குருபூசை
ஆடி மாதம் உத்திராட நட்சத்திரத்தன்று
பட்டினத்தார் இறைவனுடன் இரண்டறக் கலந்தார். அவரது குரு பூசை, அன்றைய தினம்
திருவொற்றியூரில் அவரது திருக்கோவிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வருடம்
அவரை அவரது குருபூசையன்று தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது அப்போது எடுத்த படங்களின்
தொகுப்பே இப்பதிவு.
நந்தி மண்டபம்
இவரது இயற்பெயர் சுவேதாரண்யர்,
(திருவெண்காடர்) காவிரிப்பூம்பட்டினத்திற்கு
அருகில் உள்ள சாயாவனம் என்றழைக்கப்படும் திருசாய்க்காடு திருத்தலத்தில் திருவெண்காட்டில்
உறையும் சிவபெருமானின் அருளினால் சிவநேசர், ஞானகலை ஆகியோருக்கு மகவாக வ்ந்து சேர்ந்தார். .
தமது ஐந்தாவது வயதில் தந்தையாரை
இழந்தார். தாயார் தக்க ஆசிரியர்களைக் கொண்டு இவருக்கு கல்வி கற்பித்தார். திருமணப்
பருவம் அடைந்தபோது சிவகலை அம்மையாரை திருமணம் புரிந்தார். வெகு நாள் குழந்தைப் பேறு
இல்லாமல் இருக்க, சிவப்பெருமானை மனமுருகி வழிபட எம்பெருமானே இவரிடம் குழந்தையாக வந்து
சேர்ந்தார். அக்குழந்தைக்கு மருதவாணன் என்று பெயரிட்டு போற்றி வளர்ந்தார்.
பட்டினத்தடிகள்
இளமைப் பருவம் அடைந்த மருதவாணர் குல வழக்கப்படி அயல்நாடு
சென்று வணிகம் செய்ய விழைந்தார். திருவெண்காடரும் வேண்டியன செய்து தந்தார். மற்ற வனிகர்களூடன் புறப்பட்டு சென்றார். பொருள் ஈட்ட
சென்ற மருதவாணர் கொண்டு சென்ற பொருட்களை எல்லாம்
கோவில், மடம் முதலான அற்ச்செயல்களில் செலவழித்துவிட்டு மீதமிருந்த செல்வத்தைக் கொண்டு
எரு முட்டைகளையும் அவல் மூட்டைகளையும் வாங்கிக்கொண்டு கப்பலில் திரும்பி வரும் போது
காற்றினால் கப்பல்கள் திசை மாறின. எனவே மற்ற கப்பல்களில் இருந்த உணவுப்பொருட்கள் எல்லாம்
தீர்ந்து விட, மருதவாணர் கொணர்ந்த அவலை உண்டு
எப்படியோ புகார் திரும்பினர்.
நூதன விமானம்
மற்றவர்கள் தங்கள் பொருட்களையெல்லாம் இழந்தனர், ஆனால் மருதவாணர்
கொணர்ந்த எரு முட்டைகள் மட்டும் தப்பியது. மற்றவர்கள் திருவெண்காடரிடம் சென்று தங்கள்
மகனுக்கு சித்த பிரமை பிடித்து விட்டது என்று புகார் கூறிவிட்டு சென்றனர். அவரும் மகன்
கொணர்ந்த எருமுட்டைகளை சினத்துடன் வெளியே எறிந்தார். உடைந்த எரு முட்டைகளில் இருந்து
விலையுயர்ந்த கற்கள் சிதறின. திருவெண்காடர் மைந்தனது வணிகத்திறமை கண்டு வியந்து அவனைக்
காண ஆவலுடன் வீடு திரும்பினார்.
எங்கு தேடினும் அவனை காணாது மனம்
வருந்தினார். அச்சமயம் அவரது மனைவி ஒரு சிறு
பெட்டியை கொணார்ந்து, இப்பெட்டியை தங்களிடம் சேர்பிக்கச் சொல்லிவிட்டு நம் பிள்ளை சென்று
விட்டான் என்றார்.
வெண்காடர் அப்பெட்டியை திற‘ந்து
பார்த்தபோது அதில் ஒரு காதற்ற ஊசியும், அதனுடன்
ஒரு ஓலையும் இருந்தது.அவ்வோலையில் “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்ற வாசகம்
காணப்பட்டது.
