Sunday, September 17, 2017

காவிரி மஹா புஷ்கரம்

நேற்று காவிரி மஹாபுஷ்ரத்திற்காக மாயவரம் சென்று துலாகட்டத்தில் நீராடி பின்னர் அபயாம்பிகை சமேத மயூரநாதரையும், ஞானாம்பிகா சமேத வதான்யேஸ்வரரையும் மேதா தக்ஷிணாமூர்த்தியையும், பரிமள நாயகி சமேத பரிமள ரங்கநாதரையும், காசி விஸ்வநாதர் , விசாலாக்ஷி அம்பாள், டுண்டி விநாயகரையும் தரிசனம் செய்து காவிரி அன்னையின்  மாலை  ஆரத்தியையும் தரிசிக்கும்  பாக்கியம் சித்தித்தது.  சில படங்கள் அன்பர்கள் பார்த்து இன்புற பதிவிடுகின்றேன்.  

சித்தி புத்தி சமேத மங்கள விநாயகர் 

நீரின் சிறப்பை முதலில் காணலாம். “நீரின்றி அமையாது உலகு” என்று தமிழ் வேதமாம் திருக்குறளிலே  பாடினார் வள்ளுவப் பெருந்தகை. “தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே”  என்பது ஆன்றோர் வாக்கு. தண்ணீரிலிருந்தே பூவுலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தும் தோன்றின. தண்ணீரிலிருந்து ஒரு செல் கொண்ட உயிரினமான அமீபா முதலில் தோன்றி பரிணாம வளர்ச்சியடைந்து தற்போது மனிதன் வரையிலான உயிர்கள் தோன்றின என்கிறது விஞ்ஞானம். திருமாலின்  தசாவதாரத் தோற்றங்கள்- மனிதன் அடைந்திருக்கும் பரிணாம வளர்ச்சியைக் காட்டுவதேயாகும். (திருமாலின் முதல் அவதாரம் தண்ணீரில் தோன்றிய மச்சாவதாரம்). தண்ணீர் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஜீவாதாரமாகத் திகழ்கின்றது.

நீரை இறைவனின் வடிவமாக நினைத்து நீர் நிலைகளை போற்றினர் நம் முன்னோர்கள். “ஆர்வுற்ற என்னையொழிய என்னின் முன்னம் பாரித்துத்தான் என்னை முற்றப் பருகினான்” என்கிறார் நம்மாழ்வார்.

அதாவது இறைவனை கண்டால் அப்படியே விழுங்கிவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். அவன் அதற்கு முன்பாகவே தனது அன்பால் என்னை நீராக மாற்றி அப்படியே விழுங்கி விட்டான் என்கிறார்.

மாணிக்கவாசகரோ சிவபெருமானை அருள் மழை பொழியும் மேகன் என்கிறார். ஈசனின் ஐந்தொழில்களில் படைத்தல், அழித்தல் இரண்டும் நீரின்  மூலமாகவே நடைபெறுகின்றன. இவ்வுலகம் ஊழியால் அழியும் போது எழும் கடல் அலைகளில் சிக்கித் தவிப்போரிடம் ஈசன் “அலைவாயில் வீழாமல் அஞ்சலென்றானே" என்கிறார் திருமூலர்.

இளகுதல் என்றால் நீர் மிகுத்தல், எப்பொருளும் இளகி விட்டது என்றால் கெட்டித்தன்மை மாறி விட்டது என்று பொருள். மனிதர்கள் இளகிய மனம் கொண்டவர்களாக  இருக்க வேண்டுமென்றால் அவர்கள் உள்ளத்தில் அன்பெனும் நீர் பெருக வேண்டும். கருணை கொண்டு வாழ வேண்டுமென்றால் நெஞ்சில் ஈரம் கசிய வேண்டும். மனிதர்கள் இன்பமான வாழ்க்கை வாழ  உடலிலும் உள்ளத்திலும் நீர் வற்றாமல் இருக்க வேண்டும்.

நாரம் + அயனம் = நாராயணம். “நாரம்” என்றால் நீர். “அயனம்” என்றால் மாற்றம். “நாராயணம்” என்றால் உயிர்கள் அனைத்தும் நீரின் மாற்றத்தால் தோன்றியது எனப் பொருள். திடப் பொருளாக உள்ள அனைத்திற்கும் மூலப் பொருளாக உள்ளது நீர்மப் பொருள் தான். நீருக்கு மூலமாக இருப்பது, எல்லாம் வல்ல இறைவனான “நீயே தான்”. அவ்வாறான நாரா + அயணமான உன் திருநாமத்தை,  நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் “நாராயணா” என்னும் நாமம் என்று திருமங்கையாழ்வார் பாடுகின்றார். .

“நீராயலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே! ஆராவமுதா!”     -  , என்னை நீராக மாற்றி நான் கரைந்து போகும்படி என்னை உருக்குகின்ற இறைவனே என்பது நம்மாழ்வார் வாக்கு

மங்கலம் ததும்பும் வாழ்வின் உன்னதமான தருணங்களில், பூஜைகளின் நிறைவில் நம் செவியையும், மனதையும் தெய்வீகமாக நிறைக்கும் “மந்திர புஷ்பம்” என்னும் சுலோகம் ஓதப்படுகின்றது. யஜுர் வேதத்தைச் சார்ந்த தைத்ரீய ஆரண்யகம் (1.22) இந்த மந்திர புஷ்பத்தைக் கொண்டிருக்கிறது.   “ நிலவே நீரின் மலர்” என்று முதலாம் சுலோகம்  துவங்குகின்றது. மீண்டும் மீண்டும் இயற்கையின் ஆதாரங்களான நீர், நெருப்பு, காற்று, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மேகம், மழைக்காலம் என்று சுழன்று, நீருடன் ஒவ்வொன்றும் ஆதாரம்; ஆனால் நீரே இவை எல்லாவற்றிற்கும் ஆதாரம் என்று உறுதியாய்ச் சொல்லி முடிக்கிறது மந்திர புஷ்பம். ஒன்பதாவது சுலோகத்தில், ஓடத்தால் கடக்க அறிவுறுத்தும் கட்டத்தின் மூலம் அந்த இயற்கையை வணங்கி அதன் அடுத்த தளமான இவை அத்தனையையும் உருவாக்கிக் காக்கும் இறையை அடையும் முயற்சிக்கு ஆதி மனிதனைக் கொண்டு செல்கிறது. செல்வத்துக்கு அதிபதியான குபேரனை வணங்கும் பத்தாவது சுலோகத்துடன் மந்திர புஷ்பம் எனும் நறுமணம் வீசும் மலர்கள் இறைவனின் பாதங்களில் சேர்க்கப்படுகின்றன. தண்ணீரே அனைத்திற்கும் ஆதாரம் என்று அறுதியிட்டுக் கூறுகின்றது மந்திர புஷ்பம்.

தண்ணீர் பிரவாகமெடுத்து வரும் நதிகளை வெறும் பயன்பாட்டுக்கு மட்டுமல்லாமல் அவற்றை தெய்வமாகவேக் கருதி வழிபடும் வழக்கம், பன்னெடுங்காலம் தொட்டு வழங்கி வருகின்றது. ஆன்மீகம் தண்ணீரை - தீர்த்தம்  என்று மிக உயர்வாகக் கொண்டாடுகின்றது. நீரில்லாத எவ்வித ஆன்மீக வைபவமும் இல்லை. தண்ணீர் கொண்டு தெய்வங்களுக்கு திருமஞ்சனம்  செய்யப்படுகின்றது. அந்நீரே தெய்வத்தன்மை வாய்ந்த தீர்த்தமாகக் கருதப்பட்டு உட்கொள்ளப்படுகின்றது.  பஞ்சபூதங்களாகிய  ஆகாயம், தண்ணீர், நெருப்பு, காற்று, மண்  இவற்றில் தண்ணீருக்கு மட்டுமே இச்சிறப்பு உண்டு.

சென்றாடு தீர்த்தங்கள் ஆனார்தாமே என்று திருநாவுக்கரசர் சிவபெருமானையே தீர்த்தங்களின் வடிவாக குறிபிட்டுள்ளார். மாணிக்கவாசகரும், “எங்கள் பிராட்டியும் எங்கோனும் எங்கள் பிராட்டியும் போன்றியைந்த பொங்கு மடு” என்றும் ஆர்த்தப்பிறவி துயர் கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன் என்றும் பாடியுள்ளார்.

மகாபாரதக் கதையில் அருச்சுனன் பல தலங்களுக்குச் சென்று சிவபெருமானை வணங்கி வரம் பெற்ற செய்திகளை கூறும் சருக்கத்தின் பெயரே தீர்த்த யாத்திரை சருக்கம்.

