Monday, November 28, 2011

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -8யமுனா மய்யா கீ ஜே!

யமுனோத்ரி ஆலய கோபுரம்
யமுனையுடன் இனைந்த சில புராணக்கதைகளைப் பார்த்தோம் இனி வாருங்கள் மலை ஏறி சென்று யமுனை அம்மனை தரிசித்துவிட்டு வரலாம். ஜமுனாபாய் சட்டியிலிருந்து 6 கி.மீ நடைப்பயணத்தை துவக்கினோம். சிறிது காலம் முன்வரை ஹனுமான் சட்டியிலிருந்து 13 கி.மீ நடைப்பயணமாக் இருந்தது இப்போது பாதை சரி செய்யப்பட்டு ஜான்கி சட்டிவரையில் வண்டிப் பாதை உள்ளது.

யமுனோத்ரி கிராமம் இமயமலையின் மடியில் அமைந்துள்ள அழகைக் காணுங்கள்

லேசாக மழை தூறிக்கொண்டுதான் இருந்தது ஆகவே அனைவரும் மழைக்கோட்டு அணிந்து கொண்டோம் எங்கள் குழுவில் ஒருவர் மலையேற வரவில்லை, மூன்று பேர் குதிரையிலும் மற்றவர்கள் நடந்தும் மலையேற முடிவு செய்தனர். பாதை நான்கு அடி அகலம். ஒரு பக்கம் மலை மறுபக்கம் யமுனை ஆறு , அற்றின் பக்கம் தடுப்பு உள்ளது. ஆற்றின் பக்கம அருமையான மலர்கள், நெடிதுயர்ந்த மரங்கள் என்று அற்புதமான இயற்கை காட்சிகளை பார்த்துக்கொண்டே மலை ஏறுகின்றோம்.

குதிரை வேணுமா ? குதிரை

தொங்கும் பாறை
நெளிந்து வளைந்து செல்லும் பாதை


நடுநடுவே பாலங்கள்யமுனையில் கலக்கும் அருவிகள்இவற்றை எல்லாம் இரசித்துக்கொண்டே மலையேறும்

சொக்கலிங்கம், இரவி, கணேசன், மனோகரன்,
தனுஷ்கோடி, மோகன், தேவராஜ் ஆகியோர்


சலசலத்துக் கொண்டே ஓடும் யமனையின் சத்தம். மலையேறும் குதிரைகளின் குளம்படி சத்தம். யமுனா மய்யாக் கீ ஜே என்று எழும்பும் பக்தர்களின் சத்தம் என்று அற்புதமான சூழல். மழைநாளாக இருந்தும் கூட கூட்டம் இருந்தது. வழியில் இவ்வளவு பேரை பார்க்கவில்லை எப்படி இவ்வளவு கூட்டம் வந்தது என்று வியந்தோம்.

அனைத்து வயதினரும், பாரத் தேசத்தின் அனைத்து பிராந்தியத்தில் இருந்து வந்திருந்த மக்கள் மழைக்கோட்டிடன் மிகவும் பக்தி சிரத்தையுடன் மலையேறினர். சில இடங்களில் தொங்கும் பாறைகள், சில இடங்களில் பாலங்கள் என்று மெள்ள மெள்ள ஏறினோம். யமுனையில் பல் நீர் வீழ்ச்சிகள் வந்து விழுவதையும் கண்டோம். குதிரைகள்,கண்டிகள், தண்டிகள், மலை ஏறுபவர்கள், இறங்குபவர்கள் என்று எல்லோரும் ஒரே வழியில் பயணம் செய்வதால் ஒருவர் மேல் ஒருவர் இடித்துக்கொள்ளாமல் பார்த்துத்தான் செல்ல வேண்டும்.
கண்டி - பிட்டு என்னும் கூடையில் பயணிக்கும் இரு சிறுவர்கள்

மலையேறும் போது மெள்ள மெள்ள ஏறுவதுதான் சிறந்தது. இயற்கை காட்சிகளை இரசிக்கும் போதோ, புகைப்படம் எடுக்கும் போதோ பாதையின் ஓரத்தில் செல்லாதீர்கள், அதே சமயம் ஒரே இடத்தில் நின்று இரசித்து விட்டு பின்னர் முன்னே செல்லுங்கள். நடு நடுவே ஒய்வெடுத்துக்கொள்ள வசதிகள் உள்ளன. மேலும் இரு புறமும் டீ, டிபன் சாப்பிட கடைகள் உள்ளன. வழியெங்கும் பல கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. சுமார் 2.00 மணி நேரத்தில் யமுனோத்ரி கோயிலை அடைந்து விட்டோம்.