மகனாக வந்த சிவபெருமான் வெண்காடருக்கு உணர்த்திய
உண்மை, ஒருவர் தன்து இறுதி பயணத்தின் போது எம்பெருமான் திருவடிதுணையே அன்றி அவனுடன்
தன் மனைவி, மக்கள், உற்றார், உறவினர் யாரும் உடன் வர மாட்டார்கள், மேலும் தேடித்தேடி
சேர்த்த பொன், பொருள், வீடு, மனை, எதுவும் உடன் வராது. ஏன் சிறு காதறுந்த ஊசி கூட உடன்
வாராது. அவன் செய்த புண்ணிய பாவங்களின் விளைவுகள் மட்டுமே அவனுடன் வரும். என்பதை திருவெண்காடருக்கும்
அதன் மூலம் நமக்கும் உணர்த்தினார்.
காதறுந்த ஊசி
உண்மையை உணர்ந்த பட்டினத்தார்
துறவறம் மேற்கொண்டார் தன்னுடைய செல்வத்தை எல்லாம் சிவனடியார்களுக்கு பிரித்துக் கொடுக்குமாறு
கூறிவிட்டு, அன்னைக்கு மட்டும் இறுதி கடனை செய்வதாக உறுதி மொழி தந்து ஊரை விட்டு ஒது‘ங்கி
பிச்சை கொண்டு வாழ்ந்து வந்தார். .
அதில் சிவபெருமான் தனக்கு உணர்த்திய
உண்மையை பட்டினத்தார் இவ்வாறு பாடுகின்றார்.
பிறக்கும் பொழுது கொடுவந்த(து)
இலை பிறந்துமண்மேல்
இறக்கும் பொழுது ஒடுபோவ(து)
இல்லை இடைநடுவில்
குறிக்கும் இச்செல்வஞ் சிவன்தந்த
தென்றுகொடுகறியா(து)
இறக்கும் குலாமருக்(கு) என் சொல்லுவேன்
கச்சி ஏகம்பனே
தன்னுடைய இளவல் இவ்வாறு இரந்துண்ணுவதை
அவமானமாக கருதிய பட்டினத்தாரின் தமக்கை நஞ்சு
கலந்த ஒரு அப்பத்தை உண்ணூம்படி அடிகளுக்கு
கொடுத்தார், இறையருளால் அதையறிந்த அவர் அந்த அப்பத்தை தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம்
வீட்டைச் சுடும் என்று கூறி, கூரையில் எறிய
அவ்வீடு தீப்பற்றி தீக்கிரையானது.
சிறிது காலம் சென்றது பட்டினத்தடிகளின்
தாயார் சிவபதம் அடைந்தார். இதை இறையருளால் திருவெண்காட்டில் இருந்த அடிகள் அறிந்து காவிரிபூம்பட்டினம் வந்து
தாயின் உடல் கட்டையிலும், வரட்டியாலும் மூடியிருந்ததை தாங்க முடியாமல், அவைகளை நீக்கி
பச்சை வாழை மட்டைகளில் தன் தாயின் உடலைக் கிடத்தி “ஐயிரண்டு திங்களா அங்கமெலாம் நொந்து
பெற்று” என்று பாடத்தொடங்கி அதில் “முன்னையிட்ட தீ முப்புரத்திலே, பின்னையிட்ட தீ தென்
இலங்கையிலே, அன்னையிட்ட தீ அடிவயிற்றினிலே, யானும் இட்ட தீ மூள்க மூள்கவே என்று பாடிய போது அனல் மூண்டு சிதை கொழுந்து விட்டு எறிந்தது. தன் தாய்க்கு கொடுத்த
வாக்கினை நிறைவேற்றிய பின் ஊர் ஊராக சென்று இறைவனை தொழுது பாடல்கள் பாடலானார்.
