Monday, November 28, 2011

அண்ணாமலையானுக்கு அரோகரா



ஓம் நமசிவாய


திருவண்ணாமலை
ஐந்தாம் திருநாள் அன்று விநாயகர் தங்க கவசத்தில்
வெள்ளி மூஷிக வாகன புறப்பாடு
பிரமன்அரி என்று இருவரும் தம் பேதமையால்
பரம் யாம் பரமம் என்றவர்கள் பதைப்பு ஒடுங்க
அரனார் அழல் உருவாய் அங்கே அளவிறந்து
பரமாகி நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ
என்று திருவாசகத்தில் மணி வாசக சுவாமிகள் பாடியபடி திருமாலுக்கும் பிரம்மனுக்கும் தான் என்னும் அகந்தையை நீக்கிட அடி முடி காணாமல் ஜோதிப்பிழம்பாய் எம்பெருமான் நின்ற ஸ்தலம் திருவண்ணாமலை, நாளோ மஹா சிவராத்திரி, ஆயினும் பிரம்மனுக்கும், மாலுக்கும் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் அவர்கள் வேண்டிக் கொண்டதற்கிணங்கி கார்த்திகைக்கு கார்த்திகை நாள் ஒரு சோதி மலை நுனியில் காட்டா நிற்போம் என்று அருளிய படி கார்த்திகை மாதம் கார்த்திகை நாளன்று திருவண்ணாமலை உச்சியில் தீப தரிசன காட்சி தருவதாக ஐதீகம்.

இவ்விழாவே திருவண்ணாமலையில் கார்த்திகை தீப பெருவிழாவாக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இந்த வருடம் 08-12-2011 அன்று கார்த்திகைதீபம். இன்று அருணாசல நாயகர் உற்சவாரம்பம் எனவே இன்றிலிருந்து திருவண்ணாமலை தலத்தைப் பற்றிய இந்தத் தொடர் ஆரம்பம்.

நினைக்க முக்தி தரும் மலை திருவண்ணாமலை,
ஞான தபோவனர்களை தன்னிடத்தே வாவென்று அழைக்கும் மலை அண்ணாமலை,
யாகமும் தானமும் செய்யின் அளவற்ற நன்மை அளிக்கும் மலை அண்ணாமலை.
லிங்க சொரூபமாக பிரகாசித்துக் கொண்டிருக்கும் மலை அண்ணாமலை.
அஷ்டதிக்குப் பாலகர்கள் வணங்கும் மலை திருவண்ணாமலை.
அன்னை உமாதேவியார் தவமியற்றி எம்பெருமானுடைய இடப்பாகம் பெற்ற மலை திருவண்ணாமலை.
அடி முடி காணாமல் தவித்த திருமாலுக்கும், பிரம்மனுக்கும் சிவபெருமான் ஜோதியாய் காட்சி தந்த மலை அண்ணாமலை.
அர்த்தநாரீஸ்வரராய் அருள் பாலிக்கும் மலை திருவண்ணாமலை.
இவ்வளவு பெருமைகளை கொண்ட உண்ணாமுலை உமையாளுடன் உடனாகிய, பெண்ணாகிய பெருமான் எழுந்தருளி அருள் பாலிக்கும் திருவண்ணாமலையின் அற்புதத்தை வார்த்தைகளால் வர்ணிக்க அந்த ஆயிரம் நாவு கொண்ட ஆதி ஷேசனுக்கே கடினம் வாருங்கள் இத்தலத்தைப் பற்றி பார்ப்போம்.

முதலாவது லிங்க சொரூபமாக பிரகாசித்துக் கொண்டிருக்கும் மலை, ஆன்மீக எழில் மிகுந்த திருவண்ணாமலை. திருமாலும் பிரம்மனும் வியக்கும் வண்ணம் ஜோதிப் பிழம்பாக, லிங்கோத்பவராக எம்பெருமான் தோன்றி அவரே திருவண்ணாமலையாக நிவந்து தோன்றினார். அண்ணாமலையே சிவன், சிவனே அண்ணாமலை, இறைவன் ஒளிவடிவானவன் என்பதை மெய்பித்த திருத்தலமே திருவண்ணாமலை.

