Friday, September 15, 2017

விஸ்வகர்மா பூஜை


கிழக்குப் பிரதேசத்தின் ஆயுத பூஜை
              
 
              
நமது பரத கண்டமெங்கும் பல் வேறு பிரதேசங்களில் பண்டிகைகள் வெவ்வேறு விதமாகக் கொண்டாடப்படுகின்றன. பண்டிகை ஒன்றாக இருந்தாலும் அதை கொண்டாடும் விதங்கள் பலவிதமாக உள்ளன. நமது தேசத்தின் வடகிழக்கு பகுதியில் பணி  செய்யும் சமயம் இறைவன் அருளால் அங்கு நடைபெறும் விஸ்வகர்மா பூஜையை தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது.  அன்பர்கள் அனைவரும் அறிந்து கொள்ள  வேண்டும் என்று இப்பதிவு.

               தென்னாட்டில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் நவராத்திரி சமயத்தில் நவமியன்று  சரஸ்வதி பூஜையுடன் நாம் ஆயுத பூஜையையும் சேர்த்துக் கொண்டாடுகின்றோம்,  ஆனால் கிழக்கு பிரதேசங்களா, ஒரிசா, வங்காளம் மற்றும்  வட கிழக்கு மாநிலங்களில் நேபாளத்தில் கூட  ஆயுத பூஜை என்பது விஸ்வகர்மா பூஜையாகும்.   அசாமின் வருடப்பிறப்பும் நம் தமிழ் வருடப் பிறப்பும் ஒரே நாள் வருகின்றது. இவர்கள் வருடப் பிறப்பை ரெங்ஹாலி பிஹூ என்று ஒரு வாரப்  பண்டிகையாக மிகவும் மிக சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். மகர சங்கராந்தியான தைப் பொங்கலை இவர்கள் கடி பிஹூ என்றும் கொண்டாடுகின்றனர்.  இவர்களுடைய  வருடமும்    சூரியனை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப் படுவதால் நம்முடைய மாதங்களுடன் ஒத்துச் செல்கின்றன.

ஷடசீதி புண்ய காலமான் நமது புரட்டாசி மாத முதல் நாளன்று  விஸ்வகர்மா பூஜை சிறப்பாக இப்பகுதிகளில் நடைபெறுகின்றது. இங்கு இவர்களின் பத்ரா மாதத்தின் கடைசி நாள், அடுத்த நாள்  மாத சங்கராந்தி ஆஸன் மாதம் தொடங்குகின்றது.

 விஸ்வ கர்மா பூஜையைப் பற்றி பார்ப்பதற்கு முன்பு விஸ்வகர்மாவைப் பற்றி ஒரு சிறு அறிமுகம்.  விஸ்வ கர்மா தேவ தச்சன் என்பதை நாம் அனைவரும் அறிவோம். வேதங்களிலும் புராணங்களிலும், இதிகாசகங்களிலும் இவர் எவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளார்  என்று பார்ப்போமா? ரிக் வேதத்திலே அனைத்து  உலகங்களையும் படைக்கும் ஆற்றல் உள்ளவராய் இவர் சித்தரிக்கப்படுகின்றார். இப்பூவுலகை தன்  திருக்கரங்களால்  உருவாக்கியவர் என்று கூறப்பட்டுள்ளது.. புர'ணங்கல்  சிற்பியாக மட்டுமல்ல மற்றும் எல்லா திவ்யாயுதங்களையும் உருவாக்குபவராகவும் சிறப்பிக்கப்படுகின்றார். அக்னியாஸ்திரத்தை உருவாக்கியவர்  இவரேகட்டிடக் கலை (Architecture), சிற்ப சாஸ்திரம், இயந்திர சாஸ்திரம் (Mechanical Engineering), முதலியவற்றின் தந்தையாக இவர் கருதப்படுகின்றார். எனவே  இன்றும் சுவாமி மலையை சார்ந்த ஸ்தபதிகள் தங்களை இவரின் வழித்தோன்றல்களாகவே கருதுகின்றனர். மஹா பாரதத்தில் இவர் கலைகளின் அதிபதியாகவும், திவ்யாபரணங்களை வடிவமைப்பவராகவும், தேவர்களின் தச்சராகவும், திவ்ய இரதங்களை உருவாக்குபவராகவும், கை வினைஞர்கள்  வழிபடும் தெய்வம்  இவரே என்று போற்றுகின்றது. இராமயணத்தில் இலங்கை நகரை கட்டியவர் மற்றும் இராம பெருமானுக்கு பாலம் கட்டிய நளனுக்கு அச்சக்தியை அளித்தவர் இவர் என்றும்  கூறப்பட்டுள்ளது.  ஒரே இரவில் துவாரகை நகரை சொர்ண நகரமாக கட்டியவரும் இவரே.