பேய்க்கரும்பு
திருவாரூர், மதுரை, கொங்கு நாடு,
துளுவநாடு கடந்து உஜ்ஜயனியை அடைந்து ஒரு விநாயகர்
ஆலயத்தில் நிஷ்டையில் அமர்ந்திருந்தார். அவ்வேளையில் அரண்மணையில் கொள்ளையடித்த திருடர்கள்
திருடிய முத்து மாலையை இவர் கழுத்தில் மாட்டி விட்டு சென்றனர். காலையில் அரச சேவகர்கள் பட்டினத்தடிகளை அரசனிடம் கொண்டு சென்று
நிறுத்தினர். அரசனும் தீர விசாரிக்காமல் அடிகளை கழுமரத்தில் ஏற்றுமாறு ஆணையிட்டான். அவரை கழுமரத்திடம் அழைத்துச்சென்ற போது அக்கழுமரத்தைப் பார்த்து “என் செயல் ஆவதினி யாதொன்றுமில்லை”
என்ற பாட்டினைப்பாட அக்கழுமரம் தீப்பற்றி எரிந்தது.
அரசனைக் கண்ட பட்டினத்தார் அவன்
ஞானவழியில் செல்ல பக்குவம் அடைந்திருப்பதும், அவன் மனைவி அவனை ஏமாற்றுவதையும் தெரிய
வரவே, அதை மன்னனுக்கு உணர்த்தினார். மன்னனும் உண்மையை அறிந்து கொண்டு துறவறம் பூண்டு பத்திரகிரியானார்.
திருவொற்றியூர் சிறப்பு
பத்திரகிரியாரை திருவிடைமருதூருக்கு போகும்படி பணித்து தாம் பல
தலங்களை வணங்கித் திருவிடைமருதூரை அடைந்தார்.
அரசியும் இறந்து மறு பிறவியில் நாயாகப் பிறந்து பாத்திரகிரியாரிடம் வந்து சேர்ந்தது.
திருவிடை மருதூரின் கீழ் கோபுர கோபுர வாசலில்
அமர்ந்து ஒரு திருவோட்டில் பிச்சை எடுத்து
பத்திரகிரியார் தாமும் உண்டு தம் மேல் கோபுர வாசலில் அமர்ந்திருந்த குருவுக்கும் உணவிட்டு
தன்னை சுற்றிவந்த நாய்க்கும் உணவிட்டு வந்தார்.
ஒரு நாள் ஒரு சித்தர் வந்து பட்டினத்தாரிடம்
பிச்சை கேட்க அவரோ சிரித்துக்கொண்டே, நானோ
சந்நியாசி, கீழ் கோபுர வாசலில் அமர்ந்திருக்கிறானே
என் சீடன் சம்சாரி ஒரு திருவோட்டையும், கூடவே
ஒரு நாயையும் கூட்டிக்கொண்டு அலைகிறான். அவனிடம் சென்று கேளுங்கள் என்றார்.
இதை சித்தர் மூலமாக அறிந்த பத்திரகிரியார் சந்நியாசியாக மாறிய எனக்கு இந்த
திருவோடும் நாயும் எதற்கு என்று திருவோட்டை தூக்கிப்போட்டு நாயின் மேல் உடைக்கிறார் அதில் நாயும் இறந்து விடுகின்றது. பத்திரகிரியாரும் சித்திரை மாதம் மக நட்சத்திரத்தில்
இறைவனுடன் இரண்டறக் கலந்தார். இவ்வற்புதத்தைக் கண்ட பட்டினத்தார் சிவச‘ந்நிதியடைந்து
“அருட்கடலே, அடியேனை இவ்வுலகில் இன்னும் இருத்தியிருப்பதின் குறிப்பு என்னவோ அறிகிலேன்”
என்று முறையிட்டார்.
இறைவனும் திருவுளம் கொண்டு காட்சி
தந்து ஒரு பேய்க்கரும்பை அளித்து எம் அன்பே! வருந்தாதே! எத்தலத்தில் பேய்க்கரும்பு
இனிக்கிறதோ அங்கே முக்தி என்று அருள் செய்தார். பட்டினத்த்தாரும் திருக்கச்சி சென்று
கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்
கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின்
அஞ்செழுத்தைச்
சொல்லாப்பிழையும் துதியாப் பிழையும்
தொழாப்பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய்
கச்சி ஏகம்பனே.
என்று பல பாடல்களினால் பாடிப்பரவி பின்னர் பல தலங்களுக்கு சென்றார் எங்கும் பேய்க்கரும்பு இனிக்கவில்லை. நிறைவாக
திருவொற்றியூர் தலத்தை அடைந்து தியாகராஜப்பெருமானையும், வடிவுடையம்மனையும் பணிந்தார்
திருவொற்றியூரில் பேய்க்கரும்பு இனித்ததால் தனக்கு முக்தி விரைவில் சித்திக்கும் என்று
உணர்ந்தார்.