திருவாரூரிலே பிறக்க வேண்டும், காசியிலே இறக்க வேண்டும், தில்லையிலே தரிசனம் செய்ய வேண்டும் ஆனால் அண்ணாமலை என்று நினைக்க முக்தி தரும் தலம் திருவண்ணாமலை எனவே இது முக்தி ஸ்தலம். நிலம் , நீர், காற்று, நெருப்பு, , ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களால் ஆனது இவ்வுலகம் என பதிற்றுப்பத்து பகரும். இயற்கையாகிய பஞ்ச பூதங்களைளையே ஆதி காலத்தில் வழிபட்டு வந்தார்கள் தமிழர்கள். பிற்காலத்தில் பஞ்ச பூத ஸ்தலங்கள் மலர்ந்தன. திருவானைக்காவு தலத்தில் அன்னை அகிலாண்டேஸ்வரி ஸ்தாபித்த அப்பு (நீர் )லிங்கமும், சிதம்பரத்தில் ஆகாச லிங்கமும், திருவண்ணாமலையில் அக்னி லிங்கமும், காஞ்சிபுரத்தில் கம்பா நதிக்கரையில், 32 அறம் வளர்த்த அம்மை காமாட்சி ஸ்தாபித்த மணல் லிங்கமும், காளத்தியில் பாம்பு, யானை, சிலந்தி வழிபட்டு முக்தியடைந்த பஞ்ச முக சிவன் வாயு லிங்கமாகவும் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் தொடர்ந்தன. பஞ்சபூத தலங்களுள் நடு நாயகமாகிய அக்னிஸ்தலம் திருவருள் புரியும் திருவண்ணாமலை என்வே இத்தலம் பஞ்ச பூத ஸ்தலம், தேயு ஸ்தலம், அக்னி ஸ்தலம் என்றும் அழைப்பர்.
உண்ணாமுலை உமையாள் உடனாகிய
அண்ணாமலையார்

அக்னி முதன் முதலில் தோன்றிய தலம். சூரியன், சந்திரன், பிரதத்தராஜன், அஷ்ட வசுக்கள், பிரம்மன், திருமால் ஆகியோர் வழிபட்ட தலம். வித்தியாதரர்களாகிய இருவர் ஒரு ரிஷியின் சாபத்தினால் பூணையாகவும், குதிரையாகவும் இருந்த நிலை இத்தலத்தை வலம் வந்த பின் மாறியது. முருகன் தாருகனை வதஞ்செய்த பின் வணங்கிச் சென்ற தலங்களுள் இதுவும் ஒன்று.

கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும். திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், இந்த கலி யுகத்தில் கல் மலையாகவும் மாறியது என்பதை புராணங்கள் மூலம் அறிகிறோம்.