புராணங்களின் படி  இவர் அஷ்ட வசுக்களின் கடைசி வசுவான பிரபாசருக்கும் அவரது மனைவி யோக சித்தியின் குமாரர்.  இவரது மகளான சஞ்சனாவை சூரிய பகவான் திருமணம் செய்து கொள்கிறார். சூரியனுடைய காந்தியை  சஞ்சனா தாங்கிக்  கொள்ள முடியாத போது, சூரியனை தனது இயந்திரத்தில் வைத்து  வெட்டி அவரது தேஜஸ்ஸிலிருந்து எட்டின் ஒரு பகுதியை நீக்கினார். அப்போது பூமியில் விழுந்த துகள்களிலிருந்தே, மஹா விஷ்ணுவிற்காக சுதர்சன சக்கரத்தையும். மஹா தேவருக்காக திரி சூலத்தையும், குபேரனுடைய ஆயுதத்தையும், முருகப் பெருமானின் வேலாயுதத்தையும், மற்ற தெய்வங்களின் திவ்யாயுதங்களையும் இவர்  உருவாக்கினார் என்பர். தேவ சிற்பியான இவர் பிரஜாபதி என்றும் அழைக்கப்படுகின்றார்.

நாம் இப்போது வழிபட்டு வரும் பல்வேறு திவ்ய தெய்வ விக்கிரகங்களை உருவாக்கியவர் இவரே. அவற்றுள் சில பூரி ஜகந்நாதர்சப்த விடங்க ஸ்தல தியாக ராஜ மூர்த்தங்களை  இந்திரனுக்காக  செய்து அருளினார்.  முசுகுந்த சக்ரவர்த்தியினால் இவர்கள்  பூலோகம் வந்தனர். உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர், குருவாயூர் குருவாயூரப்பன்  முதலிய மூர்த்தங்களை உருவாக்கியவரும் இவரே எல்லா  கைவினைஞர்களும் குறிப்பாக பொற் கொல்லர்கள், இரும்பு கொல்லர்கள், தச்சர்கள், ஸ்தபதிகள் ஆகியவர்களின் தெய்வமும் மூல குருவும் இவரே. சென்னை தம்பு செட்டி தெருவில் அமைந்துள்ள அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோவிலில் விஸ்வகர்மாவிற்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இவரை விஸ்வகர்மா சமூகத்தினர்.





                              ஓம் சத்யோஜாத  முகாய பிரம்மதேவனே நம:
                              ஓம் வாமதேவ முகாய விஷ்ணு தேவனே நம:
                              ஓம் அகோர முகாய ஈஸ்வர தேவனே நம:
                              ஓம் ஈசான்ய முகாய இந்திர தேவனே நம:
                              ஓம் தத்புருஷ முகாய சூரிய தேவனே நம:
                              ஓம் தேவ தேவ மஹா தேவ விஸ்வப்பிரம ஜகத் குருவே நம:
 என்று அகில ஜகத்திற்கும் குருவாக வணங்குகின்றனர்.

இத்தகைய  சிறப்புகள் படைத்த இவரையே கிழக்கு பிரதேசங்களில் எல்லாத் தொழில் நிறுவனங்களிலும் சிறப்பாக  வழிபடுகின்றனர்.  சிறு பெட்டிக்கடை முதல் பெரும் தொழிற்சாலை வரை எல்லாவிடத்திலும். யானை மேல் சுகாசனத்தில், மீசையுடனும் , நான்கு திருக்கரங்களில் கோடரி, ஏர், வில், தராசு தாங்கி, இடையிலே உடைவாளையும், முதுகில் அம்புறாத் தூணியையும் தரித்தவராய், பிரபையில் எடைக்கல், கத்திரி, கொறடு, உளி, பூட்டு, சாவி, அரிவாள், அங்குசம், தையல் யந்திரம், சுத்தியல். திருப்புளி, பூச்சுக் கரண்டி என்று சகலவிதமான ஆயுதங்களையும் -கொண்டவராய், குருக்கள் பூசை செய்ய, தம்பதியர் இவரை வழிபடும் கோலத்தில் இவரது படத்தை நாம் காணலாம்.  

