Sunday, August 23, 2020

திருப்பாத தரிசனம் - 36

தொண்டை மண்டலத்தின் உபவிடங்கத் தலங்கள்


திருவொற்றியூர் - மாணிக்க  தியாகேசர்

கல்யாண சுந்தரர்

சோழ மண்டலத்தின் சப்தவிடங்க தலங்களைப் போல தொண்டை மண்டலத்தில் தியாகேசர் அருள் பாலிக்கும் மூன்று தலங்கள் உபவிடங்கத் தலங்கள்  என்று போற்றப்படுகின்றன இத்தலங்களின் சிறப்பை இப்பாகத்தில் காணலாம் அன்பர்களே.  

வடவேங்கடம் முதல் தென் குமரி ஆயிடை செந்தமிழ் நாட்டின்  ஓர் மண்டலம்,  பல்லவர்கள் சிறப்புடன் ஆண்ட தொண்டை மண்டலம். தொண்டை மண்டலம் சான்றோருடைத்து என்பது சான்றோர்களின் வாக்கு. இத்தொண்டை மண்டலத்தில் முப்பத்திரண்டு சிவாலயங்கள் மூவரால் பாடல் பெற்ற தலங்கள் ஆகும்.  அவற்றுள் தர்மமிகு சென்னையில் கடற்கரையோரம் அமைந்த தலங்கள் மூன்று. அவையாவன திருவான்மியூர், திருமயிலை, மற்றும் திருவொற்றியூர் ஆகும். இவற்றுள் திருவான்மியூரும், திருவொற்றியூரும் தொண்டை நாட்டின்  உபவிடங்க தலங்கள். எம்பெருமான் இருந்தாடும் அழகராக, தியாகராஜராக அருள் பாலிக்கும் தலங்கள். மற்றொரு உபவிடங்கத்தலம் திருக்கச்சூர் ஆகும். இவற்றுள் திருவொற்றியூரும், திருக்கச்சூரும் எம்பிரான் தோழர்  சுந்தரருடன் தொடர்பு கொண்டவை.

சப்த விடங்கத்தலங்களைப் போலவே இந்த உபவிடங்கத்தலங்களுக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. அவையாவன இவை மூன்றும் தேவாரப்பாடல் பெற்ற தலங்கள். பௌர்ணமியன்று தியாகராசருக்கு சிறப்பு அபிஷேகமும் நடனக்காட்சியும் சிறப்பாக நடைபெறுகின்றது.  பெருவிழாக்கள் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன. மாசி முழு நிலவை ஒட்டி திருவொற்றியூரிலும், பங்குனி முழு நிலவை ஒட்டி திருவான்மியூரிலும், சித்திரை முழுநிலவை ஒட்டி திருக்கச்சூரிலும் தியாகேசப்பெருமான், நடனக்காட்சியுடனும் உற்சவங்கள் சிறப்பாக நடைபெறுகின்றது. தியாகராஜ தலம் என்பதால், சோமாஸ்கந்தர் பஞ்சமூர்த்தியாக வலம் வருவதில்லை, சந்திரசேகரரே  பல்வேறு வாகனங்களில் காலையும் மாலையும் திருஉலா வருகின்றார். பஞ்ச மூர்த்திகளில் அம்மையும் தனியாக வலம் வருவதில்லை. தியாகராஜர் இரவு பஞ்சமூர்த்திகள் திருஉலா முடிந்தபின் அம்மையுடன்  மாட வீதி உற்சவம் கண்டருளுகிறார்.  இனி திருவொற்றியூரின் சிறப்புகளை முதலில் காணலாம் அன்பர்களே.

உலகம் தோன்றிய போது, தோன்றிய முதல் ஊர் திருவொற்றியூர்,   எனவே இத்தலத்திற்கு ஆதி புரி என்ற பெயர் உண்டு. திருவொற்றியூர் ஞான பூமி, முக்தி ஸ்தலம், சிவபெருமான் தமது இருந்தியக்கும் கூத்தை (அமர்ந்நிலையில்) பத்மதாண்டவம் என்னும் அனுக்கிரக டனத்தை நந்தியெம்பெருமானுக்கு ஆடி அருள் பாலித்த தலம்.  திருக்கயிலை நாதர் - மலையரையன் பொற்பாவை பார்வதியின் திருமணத்தின் போது வடக்கு உயர்ந்து, தெற்கு தாழ, இறைவன் பணிக்க தென் திசையை சமன் செய்ய வந்த அகத்தியருக்கு இறைவன் கல்யாண சுந்தரராக அருட்காட்சி ல்கிய தலம்.

