோட்டலில் இரவு தங்கினோம். திவ்ய தேசத்தில் சென்று பெருமாளை தரிசிக்க நினைத்தோம் ஆனால் திருக்கோயில் மூடிவிட்டிருந்ததால்  காலை முடிந்தால் சேவிப்போம் என்று இரவு அங்கு தங்கினோம். ஆனால் மின்  ஒளியொளியில் திருக்கோவில் அற்புதமாக மிளிர்ந்தது அதை புகைப்பட கருவிகளில் பதிவு செய்து கொண்டோம்.  இனி மறுநாள் விஜய தசமியன்று பெருமாள் எவ்வாறு தரிசனம் அளித்தார் என்று அறிந்து கொள்ள அடுத்த பதிவு வரை பொறுத்திருங்கள் அன்பர்களே.

Friday, May 11, 2012

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -23





அம்பலத்தாடும் ஐயனை, மிக்கார் அமுதுண்ண தான் நஞ்சுண்ட நீலகண்டனை, ஜோதிர்லிங்கமாக இமயமலையில் இருந்து கொண்டு அருள்பாலிக்கும் சிவ பரம்பொருளை தரிசிக்கும் ஆவலில் சீதாபூரில் அதிகாலை 5 மணிக்கு எழுந்து எல்லோரும் தயாரானோம்அதிகாலை நேரத்தில் கிளம்பினால்தான் முதலில் கௌரி குளத்தில் குளித்து விட்டு பர்வதராஜன் பொற்பாவையாக பிறந்து சிவபெருமானையே மணம் செய்து கொள்ள வேண்டும் என்று தவம் செய்த கௌரி அன்னையை தரிசனம் செய்து , பின்னர்    14  கி.மீ தூரம் நடைப் பயணமாக  மேலே மலை ஏறிச்  சென்று கேதாரீஸ்வரரை தரிசனம் செய்து விட்டு கீழே இருட்டுவதற்குள்  மீண்டும்  இறங்கி வர முடியும். மேலே கேதார்நாத்தில் தங்க விரும்புபவர்களும், குதிரை மூலம் செல்பவர்களும் மெல்ல செல்லலாம்.

சீதாபூரிலிருந்து கௌரிகுண்ட செல்லும் பாதை

திரு. தேஷ்பாண்டே குடும்பத்தினரில் பலர் வயதானவர்கள்  என்பதால் முதலில்   மேலே  தங்கலாம் என்று நினைத்திருந்தாலும், அவர்கள்  குதிரையில் அனைவரும் சென்று அன்றே திரும்பி வந்து விடலாம் என்று முடிவெடுத்தனர். எங்கள் குழுவில் திரு. தனுஷ்கோடியும், தேவராஜ் அவர்களும் நடைப்பயணமாகவே  மேலே வர விரும்பியதால் முடிந்தால் அன்றைய தினமே திரும்பலாம் இல்லாவிட்டால் மேலேயே சிவபெருமானின் இணையார் திருவடி நீழலில்  தங்கலாம் என்று முடிவு செய்தோம்.

கௌரி குண்ட் நுழைவாயில்

சீதாப்பூருக்கு அடுத்த ஊர் ராம்பூர், அதற்கு அடுத்து சோன் கங்கை நதியும் மந்தாங்கனியும்  சங்கமமாகும் சோன் பிரயாகை. இங்கிருந்து கௌரிகுண்டம் 5 கி.மீ தூரத்தில்  சுமார் 1982 மீ உயரத்தில் அமைந்துள்ளது.  இங்கு தான் மலையன்னை, மலைமகள், வரைமகள், மலையரசன் பொற்பாவை, வரைமகள், பர்வதவர்த்தினி,   உமையம்மை, வரையரசன் பொன் மணி, சைலபுத்ரி, சைலசுதே என்றெல்லாம் அழைக்கப்படும்   அன்னை பார்வதி இமவான் புத்ரியாக பிறந்து , இந்த இமயமலையில் இளமென்பிடியாக வளர்ந்து, சிவபெருமானையே மணாளனாக அடைய வேண்டும் என்று தவம் புரிந்த இடம் ஆகும்அதற்கு பிரமாணம் தருவது போல் அருகில் தலை வெட்டப்பட்ட கணபதி கோவில் உள்ளது.   அம்மை பார்வதி தான் நீராடும் போது யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று விநாயகரை கேட்டுக் கொண்டதால் சிவ பெருமான் வந்த போதும் அவர் தடுக்க அவர் திரிசூலத்தில் தலையை கொய்த கதை நமக்கு ஞாபகம் வருகின்றது