புரட்டாசி முதல் நாளன்று (கன்யா சங்கராந்தி) விஸ்வ கர்மா பூஜை மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. கிழக்குப் பகுதியில் நடைபெறும் பெம்பாலான பூஜைகள்  சர்வஜனிக் என்று அழைக்கப்படும் கூட்டு வழிபாடுகளாகவே நடைபெறுகின்றன.  சிறப்பாக பந்தல் அமைத்து அதில் அந்த தெய்வத்தின் அலங்கரிக்கப்பட்ட சிலைகளை வைத்து, கலச ஸ்தாபனம் செய்து அதில் அந்த தெய்வத்தை ஆவாஹனம் செய்து மிகவும் சிறப்பாக பூஜை நடத்தி பின் மறு நாள் அந்த கலசத்தையும் தெய்வத்தையும் கங்கையில் (நீர் நிலைகளில்சென்று கரைக்கின்றனர். இந்த விஸ்வ கர்மா பூஜையும் அவ்வாறே -கொண்டாடப்படுகின்றது. யானை வாகனத்தில் அமர்ந்த கோலத்தில், கிழக்கு பிரதேசத்திற்க்கே உரித்தான அந்த கிரீடங்களையும், ஆபரணங்களையும், கரும் கூந்தலையும் தாங்கள் கண்டு மகிழலாம். அன்று வாகனங்கள், இயந்திரங்கள், சகல விதமான ஆயுதங்கள், புத்தகங்கள் அனைத்திற்கும் நான் ஆயுதபூஜையன்று வழிபடுவது போல் இவர்கள் இன்று வழிபடுகின்றனர்.



பூஜையின் போது இவர்கள் படைக்கும் நைவேத்தியம், அரிசியும்,  பாசி பருப்பும் சேர்த்து தயாரிக்கப்படும் கிச்சடி என்றழைக்கும்  போக் ஆகும். அந்த பிரசாதம் எல்லாருக்கும் வழங்கப்படுகின்றது. சில தொழிற்சாலைகளில் சிறப்பு விருந்துகளும்  நடைபெறுகின்றன .இப்பிரதேசத்தின் மக்கள் மிகவும் சிரத்தையாக இந்த பூஜையை கொண்டாடுகின்றனர். அன்று ஒவ்வொரு தெருவிலும் ஒரு பூஜா பந்தலையாவது நம்மால் காண முடியும். குறிப்பாக தொழில் நிறுவனங்களில் அன்று இயந்திரங்கள் அனைத்தையும் சுத்தம் செய்து, சந்தனம், குங்குமம் இட்டு வழிபாடு நடத்துகின்றனர். எல்லா ஆயுதங்களும் விச்வ கர்மாவினால் உருவாக்கப்பட்டவை என்பதால் ஆயுதங்களுக்கும் பூஜை இன்றே பூஜை நடைபெறுகின்றது. வாகனங்கள் அனைத்தும் இன்று நன்றாக கழுவப்பட்டுவெள்ளை மணிகள் , வாழை கன்றுகள் , மாவிலை  முதலியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டு பூசிக்கப்பட்டு வெள்ளோட்டம்  விடப்படுகின்றது. வியாபார நிறுவனங்களில் கணக்கு புத்தகங்களும் இன்றே பூசிக்கப்படுகின்றன. கிழக்கு பகுதிகளில் சரஸ்வதி பூஜை வசந்த பஞ்சமியன்று கொண்டாடப்படுகின்றது ஆனால் அவர்களின் ஆயுத பூஜை இந்த விச்வ கர்மா பூஜைதான். சமயம் கிடைக்கும் போது இவர்கள் இவ்விழாவினை கொண்டாடும் சிறப்பினை   காணும் வாய்ப்பினை இறைவன் தங்களுக்கு  வழங்கவேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.


No comments: