இனி எவ்விதம் இந்த சார்தாம் யாத்திரை செய்யும் ஆசை வந்தது என்பதை சுருக்கமாக தங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன். அம்பாளையோ, சுவாமியையோ வர்ணிக்கும் பொது பாதாதி கேசம் மற்றும், கேசாதி பாதம் என்று இரண்டு முறை உண்டு. அது போலவே யாத்திரையும் அருகில் உள்ள கோவில்களை முடித்து யாத்திரையின் சிகரமான திருக்கயிலாயம் செல்வது அநேகமாக அனைவரும் செய்வது. ஆனால் அடியேனுக்கு அவர் அருளியது கேசாதி பாதம் முதலில் யாத்திரைகளின் சிகரமான திருக்கயிலை மலையில் தரிசனம். அடியேன் மேற்கொண்ட கடினமான முதல் யாத்திரை அது. அப்போது அந்கு வந்தவர்கள் கூறியதிலிருந்து பன்னிரு ஜோதிலிங்க ஸ்தல யாத்திரை, இந்த சார்தாம் யாத்திரை, மற்றும் பஞ்சகேதார் யாத்திரை, பஞ்ச கைலாய யாத்திரை, சதோபந்த் - ஸ்வராகோரணி என்னும் பல்வித யாத்திரைகள் சென்று வந்தவர்கள் அவர்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது முடிந்தால் சார்தாம் யாத்திரையை மேற்கொள்வோம் என்ற எண்ணம் மனதில் தோன்றியது. மூன்று வருடங்கள் கழித்து அந்த வாய்ப்பு ஏற்பட்டது. முன்பே கூறியது போல முதல் வருடம் எதிர்பாராத மழை அதனால் ஏற்பட்ட நிலச்சரிவு முதலியவற்றால் யமுனோத்ரி, கங்கோத்ரி, மற்றும் பத்ரிநாத் மூன்று தாம்களை மற்றுமே தரிசனம் செய்யும் வாய்ப்புக்கிட்டியது. எப்படியும் சார் தாம் யாத்திரையை முடித்து விடவேண்டுமென்று சங்கல்பம் செய்து கொண்டு இறைவனை அவனது தரிசனம் செய்ய வேண்டி இந்த வருடம் அக்டோபர் மாதம் பயணம் செய்து கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் யாத்திரையை முடித்தோம்.
தேவேந்திரன், மோகன்,வைத்திலிங்கம்
மனோகரன்,கோபால், தேவராஜ்
முன்னரே கூறியது போல மூன்று வருடங்கள் ஒடி விட்டன அடியேன் திருக்கயிலாய யாத்திரையின் போது மனதில் சங்கல்பித்துக் கொண்டது நிறைவேறுவதற்கு. என்னுடன் திருக்கயிலாய யாத்திரைக்கு உதன் வந்த திரு. தனுஷ்கோடியுடன் சேர்ந்து இந்த யாத்திரைக்கு திட்டமிட்டேன். அவருடைய நண்பர்கள் மேலும் 13 நபர்கள் உடன் வருவதாக கூறினார். சென்னை வாலாஜா சாலையில் உள்ள தமிழக சுற்றுலாத்துறையின் அலுவலக வளாகத்தில் உள்ள GMVN அலுவலகத்தில் சென்று 12 நாட்கள் செல்லும், யமுனோத்திரி, கங்கோத்ரி, கௌமுக் (கங்கையின் பிறப்பிடம்), கேதார்நாத், பத்ரிநாத் சுற்றுலாவிற்காக பணம் கட்டினோம். அந்த அலுவலகத்தின் முகவரி PRO, GMVN, Tamilnadu Tourism Complex, Wallahjah Road, Chennai -02, Tel-044-25363524. ரிஷிகேஷிலிருந்து ரிஷிகேஷ் வரை வண்டி, தங்குமிடம் அவர்கள் பொறுப்பு. உணவு நம்முடையது. பணம் கட்டி பயணத்தை உறுதி செய்து கொண்டோம். எங்களின் குழு பெரியது என்பதால் Dormitary எனப்படும் தங்குமிடங்களுக்கு பணம் கட்டினோம். வேண்டுபவர்கள் இரண்டு நபர்கள் தங்கும் அறைக்கும் பதிவு செய்து கொள்ளலாம் கட்டணம் சிறிது அதிகமாகும். திரு.தனுஷ்கோடி அவர்கள் Spicejet விமானத்தில் அனைவருக்கும் டெல்லி செல்வதற்கும் திரும்பி வருவதற்கும் விமான டிக்கெட் முன்பதிவு செய்தார். இறைவனின் எண்ணம் என்று அறியாமல் இனி ஒரு தடவை ஏன் செல்ல வேண்டும், ஒரே தடவையில் கோமுக்கையும் பார்த்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டு யாத்திரைக்கு கிளம்பும் நாளுக்காக காத்திருந்தோம்.