 ஆணவம், கன்மம் , மாயை என்னும் மும்மலமாம், தாராகாசுரன், சிங்கமுகன், சூரபத்மன் என்னும் சூரர்களை சம்ஹாரம் செய்ய குமரன் தோன்ற காரணமாக அமைந்த இடமும் இதுதான்கௌரி குண்டம் சுக்ல பக்ஷத்தில் (வளர் பிறையில்) மஞ்சள் நிறமாகவும், கிருஷ்ண பக்ஷத்தில் ( தேய் பிறையில்) பச்சை நிறமாகவும் காட்சி தருகின்றது. அருகிலேயே சுடு நீர்  ஊற்றுகள் உள்ளன.

கௌரி குளம் சுடு நீர் ஊற்று

முதல் அவதாரத்தில் ஜகத்ஜனனி, ஜகன்மாதா தக்ஷப்பிரஜாபதியின் மகளாக, சதிதேவியாக பிறந்து வளர்ந்து தன் தந்தையின் விருப்பத்திற்கு மாறாக சிவபெருமானை கரம் பிடித்து, அதற்காக, தக்ஷன் சிவபெருமானை அவமதிக்க ஒரு யாகம் நடத்தி, அதில் சிவபெருமானுக்கு அவிர்ப்பாகம் தராமல் நடத்த, அந்த முறையற்ற யாகத்தில் தேவர்கள் அனைவரும் கலந்து கொள்ள, அங்கு சென்ற சதிதேவி தனது தந்தையால் அவமானப்படுத்தப்பட்டு  அவன் யாகத்தை  அழித்து அவம் கொடுத்த உடலையும் அழித்துக்கொண்டு பின் இமவான் மேனை  திருக்குமாரத்தியாக மீண்டும் பிறப்பெடுத்த  கதையை அனைவரும் அறிவோமல்லவாஇந்த முறையற்ற யாகத்தில் கலந்து கொண்டதனால்தான் தேவர்கள் அனைவரும் சூரபதமனிடம் சிறைபட்டு துன்பம் அடைந்தனர், அவர்களுக்கு  தனது அம்சமான சிவகுமாரனின் மூலம் விமோசனம் அளித்தவரும் அதே பரமகருணா மூர்த்தி சிவபெருமான்தான். 


கௌரி குண்டம்  வடநாட்டுத் தேவாரம் பெற்ற தலங்களுள் ஒன்று. இங்குள்ள ஆலயமே அநேகதங்காவதமாகும். இதில் சந்திர சூரியர் வழிபட்டுப் பேறு பெற்றனர். இதற்குத் திருஞானசம்பந்தரது பதிகம் ஒன்று உள்ளது.

 இறைவன் : மனோன்மனி உடனுறை அநேகதங்காவதநாதர்
இறைவி : கௌரி
தேவாரப்பாடல் : திருஞான சம்பந்தர் 

தந்தத் திந்தத்தட மென்றரு வித்திரள் பாய்ந்துபோய்ச்
சிந்த வெந்தகதி ரோனொடு மாசறு திங்களார்
அந்த மில்லவள வில்ல வனேகதங் காவதம்
எந்தை வெந்தபொடி நீறணி வார்க்கிட மாவதே.

 பொருள்:  `தந்தத் திந்தத் தடம்` என்ற ஒலிக்குறிப்போடு அருவிகள் பாய்ந்து சென்று ஒழுக, வெம்மையான கதிர்களை உடைய கதிரவன் ஒளியும், குற்றமற்ற திங்களின் ஒளியும் பரவ, முடிவு அற்ற அளவுபடுத்த முடியாத அனேகதங்காவதம், எந்தையாகிய, திருநீற்றைப் பூசி மகிழும் சிவபெருமானுக்கு இடமாக உள்ளது என்று அன்னையின் ஞானப்பாலுண்ட ஆளுடையபிள்ளை இத்தலத்தைப் பற்றி பாடியுள்ளார்.