ஆதார தலங்களுள் மணி பூரக ஸ்தலம். அதாவது இந்த பூமி என்னும் விராட புருஷனின் நாபி சக்கரம் இந்த முக்தி அருளும் திருவண்ணாமலை மற்ற ஆதாரத்தலங்கள்
திருவாரூர்- மூலாதாரம். குதம்,
திருவானைக்கா - சுவாதிஷ்டானம், குய்யம்,
சிதம்பரம் - அனாகதம் , இதயம்,
திருக்காளத்தி - விசுத்தி, கழுத்து,
காசி -ஆக்ஞை, நெற்றிப் பொட்டு,
தலைக்கு மேல் சகஸ்ராரம்- சிவ சக்தி ஐக்யம் , பிரம்மாந்திரம் திருக்கயிலை.
மற்ற மலைகள் எல்லாம் வீடு கட்ட மரம், கல் தரும் ஆனால் அண்ணாமலையோ வீடுப் பேற்றையே தரும் என்று சிவப்பிரகாசர் போற்றிய தலம். அன்பின் மலை, தெய்வ அருளின் மலை, இன்ப மலை, இகபர சுகம் அருளும் மலை. மகிஷாசுரனை கொன்ற பாவம் தீர அம்மை இத்தலம் வந்து கடக தீர்த்தத்தில் மூழ்கி தீபமிட்டதாக ஐதீகம். ஏழு பிறப்பையும் மாற்றும் மலை திருவண்ணாமலை. கவலை தீர்க்கும் மலை அருணாசல மலை.
உண்ணாமுலையம்மன்
அருணகிரிநாதரை முருகப்பெருமான் வல்லாள கோபுரம் அருகே தோன்றி தடுத்தாட்கொண்ட தலம். அருணகிரி நாதருக்கும் இரண்டாம் பிரபுகூட தேவராய அரசனுக்கும் அழகன் முருகர் கம்பத்து இளையனாராக தூணில் காட்சி தந்த தலம். திருப்புகழின் முதல் பாடல் பாடப்பெற்ற தலம். தமக்கு வாரிசு இல்லாததை நினைத்து வருந்திய ல்லாள மஹாராஜனுக்கு எம்பெருமானே மகனாக வந்து இன்றும் மாசி மகத்தன்று ஈமக்கிரியை செய்யும் தலம். சூரியன், சந்திரன், அஷ்ட வசுக்கள் வழிபட்ட தலம். இப்பகுதியை கைப்பற்றிய ஆந்திர அரசனின் கனவில் தோன்றி அவனை விரட்டி அவனது யானைகளை திறையாகக் கொண்ட யானைத்திறை விநாயகர் உள்ள தலம். தீமிதித் திருவிழா நடைபெறும் ஒரே சிவத்தலம்.

தேவார பாடல் பெற்ற நடு நாட்டுத்தலங்களுள் 22வது தலம் திருவண்ணாமலை. தேவாரம் பாடிய மூவரும் , திருவாசகம் பாடிய மாணிக்கவாசகரும் பாடிப் பரவிய தலம். உண்ணாமுலை அம்மையால் ஞானப்பால் ஊட்டப் பெற்ற திருஞான சம்பந்தப் பெருமான்
உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான் மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே!
என்று பாடிய படி தொழுவோரின் வினைகளை எல்லாம் அறுத்து முக்தி வழங்கும் தலம் திருவண்ணாமலை. திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்ற திருவாசக பாடிய மாணிக்க வாசகர் அண்ணாமலையார் அடிக்கமலம் பற்றி திருவெம்பாவை என்னும் மார்கழி மாத பாவை நோன்பிற்காக பாடிய பதிகங்கள் அனைத்தும் பக்தித் தேன் மலர்கள் இத்தலத்தில் தான் இயற்றப்பட்டன.
அருணாசலேஸ்வரர்
தென் கயிலாயம் என்றும் அழைக்கப்படும் இந்த தலம் இகபர சுகங்களை அருளும் தலம், துறவிகள். ஞானிகள், ஞானதபோவனர்களை வா என்று அழைக்கும் மலை. ஆம் சித்தர்களின் சரணாலயம் திருவண்ணாமலை. இடைக்காடர், அருணகிரி நாதர், விருபாஷ தேவர், குகை நமசிவாயர், குரு நமசிவாயர், தெய்வ சிகாமணி, அருணாசல தேசிகர், பகவான் இரமண மகரிஷி, மஹான் சேஷாத்திரி சுவாமிகள், யோகி இராம் சூரத் குமார் முதலியோரை தனது ஜோதியில் இனைத்துக் கொண்ட மகத்துவம் உள்ளது திருவண்ணாமலை. அமைதி தேடி இந்த தவ மலைக்கு வந்த இரமண மகரிஷி இவ்வாறு கூறினார், ஒன்றும் அறியாப்பருவத்திலேயே எனக்குள் அருணாச்சலம் ஒளிவிட்டது என்று. அண்ணாமலையாரை உள்ளன்போடு வழிபட்டவர்களின் மனத்துயர் நீங்கும், கேட்ட வரம் கிடைக்கும், கல்யாண வரம், குழந்தை வரம், வியாபாரத்தில் விருத்தி, உத்தியோக உயர்வு, வேலை வாய்ப்பு, உடல் நோய் தீரும், பிரிந்து வாழும் கணவன் மனைவி, அண்ணன் தம்பிகள் சேருவர் என்று நம் எல்லா கவலைகளையும் மாற்றுகின்றார் அண்ணாமலையார்.