ஆதி சங்கரபகவத் பாதாள் தாம் அருளிச்செய்த சிவானந்த லஹரியில் புண்ணிய தீர்த்தங்களை சிவதியானத்திற்கு ஒப்பாக வைத்துப் போற்றியுள்ளார்.

புண்ணிய தீர்த்தங்களில் நீராடுபவர்களுக்கு அன்பும், தெளிவும் தவமும் பரஞானமும், இறைவனுக்கு அடிமைத்திறமும் அவருடைய ஏவல்வழி நின்றொழுகும் பெரும்பேறும் கிட்டும்.

அருளு பொருளும் கைகூடும் அவலம் அகலும் கவலையறும்
இருளும் மடியும் மிடியும் போம் ஈறில் செல்வம் தழைத்தோங்கும்
தெருளும் திருவும் குடிகொள்ளும் சித்தி முத்தி உண்டாகும்
மருளும் பேயும் நோயும் போம்  - என்ற பாடலில் தீர்த்தப்பயன் கூறப்பட்டுள்ளது.

புண்ணிய நதிகளில் ஒரு முறை நீராடினால் ஆயிரம் கோதானம் செய்த பலன் கிட்டும் என்று கூறப்படுகின்றது. புண்ணிய தீர்த்தங்களில் சென்று நீராடுவதைப் போலவே அப்புனித தீர்த்தங்களை கண்ணாரக்கண்டு தரிசனம் செய்தாலும், அத்தீர்த்தப் புனலைக் கண்டு நீராடுவோம் என்று மற்றவர்களை விரும்பி அழைத்தாலும், கையினால் அத்தீர்த்த நீரை தொட்டு தலை மேல் தெளித்துக் கொண்டாலும், பக்தி மிக அத்தீர்த்தக் கரையில் தங்கி இருந்தாலும் அதற்கு முன் அவர்கள் செய்த கொத்தானப் பாவக்குவியல் எல்லாம் சூரியனைக் கண்ட பனி போல கெட்டொழியும், புண்ணியம் கை கூடும்.  

நாம் எந்தப் பாத்திரத்தில் தண்ணீரை வைக்கின்றோமோ, அப்பாத்திரத்தின் வடிவத்தையே அது  சார்ந்துவிடும். குடத்திலிட்டால், அக்குடத்தின் வடிவத்திலேயே தண்ணீரும் அமைந்துவிடும். பானையிலிட்டால், பானையின்  வடிவத்தை அடைந்துவிடும்.  ஆகையால் தண்ணீரைக் கொண்டு, வழிபடு வைபவங்கள் நடத்தப்படுகின்றன. தெய்வங்களை ஆவாகனம் செய்யும் குடங்களில் நாம் பிரார்த்தனை செய்யும் கடவுள் நீரின் வடிவிலே அதாவது நமது எண்ணத்தின் படியே அமைந்து விடுகின்றார். 

குடமுழுக்கு  விழாவில் கோபுர கலசங்களில் புண்ணிய நதிகளின் தீர்த்தங்களினால் அபிஷேகம் செய்கின்றனர். மன்னர்கள் திருமுடி சூட்டிக்கொள்ளும்  போதும் புனித நீரால் நீராட்டும் வழக்கம் இருந்தது. பெண்கள் பூப்பெய்தும் விழா, பூப்பு நன்னீராட்டு விழா என்று அழைக்கப்படுகின்றது. இவ்வாறு  ஒரு மனிதனின் வாழ்நாள் முழுவதும் நீரால் செய்யப்படும் பல  சடங்குகளை உருவாக்கினர் நம் முன்னோர்கள். பிறந்ததும் நீராடும் குழந்தை, வயது முதிர்ந்து இறந்த பின்னும் நீராடிய பிறகே  உடல் மண்ணுக்குள் செல்கின்றது.

தண்ணீர் குளிர்ச்சி, தன்னலம் இல்லாமை, பிறர்க்கு உதவுதல், அழுக்குகளை களைதல் ஆகியவற்றிக்கு அடையாளமாக விளங்குகின்றது. இந்நீரின் ஆதாரம் ஆறுகள்.  “ஆறு இல்லா ஊருக்கு அழகு இல்லை”. ஆறும் கோவிலும் இருந்து விட்டால் போதும் அவ்வூரின்  நலமும் மக்கள் நலமும் செழிக்கக் காரணமாகி விடுகின்றது.  நதிக்கரைகளில் நாகரீகம் உருவாகியது. பண்பாடும்  கலாச்சாரமும் வளர்ந்ததை நதிக்கரை நாகரீகம் என்கிறோம், . எனவே நதிகளை தெய்வமாக வணங்குவது பண்பாடாகியது.
நாம் எந்த புனிதத்தலத்திற்கு செல்லும் போதும் அங்குள்ள நீர்நிலையில் புனிதநீராடிய பிறகே நாம் இறைவனை வழிபடுகிறோம். தங்கத்தை  தீயில் இட்டால் எப்படி அழுக்கு நீங்கி சுத்தமாகின்றதோ அது போல புனித நதிகளில் நீராடினால் நம் மாசுகள் கரைந்து நாமும் சுத்தத்தங்கம் போல் புனிதமடைகின்றோம்.  கும்பமேளா, மஹாமகம், புஷ்கரம்,  துலா நீராடல், முடவன் முழுக்கு, ஆடிப்பதினெட்டாம் பெருக்கு  போன்ற விழாக்கள் அனைத்தும்  நீர்நிலைகளில் புனித நீராடுவதை அடிப்படையாகக் கொண்டவை தானே. அனைத்து ஆலயங்களிலும் ஒன்றுக்கு மேற்பட்ட புண்ணிய நீர்நிலைகள் உள்ளன.

இராஜஸ்தானத்தில் புஷ்கரத்தில் எம்பெருமான் தீர்த்த ரூபியாகவே எழுந்தருளியுள்ளார். இதன் கரையில்தான் பிரம்மா பெரிய வேள்வி இயற்றினார். அம்பிகை பார்வதியே  தீர்த்தமாக மானசரோவரத்தில் அமர்ந்து சிவபெருமானை பூஜிப்பதாக  புராணங்கள் போற்றுகின்றன.

வேதகால மகரிஷிகள் தங்களது ஆசிரமங்களை புனித தீர்த்தக்கரைகளில் அமைத்துக் கொண்டனர். வியாச பகவான் தமது இதிகாச இரத்தினமான மஹாபாரதத்தை சரஸ்வதி நதி உற்பத்தியாகும் மானா என்ற திருத்தலத்தில் உள்ள ஒரு குகையில் அமர்ந்துதான்  எழுதினார்.


நீராடல் உடல் தூய்மைக்காக மட்டுமல்ல புறக்கண்களுக்குப் புரிபடாத ஆன்ம தூய்மைக்காகவும் கடைபிடிக்கப்படுகிறது    எனவே நீராடுதல் என்பது மனத்தை தூய்மையாக்கும் அகச்சுத்திக்கு முதற்படியாகும்.  மாசி மகத்தன்று இறைவனே நீர்நிலைகளுக்கு எழுந்தருளி அவற்றில் நீராடி அவற்றை புனிதமாக்குகின்றார். ஆலயங்களின் பெருவிழாக்களில் நிறை நாள் இறைவன் தீர்த்தக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தம் வழங்குகின்றார் (அருள் வழங்குகிறார்) அல்லவா?  இவை அனைத்தும் புனித நீராடுதலின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.


இனி புனித தீர்த்தங்களில் நீராடும் சில முறைகளைப் பற்றி  நமது சாத்திரங்கள் என்ன சொல்கின்றது என்று காண்போமா? புனித தீர்த்தங்களில்  அனைத்து நாட்களும் நீராடலாம் என்றாலும்  குறிப்பிட்ட நாட்களில் நீராடுவது சிறப்பு  வாய்ந்தது.

கதிரின் மதியம் கலந்திருநாள் கதிர்பூரணை ஆடிப்பிறப்பு
மதிசேர் தைமாதப்பிறப்பு மற்றை மாதப்பிறப்புகளில்
விதியாம் உருக்கள் விதிபாதம் விறல் வைகாசிப் பூரணையில்\
அதிக மாசி மாதத்தில் அந்த மகத்தில் அந்நாளில்  - என்ற பாடலின் படி புண்ணிய நாட்களான  அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வெள்ளிக்கிழமை, கார்த்திகை நட்சத்திரம், சிவராத்திரி, மாசிமகம், மஹாமகம் ஆகிய நாட்கள்  புனித நீராட  மிகவும் உகந்தவை.  ஆ, கா,  மா, வை அதாவது ஆடி, கார்த்திகை, மாசி, வைகாசி ஆகிய மாதங்களின் பௌர்ணமியன்று புனித நீராடுவது மிகவும் புனிதமானது. சூரிய உதயத்திற்கு மூன்று நாழிகைக்கு முன் நீராடுவது மிகவும் உத்தமமானது. நீராடுவதற்கு முன் திதி, வாரம், முதலியவற்றையும் புனித நதிகளாக இருப்பின் அதன் பெயரையும் குறிப்பிட்டுச் சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.