மலையன்னை பார்வதி தவம் செய்யும் கோலம்

அன்னையும் ஐயனும் திடமான பக்தியை நமக்கு தெரியப்படுத்தும் பொருட்டு இந்த கௌரி குண்டத்தில் நடத்திய சிறு நாடகத்தை பார்த்துவிட்டு கௌரிகுண்டத்தில் குளித்து விட்டு அன்னை கௌரியை தரிசனம் செய்து விட்டு கேதார மலையேறலாமா அன்பர்களே. சூரர் கிளை மாய சிவகுமரன் தோன்ற வேண்டும். சிவபெருமானோ யோக தக்ஷிணாமூர்த்தியாக யோகத்தில் ஆழ்ந்திருந்தார், சிவசக்தியோ  இமவான் மகளாக அவதரித்து இமயமலையில் வளர்ந்து வந்தாள். இருவரது  திருமணம் நடைபெற வேண்டி தேவர்கள் மன்மதனை வேண்ட  அவனும் சிவபெருமான் மலர்க்கணை தொடுத்து நெற்றிக்கண்ணால் சாம்பரானான். ஆயினும் ஐயனின் யோகநிஷ்டை கலைந்தது. நாரதர் பார்வதியிடம் சிவபெருமானை மணாளனாக அடைய தவம் செய்யுமாறு அறிவுறை கூறினார். பெற்றோர்களிடம் அனுமதி பெற்று கௌரி மரவுரி தரித்து  இமயமலையில் கடும் தவம் செய்து வரலானாள். அம்மைக்கு அருள ஐயன் ஜடாமுடி தரித்த ஒரு  கிழ வேதியர் வடிவம் கொண்டு வந்து சேர்ந்தார். அவ்வாறு வந்த வேதியரைக்கண்டு பார்வதி தேவி பெருமகிழ்ச்சியோடு அவரை வரவேற்று உபசரித்து வழிபட்டாள். பின்னர் உணவளித்தாள். பின்னர் உறங்கி எழுந்த அந்த  விருத்தரிடம் அன்னை மலைமகள் “ நீங்கள் எங்கு வந்தீர்கள்?” என்று கேட்டாள்.

 கௌரி குண்ட் குளிர்நீர் குளம்

அன்னை கணேச ஜனனி

 திருக்கயிலை தரிசனம் 

அதற்கு அந்த கபடவேடதாரி எதற்காக இந்த கடுமையான தவத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறாய் என்று வினவ, அம்மையும்  பிநாகம் ஏந்திய சிவபெருமானை கணவனாக அடைய இந்த தவம் செய்வதாக கூறினாள். அதற்கு விருத்தராக வந்த சிவபெருமான் கூறுகின்றார். ஏ தேவி! நீ சந்தனத்தை விட்டு சேற்றைப் பூசிக்கொள்ளவும், யானை வாகனத்தை விட்டு எருதின் மேல் ஏறி சவாரி செய்யவும், கங்கை நீரை விட்டு, கிணற்று நீரை அள்ளிக்குடிக்கவும், சூரிய ஒளியை விட்டுவிட்டு மின்மினியின் மினுக்கு ஒளியை கண்டு ரசிக்கவும், வீட்டு வாசத்தை விட்டுவிட்டு காட்டுவாசஞ் செய்யவும் விரும்பியவளாய் தவம் செய்கின்றாய். +இன்னுஞ் சொல்கிறேன் கேள். பார்வதி! கமலப்பூக்களைக் ப்போன்ற கருவிழிகள் கொண்ட கட்டழகியான நீ எங்கே? முக்கண்ணனான அந்தச் சுடலையாடிச் சிவன் எங்கே? வெண்ணிலா முகம்படைத்த நீ எங்கே? ஐந்தலையனான அந்த ஆண்டிப்பித்தன் எங்கே? வருணிக்க முடியாத கூந்தல் அலங்காரியான நீ எங்கே?  விரிசடையனான அந்த ஜடாதரன் எங்கே? சந்தனம் முதலான வாசனைகள்பூசிபரிமளிக்கும்  உடல் வளம் வாய்ந்த நீ எங்கே?  சுடுகாட்டுச் சாம்பலை பூசித்திரியும் உடலுள்ள அந்த சிவன் எங்கே? சுகமான வெண்பட்டாடை எங்கே? சுகமற்ற அவன் யானைத்தோல் போர்வை எங்கே? உனது திவ்யமான தோள் வளைகள் எங்கே? அவனது பாம்பு ஆபரணங்கள் எங்கே? உனக்கும் சிவனுக்கும் பொருத்தமோ? உருவ ஒற்றுமையோ சிறிதும் கிடையாது. அவனோ விரூபாக்ஷி (கோணல் கண்ணன்) அவனது குலங்குடி முதலியனவும் நன்றாக அறியப்படவில்லை. அவன் என்ன செல்வந்தனா? அப்படியிருந்தால் அவன் ஏன் திகம்பரனாய் திரிய வேண்டும். 