இறைவன் தன்னை பூசித்து வந்த வாசுகி என்னும் பாம்பை தன்னுள் ஒற்றிக்கொண்டதால் “ஒற்றீசர்” என்றும் அழைக்கப்படுகிறார், எனவே இத்தலம் ஒற்றியூர் ஆனது. பிரம்மா, மஹா விஷ்ணு, ஆதி சேஷன், வாசுகி என்ற இரு நாங்கள், சந்திரன் ஆகியோருக்கு சிவசாயுஜ்ஜியப்பதவி அளித்த தலம். இராமரின் திருக்குமாரன் இலவன் பிரதோஷ காலத்தில் பூஜித்த தலம். காசிக்கு நிகராக ஸ்வர்ண பைரவர் தனிக்கோவில் கொண்டு அருள் பாலிக்கும் தலம்.

இக்கலிகாலத்தில் கருணைக் கடலான  வடிவுடையம்மன், பசியோடிருந்த வள்ளலாருக்கு அவரது  அண்ணி ரூபத்தில் வந்து அமுது படைத்தத் தலம். 27 ட்சத்திர லிங்ங்களை தன்னகத்தே கொண்ட தலம். முசுகுந்தன், ஐயடிகள் வழிபட்ட தலம்.  முற்றுந்துறந்த முனிவராகிய பட்டினத்தடிகள் இறைவன் அருள் பெற்று கடற்கரையில் சமாதி அடைந்த தலம். உதிரத்தால் விளக்கெரிக்க முயன்ற கலிய நாயனார் முக்தி பெற்ற தலம்.

எம்பிரான் தோழர் சுந்தரர் சங்கிலி நாச்சியாரை, சிவபெருமான் மகிழ மரத்தில் சாட்சியாக இருக்க மணம் புரிந்த தலம்.  ஆதி சங்கரர் 8 பாடல்கள் பாடிய தலம்.  தொண்டைமான் சக்கரவர்த்தி வழிபட்ட காளி வட்டப்பாறை அம்மனாக அருள் பாலிக்கும் தலம். அம்மனின் 51 சக்தி பீடங்களில் ஒன்றான தலம். ஓம் என்ற பிரணவத்தின் உட்கருத்தை விளக்கும் ஏக பாத திருமூர்த்திகளின் திரு வடிவம் அமையப் பெற்ற தலம். பிரளயக் கால அக்னி குண்டம் அமைந்துள்ள தலம் என பல சிறப்புகள் இத்தலத்திற்கு உண்டு.

தேவாரப் பாடல் பெற்ற 274 சிவத்தலங்களில் இது 253-து தலம் ஆகும். தொண்டை நாட்டுத்தலங்களில் 19வது தலம். சிவபுரி, பத்மபுரி, வசந்தபுரி, பிரம்மபுரி, நிந்தரபுரி, கவசபுரி, பூலோக சிவலோகம், அழியா கரம், ஔதம்பர க்ஷேத்திரம், குணாலயம் என்றெல்லாம் போற்றப்படும் தலம். நினைத்தாலே யமபயம் நீக்கும் தலம், இத்தலத்தின் எல்லையை மிதித்தாலே துன்பம் விலகும். இறந்தால் பிரம்மனுக்கும் எட்டாத சிவபதம் கிட்டும். அன்னதானம் செய்தால் இந்திரப்பதவி கிட்டும். இத்தலத்திலுள்ள கல் எல்லாம் சிவலிங்கம், நீரெல்லாம் கங்கை, உணவெல்லாம் அமிர்தம் என்று தலபுராணம் பேசுகின்றது.

பாட்டும் பாடி பரவித் திரிவார்

ஈட்டும் வினைக டீர்ப்பார் கோயில்

காட்டும் கலமுந் திமிலும் கரைக்கே

ஓட்டும் திரைவா வொற்றியூரே!

என்று சுந்தர மூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற இத்தலத்தின் தலவரலாறு. 

