உ
சிவமயம்
கேதார்நாத் சிகரங்களுடன்
ஜோதிர்லிங்க கேதார்நாத ஆலயம்
இவ்வாறு அடியேன் சார்தாம் யாத்திரை சென்று வந்தேன் என்று கூறிய போது பல அன்பர்கள் அறிய விரும்பிய பல தகவல்கள் இப்பதிவில் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் இருந்து செல்லும் நமக்கு இப்பகுதியில் நிலவும் தட்பவெப்பம், உணவு, மொழி, ஏன் கோவில்கள், வழிபாட்டு முறைகள் என்று அனைத்துமே புதுமையாக தோன்றும். ஆகவே மிக்க ஏற்பாடுகளுடன்தான் நாம் செல்ல வேண்டும். முதலாவது மலைகளில் அதிக குளிர் இருக்கும் என்பதால் கம்பளி உடைகள், கம்பளித் தொப்பி, கம்பளி கையுறை, கம்பளி காலுறை கட்டாயம் எடுத்து செல்வது அவசியம். அடுத்தது உணவு அங்குள்ள மக்கள் அதிகமாக கோதுமை மற்றும் கடுகு எண்ணெயை பயன் படுத்துவதால் அது நமக்கு பிடிக்காமலும் அதே சமயம் நமது உடலுக்கு ஒத்துக்கொள்ளாமலும் போகலாம் எனவே முடிந்த வரையில் பிஸ்கட், சாக்லேட், இனிப்பு வகைகள் காரங்கள், முந்திரி, பாதாம் போன்ற உலர்ந்த பழங்கள், காபி தூள், சூப் முதலிய எளிதில் சுமந்து செல்லக்கூடிய அதே சமயம் நமக்கு உகந்த உணவுப் பொருள்களையும், மற்றும் மருந்து மாத்திரைகள், முதலுதவிப் பெட்டி, பூஜை பொருட்கள், டார்ச் லைட் / மெழுகுவர்த்தி, மழைக் கோட், மலைப்பாதையில் நடப்பதற்கு ஏதுவான காலணிகள் (Shoes), ஆகியவற்றை எடுத்து செல்லவேண்டியது அவசியம். பாம்பு போல வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதைகளில் நீண்ட நேரப்பயணம், நேரத்திற்கு நமக்கு தகுந்த உணவு கிடைக்காதது, மற்றும் நேரம் கடந்து உணவு உட்கொள்வது மற்றும் தங்கும் இடத்தில் அதிக குளிர், மலையேற்றம், மலையேற முடியாதவர்கள் மட்டக்குதிரை பயணம். நீண்ட நாள் பேருந்துப் பயணம் மற்றும் நடைப்பயணம் என்று பல்வேறு அசௌகரியங்களையும் இயற்கை சீற்றத்தினால் ஏற்படும் எதிர்பாராத கஷ்டங்களையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதால் அனைத்திற்கும் தயாராக செல்வது மிகவும் நல்லது.
வருடத்தில் ஆறு மாதம் இத்தலங்களில் பனிமூடி இருக்கும் என்பதால் ஏப்ரல் முதல் ஜூன் வரையும், செப்டெம்பர் முதல் அக்டோபர் மாதம் வரையும் இந்த யாத்திரைக்கு ஏற்ற காலமாகும் , ஜூலை ஆகஸ்ட் மாதங்கள் மழைக்காலமாகும் எனவே இச்சமயங்களில் பயணம் செல்லாமல் இருப்பது நன்று. இவ்விடங்களில் கோடைக்காலங்களில் கூட குளிராக இருக்கும். மலைகளின் உச்சியில் பயணம் செய்வதால் சீதோஷ்ண நிலை ஒரே சீராக இருக்காது. திடீரென்று மாறக்கூடியது. நல்ல வெயில் அடித்துக்கொண்டிருக்கும் போது திடீரென்று பலத்த மழை பெய்யக்கூடும், நல்ல மழை பெய்யும் போது நிலச்சரிவுகள் ஏற்பட்டு பாதைகள் அடைபடும் போகின்ற இடத்திற்கு சரியான சமயத்திற்கு செல்ல முடியாமல் போகலாம். சில சமயம் பனி மழை பொழியும். ஏப்ரல் மே மாதங்களில் பலத்த காற்று வீசும். புழுதிப்புயல் எனப்படும் மண்ணைவாரி வீசும் காற்றும் கூட இருக்கும். அவர் விரும்பினால் மட்டுமே நமக்கு அவர் தரிசனம் கிட்டும் என்று சரணாகதி மனப்பன்மையுடன் சென்றால்தான் ஒரே தடவையில் நான்கு தலங்களையும் தரிசனம் செய்ய முடியும் என்பது பலர் தங்கள் அனுபவத்தில் கண்ட உண்மை.