அண்ணா என்றால் ஆணவம் உள்ளார்களுக்கு எட்டாதவன் என்று பொருள் இதையே அப்பர் பெருமான் தமது திருவண்ணாமலை பதிகத்தின் ஒரு பாடலில் இவ்வாறு பாடுகின்றார்.
பாலுநெய் முதலா மிக்க பசுவிலைந் தாடு வானே
மாலுநான் முகனுங் கூடிக் காண்கிலா வகையு ணின்றாய்
ஆலுநீர் கொண்டல் பூக மணியணா மலை யுளானே
வாலுடை விடையா யுன்றன் மலரடி மறப்பி லேனே.
பசுவின் பஞ்சகவ்வியத்தில் நீராடுபவனே! திருமாலும் பிரம்மனும் ஒன்று சேர்ந்து முயன்றும் காணா இயலாத வகையில் ஜோதி ஸ்தம்பமாய் நின்றவனே! நீரை ஏந்திய மேகங்கள் வரையில் அசைகின்ற உச்சியை உடைய பாக்கு மரங்கள் அழகு செய்யும் அண்ணா மலையில் விளங்கும் எம் ஆதியே! வெண்மையையுடைய காளை வாகனனே! உன்னுடைய திருமலர்ப் பாதங்களை அடியேன் மறவேன்.

நந்திகேஸ்வரர் மார்க்கண்டேயருக்கு இந்த தலத்தின் சிறப்பைப் பற்றி இவ்வாறு கூறுகின்றார். மற்ற தலங்கள் அனைத்தும் உடல் என்றால் திருவருனை முகம், சிவபெருமான் கண்கள், இந்திர தீர்த்தத்தில் நீராடி, வலம் வந்து தானம் செய்து அருணாசலரை வணங்கி, தீப தரிசனம் கண்டால் எல்லா செல்வங்களையும் பெற்று இன்புற்று வாழ்வதுடன் முக்தியையும் அடைவர் என்று கூறுகிறார்.

ரிக் வேதத்தில் இத்தலத்தின் சிறப்புப் பற்றி கூறப்பட்டுள்ளன, கேனோபநிஷத், திருமந்திரம், தேவாரம், திருப்புகழ், கந்த புராணம் ஆகியவற்றில் அண்ணாமலையைப்பற்றிய குறிப்புகள் உள்ளன. திருவருணை அந்தாதி. திருவண்ணாமலை கலம்பகம், அண்ணாமலை வெண்பா, சோணாசல மாலை, உண்ணாமலை அம்மன் பதிகம், உண்ணாமுலை அம்மன் சதகம் உட்பட 50க்கு மேற்பட்ட நூலகள் திருவண்ணாமலையின் சிறப்பை இயம்பும் நூல்கள். நக்கீரர், பரணர், கபிலர், பட்டினத்தடிகள் ஆகியோர் இத்தலத்தைப் பற்றிய பாடல்கள் பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தில கார்த்திகை தீபத்தைப் பற்றி கூறப்பட்டுள்ளது. சீவக சிந்தாமணி, கார் நாற்பது களவழி நாற்பது முதலிய சங்க கால நூல்களிலும் திருவண்ணாமலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
வரம்பலிக்கும் மெய்ஞான வாழ்வே பலிக்கும்
திரம் பலிக்கும் செல்வம் பலிக்கும் - உரம் பலிக்கும்
சோணாசலனைச் சுவாமிதனை உள்ளத்தே
காணார் கருத்தென்ன கருத்து என்று குகை நமசிவாயார் இத்தலத்தை பாடுகின்றார்.

அண்ணாமலை புராணம் தொடரும்..........

2 comments:

jeyananth said...

super sir . . . Niraiya therinthu kondom

S.Muruganandam said...

Welcome jeyananth. Come and visit other posts on this thread also.