பிரளய காலத்தில் உலகம் அழிவுற்று மீண்டும் புதிதாக உலகம் தோன்றும், அப்போதெல்லாம் பிரம்மா தோன்றி, உயிர்களைப் படைப்பார். ஒரு பிரளய காலத்தின் போது உலகம் அழிவதை பிரம்மா விரும்பவில்லை, எனவே உலகம் அழியாமல் காக்கும்படி அத்தி வனத்தில்  சிவனை வேண்டி யாகம் டத்தினார். யாகத்தின் மத்தியில் அக்னி வடிவில் தோன்றிய சிவபெருமான் அவரது வேண்டுகோளை ஏற்றார். பின் பிரம்மாவின் வேண்டுதலுக்காக இலிங்க ரூபமாக எழுந்தருளினார். அக்னி குண்டமே கோயிலாக உருவானது.  பிரளயம் நீங்கி உலகம் தோன்றிய வேளையில் இங்கு எழுந்தருளியதால் இத்தலத்து இறைவர் ஆதிபுரீஸ்வரர் என்று பெயர் பெற்றார் என்பது ஒரு ஐதீகம்.

பிரம்மா வேண்ட சிவபிரான் தன் சக்தியால் வெப்பம் உண்டாக்கி அவ்வெப்பத்தால் பிரளய நீரை ஒற்றி எடுத்தார். வெப்பம் ஒன்று கூடி சிறு கோள வடிவமானது. அக்கோள வடிவம், மகிழ மரத்தடியில் சிவலிங்கமாகத் தோன்றியது. பிரளய நீரை ஒற்றி எடுத்தமையால் இத்தலத்திற்கு ஒற்றியூர் என்ற பெயர் என்றாயிற்று என்பது இன்னொரு ஐதீகம். வடமொழியில் ஔதம்பர க்ஷேத்திரம் என்றழைக்கப்படுகின்றது.

நாகராஜவான ஆதிசேடன் வழிபட்டதால் "படம்பக்க நாதர்" என்றும் அழைக்கப்படுகின்றார். இறைவன் தன்னுடைய பூதப்படைகளை இத்தலத்திற்கு காவலாக அமைத்ததால் பூலோக சிவலோகம் என்றும் அறியப்படுகின்றது.

உபமன்யு முனிவரிடம் சிவதீட்சை பெற்ற வாசுகி என்ற நாகம் சுயம்பு மூர்த்தியை தினந்தோறும் வழிபட்டு வந்தது, அதனால் மனம் மகிழ்ந்த ஈசன் வாசுகிக்கு அருள புற்று வடிவாகத்தோன்றி தன்னுள் ஐக்கியப்படுத்திக்கொண்டார். ஒற்றியூர் வாழ் இறைவன் பாம்பையும் மதியையும் சூடி,  அவரே பாம்பாகி; படம்பக்க நாதராகி அருள் பாலிக்கின்றார். பாம்பும், மதியும் பற்றுக்கொண்டு சிவபெருமான் முடியை அலங்கரிப்பது போல் பக்தியுடன் அவன் பாதங்களை பிடித்து தொழுதால் மக்கு ற்கதி கிடைக்கும் என்று பாடுகிறார் அப்பர் பெருமான்.

ஏட்டு வரியில் நீங்கல் என்ன எழுத்தறியும்

நாட்டமலரும் திருநுதலார் -  என்று பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் பாடியபடி இறைவன் எழுத்தறியும் பெருமாள் என்றும் அழைக்கப்படுகின்றார். ஒரு சமயம் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் அயோத்தியை ஆண்ட  சூரியகுல  மன்னனான மாந்தாதா எல்லாத் தலத்தின் படித்தரத்தையும் குறைத்து அனுப்பிய கட்டளை ஓலையில் இவ்வூர்  இறைவனே ஒருவரும் அறியாதபடி "ஒற்றியூர் நீங்கலாக மற்றையூர்க்கிக்கட்டளை" என்று  அரசனுக்கும், ஓலை நாயகத்திற்கும் தெரியாதவாறு வரி பிளந்து எழுதி அனுப்பியதால் இவர் "எழுத்தறியும் பெருமாள்".

வள்ளலார் சுவாமிகள் எழுத்தறியும் பெருமாளைப் பற்றி பாடிய ஒரு பாடல் இதோ

உண்ணாடும் வல்வினையால் ஓயாப் பிணி உழந்து

புண்ணாக நெஞ்சம் புழுங்கி நின்றேன் புண்ணியனே

கண்ணான உன்றன் கருணை எனக்களிக்க

எண்ணாயோ ஐயா எழுத்தறியும் பெருமாளே!.