துவாரம் திறக்கும் தினத்தின்
பத்ரிநாத்தின் சிறப்பு மலர் அலங்காரம்
சித்திரை (ஏப்ரல்-மே மாதம்) அக்ஷய த்ரிதியையன்று தொடங்கி தீபாவளி (அக்டோபர்- நவம்பர்) மாதம் வரையில் இத்திருக்கோவில்கள் திறந்திருக்கும். துவாரம் திறக்கும் நாள் அகண்டஜோதி தரிசனம் செய்ய பக்தர் கூட்டம் அதிகமாக இருக்கும், பின்னர் இரண்டு மூன்று நாள் கழித்து கூட்டம் குறைந்து விடும், பாதையும் சரியாக இருக்கும் ஆகவே பள்ளி விடுமுறை காலமாக இல்லாமல் இருந்தால் இச்சமயம் யாத்திரை செய்வது உத்தமம். மே மற்றும் ஜூன் மாதங்களில் பாதை சரியாக இருக்கும் ஆனால் பக்தர் கூட்டம் அதிகமாக இருக்கும் ஆகவே தங்கும் வசதிகளை முன்னரே செய்து கொண்டு செல்வது நல்லது. சில சமயம் தரிசனத்திற்காக 2 கி.மீ தூரம் வரிசை இருக்கும், சுவாமி தரிசனம் மிக சிறிய நேரத்திற்கு மட்டுமே கிட்டும். ஜூலை , ஆகஸ்டு மாதங்கள் பருவமழைக் காலம் என்பதால் அதிகமாக நிலச்சரிவுகள் ஏற்படும் என்பதால் அச்சமயத்தில் யாத்திரை மேற்கொள்ளாமல் இருப்பது உத்தமம்.
தேவாரப்பாடல் பெற்ற இந்திரநீல பர்வதம் என்னும் நீலகண்ட சிகரம்
(பத்ரிநாத்தில் அதிகாலையில் கிடைக்கும் தரிசனம்)
பொதுவாக செப்டெம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் செல்வது ( துவாரம் அடைக்கப்படும் நாள்) மிகச் சிறந்தது. ஆயினும் சென்ற வருடம் செப்டம்பர் மாதத்திலும் மழை அதிகமாக பெய்து யாத்திரை சென்ற நாங்கள் நான்கு தலங்களையும் தரிச்சிக்க முடியாமல் திரும்பி வந்தோம். எல்லாம் அவன்செயல் எப்பொது நமக்கு எப்படி தரிசனம் தர வேண்டும் என்பதை அவர் நிர்ணயம் செய்கின்றார். அக்டோபர் மாதம் குளிர் அதிகமாகவே இருக்கும் அப்போது கம்பளி ஆடைகள் அதிகம் எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். இந்த வருடம் அக்டோபர் மாதம் பயணம் செய்தோம் எங்கும் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை அருமையான தரிசனமும் கிட்டியது.
மழைக்காலத்தில் ஏற்படும் நிலச்சரிவுகள்
( ஜுலை முதல் செப்டெம்பர் முதல்வாரம் வரை)
மலைப்பிரதேசம் என்பதால் 1962 சீனப்போருக்கு முன்னால் இப்பகுதியில் அதிகமான வளர்ச்சி இல்லாமல் இருந்தது அப்போது யாத்திரிகள் பெரும்பாலும் நடைப் பயணமாகவே சென்று இத்தலங்களை தரிசித்து வந்தனர். அதற்கு பின்னால் சாலை வசதிகள் மேம்பட்டன. தற்போது கங்கோத்ரி மற்றும் பத்ரிநாத் ஆகிய இரண்டு தலங்களுக்கு மிக அருகாமை வரை பேருந்து மற்றும் மற்ற வாகனங்கள் செல்கின்றன. தங்கும் வசதிகளும் மேம்பட்டுள்ளன.
