உ
ஓம் நமசிவாய
யமுனோத்ரி மகிமை
யமுனோத்ரி மகிமை
சப்தரிஷி குண்டிலிருந்து உற்பத்தியாகி
ஓடி வரும் யமுனை நதி
ஓடி வரும் யமுனை நதி
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துள்ள இறைப்பரம்பொருள் நாம் எல்லோரும் உய்ய பல்வேறு தலங்களில் தனது தெய்வீக சக்தியை நிலை நாட்டி அருள் புரிகின்றார் இவையே ஜோதிர்லிங்க தலங்கள், திவ்ய தேசங்கள், சக்தி பீடங்கள் என்று பல்வேறு நாமங்களில் சிறப்பிக்கப்படுகின்றன. இப்புண்ணியத்தலங்கள் எல்லாம் இன்று நேற்று தோன்றியவை அல்ல அநாதி காலமாக இவை புண்ணிய தலங்களாக உள்ளன இன்னும் புண்ணிய தலங்களாகவே திகழும். எவ்வாறு கோமாதாவின் உடலில் எல்லா பாகங்களிலும் இரத்தம் ஓடினாலும் மடியில் மட்டும் அது பாலாகி நமக்கு பயன்படுகின்றதோ அது போல இறைப்பரம்பொருளின் சக்தி நமக்கு பயன்படும் விதமாக அமைந்தவைதான் இந்த புண்ணிய ஸ்தலங்கள். இந்த உண்மையை உணர்ந்த நம் முன்னோர்கள் பல்வேறு புராணங்களின் மூலமாக நமக்கு இந்த உண்மையை உணர்த்தி சென்றுள்ளனர். இவ்வாறு உத்தராகாண்ட் மாநிலத்தில் இமயமலையின் மடியில் இயற்கை அன்னையின் எழில் கொஞ்சும் சூழலில் தேவபூமியில் அமைந்துள்ளன நான்கு புண்ணிய தலங்கள் யமுனோத்திரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகியவை அவற்றுள் யமுனையின் சிறப்புகளை முதலில் காணலாம்.
யமுனையாற்றிலே ஈரக்காற்றிலே
கண்ணனோடு நான் ஆட
என்னும் திரைப்பாடல் எனக்குப் பிடிக்கும் தங்களுக்கும் பிடிக்கும்தானே வாருங்கள் சார்தாம் யாத்திரையின் முதல் தலமானதும் உத்தராகாண்ட மாநிலத்தின் மேற்கு கோடியில் அமைந்துள்ளதுமான அந்த யமுனை நதியின் உற்பத்தி ஸ்தானத்திற்கு அருகில் உள்ள யமுனோத்திரி தலத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
பாரத பூமியில் நமது பாவங்களை எல்லாம் தாம் எடுத்துக்கொண்டு நம்மை பவித்திரப்படுத்தும் புண்ணிய நதிகள் ஏழு
கங்கே ச யமுநே ஸைவ கோதாவரீ சரஸ்வதீ
நர்மதே சிந்து காவேரீ... என்று நம் புராணங்கள் அவற்றை கூறுகின்றன. இவற்றுள் கங்கைக்கு அடுத்தபடியாக புண்ணிய நதியாக விளங்குவது யமுனை ஆகும். யமுனா, ஜாமுனி முனிவர் துதி செய்த ஜமுனா, யமனின் சகோதரி யமி, தந்தை காளிந்தன் என்னும் தந்தை சூரியனின் பெயரால் காளிந்தி என்னும் பல நாமங்கள் யமுனைக்கு உள்ளது.
முதலில் சிறு தாரையாக இருந்த
யமுனை யமுனோத்ரி அருகில்
இந்த யமுனை நதியில் தான் கண்ணன் பால பருவத்தில் தனது லீலைகளை செய்து மகிழ்ந்தான். கண்ணனின் பாதம் பட்டு புண்ணியம் அடைந்த யமுனை ஆறு அந்த கிருஷ்ணனின் நிறமான சியாமள வண்ணமாகவே உள்ளாள். கண்ணன் சிறைச்சாலையில் பிறந்தவுடன் வசுதேவர் கோகுலத்திற்கு கூடையில் குட்டிக்கண்ணனை எடுத்து செல்லும் போது அவரது நாசி வரை வந்தும் யமுனையின் வெள்ளப்பெருக்கு குறையவில்லை. அப்போது அடை மழை பொழிந்து கொண்டிருந்தது, ஆகவே ஆதிசேஷன் வந்து பெருமாளுக்கு குடைப்பிடித்தான். அப்போதுதான் பால கிருஷ்ணன் ஒரு திருவிளையாடலை செய்தான் தன் பிஞ்சுக்கால்களால் யமுனையின் தண்ணீரைத் தொட்டான். கண்ணனின் கால்பட்டு புனிதம் அடைந்தாள் யமுனை, உடனே பிரிந்து வழிவிட்டாள்.