யமுனாஷ்டகத்திலிருந்து ஒரு பாடல்

Kalindagirimastake patadamanda poorojvalaa
Vilasagamanollasat Prakataganda shailonnata I
Saghoshagati danturaa samadhiroodha dolottamma
Mukundarativardhini jayati padmabandhosuta II2II
"Falling forcefully on Mount Kalinda Shri Yamunaji appers to be crystal white and looks beautiful with her luxurious flow through cheek like rocks of mountain. Shri Yamunaji follows a zig-zag path noisily and while she flows up and down she looks as if sitting on a beautiful swing. Shri Yamunaji is superior as she enhances our love towards lotus-feet of Lord Mukund. II2II
நன்றி: http://www.shreevallabh.com/Works/yamunashtak.htm
யமுனோத்ரி ஆலயம்

மேலேறி செல்ல செல்ல ஆலயம் நம்மருகே வரும் காட்சி

மேலே செல்ல செல்ல மேக கூட்டம் வந்துவிட்டதால் வெளிச்சம் குறைந்து கொண்டே வந்தது. யமுனோத்ரியை நெருங்கும் போது முதலில் மஞ்சள் நிற கோபுரம் மேகமூட்டங்களுக்குிடையில் மங்கலாக தெரிந்தது. கோபுரம் இமய மலைப்பிரதேசத்தில் உள்லது போல ஒற்றை கூம்பு வடிவில் உள்ளது. சிறிது நேரத்தில் முழுவதுமாக மேகம் மறைத்துவிட்டது. சரியான மழை பிடித்துக்கொண்டது. அரை மணி நேரத்திற்கு நல்ல மழை பெய்தது. கரங்களில் கையுறை அணியாமல் சென்றதால் கைகள் விறைத்து விட்டன. பின்னர் மழை நின்ற பின் யமுனை ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தை கடந்து யமுனோத்ரியை அடைந்தோம்.

சூரிய குண்டம்
( அரிசி வேக வைக்க ஏதுவாக கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன)

யமுனோத்ரியில் இரண்டு ஊற்றுகள் உள்ளன ஒன்று யமுனோத்ரி பனி ஆறு இது மேலே 12 கி.மீ உயரத்தில் உள்ளது, காளிந்தி சிகரத்திலிருந்து ஓடி வருகின்றாள் யமுனை இங்கிருந்து செங்குத்தான மலை என்பதால் இங்கு செல்வது கடினம் மலையேற்ற வல்லுனர்களும், மிகுந்த பக்தி கொண்டவர்கள் மட்டுமே இங்கு செல்கின்றனர். இரண்டாவது ஊற்று வெந்நீர் ஊற்று சூரியன் தன் புதல்விக்கு ஒரு கிரணத்தைக் கொடுத்தால் உண்டாகியது சூரிய குண்டம். முதலில் நாங்கள் தப்த குண்டத்தில் வெந்நீரில் புனித நீராடினோம். ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனியாக கட்டங்கள் உள்ளன. பாறைகளில் இருந்து வரும் வெந்நீர் மிகவும் சூடாக இருப்பதால் நாம் குளிப்பதற்கு ஏற்றவாறு செய்து இக்கட்டங்களில் தண்ணீரை நிரப்பித்தருகின்றனர். கந்தக பூமியில்தான் இவ்வாறு வெந்நீர் உற்றுகள் வரும். அதனால் நிறைய நேரம் தண்ணீரில் இருக்க வேண்டாம்.
தர்ம சிலா
புனித நீராட்டம் முடித்த பின் புது ஆடை அணிந்து கொண்டு அங்கு கடைகளில் கிடைத்த அரிசி பொட்டலத்தை வாங்கி சூரிய குண்டத்தில் வேக வைத்து பிரசாதத்திற்காக எடுத்துக்கொண்டோம். சூரிய குண்டத்திற்கு அருகில் தர்ம சிலா உள்ளது. இந்த பாறையிலிருந்து வெந்நீர் வந்த வண்ணம் உள்ளது. இந்தப் பாறைதான் யமுனையாக வணங்கப்படுகின்றாள். அர்ச்சனை இங்குதான் நடைபெறுகின்றது. நாங்களும் அங்கு குழுவாக அமர்ந்து சங்கல்பம் செய்து கொண்டு அர்ச்சனை செய்து யமுனை அன்னையை வணங்கினோம். இந்த வெந்நீர் உற்றுகளால் இவ்வளவு குளிரிலும் இந்த மலைப்பகுதி முழுவதுமே சூடாக உள்ளது. ஹரித்வாரில் உள்ளது போல் யமுனோத்ரி செல்லுபவர்கள் தங்கள் வருகையை புத்தகத்தில் பதிவு செய்யும் வழக்கம் இங்கும் உள்ளது.ஆலயத்திற்கு அருகே விஷ்ணு குண்டம் என்னும் இன்னொரு வெந்நீர் குண்டம் உள்ளது.