அநேகதங்காவதம்


அவன் எறித்திரிவது மாடு, உடுத்தும் ஆடை யனைத்தோல், பதை வரிசைகள் பூத பைசாசங்கள், அவனது நீல கண்டத்தில் கடுவிஷம், காடு மேடுகளில் சுற்றுபவன், ஏகாங்கி, பற்றற்ற விரக்தன்!. ஆகையால் அவனிடன் உன் மனத்தை செலுத்துவது உசிதமல்ல! அவன் வசிப்பது ருத்ரபூமி! எனவே உன் மனத்தை அப்படிப்பட்டவனிடமிருந்து திருப்புவதுதான் நல்லது என்று கூறினார். 
      
இவற்றையெல்லாம் பொறுமையின்றி கேட்டா பார்வதிதேவி மிகவும் கோபம் கொண்டாள். அவள் அந்த முதுபெரும் கிழவரை நோக்கிக் குமுறி குமுறி கூறலானாள். “சிவதூஷணை செய்வதில் வாய்த்தேர்ச்சி பெற்ற கிழவரே! இவ்வளவு நேரம் உம்மை தன்யர் என்று எண்ணியிருந்தேன். இப்போதுதான் தாங்கள் அபத்தமானவர் என்று புரிந்தது. தேவாதி தேவனை சிவபெருமானை நான் அறிவேன் என்று நீர் கூறியது பொய். உலகை காக்கும் அந்த்த சிவபெருமானின் வாசாமகோசரமான ஸ்வரூபத்தை நான் சொல்லுகிறேன், கேட்டுத் தெரிந்து கொள்ளும்!.....

அந்த பரமசிவனார், யோசித்துப்பார்த்தால் நிர்க்குணர் காரணத்தால் ஸகுணராகவும் நிர்க்குணராகவும் விளங்குகின்றாரே அவருக்கு பிறவி ஏது?  ஜாதி ஏது? சகலவித்தைகளுக்கும் அவர் பிறப்பிடமானவர். அவரே முன்பு ஒரு காலத்தில்  வேதங்களை சுவாச மார்க்கமாக விஷ்ணுவுக்கு வழங்கியவர். பரமாத்மாவும் பரிபூரணருமான அந்த சிவனாருக்கு வித்தைகளால் ஆகவேண்டியது என்ன? ஆதிபூதரான அந்த ஆனந்தகூத்தருக்கு  வயது ஏது. பிரகிருதியே அந்த பெருமானிடத்திலிருந்தல்லவோ தோன்றியது. எவன் அந்த பெருமானை நித்தியமாக அடைகின்றானோ? அவனுக்குப் ப்ரஹால, உத்ஸாஹ, மந்திரஜ சக்திகள் கைகூடும். சுடலையாண்டி என்று நீங்கள் குறிப்பிட்ட  அவரே மரணத்தை வென்ற மிருத்யுஞ்ஜயர். அவரது பூஜையால் எல்லோருக்கும் சுகம் பொங்கி வருமே தவிர அவருக்கென்று ஏது சுகம்? துன்மதியாளரே! எந்த சிவபெருமானின் கருணைக் கண் ணோக்கினால் தேவர்கள் ஜீவந்தர்களாக இருக்கின்றார்களோ,எந்த சிவபெருமானின் திருத்தொண்டிற்காகக் தேவர்களும் காத்திருக்கின்றார்களோ அந்த பரம்பொருள் ஸ்வயம்பு. நீர் ஆண்டியென இகழ்ந்த அந்த ஆனந்த மூர்த்தியை சேவித்தால்  அஷ்டலக்ஷ்மிகளையும் அடைவான். எந்த சிவபெருமானிடம் அஷ்டமாசித்திகளும் நர்த்தனஞ் செய்கின்றனவோ, அந்த பரமேஸ்வரனுக்கு ஐசுவரியம் எப்படி எட்டாததாகும். அவ்ரே மங்கள மூர்த்தி, சிவம் என்ற மங்களமான பெயர் எவன் முகத்தில் நிலைத்திருக்கிறதோ அவனைக் கண்ணால் காண்பதாலேயே அன்னியர்களும் பரிசுத்தராகி விடுவார்கள். 