ஈசர்  லிங்க ரூபமாக புற்றிலே சுயம்புவாக உருவானவர், எனவே இவர் "வன்மீக நாதர்" என்றும்  "புற்றிடம் கொண்டார்"  என்றும் அழைக்கப்படுகிறார்.  மேலும் மகாதேவ பட்டாரகர், திருவொற்றியூர் மகாதேவர், ஒற்றியூர் ஆழ்வார், திருவொற்றியூருடைய  நாயனார், ஆதிபுரீஸ்வரர், எழுத்தறியும் பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். திருவொற்றியூரிலே எம்பெருமான் "மாணிக்க தியாகராகவும்" எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். ஐயனின் சபை ஔதம்பர சபையாகும்.  தியாகேசரின் மற்ற திருநாமங்கள் காரணி விடங்கர், இளமை தந்த நாயனார், கொழுந்தீஸ்வரர். ஐயனின் நின்றாடும் கூத்தை கண்டு மகிழ்ந்த நந்தியெம்பெருமான், இறைவனின் இருந்தாடும் அழகைக் காண விழைந்தார். இறைவனும் “பாலாறு பாயும் தொண்டை நாட்டில் நான் சுயம்புவாக தோன்றிய திருவொற்றியூரில் சென்று தவம் செய்தால் ஆசை நிறைவேறும் என்றார்.  நந்தியும் ஒற்றியூர் வந்து நந்தி தீர்த்தம் உண்டாக்கி தவம் புரிந்து ஐயனின் பத்மதாண்டவத்தை தரிசிக்கும் பேறு பெற்றார்.

நாள் தோறும் சிவபெருமானின் நடனம் கண்ட திருமால் ஒரு நாள் அந்நடனக்காட்சி மனதில் தோன்றாது வருந்தி நிற்க  மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று திருவொற்றியூர் வந்தால் எமது பத்மதாண்டவ  நடனக்காட்சி கிடைக்கும் என்ற ஒலி கேட்டு திருவொற்றியூர் வந்து தவம் செய்து ஐயனின் நடனத்தை திருமகளுடன் கண்டு களித்தார்.

ஒரு சமயம் காசி மன்னன் இறைவனின் திருநடனம் காண ஆவலுடன் ஒற்றியூர் வந்தான். அவன் வருவதற்கு முன்பே நடனம் முடிந்து விட, மனம் வருந்திய மன்னனை அமைதியுறச் செய்து மீண்டும் அவனின் அன்பு உள்ளத்திற்காக திருநடனம் காட்டியருளினார். தான் இருக்கும் இடத்தில் கங்கையும் இருக்க வேண்டும் என்று மன்னன் வேண்ட இறைவனும் அவ்வாறே அருள் செய்தார். இத்தீர்த்தத்திற்கு காசி தீர்த்தம் என்று பெயர்.


திருவொற்றியூர் மாணிக்க தியாகர்

இறைவர் தீண்டாத் திருமேனியர். நான்கு யுகங்களுக்கும் முற்பட்ட இத்தலத்தின் மூலவரை தொட்டு பூசை செய்ய முப்பத்து முக்கோடி தேவர்களும் பேரவா கொள்கின்றனர். இறைவன் தான் சுயம்புத்திருமேனி என்பதால் தன்னை பூஜிக்க யாருக்கும் உரிமை இல்லை என்று மறுத்து விடுகிறார். ஆயினும் பிரம்மா, மஹா விஷ்ணு, வாசுகி என்கிற நாகம்  இம்மூவரும் இறைவனை  பூஜிக்க கடும் தவம் செய்கின்றனர். இறைவன் கருணைக் கடல் அல்லவா! எனவே அம்மூவர் மட்டும் கார்த்திகை பௌர்ணமி தொடங்கி  மூன்று நாட்கள் பூஜிக்க அனுமதி அளித்தார் என்பது ஐதீகம்.

எனவே ஆதிபுரீஸ்வரருக்கு  நித்ய அபிஷேகம் கிடையாது, எப்போதும் சுவாமிக்குங்கக்கவசம் பூட்டப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் பௌர்ணமியன்று கவசம் கலையப்பட்டு சுவாமிக்கு புனுகு, ஜவ்வாது பூசப்பட்டு சாம்பிராணி தைலத்தினால் மூன்று நாட்களுக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது, இந்நாட்களில் மட்டுமே சுவாமியை  கவசம் இல்லாமல்  அப்படியே புற்றாகவே முழுமையாக கண்டு தரிசிக்க இயலும்.