யமுனை நதிக்கரை குழந்தை ஸ்ரீகிருஷ்ணனின் நினைவுகளால் புனிதமடைந்தது. இதன் கரையில்தான் கோபியருடன் ராசலீலை செய்தருளினான் கண்ணன் தன் கள்ளமற்ற இனிய லீலைகளினால் கோபிகைகளுடன் விளையாடி தெய்வ அவதாரத்திற்கும் அவன் அடியார்களுக்கும் இடையே என்றும் நிலவும் பேரன்பின் பெருமையை உலகுக்கு உணர்த்தியுள்ளான். காளியனின் ஆணவத்தை அடக்கி கிருஷ்ணன் காளிய மர்த்தனம் ஆடியதும் இந்த யமுனையில்தான்.
காளிய மர்த்தனன் கமலா நாயகன்
ஆகவேதான் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் தனது திருப்பாவையில்
மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை...... .
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை...... .
என்று பாடுகின்றாள். யமுனை கருமை நிறமானவள் என்றாலும் கண்ணனின் பாதம் பட்டு புனிதம் பெற்றவள் என்பதால் தூயப்பெருநீர் யமுனை என்று கொண்டாடுகின்றாள் ஆண்டாள் நாச்சியார். கங்கையும் யமுனையும் அந்தர் வாகினியாகிய சரஸ்வதியுடன் சங்கமம் ஆகும் அலகாபாத் திரிவேணி சங்கமம் என்னும் புண்ணிய சக்தி பீடம் ஆகும். கடலில் நேராக கலக்காத புண்ணிய நதி யமுனை ஆவாள்.
உஷா தேவி சாயாதேவி
உடனாய சூரிய பகவான்
உடனாய சூரிய பகவான்
யமுனை சூரிய புத்ரி, சூரியனுக்கும் உஷா தேவிக்கும் (சரண்யு) பிறந்தவள். யமதர்மராஜனின் இரட்டை சகோதரி. ஸம்ஜ்ஞா தேவி. சஞ்சனா தேவி என்றும் அழைக்கப்படும் உஷாதேவி தேவ சிற்பி விச்வகர்மாவின் மகள் ஆவாள். இவள் இவள் சூரியனின் முதல் மனைவி. இவள் அருணோதய காலம், மற்றும் மேகங்களின் தேவதையாவாள். சூரியனின் தேஜஸ்ஸை தாங்க முடியாமல் உஷா தேவி நேராக அவரை பார்க்க முடியாததால் தனது நிழலாக சாயா தேவி ( நிழல்) உருவாக்கி அவருக்கு இரண்டாவது கல்யாணம் செய்து வைத்தார். இவ்வாறு உஷா தேவி இருந்ததால் தாயைப் போலவே யமுனையும் குணம் கொண்டவள் என்று நம்பப்படுகிறாள். சாயா தேவியின் குழந்தைகள் சனி, சம்வந்தர மனு, தப்தி ஆவார்கள்.
ஒரு சமயம் தனது சகோதரனான யமதர்மராஜன் சகோதரியே! நான் உனக்கு சீதனமாக ஏதும் தரவில்லை ஏதாவது வரம் கேள் என்று கூற யமுனையானவள் “அண்ணா எனக்கு ஒன்றும் வேண்டாம், எனது நீரில் நீராடுபவர்களுக்கு யமபயம் இருக்க கூடாது என்று வரம் கேட்க யமதர்மராஜனும் அவ்வாறே அருளிச் செய்தார்”. எனவே தமது பாவங்களை தொலைக்கவும் யமபயம் நீங்கவும் பக்தர்கள் யமுனோத்திரிக்கு புண்ணிய யாத்திரை செய்து யமுனையிலும், வெந்நீர் ஊற்றான சூரிய குண்டத்திலும் நீராடி, அதன் வெந்நீரில் சாதம் சமைத்து அதை யமுனா தேவிக்கு பிரசாதமாக சர்ப்பணம் செய்து தங்கள் இல்லங்களுக்கும் பிரசாதத்தை எடுத்து செல்கின்றனர். யாரொருவர் யமுனை நதியில் நீராடி யமுனை அன்னையை இங்கு தரிசனம் செய்கின்றார்களோ அவர்களின் ஆயிரம் ஜன்ம பாபம் அழிந்து விடுகின்றது.