மலை வளர் காதலி உமை
 தவம் செய்யும் கோலம் அருகில் கணேசர்

நீர் சொல்வது போல பஸ்பமானது பரிசுத்தம் இல்லாத வெறும் சாம்பல் என்றால் அம்பலவாணரான அந்த அண்ணல் மாபெரும் நடனமாடிய பிறகு தேவர்கள் அந்த சாம்பலை ஏன் தாம்து சிரசின் மீது பூசிக்கொள்கின்றனர். பொன்னார் மேனியில் தூய பால் வெண்ணீறு அணியும் அந்த சிவபெருமான் அகில உலகங்களுக்கும் ஆதி. அவரே  சர்வேஸ்வரராக இருந்து . அனைத்தையும் ஆக்கலும், காத்தலும், அழித்தலும். மறைத்தலும், அருளலுமான ஐந்தொழில் புரிந்து அலகிலா விளையாட்டுடைய தலைவராக விளங்குகிறாரோ அந்த ஆதிநாயகரை உம்மைப் போன்ற குறைமதியாளர்களால் எப்படி அறிய முடியும். 

துஷ்ட வேதியரே! உம் ஊனக்கண்களுக்கு  சிவபெருமான் எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவரே என் மனக்கண்ணிற்க்கு பிரியரும் என் விருப்பத்திற்கு உரியவராவார் என்று வெகுண்டுரைத்து விட்டு, சிவநிந்தணை செய்யும் இவர் இருக்கும் இடம் விட்டு செல்லலாம் என்று  சொல்லி விட்டு தன் தோழியரிடம் வேறிடம் செல்ல காலெடுத்து வைபப்தற்கு முன் , விருத்த வேதியர் வடிவில் இருந்த சிவபெருமான் தனது சுயரூபத்தை காட்டினார். அவ்வாறு இவரைக்கண்டதும் பார்வதி தேவி நாணத்தோடு தலை குனிந்து நின்றாள். அவளை சிவபெருமான் உற்று  நோக்கி புன்னகை பூத்து, “பார்வதி நீ என்னை விட்டு எங்கு போக முடியும்? நீ என்னால் விட்டுவிடத்தக்கவள் அல்லவே! உன் தவத்துக்கு மகிழ்ந்த நான்  உன் முன் பிரசன்னமானேன். உன் மனதை சோதிப்பதற்காகவே  விளையாட்டாக  இப்படியெல்லாம் வாய் கொடுத்து வார்த்தையாடினேன். உன் திடபக்தியை கண்டு உவந்தேன் என்றார். பின்னர் முறைப்படி பர்வதராஜனிடம் சப்தரிஷிகள் பெண் கேட்க, சிவசக்தி திருமணம் அருகில் உள்ள த்ரியுக் நாராயணில் நடைபெற்றது.