சுவாமி மீது சார்த்தி எடுத்துக் கொடுக்கப்படும் தைலம் மிகவும் சிறப்பானது. அதை பூஜை அறையில் வைக்க வேண்டும். குழந்தைகளின் கண் திருஷ்டி, பில்லி, சூனியம், ஏவல், வைப்பு, போன்ற அனைத்தையும் நீக்கும் அற்புத மருந்து அது. இச்சாந்தை நெற்றியில் அணிய சகல தோஷங்களும் அகலும். 

ஆதிசங்கரர் ஒரு சமயம் ஆதிபுரீசரை வணங்க ஒற்றியூர் வந்தார். அருகே கொற்றவை தெய்வமான வட்டப்பாறை அம்மனைக் கண்டார். தனயனைக் கண்ட தாயாருக்கு மகனுடன் சற்று விளையாட ஆவல். சன்னதியின் எதிரில் உள்ள கிணற்றின் மேல் பாயை விரித்து அதில் அமர்ந்து சொக்கட்டான் ஆட விரும்பினாள். அச்சமயம் கவுளி சொல்லியது. சாத்திரங்களுக்கு விளக்கம் கண்ட ஆதிசங்கரர், அக்கவுளியின் அருகில் சென்றார், என்ன அதிசயம்! ஆதிப்புரீசர் கௌலீசராக வந்து சங்கரருக்கு உபதேசம் அளித்தார். அதனை அருகே இருந்து திருமால்  செவி மடுத்தார்.

படம்பக்கநாதருக்கு தெற்குப்புறத்தில் கௌலீசர் சன்னதியும், அதில் தட்சிணா மூர்த்தி ரூபத்தில் ஆதிசங்கரருக்கு உபதேச காட்சியும் பின்புறமுள்ள திருமாலின்  இடது திருவடியில் மது வலது காதை வைத்து கேட்டால் அலை ஓசை கேட்கும் என்பது ஐதீகம். காபாலிகர் வழிபட்டவர் கௌலீஸ்வரர் என்பது சிலரது கூற்று.  சொக்கட்டானை இறைவன் திருவுள்ளப்படி ஆதிசங்கரர் கிணற்றில் தவற விட்டார். சொக்கட்டனை எடுக்க வட்டப்பாறையம்மன் கிணற்றில் இறங்க, சிவனாரின் உபதேசப்படி கிணற்றை மந்திர சாசனத்தால் மூடி  அம்மனின் உக்கிரத்தை ஆதி சங்கரர் குறைத்தார்.

ஆதிசேஷன் மகனான தொண்டைமான் சக்கரவர்த்தி காஞ்சியை தலை கராகக் கொண்டு ஆண்டு வந்தான். அச்சமயம் உரோமச முனிவர் பேரும் புகழுடன் விளங்கினார். குறும்பர்களோடு போரிட்டு செல்வம் இழந்து நின்ற தொண்டைமானுக்கு உரோமச முனிவர் தன் கையிலுள்ள தர்ப்பைப்புல்லை ஆதிபுரீசராக நினைத்து போரிடு என்றார். தொண்டைமானும் அவ்வண்ணமே செய்ய குறும்பர்கள் தோற்று ஓடினர். இறைவனுக்கு ன்றி கூறும் விதமாக தொண்டைமான் இக்கோவிலை கற்றளியாக மாற்றினான் என்று செவிவழி புராணம் கூறுகின்றது.  முதலாம் குலோத்துங்கன்  திருக்கோவில் முழுவதும் திருப்பணி செய்துள்ளான். இரண்டாம் குலோத்துங்கன் வட்டப்பாறை அம்மன் திருமதில், மண்டபம் கோபுரம் அமைத்தான்.

இத்திருவொற்றியூர் திருத்தலத்தில் எல்லாம் இரண்டு என்று இயம்பும் வண்ணம் மூலவர் ஆதிபுரீஸ்வரர், ஒற்றீஸ்வரர், என இரண்டு, அம்பாள் வடிவுடையாம்பிகை, வட்டபாறையம்மன் என இரண்டு, அத்தி, மகிம் என இரண்டு தல விருட்சம்  இரண்டு, பிரம்ம தீர்த்தம், அத்தி தீர்த்தம் என இரண்டு,  காரணம்,  காமீகம் என இரண்டு ஆகம  பூஜைகள், இறைவன் மற்றும் இறைவிக்கு தனி கொடி மரங்கள்  என,  இத்தலத்தில் இரண்டு என் எண்ணிக்கை பிரதானம் பெற்றிருக்கிறது.