பிடிக்கும் வைத்தி அண்ணன்
யமுனை கண்ணனிடம் ஆழ்ந்த காதல் கொண்டவள் என்று வல்லபாச்சாரியார் தமது யமுனாஷ்டகத்தில் பாடுகின்றார். இவளும் கண்ணனைப்போலவே சியாமள(கருமை) நிறமானவள். யமுனையின் கருப்பு, கண்ணனால் வந்ததா?, கோபியர்களால் வந்ததா?, துளசியால் வந்ததா? காளியனின் விஷத்தால் வந்ததா? என்று வேதாந்த தேசிகர் கூறுகின்றார். யமுனை கருமையானவள் என்பதால் இதன் ஆழத்தை பார்ப்பது கடினம்.
யமுனை இறங்கி வரும் அழகும் யமுனோத்ரி ஸ்தலமும்
யமனும் யமியாகிய யமுனையும் சகோதர சகோதரி பாசத்திற்கு உதாரணமாக விளங்குகின்றனர். வடநாட்டில் தீபாவளியை அடுத்து கொண்டாடப்படும் பாய்தூஜ் (பையா தூஜ்) என்னும் பண்டிகை. யமன் தன் சகோதரியான யமுனைக்கு சீர் வரிசை கொண்டு வந்ததையும் அதற்காக யமுனை தன் சகோதரனுக்கு இனிப்பு பலகாரங்கள் படைத்ததையும் ஆதாரமாக கொண்டது. இவையெல்லாம் யமுனையுடன் தொடர்புடைய சில புராணக் கதைகள் ஆகும் இனி யமுனோத்ரி ஆலயத்தைப்பற்றி சிறிது காணலாம்.
யமுனோத்ரி ஆலயம் கடல் மட்டத்திலிருந்து 3293 மீட்டர் (10804 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. யமுனை உற்பத்தியாகும் யமுனோத்திரி பனியாறு கீழ் இமாலயத்தில் 4421மீ உயரத்தில் பந்தர் பூஞ்ச் (குரங்கின் வால்) மலைத்தொடர்களின் கீழ் பகுதியில் சப்தரிஷி குண்ட்டில்(குளம்) அமைந்துள்ளது. சப்தரிஷி குளத்திற்கு பயணம் செய்வது மிக்க கடினம் என்பதால் மலையேறும் வல்லுநர்களும் மிக்க சிரத்தை கொண்ட பக்தர்கள் மட்டுமே இங்கு நடைப்பயணம் மேற்கொள்கின்றனர். இம்மலைத்தொடருக்கு அருகில் காளிந்தி எனப்படும் சூரிய மலைத்தொடர் உள்ளது.
யமுனையின் உற்பத்தி ஸ்தானம் (பனி படர்ந்த மலை)
யமுனை உத்த்ர (வடக்கு) வாஹிணியாக இங்கு ஓடுவதால் இத்தலம் யமுனோத்திரி ஆயிற்று. யமுனோத்திரியில் யமுனையின் இடக்கரையில் அமைந்துள்ள இக்கோவிலை 19ம் நூற்றாண்டில் ஜெய்ப்பூர் மஹாராணி குலேரியா முதன் முதலில் நிர்மாணம் செய்தார் பின்னர் இயற்கை சீற்றத்தினால் கோவில் சிதைய, பின்னர் தேரி கர்வால் மஹாராஜா பிரதாப் ஷா தற்போது உள்ள கோவிலை நிர்மாணம் செய்தார் என்று நம்பப்படுகின்றது. கருப்பு பளிங்குக்கல் விக்ரஹமாக கூர்ம வாகினியாகிய யமுனை இங்கே பத்மாஸனத்தில் அமர்ந்த கோலத்தில் கங்கை மற்றும் சரஸ்வதியுடன் உற்பத்தி ஸ்தானத்தை நோக்கிய கோலத்தில் அருட்காட்சி தருகின்றாள்.
அசீத முனிவரின் ஆசிரமாக இத்தலம் ஆதி காலத்தில் இருந்துள்ளது. அவர் தினம் தவறாமல் கங்கையிலும் யமுனையிலும் தீர்த்தமாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். முதுமை காலத்தில் அவர் கங்கை செல்ல முடியாதபோது கங்கையே இங்கு வந்து யமுனோத்ரியில் அவருக்காக ஓடியதாக ஐதீகம் எனவே தான் யமுனை இங்கு கங்கையுடனும் ஸரஸ்வதியுடனும் தர்பார் சேவை சாதிக்கின்றாள். அருகிலேயே ஹனுமனுக்கும் ஒரு தனிக் கோவில் உள்ளது. இக்கோவிலில் இராமானுஜரும் அருள் பாலிக்கின்றார்.