கௌரி குளம்

இவ்வாறு சிவசக்தி திருவிளையாடல் புரிந்த கௌரி குண்டத்தில் கௌரிக்கு ஒரு தனிக்கோவில் உள்ளது. இமயமலையின்  கட்டிட அமைப்பில்  ஒரு கூம்பு வடிவ  கோபுரத்துடன் ஒரு பிரகாரத்துடன் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. கோவிலின் திருவாயிலின் அருகில் அம்மை பார்வதி தவம் செய்யும் கோல அற்புத  சிற்பம் ஒன்று உள்ளது. அம்மையின் அருகில் கணபதியும் அருள்கின்றார். அன்னையை தரிசனம் செய்வதற்கு முன்னர் அன்பர்கள் முதலில் சுடு நீர் குளத்தில் நீராடுகின்றனர். இங்கு இரு  சுடு நீர்க்குளங்கள் உள்ளன. கேதார்நாத் மலையேறி சிவபெருமானை தரிசனம் செய்து விட்டு கீழிறங்கி வரும் போது எவ்வளவு களைப்பாக இருந்தாலும் இக்குளத்தில் நீராட எல்லா களைப்பும் நீங்கிவிடும் என்று எனது நண்பர் கூறியிருந்தார். இக்குளத்தில் காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை நீராடலாம்.

நீராடும் போது பக்தர்கள்
ஸர்வ மங்கள் மாங்கல்யே  சிவே ஸ்ர்வார்த்த சாதிகே |
சரண்யே த்ரயம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே ||
என்று கௌரியன்னையை நினைத்து   மனது உடலும் தூய்மையடைய நீராடுகின்றனர். பின்னர் அன்னை மலைமகள் தவம் செய்த கௌரி குளத்தில் சென்று அன்னையை வழிபடுகின்றர். இந்த குளத்தில் தற்போது தண்ணீர் இல்லை. கூரையுடன் ஒரு கட்டிடமாக மாறியுள்ளது, குழாய் வழியாக தண்ணீர் வந்து தொட்டியில் விழுகின்றது. நான்கு சுவர்களிலும் அன்னையின் சரித்திரத்தை சிற்பங்களாக அமைத்துள்ளனர். தற்போது இங்கு பித்ரு கர்மா செய்கின்றனர்.

கௌரி குண்டத்தின் அருகில் எங்கள் குழுவினர்

 நேற்று வரும்போது த்ரியுக் நாராயண் சென்று அங்கு மூன்று யுகங்களாக எரிந்து கொண்டிருக்கும் குண்டத்தின் விபூதி எடுத்து வரலாம் என்று இருந்தோம் முதல் நாள் ரிஷிகேசில் நேரமாகி விட்டதால் அங்கு செல்ல முடியவில்லை. அந்த விபூதி பிரசாதம் தீராத விணை தீர்க்கும் சக்தி கொண்டது. முடிந்தவர்கள் சென்று வரவும். சோன் பிரயாகையில் இருந்து 14 கி.மீ தூரத்தில் த்ரியுக் நாராயண் அமைந்துள்ளது. 

 பின்னர் அருகில் உள்ள திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற  கௌரி ஆலயத்திற்கு சென்று அன்னையை, வரையோன் பெற்ற வார் சடையாளை, மலைச்செல்வியை, அமரர் கயிலைப் பார்வதியை வழிபட்டு விட்டு ஜோதிர்லிங்க ஸ்தலமான  கேதார்நாத்திற்கான நடைப் பயணத்தை  தொடங்கினோம். 


கௌரிகுண்டத்தில் இருந்தே பாதை கேதார்நாத்திற்க்கு செல்கின்றது. மந்தாங்கினி நதிக்கரையோரமாகவே ராம்பாரா கருடகங்கா வழியாக   பாதை கேதார்நாத்திற்க்கு செல்கின்றது. முதலில் குதிரைகள் லாயம் கண்ணில் படுகின்றது குதிரையில் செல்பவர்களும், கண்டி மற்றும் தண்டியில் செல்பவர்களும் இங்கிருந்துதான் கிளம்புகின்றனர். மலைப்பாதையில் வளைந்து ஏறியதும்  சுங்கச்சாவடி உள்ளது இங்கு சுங்கம் வசூலிக்கின்றனர். திரு முட்கல், திரு. தனுஷ்கோடி மற்றும் திரு.தேவராஜன் அவர்கள் நடைப்பயணமாக வந்தனர் மற்றவர்கள் குதிரையில் கிளம்பினோம். கேதாரீஸ்வரரை தரிசனம் செய்வதற்க்கு முன்னர் கேதார்நாத்தின் பெருமைகளை காணலாமா அன்பர்களே. அதற்காக அடுத்த பதிவுவரை காத்திருங்கள்.