இமய மலையின் அற்புத மலர்கள்
( தாங்கள் படத்தின் மேல் சொடுக்கி பெரிதாக்கி பார்க்கலாம்)
தங்குவதற்கு பல வசதிகள் உள்ளன. மடங்கள், சத்திரங்கள், ஹோட்டல்கள் என எல்லா வகை , அவரவர்கள் பண வசதிக்கேற்றாற்போல தங்கும் வசதிகள் கிட்டும். அங்கு சென்றும் அறைகளை அமர்த்திக்கொள்ளலாம் அல்லது அழைத்துச் செல்லும் யாத்திரை அமைப்பாளர்கள் தங்க வைக்கும் இடத்தில் தங்கிக் கொள்ளலாம். முதல் வருடம் நாங்கள் GMVN ( Garhwal Mandal Vikas Nigam) எனப்படும் நமது தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தைப் போன்ற உத்தராகண்ட் மாநிலத்தின் கர்வால் மண்டல வளர்ச்சி கழகத்தின் மூலம் சென்றோம். தங்குமிடம் , வண்டி( வழிகாட்டியுடன்), மற்றும் உணவு எல்லாவற்றையும் அவர்கள் கவனித்துக் கொண்டார்கள். உணவுக்கு நாம் தனியாக பணம் தரவேண்டி இருந்தது. இவர்கள் அலுவலகம் சென்னையிலேயே உள்ளது. இங்கேயே நாம் பதிவு செய்து கொள்ளலாம். டெல்லியில் இருந்தும் பல யாத்திரை அமைப்பாளர்கள் உள்ளனர் , வண்டி, உணவு, தங்குமிடம் ஆகியவற்றை அவர்கள் கவனித்துக் கொள்கின்றனர்.
இனி இந்த சார்தாம் யாத்திரை செய்யும் முறை எவ்வாறு என்று பார்ப்போமா? முதலில் யமுனோத்ரி சென்று கேதாரேஸ்வரருக்கு அபிஷேகம் செய்ய யமுனை தீர்த்தம் அடுத்து கங்கோத்ரி சென்று கங்கை தீர்த்தம் சேகரித்துக் கொண்டு பின் கேதாரீஸ்வரம் சென்று அவருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு இறுதியாக பத்ரிநாதம் செல்ல வேண்டும். முடிந்தவர்கள் பின் இராமேஸ்வரம் சென்று கங்கை நீரால் இராமேஸ்வரருக்கு அபிஷேகம் செய்வது சாலச்சிறந்தது. நாங்களும் இவ்வாறே யாத்திரையை மேற்கொண்டோம். இன்னும் இது போன்ற பல அரிய தகவல்கள் மற்றும் புராண கதைகள் மற்றும் அருமையான படங்களுடன் காண பின் தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.
11 comments:
தாங்கள் கூறுவதுபோல இந்த மாதிரி தலங்களின் தரிசனம் அவன் மனது வைத்தால் மட்டுமே முடியும் என்பது நிதர்சனம்...
தொடருங்கள்..
பகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.com/
இது அனுபவத்தில் கண்ட உண்மை ஐயா. அவனன்றி ஒரு அணுவும் அசையாது
தங்களது வருணனை அருமையாக ஊல்லட்ஹூ
மிக்க நன்றி ஸ்பார்க் கார்த்தி.
// பாம்பு போல வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதைகளில் நீண்ட நேரப்பயணம், நேரத்திற்கு நமக்கு தகுந்த உணவு கிடைக்காதது, மற்றும் நேரம் கடந்து உணவு உட்கொள்வது மற்றும் தங்கும் இடத்தில் அதிக குளிர், மலையேற்றம், மலையேற முடியாதவர்கள் மட்டக்குதிரை பயணம். நீண்ட நாள் பேருந்துப் பயணம் மற்றும் நடைப்பயணம் என்று பல்வேறு அசௌகரியங்களையும் இயற்கை சீற்றத்தினால் ஏற்படும் எதிர்பாராத கஷ்டங்களையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதால் அனைத்திற்கும் தயாராக செல்வது மிகவும் நல்லது.//
இது போல ஒரு அனுபவத்திற்கு தான் நீண்ட வருடமாக காத்திருக்கிறேன்.