அரசனுக்கு அளிக்கும் பொருட்டு, தம்மிடம் நிறைந்த அன்புடைய ஏலேல சிங்கனுக்கு மாணிக்கங்களை அருளியதால் ஐயனுக்கு மாணிக்க தியாகர் என்னும் திருநாமம். எல்லா தியாக விடங்க தலங்களைப் போலவே இங்கும் மாணிக்க தியாகருக்கு மூலவரின் வலப்பக்கத்திலே தனி சன்னதி அமைந்துள்ளது.  நாரதர், தும்புரு, தேவர்கள் ஆகியோரின் கலை நயம் மிகுந்த சிற்பங்களுடன் அமைந்த முன் மண்டபத்துடன் அமைந்துள்ளது இவரது தனிக் கோவில். தியாகர் என்றாலே நடனம் தானே இங்கு எம்பெருமான் ஆடும் நடனம் "பத்ம தாண்டவம்"  ஆகும். இத்தலத்தில் எம் ஐயன் ஆருத்ரா தரிசனத்தின் போதும், மாசி பிரம்மோற்சவத்தின் போதும் " பதினெட்டு வகை நடன திருக்காட்சி" தந்து அருளுகின்றார். வைகாசி மாத வசந்தோற்சவத்தின் போது ஒன்பது வகை நடனக்காட்சி அருளுகின்றார்.

... தத்தமி தாள மொடு மருமலர் தியாகர் மகிழ் தரணி புகழ் ஒற்றியூர் வாழ்

தங்க மலர் நாதர் சடை கங்கை உருவான கொடி திங்கள் ஒளிவான வடிவே!

என்று தியாகரும் எம் அம்மை வடிவுடை நாயகியும் ஆடி வரும் நடனத்தை காண கண் கோடி வேண்டும்.

தியாகேசர் தரிசனம் தொடரும் . . . . .

Friday, August 21, 2020

ஆங்கில திருக்கயிலாய யாத்திரை புத்தகம்

                                                                  திருசிற்றம்பலம் 


அடியேன் திருக்கயிலை பற்றிய நூலை முதலில் தமிழில் வரைந்தேன். பிரேமா பிரசுரத்தினர், அதை வெளியிட்டார்கள். இது வரை மூன்று பதிப்புக்கள் வந்துள்ளன. பல அன்பர்கள் அந்நூலை வாசித்து பலன் பெற்றுள்ளனர். 

அப்போதிலிருந்தே அப்புத்தகத்தை ஆங்கிலத்திலும் வெளியிடவேண்டும் என்ற எண்ணத்தை மலையரசன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதர் அடியேனது உள்ளத்தில் ஏற்படுத்தினார். ஆயினும் பல வருடங்கள் கழித்து இப்போதுதான் திருவருள் கூடி வந்துள்ளது. 

தமிழ் படிக்க முடியாத ஆங்கிலம் படிக்கக்கூடிய அன்பர்களுக்கு இந்நூல் திருக்கயிலாய யாத்திரை பற்றி அறிந்து கொள்ள இந்நூல் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்நூலை சிவசக்தியின் திருப்பாதத்தில் சமர்ப்பிக்கின்றேன். 

தற்போது அடியேன் இந்நூலை அமேசானின் Kindle Direct Publishing (Kdp) மூலமாக பதிவிட்டிருக்கின்றேன்.

என்ற சுட்டியை பயன்படுத்தி தாங்கள் புத்தகத்தை வாங்க முடியும். அமேசானில் புத்தகங்களுக்கு கட்டணம் செலுத்தவேண்டும்.  எனவே புத்தகம்  வேண்டும் அன்பர்கள் அடியேனுக்கு மின்னஞ்சல் செய்தால் அவர்களுக்கு இலவசமாக அனுப்பி வைக்கின்றேன்.  அடியேனது மின்னஞ்சல் முகவரி  muruganandams@rediffmail.com 

நூலில் பல அரிய புகைப்படங்களுடன் இந்திய வழி மற்றும் நேபாள வழி அனுபவங்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. நூலை படித்தபின் தாங்களே திருக்கயிலை சென்று சிவபெருமானை தரிசித்து வந்த அனுபவத்தைப் பெற இந்நூலை படியுங்கள். தாங்கள் படிப்பதோடு மட்டும் அல்லாமல் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் இச்செய்தியை கூறுவங்கள். யான் பெற்ற இன்பத்தை அனைவரும் பெறட்டும்.

கண்ணார் அமுதனே போற்றி!                               கயிலை மலையானே போற்றி!