ஆதிகாலத்தில் அக்னி தேவன் இங்கு வெகு காலம் தவம் செய்து திக்பாலகர்களில் ஒருவராகும் பேறு பெற்றார் எனவே இங்குள்ள வெந்நீர் குண்டம் தப்த் குண்டம் என்று வழங்கப்படுகின்றது. இந்த சரோவரில் ஸ்நானம் செய்பவர்கள் ஜனன மரண பந்தத்திலிருந்து விடுபட்டு முக்தி அடைகின்றனர் என்று ஸ்கந்த புராணத்தில் கூறப்படுள்ளது.
அதே யமுனை நதி முசோரி அருகில்
இங்கு வரும் பக்தர்கள் முதலில் வெந்நீர் ஊற்றான தப்த் குண்டத்தில் நீராடி பின் சூரிய குண்டத்தில் சாதம் வடித்து அல்லது உருளைக்கிழங்கை வேக வைத்து, புத்தாடை புனைந்து அருகில் உள்ள திவ்ய சிலா என்னும் பாறைக்கு (வெந்நீர் ஊற்று இங்கிருந்துதான் பாறைகளின் நடுவிலிருந்து உற்பத்தியாகி வருகின்றது) அர்ச்சனை செய்து பின்னர் முப்பெரும் தேவியருக்கு சூரிய குண்டத்தில் வேக வைத்த பிரசாதத்தை நைவேத்யம் செய்து, வளையல், குங்குமம், கண் மை படைத்து வழிபாடு செய்து பின்னர் திருக்கேதார நாதருக்கு அபிஷேகம் செய்யவும், தங்கள் இல்லத்தில் சேமித்து வைத்துக் கொள்வதற்காகவும் யமுனை நதியின் புண்ணிய தீர்த்தம் எடுத்துக்கொண்டு அனுமனை தரிசனம் செய்து விட்டு மிக்க மனமகிழ்ச்சியுடன் அடுத்த தலமான கங்கோத்திரிக்கு புறப்படுகின்றனர். யமுனோத்த்ரியில் இரவு தங்குவது மிகவும் விஷேசமானது என்று புராணங்களிலே கூறப்பட்டுள்ளது.
யுனியால் கிராமத்தைச் சார்ந்த பூஜாரிகள் இக்கோவிலில் பூஜை செய்கின்றனர். நவம்பர் மாதத்தில் தீபாவளிக்குப் பின் அன்னை ஜானகிசட்டிக்கு அருகில் உள்ள கர்சாலி கிராமத்திற்கு எழுந்தருளி ஆறு மாதங்களுக்கு அருள்பாலிக்கின்றாள் பின்னர் அக்ஷய திருதியை அன்றைக்கு யமுனோத்திரிக்கு திரும்பிச் செல்கின்றாள்.
அழகிய ரோஜா கொத்து
யமுனோத்ரி பனியாற்றில் உருவாகும் யமுனை உத்தராகாண்ட், ஹரியானா, உத்திரப்பிரதேசம், ஹிமாசலப்பிரதேசம், டில்லி மாநிலங்களின் வழியாக சுமார் 1370 கி,மீ தூரம் கங்கைக்கு இணையாக பாய்ந்து அலகாபாத்தில் திரிவேணி சங்கமமாக கங்கை மற்றும் அந்தர்வாகினியாகிய சரஸ்வதியுடன் இணைகின்றாள்.
யாத்திரை இன்னும் தொடரும்.......
6 comments:
கமென்ட் பதிலுக்கு நன்றி ஐயா. யமுனையின் அழகை சிறிய கதைகளாலும் அறிய படங்களாலும் சிறப்பாக கூறியுள்ளீர்கள் நன்றி ஐயா.
அற்புதமான தகவல்கள், புகைப்படங்கள்..
பகிர்வுக்கு மிக்க நன்றி..
மிக்க நன்றி லோகநாதன் ஐயா.
மிக்க நன்றி சங்கர் குருசாமி ஐயா.
"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை" தொடர்ந்து வருகின்றேன்.
காணக்கிடைக்காத காட்சிகள் கண்டோம்.
நன்றி.
//காணக்கிடைக்காத காட்சிகள் கண்டோம்.நன்றி.//
இன்னும் வரும் வந்து தரிசியுங்கள் மாதேவி.
Post a Comment