தங்கள் கனவு நனவாக அந்த இறைவனை வேண்டுகிறேன்
இவ்வருடம் மே மாதம் நானும் எனது இரண்டு நண்பர்களும் உத்திரகான்ட் செல்ல இருக்கிறோம்.அங்கே GMVN தங்கும் விடுதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என என் எண்ணம், அது எவ்வாறு இருக்கும் ? தலங்களுக்கு அருகிலேயே இருக்குமா ? அவர்களது சென்னை அலுவலகத்தில் இனி தான் தொடர்பு கொள்ள வேண்டும். அப்படியே அவர்களது வண்டிகளையும் முன்பு பதிவு செய்து கொள்ளலாமா அல்லது அங்கே சென்று அரசு பேருந்துகளில் போய்க் கொள்ளலாமா ? #நன்றி
GMVN விடுதிகள் தங்க நினைத்தால் அவர்களின் முழு சுற்றுலாவையும் சேர்த்தே முன்பதிவு செய்து கொள்வது உத்தமம். ஏனென்றால் உணவு, உறையுள், வண்டி அனைத்தையும் அவர்களே கவனித்துக் கொள்வார்கள், ஒரு வழிகாட்டியும் உடன் வருவார் பாதைகள் பழுதடைந்துள்ளதால் அவர்கள் முகவும் உதவியாக இருப்பார்கள். சென்ற வருட நிகழ்வுக்கு பிறகு அது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும். எனவே இங்கே தாங்கள் நான்கு தாம்களுக்கான பயணத்தை இங்கேயே சென்னையில் முன்பதிவு செய்து கொள்ளலாம். பொதுவாக இந்த நேரத்தில் GMVN விடுதிகள் நிறைந்திருக்கும் எனவே முதலில் முன்பதிவு செய்து செல்வது உத்தமம். சென்ற வருடம் நிறைய தங்குமிடங்கள் வெள்ளத்தில் சென்று விட்டாதால் இதுவே சரியான முடிவாக இருக்கும்.
தங்களுக்கு இந்தி நன்றாகத் தெரியும் என்றால் அங்கு சென்று பேருந்துகள் மாறிச் செல்லலாம், ஆனால் Express வண்டிதானா என்று கேட்டுக்கொண்டு வண்டியில் ஏறவும் இல்லையென்றால் வெகு நேரம் நீங்கள் வண்டியில் செலவிட நேரிடும். மேலும் GMVN விடுதிகளுக்கு தாங்கள் செல்லும் சமயம் அறை காலி இல்லை என்றால் வேறு விடுதிகளை தாங்கள் நாடி செல்ல வேண்டி வரும்.
இந்த அலைச்சலை எல்லாம் தவிர்க்க GMVN மூலமாக சென்றால் இயற்கை சீற்றங்களை தவிர்த்து மற்ற துன்பங்கள் இல்லாமல் இருக்கும் என்பது அடியேனது அறிவுறை.
வேறு ஏதாவது விவரம் தேவை என்றால் தங்கள் மின்னஞ்சலில் இருந்து அடியேனுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
GMVN மூலமாக் முழு யாத்திரையும் செல்லும் போது சிறிது செலவு அதிகமாகும் ஆனால் தொந்தரவுகள் அதிகம் இருக்காது.எனவே அதற்கு தகுந்தவாறு முடிவு செய்து கொள்ளுங்கள்.
தகவல் தந்தற்கு மிக்க நன்றி.(GMVN சென்னை அலுவலகத்தை போனில் தொடர்பு கொண்டு பேசினேன், அவர்களது பேக்கேஜ் டூர் எங்கள் நேரத்திற்கு தகுந்தார் போல் இல்லை ஆதலால் தங்கும் இடங்களை மட்டும் முன்பதிவு செய்து தர கேட்டிருக்கிறேன்.அவர்களும் நேரில் வர சொல்லிருக்கிறார்கள்)
மிக்க நன்றி. ஏதாவது உதவி தேவை என்றால் தாராளமாக கேட்கவும்.
Post a Comment