நீராடும்போது பிரவாகங்களுக்கு எதிராகவும், குளங்களில் நீராடும்போது, சூரியன் இருக்கும் திசையை நோக்கியும் நின்று கொண்டு நீராட வேண்டும். நீராடிக் கரையேறும்போது இருகைகளில் நீரை நிரப்பிக் கொண்டு, என் உடலிலுள்ள அழுக்குகளை இந்நீரில் கழுவி, குற்றம் செய்திருக்கிறேன். அக்குற்றம் நீங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து இரண்டு கைகளில் உள்ள நீரையும் கரையில் விட்டு ஏறவேண்டும். உடலினை உடனே துடைத்துவிடக் கூடாது. உடலிலிருந்து  வடியும் நீரை தேவர்களும், பித்ருக்களும், ஏனைய உயிரினங்களும் பெறுவதாகச் சாத்திரம் கூறுகிறது.

பொதுவாக நீராடுதல் ஆறு வகைப்படும். நித்தியம், நைமித்திகம், காம்யம், கிரியாங்கம்,  மலாபக்ஷணம், கிரியா ஸ்நானம் என்று ஆறு வகைப்படும். தினசரி செய்ய வேண்டிய எந்தவிதக் கடமைகளையும் குளித்து விட்டே தொடங்க வேண்டும். காலைக் கடன்களில் முக்கியமான கடன் நீராடுதல். தினசரிக் கடமைகளில் ஒன்றாக இக்குளியல் வருவதால் இதை நித்தியம் என்று சொல்கிறோம். தீட்டுகளால் ஏற்படும் அசுத்தியைப் போக்கிக் கொள்ள நீராடுவதை நைமித்திகம் என்கிறோம். சில விழாக்களுக்காகப் பிரத்தியேகமாக நீராடுதல் காமியமாகும். சிராத்தம், தர்ப்பணம் போன்றவற்றிற்காக நீராடுதல் கிரியாங்கமாகும். அதாவது ஒரு கிரியைக்கு அங்கமாக இது அமைந்திருக்கிறது. உடம்பின் சுத்திக்காக நீராடுவது மலாபக்ஷணமாகும். புண்ணிய நதிகளில் நீராடுவது கிரியா ஸ்நானமாகும். 