பட்டினத்தடிகள் கடலோரம் சென்று
அங்கே மாடு மேய்க்கும் சிறார்களோடு கூடி விளையாடிக்கொண்டிருக்கும்
வேளையில் அதியற்புத ஆடல்கள் பல புரிந்தார்.
ஒரு நாள் அவர் ஒரு குழியிலறங்கி மறைந்தார்.
அவரைக் காணோம், எங்கு சென்றார்? என்று தேடுகையில் சுவாமிகள் ஒரு மணற்குன்றின் மேல் தோன்றினார். இங்ஙனம் அடிகள் சிறார்களுக்கு ஆடல் காட்டி ஒரு முறை குழியிலிறங்கி உட்கார்ந்து
சிறுவர்களை நோக்கி “ நண்பர்களே என் மீது ஒரு சாலைக் கவிழுங்கள் (சால் என்பது சலவைத்
தொழிலாளர்கள் பயம் படுத்தும் ஒரு பெரிய அண்டா)
என்றார், சிறுவர்களும் அவ்வாறே செய்தனர். சிறிது நேரம் கழித்து சாலைப் புரட்டிப்
பார்த்தபோது அவ்விடத்தில் அவரது திருமேனி (ஸ்தூல தேகம்) மறைந்து, லிங்க வடிவமாக
காட்சி அளித்தார். பரமனை அவர்
மாதா உடல் சலித்தாள்
வல்வினையேன்
கால்சலித்தேன்
வேதாவுங் கைசலித்து
விட்டானே – நாதா
இருப்பையூர் வாழ்சிவனே
இன்னமோர்
அன்னை
கருப்பையூர் வராமற் கா!
- என்று வேண்டியபடி இறைவனுடன் இரண்டறக் கலந்தார். தாயுமான சுவாமிகள் “பாரனைத்தும்
பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளைப் போல் – ஆருந்துறக்கையறிது” என்று பாடியபடி முற்றுந்துறந்து பரமனை எண்ணி எண்ணி
அவன் திருவடிகளில் இரண்டறக் கலந்து, பரமனின் அருவுருவ திருமேனியாகவே மாறினார்.
விமானத்தில் பட்டினத்தார்
வங்கக் கடல் அலைகள் தாலாட்ட திருவொற்றியூர்
கடற்கரையில் அவர் ஆலயம் அமைந்துள்ளது. முன்னர்
எளிமையான ஓட்டு கட்டிடமாக இருந்தது. தற்போது கற்றளியாக மாறியுள்ளது. கவின்மிகு விமானம்
ஒன்றும் அமைத்துள்ளனர். எதிரே ஒரு தியான மண்டபமும் புதிதாக அமைத்துள்ளனர். சதுர பீடத்தில்
லிங்க வடிவில் அருள் பாலிக்கின்றார். நாகாபரணம்
சார்த்தியுள்ளனர். விநாயகர் முருகன், நந்தியெம்பெருமான், சண்டிகேஸ்வரரும் உடன் அருள்கின்றனர்.
இவரை வேண்டிக்கொள்ள அறிவான குழந்தைகள்
பிறக்கும், உலக ஆசை மறியும் என்பது ஐதீகம். இவர் முக்தியடைந்தது ஆடி மாதம் பௌர்ணமியையொட்டிய
உத்திரட்டாதி நட்சத்திரம் என்பதால் ஒவ்வொரு மாத உத்திரட்டாதி நட்சத்திரத்தன்றும், வியாழக்கிழமைகளிலும்
சிறப்பு பூசைகள் நடைபெறுகின்றன.
சண்டிகேஸ்வரர் சன்னிதி
ஆடி உத்திராடத்தன்று சிறப்பு அபிஷேக
ஆராதணை சொற்பொழிவு, அன்னதானம் நடைபெறுகின்றது. மஹா சிவராத்திரி இரவில் நான்கு கால சிறப்பு
அபிஷேக ஆராதனையும் அன்னதானம் நடைபெறுகின்றது. ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகமும்,
பிரதோஷ பூஜையும் சிறப்பாக நடைபெறுகின்றது. சமயம் கிட்டும் போது திருவொற்றியூர் சென்று பட்டினத்தாரை வணங்கி வாருங்கள்.
No comments:
Post a Comment