விஷ்ணு குண்டம்

பின்னர் யமுனோத்ரி ஆலயத்தில் அன்னையை வணங்கச்சென்றோம். உற்பத்தி ஸ்தானத்தை நோக்கியவாறு அன்னை அருள் பாலிக்கின்றாள். கர்ப்பகிரகத்தில் மத்தியில் கரிய நிறத்தில் கூர்ம வாகினியாகிய ( ஆமை வாகனம்) யமுனை அருள் பாலிக்கிறாள். அன்னையின் இடப்பக்கம் சிவப்பு நிறத்தில் மகர வாகினியாக ( முதலை வாகனம்) கங்கை, மற்றும் இடப்பக்கம் சரஸ்வதி என்று முப்பெரும் தேவியரும் அருட்காட்சி தருகின்றனர். யமுனைக்கு மங்களப் பொருட்களான, வளையல், கண் மை, குங்குமம் மற்றும் சாதம் படைத்து வழி படுகின்றனர். கோவில் சுவர் முழுவதும் ஸ்டிக்கர் பொட்டு ஒட்டப்பட்டிருப்பதை காணலாம். கூட்டம் அதிகமாக இருக்கவில்லை எனவே அற்புதமான தரிசனம் செய்தோம். லலிதா சகஸ்ரநாமம் சேவித்துக்கொண்டே வலம் வந்து அன்னையரை வணங்கினோம்.யமுனையாற்றிலிருந்து ஆலயத்தின் காட்சி


யமுனையாற்றில் குளிக்கச்செல்ல அமைக்கப்பட்டுள்ள படிகள்

யமுனைக்கரையில் அடியேன், சொக்கலிங்கம்,மற்றும் ரவி

பின்னர் யமுனையாற்றுக்கு சென்று கேதாரீஸ்வருக்கு அபிஷேகம் செய்யவும் வீட்டில் வைத்துக்கொள்ளவும் தண்ணீர் சேகரித்துக்கொண்டோம். நடு நடுவே மழை பெய்தது, பனி மூடியது சமயம் கிடைத்த போது புகைப்படம், சலனப்படம் எடுத்துக்கொண்டோம்.

ஹனுமன் ஆலயம்

பின்னர் ஹனுமன் ஆலயம் சென்று இராமதூதன், சொல்லின் செல்வன், சுந்தரனை வணங்கினோம். இச்சன்னதியில் இளைய பெருமாள், சீதா பிராட்டி சகிதமாக இராமபிரானும், இளையாழ்வார் அம்சமான இராமானுஜரும் அருள் பாலிக்கின்றனர். மூன்று கோபுரங்கள் உள்ளன இச்சன்னதியில். முகப்பில் விநாயகரும் யமுனை அன்னை சுதை சிற்பங்கள் உள்ளன. ஆனால் அங்கே டிஷ் ஆன்டனாவை அமைத்துள்ளது அவ்வளவு சரியாக படவில்லை.

இறங்கும் பொழுது மலைப்பாதையின் ஒரு பார்வை

பின்னர் ஆரம்பித்த யாத்திரயின் முதல் ஆலயத்தின் தரிசனம் மிக அற்புதமாக அமைந்ததற்கு அந்த ஆண்டவனுக்கு அனந்த கோடி நன்றிகள் கூறி ஆனந்தத்துடன் மலை இறங்கி ஜானகி சட்டியை அடைந்தோம். வரும்வழியில் சப்தரிஷி குண்ட சென்று வந்த சாது ஒருவரை குதிரைக்காரர் காட்டினார்.

தங்குவதற்கேற்றவாறு பலவேறு சத்திரங்கள் உள்ளன. இரவி தங்குபவர்கள் தங்கலாம். குளிர் காலத்திற்காக யமுனை அன்னை பல்லக்கில் செல்லும் திருவிழா மற்றும் துவாரம் திறக்கும் விழா வெகு சிறப்பாக நதைபெறுகின்றது.

எங்கள் பேருந்து ஓட்டுனர் பேருந்தை ஜானகி சட்டிகே கொண்டு வந்திருந்தார். அங்கிருந்தே அஸ்னால் காட் சென்று உடமைகளை எடுத்துக்கொண்டு பர்கோட் வந்து சேர்ந்தோம். பர்கோட்டில் சிறிது அவசியான பொருட்களை வாங்கினோம். பின்னர் இரவு தூங்கசென்றோம். நடுவில் திடீரென்று முழிப்பு வந்தது, வெளியே பெஉம் சத்தத்துடன் மழை பெய்து கொண்டிருந்தது. யாத்திரையின் கால்வாசி பாகம் தானே முடிந்திருக்கின்றது இன்னும் முக்கால்வாசி பாகம் யாத்திரை உள்ளதே என்னவாகுமோ என்ற கவலை மன்தில் தோன்றியது. என்ன ஆயிற்று என்று அறிந்து கொள்ள தங்களுக்கும் ஆவலாக உள்ளதா? சற்றுப்பொறுங்களேன் பொழுது விடியட்டும் அதற்குள் நானும் மீதி தூக்கத்தை முடித்துக்கொள்கிறேன்.

6 comments:

Sankar Gurusamy said...

அற்புதமான யமுனை தரிசன்ம...

பகிர்வுக்கு மிக்க நன்றி..

DrPKandaswamyPhD said...

நல்லா இருக்கு.

Kailashi said...

மிக்க நன்றி சங்கர் ஐயா.

Kailashi said...

தாங்களும் யமுனோத்ரி சென்றீர்களா? கந்தசாமி ஐயா.

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

! ஸ்பார்க் கார்த்தி ! said...

தொடர்ந்து படித்து வருகிறேன்,. அருமையாக உள்ளது,

Kailashi said...

மிக்க நன்றி ஸ்பார்க் கார்த்தி.