காவிரி அன்னை 


நந்தி கட்டம் என்னும் துலா கட்டம் 


காவிரி ஸ்நான மகிமை: 
ஜென்ம ஜென்ம புண்ணியம் செய்தவர்களுக்கே காவிரியைக் காணும் பாக்கியம் கிட்டும் என்கிறது காவிரி மகாத்மியம். காண்பதற்கே அவ்வளவு புண்ணியம் வேண்டும் என்றால் நீராட எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும்! நதிகளில் உயர்ந்த காவிரியில் புஷ்கர காலத்தில் நீராடி பாவங்கள் அனைத்தையும் தொலைக்கலாம். இது 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகா புஷ்கரம். இதை ஆதி புஷ்கரம் என்று மகான்கள் சொல்வார்கள்.
ஒருமுறை கன்வ மகரிஷி என்ற முனிவரை மூன்று நங்கையர்கள் வாடிய முகத்தோடு வந்து பார்த்தார்கள். கண்மூடி இருந்த முனிவரும் மெல்ல கண் திறந்து பார்த்து, ஞானக்கண்ணால் அவர்களைப் புரிந்துகொண்டாலும் யார் நீங்கள்? ஏன் இப்படிக் கறுத்து வாடிப் போயிருக்கிறீர்கள் என்று கேட்டார்.
அப்போது தாளாத வருத்தத்தோடு ‘‘நான் கங்கை. இவர்கள் யமுனையும் சரஸ்வதியும்’’ என்று அறிமுகப்படுத்திவிட்டு இந்த மனிதர்கள் தங்கள் பாவங்களையெல்லாம் எங்களிடம் கழுவிக் கொள்வதனால் நாங்கள் இப்படிக் கருமை நிறம் கொண்டுவிட்டோம்.
இந்த நிலையை மாற்ற வழி கூறுங்கள் என்று வணங்கிக் கேட்டுக்கொள்ள, கண்களை மெல்ல மீண்டும் மூடிக்கொண்டார் கன்வ மகரிஷி. ஆழ்ந்து சிறிது தவம் செய்துவிட்டு பின் மீண்டும் கண் விழித்த மகரிஷி, நீங்கள் மூவரும் தென் பாரத தேசம் சென்று அங்கே உள்ள புண்ணிய தலமாம்  "ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது"  என்று புகழ் பெற்ற  மாயூரம் நகரில் உள்ள துலாக்கட்டத்தில் காவிரி நதியில் துலா மாதத்தில் நீராடி பாவங்களை தொலைத்து மாயூரநாதரையும், பரிமள ரங்கநாதரையும் தரிசனம் செய்து புதிய பொலிவோடு வாருங்கள் எனக் கூற அவர்களும் அவ்வாறே செய்து திரும்பியதாக புராணம் கூறுகிறது. அவ்வாறு கங்கை மாயூரம் வந்த போது உடன் வந்தவர்களே டுண்டி விநாயகர், காசி விசாலாக்ஷ்மி சமேத விஸ்வநாதர் என்பது ஐதீகம். 
புஷ்கரம் : நவக்கிரக நாயகர்களில் ஒருவரான குரு பகவான் பிரம்மனை நோக்கிக் கடும் தவம் புரிந்து குரு பகவானைத் தன்முன் வரவழைத்துவிடுகிறார். “உன் தவத்தின் நோக்கமென்ன? எதற்காகக் கடும் தவம்?” எனப் பிரம்மன் கேட்கிறார். “உங்களிடம் உள்ள புஷ்கரத்தை எனக்குத் தாருங்கள்” என்கிறார் குரு பகவான். பிரம்மனும் மகிழ்ந்து, “அதற்கென்ன, அப்படியே ஆகட்டும்” என்கிறார்.


அந்த ஒப்பந்தம் இதுதான். அதாவது குரு பகவான் சஞ்சரிக்கும் 12 ராசிகளிலும் அந்தந்த ராசிக்குரிய புனித நதிகளில் புஷ்கரம் வாசம் செய்து மக்களுக்கு அருளும். மேஷம் - கங்கை, ரிஷபம் - நர்மதை, மிதுனம் - சரஸ்வதி, கடகம் - யமுனை, சிம்மம் - கோதாவரி, கன்னி - கிருஷ்ணா, துலாம் - காவிரி, விருச்சிகம் - தாமிரபரணி, தனுசு - சிந்து, மகரம் - துங்கபத்திரா, கும்பம் - பிரம்மபுத்ரா, மீனம் – பரணீதா. எந்தெந்த ராசிகளில் குரு பகவான் இருக்கிறாரோ அந்தந்த நதிகளில் புஷ்கரம் தங்கி அருள் வழங்கப்படுகிறது.அதைக் கேட்ட புஷ்கரம் (பிரம்மன் கையிலுள்ள கமண்டல நீர்) “என்னை உங்களிடமிருந்து பிரித்துவிட வேண்டாம்” எனக் கெஞ்சியதாம். தர்மசங்கடத்துக்குள் மாட்டிக்கொண்ட பிரம்மா, குரு பகவானுக்கும் புஷ்கரத்தும் இடையில் ஓர் ஒப்பந்தம் போட்டு சமாதானம் செய்தார். இருவரும் ஒப்புக்கொண்டு புன்னகைத்தார்கள்.

மேற்படி நாட்களில் அந்தந்த நதிகளில் மக்கள் நீராடித் துன்பங்கள், பாவங்கள் அகன்று அளவிலா வளமையும் செழிப்பும் மகிழ்வும் பெற்று வாழ்வார்கள். இதுவே புஷ்கரத்தின் சிறப்பு.யாக சாலை 


 புஷ்கர முதல் நாள் தீர்த்தவாரி 

துலாகட்ட அரசமரம் காவிரி அன்னைக்கு மாலை ஆரத்தி 2 comments:

Anuradha Premkumar said...

மிக மிக அருமையான படங்களுடன்....


பல பல சிறப்பு தகவல்கள்....அனைத்தும் அருமை...

Muruganandam Subramanian said...

மிக்க நன்றி அனுராதா.