சொக்கலிங்கம், இரவி,தனுஷ்கோடி
அந்த (05-09-10) நாளும் வந்தது காலை 7.20க்கு விமானம் என்பதால் அடியேன், திரு.இரவி மற்றும் மனோகரன் ஆகிய மூன்று பேரும் விமான நிலையத்தை அடைந்தோம். சிறிது நேரத்தில் அனைவரும் வந்து சேர்ந்தனர். ஒருவரால் மட்டும் வரமுடியவில்லை. விமானம் கிளம்பிவிட்டது, இப்போது அது வானத்தில் உள்ளது அது டெல்லியில் தரை இறங்குவதற்குள் அடியேனுடன் யாத்திரை செய்யும் அன்பர்கள் யார் என்று சிறு அறிமுகம் செய்துவிடுகிறேன், ஏனென்றால் புகைப்படங்களிலும் கட்டுரையிலும் அவர்களை சந்திப்பீர்கள் அல்லவா?
அடியேனுடன் திருக்கயிலாய யாத்திரை செய்த திரு. தனுஷ்கோடி அவர்கள், சூத்திரதாரி இவர்தான் . ஹிந்தியும் அறிந்தவர். வழியில் ஏற்பட்ட பல இடர்கள் இவர் சாமார்த்தியத்தால் சரியாகியது. பின்னர் இவருடன் பணி புரியும் திரு.கோபாலன் தம்பதியர், இவருக்கு உடம்பு சரியில்லை இருந்தாலும் பத்ரிநாதரை தரிசனம் செய்யவேண்டும் என்பதற்காகவே மனைவி ரேணுகா அவர்களுடன் வந்தார். அவருக்கு துனையாக இருக்க திரு. தேவேந்திரன் அவர்களும் தனது மனைவி இராதாகுமாரியுடன் வந்தார். மேலும் திரு.மனோகரன் மற்றும் திரு.தேவராஜன், திரு.மோகன் ஆகிய மூவரும் தனுஷ்கோடிக்கு அலுவலக நண்பர்கள். இதல்லாமல் தனுஷ்கோடியின் பால்ய நண்பரான, சிதம்பரத்தில் தினமும் ஆடல்வல்லானை தரிசனம் செய்யும் திரு. வைத்திலிங்கம் அவர்களும் அவரின் நண்பர்களான திரு.சொக்கலிங்கம் ஐயாவும், திரு.கணேசன் அவர்களும் உடன் வந்தனர். மேலும் அடியேனது திருக்கயிலாய யாத்திரை புத்தகத்தை பதிப்பிட்ட . சென்னை , கோடம்பாக்கம், பிரேமா பிரசுரத்தின் உரிமையாளர் திரு.இரவி என்று பதிமூன்று பேர் இந்த யாத்திரைக்காக கிளம்பினோம்.
ருத்ரபிரயாகை சங்கமம்
ஹரித்வாரும், ரிஷிகேஷும் இந்த யாத்திரையின் முக்கிய ஆன்மீக மற்றும் சுற்றுலா தலங்கள் அவைகளைப்பற்றியும் பின்னர் காணலாம் அன்பர்களே தொடர்ந்து அடியேனுடன் வாருங்கள்.
2 comments:
தரிசனம் செய்ய நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம்..
தொடருங்கள்.
பகிர்வுக்கு மிக்க நன்றி.
http://anubhudhi.blogspot.com/
உடன் வாருங்கள் குருசாமி ஐயா
Post a Comment